தியானத்தில் துருவ நட்சத்திரத்தை எப்படி அணுகுவது…?

Ultimate star Polaris

தியானத்தில் துருவ நட்சத்திரத்தை எப்படி அணுகுவது…?

கேள்வி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருள் சக்தியை எப்படி நாங்கள் எப்படி அடைவது…? அதற்குண்டான வழி முறைகள் தேவை ஐயா…!

பதில்:-
கீழே கொடுக்கப்பட்டவைகளைக் கண்களைத் திறந்து தியானிக்க வேண்டும்.

1.அம்மா அப்பாவை முதலில் எண்ணி அவர்களின் அருளாசி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்

2.கண்களின் நினைவைப் பூமியின் வடக்குத் திசையில் வட துருவத்தின் வழியாக விண்ணிலே செலுத்த வேண்டும்

3.அகஸ்தியன துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்ச
த்திரமாக இருக்கும் அதனைக் கண்களால் பதிவு செய்ய வேண்டும்

4.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும். (கண்களில் அந்த ஏக்கம் – அதாவது அதைப் பெறவேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும்) ஒரு ஐந்து அல்லது ஆறு தடவை அங்கிருந்து இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

5.கண்களின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும். ஆய்த எழுத்து போல (ஃ) நினைவிலே கொண்டு வர வேண்டும். (புருவ மத்தியைப் பார்க்க வேண்டியதில்லை) ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று உயிரான ஈசனை எண்ணி வணங்க வேண்டும்.

6.வில்லிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பு போல புருவ மத்தியிலிருந்து நம் நினைவு பூமியின் வட துருவத்தின் வழி நேராக துருவ நட்சத்திரத்திற்குள் சென்ற மோத வேண்டும். அதாவது நம் உடலில் உள்ள எல்லா உணர்வுகளையும் எண்ணங்களையும் “ஒன்றாகத் திரட்டி… தனுசு கோடி…!” ஆக புருவ மத்தியில் “இராமலிங்கமாக்கி” அங்கிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செலுத்த வேண்டும்.

7.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த வலிமையான எண்ணம் கொண்டு “உயிரான ஈசனிடம் கட்டளையாக இட்டு…” துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் அந்த இளம் நீல ஒளிக் கற்றைகளைப் புருவ மத்தி வழியாக இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

8.மேலே சொன்ன முறைப்படி அந்த உணர்வுடன் செய்தால் நம் உயிரில் இருக்கும் காந்தம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைக் கவரத் தொடங்கும்… இழுக்கும்… உயிரிலே புருவ மத்தியிலேயே அந்தத் துருவ நட்சத்திரத்தின் அலைகள் வந்து மோதத் தொடங்கும்.

9.மோத ஆரம்பித்தவுடனே… புருவ மத்தி கனமாகும். சிலருக்கு அரிப்பு போல குறு…குறு என்று உணர்ச்சிகள் ஏற்படும். இப்பொழுது நம் உயிரும் துருவ நட்சத்திரமும் நேர்கோட்டில் இருக்கும். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அல்லது துருவ நட்சத்திரத்துடன் நாம் ஐக்கியமாகும் நிலை உருவாகும்.

10.திரும்பத் திரும்ப நம்முடைய நினைவுகள் (1)கண்கள் (2)புருவ மத்தி (3)பூமியின் வட துருவம் (4)துருவ நட்சத்திரம் என்று பழக்கப்படுத்தி உயிரையும் துருவ நட்சத்திரத்தையும் “நேரடியாக…!” இணைத்து விட்டால் அது தான் பிராணாயாமம். சுவாசம் சீராக வரும்.

11.உயிரும் துருவ நட்சத்திரமும் இணைந்து விட்டால் ஒரு நிமிடத்திற்கு நம்முடைய சுவாசம் அதாவது இழுத்து மீண்டும் வெளி விடுவது என்பது மாறி
1). துருவ நட்சத்திரத்தின் அலைகளை இழுக்க 5 அல்லது 6 நொடி
2). துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலுக்குள் தம் கட்ட 2 அல்லது 3 நொடி (உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நிறுத்தி வைக்க வேண்டும்)
3). அதே அலைகளின் தொடர்பை எடுக்க நினைவை வெளி விட 5 நொடி
4). ஒரு நிமிடத்திற்கு ஐந்து அல்லது ஆறு தடவை சுவாசமாக அழுத்தமாக ஆனால் சீராக இருக்கும்.

(இதிலே குறிப்பிட்டுள்ள நேரம் முக்கியம் இல்லை. புருவ மத்தியும் துருவ நட்சத்திரமும் நேர் கோட்டில் இருக்க வேண்டும் அது தான் மிக மிக முக்கியம்.)

துருவ நட்சத்திரதை இவ்வாறு அணுகிய பின் அந்த அலைகளை நமக்கு எங்கெங்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகின்றோமோ அங்கெல்லாம் இதே முறைப்படி இணைக்கலாம்.

நாம் பெறுகின்ற இந்தச் சக்தி மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த அலைகளை எல்லோருக்கும் பாய்ச்சலாம்.

என்னுடைய நினைவுகள் துருவ நட்சத்திரத்தை இப்படித்தான் அடைந்து கொண்டிருக்கின்றது. இப்படித்தான் அதனுடன் நான் தொடர்பில் உள்ளேன்.

ஒளிக்கற்றைகள் பளீர்… பளீர்…! என்று புருவ மத்தியில் மோதுவதையும் உடலுக்குள் இணைவதையும் உடலிலிருந்து பளீர் என்று ஒளிக்கற்றைகள் வருவதையும் காணுகின்றேன். என்னுடைய அனுபவம் இது…!

அகஸ்தியரின் தீட்சை… தீட்சண்யம்…. பெறுவது எப்படி…?

agastya-rishi pindam

அகஸ்தியரின் தீட்சை… தீட்சண்யம்…. பெறுவது எப்படி…?

 

கேள்வி:-
அகத்தியர் பற்றி உங்கள் கருத்து என்ன…? தூங்காமல் தூங்கும் நிலை பெறுவது எப்பொழுது..? தீட்சை பெறுவது எப்படி…?

பதில்:-
அகஸ்தியர் என்பவர் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டிலே தோன்றிய “நம்முடைய மூதாதையர்…!” ஆவார். தென்னாட்டுடைய சிவன் அவர். தக்ஷிணா மூர்த்தி என்பவரும் அவர் தான்.

அவருடைய அக்காலப் பெயர் யாருக்கும் தெரியாது. இருந்தாலும் அவர் அடைந்த மகோன்னதமான உன்னத நிலையை வைத்து அகத்தை அறிந்ததால் அகத்தியர் என்று காரணப் பெயர் வைத்தார்கள்.

அகத்தை என்றால் தன்னையும்… விண்ணையும்… மண்ணையும்… அறிந்ததால் அகத்தியர். தென்னாட்டிலே தோன்றியதால் உடல் பெற்றதால் தென்னாட்டுடைய சிவன். இந்தப் பூமியையே சமப்படுத்தியதால் அவர் எந்நாட்டவருக்கும் இறைவனாக… குருவாக… தெற்கிலிருந்து தோன்றியதால் “தக்ஷிணா மூர்த்தி…!”

இந்த உலகை மீண்டும் சமப்படுத்தும் சக்தியை அவரிடமிருந்து தான் அனைவருமே பெற முடியும். உலகம் என்றால்
1.இந்தப் பூமி என்ற உலகையும்
2.நம் (உடல்) உலகமான நம் உயிரான்மாவையும் தான்.

துருவ நட்சத்திரமும் அவரே. இந்தப் பூமியில் எந்த மெய் ஞான வளர்ச்சியாக இருந்தாலும் அதற்கு மூல காரணம் அது தான்.

அப்படிப்பட்ட அகஸ்தியர் அவர் வாழ்ந்த காலத்தில் நம் பூமியில் தென் துருவமும் வட துருவமும் சென்றவர். அவருடைய மூச்சலைகள் நாம் வாழும் பூமியில் அதிகம் பரவியுள்ளது.

அவர் வெளிப்படுத்திய அத்தகைய மூச்சலைகளைச் சுவாசிக்க வேண்டும். அவர் உணர்வைத்
1.தலையிலிருந்து கால் வரை
2.இரத்தங்களிலும் நரம்புகளிலும் எலும்புகளிலும்
3.உடலில் உள்ள தசைகளிலும் எல்லா அணுக்களிலும்
4.தலையிலே தண்ணீரை ஊற்றும் (குளிக்கும்) பொழுதும்
5.தாகத்திற்காக வேண்டி ஒவ்வொரு முறை தண்ணீரைக் குடிக்கும் பொழுதும்
6.கண் திறந்திருக்கும் நேரத்திலும் தூக்கத்தில் எழுப்பினாலும் அவர் நினைவு வந்தால்
7.நாம் தூங்கினாலும் “முழித்து இருக்கிறோம்” என்று தான் அர்த்தம்.
8.அல்லது முழித்திருந்தாலும் அவருடைய பாதுகாப்பில் “தூங்கிக் கொண்டிருக்கின்றோம்” என்று தான் அர்த்தம்.

என்னைப் பொறுத்தவரை நான் கண்ணை மூடித் திறந்தால் ஒரு வாரமே போகிறது. பத்து தடவை திறந்து முடினால் வருடமே போய்விடுகிறது. எனக்கு நேரம் காலம் எதுவும் இப்பொழுது சரியாக நினைவுக்கு வருவதில்லை.

படுப்பதாகவும் தெரிகிறது மீண்டும் எழுவதாகவும் தெரிகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் படுப்பதும் காலை எழுந்திருந்து எல்லா வேலையும் முடித்து விட்டு மீண்டும் படுப்பது என்பது “ஒரு நொடி…” போல் இருக்கிறது.

ஆக மொத்தம் மீண்டும் மீண்டும் படுப்பதாகவும் மீண்டும் மீண்டும் எழுவதாகவும் தான் தெரிகிறது.
1.இந்த லௌகீக வாழ்க்கையில் தனியாக எங்கேயும் மனம் நிலைக்கவில்லை
2.அகஸ்தியர் உணர்வு தான் எஞ்சி இருக்கிறது

தீட்சை என்பதை விட அதற்குப் பெயர் “தீட்சண்யம்…!” என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய தீட்சண்யம் அகஸ்தியரின் மூச்சலைகளைக் கவர்வதில் தான் உள்ளது.

அவருடைய மூச்சலைகளைக் கவர வேண்டும் என்றால் அதை ஸ்பரிசித்தவர்களின் (அகஸ்தியரின் அருகாமையை) உணர்ச்சிகள்தான் நமக்கு வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஞானகுருவின் உபதேசங்களை (LINK) கூர்ந்து கேட்டாலே அந்தத் தீட்சண்யம் எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும்.

அதிலே முக்கியமான உபதேசம் இது தான்…!
“மகரிஷியும் நானும் – அவன் தான் நான்… நான் தான் அவன்…!”
அதிலே சொல்லியிருப்பது அகஸ்தியரின் பரிபூரணமான ஆசை.

1.உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டு
2.அந்த ஞான வித்தை ஆழமாக ஊன்றி
3.திரும்பத் திரும்ப இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் விளைய செய்தால்
4.தூங்காமல் தூங்கும் ஒளி நிலை என்பதை ஒவ்வொருவருமே அனுபவிக்க முடியும்

உபதேசத்தைப் பதிவாக்கினால் தான் அது வரும். வேறு யாரும் (தீட்சை) கொடுத்து அதைப் பெறச் செய்ய முடியாது. இது சாப்பாடு…! மண்ணிலிருந்து விளையும் விளைச்சல்…! (ரெடிமெட் ஆக காசு கொடுத்து வாங்குவது போல் வாங்க முடியாது)

அவரவர்கள் எடுத்துச் சாப்பிட்டால் தான் அவரவர்களுக்குள் பார்க்க முடியும். உங்களுக்காக அடுத்தவர் சாப்பிட்டால் அவர்களுக்குத் தான் சத்தாகும்.

தீட்சை அந்த அகஸ்தியரின் ஒலிகளுக்குள் இருக்கிறது (உபதேசத்திற்குள்) LINK https://wp.me/p3UBkg-1Br. “தீட்சண்யம்…” வேண்டும் என்பவர்கள் இதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

agastyamala idol

உணர்வை ஒளியாக எப்படி மாற்றுவது…? நாம் எப்படி ஒளிச் சரீரம் பெறுவது…?

Fire maharishis

உணர்வை ஒளியாக எப்படி மாற்றுவது…? நாம் எப்படி ஒளிச் சரீரம் பெறுவது…?

கேள்வி:-

“உணர்வை ஓளியாக்குவது…” என்றால் என்ன…? ஏன் ஒளியாக்க வேண்டும்…? அதற்குண்டான விளக்கம் வேண்டும்.

பதில்:-

நமது ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி பார்த்தோம் என்றால்
1.திருவண்ணாமலையில் ஜோதியை ஏற்றுகின்றார்கள்.
2.ஐயப்பன் கோவிலிலும் ஜோதியைக் காட்டுகின்றார்கள்.
3.முருகன் கோவில்களிளும் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.
4.எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் தினமும் அங்கிருக்கும் தெய்வத்திற்கு தீபத்தை (ஜோதியைக்) காட்டுகின்றர்கள்.

அந்தத் தீபத்தை நாமும் இரண்டு கைகளாலும் முகத்திற்குக் கொண்டு வந்து புருவ மத்தியிலும் ஒற்றிக் கொள்கிறோம்.

இது எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தாலும் ஏன் அவ்வாறு காட்டுகிறார்கள்…? நாம் ஏன் அதை நம்முடைய முகத்தில் ஒற்றிக் கொள்கிறோம்…? என்ற மூலத்தை எண்ணிப் பார்ப்பதில்லை.

நம் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால் சூரியன் ஒளிமயமாகப் பிரகாசிக்கின்றது. சூரிய வெளிச்சத்திலே எல்லாவற்றையும் தெளிவாகக் காண முடிகிறது. நம்முடைய காரியங்களைச் சீராகச் செய்ய முடிகிறது.

ஆனால் இரவிலே சூரிய ஒளி நாம் வாழும் இடத்தில் இல்லாததால் அங்கே இருள் சூழ்கிறது.
1.இருளுக்குள் நம்மால் எதையும் தெளிவாகக் காண முடியுமோ…? முடியாது.
2.இருளுக்குள் இருந்து எந்த ஒரு காரியத்தையும் சீராகச் செய்ய முடியுமா…? அதுவும் முடியாது.

இன்று செயற்கை விளக்குகளைப் புறத்திலே வைத்து வாழக் கற்றுக் கொண்டதால் நம்மால் இயற்கையின் ஒளியைப் பற்றிச் சிந்திக்கும் ஞானம் இல்லாது போய்விட்டது,

இதே போல் தான் ஆதியிலே அகண்ட அண்டத்திலும் எங்குமே இருளாகத்தான் இருந்தது. இருள் என்றால் விஷத் தன்மை.

உதாரணமாக நம் வீட்டை அதிக நாள் பூட்டி வைத்திருந்தால் அது பாழடைந்து கடுமையான விஷத் தன்மைகள் பரவுகிறது அல்லவா…! ஆகவே இருள் சூழ்ந்த நிலை என்றாலே அது விஷத் தன்மை வாய்ந்தது…!” என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இருண்ட நிலையாக இருந்த அந்தச் சூனியப் பிரதேசத்தில் விஷத் தன்மை அதிகமாகி அது விஷமற்ற மற்ற ஆவிகளுடன் மோதும் பொழுது வெப்பமாகின்றது. இதைப் போன்று
1.விஷமானதும் விஷமற்றதும் தொடர்ந்து மோதி மோதி
2.வெப்பம் அதிகமாகும் பொழுது அங்கே நெருப்பாகின்றது.
3.அப்பொழுது தான் வெளிச்சமே உருவாகின்றது. (இருள் அகலுகிறது)

இன்று நாம் மின்னல்களைப் பார்க்கிறோம் அல்லவா. அது போல் ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பமாகி நெருப்பாகி வெளிச்சமாகின்றது.

வெப்பம் அதிகமான பின் நகரும் தன்மை வருகிறது. அதனால் கவரும் சக்தியான காந்தம் உருவாகின்றது. காந்தத்தால் மற்றதைத் தன்னுடன் ஈர்க்கும் ஆற்றல் வருகிறது. ஈர்த்தது அனைத்தும் வெப்பத்தால் சமைக்கப்பட்டு ஒரு பொருளாக உறைகிறது.

இது தான் பரம்பொருள் என்பது.

எல்லையே இல்லாது பரவி இருக்கும் இந்தப் பரத்தில் பொருள் உருவாகும் பொழுது பரம் பொருளாகின்றது. அது எடை கூடி இருப்பதால் நகர்கின்றது. சுழலும் தன்மைக்கு வருகிறது. சுழற்சியால் தன் நடு மையம் கடுமையான வெப்பமாகின்றது.
1.அந்த வெப்பத்தால் தான் மற்றதை மாற்றும் சக்தி அதாவது புதிது புதிதாக உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.இப்படித்தான் நாம் இன்று பார்க்கும் எல்லாமே உருவாகி (சிருஷ்டி) உள்ளது.

சூரியனாக இருந்தாலும் நட்சத்திரமாக இருந்தாலும் கோள்களாக இருந்தாலும் கல் மண் தாவரங்கள் உயிரினங்கள் மனிதர்கள் யாராக இருந்தாலும் இப்படித்தான் வந்துள்ளோம்.

அத்தகைய வெப்பத்தைத்தான் ஞானிகள் கடவுள் என்றும் ஈசன் என்றும் நாம் தெரிந்து கொள்வதற்காகக் காரணப் பெயரை வைத்தார்கள்.
1.நம் உடலுக்குள் உயிரின் துடிப்பில் உருவாகும் வெப்பம் இல்லை என்றால்
2.உடனே குளிர்ச்சியாகி மரணமடைவோம்.

இன்றைய மனித வாழ்க்கையில் நாம் புறப் பொருள்களை மட்டும் தான் அறிய முற்படுகின்றோம். அகத்திற்குள் அதாவது ஒரு அணுவிற்குள் (தனக்குள் – தன்னைப் பற்றி) நடக்கும் சூட்சமங்களை அறிய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இதைத்தான் அறியாமை அதாவது “இருள்…!” என்று சொல்வது.

கடவுள் என்ற நிலையில் இயக்கச் சக்தியாக வெப்பமாக ஒளியாக உயிர் இருந்தாலும் அதை யாரும் அழிக்க முடியாது. ஆனால் உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலும் உடலுக்குள் தோன்றும் உணர்ச்சிகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை. காலப் போக்கில் அழிந்துவிடும்…!

இருந்தாலும் உயிரால் கவரப்பட்ட சத்து உடலாகி சுவாசிக்கும் பொழுது “நான்…!” என்ற உணர்வாக வருகின்றது. அந்த நானை அதாவது நீங்கள் கேள்வியாகக் கேட்டபடி
1.உணர்வை ஒளியாக… வெப்பமாக… நெருப்பாக… ஜோதியாக… மாற்றவில்லை என்றால்
2.அந்த நான் இன்று இருக்கும்
3.நாளை அந்த நான் இருக்காது.
(இறந்த பின் யாருக்கும் ஒன்றும் தெரியாது என்று நாம் தான் கூசாமல் சொல்வோமே…!)

என்றென்றும் நாம் நிலைத்த வாழ்க்கையாக அந்த மெய் ஞானிகளைப் போல் ஏகாந்தமாக வாழ வேண்டும் என்று விரும்பினால் உயிரான ஈசனுடன் (நெருப்பு – ஒளி) ஒன்றிடல் வேண்டும்.

அவனைப் போன்ற ஒளி சக்தியை நாம் விண்ணிலிருந்து எடுத்து இந்த உடலில் வாழும் குறுகிய காலத்திற்குள் விளைய வைக்க வேண்டும்.

ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும் உடல் பெறும் உணர்வுகள் அனைத்துமே இருள் சூழ்ந்தவை தான். இந்தப் பூமிக்குள் இருக்கும் அனைத்து சக்திகளுமே மீண்டும் மீண்டும் உடல் பெறச் செய்யும் சக்திகள் தான்.

ஆகவே கீழ நோக்கி இருக்கும் நம் சுவாசத்தை மேல் நோக்கிய சுவாசமாக கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து விண்ணிலிருந்து வரும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன
1.அந்தப் பேரருள் பேரொளி உணர்வை உயிரிலே மோதச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
2.உயிர் வழிச் சுவாசமாக அதைப் பிராணயாமமாக்க வேண்டும்.
3.அந்த நெருப்பு நமக்குள் கூடக் கூட இந்த இருள் சூழ்ந்த உடலைப் பிளந்து
4.உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கிவிட்டு ஆத்ம ஜோதியாக அழியா ஒளிச் சரீரமாக நாம் பெற முடியும்.

இதைத்தான் திருவண்ணாமலையிலும் ஐயப்பன் ஆலயத்திலும் முருகன் கோவிலில் சொக்கப்பனையாகவும் தீப ஆராதனையாக ஒவ்வொரு ஆலயத்திலும் காட்டுகின்றார்கள்.

நாம் அந்த ஜோதியைப் பார்த்து எனக்கு சொத்து வேண்டும் சுகம் வேண்டும் உடல் நன்றாக இருக்க வேண்டும் என்று அதை வேண்டினால் “நமக்குள் அந்த ஒளி பெறும் உணர்வு எப்படி வரும்…?”

பேரொளியாக மாறி விண்ணுலகில் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்வதா…? அல்லது உடலுக்காக வாழ்ந்து மீண்டும் மீண்டும் இந்தப் பூமிக்குள் பிறவிக்கு வந்து வேதனையை அனுபவிப்பதா…? என்பது அவரவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

குறைந்தது இவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா..? அதனுடைய கால அளவு எவ்வளவு…?

eswara third eye

குறைந்தது இவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா..? அதனுடைய கால அளவு எவ்வளவு…?

 

கேள்வி:
ஆத்ம சுத்தி அதிக நேரம் (சுமார் 20 நிமிடங்கள்) செய்தால் அது தியானத்திற்குச் சமமாகுமா…?

பதில்:-
தியானம் என்பது எது…?

