அமானுஷ்யம் என்றால் என்ன…?

Astral divine powers

அமானுஷ்யம் என்றால் என்ன…?

 

கேள்வி:-
சூட்சும நிலை என்றால் என்ன..?

உடலை விட்டு பிரிந்த நிலைக்கும் சூட்சும நிலைக்கும் உள்ள வேறுபாடு என்ன…? அதன் செயலாக்கத்தை நாம் எவ்வாறு உணர்கின்றோம்?

பதில்:-
பொதுவாக நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படவில்லை என்றால் அதைப் பற்றி நாம் யாரும் அதிகமாகக் கவனம் செலுத்த மாட்டோம்.

இங்கே “சூட்சமம்…!” என்பதே அப்படிப்பட்ட நிலை தான்.

இன்றைய விஞ்ஞானக் கருவியான டெலஸ்கோப் மூலம் உதாரணமாக வான மண்டலத்தில் தொலை தூரத்தில் இருக்கும் மண்டலங்களைப் பார்க்கலாம். படமும் எடுக்கலாம்.

அதே போல் நுண்ணிய கருவிகள் மூலம் மிகச் சிறிய அணுக்களையும் பார்க்கலாம். லேசர்.. எக்ஸ்ரே.. மூலம் ஒரு பொருளுக்குள்ளோ உடலுக்குள்ளோ நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.
1.அப்படிப் பார்ப்பதைச் சூட்சமம் என்று சொல்ல முடியாது.
2.ஆனால் அந்தக் கருவிகள் எப்படிக் கவர்கிறது..?
3.எதைக் கவர்கிறது..? எதைக் காட்டுகிறது..? அதனின் இயக்கம் எப்படி…? என்பதே “சூட்சமம்…!”

இன்று நாம் உபயோகப்படுத்தும் மின்சாரத்தை நம் கண்களால் காண முடியவில்லை. ஆனாலும் அதைக் கடத்த வேண்டும் என்றால் +/– POSITIVE, NEGATEIVE அல்லது PHASE. NEUTRAL “ஒன்றுடன் ஒன்றை இணைத்தால் தான்” அது இயங்கும். இல்லை என்றால் இயங்காது.

ஆனால் இந்தச் “சூட்சம சக்தி…!” என்பதற்கு அப்படிப்பட்ட இணைப்பு தேவையில்லை. விஞ்ஞான ரீதியாக அதைப் புரிய வைக்க முடியாது.

நமக்குப் பசிக்கிறது… என்றால் அதைக் காட்ட முடியுமா…? முடியாது. உயிர் உடலுக்குள் இருக்கிறது என்பதையும் காட்ட முடியாது. ஆனால் இதை எல்லாம் உணரலாம்.

ஆக மொத்தம்
1.கண்ணுக்குப் புலப்படாத…
2.உணரக்கூடிய அல்லது உணர்த்தக்கூடிய
3.அல்லது உணர முடியாத எல்லாமே சூட்சமச் செயல்கள் தான்.

இருந்தாலும் நாம் சாதாரணக் கண்களால் காண முடியாததை இன்று விஞ்ஞானிகள் புறத்திலே கருவிகளை வைத்துக் காண்பது போல்
1.மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றலை அகத்திலே (உயிராத்மாவில்) சேர்த்து
2.கண்ணுக்குப் புலப்படாத.. உணரக்கூடிய… உணர்த்தக்கூடிய செயல்கள் அனைத்தையும் கண்டார்கள்.
3.புறக் கண்களால் அல்ல.

ஏனென்றால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒலி உருவாகி ஒளி உருவாகின்றது. இடி… மின்னல்..!
1.தனக்குள் மோதும் அல்லது
2.தன்னிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகளை மற்றதுடன் மோதி
3.ஒலி ஒளி என்ற நிலையில் எல்லாவற்றையும் அறிந்துணர்கின்றார்கள்.

அவர்களால் அகண்ட பேரண்ட விரிந்த நிலைகளையும் அறிய முடிகிறது. மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறிய முடிகிறது. எங்கேயும் தொடர்பு கொள்ளவும் முடிகிறது அதை இயக்கவும் முடிகிறது.
1.இந்த அகண்ட பேரண்டமே அத்தகைய மெய் ஞானிகளின் கூட்டுச் செயலால்
2.இணைந்த தன்மைகளில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.
3.அவர்கள் செயல் எல்லாமே சூட்சம செயல்கள் தான்.

அவர்கள் உணர்வுடன் இணைந்து அவர்களின் செயலாக ஒன்றினால் மட்டுமே அதை நாமும் காண முடியும் உணர முடியும்.

சாதாரண நிலைகளில் அதைக் காண முடியாது. அல்லது அப்படியே கண்டாலும் அதை உணர முடியாது.

ஏனென்றால் நம்முடைய உணர்வின் ஈர்ப்பு உடலின் இச்சை கொண்ட நிலையில் பூமிக்குள் விளைந்த உணர்வின் இயக்கம் இருப்பதால் அந்த நுண்ணிய நிலைகளை அறிய முடியாது.

உதாரணத்திற்குக் குருநாதர் (ஞானகுரு) கண்ட உணர்வு…! செவ்வாய்க் கோளைப் பற்றி சுமார் ஒன்றரை மாதம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அறியும்படிச் செய்தார்.

அந்த ஒன்றரை மாதம் நான் வேறு எந்தத் திட உணவையும் உட் கொள்ள முடியவில்லை.. காற்றிலிருக்கும் சில உணர்வுகளைத் தான் நான் ஆகாரமாக எடுத்தேன்..! என்று சொல்கிறார்.

சுவாசித்து உயிரில் கலக்கும் உணர்வுக்கொப்பத்தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் இயக்கம் அனைத்துமே இருக்கும். அதுதான் மெய் ஞானம் என்பது. மெய் ஞானத்தின் செயல்கள் எல்லாமே சூட்சமம் தான்.

மெய் ஞானிகளின் அருள் ஆற்றல்களை நாம் பெற்றால் அதை நாம் சுவாசித்தால் அந்தச் சூட்சமங்களை நிச்சயம் காணலாம் உணரலாம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply