“ஈஸ்வரபட்டர் சொன்னது…” என்று இங்கே பதிவாக்கும் கருத்துக்களைப் பற்றிய உண்மைகள்

Sages network connection.jpg

“ஈஸ்வரபட்டர் சொன்னது…” என்று இங்கே பதிவாக்கும் கருத்துக்களைப் பற்றிய உண்மைகள்

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (ஈஸ்வரபட்டர்) சொன்னது…!” என்று அவருடைய கருத்துக்களை இங்கே தொடர்ந்து பதிவு செய்து கொண்டு வருகின்றோம்.

இதைப் படிக்கும் அனைவருக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியதுள்ளது.

1.சிலர் தமிழில் புரியும்படியாக எளிய நடையில் பதிவு செய்யுங்கள் என்று அடிக்கடி கேட்கிறார்கள்.
2.அதே சமயத்தில் எந்தப் புத்தகத்திலிருந்து இதைப் பதிவு செய்கிறீர்கள் என்றும் கேட்கின்றார்கள்.

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அவரால் வெளிப்படுத்தப்பட்டது தான். 1977லிருந்து 1985 வரையிலும் ஈஸ்வரபட்டரால் தியானத்தின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தான் இவை எல்லாம்.

கருத்துக்கள் கடினமாக உள்ளதே…! என்று அவரிடம் கேட்ட வினாவிற்கு
1.மெய் உணர்வுகளையும் சித்தர்கள் மகரிஷிகள் கண்ட இரகசியங்களை அப்படித்தான் கொடுப்போம்.
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி தியானத்தின் மூலம் என்னிடம் (ஈஸ்வரபட்டரிடம்) நினைவைச் செலுத்தினால்
3.எந்தக் கேள்வியாக இருந்தாலும் தக்க விடை கொடுக்கப்படும்..
4.நானே வந்து உணர்த்துவேன்…! என்று அவரே சொல்லியுள்ளார் (1985 ஆம் ஆண்டு)

ஆகவே புரியவில்லை… தமிழாக இல்லை… சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளது… என்று யாரும் குழம்ப வேண்டியதில்லை. தெரிய வேண்டும்… புரிய வேண்டும்… உணர வேண்டும்.. என்ற எண்ணம் வலுவாக இருந்தால் நிச்சயம் ஈஸ்வரபட்டருடைய தொடர்பு கிடைக்கும்.

அவருடைய நேரடித் தொடர்பு கிடைத்தால் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களையும் உணரலாம்.

ஆகவே அவருடைய கருத்துக்களை இங்கே பதிவு செய்வதன் நோக்கமே இதைப் படிப்போர் அனைவருக்கும்
1.ஈஸ்வரபட்டரின் தொடர்பு கிடைக்க வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் தொடர்பு கிடைக்க வேண்டும்
3.அவர்களுடன் ஒவ்வொருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பது தான்.
4.இந்தக் கருத்தும் அவர்கள் சொன்னது தான் (நான் சொல்லவில்லை)

அவர்களுடைய தொடர்பு வேண்டும் என்பவர்களுக்கு இதனுடைய உட்பொருளை நிச்சயம் உணர முடியும். படித்து அறிய வேண்டிய விஷயம் அல்ல. சுவாசித்து அறிய வேண்டிய விஷயம்.

அதாவது வாசித்து அல்ல… சுவாசித்து…!

பதிவு செய்யப்படும் ஈஸ்வரபட்டரின் கருத்துக்களை நான்கு அல்லது ஐந்து முறை வாசித்து அதன் பின் பதிவாக்கி அதன் பின் சுவாசித்து அதன் பின் தியானித்தால் “கடும் தவமிருந்தாலும் உணர முடியாத விஷயங்களை இங்கே காணவும் உணரவும் முடியும்…!”

என்னுடைய அனுபவம் இது தான்…!

ககனமணி என்றால் என்ன…? அதனின் முக்கியத்துவம் என்ன…?

Astral path and way kakana mani

ககனமணி என்றால் என்ன…? அதனின் முக்கியத்துவம் என்ன…?

கேள்வி:-
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…! என்று ஈஸ்வரபட்டர் சொல்கிறார். ககனமணிக்கு விளக்கம் தேவை.

பதில்:-
நம் குருநாதருக்கு ரசமணிச் சித்தர் என்ற பெயர் உண்டு. அவர் நம் சாமிகளை (ஞானகுரு) ஆரம்பத்தில் சந்திக்கும் பொழுது வெள்ளி உருண்டைகளைக் கொடுத்து “உன் வீட்டில் வைத்துக் கொள்…!” என்று சொல்கிறார்.

ஆனால் சாமிகள் ஈஸ்வரபட்டரின் பைத்தியம் போன்ற தோற்றத்தைக் கண்டு அதை வாங்க மறுத்து விட்டதாகச் சொல்வார்.

வெள்ளி உருண்டை என்பது பாதரசத்தில் பல சாரணைகளை ஏற்றப்பட்டது தான் அது. அன்றைய சித்தர்கள் பலதரப்பட்ட ஔஷதங்களைச் செய்தார்கள். அதிலே அவர்கள் அதிகம் உபயோகப்படுத்திய பொருள் தான் இந்தப் பாதரசம்.

சூரியன் நட்சத்திரங்கள் கோள்கள் சத்தை எல்லாம் எடுத்து அதிலுள்ள நஞ்சைப் பிரித்துப் பாதரசமாகத்தான் மாற்றிக் கொண்டேயுள்ளது. நாம் வெயிலாகப் பார்ப்பது அனைத்துமே அது தான்.

சூரியன் எப்படித் தான் பேரொளியாக ஆகி இந்தப் பிரபஞ்சத்தையும் ஒளிமயமாக மாற்றுகின்றதோ அது போல் நம் உயிருக்கும் அந்த ஆற்றல் உண்டு.

சூரியனைப் போல் நாமும் நம் மீது மோதும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறும் பொழுது பேரொளியாக ரசமணியாக நம் உயிர் மாறுகின்றது. அப்படி ஆன நிலையைக் குறிப்பதற்குத்தான் குருநாதரை ரசமணி சித்தர் என்று அழைத்தார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றினாலும் “விண் செல்லும் ஆற்றல் தேவை…!”

1.எத்தனையோ ஞானிகளும் தவசிகளும் ஒளியாக ஆகி
2.இந்தப் பூமிக்குள்… தன் உடலுக்குள்… (இறக்காமல்)
3.“சிறைக்குள் அடைப்பட்ட மாதிரி இருக்கின்றார்கள்…!” என்று
4.ஈஸ்வரபட்டர் நம் சாமிகளை கேதார்நாத் பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்லச் செய்து நேரடியாக அவர்களைக் காட்டுகின்றார்.

அதாவது கேதார்நாத்தில் ஓ…ம் நமச்சிவாய…! என்றும் பத்ரிநாத்தில் ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்றும் பனிப்பாறைகளுக்குள் அங்கே சொல்லிக் கொண்டே உள்ளார்கள்.
1.ஆனால் ஒளியான உயிராத்மாக்களை விண்ணுக்கு உந்தித் தள்ளவோ
2.அல்லது தன்னிச்சையாக விண் செல்லவோ அவர்களால் முடியவில்லை என்று காட்டுகின்றார்.

உயிரை ரசமணியாக மாற்றினாலும் விண் செல்லும் நிலையைத்தான் ஈஸ்வரபட்டர் அங்கே ககனமணி என்று காட்டுகிறார். அகஸ்தியன் தன்னிச்சையாக விண் சென்றவன். துருவ் நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அகஸ்தியன் உணர்வைச் சீராகப் பின்பற்றியவர்கள் விண் சென்ற அவனுடைய ஆற்றலை எடுத்து அவனைப் போலவே விண்ணுலகில் சஞ்சரித்து ஏகாந்த நிலை கொண்டு அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

இந்த உடலை விட்டு எந்த நேரம் அகன்றாலும்
1.நம் உயிராத்மா விண்ணுலகம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற பற்று இருந்தால்
3.நாம் அந்தக் ககனமணியைப் பயன்படுத்தியவர்கள் ஆகின்றோம்.
(ஏனென்றால் பலருக்கு இந்த உடல் பற்றும் உலகப் பற்றும் உள்ளது. அந்தப் பற்று இருந்தால் நாம் விண் செல்லவே முடியாது)

நம் உயிர் விண்ணிலிருந்து தான் பூமிக்குள் விஜயம் செய்தது. அது தான் விஜய தசமி. பல கோடிச் சரீரங்கள் பெற்று வளர்ச்சியில் மனிதனாகின்றது. மனிதனான பின் அடுத்த வளர்ச்சியாக எந்த விண்ணிலிருந்து தோன்றியதோ அந்த விண்ணிலே ஒளியாகச் சென்று நட்சத்திரமாக மண்டலப் படைப்பாக ஆகும் நிலையே ககனமணி.

அகண்ட அண்டத்திலே எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொள்வது என்பதும் அதுவே…!”

தாயற்ற குழந்தையைத் தாயாகத் தான் வளர்க்க அந்தத் தாய்க்குகந்த சக்தி தான் “தரணியின் இயக்கம்…!” – அதிலே முதிர்ச்சி பெற்றவர்கள் தான் சப்தரிஷிகள்

RISHI PATHNI

தாயற்ற குழந்தையைத் தாயாகத் தான் வளர்க்க அந்தத் தாய்க்குகந்த சக்தி தான் “தரணியின் இயக்கம்…!” – அதிலே முதிர்ச்சி பெற்றவர்கள் தான் சப்தரிஷிகள்

 

கேள்வி:-
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தாய் சக்தி… ரிஷிபத்தினி சக்தி.. இரண்டையும் பெற்று மகரிஷி என்ற நிலையை அடைய முடியும் என்கிறார். அந்தச் சக்திகளை நம்முள் எப்படி வளர்ப்பது என்பது குறித்து விளக்கம் வேண்டும்.

பதில்:-
1. தாயின் சக்தி:
ஒரு தாய் தன் வாழ்க்கையில் எத்தனையோ ஆசைகள் வைத்திருந்தாலும் தனக்குள் பல கனவுகள் இருந்தாலும் “தன் குழந்தைகள்…!” என்று வரும் பொழுது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அந்தப் பாசமே தனி.
1.அதை யாராலும் ஈடு செய்ய முடியாது.
2.சாதாரணமாக அந்தப் பாசத்தை மாற்றவும் முடியாது.

அதிலேயும் குறிப்பாகத் தனக்கு ஒன்றுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் அதிலே எந்தக் குழந்தை சிரமப்படுகின்றதோ அதன் மீது தாய்க்கு அதிகப் பாசம் வரும். (அந்தக் குழந்தை தவறான வழியில் சென்றாலும் கூட)

ஏனென்றால் நன்றாக இருக்கும் குழந்தைகள் எப்படியோ பிழைத்துக் கொள்வார்கள். ஆனால் தவறான வழியில் செல்லும் குழந்தை “கடைசியில் சிரமப்படுமே…!” என்று அந்தத் தாயின் பாச உணர்வு அதிகமாக வேதனைப்படும்.

தாய்ப் பாச உணர்வின் இயக்கமே இப்படித்தான் இருக்கும்…! மனிதனுக்கு மட்டுமல்ல. இயற்கையும் அப்படித்தான்…!

இப்படிப்பட்ட தாயின் பாச உணர்வை யாரெல்லாம் புரிந்து கொண்டு
1.தாயையும் காத்து (எந்தச் சூழ்நிலையிலும்)
2.தவறின் பாதையில் செல்லும் அந்தக் குழந்தைக்கும் நல் வழி காட்டிட உறுதுணையாகத் தாயுடன் இணைந்து செயல்படுகின்றார்களோ
3.அவர்களுக்கெல்லாம் தாய் சக்தி அபரிதமாகக் கிடைக்கும்.

ஏனென்றால் ஒரு தாயற்ற குழந்தைக்குத் தாயாக இருந்து வளர்க்கும் பாசத்தின் செயலே “இந்தத் தரணியின் இயக்கம்…!”

அந்தத் தரணியின் இயக்கத்தைப் போல் நம்மைப் பெற்று… தன் இரத்தத்தையே பாலாகக் கொடுத்து வளர்த்து… ஆளாக்கி… மெய் ஞானப் பாதையைப் பெறும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுத்த
1.அந்தத் தாய் தெய்வத்தை உள்ளபூர்வமாக நாம் நேசித்து
2.அவர்கள் உயிரான்மா உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும்
3.அவர்கள் என்றுமே எங்களுக்கு நல்லாசி வழங்கிட வேண்டும் என்றும்
4.ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்திக் கொண்டு வந்தால் தாய் சக்தியை நாம் முழுமையாகப் பெற முடியும். (தாய் உடலுடன் இருந்தாலும் சரி… உடலுடன் இல்லை… என்றாலும் பெறலாம்)

2. ரிஷிபத்தினியின் சக்தி:
எங்கேயோ பிறந்து வளர்ந்து வந்திருந்தாலும் திருமணம் என்ற பந்தத்திற்குப் பின் கணவன் மனைவியாக ஆன நிலையில்
1.மனைவியின் உணர்வைத் தனக்குள் இணைத்துக் கொண்டு
2.தன் மனைவியை உயர்த்தும் பேரன்பு கொண்டு கணவன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டால் “பத்தினி…” என்ற நிலைக்கு வரும்.

தாய்க்கு எப்படித் “தன் குழந்தை…” என்று ஒரு பாசம் இருக்கிறதோ அதே போல் மனைவிக்குக் கணவன் மீது ஒரு தனிப் பாசம் இருக்கும். அந்தப் பாசத்தை அன்பாக… பேரன்பாக… கணவன் பக்குவப்படுத்தினால் மனைவியின் சுவாசம் என்றுமே கணவனுக்கு உறுதுணையாக இருக்கும்.

1.கணவன் மனைவி மீது செலுத்தும் அந்தப் பேரன்பும்
2.அதன் மூலம் இணைந்த நிலையில் வரும் மனைவியின் சுவாசமும்
3.இருவர் உடலுக்குள்ளும் கருவாக உருவாகும் பொழுது
4.இரு உணர்வும் ஒன்றாகும்… இரு மனமும் ஒரு மனமாகும்… இரு உயிரும் ஒன்றாகும்…!
5.அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து புறத்திலே குழந்தையை உருவாக்குவது போல்
6.இரண்டு உயிரும் ஒன்றாகக் கருவாகும்… பேரொளியாக மாறும்… மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாகும்…!
7.அது தான் சிவசக்தியின் சொரூபம் என்று சொல்வது…! ரிஷிபத்தினி என்பது இது தான்…!

சப்தரிஷிகளாக இருப்பவர்கள் அனைவருமே இந்த நிலையில் தான் உள்ளார்கள்.

வாழ்க்கையில் நான் எதைச் செய்தாலும் தோல்வியாகவே ஆகிறது என்று வேதனைப்படுபவர்களுக்கு…!

practice makes perfect

வாழ்க்கையில் நான் எதைச் செய்தாலும் தோல்வியாகவே ஆகிறது என்று வேதனைப்படுபவர்களுக்கு…!

கேள்வி:-
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியே…! நான் என்ன செய்வது…? நான் என்ன செய்ய வேண்டும்.?

என்னை நான் முழுமையாக நம்புகிறேன். என்றாவது ஒருநாள் எனக்கு வழி பிறக்காதா என்ற நிலையில் இருக்கிறேன். தியானத்தால் உயர்வுக்கு வர உதவுங்கள். தியானத்தில் முழுமையான ஈடுபாடு வேண்டும்…! அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

பதில்:-
சிரமமே படாது எந்தக் காரியமும் செய்ய முடியாது. சிரமப்பட்டுச் சாதித்தால் அதை என்றுமே மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம். வாழ்வாங்கு வாழலாம்.

சிரமமில்லாது கிடைக்கும் எந்தச் சுகமும் சந்தோஷமும் நீடித்து இருப்பதில்லை. இதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பிறந்த குழந்தை தவழ ஆரம்பித்து எழுந்து நடக்க வேண்டும் என்ற நிலையில்
1.பல தடவை கீழே விழுந்து
2,அடி பட்ட பின் தான் சீராக அது நடக்கின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு முறை அடிபடும் பொழுதும் அதற்கு வேதனை வருகிறது. அந்த வேதனையை அனுபவித்து இப்படிச் செய்ததால் தான் இப்படி அடி பட்டது என்று அந்த ஞானங்கள் வளர்ந்து வளர்ந்து தான் அது நடக்கின்றது.