கெட்டது நமக்குள் சேரவிடாது “வைராக்கியமான நிலைகள்” பெறவேண்டும், இதுதான் தியானம். நமக்குள் தீயது சேராது தடுக்கும் “அந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு” நாம் தியானமிருக்க வேண்டும்.

பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதை நினைத்துக் கொண்டிரு என்பார்கள். தியானம் என்பது, “நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை” வளர்த்துக் கொள்வது. அதாவது உயர்ந்த ஞானிகளின் சக்தி கொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.

ஆத்ம சுத்தி என்பது எது…?
உட்கார்ந்து உட்கார்ந்து மணிக்கணக்காகச் செய்து கொண்டு இருப்பது தியானம் ஆகாது. ஏன்…?

நீங்கள் தியானத்தை முடித்துவிட்டு வேறு வேலைக்குப் போகின்றீர்கள். அடுத்தாற்போல தீடீரென ஒரு ஆக்ஸிடென்டோ அல்லது ஒரு மாடோ உங்களை விரட்டிக் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்…!

“ஆ…” என்று பயந்தால் அது உள்ளே வந்துவிடும். பயத்தையும் அதிர்ச்சியையும் உடலுக்குள் உருவாக்கி விடும்.

1.இந்த உணர்வு அதிகமானால் அடுத்தாற்போல
2.நீங்கள் தியானத்தில் உட்கார முடியாது.
3.எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியை கேட்டாலும் இது தான் முன்னாடி நிற்கும்.
4.அப்பொழுது நீங்கள் எப்படித் தியானம் எடுக்க முடியும்…!

எதுவாக இருந்தாலும் எத்தகைய நிலை வந்தாலும் அப்போதைக்கு அப்போது துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திலே உட்காரவிடும். இல்லை என்றால் நிச்சயம் தியானத்திற்கு வர முடியாது. மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை என்பார்கள்.

நீங்கள் வருடக் கணக்காகத் தியானத்தை எவ்வளவு வளர்த்தாலும்..,
1.நான் இவ்வளவு காலம் செய்தேன்…!
2.அப்படித் தியானம் செய்து கொண்டு வந்தேன்… அப்பொழுதெல்லாம் நன்றாக இருந்தது
3.இப்பொழுது என்னால் “முடியவே இல்லை…!” என்பார்கள்.

ஏனென்றால் எதிர்பாராத விதமாக அதிர்ச்சியோ பயமோ கோபமோ குரோதமோ மற்றதோ எடுத்தால் அது வலுவானது. நுகர்ந்தது நம் ஆன்மாவில் கலந்து அது வலிமை பெறுகின்றது. அதனால் உங்களால் முடியாமல் போய் விடுகின்றது.

நான் செய்தேனே… போய்விட்டதே…! செய்தனே… போய்விட்டதே…! என்று வேதனைப்பட்டு விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது. (இது மிகவும் முக்கியமானது)

ஒவ்வொரு நொடியிலும் நாம் கையில் அழுக்குப்படுவதைத் துடைப்பது போலத்தான்
1.நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ
2.அப்பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) கொடுத்த அருளை வைத்து
3.”ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்
4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இணைத்து விடுங்கள்
5.உள்ளே புகாது தடுத்து விடுங்கள்
6.அந்தப் பேரோளியைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்
7.அப்புறம் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்
8.இது வளர வளர இந்த ஆன்மாவிலிருக்கும் தீமைகளைத் (எந்தத் தீமையை நீங்கள் நுகர்ந்திருந்தாலும்) தள்ளிக்கொண்டே போகும்
9.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்கு வெளியில் போய் விட்டது என்றால் சூரியன் எடுத்துக் கொண்டு போய் விடும்
10.ஆன்மா பரிசுத்தமாகும்…!

இப்படி எண்ணி எடுத்தால் இது தான் ஆத்ம சுத்தி. இதை ஒரு ஐந்து நொடிக்குள்ளும் (மின்னல் வேகத்திலும்) எடுக்கலாம். அல்லது ஒரு நிமிடத்திற்குள்ளும் (நிதானமாகவும்) எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது உடனுக்குடன் தீமையை நீக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமே ஆத்ம சுத்தி. இருபது நிமிடம் ஆத்ம சுத்தி செய்தால் அது தியானத்திற்குச் சமமா என்று பார்ப்பதை விட
1.நாம் எண்ணிய நல்ல காரியம் நடந்தது
2.நம்மை துன்பப்படுத்தும் தீமைகளை அகற்ற முடிந்தது
3.அல்லது மகரிஷிகளின் ஆற்றலை அதிக அளவில் வளர்க்க முடிந்தது என்று தான் எண்ண முடியும்.

தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:-
“தியானம் செய்ய வேண்டும்…!” என்பதற்காக ஒரு சடங்கு போல நாம் தியானம் செய்யக் கூடாது. நம் ஆன்மா தூய்மை அடைந்து உயிரான்மா ஒளியாக வேண்டும். அதற்காகத் தான் தியானமிருக்கச் சொல்கிறோம்.

தியானமோ ஆத்ம சுத்தியோ எதுவாக இருந்தாலும் “இது முடியவில்லை… அது முடியவில்லை… உட்கார முடியவில்லை…! என்று எண்ணிக் கொண்டே இருந்தால் இதுதான் வளரும்.

எப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெறும் பொழுது, உங்களைச் சும்மா இருக்க விடாது.

அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும். இந்த உணர்வு வரும்பொழுது, பிறருடைய தீமைகளை அகற்றும் வலிமையினைப் பெறுகின்றோம். தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

1.தியானம் செய்தாலும்
2.ஆத்ம சுத்தி செய்தாலும்
3.உங்கள் வாழ்க்கையையே தியானமாக ஆக்கினாலும்
4.அல்லது உலக மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று தவமிருந்தாலும்
5.எவ்வளவும் நேரம் இதை எல்லாம் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை
6.இரண்டு இமைகளுக்கு மத்தியில் உள்ள புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈஸ்வரனை எண்ணி அவனுடன் ஒன்றி…
7.ஆழமாக… அழுத்தமாக…
8.வேண்டி விரும்பி…
9.கட்டாயப்படுத்திச் சொல்லிக் கேட்டுப் பெற வேண்டும்
10.வைராக்கியமாக அவனிடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்
11.அதைப் பெறும் வரை (உயிரான ஈசனை) விடக் கூடாது.

இது தான் மிக மிக முக்கியம்…!

மற்றவர்களின் நோய்களை நீக்கும் தியானப் பயிற்சி

health bliss (2)

மற்றவர்களின் நோய்களை நீக்கும் தியானப் பயிற்சி

 

கேள்வி:-
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தியானிக்கும் பொழுது எவ்வளவு நேரம் வேண்ட வேண்டும்…? அருகில் இருக்கவேண்டுமா…? அல்லது அறைக்கு வெளியே இருந்தாலும் பரவாயில்லையா…?

பதில்:-
உடல் நலம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்திலுள்ளவரோ நம் நெருங்கிய உறவினரோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். வெளி ஊரிலோ அல்லது மருத்துவமனையிலோ படுத்திருக்கிறார். நம்மால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் குடும்பத்தினர் நம்மிடம் சொல்கிறார்கள் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

செய்தியைக் கேள்விப்பட்டவுடன் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பிற்பாடு தான் நோயாளியின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

“உடல் நலமாக வேண்டும்…!” என்று முதலிலேயே தியானிக்கக் கூடாது. அருள் சக்தியை எடுத்துத் தியானித்து விட்டுத்தான் செய்ய வேண்டும். (ஏனென்றால் பாசத்தால் எண்ணினால் அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வந்துவிடும்)

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள அது எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று
4.அதே எண்ணத்தில் தியானம் செய்ய வேண்டும்.

(முடிந்தால் எல்லோருமாகச் சேர்ந்து கூட்டுத் தியானம் இருந்து)
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும்,
2.அவர் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்
3.அவர் உடல் நலம் பெற வேண்டும்
4.மகிழ்ச்சியான நிலைகள் பெற வேண்டும் என்று
5.தியானம் முடிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை எடுக்க வேண்டும்.

அவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்து அவர் குடும்பத்தாரையும் கலக்கச் செய்து அந்த உணர்வை எடுக்கச் செய்ய வேண்டும். கூடுமான வரை அந்த நோயிலிருந்து விடுபட முடியும்.

குறிப்பு:-
நோயுற்றவர் நடக்கும் நிலையில் இருந்தாலோ அல்லது நம் சொல்லைக் கேட்பவராக இருந்தால் அவரைச் சிறிது நேரம் (ஐந்து அல்லது பத்து நிமிடம்) எழுந்து நிற்கச் சொல்லி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று ஏங்கி இருக்கும்படி சொல்லுங்கள்.

மற்றவர்கள் தியானத்தில் இருந்து மகரிஷிகளின் அருள் அவர் உடலில் படர வேண்டும். அவர் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும், அவர் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்போது அவரின் உடலில் ஒரு விதமான கரண்ட் பாய்வது போல் இருக்கும். அப்போது அவர் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
1.அவரால் முடியாததை நீங்கள் எல்லோரும் சேர்ந்து சொல்லி
2அவரின் நோய்களை இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்
3..இதில் பல அற்புதங்களைப் பார்க்கலாம்.

மகரிஷிகளின் அருளை அப்படி இணைக்கப் போகும் போது மற்றவர்களும் ஏங்கிப் பெற்றார்கள் என்றால் நாம் பாய்ச்சும் உணர்வுகள் அங்கே அவர்களின் நோயை நீக்க உதவும்.

ஆனால் சில நோய்களுக்கு உடனடியாக மருந்து கொடுக்க வேண்டியதிருக்கின்றது. மருத்துவர்களிடம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் மருந்து உங்களுக்கு வேலை செய்து நன்றாக ஆகும் என்று சொல்லலாம். விரைவில் நல்லதாக்கவும் உதவும்.

எவ்வளவு நேரம் தியானிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல.

சாமிகள் நேரடியாகச் சொல்லித் தியானிக்கும் நோய் நீக்கும் தியானம்

ஞானத்தின் வளர்ச்சிப் பாதையில் நாம் செய்யும் தியானம் போதுமானதா… இல்லையா…! என்பதை எப்படி அறிவது…?

Destination of spirituality

ஞானத்தின் வளர்ச்சிப் பாதையில் நாம் செய்யும் தியானம் போதுமானதா… இல்லையா…! என்பதை எப்படி அறிவது…?

 

கேள்வி:-
ஞானப் பாதையில் பயணிக்கும் பொழுது நாம் செய்யும் தியானம் வளர்ச்சிக்குப் போதுமான அளவு இருக்கிறதா… அல்லது பற்றாக்குறையாக இருக்கிறதா… என்று எப்படி அறிவது…?

பதில்:-
ஒரு கிணற்றில் நீரை எடுக்க எடுக்கத்தான் அதிலிருந்து தண்ணீர் ஊறும். கிணற்றிலிருந்து நீரை எடுக்கவில்லை என்றால் தண்ணீர் அளவு அப்படியே தான் இருக்கும்… மேற்கொண்டு எதுவும் ஊறாது…!

அதே போல நாம் சுவையான ஒரு உணவை உட்கொள்ள வேண்டும் என்றாலும் பசி எடுக்கவில்லை என்றால் அதைச் சாப்பிட முடியாது. அதற்கு மீறிச் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. அடுத்து பசியின்மை அஜீரணக் கொளாறு போன்றவைகள் நிச்சயம் ஏற்படும்.

அதே மாதிரித்தான் நமக்குள் ஞானத்தின் வளர்ச்சி வேண்டும் என்று விரும்பினால்
1.ஞானத்தைப் பெற வேண்டும் என்ற பசி
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நோடியிலேயும் நமக்கு இருக்க வேண்டும்.

இதற்குப் பெயர் அவசரமோ அல்லது வேகமோ அல்ல…!
1.நம்முடைய ஏக்கம் அதுவாகவும்
2.நம்முடைய தேடுதல் அதுவாகவும் இருத்தல் வேண்டும் அது தான் முக்கியம்.

நாம் தான் தினமும் தியானம் செய்கிறோம் அல்லவா… அதனால் அது எப்படியாவது வளர்ந்துவிடும்…! என்ற எண்ணத்தில் மட்டும் இருந்தால் நம்முடையே குறி (TARGET –DESTINATION) மாறிவிடும்.

இதைக் காட்டிலும் வலுவான எண்ணம் ஏதாவது தாக்கினால் அல்லது நம்முடைய குடும்பத்திலோ தொழிலிலோ ஏதோ ஒன்று எண்ணியபடி நடக்கவில்லை என்றால் என்ன நினைப்போம்…?

இந்தப் பிரச்சினையை அதை முடித்து விட்டால் அதற்கப்புறம் ஞானத்தைக் கண்டிப்பாக நன்றாக வளர்க்கலாம் என்று சொல்லிச் சொல்லி இப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப் போய்விடும்.

கடைசியில் என்ன சொல்வோம்….? நான் இத்தனை வருடமாகத் தியானம் செய்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணிக்கையைத் தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர
1.நான் எதைத் தியானித்தேன்…?
2.தியானத்தின் மூலம் எதைப் பெற்றேன்…?
3.தியானத்தின் மூலம் துன்பங்களை எப்படி நீக்கினேன்…?
4.தியானத்தின் மூலம் மனதை எப்படி அமைதிப்படுத்தினேன்…?
5.கடுமையான சிக்கல் வந்த போதிலும் அதைத் தியானத்தின் மூலம் எப்படி நல்லதாக மாற்றிக் கொண்டேன்…?
6.வாழ்க்கையில் நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் அது என்னுடைய ஞானத்தின் வளர்ச்சிக்காகத்தான்…! என்று தியானத்தின் மூலம் என்னால் எப்படி மாற்றியமைக்க முடிந்தது…? என்று……
7.இவ்வளவு கேள்விகளுக்கும் சரியான விடைகள் கிடைத்திருக்கிறது என்று தனக்குள் இருக்கும் உள் (அக) உணர்வுகள் சொல்லவில்லை அல்லது அத்தகைய உணர்ச்சிகள் வரவில்லை என்றால்
8.நிச்சயம் நம்முடைய எண்ணக் குறியைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே உண்மை.

ஒவ்வொரு நாளும் ஞானத்தைப் பெறவேண்டும் உயர் ஞானம் பெறவேண்டும்… மெய் ஞானிகள் கண்ட மெய்ப் பொருளைக் காண வேண்டும்…! அந்த மெய் ஞானியாக நாம் ஆக வேண்டும் என்ற உந்துதல் தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்தப் பசி “தீராத பசி…” போல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நமக்கு (அகத்திற்குள்) மட்டுமல்ல… நம்மைப் பார்ப்பவர்களுக்கும்… நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்குமே… இந்த ஞானத்தின் வழித் தொடரை அது உணர்த்திக் காட்டும்.

எந்தச் சூழ்நிலையிலுமே நம்முடைய முனைப்பு அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்று அது (TARGET –DESTINATION) முன்னாடி வந்துவிடும். அப்பொழுது லௌகீக (உடல்) வாழ்க்கையின் செயல்கள் அனைத்தும் அதற்குள் அடங்கிவிடும்.

சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்று நாம் எடுக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளே நம்முடைய லௌகீக வாழ்க்கையைச் சீராக வழி நடத்திச் செல்வதற்குண்டான ஞானத்தைக் கொடுக்கும்.

உடல் வாழ்க்கைக்குத் தேவையான ஞானத்தைப் பெற்ற பின் உயிராத்மா ஒளியாகத் தேவையான ஞானம் பெற முடியும் என்பதல்ல.
1.உயிராத்மா ஒளியாக மாற்றும் ஞானத்தை தியானத்தின் மூலம் முதலில் வேண்டினாலே
2.(மீதமுள்ள) சர்வ ஞானமும் கிடைக்கும்… கிடைக்கின்றது…!

என்னுடைய அனுபவம் இது தான்…!

நாம் தியானிக்க வேண்டிய இடம்

Polaris direct link

கேள்வி:-
துருவ நட்சத்திரத்தின் தியானம் மொட்டை மாடியிலோ அல்லது பூஜை அறையில் இருந்து செய்ய வேண்டுமா? எங்கிருந்து துருவ நட்சத்திரத்தைத் தியானிக்க வேண்டும்?

பதில்:-
துருவ நட்சத்திரம் நம் பூமியில் வடக்குத் திசையில் பூமியின் அச்சுக்கு நேராக விண்ணிலே உள்ளது. வருடம் தோறும் இரவு முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம்.

மொட்டை மாடியிலோ அல்லது வெட்ட வெளியிலோ தொடர்ந்து சிறிது நாட்கள் வடக்குத் திசையில் உள்ள வான் வீதியைக் கவனித்துக் கொண்டே வந்தால் அதைப் பார்க்கலாம். கண்களுக்கு அது சிறிது மங்கலாகத் தான் தெரியும்.

எங்கே இருந்தாலும் இருக்கும் அந்த இடத்திலிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிக்க முடியும். இடம் முக்கியமல்ல. ஆனால் நம் நினைவு அங்கே செல்ல வேண்டும்.

நம் நினைவு அங்கே செல்ல வேண்டும் என்றால் ஞானகுரு துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேச வாயிலாகச் சொன்னதை ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். (AUDIO LINKhttps://wp.me/p3UBkg-4BE)

பின் கண்ணின் நினைவை நம் பூமியின் வடக்குத் திசையிலே அதுவும் குறிப்பாக வட துருவத்தின் வழியாகச் செலுத்தி விண்ணிலே துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது
1.ஒரு பொருளை நாம் எப்படிக் கூர்மையாக ஊடுருவிப் பார்ப்போமோ… 2.அதே போல் உதாரணமாக வில்லில் இருந்து எய்யப்படும் அம்பானது கூர்மையாக அதன் இலக்கைத் தாக்குவது போல்
3.கண்களிலிருந்து நம் நினைவுகள் செல்ல வேண்டும்.

நாம் இங்கே பூமியிலே இருந்தாலும் நம் நினைவுகள் அங்கே துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி இருக்க வேண்டும். அந்த ஒன்றிய உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

கண்கள் வழியாக ஏங்கித் தியானித்த பின் நினைவு புருவ மத்திக்கு வர வேண்டும். முதலில் சொன்ன மாதிரி இரண்டு கண்களின் நினைவு மூன்றாவது புருவ மத்தியில் ஒன்று சேர்ந்து ஆய்த எழுத்து போல் (ஃ) துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் புருவ மத்தியிலிருந்து ஈர்க்க அல்லது கவர அல்லது இழுத்து அதன் பின் சுவாசிக்க வேண்டும்.

1.இரண்டு கண்கள் + உயிர் வழியாக நம் உடலிலுள்ள நினைவுகள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்து
2.பூமியின் வடக்குத் திசையில் வட துருவத்தின் வழியாக அதைச் செலுத்தி
3.துருவ நட்சத்திரத்துடன் நேரடியாக மோதி அல்லது ஒன்றி அல்லது துருவ நட்சத்திரத்தில் நிலை குத்தி
4.அதிலிருந்து வெளிப்படும் இளம் நீல ஒளிக் கற்றைகளை அதாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று
5.சிறிய பிள்ளைகள் ஒரு சக்கரத்தில் இரண்டு துவாரத்தைப் போட்டு அதில் ஒரு கயிறைக் கட்டி முடிந்து இரண்டு கைகளிலும் வைத்துச் சுழற்றிய பின் இழுத்து இழுத்து விடும் பொழுது அந்தச் சக்கரம் இரண்டு பக்கமும் மாறி மாறிச் சுழல்வது போல்
6.நம் நினைவுகள் துருவ நட்சரத்திற்குள் சென்று அதை உயிர் வழி சுவாசத்தின் மூலம் கவர்ந்து நம் உடலுக்குள் பரவச் செய்ய
7.மீண்டும் அதே போல் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்து உடலுக்குள் திரும்பத் திரும்பப் பரவச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித் தியானித்தால் உங்கள் உடலுக்குள்ளும் சரி புருவ மத்தியிலும் சரி துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகள் ஊடுருவி வருவதைக் காணலாம்.

ஒளியைக் காணவில்லை என்றாலும் புருவ மத்தியில் அழுத்தத்தை உணரலாம். உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல் அந்த அதிர்வுகளை உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் கொண்டு வந்து சேர்க்கும் முறை இது. என்னுடைய அனுபவம் இதுவே.

சிறிது காலம் இவ்வாறு செய்து பழகி விட்டால் உங்களை அறியாமலே துருவத்தின் வழியாக உங்கள் நினைவு விண்ணுக்குச் சென்று துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்ளச் செய்யும். அங்கே இருக்கும் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பும் (LIVE) கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் மகரிஷிகளின் சக்தியையும் தியானத்தின் மூலம் எடுக்க குறிப்பிட்ட இடம் தேவையில்லை. எங்கே இருந்தாலும் இந்த முறைப்படி செய்தால் அந்தச் சக்திகளை எளிதில் பெற முடியும்.

 

ஒருவர் திடீரென்று சிறிய வயதிலேயே இறந்து விட்டால் அதைப் பார்த்துப் பதறுகிறோம்… மனம் பதைபதைக்கிறது… அதை எப்படி மாற்றுவது…?

Image

God of death

ஒருவர் திடீரென்று சிறிய வயதிலேயே இறந்து விட்டால் அதைப் பார்த்துப் பதறுகிறோம்… மனம் பதைபதைக்கிறது… அதை எப்படி மாற்றுவது…?

கேள்வி:-
ஒரு சிறு வயது ஆத்மா தன் உடலை விட்டுச் சென்று விட்டது. நான் அவ்வளவாப் பழகவில்லை இருப்பினும். என் மனம் உடல் மிகவும் பதறியது.

இந்த நிலை ஆன்மீக முயற்சியில் இருக்கும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன பயிற்சி எடுக்க வேண்டும். என் மனம் நான் சொல்வதைக் கேட்காமல் பதை பதைக்கின்றது.

என் நிலையை விளக்குங்கள்…!

பதில்:-
இறப்பது யாராக இருந்தாலும் சரி
1.சிறு வயதோ முதிர்ந்தவரோ..
2.நல்லவரோ கெட்டவரோ…
3.வசதியானவரோ வசதியில்லாதவரோ…
4.நோயாளியோ திடகாத்திரமானவரோ…
5.சொந்தமோ பகையோ… ஆணோ பெண்ணோ…!
அவர்கள் உயிர் என்றும் அழிவதில்லை. உடல்கள் தான் அழிகின்றது. அந்த உயிரை யாரும் அழிக்க முடியாது. இதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உடலுடன் வாழ்பவர்களுக்கு விண் செல்லும் பாதையைக் காட்டுவதும் உடலை விட்டுப் பிரிந்து செல்பவர்களை விண்ணுக்கு அனுப்பி அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும் என்பதையும்…! இந்த இரண்டு நிலையைததான் என்னுடைய முன்னணியில் நான் வைத்துச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்…? என்று குழம்ப வேண்டியதில்லை.

இதற்கு முன்னாடி காலம் காலமாக இறந்தவர்களை எல்லாம் சற்று சிந்தித்துப் பாருங்கள். அதிலே மேலே சொல்லப்பட்ட எல்லா மனிதர்களும் அடங்குவார்கள். மற்றவர்கள் மீது பாசம் உங்களுக்கு மட்டும் இல்லை. எல்லா மனிதர்களும் பாசத்துடன் தான் வாழ்கிறார்கள்.

ஆனால் பாசத்துடன் வாழ்ந்தாலும் இறந்தவர்களைப் பற்றி எத்தனை நாள் எண்ணுகிறார்கள்…? எதற்காக எண்ணுகிறார்கள்..? எப்படி எண்ணுகிறார்கள்…? என்று பார்த்தால் அதில் ஒன்றும் முழுமையான அர்த்தம் இருக்காது. வருத்தமும் படுவார்கள். பின் சமாதானமும் பட்டுக் கொள்வார்கள். அவ்வளவு தான்…!

நாளை நாமும் இந்த உடலை விட்டு அகன்றால் இதே போல் தான் நினைப்பார்கள். பேசுவார்கள்…! ஒரு நாளோ ஒரு மாதமோ ஒரு வருடமோ அவ்வளவு தான் அதற்கு மேல் எண்ணிப் பார்க்கும் நிலை வராது. (விதிவிலக்காகச் சிலர் இருப்பார்கள் – ஆனால் கூடக் கொஞ்ச நாள் எண்ணுவார்கள் அவ்வளவு தான்..)

1.முன்னாடி இறந்தவர்களைப் பற்றிய அக்கறை இந்த அளவுக்கு இருக்கும் நிலையில்
2.ஒருவரைப் பார்த்து இறந்துவிட்டாரே என்று நாம் பதைபதைப்பதால் எந்தப் பலனும் இல்லை.

நாம் வேதனைப்பட்டால் இறந்தவர் திரும்ப வருவார் என்றால் பரவாயில்லை. நம்மையே நாம் காக்க முடியாத போது நாம் வேதனைப்பட்டு யார் யாரைக் காப்பது…?

ஆகவே நாம் மன பலம் கொண்டு சரி… அவர் இறந்து விட்டார்…! பிறவி என்ற இந்தத் துன்பக் கடலில் இருந்து விடுபட்டு அவர் என்றுமே பேரின்பப் பெரு வாழ்வாக அழியாத ஒளியின் சரீரம் பெறவேண்டும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று அதைத்தான் எண்ண வேண்டும்.

இதைச் செய்தால் வேதனையும் துடிப்பும் கலக்கமும் நமக்கு வராது. அதே சமயத்தில் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து அது புனிதம் பெறுகின்றது. அந்த ஆன்மா மூலம் நாம் விண்ணிலிருந்து உயர்ந்த சக்தியைப் பெறவும் ஏதுவாகின்றது.

இது தான் ஞானிகள் காட்டிய மெய் வழி.

ஆனால் நாம் மனிதர்களாக இருந்து கொண்டு “இரக்கப்படுகிறேன்…!” என்ற பேரில் தானும் நன்மை அடையாதபடி உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களையும் விண் செலுத்த முடியாதபடி மீண்டும் மீண்டும் இந்த உடல் பெறும் உணர்வுகளை வளர்த்து விஷத்தைச் சேமிக்கத்தான் பழகி வைத்திருக்கின்றோம்.

இதை எல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

கெட்ட கனவு வந்தால் பலிக்குமா…? நல்ல கனவு ஏன் பெரும்பகுதி வருவதில்லை…?

Image

Astral divine powers

கெட்ட கனவு வந்தால் பலிக்குமா…? நல்ல கனவு ஏன் பெரும்பகுதி வருவதில்லை…?

கேள்வி:-
எதிர்மறையான செயல்கள் முன்னாடியே கனவாக வருகிறது. பின் நாளில் நிஜமாக நடக்கும் காரியத்தின் முடிவு (result) முன்னாடியே (நான் விரும்பாத செயல்கள்) கனவாக வருகிறது,

ஆனால் நான் விரும்பும் நேர்மறையான செயல்கள் பற்றிக் கனவு வராதது ஏன் எனத் தெரியவில்லை…? தீர்வு கொடுங்கள் ஐயா…

பதில்:-
எந்த ஒரு பொருளும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுதுதான் இயக்கச் சக்தியே கூடுகின்றது. இது இயற்கையின் நியதி. ஆண்டவனின் சக்தி என்று சொல்லப்படுவதே இது தான்.
1.அந்த மோதல் இல்லை என்றால் எதுவும் இயங்காது.
2.எல்லாமே சூனியமாகிவிடும்.

நம் வாழ்க்கையில் “நமக்குப் பிடிக்காதது…!” என்று ஒன்று வருகிறது என்றால் அது நம்முடன் இணையாது நம்மை அதனின் இயக்கத்திற்குச் சாதகமாக்கும் நிலைக்கு “இழுக்கிறது” என்று தான் அர்த்தம்.

அந்த இழு விசை இருக்கும் பொழுது நமக்குள் இருக்கும் எல்லாக் குணத்திலேயும் அந்த “அதிர்வு அலைகள்” இயக்கும்.
1.அந்தக் கெட்டது நம்மை ஒன்றும் செய்யாது.
2.என்னை ஒன்றும் செய்ய முடியாது
3.வருவதை இப்படி நாம் மாற்றி நல்லதாக்கி விடலாம் என்ற எண்ணத்தை நாம் எடுத்து விட்டால் அது உயர் ஞானமாகின்றது
4.அதாவது பிடிக்காததை விட்டு விட்டால் (பற்றாதபடி – SKIP) எதிர் மறை – “நேர்மறையாகிறது..!”

ஆனால் பிடிக்காததை… நான் பார்த்துக் கொண்டு சும்மா எல்லாம் இருக்க முடியாது… நான் எதாவது செய்ய வேண்டும்…! என்று எதிர்த்துப் போய் எதையாவது செய்தாலும் அல்லது பயந்து போய் எதையாவது செய்தாலும் போர் முறை வரும். அதாவது இயக்கம் அதிகமாகும்.

இயக்கம் அதிகமானால் அது ஜீவன் பெற்றுவிடும். மண்ணுக்குள் மறைந்த வித்து கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் அதற்குண்டான சத்து கிடைத்துவிட்டால் மண்ணைப் பிளந்து வெளியே வந்து விடும்.

அது போல் பிடிக்காதது…! தீமை…! கெட்டது…! என்று எண்ணி அதனுடனேயே மோதி…மோதி… நம் இயக்கங்கள் ஆகப்படும் பொழுது நம் உயிரிலே அது அதிகமாகப் படும். நம் ஆன்மாவிலும் அதிகமாக அந்த அலைகள் சுழலும்.

எது நமக்கு முன்னாடி அதிகம் வருகின்றதோ அதைத்தான் சுவாசிக்க முடியும். சுவாசிக்க… சுவாசிக்க… நாம் அதுவாக ஆகிக் கொண்டேயிருப்போம். “தப்ப முடியாது…!”

அது மீண்டும் மீண்டும் எதிர்மறையாகி உயிரிலே படுவதனால் தான் இரவிலே தூங்கும் பொழுதும் தீமையான கனவாகத் தெரிகிறது.
1.ஆனால் அது உண்மை அல்ல.
2.பின்னாடி நடக்கும் சம்பவமும் அல்ல.
3.பின்னாடி நடப்பதை எல்லாம் யாரும் கனவாகக் காண முடியாது.

ஆனால் நீங்கள் கனவைக் கண்டதும் என்ன நினைப்பீர்கள்…? நாம் நினைப்பது போல் தான் கெட்டதாகிவிடுகிறது. கெட்டது நடக்கப் போவதால் தான் இப்படி வந்திருக்கின்றது. ஆகவே நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று அந்தக் கெட்டதுக்கு இணங்கிவிடுகின்றீர்கள். அந்த முடிவுக்கு வந்துவிடுகின்றீர்கள்.

அதாவது கெட்டதை உங்களுக்குள் சிருஷ்டிக்க உயிருக்கு ஆணையிடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம். இது தான் உள் உணர்வு என்பது. நம்முடைய உள் உணர்வுகள் என்றுமே தூய்மையாக வலுவானதாக இருக்க வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தியே செய்யச் சொல்கிறார் ஞானகுரு அவர்கள். இரவு படுக்கும் பொழுதும் காலையில் எழும் பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முடுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று இப்படி ஒரு பத்து நிமிடமாவது ஆத்ம சுத்தி செய்தால் “உள் உணர்வு…!” என்று சொல்வது பரிசுத்தமாகிவிடும்.

ஆனால் அதைத் தூய்மைப்படுத்தாமல் செம்மையாகக் கையாளாமல் விட்டு விட்டால்
1.வெளியிலிருந்து வரும் எல்லாமே
2.நம் உடலையும் நம் மனதையும் நம் ஆன்மாவையும் நம்மையும் இயக்கி
3.அதுவாகவே நம்மை மாற்ற ஆரம்பிக்கும்.

முதலில் சரியாகத் தெரியாது. ஆனால் நாம் ஒன்றும் இல்லை… ஒன்றும் இல்லை.. அப்படி எல்லாம் நடக்காது…! என்றே நினைப்போம். ஆனால் கடைசியில் (நீங்கள் கேள்வி கேட்ட மாதிரி) அந்தக் கெட்டது நடக்க வேண்டும் என்ற விதி இருப்பதனால் தான் எனக்குக் கனவாக வந்தது.

நாம் தான் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று அந்தக் கெட்டதைச் சாதகப்படுத்திக் கொள்வீர்கள். பற்றாக்குறைக்கு மற்றவர்களிடம் சொன்னாலோ கேட்டாலோ அவர்கள் உன் நேரம் காலம் எப்படி என்று பார்… அங்கே போ… இங்கே போ…! என்று இன்னும் கொஞ்சம் ஆகாததைச் சொல்லும் பொழுது எதையும் நாம் தெளிவாக வலுவாக இயக்கும் நிலை இல்லாது போய்விடும்.

கீதையில் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.நீங்கள் நல்லது தான் எனக்கு நடக்கும் என்றும்
2.நல்லது தான் எனக்கு வேண்டும் என்றும்
3.எது நடந்தாலும் அதை நல்லதாக்குவேன் என்றும்
4.கெட்டது என்பதே நல்லதை எனக்குள் வலுப்படுத்துவதற்காகத்தான் வருகிறது
5.கெட்டது என்பது எதுவுமே இல்லை…! என்று இப்படி உங்கள் உயிருக்குள் கட்டளை இட்டீர்கள் என்றால்
6.எதிர்மறை எப்படிக் கனவாக வந்ததோ அதுபோல் நேர்மறை உங்கள் கனவாக வரும்
7.அதன்படி நீங்கள் செய்தால் உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நல்லதாகும்.
8.கெட்டது என்ற வார்த்தையே இல்லாமல் ஆக்கிவிடலாம்.

இது தான் என்னுடைய அனுபவம்…!

குருநாதர் கொடுக்கும் சக்தி யாருக்கு…?

Guru protection

குருநாதர் கொடுக்கும் சக்தி யாருக்கு…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல சக்திகளையும் பல ஆற்றல்களையும் ஞானகுருவிற்குக் கொடுத்த பின் அவரைக் கேட்கின்றார்.

இந்தச் சக்திகளை நான் உனக்கு ஏன் கொடுத்தேன்…? நீ எதற்காக இதைப் பெற்றாய்…? இதை வைத்து என்ன செய்யப் போகிறாய்…?

அப்பொழுது எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை என்கிறார் ஞானகுரு.

குருநாதர் விளக்கம் கொடுக்கின்றார்.

இந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்கும் ஆத்மாக்கள் பல பல உண்டு. நல்லதை வைத்திருந்தாலும் அந்த நல்லவர்களுப் பல வகைகளிலும் துன்பங்கள் வந்து சேர்கின்றது.

அந்தத் துன்பங்கள் அகற்ற முடியாத அளவிற்குப் பெருகிவிட்டால் பின் கடைசியில் அந்த நல்லவர்களும் நல்லதைச் செய்யும் வலு குறைந்து நல்லதைக் காக்கும் திறன் இழந்து வேதனையால் அவதிப்படுகின்றார்கள்.

வேதனை அதிகமாகிவிட்டால் பின் அவர்கள் சிந்தனை இழந்து நல்லவர்களாக இருப்பவர்களும் கடைசியில் தீமை செய்வோராகவே மாற நேருகின்றது.

இதைப் போன்ற நிலை ஆகாதபடி நல்லதை எண்ணி ஏங்கும் ஆத்மாக்களுக்கு நல்லதைக் காக்கும் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

யாரும் தவறு செய்வதில்லை. அவர்கள் சந்தர்ப்பங்கள் அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் அவர்களை இயக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கமாக ஆகி குற்றம் இழைப்பவர்களாக ஆகின்றார்கள்.

தீமைகளை வென்று நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக ஆன அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை அவர்கள் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்து.

தீமையை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பமாக இருந்தாலும் அவர்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கிவிடு.

1.பதிவான மகரிஷிகளின் அருள் உணர்வை அவர்கள் நுகரும் பொழுது
2.இந்த உலகில் நன்மை எது தீமை எது என்று உணர்வார்கள்.
3.நன்மையின் பலனை உணர்ந்திடும் மெய் ஞானம் வரும்.
4.நன்மையைக் காக்க வேண்டும்… என்னால் காக்க முடியும்… என்ற
5.தன்னம்பிக்கை அவர்களுக்குள் வளரும்.

அது வளரத் தொடங்கினால் அவர்கள் சொல் செயல் மூச்சு எல்லாம் சக்தி வாய்ந்ததாக மாறும்.

1.தீமைகளை நீக்கிடும் சக்தி வாய்ந்தவர்களாக
2.உலகைக் காக்கும் சக்தி பெற்றவர்களாக
3.இந்த உலகில் வாழும் மக்களை உருவாக்கத்தான்
4.நான் உனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தேன்…! என்று தெளிவாக்கினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.