உயிரின் இயக்க ஓட்டத்தின் இரகசியம்

Om - ohm

உயிரின் இயக்க ஓட்டத்தின் இரகசியம் 

மனிதன் தன் வாழ்க்கையில் ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவான். அதிலே குறை ஏற்பட்டால் குறையாகி விட்டதே..! இனி எதிர்காலம் என்ன ஆகுமோ…! என்று சலிப்பின் உணர்வை எடுத்துக் கொள்கின்றான்.

அந்தக் குறையான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து விட்டால்
1.உயிரான விஷ்ணு அதன் தன்மை கொண்டு வரம் கொடுக்க
2.அதனுடைய நிலைகளை உயிரில் இருக்கும் காந்தம் (லட்சுமி) கவர
3.கவர்ந்தது சிருஷ்டியாகப் பிரம்மமாக உருவாக்கி விடுகின்றது,
4.நாம் கவர்ந்த அந்தக் குறையை தன் தாய் தந்தை சொன்னபடி மகன் அந்தக் கஷ்டத்தையே உருவாக்குகின்றான்.
5.(தாய் தந்தை – உயிரில் இருக்கும் வெப்பமும் அதனுடன் இணைந்த காந்தமும்) (மகன் – நடந்த நிகழ்ச்சியால் குறையான உணர்வுகள் உயிரிலே மோதும் சந்தர்ப்பம் “பிரம்மா”)
6.ஏனென்றால் இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

நமது காவியங்கள் ஒவ்வொரு நுணுக்க நிலைகளையும் அந்த மூலங்கள் எப்படி இயக்குகின்றது…? என்றும் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே நம்மை ஒரு அறிவாளியாக உருவாக்குவதும் நம்மை அறிவிலியாக அறிவை இழக்கச் செய்வதும் இதைப் போன்ற நிலைகள் தான். (சந்தர்ப்பத்தில் எது நம் உயிரிலே இணைகின்றதோ அது தான்)

உதாரணமாக எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த பொருளாக இருப்பினும் அல்லது ஒரு சத்துள்ள சுவைமிக்க உணவாக இருப்பினும் விஷம் அதிலே கலந்து விட்டால் அந்த விஷமான சத்து பொருளின் சக்தியைச் சுத்தமாகவே இழக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் வேதனை என்ற நிலைகளை எடுத்துக் கொண்டால் உயிரான விஷ்ணு அதற்கு வரம் கொடுத்து விடுகின்றான். அங்கே உயிருக்குள் இணைந்தபின் “பிரம்மம்…!”
1.தன் தந்தை சொல்படி தட்டாது அதனை உருவாக்கி
2.வேதனை கொண்ட உணர்வின் செயலாக அதை இயக்கத் தொடங்கி விடுகின்றான்.
3.ஆகவே இவை இரண்டும் சேர்த்து ஒன்றாக இருக்கும் போது தான் ஈசன் என்று பெயர். இங்கே சிருஷ்டி.
4.தந்தையும் தன் குழந்தையும் இரண்டும் சேர்த்து இயக்கப்படும் போது பிரம்ம ரிஷி சிருஷ்டி… “ஈசா… ஓ..ம்… ஈஸ்வரா…!
5.நமது ஞானிகள் வைத்த காரண காரியப் பெயர்கள் சாதாரணமானவை அல்ல.

அதே சமயத்தில் சிருஷ்டி என்று உருவாவது அனைத்தும் அணுக்களாக உடலாக மாறுகின்றது. சிவத்திற்குள் அறையாக (ROOM) அமைத்து அதனை உருவாக்கி அதனைத் தன் இயக்கமாக வைத்துக் கொள்கின்றது. (உடலாக உருவாவதைச் சிவம் என்றார்கள் ஞானிகள்.)

நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் சதா சிவமாக உடலாக உருவாகிக் கொண்டே உள்ளது. வருவதை எல்லாம் சிவன் அரவணைத்துக் கொள்கின்றான்.

ஆனால் நாம் நல்லவைகளை எடுத்துக் கொண்டால் சிவனால் அதைத் தாங்க முடிகின்றது. தீமையானவைகளை எடுத்துக் கொண்டால் சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகின்றான் என்று அதையும் காட்டுகின்றார்கள்.

1.உதாரணமாக ஒரு குளிர்ச்சியான பொருளைக் கையில் கொடுத்தால் விறு..விறு…விறு…! என இருக்கிறது.
2.ரொம்ப நேரம் அதைக் கையில் வைக்க முடியவில்லை.
3.அதே சமயத்தில் ஒரு சுடும் பொருளை நாம் கையில் வைத்தாலும் சுரு…சுரு…சுரு…! என்கிறது
4.அதையும் நாம் நீண்ட நேரம் வைத்திருக்க முடிவதில்லை.

அதைப் போன்று தான் நாம் எண்ணியது அனைத்தும் உடலுக்குள் அது எது போய்ச் சேர்ந்தாலும் அதனதன் உணர்ச்சியைத் தூண்டத்தான் செய்யும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் வேதனை என்று எண்ணினால் விஷம் தீண்டினால் எவ்வாறோ அதைப் போல நம் உடலுக்குள் நஞ்சாக விளையத்தான் செய்யும்.
1.அப்பொழுது உடலான சிவனால் அதைத் தாங்க முடியாது.
2.ஆனாலும் லட்சுமியுடைய (காந்தம்) நிலைகள் என்ன…?
3.உயிருக்குள் இருக்கும் காந்தம் எதையுமே கவர்ந்து கணவனுக்குச் (விஷ்ணு) செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்கின்றது.

உயிருடைய இயக்கம் எதுவாக இருந்தாலும் தன் கணவருடனே இணைந்து விஷ்ணுவுடன் இணைக்கப்படும் போது அதிலே உருபெறும் குழந்தைகள் தான் நாம் சுவாசிக்கும் வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் எல்லாமே…!

ஆகவே
1.நம் உயிருக்குள் படும் உணர்வின் தன்மையில் மிகுந்த கவனம் தேவை.
2.நம் உயிரிலே எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் சேராது பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

அதற்காக வேண்டித் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து அதை உயிர் வழியாகச் சுவாசிக்கும் முறையும் இந்த உபதேச வாயிலாக உணர்த்துகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரப் பழகிக் கொள்ளுங்கள்.