கீழே விழுகாமலேயே அந்தக் குழந்தை நடக்க முடியுமா என்றால் அது வராது. இது எல்லாம் இயற்கையின் நியதி.
1.சத்ரு மித்ரு, நன்மை தீமை, +ve –ve (positive negative) என்று
2.நம் உயிரே இப்படிப்பட்ட மாறுபட்ட இயக்கத்தினால் தான் இயங்கிக் கொண்டே உள்ளது.
3.இயக்கம் தொடர்ந்து நடை பெற வேண்டும் என்றால் மோதல் அவசியம்.
4.மோதல் நடக்க வேண்டும் என்றால் எதிர் நிலை இருக்க வேண்டும்.
5.வெற்றி வேண்டும் என்றால் அங்கே தோல்வி இருக்க வேண்டும்.
6.தோல்வி அடைந்தால் தான் வெற்றிக்கு அது வித்தாகவே மாறும். (இது மிகவும் முக்கியம்)

இன்று ஞானிகளாக இருப்பவர்கள் அனைவருமே பல கோடி இன்னல்களைப் பட்டு அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற விடா முயற்சி செய்து (அது தான் கடும் தவம் என்பது – காட்டுக்குள் கண்ணை மூடி உட்கார்ந்து அல்ல)
1.இன்னல்களைக் கண்டு சோர்வடையாமல்
2.வீரிய உணர்வு கொண்டு வீரத்தைச் சாந்தமாக்கி
3.அதன் மூலம் அவர்கள் புலனறிவை எட்டாத விண்ணிலே செலுத்தி
4.எந்தச் சக்தி உயிரின் இயக்கத்திற்குக் காரணமாக இருந்ததோ அந்த ஆற்றலை நுகர்ந்து
5.அந்த உயிர்ச் சக்தியை வளர்த்து தன் சுவாச நிலையைச் சீராக்கி மெய்யை உணர்ந்தார்கள்.

மெய்யை உணர்ந்து எது நிலையானது என்று அறிந்த பின் இந்த உடலை வைத்து உயிரான்மாவை ஒளியாக மாற்றி “சட்டையைக் கழற்றுவது போல் உடலைக் கழித்து விட்டு…!” உயிருடன் ஒன்றி ஒளியாக நட்சத்திரமாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

எடுக்கும் முயற்சி எல்லாம் தோல்வியே என்பது தான் நீங்கள் கேட்ட கேள்வி. அதில் அழுத்தத்தை எங்கே கொடுக்கின்றீர்கள்…? தோல்விக்குத் தான் கொடுக்கின்றீர்கள்.

இதிலே அழுத்தம் என்பது என்ன…?

உங்கள் உயிர் நெருப்பு. நெருப்பிலே எதைப் போடுகின்றோமோ அதை வேக வைக்கும் அந்த மணத்தை வெளிப்படுத்தும். யார் சுவாசித்தாலும் அந்த மணம் தான் வரும்.

உங்கள் உயிர் என்ற நெருப்பைப் பயன்படுத்தித் தோல்வியாக்கும் உணர்வையே மீண்டும் மீண்டும் சமைக்கின்றீர்கள். அதனால் தான் திரும்பத் திரும்ப அந்த மணம் வருகிறது. உங்களைத் தோல்விக்கு அழைத்துச் செல்கிறது. நான் என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் தோல்வி தான் வரும் என்று உங்களைச் சொல்லச் சொல்கிறது.

ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தோல்வி அடைந்ததைப் பார்த்ததனால் தானே அப்படிச் சொல்கிறேன். எனக்கு மட்டும் நல்லது ஆக வேண்டும் என்ற ஆசை இல்லையா…! என்பீர்கள்.

1.ஆசை என்பது வேறு அழுத்தம் என்பது வேறு.
2.ஆசையை நல்லதுக்கும் அழுத்தத்தைத் தோல்விக்கும் கொடுத்தால் நல்லது நடக்காது.
3.அது மட்டுமல்ல. நல்லது நம் கண்ணுக்குப் படவே படாது.
4.நல்லது கண்ணுக்குப் படாததனால் தான் தோல்வி தோல்வி தோல்வி தோல்வி என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள்…!

நம்முடைய ஆசை நல்லதைப் பெற முயற்சி செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும். இது மட்டும் நல்லபடியாக நடந்து விட்டால் என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும்…! என்று கனவு காணுவதாக இருக்கவே கூடாது.

ஏனென்றால் மனித வாழ்க்கையில் ஒன்று கிடைத்தவுடன் என்ன செய்வோம்..? கிடைக்காத அடுத்த விஷயத்தை எண்ணி ஏங்கிக் கொண்டிருப்போம்.
1.இது கிடைத்து விட்டது
2.அது கிடைத்தால் இன்னும் கொஞம் நன்றாக இருக்கும்…! என்று இப்படியே போய்க் கொண்டிருப்போம்.
3.கிடைத்ததை வைத்து நன்றாக இருப்போம் என்ற நிறைவு வருவதே இல்லை…!

குடிசை வீட்டில் வயலில் வேலை பார்த்து விட்டு பசியுடன் வந்து கிடைத்தைதைச் சாப்பிடுபவனிடம் இருக்கும் மகிழ்ச்சி இந்த நாட்டையே ஆள்பவனுக்கோ… உலகிலேயே அதிகமான பணம் வைத்திருப்பவன் என்று சொல்பவனுக்கோ… இருப்பதில்லை… இல்லை…! இது தான் உண்மை…!

ஏனென்றால் நாட்டை ஆள்பவனுக்கு தன் பதவியைக் காக்க வேண்டும் என்ற வேதனை. பணம் வைத்திருப்பவனுக்கோ இதை விட்டு விட்டால் வேறு எவனாவது நம்மை முந்திச் சென்றுவிடுவானே என்ற வேதனை.

அவர்கள் ஆசை எல்லாம் எப்படி இருக்க வேண்டும்…!

நம்மைக் காட்டிலும் ஒருவன் இந்த நாட்டை நல்லபடியாக ஆள்வான் ஆள வேண்டும் என்றும்… இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நம்மைக் காட்டிலும் செல்வந்தர்களாக வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
1.இப்படி இருந்தால் மகிழ்ச்சி தன்னாலே வரும்.
2.படுத்தால் உடனே தூக்கமும் வரும்.
(“இதைத்தான் அழுத்தம் என்று சொல்கிறேன்…!)

ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே இந்த அழுத்தத்தை வளர்த்துக் கொண்டவர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் மற்றவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் தான் பெற்ற அனைத்து ஆற்றல்களும் சாதாரண மனிதனும் பெறவேண்டும் என்ற அழுத்தத்தை வளர்த்துக் கொண்டவர்கள் (ஆசையை அல்ல…!)

அந்த ஞானிகளின் உணர்வுகளை… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை… நாம் உயிர் வழியாக இழுத்துச் சுவாசிக்க வேண்டும். அது தான் அழுத்தம். நம்முடைய முயற்சி அதைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்.

உங்கள் கேள்விப்படி… நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். முயற்சியும் செய்கிறீர்கள்.
1.ஆனால் அழுத்தத்தை தோல்விக்குக் கொடுக்கின்றீர்கள்.
2.தோல்வி ஆகி விட்டால் சிக்கலாகுமே என்று வேதனையுடன் தான் முயற்சி செய்கிறீர்கள்.
3.ஆக மொத்தம் அழுத்தம் வேதனைக்குத்தான் செல்கிறது.

அந்த இடத்தில் ஈஸ்வரா………! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே அழுத்தமாக எண்ணி பூமியின் வட திசையில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால்
1.உங்கள் ஒட்டு மொத்த தோல்வி அடைந்த வேகத்தை
2.அந்த உணர்ச்சிகள் கொண்டு… “வேகம் அடங்கும் வரை மோதினால்…”
3.அங்கிருந்து உங்களுக்கு உயிர்ச் சக்தி கிடைக்கும்.

அந்த அகஸ்தியர் பெற்ற பேராற்றல்கள் உங்கள் சுவாசத்தில் கலந்து… உயிரில் பட்டு… வாயிலே உமிழ் நீராக மாறி… உடலுக்குள் ஒளியான அணுவாகத் துருவ நட்சத்திரத்தின் அணுவாகக் கருவாகும்…! அந்த அணுக்களின் பெருக்கம் அதிகமாகும்.
1.உங்கள் காரியம் தோல்வி அடைந்தது.
2.ஆனால் அதற்குப் பதில் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் உங்கள் உடலிலே அதிகமாகப் பெருகியது.

இப்படியே இது நடக்க நடக்க துருவ நட்சத்திரத்தின் அணுக்கள் உங்களுக்குள் ஞானத்தின் உணர்வைத் தூண்டி உங்களைக் கண்டிப்பாகச் சிந்திக்க வைக்கும்.

நீ இதை இப்படிச் செய்ததால் தான் உனக்குத் தோல்வியானது. அதில் நீ இந்தத் தவறைச் செய்திருக்கிறாய். இதை இப்படி மாற்றி இந்த எண்ணத்துடன் இந்த முறைப்படி செய்…! என்று சொல்லும் அல்லது உள் உணர்வாக உணர்த்தும்.

தொடர்ந்து துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வுகளும் எண்னங்களும் மோத மோத அதன் வழி நீங்கள் செயல்படத் தொடங்கினால் உங்களுக்கு மகிழ்ச்சியான அனுபவம் ஒவ்வொரு நாளும் கிடைக்கும். அந்த அனுபவத்தின் மூலம் உங்கள் காரியம் எல்லாமே சீராக நடக்கும்.

இது தான் நீங்கள் கேட்ட தியானத்தில் உயர்வு… தியானத்தில் முழுமை… தியானத்தில் வழி பிறக்காதா…! என்பது. ஏனென்றால் அருளைப் பெருக்கும் பொழுது தான் இருள் விலகும்.
1.இருள் வரும் பொழுது இருளை நீக்க
2.அருளைத் தான் தேட வேண்டும். இது தான் அழுத்தம்…!

இருள் வரும் பொழுது மீண்டும் இருள் வந்துவிட்டதே…! என்று எண்ணினால் அது ஆசை. நல்லதைப் பெறவேண்டும் என்ற அழுத்தம் நற்சக்திகளைச் சேர்ப்பதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர நல்லதைப் பெறவேண்டும் என்ற ஆசையையும் எதிர்பார்ப்பையும் கூட்டிக் கொண்டு ஏமாற்றமாகி… நிராசையாகி… கெட்ட சக்திகளைச் சேர்ப்பதாக இருக்கவே கூடாது.

இதில் உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். இயற்கை என்பது எல்லாமே கலந்தது தான்,
1.வளர்ப்பதற்காகத் தான் இயற்கை மீண்டும் மீண்டும் படைக்கின்றது.
2.அழிப்பதற்காக அல்ல.

இந்தப் பேருண்மையை அறிந்த அந்த ஞானிகள் இயற்கையுடன் இணைந்து அதை வளர்க்கும் செயலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றும் பதினாறாக அழியாத வாழ்க்கையாக எகாந்தமாக வாழ்கிறார்கள்.

பிறப்பு இறப்பு பற்றிய இரகசியம் என்ன…?

Life cylce of man

பிறப்பு இறப்பு பற்றிய இரகசியம் என்ன…?

கேள்வி:-
பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவனிட்ட பிச்சை என்கின்றோம்.. இயற்கை என்கின்றோம்…! எதுவப்பா பிச்சை…? எதுவப்பா இயற்கை…? அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். பிறப்பு இறப்பு என்பதைப் பற்றிப் புரிந்து கொண்டீர்களா…?

மேலே கூறப்பட்டுள்ள மாமகரிஷி ஈஸ்வரபட்டரின் கருத்தில் “அணுவின் பாடம் பற்றியும்… ஆவியின் பாடம் பற்றியும்…” விளக்கம் தேவை

பதில்:-
அணுவின் பாடம்:-

விண்ணிலே தோன்றிய ஓர் உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் சந்தர்ப்பவசத்தால் பூமிக்குள் வந்து ஒரு தாவர இனத்தில் வீழ்ந்தால் ஒரு புழுவாக உடல் பெறுகிறது.

பின் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் வரை வளர்ந்து வருகிறது. மனிதனுக்குப் பின் தன்னை உணர்ந்து மெய் ஞானிகள் வழியில் சென்றால் மனிதன் தெய்வ நிலை பெறுகின்றான். கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரமாக ஆக முடியும்.

ஆனால் விண்ணிலே தோன்றிய அந்த பூமிக்குள் வராது வேறு கோள்களின் ஈர்ப்புக்குள் சென்று விட்டால் அங்கே கிருமிகளாகத்தான் வாழ முடியும்.
1.எத்தனை கோடி ஆண்டுகளாக அங்கே இருந்தாலும் உடல் பெறும் நிலை இல்லை.
2.மனிதனாக வரும் வாய்ப்பே இல்லை.

நம் சூரியக் குடும்பத்தில் நம் பூமியில் மட்டும் தான் உயிரணுக்கள் உயிரினங்களாக உடல் வளர்ச்சி பெற்று மனிதன் வரை பரிணாம வளர்ச்சி அடையச் செய்யக் கூடிய தாவர இனங்களும் நீர் வளங்களும் உள்ளது.

ஆகையினால் நாம் இந்தப் பூமியில் மனிதனாக இப்பொழுது பிறந்திருக்கும் நிலை எந்தக் காலத்தில் பெற்ற நல்ல நிலையோ என்பதைக் கருத்தில் கொண்டு நம் உயிரான்மா இந்தப் பிறவியில் இப்பொழுது பெறவேண்டிய விமோச்சனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் வழியில் வாழ்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி அல்லாது நாம் வேறு கோள்களின் ஈர்ப்புக்குச் சென்றிருந்தால்
1.மனிதனாகும் தகுதியும் இருக்காது.
2.ஞானத்தின் வழி செல்லும் சந்தர்ப்பமும் இல்லாது போய்விடும்.
3.ஆக மனிதனாகப் பிறந்ததின் பயனை நாம் அடைதலே சிறப்பு,

ஆவியின் பாடம்:-

மனிதனாக நாம் இன்று வாழ்ந்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ உணர்வுகளை நாம் சந்திக்கின்றோம். அதில் நல்லதும் உண்டு தீமையும் உண்டு. நாம் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் அவைகள் வந்து மோதத்தான் செய்கின்றது.

நல்லதோ தீமையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுகளின் இயக்கத்திற்குக் காரணமே
1.இந்தப் பூமியில் ஏற்கனவே நம்மைப் போன்று வாழ்ந்த மனிதர்கள் விட்ட மூச்சலைகள் தான்.
2.அந்த அலைகளை நாம் சுவாசித்துத் தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்கின்றோம். (அதைத்தான் சிவ தனுசு என்று சொல்வது)
3.அதாவது ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளைத்தான் சுவாசிக்கின்றோம்.
4.மீண்டும் இந்தப் பூமியில் உடல் பெறச் செய்யும் உணர்வுகளைத்தான் நாம் சுவாசிக்கின்றோம்.

வாழும் காலத்தில் ஒவ்வொரு மனிதனுமே எத்தனையோ வேதனையுடன் நிராசையாகித்தான் கடைசியில் உடலை விட்டுப் பிரிகின்றான்.

அவர்கள் வெளியிட்ட மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்திலே படர்ந்துள்ளது. அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிராத்மாக்களும் இதே காற்று மண்டலத்திலே தான் சுழன்று கொண்டுள்ளது.

நாம் சாதாரணமாக எண்ணும் பொழுது அவர்கள் வெளி விட்ட மூச்சலைகளும் நம்முடைய எண்ணமும் ஒன்றாக இருந்தால் அந்த அலைகள் நமக்குள் வந்து நம்மை இயக்கும்.

