நம் உடலில் எப்படி வெப்பம் உருவாகின்றது…?

Heat is god

நம் உடலில் எப்படி வெப்பம் உருவாகின்றது…?

கேள்வி:-

ஞானகுருவின் உபதேசத்தில் அடிக்கடி உபயோகிக்கும் Electric, Electronic என்பதன் முழுமையான விளக்கம் தர வேண்டுகிறோம்.

பதில்:-

விண்ணிலிருந்து பூமிக்குள் வந்த உயிரணு எப்படி இயங்குகிறது..? உயிரணுவிற்குள்
1.நட்சத்திரங்களின் எதிர்மறையான இயக்கங்களாலும்
2.அதை இணைக்கும் பாலமாக இருக்கும் வியாழன் கோளின் சக்தியும்
3.சூரியனின் வெப்ப காந்தமும் சேர்ந்து
4.ஒரே சீரான துடிப்பாக (வெடுக்… வெடுக்…) இயங்கிக் கொண்டே உள்ளது.
5.அந்தத் துடிப்பால் உயிரணுவிற்குள் வெப்பம் உருவாகின்றது.
6.உயிரணுவிற்குள் தோன்றும் வெப்பமே உயிர் ஆகும். அதுவே கடவுளாகின்றது ஈசனாகின்றது.

தொடர்ந்து உயிரணுவிற்குள் வெப்பம் உருவாகிக் கொண்டே இருப்பதால் அந்த வெப்பத்தால் ஈர்க்கும் காந்தமாகின்றது.

அதாவது அனல் மின் நிலையங்களில் வெப்பத்தை வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது போல் உயிரின் வெப்பத்தால் காந்தம் உருவாகிக் கொண்டே உள்ளது (EMF – ELECTROMOTIVE FORCE).

உயிரின் துடிப்பினால் “தொடர்ந்து ஏற்படும் அந்த காந்தப் புலனின் ஆற்றலைத் தான்” ஞானகுரு அவர்கள் ELECTRIC என்று உணர்த்துகின்றார்கள்.

வெப்பத்தினால் உருவான காந்தப் புலனின் ஆற்றலால் உயிர் என்ன செய்கின்றது…? தன் அருகிலே இருக்கும் மற்ற (காற்று மண்டலத்தில் உள்ள) உணர்வலைகளைக் கவர நேர்கின்றது.

ஒரு அடுப்பிலே பாத்திரத்தை வைத்து அதிலே மற்ற பொருளைப் போட்டுக் கொதிக்க வைத்தால் கொதித்து ஆவியாகின்றது.

ஆவியாக மாறியது போக மீதம் உள்ளது பாத்திரத்திலே உறைவது போல் உயிரணுவைச் சுற்றி அது கவர்ந்த உணர்வலைகளின் மணம் உறைகின்றது.
1.அதற்குப் பெயர் தான் சிவம். சிவம் என்றால் உடல்.
2.அதாவது கண்ணுக்குத் தெரியாத சக்திகளை உயிர் நுகர்ந்து கண்ணுக்குத் தெரியும் உடலாக மாற்றுகின்றது.

கொதித்து ஆவியாகும் பொழுது அதிலே சப்தங்கள் வருவது போல தான் உடல் பெற்ற பின் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் நாதங்கள் (ஒலிகள்) தோன்றுகிறது. அந்தச் சப்தமே உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளாகவும் எண்ணங்களாகவும் தோன்றுகிறது.

இவ்வாறு உயிர்… தான் நுகரும் உணர்வுகளை எல்லாம் உணர்ச்சிகளாக மாற்றி இயக்குவதைத்தான் அந்த உணர்ச்சிகளை ELECTRONIC என்று ஞானகுரு சொல்கிறார்.

நம் உயிரான ஈசனின் (ELECTRIC) துணை கொண்டு ஞானிகள் மகரிஷிகளை நுகர்ந்தால் அதை உயிர் (ELECTRONIC) ஞானத்தின் உணர்ச்சிகளாக இயக்கி நம் உடலுக்குள் ஒளியான அணுக்களாக உருவாக்கும். நம் உயிர் நம்மையும் மெய் ஞானியாக மாற்றும்…!

 

உலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்…” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்…?

annamalai girivalam

உலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்…” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்…?

கேள்வி:-
நீங்கள் கூறிய பதிவுகளில் உலக மாற்றங்கள் குறித்துச் சொல்லியுள்ளீர்கள். மற்றும் நாஸ்டர்டாமஸ் (NOSTRADAMUS) அவர்கள் சொன்ன பதிவுகளை எல்லாம் படித்தேன்.

அதில் தென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் இனிமேல் நடக்கும் விஞ்ஞான மாற்றத்திலிருந்து உலகைக் காத்திடும் நிலையாக வரப் போகிறது என்றும் நம் குருவும் இதைத் தான் குறிப்பிட்டார் என்றால் இது எப்போது நடக்கும்…?

பதில்:-
நாஸ்டர்டாமஸ் 17ஆம் நூற்றாண்டிலும் நம் குருநாதர் 20 ஆம் நூற்றாண்டிலும் அந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அது உண்மைதான்…!

ஆனால் அது ஒரே ஒரு குழந்தை என்று அர்த்தம் அல்ல…!

ஏற்கனவே உலகைக் காக்கக்கூடிய அத்தகைய உயிராத்மாக்களின் எண்ணிக்கை
1.ஏற்கனவே 2010 ஆம் ஆண்டிலிருந்தே பெருகத் தொடங்கி விட்டது.
2.இதனுடைய வெளிப்பாடுகளை 2020 ஆண்டில் முழுவதும் பார்க்க முடியும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைச் சீராகக் கடைப்பிடிப்போரும்
2.அவருடைய உணர்வுகளைப் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உள்ள பூர்வமாக ஏற்றுக் கொண்டு…
3.உலகைக் காக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும்
4.எல்லோரையும் மொத்தமாகச் சேர்த்துத் தான் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
5.நமக்கெல்லாம் அந்தத் தகுதி உண்டா…?
6.இல்லையே..! என்று (யாருமே) கருத வேண்டியதில்லை.
7.உலகைக் காக்கும் அந்தச் சக்தியில் நீங்களும் கூட ஒருவராக நிச்சயம் இருப்பீர்கள்.

அதே சமயத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானகுரு மூலமாக வெளிப்படுத்திய ஞான உபதேசக் கருத்துக்களைப் படித்து… அதைத் தனக்குள் பதிய வைத்து… முழுமையாக அதன்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு “இனி செயல்படுவோர் அனைவருமே அந்தத் தகுதி உடையவர்களாகின்றார்கள்…!”

தனித்த சக்திக்கு வலிமை இல்லை. ஒன்று சேர்ந்தால் தான் வலிமை. சிறு துளி பெரு வெள்ளம் போல் நாம் எல்லாம் சேர்ந்து தான் உலகைக் காக்கப் போகின்றோம்.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வுகளை
2.புருவ மத்தியில் “ஈஸ்வரா…!” என்று உள்ளபூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே
3.உலகைக் காக்கும் சக்தியாக உருவாகின்றார்கள்.

(இந்தக் கருத்தைக் ஏற்றுக் கொண்டாலும் சரி அல்லது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இரண்டு வருடத்திற்குள் அத்தகைய காக்கும் சக்தியைக் காணலாம்.)

குழந்தைகளுக்கு மெய் ஞானத்தைப் போதிக்கும் வழி..!

MINDFULNESS_CLASSROOM

குழந்தைகளுக்கு மெய் ஞானத்தைப் போதிக்கும் வழி..!

கேள்வி:-
குழந்தைகளைப் பக்குவப்படுத்தி மெய் ஞான வழியில் எப்படி வளரக்க வேண்டும்…?

பதில்:-
குழந்தைகளை முதலில் அன்னை தந்தையரை வணங்கப் பழக்கிக் கொடுங்கள். அந்த ஒழுக்கத்தின் நிலைகளைக் கற்றுக் கொடுத்து வீடு குடும்பம் என்ற நிலைகளில் ஒற்றுமையாக வளரவேண்டும் என்ற நல் போதனைகள் கொடுத்து அன்புடன் அரவணைத்துப் பழகுங்கள்

1.வீட்டையும் மற்றவர்களையும் மதிக்கச் செய்யும் நிலைகளைக் குழந்தை உள்ளங்களில் உருவாக்கச் செய்து
2.உலகிற்கே எடுத்துக்காட்டாக உலகையே காத்திடும் நிலையாக வர வேண்டும் என்று
3,குழந்தைகளுக்கு அருளாசி வழங்குங்கள்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க நிலைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நிலையும் இந்த உலகைக் காத்திடும் நிலைகளும் அந்தக் குழந்தைகள் வளரும் காலத்தில் தான் உண்டு.

ஆகவே இனி வரும் காலத்தில் விஞ்ஞான அறிவால் பேரழிவு கொண்டு வரும் நிலையிலிருந்து தன்னைக் காத்திடும் சக்தியை அவர்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் அந்தச் சக்தியைப் பெறும் நிலையாகப் பிரார்த்திக்கச் செய்து அவர்கள் எண்ணத்தால் சக்தி பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

அதைப் போல அந்தக் குழந்தைகளுக்கு
1.நம்முடைய வீடு…
2.நம்முடைய சகோதரர்கள் உறவினர்கள்…
3.நம் விவசாயம் என்ன…?
4.நம் அருகில் உள்ள நண்பர்களிடம் எப்படிப் பண்புடன் பழக வேண்டும்…? என்று நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் சில சில குறைகள் ஏற்பட்டாலும் அதைக் கோபித்துச் சொல்லாத நிலைகள் கொண்டு அரவணைத்துப் பக்குவமாகச் சுட்டிக் காட்டும் நிலை வர வேண்டும்.
1.எத்தகைய பாட நிலைகளை நாம் போதித்தாலும் உணர்வின் தன்மை வெளிப்படுத்தினாலும்
2.குழந்தைகள் உள்ளங்களில் மற்றவர்கள் படும் ஆசைகள் இணைக்கப்படும் பொழுது சில நேரங்கள் குழந்தைகள் மாறினாலும்
3.ஏன்… இவ்வாறு செய்கிறாய்…? என்று நாம் கோபித்துச் சொல்லாதபடி
4,அதைச் சுட்டிக் காட்டி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று சிறிது காலம் போதிப்போம் என்றால்
5,அந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் அது ஆழமாகப் பதிந்து
6.அதன் வழிகளில் நமக்கே நல் வழி காட்டும் நிலையாக நிச்சயம் வளரும்.

ஏனென்றால் நாம் எண்ணியபடி படிப்பிலும் மற்ற நல்ல பழக்கங்களிலும் குழந்தைகள் முன்னேறி வரவில்லை என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை உணர்வுடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் விளைந்த வேதனை உணர்வுகள் நம் குழந்தைகளிடத்தில் கடும் சொல்லாக ஊடுருவி அது வித்தாக ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

1.நம்மைக் காணும் பொழுதெல்லாம் அஞ்சும் நிலை வருகின்றது. வெறுக்கும் நிலை வருகின்றது.
2.உயர்ந்த நிலைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றாலும்
3.நாம் முதலிலே பாய்ச்சிய கோப உணர்வுகளால் அங்கே மறைக்கப்படுகின்றது
4.நமக்குள்ளும் அதே உணர்வை எடுக்கப்படும் பொழுது கோபிக்கும் நிலைகளே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் குழந்தைகளை மகரிஷிகள் காட்டிய மெய் வழியில் வளர்க்க வேண்டும்.

செய்யத் தவிர்க்க வேண்டியது:-
1.குழந்தையைக் கவனிக்க முடியவில்லை அவன் அழுது கொண்டே இருக்கின்றான் என்று சொல்லி விட்டு செல் ஃபோனையோ டி.வி.யையோ பார்க்கப் பழகிக் கொடுக்கக் கூடாது
2.குழந்தையை வெறுப்புடனோ ஆத்திரத்துடனோ எதிலுமே கட்டாயப்படுத்தக் கூடாது.
(3.நீ இந்த உண்மையை உணர்ந்து கொள்… நீ சிந்தித்துப் பார்… என்று அவனிடம் இருக்கும் நல்ல உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்
4.ஒரு தடவைக்குப் பத்து முறையாவது நாம் சொல்ல வேண்டும்.)
5.வீட்டில் குழந்தையால் தொல்லையாக இருக்கிறது என்று குழந்தையை மற்றவர்களிடம் சொல்லிப் பார்க்கச் சொல்லும் பழக்கம் வரக்கூடாது.
6.குழந்தையை எக்காரணம் கொண்டும் (மனதில் கூட) சாபமிடக் கூடாது… இவன் எல்லாம் உருப்பட மாட்டான்… என் உயிரையே வாங்குகிறான்… நாசமாகப் போகிறவனே… என்ற எண்ணமே வரக்கூடாது.
7.நம் வேலைக்கு இடைஞ்சலாக அவன் இருக்கிறான் என்று அவனை அலட்சியப்படுத்தக் கூடாது (அலட்சியம் செய்தால் அவன் மேலும் நமக்குத் தான் தொல்லை தருவான்)
8.குழந்தை மேல் அவநம்பிக்கை கொள்ளவே கூடாது…! (கண்டிப்பாக ஞானியாக வளர்வான் என்ற எண்ணம் வர வேண்டும்)

செய்ய வேண்டியது:-
1.கூட்டுத் தியானங்களில் பங்கேற்க வைக்க வேண்டும்.
2.ஞான உபதேசங்களைக் குழந்தைகளில் காதில் விழும்படியாகக் கேட்க வைக்க வேண்டும்.
3.மெய் ஞான நூல்களை அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற் போல் வாசித்து அதைக் குழந்தைகளைக் கேட்க வைக்க வேண்டும்.
4.கைக் குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் உணவோ தண்ணீரோ பாலோ கொடுப்பதிலிருந்து மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் பொழுது நாம் அந்த அருள் உணர்வுகளுடன் தான் அதைக் கொடுத்துப் பழக வேண்டும்
5.அவர்கள் செய்யும் குறும்புத் தனங்களை நாம் பதிவாக்காது நம்முடைய நல்ல உணர்வுகளை அவர்களுக்குள் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
6.ஞானத்தைப் பெறுவதும் ஞானிகளைப் பற்றிய கதைகளையும் (அகஸ்தியர் போகர் வான்மீகி வியாசகர் கொங்கணவர் அத்திரி ஈஸ்வரபட்டர் ஆதிசங்கரர் இராமலிங்க அடிகள்) அதன் மூலம் அவர்கள் பெற்ற ஆற்றல்களையும் குழந்தைகளுக்குச் சொல்வதுமே குழந்தைகளுடைய பொழுது போக்காக இருக்க வேண்டும்.
7.ஆக மொத்தம் நாம் நம்முடைய கண்களால் சொல்லால் குழந்தைள் நல்லதைக் கேட்கும்படியாகச் செய்ய வேண்டும்..! நல்லதைப் பார்க்கும்படியாகச் செய்ய வேண்டும்…!
8.எந்த நிலையிலும் குழந்தைகளுக்கு இதைப் பதிவாக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் நமக்குள் வர வேண்டுமே தவிர குழந்தை கேட்கவில்லை.. கவனிக்கவில்லை.. அவனுக்கு இஷ்டமில்லை அவன் கேட்க மாட்டான்.. எதற்கு இதைச் செய்ய வேண்டும்…? என்ற எண்ணம் நமக்கு வரக் கூடாது.
9.இன்றைய சுட்டிக் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் மிகச் சிறந்தவர்களாக ஞானிகளாக வருவார்கள்.
10.வாய் வழியாகச் சொல்லிச் சொல்லி அவனைத் திருத்த வேண்டும் என்பதற்குப் பதில் அவனுக்குள் ஆழமாகப் பதிவாக்கக் கூடிய செயல்களைத் தான் செய்ய வேண்டும்.
11.நாம் செய்யும் ஞானிகளைப் பற்றிய பதிவுகள் குழந்தையிடம் வித்தாகி விளைந்து வருவதை 48 மணி நேரத்திலோ 48 நாளகளிலோ உறுதியாகக் குழந்தையிடம் பார்க்கலாம்.