1.உங்கள் உயிர் அதை இயக்கி
2.சிருஷ்டி என்ற நிலைகளில் மெய் உணர்வுகளை உங்களுக்குள் பிரம்மமாக்கி
3.அதுவாகவே உங்களை மாற்றும்.

தியானம் செய்யும் போது கொட்டாவி ஏன் வருகிறது…?

third-eye-agastyar

கேள்வி:-
தியானத்தின் போது அதிக உமிழ் நீர் சுரக்கின்றது. ஏன்…? இடையிடையே ஒரு சில நேரம் கொட்டாவியும் வருகிறது. இது ஏன்…?

பதில்:-
1.உமிழ் நீர் வருவதன் காரணம்
தியானிக்கும் பொழுது உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது என்றால் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகள் ஒளிக்கற்றைகளாக உயிரிலே மோதி வாயிலே அது கரைகின்றது என்று அர்த்தம்.

உங்கள் நினைவுகள் எந்த அளவுக்கு மகரிஷிகளுடன் ஒன்றியிருக்கின்றதோ அந்த அளவுக்கு அது வரும். அப்படிக் கரையும் உமிழ் நீர சுவையாக இருக்கும்.

நெல்லிக் கனியின் சுவை போன்றோ மலை மீது உருவாகும் நீரின் சுவையாகவோ அதாவது பல மூலிகைகள் கலந்ததாகவும் தெரியும்.

அந்த உமிழ் நீர் உங்கள் ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் ஞானிகளின் உணர்வுகள் ஆற்றல்மிக்கதாக உருப் பெறத் தொடங்கும். நோய் நீக்கும் சக்தி கிடைக்கும். மன பலம் கிடைக்கும்.

தொடர்ந்து இந்த உமிழ் நீர் சுரந்து கொண்டே இருந்தால் மற்றவர்களுக்கு இயற்கையாக உடலில் வரக்கூடிய தொல்லைகள் (தலை வலி மேல் வலி சோர்வு) நம்மை எதுவும் பாதிக்காதபடி ஒரு பாதுகாப்பு நிலையாக உருவாகும்.

2.கொட்டாவி வருவதன் காரணம்
இன்று டி.வி ரேடியோ எப்படி அலைவரிசைகளில் செயல்படுகின்றதோ அது போல் தான் நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்கள் கொண்ட அணுக்களும் அதனதன் உணவை (உணர்வலைகளை) இந்தக் காற்று மண்டலத்திலிருந்து பிரித்து எடுக்கும் நிலையில் உயிர் மூலமாக இயக்கி மூக்கின் வழியாகச் சுவாசித்து வாழ்ந்து கொண்டுள்ளது.

பூமியில் மண் அடுக்குகள் எப்படிப் பல பல நிறங்களில் படிந்துள்ளதோ அதைப் போல் நம் உடலிலும் பல அடுக்குகள் கொண்ட நிலைகளில் அத்தகைய அணுக்கள் உண்டு.

நமக்குள் ஆழமாகப் பதிவான அத்தகைய குணங்களின் அணுக்கள் நம்மைக் கேட்காமலேயே நம்மை அறியாமலே சுவாசத்தின் மூலமாக சுவாசித்துத் தன் தன் இனத்தைப் பெருக்கி ஜீவித்து வாழ்கின்றது.
1.இதை ஊழ்வினை என்பார்கள்.
2.மூல வித்து என்றும் சொல்லலாம்.
3.ஆணி வேர் என்றும் சொல்லலாம்.

ஆனால் நாம் எடுக்கும் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள் அதுவும் அலை வரிசையில் தான் வருகின்றது. அந்த அலை வரிசை சிறுகச் சிறுக உடலுக்குள் பெருக்கமாகும் பொழுது அது அத்தகைய ஊழ் வினைகளுக்குள் ஊடுருவி அதற்குள்ளும் கலக்கும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம் உடலில் ஏற்கனவே ஊழ் வினையாக உருவான ஊனுக்குள் ஊடுருவ ஊடுருவ அதனின் மூல இயக்கங்கள் மாறி அதற்குரிய உணவு கிடைக்காது தடையாகும்.

அதாவது
1.மகரிஷிகளின் அலை வரிசை நமக்குள் இயக்கமாகி
2.அந்தப் பழைய ஊனின் அலை வரிசைகளைத் தடைப்படுத்தும்.
3.அப்படி அதைத் தடைப்படுத்தும் பொழுது அதனுடைய வலிமை குன்றுகிறது.
4.அது வேக வைக்கப்பட்டு ஆவியாக வரும். அது தான் கொட்டாவி என்பது.

நாள் முழுவதும் நன்றாகத் தூங்கி இருந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் சீராக அந்த அலை வரிசையில் இழுத்துச் சுவாசித்தால் ஒரு ஐந்து நிமிடத்திலே கூட இத்தகை கொட்டாவி வரும். பார்க்கலாம்.

தியானம் ஆரம்பிக்கும் பொழுது உங்கள் உடல் வலுவாகத் தெரிந்தாலும் கொட்டாவி வர வர உடல் வலு குறைந்து தியானத்தை நிறுத்திவிட்டுத் தூங்கலாமா என்ற எண்ணம் கூட வரும்.

ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தியானத்தில் அமர்ந்தால் கொட்டாவி மீண்டும் வரும்.

ஒரு மைசூர் பாகு கிளறுகின்றோம் என்றால் எந்த அளவுக்கு நெய் விடுகின்றோமோ அது அடிபிடிக்காமல் அந்தப் பதார்த்தம் சரியாக வரும். நெய் குறைந்து விட்டால் அப்படியே கல் போன்று சட்டியில் ஒட்டிக் கொள்ளும். எடுக்க வராது. அது போல் தான்
1.நாம் எடுக்கும் அந்த உயர்ந்த ஆற்றல்கள் நம் உடலில் அதிக வெப்பத்தை உருவாக்கும்போது
2.நம் உடலில் ஏற்கனவே உருவான ஊழ் வினைகளை மாற்றும் பொழுது
3.அந்தக் கொட்டாவி வரத் தான் செய்யும்.

தியானத்தில் உட்கார முடியவில்லை என்றால் மீண்டும் ஞான உபதேசங்களைப் படிக்கலாம். அல்லது தியானத்தில் அமர்ந்து எடுக்கும் அருள் உணர்வுகளை மற்ற வேலைகளைச் செய்து கொண்டே எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது வாழ்க்கையே தியானமாகின்றது. இப்படித்தான் பெருக்க முடியும். ஒரேயடியாகச் சக்தியைப் பெறவும் முடியாது. கூட்டவும் முடியாது. ஆனால் வாழ்க்கையுடன் இணைந்த நிலைகள் கொண்டு நம்மால் மகரிஷிகளின் அருள் சக்திகளை எளிதில் பெறலாம்.

சக்தியை நமக்குக் கூட்டிக் கொள்வதும் எளிது…! என்னுடைய அனுபவம் இது.

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்…! ஆனால் வாழ்க்கையில் நாம் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம்…?

Image

blissful ADI PERUKKU

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்…! ஆனால் வாழ்க்கையில் நாம் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம்…?

 

ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயலாக்கும் போது தான் ஒரு குடும்பமாக இயங்க முடியும். அதில் மகிழ்ச்சி தரும் நிலையும் வரும்.

ஒன்றிணைந்து வாழ்ந்தாலும் சந்தர்ப்பவசத்தால் கோபம் வெறுப்பு போன்ற குணங்கள் இயக்கப்பட்டு அந்தச் சக்திகள் நம் உடலிலே பிரம்மமாகச் சிருஷ்டிக்கப்பட்டு விடுகின்றது.

அதனால் மனைவி மீது கணவனுக்கு வெறுப்பும் கணவன் மீது மனைவிக்கு வெறுப்பும் வரும் போது
1.அந்தக் குணம் இருவர் உடலிலும் சிருஷ்டிக்கப்படும் பொழுது அது பிரம்மம் தான்.
2.அதனின் சக்தியாக இயக்குவது பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
3.அந்த உணர்வின் ஞானமாக வெறுக்கும் உணர்வு வளர்ந்து வெறுப்பின் வித்தை உடலுக்குள் பெருக்குகின்றது

ஆனாலும் குடும்பம் ஒன்று சேர்த்து வாழ்ந்து அதிலே மனம் பெருகி அமைதி பெறுகி செல்வம் பெருகி ஞானம் பெருகி இவை எல்லாம் பெருகி வளரப்படும் போது வீட்டிற்குள் மகிழ்ச்சி பெருகுகின்றது. அந்த மகிழ்ச்சியினால் பொருள் காணும் நிலைகள் உருவாகின்றது.

அப்படி மகிழ்ச்சியின் நிலைகள் பெறப்படும் போது நல்ல பொருளின் தன்மைகளைக் கவர்ந்து அதைப்பெற வேண்டும் என்றும் அதன் வழிகளில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்றும் அதை எடுக்கின்றார்கள்.

1.சந்தோஷமாக இருக்கும் போது நீங்கள் ஒரு பொருளைப் பாருங்கள். அது தெளிவாகத் தெரியும்.
2.ஆனால் வெறுப்பின் தன்மை நமக்குள் வந்த பின் பொருளைக் காண்பதும் கஷ்டம்…! அந்தப் பொருளைப் பாதுகாக்கிறதும் கஷ்டம் தான்….!

மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒரு பொருளை எடுத்து நாம் பார்த்தாலும் அதைப் பந்தோபஸ்தாக வைப்போம். ஆனால் வெறுப்புடன் இருக்கும் பொழுது எந்தப் பொருளைக் கொடுத்தாலும் உடனே தூக்கி எறிவோம். எந்த வெறுப்பை நாம் எடுத்தோமோ அதனால் தீமையைப் பெருக்கும் நிலை வருகின்றது.

சநதர்ப்பத்தால் குடும்ப வாழ்க்கையில் மிகவும் வெறுப்பாகி விட்டால்… எதைக் கண்டாலும்
1.இது எதற்கு…? இந்த வீடு எதற்கு…? காடு எதற்கு…?
2.பொருள் எதற்கு…? துணி எதற்கு…? என்ற நிலைகள் இது பெருகிவிடும்.
3.இத்தகைய தீமையின் தன்மை பெருகி விட்டால் மனித உடலுக்குள் தீமைகள் பெருகி
4.தீமையின் உணர்வுகளைச் சேர்த்து அதற்குத் தகுந்த ஓர் உருவாக உடலின் அமைப்பாகப் பிரம்ம ரிஷி சிருஷ்டித்து விடுவான்.

யார்..?

நம் உயிரே பிரம்ம ரிஷியாக நின்று நமக்குள் அது சிருஷ்டிக்கும் பிரம்மாவாக நாம் எண்ணியதை எல்லாம் சிருஷ்டித்து உருவாக்கி விடுவான்.

1.நீங்கள் எதை எண்ணி எடுத்தாலும் அந்த ரிஷி தான் (உயிர்)
2.அதனின் உணர்வின் வேகமாக உங்களை இயக்குகின்றான்.
3.அதனால் தான் பிரம்ம ரிஷி என்பது.

ஆகவே உயர்ந்த குணங்கள் பெருக வேண்டும்… குடும்பம் உயர வேண்டும்… குடும்பத்திற்குகந்த செல்வம் உயர வேண்டும்…! என்றால் நாம் எதனைப் பெருக்க வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போதும் சரி இரவு படுக்கச் செல்லும் போதும் சரி “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி நினைவை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது அந்த அருள் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.

பின் உங்கள் வாழ்க்கையில் தீமைகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வாருங்கள்.

சிறிது நாள் செய்து பழகிக் கொண்டால் மகரிஷிகளின் அருள் சக்தியை உயிர் அணுக்களாக உருவாக்கி உங்கள் உடலுக்குள் அதைப் பெருக்கத் தொடங்கும்.
1.அருள் சக்தி உங்களுக்குள் பெருகப் பெருக அதனின் ஞானமாக இயக்கி
2.உங்களை அருள் வாழ்க்கை வாழச் செய்யும்.

அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

Image

asdadik balagarkal

அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

 

ஆற்றிலே வெள்ளம் செல்கிறதென்றால் அந்த வெள்ளத்தை நாம் விவசாயம் செய்யும் வயல்களிலே பாய்ச்சினால் என்னவாகும்…? வயல்களிலுள்ள பயிர் பச்சைகளை அழித்துச் சென்று விடும்.

அதைப் போல் தான் நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆசைகளை நாம் வெள்ளமாகக் கொண்டு சென்றால் அது என்ன செய்யும்…?

நீரினால் ஏற்படும் வெள்ளம் மற்றதை அடித்துச் செல்வது போல்
1.மற்ற எந்தச் சிந்தனைகளும் சீராக வராதபடி
2.எந்த ஆசையை முன்னாடி வைத்தோமோ அந்த வழிக்கே நம்மை
3.மீண்டும் மீண்டும் அதிலேயே ஒரு நிலைப்படுத்திக் கொண்டு போகும்.
4.மற்ற எதையும் சீராக அறியவிடாது தள்ளிவிடும்.

ஆனால் அருள் மகரிஷிகளுடைய உணர்வுகளை நாம் இச்சைப்பட்டு நமக்குள் பெருக்கிக் கொண்டு வந்தால் நம்மை அறியாது சேர்த்த தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.

உதாரணமாக ஓர் வெளிச்சத்தை நாம் போட்டோம் என்றால் அங்கிருக்கும் இருளைப் போக்கி மறைந்த பொருள்களை எல்லாம் காணச் செய்யும்.

அது போல் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைப்போமென்றால் நமக்குள் அது பெருகி நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி விடும். மெய்ப் பொருளைக் காணச் செய்யும்.

ஆகவே
1.மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி
2.நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
3.மெய் உணர்வின் தன்மை நம் ஆன்மாவில் பெருக்கிடல் வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரின் துணை கொண்டு பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றது மனிதனாக உருப்பெற்ற நம்முடைய இந்தத் தருணம்.

அஷ்ட திக்கையும் எட்டிப் பிடித்து… அதை உணரும் தகுதி பெற்றவன் தான் மனிதன்…! அஷ்ட திக்கும் என்றால் எந்தத் திசையிலிருந்து எது வந்தாலும் அது அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவன் ஆறாவது அறிவு பெற்ற இந்த மனிதன்.

எந்தத் திக்கிலிருந்து எது வந்தாலும் அஷ்ட திக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது சப்தரிஷி மண்டலம். தீமைகள் வந்தாலும் இருள் சூழ்ந்தாலும் அது எல்லாவற்றையும் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகின்றது.

அதே போன்று தான் துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் எத்தகையை நஞ்சினையும் அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது. இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் வெள்ளமாகப் பெருக்கி
2.அஷ்ட திக்கிலிருந்து வரும் இருள்களை எல்லாம் மாய்த்து
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக பத்தாவது நிலையை அடைவதே பதினெட்டாம் பெருக்கு,..!

உயிருக்குள் இருக்கும் உலகமும் உலகுக்குள் இருக்கும் உயிரும் – பிரம்ம ரிஷி…!

brahma-emerging-from-vishnu

உயிருக்குள் இருக்கும் உலகமும் உலகுக்குள் இருக்கும் உயிரும் – பிரம்ம ரிஷி…! 

1.ஓர் உயிர் அணு தோன்றும் போது இயக்கத்தை ஈசனாகவும்
2.அதனின் இயக்கத்தின் தொடருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணுவாகவும் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் விஷ்ணு என்ற வெப்பத்தின் தணல் ஆகும் போது அதிலே ஈர்க்கப்படும் சக்தியாகக் காந்தம் உருவாகுவதை லட்சுமி என்றும் வெப்பத்துடன் இணைந்த நிலைகள் கொண்டு இயங்குவதால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும் பெயரை வைக்கின்றார்கள்.

இதிலே நாம் எதை எதை எல்லாம் எண்ணுகின்றோமோ நமது உயிர் அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து “ஓ…!” பிரணவமாக்கி என்று உணர்வின் சத்தை ஜீவனாக்குகின்றது (அதாவது உருவாக்குகின்றது)
அது எதனின் குணமோ
1.அதனின் மணமாக
2.அதனின் உணர்வாக
3.அதனின் ஞானமாக உடலிலே இயக்கும்.
4.ஆக விஷ்ணுவின் மகன் “பிரம்மா…!” என்று பெயரை வைக்கின்றார்கள்.

உயிரின் இயக்கத்தால் ஏற்படும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தான் கவர்ந்த சத்தின் தன்மையைத் தன்னுடன் இரண்டறக் கலக்கச் செய்யும் போது அதிலே உருப்பெறுவது தான் “விஷ்ணுவின் மகன் பிரம்மா…!” என்பது.

இயக்கத்தை ஈசன் என்றும் இயக்கத்தால் ஏற்படும் அந்த வெப்பம் விஷ்ணு என்றும் வெப்பத்தால் கவரும் காந்தமாகும் பொழுது அது லட்சுமி ஆகின்றது.

நாம் ஒரு உயர்ந்த பொருளைப் பார்க்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்போது அந்தக் காந்தம் இயக்குகின்றது.
1.அந்த இயக்கத்தின் தொடர் நம் உயிரிலே இயக்ககப்படும் போது ஓ…! என்று பிரணவமாகின்றது.
2.உயர்ந்த ஒரு பொருளையோ மற்றதையோ பார்த்து அதைப் பெறவேண்டும் என்ற நினைவலைகள் கொண்டு
3.நமக்குள் நாம் சுவாசிக்கும் போது அது உயிரிலே பட்டு இயக்கப்பட்டு
4.அந்த உணர்வுகள் ஓ…! என்று பிரணவமாகின்றது.
5.பின் ம்…! என்று அது உடலாகச் சிருஷ்டிக்கின்றது.
6.ஆகவே தான் விஷ்ணுவின் மகன் பிரம்மா…!
7.ஏனென்றால் இது இயக்கத்தால் ஏற்படும் நிலை.

அதாவது நாம் நுகர்ந்த நிலைகள் விஷ்ணுவால் இயக்கப்படும் பொழுது “ஓ… ம்…!” அது பிரம்மம் “சிருஷ்டி..” உடலாகச் சிருஷ்டிக்கப்படும் நிலை பிரம்மா.

ஆனாலும் தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை ஜீவனாக்கப்படும் போது பிரம்மாவின் மனைவியாக (சக்தியாக) “சரஸ்வதி…!” என்று காட்டுகிறார்கள் ஞானிகள்,

1.விஷ்ணுவின் மகனாகத் தனக்குள் இந்த உயிர் எப்படி இயக்குகின்றதோ
2.அதைப்போல நம் உடலிற்குள் எண்ணிய உணர்வின் சக்தியையும் அது இயக்குகின்றது.

அதனால் தான் விஷ்ணுவின் மகன் பிரம்மன் என்று சொல்வது. பிரம்ம ரிஷி. யார்…?
1.இந்த விஷ்ணுவைப் பிரம்ம ரிஷி என்றும்
2.அதே சமயத்தில் அவனிலே விளைந்த நிலைகள் அதுவும் சிருஷ்டிக்கும் தனமை பெற்றது.
3.பிரம்ம ரிஷியின் மகன் பிரம்ம ரிஷி. அதுவும் சிருஷ்டிக்கும் நிலைகள் பெறுகின்றது என்று தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நம் உயிரைப் பற்றியும் உடலைப் பற்றியும் உயிரின் இயக்க நிலைக்ளையும் உடலாக அது எப்படி உருவாக்குகிறது என்ற பேருண்மைகளைச் சாதாரண மனிதனும் அறிந்து கொள்வதற்காக உணர்ந்து கொள்வதற்காக இதை எல்லாம் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

நாம் உணர்ந்து கொண்டால் எது நம்மை இயக்குகிறது…? எது நம்மை மாற்றுகிறது…? நாம் எதுவாக ஆக வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற மெய் ஞானம் பெற்று ஞானிகள் சென்ற மெய் வழியில் செல்ல முடியும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது…!

காந்திஜிக்கு ஞானமும் மக்களைக் காக்கும் மன பலமும் கிடைத்தது எப்படி…?

Image

mahatma-gandhi

காந்திஜிக்கு ஞானமும் மக்களைக் காக்கும் மன பலமும் கிடைத்தது எப்படி…?

 

உலகம் முழுவதற்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் தன்மை கொண்டு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் காந்திஜி தன் பிழைப்பிற்காகத் தென்னாப்பிரிக்காவிற்குச் செல்கின்றார்.

தான் கற்ற சட்டக் கல்வியை வைத்து அந்த நாட்டிலே தான் உயர்வு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் செல்கின்றார். ஆனால் அங்கே செல்லப்படும் போது
1.இந்திய மக்கள் வாடுவதையும் கருப்பு இன மக்கள் துடிப்பதையும்
2.ஆங்கிலேயருடைய அதிகாரத்தின் நிலைகள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றது…? என்பதையும் கண்டுணர்கின்றார்.

ஆங்கிலயேரின் செயல்பாடுகளை வக்கீலாக வாதாடி அந்த உண்மைகளைச் சொல்லப்படும் போது அவர் மேல் முட்டையை வீசுகின்றார்கள். அவரை அசிங்கப்படுத்துகின்றார்கள்.

அப்போது தான் அவர் சிந்திக்கின்றார்…!

அங்கே இருக்கும் மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கின்றது…? என்ற நிலையில் அவர்கள் படும் துன்பங்களையும் துயரமான உணர்வுகளையும் சந்திக்கப்படும் பொழுது ஈவும் இரக்கமும் அவருக்குள் வருகின்றது.

இவர் தன்னுடைய சிறிய வயதில் செய்த தவறுகளை எல்லாம் அப்பொழுது உணர்கின்றார். அப்படி உணரப்படும் போது தான் “சேவை…!” என்ற உணர்வுகள் அங்கே அவருக்குள் வருகின்றது.

ஏனென்றால் அன்று வேடுவனாக இருந்த வான்மீகி தான் இரு பட்சிகள் ஆனந்தமாக இருக்கப்படும் பொழுது ஒரு பட்சியைத் தன் அம்பால் வீழ்த்துகின்றான். அது துடிதுடித்துக் கீழே விழுந்து இறக்கின்றது.

கூட வந்த மற்றொரு பட்சியோ தன் பாச உணர்வுகள் கொண்டு ஏங்கிப் பார்க்கின்றது. அந்த பட்சியிடமிருந்து வெளி வரும் பாசமான உணவலைகள் அலைகளாகப் படரப்படும் போது அதையும் இவன் குறி வைத்துத் தாக்க எண்ணுகின்றான்.

இருந்தாலும் அந்தப் பட்சி… தன்னுடைய எல்லை கடந்த பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது
1.அந்தப் பட்சி எண்ணிய உணர்வுகள் வேடுவனுக்குள் ஊடுருவி
2.இவன் உடலுக்குள் இருக்கும் பாச உணர்வுகளைத் தூண்டச் செய்து
3.தன் மனைவி குழந்தைகள் மீது வரும் “தன் இனத்தின்…!” பாச உணர்வுகளை உந்தச் செய்கின்றது.

அதன் பின் தான் வேடுவனான வான்மீகி பட்சியைக் கொல்வதை விடுத்து வானை நோக்கி ஏகுகின்றான். அப்படி வானிலே ஏகும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவன் சுவாசத்தில் சிக்கப்பட்டுத் தன் தவறை உணர்ந்து திருந்துகின்றான்.

பட்சியிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரப்பும் பொழுது அதை நுகர்ந்து சுவாசிக்கும் பொழுது
1.அது எப்படித் தனக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறது…? என்றும்
2.அந்த எண்ணத்தின் தோற்றமும் இயக்கங்களும் எப்படிச் செயல்படுகின்றது என்பதையும்
3.இராமனாக உருவகப்படுத்தி இராமாயணமாக எழுதுகின்றான்.