ஆனால் மிகவும் அழுத்தமாக எண்ணினால் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாவே நம் ஈர்ப்புக்குள் வந்து நம் இரத்தத்தில் வந்து அது நம்மை இயக்கத் தொடங்கும். இதைத்தான் ஆவி நிலை என்பது.

ஏனென்றால் நிராசையுடன் சென்ற அந்த உயிரான்மா
1.தன்னுடைய ஆசையை நிறைவேற்றும் எண்ணத்துடனேயே காத்துக் கொண்டு இருக்கும்.
2.இன்னொரு உடலுக்குள் சென்று குழந்தையாகப் பிறக்காமல்
3.உடலுடன் வாழும் மற்ற மனித உடல்களுக்குள் புகுந்து தன் காரியத்தைச் செயல்படுத்தும் ஏக்கத்திலேயே இருக்கும்.

ஓரளவுக்கு முழுமையாக வாழ்ந்து உடலை விட்டு அமைதியாகப் பிரிந்த ஆன்மாக்கள் தான் அடுத்து குழந்தையாகப் பிறக்கும் நிலைக்கு வரும். அதுவும் குறைந்தது 100 – 150 ஆண்டுகளாவது ஆகும்

நிராசையாக உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் தன் ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பதால் அவைகள் நம் உடலுக்குள் வந்தால் அவர்கள் உடலில் வந்த நோய்களும் துன்பங்களும் நம்மையும் சாடி நம் உடலையும் சீக்கிரம் நலியச் செய்து அதே நிலைக்கே அழைத்துச் சென்று விடும்.

ஆக மொத்தம் மனிதனாகப் பிறந்து வாழும் பெரும்பகுதியானவர்கள் கடைசியில் இப்படித்தான் இறக்கின்றனர்.

1.இந்த ஆவி உலக உயிராத்மாக்களின் உணர்வின் உந்தல்களால் இயக்கப்பட்டு
2.தீமையான உணர்வுகளுக்குள் சிக்கித் துன்பப்பட்டு வேதனைப்பட்டோ அல்லது
3.மற்றவரை அழிக்கும் எண்ணம் கொண்டோ செயல்படச் செய்து
4.கடைசியில் நிம்மதியை இழந்து பலவிதமான நோயாகி இறக்கும் நிலை தான் இன்று உள்ளது.

ஆனால் “வயது ஆக ஆக மனிதனுக்கு இப்படித்தான் நோய்கள் வரும்…!” என்று நாம் இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு “அதையே வாழ்க்கை…!” என்று எண்ணிக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்.

நல்லதே செய்து நல்ல எண்ணத்தில் வாழ்பவர்களுக்கும் பக்தி கொண்டு வாழ்பவர்களுக்கும் பக்தி இல்லாது வாழ்பவர்களுக்கும் எல்லோருக்குமே நோய் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் பிறிதொரு உடலை விட்டுப் பிரிந்த உணர்வுகள் அல்லது அந்த ஆன்மாக்களின் இயக்கமே…!

இன்று சிறிதளவு உணர்ச்சி வசப்பட்டாலும் அந்த ஆவி உலக ஆன்மாக்களின் உணர்வுகள் நம்மைச் சாடத்தான் செய்யும்.

ஆவி உலக ஆன்மாக்களின் ஈர்ப்பிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து வலுவாக்கிக் கொண்டால் தான் தப்ப முடியும்.

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்திக்கு நம் கண்ணின் நினைவுகளைக் கொண்டு போய் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படும் பொழுதெல்லாம் இவ்வாறு மாற்றிக் கொண்டால் தான் ஆவி உலக ஆத்மாக்களின் தொடர்பிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நம் எண்ணங்களும் உணர்வுகளும் செயல்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இந்த உடலுக்குப் பின் மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் எளிதில் அடைய முடியும்.

1.பிறிதொரு மனித உணர்வின் (ஆவி) ஈர்ப்பு நம் ஆன்மாவில் இருந்தால் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நமக்கு வந்து கொண்டே தான் இருக்கும்.
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து சென்ற மகரிஷிகளின் உணர்வின் ஈர்ப்பு நம் ஆன்மாவில் இருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லாத நிலையாக மரணமில்லாப் பெரு வாழ்வு நாம் வாழலாம்.

உயிரால் நம் உடலில் எப்படி வெப்பம் உருவாகின்றது…?

Heat is god

உயிரால் நம் உடலில் எப்படி வெப்பம் உருவாகின்றது…?

கேள்வி:-

ஞானகுருவின் உபதேசத்தில் அடிக்கடி உபயோகிக்கும் Electric, Electronic என்பதன் முழுமையான விளக்கம் தர வேண்டுகிறோம்.

பதில்:-

விண்ணிலிருந்து பூமிக்குள் வந்த உயிரணு எப்படி இயங்குகிறது..? உயிரணுவிற்குள்
1.நட்சத்திரங்களின் எதிர்மறையான இயக்கங்களாலும்
2.அதை இணைக்கும் பாலமாக இருக்கும் வியாழன் கோளின் சக்தியும்
3.சூரியனின் வெப்ப காந்தமும் சேர்ந்து
4.ஒரே சீரான துடிப்பாக (வெடுக்… வெடுக்…) இயங்கிக் கொண்டே உள்ளது.
5.அந்தத் துடிப்பால் உயிரணுவிற்குள் வெப்பம் உருவாகின்றது.
6.உயிரணுவிற்குள் தோன்றும் வெப்பமே உயிர் ஆகும். அதுவே கடவுளாகின்றது ஈசனாகின்றது.

தொடர்ந்து உயிரணுவிற்குள் வெப்பம் உருவாகிக் கொண்டே இருப்பதால் அந்த வெப்பத்தால் ஈர்க்கும் காந்தமாகின்றது.

அதாவது அனல் மின் நிலையங்களில் வெப்பத்தை வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது போல் உயிரின் வெப்பத்தால் காந்தம் உருவாகிக் கொண்டே உள்ளது (EMF – ELECTROMOTIVE FORCE).

உயிரின் துடிப்பினால் “தொடர்ந்து ஏற்படும் அந்த காந்தப் புலனின் ஆற்றலைத் தான்” ஞானகுரு அவர்கள் ELECTRIC என்று உணர்த்துகின்றார்கள்.

வெப்பத்தினால் உருவான காந்தப் புலனின் ஆற்றலால் உயிர் என்ன செய்கின்றது…? தன் அருகிலே இருக்கும் மற்ற (காற்று மண்டலத்தில் உள்ள) உணர்வலைகளைக் கவர நேர்கின்றது.

ஒரு அடுப்பிலே பாத்திரத்தை வைத்து அதிலே மற்ற பொருளைப் போட்டுக் கொதிக்க வைத்தால் கொதித்து ஆவியாகின்றது.

ஆவியாக மாறியது போக மீதம் உள்ளது பாத்திரத்திலே உறைவது போல் உயிரணுவைச் சுற்றி அது கவர்ந்த உணர்வலைகளின் மணம் உறைகின்றது.
1.அதற்குப் பெயர் தான் சிவம். சிவம் என்றால் உடல்.
2.அதாவது கண்ணுக்குத் தெரியாத சக்திகளை உயிர் நுகர்ந்து கண்ணுக்குத் தெரியும் உடலாக மாற்றுகின்றது.

கொதித்து ஆவியாகும் பொழுது அதிலே சப்தங்கள் வருவது போல தான் உடல் பெற்ற பின் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் நாதங்கள் (ஒலிகள்) தோன்றுகிறது. அந்தச் சப்தமே உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளாகவும் எண்ணங்களாகவும் தோன்றுகிறது.

இவ்வாறு உயிர்… தான் நுகரும் உணர்வுகளை எல்லாம் உணர்ச்சிகளாக மாற்றி இயக்குவதைத்தான் அந்த உணர்ச்சிகளை ELECTRONIC என்று ஞானகுரு சொல்கிறார்.

நம் உயிரான ஈசனின் (ELECTRIC) துணை கொண்டு ஞானிகள் மகரிஷிகளை நுகர்ந்தால் அதை உயிர் (ELECTRONIC) ஞானத்தின் உணர்ச்சிகளாக இயக்கி நம் உடலுக்குள் ஒளியான அணுக்களாக உருவாக்கும். நம் உயிர் நம்மையும் மெய் ஞானியாக மாற்றும்…!

உலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்…” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்…?

annamalai girivalam

உலகைக் காக்கும் சக்தியாக உருவான “சித்தன்…” (மெய் ஞானி) அவன் எப்பொழுது வெளிப்படுவான்…?

கேள்வி:-
நீங்கள் கூறிய பதிவுகளில் உலக மாற்றங்கள் குறித்துச் சொல்லியுள்ளீர்கள். மற்றும் நாஸ்டர்டாமஸ் (NOSTRADAMUS) அவர்கள் சொன்ன பதிவுகளை எல்லாம் படித்தேன்.

அதில் தென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் இனிமேல் நடக்கும் விஞ்ஞான மாற்றத்திலிருந்து உலகைக் காத்திடும் நிலையாக வரப் போகிறது என்றும் நம் குருவும் இதைத் தான் குறிப்பிட்டார் என்றால் இது எப்போது நடக்கும்…?

பதில்:-
நாஸ்டர்டாமஸ் 17ஆம் நூற்றாண்டிலும் நம் குருநாதர் 20 ஆம் நூற்றாண்டிலும் அந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அது உண்மைதான்…!

ஆனால் அது ஒரே ஒரு குழந்தை என்று அர்த்தம் அல்ல…!

ஏற்கனவே உலகைக் காக்கக்கூடிய அத்தகைய உயிராத்மாக்களின் எண்ணிக்கை
1.ஏற்கனவே 2010 ஆம் ஆண்டிலிருந்தே பெருகத் தொடங்கி விட்டது.
2.இதனுடைய வெளிப்பாடுகளை 2020 ஆண்டில் முழுவதும் பார்க்க முடியும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியைச் சீராகக் கடைப்பிடிப்போரும்
2.அவருடைய உணர்வுகளைப் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உள்ள பூர்வமாக ஏற்றுக் கொண்டு…
3.உலகைக் காக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும்
4.எல்லோரையும் மொத்தமாகச் சேர்த்துத் தான் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
5.நமக்கெல்லாம் அந்தத் தகுதி உண்டா…?
6.இல்லையே..! என்று (யாருமே) கருத வேண்டியதில்லை.
7.உலகைக் காக்கும் அந்தச் சக்தியில் நீங்களும் கூட ஒருவராக நிச்சயம் இருப்பீர்கள்.

அதே சமயத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானகுரு மூலமாக வெளிப்படுத்திய ஞான உபதேசக் கருத்துக்களைப் படித்து… அதைத் தனக்குள் பதிய வைத்து… முழுமையாக அதன்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு “இனி செயல்படுவோர் அனைவருமே அந்தத் தகுதி உடையவர்களாகின்றார்கள்…!”

தனித்த சக்திக்கு வலிமை இல்லை. ஒன்று சேர்ந்தால் தான் வலிமை. சிறு துளி பெரு வெள்ளம் போல் நாம் எல்லாம் சேர்ந்து தான் உலகைக் காக்கப் போகின்றோம்.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வுகளை
2.புருவ மத்தியில் “ஈஸ்வரா…!” என்று உள்ளபூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருமே
3.உலகைக் காக்கும் சக்தியாக உருவாகின்றார்கள்.

(இந்தக் கருத்தைக் ஏற்றுக் கொண்டாலும் சரி அல்லது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இரண்டு வருடத்திற்குள் அத்தகைய காக்கும் சக்தியைக் காணலாம்.)

குழந்தைகளுக்கு மெய் ஞானத்தைப் போதிக்கும் வழி..!

MINDFULNESS_CLASSROOM

குழந்தைகளுக்கு மெய் ஞானத்தைப் போதிக்கும் வழி..!

கேள்வி:-
குழந்தைகளைப் பக்குவப்படுத்தி மெய் ஞான வழியில் எப்படி வளரக்க வேண்டும்…?

பதில்:-
குழந்தைகளை முதலில் அன்னை தந்தையரை வணங்கப் பழக்கிக் கொடுங்கள். அந்த ஒழுக்கத்தின் நிலைகளைக் கற்றுக் கொடுத்து வீடு குடும்பம் என்ற நிலைகளில் ஒற்றுமையாக வளரவேண்டும் என்ற நல் போதனைகள் கொடுத்து அன்புடன் அரவணைத்துப் பழகுங்கள்

1.வீட்டையும் மற்றவர்களையும் மதிக்கச் செய்யும் நிலைகளைக் குழந்தை உள்ளங்களில் உருவாக்கச் செய்து
2.உலகிற்கே எடுத்துக்காட்டாக உலகையே காத்திடும் நிலையாக வர வேண்டும் என்று
3,குழந்தைகளுக்கு அருளாசி வழங்குங்கள்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க நிலைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நிலையும் இந்த உலகைக் காத்திடும் நிலைகளும் அந்தக் குழந்தைகள் வளரும் காலத்தில் தான் உண்டு.

ஆகவே இனி வரும் காலத்தில் விஞ்ஞான அறிவால் பேரழிவு கொண்டு வரும் நிலையிலிருந்து தன்னைக் காத்திடும் சக்தியை அவர்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் அந்தச் சக்தியைப் பெறும் நிலையாகப் பிரார்த்திக்கச் செய்து அவர்கள் எண்ணத்தால் சக்தி பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

அதைப் போல அந்தக் குழந்தைகளுக்கு
1.நம்முடைய வீடு…
2.நம்முடைய சகோதரர்கள் உறவினர்கள்…
3.நம் விவசாயம் என்ன…?
4.நம் அருகில் உள்ள நண்பர்களிடம் எப்படிப் பண்புடன் பழக வேண்டும்…? என்று நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் சில சில குறைகள் ஏற்பட்டாலும் அதைக் கோபித்துச் சொல்லாத நிலைகள் கொண்டு அரவணைத்துப் பக்குவமாகச் சுட்டிக் காட்டும் நிலை வர வேண்டும்.
1.எத்தகைய பாட நிலைகளை நாம் போதித்தாலும் உணர்வின் தன்மை வெளிப்படுத்தினாலும்
2.குழந்தைகள் உள்ளங்களில் மற்றவர்கள் படும் ஆசைகள் இணைக்கப்படும் பொழுது சில நேரங்கள் குழந்தைகள் மாறினாலும்
3.ஏன்… இவ்வாறு செய்கிறாய்…? என்று நாம் கோபித்துச் சொல்லாதபடி
4,அதைச் சுட்டிக் காட்டி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று சிறிது காலம் போதிப்போம் என்றால்
5,அந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் அது ஆழமாகப் பதிந்து
6.அதன் வழிகளில் நமக்கே நல் வழி காட்டும் நிலையாக நிச்சயம் வளரும்.

ஏனென்றால் நாம் எண்ணியபடி படிப்பிலும் மற்ற நல்ல பழக்கங்களிலும் குழந்தைகள் முன்னேறி வரவில்லை என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை உணர்வுடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் விளைந்த வேதனை உணர்வுகள் நம் குழந்தைகளிடத்தில் கடும் சொல்லாக ஊடுருவி அது வித்தாக ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

1.நம்மைக் காணும் பொழுதெல்லாம் அஞ்சும் நிலை வருகின்றது. வெறுக்கும் நிலை வருகின்றது.
2.உயர்ந்த நிலைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றாலும்
3.நாம் முதலிலே பாய்ச்சிய கோப உணர்வுகளால் அங்கே மறைக்கப்படுகின்றது
4.நமக்குள்ளும் அதே உணர்வை எடுக்கப்படும் பொழுது கோபிக்கும் நிலைகளே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் குழந்தைகளை மகரிஷிகள் காட்டிய மெய் வழியில் வளர்க்க வேண்டும்.