எங்கள் குழந்தைகள் அனவைரும் உலகையே காத்திடும் “உத்தம ஞானிகளாக வருவார்கள்…!” என்ற வைராக்கியமான எண்ணம் ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் வர வேண்டும் (இது தான் மிகவும் முக்கியம்)

கலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…? அதனின் பலன்கள் என்ன…?

Kalasa pooja

கலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…? அதனின் பலன்கள் என்ன…?

கலசம் வைக்கும் முறை:-
ஒரு பித்தளைத் தகட்டில் அந்தத் தட்டிற்குத் தகுந்தாற்போல் பச்சரிசியை நிரப்பி “ஓம்” என்று எழுதவும்.

பிறகு அந்தப் பித்தளைத் தட்டில் வைக்கும்படியாக ஒரு சொம்பை எடுத்துக் கொள்ளவும். அதைத் தட்டின் மீது வைக்கவும். அதிலே பாதி அளவு நீரை நிரப்பவும்.

சொம்பின் மீது ஐந்து மாவிலைகளை நீரிலே படாதவண்ணம் வைக்கவேண்டும். அதன் மீது ஒரு தேங்காயை வைக்க வேண்டும்.

தேங்காயை வைப்பதற்கு முன் அதைச் சுத்தமாகக் கழுவி மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

பிறகு தேங்காயைச் சொம்பின் மீது வைக்கும் பொழுது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த நீருக்குள் போட வேண்டும்.

தேங்காயையும் நீரில் படாதவாறு வைக்க வேண்டும். பின் சொம்பின் கழுத்தில் ஒரு மஞ்சள் துண்டை நூலை வைத்துக் கட்டவும். தேங்காயின் மீது மலரைச் சாத்தவும்.

இவ்வாறு கலசம் வைத்த பின் அதற்கு முன் ஒரு சிறிய டம்ளரில் நீரும் ஒரு டம்ளரில் பச்சைப் பாலும் வைக்கவும்.

பிறகு தியானத்திற்கு எல்லோரையும் அழைத்து வந்து கலசத்திற்கு முன் அமரச் செய்து தியானிக்க வேண்டும்.

தியானிக்க வேண்டிய முறை:-
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எல்லோரும் சேர்ந்து சொல்லித் தியானத்தை ஆரம்பிக்கவும். ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி வணங்க வேண்டும்.

கீழே உள்ளதை ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஏங்கித் தியானிக்க வேண்டும். ஒரு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை தியானிக்கலாம்.

1.எங்கள் தாய் தந்தை தெய்வ சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா
2.எங்கள் தாய் தந்தையருக்கு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.எங்கள் குருவின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5.எந்த எண்ணத்தை எண்ணிக் கலசம் வைத்துள்ளோமோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன் கலசத்தை உற்று நோக்கி எண்ணத்தைச் செலுத்தவும்.
6.கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி பூமியின் வடதுருவப் பகுதியில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்திச் சிறிது நேரம் தியானியுங்கள்.
8.பின் கண்களைத் திறந்து கலசத்தைப் பார்த்து மலரின் மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் தெய்வ குணமும் இந்தக் கலசத்திலே படர்ந்து இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிராத்மாக்களுக்கும் அந்தச் சக்தி கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

பின் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லித் தியானத்தை நிறைவு செய்யுங்கள். கற்பூர தீபம் காட்டிவிட்டு கலசத்தின் முன் வைத்திருந்த நீரையும் பாலையும் எல்லோருக்கும் கொடுங்கள்.

வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் பொழுது அந்தக் குழந்தைகளைத் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்யச் சொல்லி
1.எங்கள் தாய் தந்தையர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெறவேண்டும்
3.கல்வியில் சிறந்த ஞானமும் உலக ஞானமும் நாங்கள் பெறவேண்டும்
4.நாங்கள் உடல் நலம் பெற்று நற்பெயர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற எண்ணத்தில் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் பாத நமஸ்காரம் செய்யும் பொழுது தாய் தந்தையரும்
1.எங்கள் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுக் கல்வியில் சிறந்து நற் பெயர் பெறவேண்டும் ஈஸ்வரா
2.எங்கள் குழந்தை உடல் முழுவதும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து மலரின் மணமும் தெய்வ குணமும் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி உலகம் போற்றும் உத்தமர்களாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசி கொடுக்க வேண்டும்.

கலசத்தினால் ஏற்படும் பலன்கள்:-
கலசத்தை வைத்து இவ்வாறு தியானிப்பதால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியம் பெறுவார்கள். குடும்பத்தில் மன அமைதி கிடைக்கும்.

வீட்டிற்கு வரும் மற்றவர்களுக்கும் மலரின் நறுமணமும் தெய்வ குணமும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் நல்ல சக்திகளும் மன அமைதியும் கிடைக்கும்.

தினசரி கலசத்திற்கு முன் அமர்ந்து எல்லோரும் தியானிக்க வேண்டும். அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்த பின் கலசத்தில் உள்ள நீரை மாற்ற வேண்டும். கலச நீர் நல்ல மணமாக இருந்தால் அதை வீட்டில் உள்ள எல்லோருக்கும் குடிக்கக் கொடுக்கலாம். மீதி நீரை வீட்டைச் சுற்றித் தெளிக்க வேண்டும். தீமையான அலைகள் நம் வீட்டிலே அணுகாது.

கலசத்தில் மீண்டும் நீரை ஊற்றி அதே தேங்காயை வைக்கவும். மாவிலைகளை மாற்றவும். இப்படி ஒவ்வொரு 48 நாள்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

ஒரு ஆறு மண்டலம் வலிமையாகச் செய்தால் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் அபரிதமாகப் பெருகும். அந்த ஒளியான அணுக்கள் உங்கள் உடலிலே பெருகியதைக் கண்ணிலேயும் பார்க்கலாம்.

 

உலகோதய ஆசை என்றால் என்ன…?

Spiritual LIFE

உலகோதய ஆசை என்றால் என்ன…?

மனிதனாகப் பிறந்து நாம் வாழும் நிலையில் அன்றாடத் தேவைகளில் நம் எண்ணத்தைச் செலுத்தி அந்தந்தச் சந்தர்ப்பங்களில் ஏற்படும் நிகழ்ச்சிகளினால் நம்முடைய சிந்தனைகள் எத்தனையோ மாறுகின்றது.

“மகிழ்ச்சியாக வாழ வேண்டும்…!” என்ற ஆசையில் தான் உணவு உட்கொள்வதிலிருந்து தொழிலுக்கோ கல்விக்கோ மற்ற எல்லா வேலைகளையும் செய்கின்றோம்.

நாம் நன்றாக இருந்தாலும் நம் குடும்பத்திலோ உறவுகளிலோ நண்பர்களுக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் அதனால் நாம் வேதனைப்படுகின்றோம். அல்லது அவர்கள் தவறு செய்தால் ஆத்திரப்படுகின்றோம்.

இதனால் நாம் நமக்காகச் செய்யும் கடமைகளிலும் அதனுடைய பாதிப்பாகின்றது. இப்படிப் பிறரிடமிருந்து வரும் உணர்வுகள் நமக்குள் மோதிய பின் அது நாம் போகும் பாதையை (எந்தப் பாதையாக இருந்தாலும்) மாற்றுகின்றது.

கேட்டால் நாம் என்ன சொல்வோம்…?

என் குடும்பத்திற்காக அல்லது என் சொந்தத்திற்காக அல்லது என் தொழிலுக்காக அல்லது என் மன திருப்திக்காக என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அதிலே மீண்டும் மீண்டும் போய்ச் சிக்கிக் கொள்வோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.வீட்டிற்குள் எப்படித் தினம் தினம் தூசி வருகிறதோ
2.நம் உடல் தினமும் அழுக்காகின்றதோ
3.உடைகள் அணியும் பொழுது சுத்தமாக இருந்தாலும் அணிந்த சிறிது நேரத்தில் அது எப்படி அழுக்காகின்றதோ
4.அது போல் இந்த மனித வாழ்க்கையிலும் ஒரு சிக்கல் தீர்ந்தாலும்
5.அடுத்து ஒரு சிக்கல்… அதற்கு அடுத்து ஒரு சிக்கல்…! என்று வந்து கொண்டே தான் இருக்கும்.

அவரவர்கள் வாழும் இடங்களுக்கொப்ப… வளர்த்த நிலைக்கொப்ப… சந்திக்கும் நிலைக்கொப்ப… ஏதாவது குறைகள் வந்து கொண்டே தான் இருக்கும். குறை இல்லாத மனிதர்களே கிடையாது…!

வீட்டிற்குள் வரும் தூசியைத் தூய்மைப்படுத்தத்தான் முயற்சிக்க முடியுமே தவிர தூசியே வராது தடுக்க முடியாது. உடலைத் தினம் தினம் குளித்துத் தூய்மையாக்க வேண்டுமே தவிர உடலில் அழுக்கே ஒட்டாமல் தடுக்க முடியாது,

அது போல் இந்த உலக வாழ்க்கையில் அம்மா அப்பா என்றோ… கணவன் மனைவி என்றோ… குழந்தைகள் என்றோ… நண்பர்கள் என்றோ உறவுகள் என்றோ… தொழில் என்றோ அல்லது நம் உடல் நம் மனது என்றோ…! எத்தனையோ வகைகளில் பல விதமான உணர்வுகள் எதிர்மறையாக மோதத்தான் செய்யும்.

மேலே சொன்ன எல்லோருடைய உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். அதிலே ஏதாவது ஒன்று சரியில்லை என்றாலும் நம் அமைதி பறிபோய்விடுகிறது.

அமைதியை இழந்த பின் அந்த ஒன்றை மட்டும் தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர இதற்கு முன்னாடி நன்றாகத் தான் இருந்தோம் அதே போல்
1.அந்த நன்றாக இருந்த நல்ல சக்தியை எடுத்து
2.மீண்டும் நாம் நன்றாகவே இருப்போம்…! என்ற எண்ணம் வருவதில்லை.

ஆக நாம் போகும் நல்ல பாதையைத் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுதெல்லாம் நல்ல பாதையில் தொடர்ந்து போவதைக் கேள்விக் குறியாகத்தான் ஆக்குகின்றோமே தவிர
1.மீண்டும் மீண்டும் எது வந்தாலும்
2.நாம் போகும் அருள் வழியை மாற்றக் கூடாது…! என்ற தெளிவும் வைராக்கியமும் வருவதில்லை.

ஆக மொத்தம் பேருக்கும் புகழுக்கும் மற்றவர்கள் நம்மைப் பற்றி எண்ணும் எண்ணத்திற்கும் அடிமையாகி அந்த நிலையில் தான் நாம் வாழ விரும்புகின்றோம்.

தனக்காக வாழ்வதாகச் சொன்னாலும் பிறரை எண்ணித்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்துகின்றோம். ஆக தனக்காக நாம் வாழ்வதே இல்லை.

உயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நாம் அடைய வேண்டிய எல்லை எது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று என்றுமே அழியாது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் மெய் ஞானிகள்.
1.அவர்கள் தான் அருள் வாழ்க்கை என்றும்
2.உலகோதய வாழ்க்கை என்றும் உணர்த்துகின்றார்கள்.

ஏனென்றால் நாம் இந்த உலகுக்காக வாழவில்லை. உலகத்தில் தான் வாழ்கின்றோம். உலக சுகத்தை நம்ப வேண்டியதில்லை.

இந்த உலகத்தில் வாழும் பொழுது நம்மை உருவாக்கிய உயிருக்காகவும் நாம் அடுத்து அடைய வேண்டிய ஒளிச் சரீரத்திற்காகவும் வாழ்ந்தால் அது அருள் வாழ்க்கை.

அதை மறந்து வேறு எந்த நிலைக்காக எண்ணத்தைச் செலுத்தினாலும் அதன் படி சென்றாலும்.. வாழ்ந்தாலும்… அது எல்லாமே உலகோதய வாழ்க்கை தான்…!

தியானம் செய்வதால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்

Ultimate star Polaris

தியானம் செய்வதால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்

 

கேள்வி:-

தியானம் முடித்தவுடன் சில நேரங்களில் எனக்கு உடல் கூசுகிறது.
தியானம் செய்யாத நேரங்களில் கூட இனிப்பான உமிழ் நீர் சுரத்தல் அதிகமாக உள்ளது. ஏன்..?
எனக்கு குருவைத் தியானத்தில் காண வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அதை அடைவது எவ்வாறு…?

பதில்:-

தியானத்தின் மூலம் நாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் உயிரி வழியாக அதிகமாகப் பெற ஆரம்பித்தால் உடலுக்குள் நிறைய மாற்றங்களை உணர முடியும்.

அதிலே சிலவற்றைச் சொல்கிறேன். உடலின் சில பாகங்களில்
1.சுருக் சுருக் என்று குத்தும்
2.பட பட என்று தசைகளில் துடிக்கும் (கண்களும் துடிக்கும்)
3.சில நேரம் பளீர்…! என்று கூட மின்னும்
4.உடலுக்குள் திடீரென்று அதிக சூடாகும்
5.காதிலே சில நேரம் இரைச்சலாவது போன்றும் அடைப்பது போன்றும் உணரலாம்
6.தலையே பாரமாக இருப்பது போல் இருக்கும்
7.தலையின் பின் பகுதியில் “கின்” என்று இருக்கும்.
8.கண்களின் இமைகளில் எரிச்சல் இருக்கும் (கண்களும் சில நேரம் இலேசாகச் சிவப்பாக இருக்கும்)
9.உட்கார்ந்து தியானிக்கும் பொழுது தூக்கம் வரும்… ஆனால் படுத்தால் தூக்கம் போய்விடும்
10.உமிழ் நீர் சுரந்து கொண்டே இருக்கும் (எவ்வளவு வெயில் வறட்சியாக இருந்தாலும்… தண்ணீரே குடிக்கவில்லை என்றாலும்)
11.புருவ மத்தியிலும் மூக்கின் நுனியிலும் அரிப்பு இருக்கும்
12.கனவுகள் அதிகம் தெரியும் (பகலில் தூங்கினாலும் வரும்)
13.உடலில் சில நேரம் மின்சாரம் பாய்வது போல் “கிர்” என்று இருக்கும்.
(1-13 எல்லாமே எனக்குள் நான் பார்த்திருக்கின்றேன்)

மேலே சொன்ன எல்லாமே அவரவர்கள் உடலுக்குத் தக்கவாறு எடுக்கும் சக்திக்குத் தக்கவாறு எண்ணும் ஏக்கத்திற்குத் தக்கவாறு துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உயிர் வழியாக உடலுக்குள் செல்லும் பொழுது ஏற்படலாம்.

அது அது தெரியும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் பால் நினைவை விண்ணிலே செலுத்தி இதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினால் அந்த விடைகள் கிடைக்கும். உணரவும் முடியும்.

குருவைக் காண வேண்டும் என்றால் குரு சொன்ன முறைப்படி நாம் கடைப்பிடித்து வாழ்க்கையை அருள் வழியில் நடத்த வேண்டும். கூட்டுத் தியானங்களில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் (இது மிகவும் முக்கியம்)

குருவின் உபதேசக் கருத்துக்களை ஆழமாகப் பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மற்றவர்களுக்கும் தக்க நேரத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது அது நமக்குள் ஓங்கி வளரும்.
2.நமக்குள் அது ஓங்கி வளரும் நிலையில் நாம் வெளிப்படுத்தும் நுண்ணிய உணர்வுகளை
3.அவர்கள் சுவாசித்துத் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளைப் போக்கத் தொடங்கினால்
4.நாம் நிச்சயம் அந்த இடத்தில் குருவைக் காண முடியும்
5.எல்லா மகரிஷிகளையும் காண முடியும்.

குருவையும் மகரிஷிகளையும் ஒவ்வொரு நொடியும்
1.காண வேண்டும் என்ற கண்ட நிலையிலும்
2.அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தொடர்பு கொண்ட நிலையிலும் தான்
3.ஞான குரு வெளிப்படுத்திய ஞானிகளின் உணர்வுகளை இங்கே பதிவு செய்து கொண்டுள்ளேன்.

எல்லோரும் பெறவேண்டும் என்று இங்கே பதிவு செய்யும் பொழுது தான் அவர்களை என்னால் காண முடிகின்றது. காட்சியாக அல்ல…! உணர்வாக… ஒளியாக… அலைத் தொடர்பாக… உணர்வின் இயக்கமாக… அவர்களுடன் அவர்களாக…!

அமானுஷ்யம் என்றால் என்ன…?

Astral divine powers

அமானுஷ்யம் என்றால் என்ன…?

 

கேள்வி:-
சூட்சும நிலை என்றால் என்ன..?

உடலை விட்டு பிரிந்த நிலைக்கும் சூட்சும நிலைக்கும் உள்ள வேறுபாடு என்ன…? அதன் செயலாக்கத்தை நாம் எவ்வாறு உணர்கின்றோம்?

பதில்:-
பொதுவாக நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படவில்லை என்றால் அதைப் பற்றி நாம் யாரும் அதிகமாகக் கவனம் செலுத்த மாட்டோம்.

இங்கே “சூட்சமம்…!” என்பதே அப்படிப்பட்ட நிலை தான்.

இன்றைய விஞ்ஞானக் கருவியான டெலஸ்கோப் மூலம் உதாரணமாக வான மண்டலத்தில் தொலை தூரத்தில் இருக்கும் மண்டலங்களைப் பார்க்கலாம். படமும் எடுக்கலாம்.

அதே போல் நுண்ணிய கருவிகள் மூலம் மிகச் சிறிய அணுக்களையும் பார்க்கலாம். லேசர்.. எக்ஸ்ரே.. மூலம் ஒரு பொருளுக்குள்ளோ உடலுக்குள்ளோ நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.
1.அப்படிப் பார்ப்பதைச் சூட்சமம் என்று சொல்ல முடியாது.
2.ஆனால் அந்தக் கருவிகள் எப்படிக் கவர்கிறது..?
3.எதைக் கவர்கிறது..? எதைக் காட்டுகிறது..? அதனின் இயக்கம் எப்படி…? என்பதே “சூட்சமம்…!”

இன்று நாம் உபயோகப்படுத்தும் மின்சாரத்தை நம் கண்களால் காண முடியவில்லை. ஆனாலும் அதைக் கடத்த வேண்டும் என்றால் +/– POSITIVE, NEGATEIVE அல்லது PHASE. NEUTRAL “ஒன்றுடன் ஒன்றை இணைத்தால் தான்” அது இயங்கும். இல்லை என்றால் இயங்காது.

ஆனால் இந்தச் “சூட்சம சக்தி…!” என்பதற்கு அப்படிப்பட்ட இணைப்பு தேவையில்லை. விஞ்ஞான ரீதியாக அதைப் புரிய வைக்க முடியாது.

நமக்குப் பசிக்கிறது… என்றால் அதைக் காட்ட முடியுமா…? முடியாது. உயிர் உடலுக்குள் இருக்கிறது என்பதையும் காட்ட முடியாது. ஆனால் இதை எல்லாம் உணரலாம்.

ஆக மொத்தம்
1.கண்ணுக்குப் புலப்படாத…
2.உணரக்கூடிய அல்லது உணர்த்தக்கூடிய
3.அல்லது உணர முடியாத எல்லாமே சூட்சமச் செயல்கள் தான்.

இருந்தாலும் நாம் சாதாரணக் கண்களால் காண முடியாததை இன்று விஞ்ஞானிகள் புறத்திலே கருவிகளை வைத்துக் காண்பது போல்
1.மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றலை அகத்திலே (உயிராத்மாவில்) சேர்த்து
2.கண்ணுக்குப் புலப்படாத.. உணரக்கூடிய… உணர்த்தக்கூடிய செயல்கள் அனைத்தையும் கண்டார்கள்.
3.புறக் கண்களால் அல்ல.

ஏனென்றால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒலி உருவாகி ஒளி உருவாகின்றது. இடி… மின்னல்..!
1.தனக்குள் மோதும் அல்லது
2.தன்னிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகளை மற்றதுடன் மோதி
3.ஒலி ஒளி என்ற நிலையில் எல்லாவற்றையும் அறிந்துணர்கின்றார்கள்.

அவர்களால் அகண்ட பேரண்ட விரிந்த நிலைகளையும் அறிய முடிகிறது. மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறிய முடிகிறது. எங்கேயும் தொடர்பு கொள்ளவும் முடிகிறது அதை இயக்கவும் முடிகிறது.
1.இந்த அகண்ட பேரண்டமே அத்தகைய மெய் ஞானிகளின் கூட்டுச் செயலால்
2.இணைந்த தன்மைகளில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.
3.அவர்கள் செயல் எல்லாமே சூட்சம செயல்கள் தான்.

அவர்கள் உணர்வுடன் இணைந்து அவர்களின் செயலாக ஒன்றினால் மட்டுமே அதை நாமும் காண முடியும் உணர முடியும்.

சாதாரண நிலைகளில் அதைக் காண முடியாது. அல்லது அப்படியே கண்டாலும் அதை உணர முடியாது.

ஏனென்றால் நம்முடைய உணர்வின் ஈர்ப்பு உடலின் இச்சை கொண்ட நிலையில் பூமிக்குள் விளைந்த உணர்வின் இயக்கம் இருப்பதால் அந்த நுண்ணிய நிலைகளை அறிய முடியாது.

உதாரணத்திற்குக் குருநாதர் (ஞானகுரு) கண்ட உணர்வு…! செவ்வாய்க் கோளைப் பற்றி சுமார் ஒன்றரை மாதம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அறியும்படிச் செய்தார்.

அந்த ஒன்றரை மாதம் நான் வேறு எந்தத் திட உணவையும் உட் கொள்ள முடியவில்லை.. காற்றிலிருக்கும் சில உணர்வுகளைத் தான் நான் ஆகாரமாக எடுத்தேன்..! என்று சொல்கிறார்.

சுவாசித்து உயிரில் கலக்கும் உணர்வுக்கொப்பத்தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் இயக்கம் அனைத்துமே இருக்கும். அதுதான் மெய் ஞானம் என்பது. மெய் ஞானத்தின் செயல்கள் எல்லாமே சூட்சமம் தான்.

மெய் ஞானிகளின் அருள் ஆற்றல்களை நாம் பெற்றால் அதை நாம் சுவாசித்தால் அந்தச் சூட்சமங்களை நிச்சயம் காணலாம் உணரலாம்.

உலோகச் சத்தினை நம் உயிரான்மாவில் எப்படிப் பெருக்குவது..? சக்தி வாய்ந்த மெய் ஞானியாக எவ்வாறு ஆவது…?

Divine satellite

லோகச் சத்தினை நம் உயிரான்மாவில் எப்படிப் பெருக்குவது..? சக்தி வாய்ந்த மெய் ஞானியாக எவ்வாறு ஆவது…?

 

கேள்வி:-
இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும் மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால் இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.

அப்படி என்றால் உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும் மெய் அறிவை மெய் ஞானத்தில் எப்படிக் கூட்டுவது..? விளக்கம் தேவை

பதில்:-
மாமகரிஷி ஈஸ்வரபட்டர் சொன்னபடி பல நூல்களை ஒன்றாக ஆக்கி ஒரு கயிறாக முறுக்கப்படும் பொழுது அது திடமாகின்றது. வலு கூடுகின்றது. அதிக எடையுள்ள எதையும் அந்தக் கயிறால் தூக்கவும் முடிகிறது.

அது போல் தான் ஒரு பொருளை மறைமுகமாக
1.வேக வைத்து அல்லது எரித்து அதிலுள்ள நீர்ச் சத்தெல்லாம் ஆவியாக ஆன பின்
2.எதை வேக வைத்தோமோ அது திடம் கொண்டதாக உருவாகின்றது.

விஞ்ஞானிகள் பூமிக்குள் இருக்கும் அந்தந்த உலோகப் படிவங்களை எடுத்து இந்த முறைப்படித்தான் பிரித்து எடுத்து தனித் தனியாக பல வகையான உபயோகங்களுக்கு இன்று பயன்படுத்துகின்றார்கள்.

பண்டைய காலங்களில் உபயோகிப்பட்ட உலோகங்களை எடுத்துக் கொண்டால் இரும்பு தாமிரம் தங்கம் வெள்ளி இதைப் போல இன்னும் சிலதுகளைத்தான் பயன்படுத்தினார்கள்.

ஆனால் இன்று அதைக் காட்டிலும் ஏழு மடங்கு எட்டு மடங்கு அதிக அளவில் தனிமங்களைக் கண்டு அதைத் தனித்துப் பிரிக்கும் நிலையும் மற்றதுடன் இணைத்துக் கலப்பு உலோகங்களாகவும் பல்வேறு பயன்பாட்டிற்காகச் செயல்படுத்துகின்றார்கள்.

இன்று நாம் உபயோகிக்கும் ஒரு ஸ்மார்ட் ஃபோனில் (SMART PHONE) பல உலோகங்களும் தனிமங்களும் (நூறுக்கு மேல்) உள்ளது. அதற்குள் அத்தகைய நுண்ணிய நிலைகள் இருப்பதால் தான் செயற்கைக் கோள் வரைக்கும் அதனின் அலைக்கற்றைகள் சென்று ஒரு இடத்திலிருந்தது உலகம் முழுவதும் பரப்புவதை ஒலி ஒளி என்ற நிலையில் இழுத்துக் கவர முடிகின்றது. கண்ணை மூடித் திறப்பதற்குள் நமக்கு முன்னாடி அதைக் காட்டுகின்றது.

நாம் தட்டெழுத்தால் கொடுக்கும் அழுத்தத்திற்கொப்ப அந்த அதிர்வுகள் (ELECTRONIC PULSES) இயங்கி காற்றலைகளுக்குள் வெகு தொலைவுக்குள்ளும் ஊடுருவிச் சென்று அதைக் கவர்ந்து படமாகவும் செய்திகளாகவும் காட்டுகின்றது.

1.இன்றைய விஞ்ஞானத்தில் உலோகங்களையும் தனிமங்களையும் புறத்திலே
2.இத்தகைய கருவிகளிலே சேர்த்துப் பயன்படுத்தும் நிலைக்குத்தான் வந்திருக்கின்றார்களே தவிர
3.அகத்திற்குள் சேர்க்கும் வழி தெரியவில்லை. (அதனின் முக்கியத்துவமே தெரியவில்லை)

அகத்திற்குள் சேர்க்கும் வழி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் உயிர் ஒரு நட்சத்திரம் தான். கோள் தன்னுடைய வளர்ச்சியில் தான் நட்சத்திரமக மாறுகின்றது. கோள்களிலே உயிரணுக்கள் உயிரினங்களும் இருக்கும். நட்சத்திரங்களில் உயிரணுக்கள் இல்லை உயிரினங்கள் அங்கே வாழவும் முடியாது.
1.ஏனென்றால் நட்சத்திரங்கள் அதீத கதிரியக்கச் சக்தி கொண்டது.
2.உலோகத்தின் வீரிய வளர்ச்சி தான் கதிரியக்கம். (உலோகங்களே அங்கே அமிலத் தன்மையாகவும் ஆவிகளாகவும் இருக்கும்)

நட்சத்திரத்திலிருந்து வரும் அத்தகைய கதிரியக்கங்கள் தான் பூமிக்குள்ளும் சரி மற்ற கோள்களிலும் சரி அங்கே விளையும் கல் மண் தாவரம் உலோகங்கள் எல்லாமே வளர்வதற்குக் காரணம்.

பூமிக்குள் மண்ணிலே விளையும் தாவரங்களைச் சமைத்து நாம் உணவாக உட்கொள்கிறோம். மற்றவைகளை நம் வசதிக்கு வீடாகவும் தொழிலுக்காகவும் சுகத்திற்காகவும் பயன்படுத்துகின்றோம்.

ஆக மொத்தம் பூமிக்குள் விளைந்ததைத்தான் எடுத்துப் புறத்திலே உடல் வாழ்க்கைக்குப் பயன்படுத்தப் பழகியுள்ளோம்.
1.ஆனால் மெய் ஞானிகள் அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் கதிரியக்கச் சக்திகளை நேரடியாக எடுத்து
2.தங்கள் உயிரிலே இணைத்துச் சக்தி வாய்ந்தவர்களாக ஒளியுடன் ஒளியாக ஆனவர்கள்.
3.என்றுமே அழியாத நிலைகளில் வாழ்பவர்கள்…! (உடலுடன் அல்ல – சூட்சம நிலையில் ஒளியாக)

இந்த உடல் வாழ்க்கைக்கும் உடலுக்கும் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோமே தவிர
1.உடலையே உருவாக்கி
2.நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட எண்ணுவதில்லை.
3.அதனின் வளர்ச்சிக்காக “எதையுமே…!” செய்வதில்லை.

உடலைக் காக்கும் எண்ணத்திற்குப் பதிலாக உயிருடன் ஒன்றிடும் நிலையாக உயிரைப் போன்றே அழியாத நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்தால்
1.நாம் உடலுக்குக் கொடுக்கும் உணவைக் காட்டிலும்
2.அந்த நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்திகளை உயிருக்கு உணவாகக் கொடுக்கலாம்.

ஏனென்றால் இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மொத்தமாகக் கலவையாக்கியது தான் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஒரு அணு என்பது.

ஆதியிலே அந்தச் சக்தியை எடுத்துத்தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனின் வளர்ச்சியில் நம் சூரியக் குடும்பத்தைத் தாண்டி 2000 சூரியக் குடும்பத்தையும் தாண்டி அகண்ட அண்டத்திலிருப்பதையும் எதுவாக இருந்தாலும் அதைத் தனக்குச் சாதகப்படுத்தும் சக்தியாக அது வளர்ந்து கொண்டேயுள்ளது.

அந்தச் சக்தியைப் பெற நாம் இச்சைப்பட வேண்டும். அதை ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உயிருக்குள் இணைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதை இணைக்க இணைக்க புருவ மத்தியில் ஒளிக்கற்றைகள் இணைவதையும் பளீர்… என்று வெளிப்படுவதையும் காணலாம். நம்மிடம் எது மோதினாலும் அதுவும் ஒளியாகவே மாறத் தொடங்கும். (என்னுடைய அனுபவம் அது தான்)

1.நம் சொல் ஆற்றல்மிக்கதாக ஆகும்.
2.நம் செயல் வலு கொண்டதாக இருக்கும்.
3.புறத்தின் செயலாக அல்ல. அகத்திலே எண்ணினாலே புறத்திலே அதனின் இயக்கம் நடக்கும்.

விழித்திருந்து விஞ்ஞானத்தால் செய்ய முடியாததை… ஆன்ம விழிப்பாக… உயிருடன் ஒன்றி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து.. மிக மிக நுண்ணிய நிலைகளில் செயல்படக் கூடிய சூட்சம செயலே இது.

இது சகலத்திற்கும் பொருந்தும். இதிலே முதிர்ந்தவர்கள் தான் அந்த மெய் ஞானிகளும்… மகரிஷிகளும்…!

பூமிக்குள் விளைந்ததைச் சுவாசிக்காமல் விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து உயிருடன் ஒன்றி ஒளியாகும் மகத்துவமே உயர் ஞானியாக அகிலத்தை ஆட்சி செய்யும் நிலை. மனிதப் பிறப்பின் பலனே அது தான்…!

உருவான சக்தியைக் காக்கவும் உருவான சக்தியை அனுபவிப்பதையும் விடுத்துவிட்டு
1.உருவாக்கும் மூல சக்தியை எடுத்து
2.நமக்குள் இருக்கும் உயிரன மூல சக்திக்குள் அதைக் கூட்டிக் கொண்டு
3.படைப்பின் படைப்பைப் படைக்கப்பட்டவனின் படைப்பாக்க வேண்டும்.
4.படைத்ததின் பொருளும் அதுவே…! மீண்டும் மீண்டும் படைக்கப்படுவதின் பொருளும் அதுவே.

சூனியமான நிலையில் உருவான நிலைகள் மீண்டும் சூனியமாகாமல்
பரம்பொருளாக…
நிலைத்த பொருளாக…
ஜீவிக்கும் பொருளாக
ஜீவனூட்டும் பொருளாக வளர்ச்சிக்கு வருதல் வேண்டும்.

மனம் அலை பாய்வதிலிருந்தும் மனச் சஞ்சலத்திலிருந்தும் எப்படி விடுபடுவது…? நல்ல காரியங்களை நாம் நம்பிக்கையுடன் எப்படிச் செய்து முடிப்பது…?

third eye meditation

மனம் அலை பாய்வதிலிருந்தும் மனச் சஞ்சலத்திலிருந்தும் எப்படி விடுபடுவது…? நல்ல காரியங்களை நாம் நம்பிக்கையுடன் எப்படிச் செய்து முடிப்பது…?

 

கேள்வி:-
மனம் ஏதாவது ஒரு வகையில் அலை பாய வைத்துத் தியானம் செய்ய முடியாது வைத்து விடுகிறது. நினைவு மட்டும் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குகிறது. ஆனால் பிடி கிடைக்காமல் நிறையத் தவிக்கிறேன். என்ன செய்ய வேண்டும் ஐயா…? ஒரு சில காரணத்தால் சஞ்சலத்தில் மனம் உள்ளது…!

பதில்:-
சூடாக இருக்கும் காபியையோ டீயையோ அப்படியே குடிக்க முடியாது. ஆற வைத்த பின் தான் குடிக்க முடியும். அப்படியே குடித்தால் வாய் தான் வெந்து போகும். அது போல் தான் உங்கள் கேள்வியே உள்ளது.

எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும் அதை நேரடியாக நாம் அணுகினால் அதனுடைய பாதிப்பை நம் உயிர் உடனடியாக உணர்த்திக் காட்டும்.
1.அது வெறும் உணர்ச்சி தான்.
2.நிஜம் இல்லை.

ஏனென்றால் நம் உயிர் நுகர்ந்தத்தைத்தான் இயக்கும். உயிரிலே படவில்லை என்றால் எதுவுமே இயக்காது… எந்த ஒரு உணர்ச்சியும் வராது…!

உதாரணமாக நீங்கள் போட்ட காபியில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டு விட்டால் அப்படியே சாப்பிடுவீர்களா…? இல்லையே…!

அடடா… தெரியாமல் போட்டு விட்டேன் போல் தெரிகிறது… என்று சொல்லி விட்டு அதைக் கீழே ஊற்றி விட்டு மீண்டும் சரியானபடி சர்க்கரையைப் போட்டு நல்லதைத் தான் நீங்கள் குடிப்பீர்கள்.

நீங்கள் மட்டுமல்ல… யாராக இருந்தாலும் அதைத்தான் செய்வோம். சரியில்லை என்றால் சரியானது வேண்டும்… என்று தான் விரும்புவோமே தவிர பரவாயில்லை..! இன்று ஒரு நாள் சர்க்கரைக்குப் பதிலாக உப்புப் போட்ட காபியைக் குடிப்போம் என்று யாரும் குடிக்க மாட்டோம்.

ஆக மொத்தம் இந்த வாழ்க்கையில் எது வந்தாலும் நாம் எண்ண வேண்டியது
1.எனக்கு நல்லது வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும்
3.எனக்கு நல்லதாக ஆக வேண்டும் என்ற நிலையில்
4.பிடிவாதமாக… நல்லது வேண்டும்…! நல்லது வேண்டும்…! நல்லது வேண்டும்..! நல்லது வேண்டும்…! என்று
5.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்
6.மேலும் நல்லது நடக்கும் வரை… “உன்னை விடவே மாட்டேன்..! என்று உயிரிடம் நினைவைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் (இது தான் நீங்கள் பிடிக்க வேண்டிய “பிடி…!”)
7.இமயமலையில் செய்யும் தவம் என்பது இது தான் அதாவது இமைகளுக்கு மத்தியில் ஒற்றைக் காலில் நின்று நல்லதுக்காகச் செய்யும் தவம்…!

இதற்குப் பிறகு நினைவை விண்ணிலே செலுத்தி எனக்கு வந்த இதே சிக்கல் ஒரு மெய் ஞானிக்கு வந்தால்
1.அவர் எப்படி இதிலிருந்து விடுபடுவாரோ…?
2.இதை நல்லதாக எப்படி மாற்றுவாரோ
3.அவர்களைப் போல் நானும் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்.

பின் நம்மை இயக்கும் உயிரான ஈசனிடம் சொல்லி விட்டோம்… நமக்கு வழிகாட்டும் மகரிஷிகளிடமும் சொல்லி விட்டோம்… இந்தப் பிரச்சனை நம் பிரச்சனை இல்லை. நம் பிரச்சனை இனி அவர்கள் பிரச்சனை ஆகி விட்டது.

நல்லதாக வேண்டும் என்று வலிமையாக இரண்டு பேரிடமும் சொல்லி விட்டோம். இனி நாம் “அடுத்த வேலையைப் பார்ப்போம்…!” என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாலே போதும்.

சிறிது நேரத்தில் நீங்கள் எண்ணிய எண்ணங்களுக்கொப்ப உங்களுக்கு ஏற்றுக் கொள்ளும் நல்ல பதிலாக மிகத் தெளிவாகக் கிடைக்கும்.
1.சிக்கலை ஏற்படுத்தியவர்கள் விலகிச் செல்வார்கள்.
2.அல்லது நீங்கள் பயந்தது போல் அந்தக் கெட்டது நடக்காது. மாறாக எதிர்பாராதபடி நல்லதாகும்
3.அல்லது அந்தச் சிக்கலுக்கு என்ன செய்ய வேண்டும்..? யாரை அணுக வேண்டும்..? இன்னாரிடம் நேரடியாக நாம் பேசுவோம் அப்பொழுது கண்டிப்பாக நல்லதாகும்…!
4.இப்படி அடுக்கடுக்காக உங்களுக்குள் புதுப் புது நல்ல உணர்வுகளாக உற்சாகம் ஊட்டும் நிலைகளாக எண்ணங்கள் தோன்றும்
5.அதன் படி (முதலில் சொன்னபடி) உயிரிடமும் மகரிஷிகளிடமும் சொல்லி இந்த மாதிரிச் செய்யப் போகின்றேன்.. எனக்கு நல்லதாக வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எண்ணத்தைச் செலுத்தினீர்கள் என்றால்
6.மனம் அலை பாயாது… தியானம் வலுவாகும்… நல்லதைச் செய்ய ஆற்றலும் சக்தியும் அதிகமாகும்…!
7.சஞ்சலத்திற்குப் பதில் இப்படித்தான் செய்ய வேண்டும்… இது கண்டிப்பாக நல்லதாகும்…! என்று ஒரு புயல் போல் அந்த எண்ணம் உறுதியாகும்.
8.நன்மைகள் செய்யத் துணிவு தன்னாலே உங்களுக்கு வரும்.
9.நல்லது உங்களைத் தேடி வரும்… நீங்கள் தேட வேண்டியதில்லை…!

என்னுடைய அனுபவம் இது தான்…!

குழந்தைகள் அங்ககீனமாகவும் அறிவு வளர்ச்சி குறைவாகவும் பிறக்கக் காரணம் என்ன…?

child-in-mothers-womb

குழந்தைகள் அங்ககீனமாகவும் அறிவு வளர்ச்சி குறைவாகவும் பிறக்கக் காரணம் என்ன…? 

கேள்வி:-
ஆக்சிஜன் என்றால் என்ன…?

Recently in one meeting, it was mentioned that during birth when the baby is born if there is lack of oxygen in brain, those cells are destroyed and the impact will be in body conditions,speech, involuntary movements of body parts etc and the baby becomes disabled. Some child will be born like all other children, but their disability (not visible during birth) will be grown when they grow up and the kid become abnormal later.

எல்லோரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க எல்லா செயல்களும் செய்வார்கள். குழந்தை பிறக்கும் தருணம் எப்படிச் சூழ்நிலையை மாற்றி disabled குழந்தையாகப் பிறக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது.