அந்த வான்மீகியைப் போன்றுதான் தன் இளமைப் பருவத்தில் சிற்றின்பமும் மற்றவருடைய நிலைகள் தவறான நிலைகளையும் செய்து வந்தர்தான் காந்திஜியும்.

ஆனாலும் தென்னாப்பிரிக்காவில் மக்கள் துயர் படும் உணர்வினைக் கண்டார். அவர்களைப் பழித்துப் பேசுவதைக் காணப்படும் போது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலையில் நன்மையைப் பற்றிச் சிந்திக்கின்றார்.

ஆங்கிலேயர்கள் காந்திஜியைப் பழித்துப் பேசுகின்றார்கள். இருந்தாலும் இந்த உணர்வின் தன்மை மாற்றமடையப்படும் போது “ஏழ்மையில் வாடும் மக்களை மீட்ட வேண்டும்…!” என்ற உணர்வு கொண்டு தான் கல்வி கற்ற உணர்வின் அறிவைப் பயன்படுத்தத் தொடங்குகின்றார்.

காந்திஜி வான்மீகியின் இராமாயணக் காவியத்தைப் படித்த அந்த உணர்வின் தொடர்கள் அவருக்குள் இயக்கமாகின்றது.
1.அன்று வேடுவனான வான்மீகிக்குள் எப்படித் திருத்தமானதோ
2.அதே போல இவருக்குள்ளும் இந்த நினைவுகள் திருத்தமாகி
3.உலக மக்களைக் காக்க வேண்டும்…! என்ற எண்ணம் வலுவாகின்றது.

தீமை செய்வோர் உணர்வுகள் தனக்குள் வரப்படும் போது அந்தத் தீமையின் உணர்வுகள் வளர்ச்சியாகி “நம்மையும் எப்படித் தீமை செய்ய வைக்கின்றது…?” என்று உணர்கின்றார்.

1.தீமையிலிருந்து மீள வேண்டும் என்றும் தன் இனத்தைக் காக்க வேண்டும் என்று
2.அன்று அந்தப் பட்சி எடுத்துக் கொண்ட “தன் இனத்தைக் காக்கும் உணர்வுகள்”
3.வான்மீகிக்குத் தீமையிலிருந்து விடுபடும் உணர்வை அந்தப் பட்சி ஊட்டியது போன்று
4.தீமை என்ற உணர்வுடன் வருவோரிடமிருந்து மக்களை ஏன் மீட்கக் கூடாது…? என்ற உணர்வினைக் காந்திஜி எடுத்துக் கொள்கிறார்.

இராம காவியத்தைப் படைத்த வான்மீகியின் நிலைகள் கொண்டு இந்த எண்ணங்கள் எப்படி…? என்ற நிலையைத் தெரிந்தோ தெரியாமலேயோ அதனின் உண்மை நிலையை தெளிவாக உணர்ந்து அதன் வழியில் கடைப்பிடித்துத்தான்
1.நாம் பெற வேண்டியது எதை…?
2.நாம் சாந்தமாகச் செயல்பட வேண்டியது எவ்வாறு…? என்ற
3.அந்த அருள் உணர்வினைத் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தக் காந்தி மகான்
4.எத்தனையோ துயர்களிலிருந்து எல்லா மக்களையும் மீட்டிக் கொடுத்தார்.
5.இந்தியாவிலும் மக்களை மீட்ட வேண்டும் என்ற நிலையில் நம்மையும் மீட்டிக் கொடுத்தார்.

காந்திஜியை நாம் எண்ணி அவர் பெற்ற சாந்தமும் ஞானமும் விவேகமும் பெறவேண்டும் என்று எடுத்தால் நம்மை அறியாது இயக்கும் கடுமையான பகைமைகளிலிருந்து விடுபட முடியும்.

அதே போல மற்றவர்களைக் காக்கும் சக்தியும் ஆற்றலும் அந்த மன வலிமையையும் நாம் நிச்சயம் பெற முடியும்…!

நாம் சேமிக்க வேண்டிய அழிக்க முடியாத சொத்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Treasure hunt for soul

நாம் சேமிக்க வேண்டிய அழியாத சொத்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் தான் மனிதர்கள் மனதிலே ஊன்றியுள்ளது.

1.உயர்வு எனும் பொழுது அல்லது உன்னத நிலை எனும் பொழுது
2.நம் உடலுக்கு நம் உயிருக்கு அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலையைப் பெறவேண்டும் என்ற
3.அந்த உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் எல்லாம் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

வாழ்க்கையில் சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம். அழியாச் சொத்தை யாரும் எண்ணுவதில்லை. மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை உடலில் உள்ள பொழுதே அதைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

இந்தத் தூல சரீரத்தைத்தான் எண்ணுகின்றார்கள். ஞானச் சரீரத்தை எண்ணிப் பார்ப்பதில்லை.

ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற… நம் உயிராத்மாவிற்கு அழியா நிலை பெற…
1.எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே நம் சுவாசத்தில் என்றுமே எடுத்துக் கொண்டால்
2.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை (உடலை) எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகின்றார்கள்.

வாழும் நாள் எல்லாம் மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்….!
1.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து
2.பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
3.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்த நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது. அந்த நிலையில் நம் உயிருக்குப் பெரும் சோர்வின் தன்மையைத் தான் அளிக்கின்றோம்.

அதையே வளரவிட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத் தான் மேலும் மேலும் பெறுகின்றோம். இதை எல்லாம் அறிந்திடல் வேண்டும்.

ஆகவே
1.நம் உயிரணுவிற்கு நாம் பெறும் ஊட்ட நிலையை
2.அழியாச் செல்வமான ஆத்ம ஜோதி என்ற ஒளி நிலையைப் பெற
3.ஈஸ்வர தியானங்கள் பெற்று அந்த நிலையில் நமக்குக் கிடைத்திடும் அரிய பொக்கிஷங்களை
4.நம் உயிரணுவிற்குச் சேமித்திடல் வேண்டும்.
5.விண்ணிலே ஒளிரும் நட்சத்திரமாகலாம்…!

நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அந்தச் சொத்தே என்றும் அழியாத சொத்தாகும். அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது.

நன்றாகப் பழகினாலும் நண்பர்களுக்குள் எப்படிக் கடுமையான பகைமை வருகின்றது…?

Image

positive-energy-blog

நன்றாகப் பழகினாலும் நண்பர்களுக்குள் எப்படிக் கடுமையான பகைமை வருகின்றது…?

சகஜ வாழ்க்கையில் நண்பர் என்ற நிலைகள் கொண்டு நாம் ஒருவருடன் நெருங்கிப் பழகிவிட்டால் அவர் சில தவறுகள் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்கின்றோம்.

அந்தத் தவறை எளிய முறையில் ஏம்ப்பா…! இந்த மாதிரி செய்கிறாய்…? என்று லேசாகத்தான் சொல்கின்றோம். இப்படிச் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மற்ற காரியங்களில் “தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை…!” என்றால் என்ன நடக்கின்றது…?

1.இவ்வளவு காலம் என் நண்பன் அவன் எத்தனையோ தவறுகளைச் செய்தான்.
2.அதையெல்லாம் மறைத்து அவனுக்கு எல்லா உதவிகளையும் நன்மைகளையும் நான் செய்தேன்.
3.ஆனால் இவ்வளவு உதவிகளையும் பெற்ற அந்த நண்பன் இன்று நான் எதிர்பார்த்தபடி வராமல் அவன் பெரிய தவறு செய்கின்றான்.
4.அதை எப்படிக் கேட்காமல் இருப்பது…! என்ற நிலையில் நண்பனிடம் சென்று
5.“இது வேண்டாம்ப்பா… பெரிய தவறு…!” என்று சொல்கிறோம்.

அப்பொழுது அந்த நண்பனுக்குள் என்ன நடக்கின்றது…?

“இவன் என்னமோ பெரிய யோக்கியன்…!” மாதிரிப் பேசுகின்றான். என்னைப் பார்த்து இன்றைக்குத் தவறு என்று சுட்டிக் காட்ட ஆரம்பித்து விட்டான்…! என்ற இந்த உணர்வுகள் மோதலில் முடிந்து பகைமையாகி விடுகின்றது.

அந்தப் பகைமையின் தன்மையை வளர்க்கும் பொழுது பகைமையான அணுக்கள் உடலுக்குள் புகுந்து அதனால் போர் முறையே நமக்குள் வருகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கும் நண்பனாக வளர்த்துக் கொண்ட குணத்திற்கும் அதே சமயம் சந்தர்ப்பத்தில் உருவான அந்தப் பகைமையான அணுக்களுக்கும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி மனக் கலக்கமாகி வேதனையே விளைகின்றது.

இப்படிப்பட்ட நிலை வரும் போது தன்னை அறியாமலேயே உடல் சோர்வடையத் தொடங்குகிறது. சோர்வடைந்த பின் நாம் நல்லதைச் சிந்திக்க முடியாத நிலைகள் ஆகி விடுன்றது.

சிந்திக்க முடியவில்லை என்றால் கோப உணர்ச்சிகள் தூண்டப்பட்டு என்ன பொருள் என்ற நிலையைத் தன்னால் (நல்ல தரத்தை) காண முடியாதபடி செய்து விடுகின்றது.

1.காண முடியாதபடி… அதைப் பெறுவதற்குத் தகுதி இல்லை என்று எண்ணினாலும்
2.அதை எப்படியும் தான் பெற வேண்டும் என்ற உணர்வுகளை மீண்டும் மீண்டும் ஊட்டும் பொழுது
3.தீமையின் விளைவுகள் அதிகமாக விளைந்து நம்மை அறியாமலேயே பகைமை உணர்வுகள் வளர்ந்தபின்
4.இந்த மனித உணர்வுகளையே உருக்குலையச் செய்து விடுகின்றது.
5.எந்த மனிதனைக் கண்டாலும் நம்பிக்கை இல்லாத நிலையாக உருவாக்கி விடுகின்றது.
6.அனைவரையும் பகைமையாக்கி “எல்லோரையும் பகைவர்கள்…!” என்று வெறுப்பின் உணர்வுகளை வளர்க்கச் செய்கின்றது.

இந்த வெறுப்பின் உச்சகட்டம் உடலிலே விளையப்படும் போது கடும் நோயாகி இதே மனித உடலில் வெறுக்கும் உணர்வுகளை வளர்த்து மனிதனல்லாத உருவாக அடுத்து உருவாக்கி விடுகின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ…! அதன் அடிப்படையில்
1.நம் உயிரின் இயக்கத் தொடர் நம்மை எப்படி எல்லாம் உருவாக்குகின்றது…?
2.நம் உருவை எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைத்தான்
3.கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆகவே நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் வரும் பகைமைகளை அகற்ற வேண்டும் என்றால் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அடிக்கடி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.

மெய் ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டிய முறை (ஒட்டுச் செடி போல்)

Image

galaxy near ursa major

மெய் ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டிய முறை (ஒட்டுச் செடி போல்)

 

இன்று ஒட்டுச் செடிகளை வைத்து விவசாயத்தில் தேவையான மகசூலைப் பெறவும் விதம்விதமான உணவுப் பொருள்களையும் உருவாக்கியுள்ளனர்.

அதே போன்று உயிரினங்களிலும் ஒரு கருவுக்குள் மற்ற உயிரினங்களின் ஜீன்களை எடுத்துப் புதுப் புது உயிரினங்களையும் உருவாக்கியுள்ளார்கள்.

அதே போல் குளோனிங் (CLONING) முறையிலும் ஒரே மாதிரி “மனிதர்களையே உருவாக்க முடியும்…!” என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.

அதைப் போல நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் ஒட்டுச் செடி போல் ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒட்ட வைத்துக் கொள்வது என்றால் நமக்குள் உள்ள எல்லா குணங்களுக்குள்ளும் ஒட்ட வைக்க வேண்டும்.

நல்லது…கெட்டது… பிடித்தது…பிடிக்காதது… வேண்டியது…வேண்டாதது…! என்று எதையும் பார்க்காமல்
1.எல்லா எண்ணங்களுக்குள்ளும்
2.எல்லா உணர்வுகளுக்குள்ளும்
3.ஞானிகளின் உணர்வை ஒட்ட வைக்க வேண்டும்.

அதாவது ஞானிகளின் உணர்வை நமக்குள் (நமக்குள் என்றால் எல்லாம் சேர்த்துத்தான் “நாம்…!”) கலக்கும் பருவத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு அணுக்களிலும் இவ்வாறு ஞானிகளின் உணர்வை இணைத்து விட்டால் ஞானிகளின் உணர்வுகள் கலந்து
1.புதுப் புதுக் கருக்களாகி
2.திரும்பத் திரும்ப எண்ணினால் முட்டையாகி
3.அந்த மெய் ஞானிகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அடை காத்தது போல் ஆகிவிடும்.

ஞானிகள் அவர்கள் உடலில் விளைய வைத்தது போல் நமக்குள்ளும் விளைந்து அதனின் பெருக்கம் அதிகமாகி நம் செயல்கள் ஞானிகளின் செயலாக மாறும்.

என்னிடம் அடிக்கடி ஈஸ்வரபட்டர் “நீ… கட்சி மாற வேண்டும்டா…!” என்பார்.

கட்சி மாற வேண்டும் என்றால் நம்மையறியாது தவறு செய்தாலும் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ…!) உடனடியாக அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

அந்த ஞானிகளின் கட்சியாக மாற வேண்டும் என்பார். அதை ஒட்டிய செயலாக நாம் செயல்பட வேண்டும் என்பார்.

உதாரணமாக – நான் தவறு செய்துவிட்டேன். அந்தத் தவறு தேவையில்லை. அதனால் நான் ஞானிகள் சொன்னபடி நல்லதாக மாற்றிக் கொள்கிறேன் என்று அடுத்த கணமே தன் மனதை தன் எண்ணத்தை தன் உணர்வை தன் செயலை அப்படியே ஞானிகளுடன் ஒட்டிக் கொள்வது.

1.தவறு செய்ததில் அதிகம் நினைவைச் செலுத்தாதபடி
2.தவறு நடந்ததை வைத்து அல்லது தவறு செய்ததை வைத்து ஞானிகள் அருள் உணர்வுகளுடன் மிகவும் அதிகமாக ஒட்டிக் கொள்வது.

அப்படியே அவர்கள் செயலாகவே நான் இருக்க வேண்டும் என்று
1.எந்த அளவுக்கு அழுத்தமாகப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்த முடியுமோ செலுத்தி
2.அதன் மூலமாக அதிக அளவில் மெய் ஞானிகளின் உணர்வுகளை உறிஞ்சித் தனக்குள் சேர்த்துக் கொள்வது.

இப்படித்தான் செய்து கொண்டுள்ளேன். இது என்னுடைய அனுபவம்

கணவன் மனைவியாக ஒன்றி சப்தரிஷி மண்டலமாக இன்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பவர்கள்…

shiva-parvati

கணவன் மனைவியாக ஒன்றி சப்தரிஷி மண்டலமாக இன்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பவர்கள்… 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குரு காட்டிய அருள் வழிகளில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளையும் பெறக் கூடிய வழியைக் காட்டுகின்றோம்.

1.அந்த வழியில் இதைக் கடைப்பிடிப்போருக்கு
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் “ஒளிப் பேழைகளாக…!” வருவதைப் பார்க்கலாம்.
3.உயிருடன் ஒன்றி உங்கள் புருவ மத்தியில் அந்த ஈர்ப்பின் தன்மை வரும்.
4.புருவ மத்தியில் மோதும் அந்த “மின்னணுவின் உணர்வுகள்…!” உங்கள் நினைவாற்றலை
5.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றது.

எந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணுகின்றோமோ அதைப் பின்பற்றிச் சென்றோர் அக்காலத்தில் வாழ்ந்த அனைவரும் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றார்கள். பேரின்பப் பெரு வாழ்வாக வளர்ந்து வருகின்றார்கள்

எவ்வாறு…?

மனித வாழ்வில் உயர்ந்த உணர்வின் தன்மையை தன் மனைவிக்குப் பெற வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்று இந்த உணர்வு இரண்டையும் ஒன்றாக்கியவர்கள்…
1.கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி
2.கணவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி
3.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி
4.கணவன் மனைவியாகத் தனக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்துக் கொண்டவர்கள் தான் அந்தச் “சப்தரிஷிகள்…!”

அவர்களைப் போன்ற அருள் வாழ்க்கையை நாமும் வாழ்ந்து அவர்கள் அருள் வட்டத்தில் நாமும் இணைந்து வாழ வேண்டும்.

இப்போது எப்படி ஆண் பெண் என்ற அன்பில் எண்ணத்தின் உணர்வு கொண்டு
1.மகிழ்ச்சி பெறும் நிலைகளை உருவாக்கப்பட்டால் காமமாகின்றது.
2.அந்தக் காமத்தின் நிலைகள் கொண்டு இரு மனமும் ஒன்றாகின்றது.
3.அதிலே விளையும் அணுக்களின் தன்மைகள் அமிலங்கள் ஒன்று சேர்க்கின்றது.
4.பின் தன் இனத்தின் விருத்திகளை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் மகரிஷியின் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் தன்மை மோகமாக்கி அதனின் உணர்வைத் தனக்குள் அணுவாக்கிடல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கணவன் மனைவி இருவரும் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற வேண்டும் என்றும் மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற வேண்டும் என்றும் இரு உணர்வும் ஒன்றாக்கிய பின் கருவிலே வளரும் சிசுவிற்கும் அந்த மகரிஷியின் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வினை வளர்த்து விட்டால் கருவிலே வளரும் குழந்தைக்குள்ளும் அருள் ஞானம் வருகின்றது.

இதெல்லாம் அன்றைய மெய் ஞானிகள் காட்டிய அற வழிகள்.

இதன் வழி கொண்டு செயல்படுவோம் என்றால் உடலை விட்டுச் செல்லும் இரண்டு உயிரான்மாக்களும் ஒன்றாகி எந்தத் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் எண்ணினோமோ அதன் வழி ஈர்க்கப்பட்டு அந்த அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைகின்றோம்.