செய்யத் தவிர்க்க வேண்டியது:-
1.குழந்தையைக் கவனிக்க முடியவில்லை அவன் அழுது கொண்டே இருக்கின்றான் என்று சொல்லி விட்டு செல் ஃபோனையோ டி.வி.யையோ பார்க்கப் பழகிக் கொடுக்கக் கூடாது
2.குழந்தையை வெறுப்புடனோ ஆத்திரத்துடனோ எதிலுமே கட்டாயப்படுத்தக் கூடாது.
(3.நீ இந்த உண்மையை உணர்ந்து கொள்… நீ சிந்தித்துப் பார்… என்று அவனிடம் இருக்கும் நல்ல உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்
4.ஒரு தடவைக்குப் பத்து முறையாவது நாம் சொல்ல வேண்டும்.)
5.வீட்டில் குழந்தையால் தொல்லையாக இருக்கிறது என்று குழந்தையை மற்றவர்களிடம் சொல்லிப் பார்க்கச் சொல்லும் பழக்கம் வரக்கூடாது.
6.குழந்தையை எக்காரணம் கொண்டும் (மனதில் கூட) சாபமிடக் கூடாது… இவன் எல்லாம் உருப்பட மாட்டான்… என் உயிரையே வாங்குகிறான்… நாசமாகப் போகிறவனே… என்ற எண்ணமே வரக்கூடாது.
7.நம் வேலைக்கு இடைஞ்சலாக அவன் இருக்கிறான் என்று அவனை அலட்சியப்படுத்தக் கூடாது (அலட்சியம் செய்தால் அவன் மேலும் நமக்குத் தான் தொல்லை தருவான்)
8.குழந்தை மேல் அவநம்பிக்கை கொள்ளவே கூடாது…! (கண்டிப்பாக ஞானியாக வளர்வான் என்ற எண்ணம் வர வேண்டும்)

செய்ய வேண்டியது:-
1.கூட்டுத் தியானங்களில் பங்கேற்க வைக்க வேண்டும்.
2.ஞான உபதேசங்களைக் குழந்தைகளில் காதில் விழும்படியாகக் கேட்க வைக்க வேண்டும்.
3.மெய் ஞான நூல்களை அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற் போல் வாசித்து அதைக் குழந்தைகளைக் கேட்க வைக்க வேண்டும்.
4.கைக் குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் உணவோ தண்ணீரோ பாலோ கொடுப்பதிலிருந்து மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் பொழுது நாம் அந்த அருள் உணர்வுகளுடன் தான் அதைக் கொடுத்துப் பழக வேண்டும்
5.அவர்கள் செய்யும் குறும்புத் தனங்களை நாம் பதிவாக்காது நம்முடைய நல்ல உணர்வுகளை அவர்களுக்குள் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
6.ஞானத்தைப் பெறுவதும் ஞானிகளைப் பற்றிய கதைகளையும் (அகஸ்தியர் போகர் வான்மீகி வியாசகர் கொங்கணவர் அத்திரி ஈஸ்வரபட்டர் ஆதிசங்கரர் இராமலிங்க அடிகள்) அதன் மூலம் அவர்கள் பெற்ற ஆற்றல்களையும் குழந்தைகளுக்குச் சொல்வதுமே குழந்தைகளுடைய பொழுது போக்காக இருக்க வேண்டும்.
7.ஆக மொத்தம் நாம் நம்முடைய கண்களால் சொல்லால் குழந்தைள் நல்லதைக் கேட்கும்படியாகச் செய்ய வேண்டும்..! நல்லதைப் பார்க்கும்படியாகச் செய்ய வேண்டும்…!
8.எந்த நிலையிலும் குழந்தைகளுக்கு இதைப் பதிவாக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் நமக்குள் வர வேண்டுமே தவிர குழந்தை கேட்கவில்லை.. கவனிக்கவில்லை.. அவனுக்கு இஷ்டமில்லை அவன் கேட்க மாட்டான்.. எதற்கு இதைச் செய்ய வேண்டும்…? என்ற எண்ணம் நமக்கு வரக் கூடாது.
9.இன்றைய சுட்டிக் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் மிகச் சிறந்தவர்களாக ஞானிகளாக வருவார்கள்.
10.வாய் வழியாகச் சொல்லிச் சொல்லி அவனைத் திருத்த வேண்டும் என்பதற்குப் பதில் அவனுக்குள் ஆழமாகப் பதிவாக்கக் கூடிய செயல்களைத் தான் செய்ய வேண்டும்.
11.நாம் செய்யும் ஞானிகளைப் பற்றிய பதிவுகள் குழந்தையிடம் வித்தாகி விளைந்து வருவதை 48 மணி நேரத்திலோ 48 நாளகளிலோ உறுதியாகக் குழந்தையிடம் பார்க்கலாம்.

எங்கள் குழந்தைகள் அனவைரும் உலகையே காத்திடும் “உத்தம ஞானிகளாக வருவார்கள்…!” என்ற வைராக்கியமான எண்ணம் ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் வர வேண்டும் (இது தான் மிகவும் முக்கியம்)

கலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…? அதனின் பலன்கள் என்ன…?

Kalasa pooja

கலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…? அதனின் பலன்கள் என்ன…?

 

கலசம் வைக்கும் முறை:-
ஒரு பித்தளைத் தகட்டில் அந்தத் தட்டிற்குத் தகுந்தாற்போல் பச்சரிசியை நிரப்பி “ஓம்” என்று எழுதவும்.

பிறகு அந்தப் பித்தளைத் தட்டில் வைக்கும்படியாக ஒரு சொம்பை எடுத்துக் கொள்ளவும். அதைத் தட்டின் மீது வைக்கவும். அதிலே பாதி அளவு நீரை நிரப்பவும்.

சொம்பின் மீது ஐந்து மாவிலைகளை நீரிலே படாதவண்ணம் வைக்கவேண்டும். அதன் மீது ஒரு தேங்காயை வைக்க வேண்டும்.

தேங்காயை வைப்பதற்கு முன் அதைச் சுத்தமாகக் கழுவி மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

பிறகு தேங்காயைச் சொம்பின் மீது வைக்கும் பொழுது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த நீருக்குள் போட வேண்டும்.

தேங்காயையும் நீரில் படாதவாறு வைக்க வேண்டும். பின் சொம்பின் கழுத்தில் ஒரு மஞ்சள் துண்டை நூலை வைத்துக் கட்டவும். தேங்காயின் மீது மலரைச் சாத்தவும்.

இவ்வாறு கலசம் வைத்த பின் அதற்கு முன் ஒரு சிறிய டம்ளரில் நீரும் ஒரு டம்ளரில் பச்சைப் பாலும் வைக்கவும்.

பிறகு தியானத்திற்கு எல்லோரையும் அழைத்து வந்து கலசத்திற்கு முன் அமரச் செய்து தியானிக்க வேண்டும்.

தியானிக்க வேண்டிய முறை:-
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எல்லோரும் சேர்ந்து சொல்லித் தியானத்தை ஆரம்பிக்கவும். ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி வணங்க வேண்டும்.

கீழே உள்ளதை ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஏங்கித் தியானிக்க வேண்டும். ஒரு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை தியானிக்கலாம்.

1.எங்கள் தாய் தந்தை தெய்வ சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா
2.எங்கள் தாய் தந்தையருக்கு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.எங்கள் குருவின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5.எந்த எண்ணத்தை எண்ணிக் கலசம் வைத்துள்ளோமோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன் கலசத்தை உற்று நோக்கி எண்ணத்தைச் செலுத்தவும்.
6.கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி பூமியின் வடதுருவப் பகுதியில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்திச் சிறிது நேரம் தியானியுங்கள்.
8.பின் கண்களைத் திறந்து கலசத்தைப் பார்த்து மலரின் மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் தெய்வ குணமும் இந்தக் கலசத்திலே படர்ந்து இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிராத்மாக்களுக்கும் அந்தச் சக்தி கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

பின் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லித் தியானத்தை நிறைவு செய்யுங்கள். கற்பூர தீபம் காட்டிவிட்டு கலசத்தின் முன் வைத்திருந்த நீரையும் பாலையும் எல்லோருக்கும் கொடுங்கள்.

வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் பொழுது அந்தக் குழந்தைகளைத் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்யச் சொல்லி
1.எங்கள் தாய் தந்தையர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெறவேண்டும்
3.கல்வியில் சிறந்த ஞானமும் உலக ஞானமும் நாங்கள் பெறவேண்டும்
4.நாங்கள் உடல் நலம் பெற்று நற்பெயர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற எண்ணத்தில் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் பாத நமஸ்காரம் செய்யும் பொழுது தாய் தந்தையரும்
1.எங்கள் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுக் கல்வியில் சிறந்து நற் பெயர் பெறவேண்டும் ஈஸ்வரா
2.எங்கள் குழந்தை உடல் முழுவதும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து மலரின் மணமும் தெய்வ குணமும் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி உலகம் போற்றும் உத்தமர்களாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசி கொடுக்க வேண்டும்.

கலசத்தினால் ஏற்படும் பலன்கள்:-
கலசத்தை வைத்து இவ்வாறு தியானிப்பதால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியம் பெறுவார்கள். குடும்பத்தில் மன அமைதி கிடைக்கும்.

வீட்டிற்கு வரும் மற்றவர்களுக்கும் மலரின் நறுமணமும் தெய்வ குணமும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் நல்ல சக்திகளும் மன அமைதியும் கிடைக்கும்.

தினசரி கலசத்திற்கு முன் அமர்ந்து எல்லோரும் தியானிக்க வேண்டும். அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்த பின் கலசத்தில் உள்ள நீரை மாற்ற வேண்டும். கலச நீர் நல்ல மணமாக இருந்தால் அதை வீட்டில் உள்ள எல்லோருக்கும் குடிக்கக் கொடுக்கலாம். மீதி நீரை வீட்டைச் சுற்றித் தெளிக்க வேண்டும். தீமையான அலைகள் நம் வீட்டிலே அணுகாது.

கலசத்தில் மீண்டும் நீரை ஊற்றி அதே தேங்காயை வைக்கவும். மாவிலைகளை மாற்றவும். இப்படி ஒவ்வொரு 48 நாள்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

ஒரு ஆறு மண்டலம் வலிமையாகச் செய்தால் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் அபரிதமாகப் பெருகும். அந்த ஒளியான அணுக்கள் உங்கள் உடலிலே பெருகியதைக் கண்ணிலேயும் பார்க்கலாம்.

உலகோதய ஆசை என்றால் என்ன…?

Spiritual LIFE

உலகோதய ஆசை என்றால் என்ன…?

மனிதனாகப் பிறந்து நாம் வாழும் நிலையில் அன்றாடத் தேவைகளில் நம் எண்ணத்தைச் செலுத்தி அந்தந்தச் சந்தர்ப்பங்களில் ஏற்படும் நிகழ்ச்சிகளினால் நம்முடைய சிந்தனைகள் எத்தனையோ மாறுகின்றது.

“மகிழ்ச்சியாக வாழ வேண்டும்…!” என்ற ஆசையில் தான் உணவு உட்கொள்வதிலிருந்து தொழிலுக்கோ கல்விக்கோ மற்ற எல்லா வேலைகளையும் செய்கின்றோம்.

நாம் நன்றாக இருந்தாலும் நம் குடும்பத்திலோ உறவுகளிலோ நண்பர்களுக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் அதனால் நாம் வேதனைப்படுகின்றோம். அல்லது அவர்கள் தவறு செய்தால் ஆத்திரப்படுகின்றோம்.

இதனால் நாம் நமக்காகச் செய்யும் கடமைகளிலும் அதனுடைய பாதிப்பாகின்றது. இப்படிப் பிறரிடமிருந்து வரும் உணர்வுகள் நமக்குள் மோதிய பின் அது நாம் போகும் பாதையை (எந்தப் பாதையாக இருந்தாலும்) மாற்றுகின்றது.

கேட்டால் நாம் என்ன சொல்வோம்…?

என் குடும்பத்திற்காக அல்லது என் சொந்தத்திற்காக அல்லது என் தொழிலுக்காக அல்லது என் மன திருப்திக்காக என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அதிலே மீண்டும் மீண்டும் போய்ச் சிக்கிக் கொள்வோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.வீட்டிற்குள் எப்படித் தினம் தினம் தூசி வருகிறதோ
2.நம் உடல் தினமும் அழுக்காகின்றதோ
3.உடைகள் அணியும் பொழுது சுத்தமாக இருந்தாலும் அணிந்த சிறிது நேரத்தில் அது எப்படி அழுக்காகின்றதோ
4.அது போல் இந்த மனித வாழ்க்கையிலும் ஒரு சிக்கல் தீர்ந்தாலும்
5.அடுத்து ஒரு சிக்கல்… அதற்கு அடுத்து ஒரு சிக்கல்…! என்று வந்து கொண்டே தான் இருக்கும்.

அவரவர்கள் வாழும் இடங்களுக்கொப்ப… வளர்த்த நிலைக்கொப்ப… சந்திக்கும் நிலைக்கொப்ப… ஏதாவது குறைகள் வந்து கொண்டே தான் இருக்கும். குறை இல்லாத மனிதர்களே கிடையாது…!

வீட்டிற்குள் வரும் தூசியைத் தூய்மைப்படுத்தத்தான் முயற்சிக்க முடியுமே தவிர தூசியே வராது தடுக்க முடியாது. உடலைத் தினம் தினம் குளித்துத் தூய்மையாக்க வேண்டுமே தவிர உடலில் அழுக்கே ஒட்டாமல் தடுக்க முடியாது,

அது போல் இந்த உலக வாழ்க்கையில் அம்மா அப்பா என்றோ… கணவன் மனைவி என்றோ… குழந்தைகள் என்றோ… நண்பர்கள் என்றோ உறவுகள் என்றோ… தொழில் என்றோ அல்லது நம் உடல் நம் மனது என்றோ…! எத்தனையோ வகைகளில் பல விதமான உணர்வுகள் எதிர்மறையாக மோதத்தான் செய்யும்.

மேலே சொன்ன எல்லோருடைய உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். அதிலே ஏதாவது ஒன்று சரியில்லை என்றாலும் நம் அமைதி பறிபோய்விடுகிறது.

அமைதியை இழந்த பின் அந்த ஒன்றை மட்டும் தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர இதற்கு முன்னாடி நன்றாகத் தான் இருந்தோம் அதே போல்
1.அந்த நன்றாக இருந்த நல்ல சக்தியை எடுத்து
2.மீண்டும் நாம் நன்றாகவே இருப்போம்…! என்ற எண்ணம் வருவதில்லை.

ஆக நாம் போகும் நல்ல பாதையைத் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுதெல்லாம் நல்ல பாதையில் தொடர்ந்து போவதைக் கேள்விக் குறியாகத்தான் ஆக்குகின்றோமே தவிர
1.மீண்டும் மீண்டும் எது வந்தாலும்
2.நாம் போகும் அருள் வழியை மாற்றக் கூடாது…! என்ற தெளிவும் வைராக்கியமும் வருவதில்லை.

ஆக மொத்தம் பேருக்கும் புகழுக்கும் மற்றவர்கள் நம்மைப் பற்றி எண்ணும் எண்ணத்திற்கும் அடிமையாகி அந்த நிலையில் தான் நாம் வாழ விரும்புகின்றோம்.

தனக்காக வாழ்வதாகச் சொன்னாலும் பிறரை எண்ணித்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்துகின்றோம். ஆக தனக்காக நாம் வாழ்வதே இல்லை.

உயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நாம் அடைய வேண்டிய எல்லை எது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று என்றுமே அழியாது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் மெய் ஞானிகள்.
1.அவர்கள் தான் அருள் வாழ்க்கை என்றும்
2.உலகோதய வாழ்க்கை என்றும் உணர்த்துகின்றார்கள்.

ஏனென்றால் நாம் இந்த உலகுக்காக வாழவில்லை. உலகத்தில் தான் வாழ்கின்றோம். உலக சுகத்தை நம்ப வேண்டியதில்லை.

இந்த உலகத்தில் வாழும் பொழுது நம்மை உருவாக்கிய உயிருக்காகவும் நாம் அடுத்து அடைய வேண்டிய ஒளிச் சரீரத்திற்காகவும் வாழ்ந்தால் அது அருள் வாழ்க்கை.

அதை மறந்து வேறு எந்த நிலைக்காக எண்ணத்தைச் செலுத்தினாலும் அதன் படி சென்றாலும்.. வாழ்ந்தாலும்… அது எல்லாமே உலகோதய வாழ்க்கை தான்…!