அந்த பத்து மாதமும் சேர்த்து வைத்த வலிமையும் நல்ல எண்ணங்களும் எப்படி மாற்றத்திற்கு காரணமாக அமைந்து நல்ல குழந்தையாக பிறக்கச் செய்யவில்லை. In medical terms… Lack of oxygen எப்படி இங்கு காரணமாகிறது…?

பதில்:-
விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுணர்ந்த கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் பல பல பெயர்களை வைத்துள்ளார்கள். அதிலே ஒன்று தான் ஆக்சிசன் என்பது.

அன்று வாழ்ந்த மெய் ஞானிகளும் தாங்கள் உணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை மற்றவர்களுக்கு அறியச் செய்ய அதற்குரிய காரண காரியப் பெயர்களை வைத்துள்ளார்கள்.

விஞ்ஞானிகள் ஆக்சிஜன் என்று சொல்வதை அவர்கள் பிராணவாயு என்று சொல்கிறார்கள். இரண்டும் ஒன்றாகத் தெரிந்தாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உண்டு.

1.விஞ்ஞானிகள் சொல்வது அந்த வாயுவின் இயக்கங்களை.
2.ஆனால் மெய் ஞானிகள் சொல்வது ஜீவன் பெறச் செய்யும் சக்தியை
3.அதாவது உயிரோட்டம் உள்ளதாக இயக்கும் சக்தியைப் “பிராண வாயு” என்று சொல்கிறார்கள்.

ஆக்சிஜன் என்று சொல்லும் வாயுவை விஞ்ஞானபூர்வமாக ஆய்வுக் கூடத்தில் உருவாக்கி அதைப் பல செயல்களுக்கும் உபயோகப்படுத்துகின்றார்கள்.

ஆனால் ஞானிகள் சொல்லும் பிராணவாயுவைச் செயற்கையாக யாராலும் வெளியிலே உருவாக்க முடியாது. அது இயற்கை.

அதாவது நட்சத்திரங்கள் கோள்கள் சூரியன் இவைகளிடமிருந்து வெளிப்படும் அலைகள் கலந்து கல் மண் தாவர இனங்கள் என்று எல்லாவற்றிலும் கலவையாகி உருவாகி
1.அதிலிருந்து வெளிப்படும் அலைகளை அல்லது மணங்களை
2.உயிரணுக்கள் சுவாசித்து உடலுடன் கூடிய உயிரினங்களாக
3.ஒரு ஜீவன் கொடுக்கும் பிராணன் கொடுக்கும் சக்தியாக வருகின்றது.
4.இதை விஞ்ஞானத்தால் கண்டு கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல…!

ஏனென்றால் பொருளின் அடிப்படையில் பார்க்கும் விஞ்ஞானத்திற்கும் பொருளை உருவாக்கும் சக்திகள் என்ற அடிப்படையில் மூல சக்தியாக இருக்கும் அந்தச் சூட்சமத்தைப் பார்க்கும் மெய் ஞானத்திற்கும் இது தான் வித்தியாசம்.

இரண்டாவது விஞ்ஞானம் என்பது பகுத்துப் பகுத்து அறியும் தன்மை பெற்றது. கணக்கீடுகளின் அடிப்படையில் தான் ஒன்றை ஏற்றுக் கொள்வார்கள். (STATISTICAL ANALYSIS BY MULTIPLE DIMENIONS)

எத்தனை முறை நடந்தது…. அதில் நல்லது எத்தனை..? கெட்டது எத்தனை…? இதை வைத்துத்தான் ஆராய்ச்சியையும் அதன் முடிவையும் கொண்டு வருவார்கள்.

அந்த அடிப்படையில் அவர்கள் சொல்லும் கருத்து தான் அதாவது அந்தக் கணக்கீடு தான்
1.மூளைக்குள் ஆக்சிஜன் போகவில்லை என்றால் குழந்தைக்கு அறிவாற்றல் இருக்காது.
2.மற்ற உறுப்புகளும் செயல் இழந்துவிடும் என்பது.
3.இருந்தாலும் மூளைக்கு ஏன் ஆக்சிஜன் போகவில்லை என்றால் அது ஏன் என்று சொல்லத் தெரியாது.

ஆனால் கர்ப்பமாக இருக்கும் அந்தத் தாய் தன்னுடைய சுவாசத்தில் எதை நுகர்ந்ததோ அதனின் இயக்கமாகத்தான்
1.தாய்க்கும் குழந்தைக்கும் இணைக்கப்படும் அதனின் தொடரில் தான்
2.அந்த சிருஷ்டி அதாவது அந்த ஜீவன் உருவாகிறது.

இன்றிருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தாயின் சுவாச நிலையைப் பாதிக்கும் எத்தனையோ உணர்வலைகளின் இயக்கம் உண்டு, பத்திரிக்கைகளிலோ டி.வி.யிலோ ஃபோன் மூலமாகவோ பக்கத்து வீட்டில் நடந்த சண்டையினாலோ இதைப் போன்ற எண்ணிலடங்காத அதிர்வுகள் ஏற்படுத்தும் எத்தனையோ நிலைகளைத் தாய் கேட்க நேர்கின்றது அல்லது பார்க்க நேர்கின்றது.

அதில் ஏதாவது ஒன்று மாறினாலும்
1.துடிப்பின் இயக்கங்கள் மாற்றப்பட்டு
2.அதனின் அழுத்தமான அதிர்வு அப்படியே குழந்தைக்கு இணைக்கப்படும் பொழுது
3.விஞ்ஞானிகள் சொல்லும் அந்த மூளைக்குச் செல்ல வேண்டிய சக்தியை அது தடைப்படுத்திவிடும். (LACK OF OXYGEN)

உதாரணமாக சில பறவைகள் அது இட்ட முட்டைகளை நாம் கையால் தொட்டுவிட்டாலே அந்தத் தாய்ப் பறவை அந்த முட்டைகளை அடை காக்காது. தள்ளி விட்டுவிடும். குஞ்சாகப் பொரிக்காது.

ஏனென்றால் மற்ற உயிரினங்களின் உணர்வுகள் அந்த முட்டையில் இணைந்தால் தன் இனம் சரியாக உருவாகாது என்று அதற்குத் தெரியும். இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். ஞானிகள் கண்ட பேருண்மைகள்.

(அதைப் போல் தான்) கர்ப்பமாக இருக்கும் தாய் சந்தர்ப்பவசத்தால் சுவாசிக்கும் உணர்வுகள் தான் மாறுபாடான (நல்லதோ கெட்டதோ) குழந்தைகள் உருவாகக் காரணமே தவிர ஆக்சிஜனோ அதுவோ இதுவோ என்று தேட வேண்டியதில்லை.

இயற்கையிலிருந்து இன்றைய சமுதாய வாழ்க்கை (ARTIFICIAL LIFE) மிகவும் விலகிச் சென்று கொண்டுள்ளது. அதற்குத்தகுந்த புதிய புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

எலெக்ட்ரானிக் சாதங்களுக்கு எப்படி GUARANTEE கிடையாது என்று சொல்கிறார்களோ அது போல் மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் GUARANTEE கிடையாது என்பார்கள்.

ஆனால் அகஸ்தியன் கண்ட மெய் உணர்வை எப்பொழுது சுவாசிக்கின்றார்களோ அப்பொழுது தான் மெய்யை உணர்வார்கள். மெய்யை உணர்த்தவும் செய்வார்கள். அந்தக் காலம் வரும் பொழுது நாம் இருப்போமா…! அல்லது அவர்கள் இருப்பார்களா…? என்று சொல்ல முடியாது.

எது எப்படி இருந்தாலும் நம்முடைய சுவாச நிலையைச் சீராக வைத்திருந்தால் தான் இன்றைய செயற்கையின் தாக்கத்திலிருந்து யாருமே விடுபட முடியும்.

அதிலிருந்தெல்லாம் தப்புவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும் என்று சொல்வது.

ஒரு வீட்டில் கர்ப்பம் என்று தெரிந்தாலே குடும்பமே தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். அப்படி ஒவ்வொரு குடும்பமும் மாறினால் இனி வரும் சமுதாயத்தை நிச்சயமாக மாற்றலாம்.

இந்த உலகைக் காக்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்லும் மெய் வழி இது தான்…!