தீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் “இணைக்கக் கூடாது…”

தீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் “இணைக்கக் கூடாது…”

 

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே பிறர் செய்யும் தீமைகளைக் கண்டுணரும்போது உணரத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். உணர்ந்தபின் அதை நீக்கிடல் வேண்டும்.

அதாவது
1.தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
2.ஆனால் தெரிந்த உணர்வுகள் உடலிலே இணைத்திடக் கூடாது… அதை நீக்கிடல் வேண்டும்.
3.தீமைகள் எதுவோ அவைகளை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ அதை ஆக்கபூர்வமான நிலைக்கு மாற்றிடல் வேண்டும்.

இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். காரத்தைத் தனித்து உணவாக உட்கொண்டால் காரத்தின் ஏக உணர்வுகள் நமக்குள் “சுவையற்றதாக…” மாற்றுகின்றது.

ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவைகளுடன் இணைக்கப்படுபோது “சுவை மிக்கதாக…” மாற்றுகின்றது.

இதே போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்… பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள்படும் வேதனையைப் பார்த்துச் சொல்லால் கேட்டுணர்ந்தால் உணர்ந்த அச்சக்தியை நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீய வினையாகச் செயல்படும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

1.நாம் எவ்வாறு தீமையைக் கேட்டறிந்து அதிலிருந்து விடுபட உதவி செய்கின்றோமோ இதைப்போல
2.நாம் தீமையான உணர்வுகளைக் கேட்டுணர்ந்தபின் அடுத்தகணம்
3.நமக்கு முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் கவர்ந்து
4.நமக்குள் தீமையை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

 

தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுது நாம் வீட்டைவிட்டு வெளியில் சென்றாலும் கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

உதாரணமாக… நம்முடைய நண்பர் ஒருவர் நம்மிடம் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது நமது உடல் சுருங்குகின்றது… நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.

அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது
1.அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று
2.அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து
3.நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து
4.நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கஷ்டமான உணர்வு கலந்து விடுகின்றது.

அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும் கூட அவருடைய துன்பமான உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து விடுகின்றது.

அப்படி இரத்தத்தில் கலந்து செல்லும்போது அதை நமது நுரையீரல்… சுவாசப்பை எடுத்து
1.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது
2.அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த உணர்ச்சிகள் நம் உறுப்புகளில் முதலில் ஏற்படும்.

அப்பொழுது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னி அதைச் சரியாகச் சுத்தப்படுத்தாது. அவ்வாறு சுத்தப்படுத்தாமல் அனுப்பும்போது
1.நம் உடல் முழுவதற்கும் அந்த இரத்தம் செல்லும் பொழுது
2.நமது உடலுக்குள் வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகள் செல்லும்போது அந்த நல்ல குணத்துடன் இது இரண்டறக் கலந்து விடுகின்றது.

உதாரணமாக… ஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு நீருக்குள் போட்டுவிடுவார்கள். அதே சமயம் ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து நீருக்குள் போட்டுவிடுவார்கள்.

1.செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டித் தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும் பொழுது
2.தங்கத்திலிருக்கக்கூடிய (தங்கச்) சக்திகள் கரைந்து
3.அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக் அதைக் கவர்ந்து
4.செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.

உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து இந்தத் “தங்கத்தின் முலாமாக ஆகி…”அது தெளிவாகின்றது.

ஆனால் அதே சமயம்,
1.தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்தால்
2.செம்பின் சக்திகள் கரைந்து தங்கத்திற்குள் முலாம் பூசிவிடும்
3.அடிக்கடி செம்பு எப்படிக் கருக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.

அதே போல் தான் நல்ல எண்ணங்கள் கொண்டு ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும்போது
1.நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ
2.அந்த நல்ல குணத்தில் துன்ப உணர்வுகள் முலாமாகப் பூசிவிடும்.

ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும் அவர் படும் துன்பத்தின் மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி
1.“உனக்கு எப்படி இப்படிக் கஷ்டம் வந்தது…?” என்று கேட்கப்படும் போது
2.அந்த நல்ல உணர்வுகளுடன் அவரின் நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.

முதலில் நம் நல்ல குணங்கள் நோயற்ற நிலையும் தெளிவான நிலைகளும் உடலில் தெம்பாக இருந்தது. ஆனால் கஷ்டத்தைக் கேட்டவுடன் மங்கிவிடுகிறது.

அதாவது… தங்கம் எப்படிப் பளப்பளப்பாக இருந்ததோ அதைப் போல நமது தெளிவான எண்ணங்களில் அவருடைய துன்ப உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே சோர்வடைந்து விடுகின்றோம்.

இது நாளாக நாளாக… நமக்குள் நோயாக வந்து சேர்ந்து விடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது. நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம்… அதை உடனே துடைக்க வேண்டுமல்லவா…?

அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். துன்பத்தைக் கேட்டறிந்தபின்,…
1.உடனே “ஈஸ்வரா” என்று நம் உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
3.நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணித் தியானித்து அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

பின்… துன்பப்பட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுத் துன்பத்திலிருந்து விடுபடும் அருள் சக்தி அவர்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் தியானித்து “அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்…!”

இப்படி ஆத்ம சுத்தி செய்து நம் நல்ல குணங்களை மங்காது நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

ஈசனுக்கு மகிழ்ச்சி

ஈசனுக்கு மகிழ்ச்சி

 

நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள் நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி… நம் எதிரியாக இருந்தாலும் சரி… நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.

1.மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும் நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன்
2.பிறர் காரமாகப் பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெற வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் அந்த ஆற்றல் பெறுவதற்கு சதா நீங்கள் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்து உங்கள் உயிரை ஈசனாக மதித்துச் செயல்படுத்திப் பாருங்கள்.

1.ஆலயங்களில் அந்த ஈசனுக்குப் “பாலாபிஷகம்” செய்வது போன்று
2.உங்கள் ஈசனுக்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியை நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து “அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்…”

ஆகையினாலே ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்கள் உயிரான நிலைகளை மகிழச் செய்யுங்கள்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பயன்படுத்தி பிறருக்குச் சொன்னாலும்
1.நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து
2.அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் ஒலிகள் பட்டு அதே உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நல்ல சொல்லைச் சொல்வதோ போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை தவறு செய்தாலும் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம். நம் உடலிலே வேதனையாகும் பொழுது ஒரு அசுத்தம் பட்டு விட்டால் அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி அதைத் துடைக்க முற்படுகின்றோம்.

அதைப் போன்று
1.பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும்
2.நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவம் கொண்டு செயல்பட வேண்டும்.

பிறரிடம் அசுத்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும் நாம் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை நாம் செய்து பழகுவோமேயானால் நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும்.

1.இதன் மூலம் நாம் அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம்.
2.அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அனைவரும் எளிதாக அடைய முடியும்.

எமது அருளாசிகள்.

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்

 

நாம் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும்… ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவர் சொல்லைக் கேட்காமல் இருக்க முடியாது.

ஒருவன் குற்றம் செய்கிறான் என்றால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது. குற்றம் செய்தவர்களால் நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனைப்படுவதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

1.அதையெல்லாம் அறிவால் அறிகின்றோம். அறிந்த உணர்வு நமக்குள் பதிவாகின்றது.
2.எத்தகைய உணர்வுகளைப் பார்த்தாலும் அறிந்து தெரிந்து கொண்டாலும்
3.கார்த்திகேயா என்று தெரிந்திடும் அறிவு இருந்தாலும் “அதை நீக்கிடும் அறிவு வேண்டும்…”

நம் உடல் ண்ஹாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வினை உடலாகச் சேர்க்கின்றது. அந்த நல்ல உணர்வால் நாம் இடும் மணத்தால் நல்ல எண்ணங்கள் கொண்டு தீமையை அகற்றிடும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும்.

1.நல்லவைகள் எதுவாக இருப்பினும்
2.தீமைகளைப் பற்றித் தெரிந்திடும் அறிவு இருந்தாலும்
3.தெரிந்த பின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் அல்லவா.

வேலை செய்கின்றோம்… கை அழுக்காகின்றது. அதை நாம் கழுவாதபடி அடுத்து உணவை உட்கொள்வோமா…? அப்படி உட்கொண்டால் அழுக்கின் சுவையே தான் வரும்… உணவு சுவையற்றதாக மாறி உடலுக்கும் தீங்கு விளைவிக்கின்றது.

இதைப் போன்று தான் மகிழ்ச்சி கொண்டு மற்றவர்கள் கஷ்டத்தைக் கேட்டறிந்தாலும்… அதைத் தெரிந்து கொள்ளும் அறிவு இருந்தாலும்…
1.அவருடைய தீங்கு நம் நல்ல அறிவுடன் இணையும் பொழுது
2.அதைத் துடைக்கவில்லை என்றால் அவரின் தீமையின் உணர்வே நமக்குள் விளையும்.

துடைக்கா விட்டால் உடலில் நோயின் தன்மையாகிவிடும். மீண்டும் நல்ல உணர்வை எடுக்க முடியாதபடி தவிக்கும். அப்பொழுது சிந்தனைகள் சிதறும். சிதறும் பொழுது உடலில் நடுக்கமும் நடுக்கத்தால் வரும் கோபமும் சிந்தனையற்ற செயல்களாக நம்மை இயக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

ஆகவே… சந்தர்ப்பத்தால் எத்தகைய தீமைகள் புகுந்தாலும் அந்தத் தீய வினைகளை உடனுக்குடன் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தி பயிற்சியும் கொடுக்கின்றோம்.

எந்த நேரம் ஆனாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.உடனுக்குடன் தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் அகற்றிட முடியும்.
3.உங்கள் நல்ல எண்ணங்களை உணர்வுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தையும் நாம் நமக்குள் வளர்த்து இந்த வாழ்க்கையில் என்றுமே பொருளறிந்து செயல்படும் திறனாக அருள் வழியில் வாழ முடியும்.

“ஒரேடியாக தியானமிருந்து அருளைப் பெறுவேன்…” என்று சொன்னால் அது நடக்காது

“ஒரேடியாக தியானமிருந்து அருளைப் பெறுவேன்…” என்று சொன்னால் அது நடக்காது

 

உதாரணமாக சில வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்குக் கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி இருப்பான்.

மீண்டும் அவனைப் பார்த்தவுடன் கஷ்டமான நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது இழுத்து நம் ஆன்மாவில் வந்துவிடும். அப்பொழுது அவனை வெறுக்கும் நிலைகள் நமக்குள் உருவாக ஆரம்பித்துவிடும்.
1.சிறிது நாள் அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது.
2.சாப்பாடு கிடைத்ததும் வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.

மண்ணுக்குள் எத்தனையோ வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால் வறண்டு போய்விடுகின்றது. ஒரு நாள் மழை பெய்து விட்டால் தள… தள…என்று வெளியில் வரத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்றுதான் பகைமை கொண்டு அவன் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும்
1.அவனைப் பார்த்தவுடனே அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்து
2.அதனின் செயலாகத் தனக்குள் ஆகாரம் தேட ஆரம்பித்துவிடும்.

அப்பொழுது நாம் இவ்வளவு தியானம் எடுக்கின்றோம்… “அவனைப் பார்த்தவுடனே கோபம் வருகின்றதே…!” என்று நினைப்போம்.

இந்த உணர்வு இங்கு வந்தபின் இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது எப்படியெல்லாம் இருந்தோமோ நம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது.

கெடுதல் செய்தவனைப் பார்த்து அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும் அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது. அந்த நேரத்தில்… மற்ற மனிதர்களிடத்தில் உருவான கெடுதல் செய்த உணர்வின் தன்மை நமக்கு எதிரில் இருந்தால் அது வந்துவிடும்.

1.இரவில் தூங்கும் பொழுது யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி இன்னொரு உரு நமக்குள் தெரியும்.
2.நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம்… அந்த மனிதனின் உருவம் நமக்குள் தெரியும்.
3.அப்பொழுது நம்மை அறியாமலே இரவு வேளைகளில் தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.

நாம் இரவில் தூங்கும் பொழுது அத்தகைய உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி நம் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் “பல முறை செலுத்த வேண்டும்…”

அதைச் செலுத்தியவுடன் தன்னை அறியாமலே தூக்கம் வரும்.

எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும் இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான் நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர
1.ஒரேடியாக ஜெபமிருந்து அருளைப் பெறுவேன் என்று சொன்னால் நடக்காது.
2.ஒவ்வொரு நிமிடத்திலும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
3.அவ்வப்பொழுது அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
4.அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
5.இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
6.அப்படி அடக்கிக் கொண்டே வந்தோம் என்றால் அது அப்படியே உறைந்துவிடும்.
7.எல்லா உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படித் தான் இந்தப் பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள் கோபங்கள் வெறுப்புகள் இவைகளை எல்லாம் மனிதன் அடக்கினான். அவ்வாறு அடக்கி அந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது “பேரானந்தப் பெரும் செல்வம்” கிடைக்கின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும். இல்லையென்றால்
1.நான் எல்லாம் செய்கின்றேன்… ஆனால் உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறது என்று
2.மற்ற உணர்வுகளுக்கு இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம்.
3.அப்பொழுது நாம் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம்.

எது எப்படி இருந்தாலும் எவ்வளவு கடுமையான நிலைகளை நாம் பார்த்துணர்ந்தாலும்… ஒவ்வொரு நொடியிலும் நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இது தான் ஆத்ம சுத்தி என்பது.

இதை முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும். காற்று பலமாக அடிக்கும் பொழுது தூசி வருகின்றது. அதிகமாகத் தூசி வரும்போது ஒதுங்கிக் கொள்கின்றோம்.

இதே மாதிரி
1.தீமையான உணர்வு வரும் பொழுது அந்த எண்ணத்தில் இருந்து விலகி நிற்க
2.அந்த மகரிஷிகளின்\ உணர்வை ஆதாரமாக வைத்து அதிலிருந்து சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.

நாம் எப்படியும் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்கின்றோம். அங்கு வெயில் குறைவாக இருந்தது. போகப் போக வெயில் சூடு அதிகமாகின்றது. அதிகமான அந்த நேரத்தில் விலகி நிற்கின்றோம்.

இதைப் போன்று
1.நம் வாழ்க்கையில் கடுமையான நிலைகள் வரும் நேரத்தில்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
3.அந்த எண்ணத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

ஆத்ம சுத்தியின் மூலக்கூறு இது தான்.

பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் நேரத்தை “நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்

பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் நேரத்தை “நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்

 

ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்தக் குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது. இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.

நாம் மெய்யுணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளில்…
1.எப்பொழுதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ
2.அதையெல்லாம் “உங்களுக்கு நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படி…?

‘’இப்படி என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’’ என்றால் துன்பத்தைக் கொடுக்கும் நாள். அல்லது நம் பையனே “இப்படிப் பேசிவிட்டானே…” என்ற உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் தீர்க்கப்படும்போது அது நமக்குக் ‘’கெட்ட நாள்…” நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.

நம்மை யாராவது திட்டினால் இந்த உணர்வின் தன்மை கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்
1.‘’ஓம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்.
2.“மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்…’’ என்று ஏங்குங்கள்
3.”எங்கள் ஜீவாத்மா அந்த சக்தி பெற வேண்டும்…’’ என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

அப்பொழுதே இது அடங்கும்.

அதாவது ஒருவர் உணர்ச்சிவசப்படும்படியாக நம்மைத் தூண்டும் நேரத்திலும் நாம் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டால்
1.அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்காதபடி
2.அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்… “அப்போது உயர்ந்த சக்தியையும் நமக்குள் பெறுகின்றோம்…”

அடுத்து யார் நமக்கு தவறு செய்தார்களோ… “மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வது நல்லதாக வேண்டும்…” என்று ஆணையிடுங்கள். உங்களுக்குள் இந்த உணர்வுகளைத் தடுக்கச் செய்யுங்கள்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கை அது எந்த நிமிடமென்று சொல்ல முடியாது. மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் குறைகள் கண்டு கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்து மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் “அந்த புனிதப் பயணமாக இருக்க வேண்டும்…”

உங்களிடம் யாம் கேட்பது என்ன…?

நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… நீங்கள் மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு… யாராவது துன்புற்று வந்தாலும்… “அவர்களுக்கு நன்றாகிப் போகும்” என்று நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு உடல் நலமாகிவிடும். அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

இப்பொழுது நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டுமென்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்து கொண்டு இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

1.நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும்.
2.துன்பமான உணர்வுகளை காதிலே கேட்டு நம் உடலுக்குள் அந்தத் துன்பங்கள் வந்து நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.

ஏனென்றால் நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் பிற துன்ப அலைகள் எல்லாம் விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு நமக்குள் மெய் ஞானிகளின் அருள் ஒளி இருந்தால்தான் முடியும்.

1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு… அந்த நிலையினை நாம் பெற வேண்டும்.
2.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.

குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அதைப் பின்பற்றி நடப்போர் அந்தச் சக்தியைப் பெற முடியும்.

ஆகவே… உங்களை அறியாமலே உங்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதமாக ”மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ‘’ஆத்ம சுத்தி’’ என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து இந்த வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்,. எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.

1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும் உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.

எமது அருளாசிகள்.

துன்பத்தை மனதார ஏற்றுக் கொண்டு “இன்பத்திற்குண்டான மெய் ஒளியைப் பெற…” வழி காட்டுகின்றோம்

துன்பத்தை மனதார ஏற்றுக் கொண்டு “இன்பத்திற்குண்டான மெய் ஒளியைப் பெற…” வழி காட்டுகின்றோம்

 

சந்தர்ப்பத்தால்… வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ
1.அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக் கொண்டு
2.இன்பத்திற்குண்டான வழியை அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் ஏற்றுக் கொண்டு
3.அந்தத் துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்து
உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தியும் கொடுக்கின்றோம்.

ஆத்ம சுத்தி என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி விண்ணிலிருந்து நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஆத்ம சுத்தியை இவ்வாறு எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி… மனிதனாகப் பெற்ற புனிதத் தன்மையை நாம் பெறுகின்றோம்.

சந்தர்ப்பவசத்தால்
1.எல்லை கடந்து துன்பங்கள் வரப்படும்பொழுது நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள்
2.நம்மை மறந்து… துன்பத்தை மறந்து…
3.நாம் மெய் ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று தியானத்தின் வழி விண்ணின் ஆற்றலை நாம் பெற முடியும்.

ஆகவே நாம் ஒவ்வொரு நாளும் மெய் ஒளி பெறும் தியானத்தைக் கூட்டிக் கொள்வோம்.

ஒரு நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு உழைத்தாலும் மெய் ஒளி பெறும் அந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும்
1.ஒரு 10 நிமிடமாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்து
2.அந்த ஆற்றல் மிக்க காந்தத்தைக் கூட்டிக் கொள்வோம்.

அதை நம் உடலிலே சேர்த்துக் கொண்டு நமக்குத் துன்பம் வரும் போது “ஈஸ்வரா…” என்ற எண்ணத்தைக் கொண்டு “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அது என் ஜீவாத்மா பெற வேண்டும் என்று நாம் எண்ணிச் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம்
1.எதிர்பாராத சங்கடத்தில் நாம் துன்பப்பட்டு நம் உணர்ச்சிகளைத் தூண்டி
2.மிக அதிகமான கஷ்டங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்திலே
3.உணர்ச்சியின் வேகங்கள் உந்தி நாம் விண்ணின் ஆற்றலை
4.மிக ஆற்றல் மிக்க நிலைகளைத் “துரித நிலைகளில் பெறும் சந்தர்ப்பமும்…” கிடைக்கலாம்.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையிலே நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி வரப்படும் பொழுது எதிர்பாராத சலிப்போ சஞ்சலமோ பயமோ ஆத்திரமோ கோபமோ வேதனையோ இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும் பொழுதெல்லாம் அடுத்தகணம் நாம் ஆத்ம சுத்தி செய்து அந்தத் துன்பங்களை அகற்றிட வேண்டும்.

உயிர் ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் ஆக வேண்டும்

உயிர் ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் ஆக வேண்டும்

 

நாம் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே மெய் ஒளியினை அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமியிடம் (ஞானகுரு) போனோம்… சாமி கொடுக்கவில்லை…! என்று எண்ணாதீர்கள்.
1.சாமியிடம் போய் அந்த அருள் ஒளியை வளர்ப்போம்.
2.அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில் ஒளி நிலை பெறுவோம்.
3.நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை நம் மூச்சாலே நம்மை அணுகாது பாதுகாப்போம்.

அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது இருள் விலகும்… பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும் போது வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.

நம் உடலில் எவ்வளவு வேதனைகள் நம்மைத் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம் கொடுப்பது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதம்.

புலி நம்மைத் தாக்க வரும் போது அதை வேட்டையாடுவதற்கு அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று
1.உங்கள் உடலுக்குள் நின்று உங்களை வேட்டையாட நினைக்கும் அந்தத் தீய விஷ உணர்வுகளையும்
2.வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும் வேட்டையாடுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மைகளை “மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச் செய்யுங்கள்…” அப்போது தான் அடங்கும்.

1.வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு
2.மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.

மெய் ஞானிகள் அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ அதே போல் அந்தத் தீமையான உணர்வை மாய்க்க அவர்கள் வழியிலே சென்றால்தான் முடியும்.

நிறையப் பேர் சாமியிடம் சென்று வந்தோம்… தலைவலியே இன்னும் போகவில்லை. சாமியிடம் சென்று என்ன கிடைக்கின்றது…? என்று எண்ணுவார்கள்.

அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால் மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து “சாமி” என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது என்ன செய்கிறார்கள்…?

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்…?

அன்று நடந்தது…! இன்று “யாம் சொன்ன வழிகளிலே நடந்தீர்களா?” என்று யாம் அவர்களிடம் கேட்டால்
1.ஆத்ம சுத்தி செய்ய “நேரம் இல்லைங்கே” என்று சொல்வார்கள்.
2.இது போன்று “நேரமில்லை…” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் என்றால்
3.“சாமியிடம் ஒன்றுமே இல்லை” என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்.

நமது வாழ்க்கையினுடைய நிலைகள் அவ்வாறு பயனற்றதாகப் போய் விடாதபடி “நாம் மெய் வழி காண்போம்…” என்ற எண்ணத்திற்கு வர வேண்டும்.

உங்களுக்குள் இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்பது.
1.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்திற்குள்
2.பல இரகசியங்கள் இருக்கின்றது.

அனைவரும் இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின் யார் துன்பப்பட்டு வந்தாலும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்கள் உடலில் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க அவர்களையும் ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.

யாம் எப்படி உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ இதைப் போன்று நீங்களும் செய்யுங்கள்.

1.உங்கள் மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள்.
2.இதை உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களை நம்புங்கள்.

நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியைப் பெற முடியும்.

யாரோ செய்து கொடுக்கிறார்… எவரோ செய்து கொடுப்பார்…! என்று எண்ணாதபடி நாம் இதைப் பெற முடியும். இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும், என்ற நிலைக்கு நாம் வரவேண்டும்.

உயிருடன் தொடர் கொண்டு…
1.அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது ஒவ்வொன்றும் நல்லதாகும்.
2.நம்மால் முடியுமா…? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.
3.எண்ணியதைப் படைக்கும் சக்தி உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
4.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்கு உண்டு.

அது எப்படி ஒளியாக நம்மை உருவாக்குகின்றதோ… உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் ஒளி அலைகளாக மாறி அது செயல்படும்.

ஆகவே… உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் “அந்த உணர்வாக…” நாம் மாற்ற வேண்டும்.

ஒன்றை ஒன்று விழுங்கித்தான் ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால் எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால் இந்தக் காற்றும் போர் முறைகளிலேதான் வருகின்றது.

பல அணுக்களின் நிலைகள் கொண்டு நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு எதிர் நிலையான அலைகள் பட்டவுடன் ஒன்றுக்கொன்று போர் செய்துதான் சுழிக்காற்றும் வருகின்றது. இவையெல்லாம் ஒன்றையொன்று வெல்லும் போது ஏற்படக்கூடிய மூச்சின் அலைகள்தான்.

ஆகையினாலே எல்லாமே இயற்கையின் செயல்தான்.

இவை அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. மனிதனாக இருக்கக் கூடிய நாம் எதைக் கொண்டு எதை வெல்ல வேண்டும்…?
1.நாம் இருளை வென்று ஒளியாக்க வேண்டும்.
2.இது தான் கடைசி நிலை.

அத்தகைய தன்மையை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன். எமது குருநாதர் யாம் அதைப் பெறுவதற்கு எதைச் செய்தாரோ அதைப் போன்று எமக்குள் அவர் காட்டிய ஆற்றலை உங்களுக்குப் பாய்ச்சுகின்றேன்.

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து அந்த ஆற்றலை நீங்களும் பெறலாம். நீங்கள் பெறப் போகும்போது… உங்கள் மூச்சலைகளை நீங்கள் சந்திப்போரும் பெற்று அவர்களும் அந்த ஆற்றலைப் பெறலாம்.

ஆத்ம சுத்தி என்ற கடும் ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்

ஆத்ம சுத்தி என்ற கடும் ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்

 

நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு ‘’புலி வருது… புலி வருது…’’ என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…?

‘’துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம்’’ சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்…’’

‘’ஐய்யய்யோ…! புலி வருது… புலி வருது…!’’ என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

சந்தர்ப்பத்தில்
1.நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும்.
2.‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்…”
3.உதவி செய்தாலும் அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள் உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி தடுப்பதற்குத் தான்
4.”ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தையே உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

‘’ஈஸ்வரா…’’ என்று உங்கள் உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி…‘’ அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
1.கண் திறந்து ஒரு நிமிடமும் கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்
2.பின் கண்ணைத் திறந்து துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும்
4.நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லி அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.
5.அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடியும்.

நாம் நகை வாங்கியபின் அதை மீண்டும் அடுத்த நகையாகச் செய்யும் போது அதில் உள்ள வெள்ளியையும் செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல
1.நாம் கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தை அடுத்த நிமிடமே நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது
2.நமக்குள் தீயது சேராது தடுக்கும் ஆற்றல் மிக்க சக்தியினைப் பெறத் தியானமிருக்க வேண்டும்.

‘’தியானம்’’ என்பது எது…? நமக்குள் கெட்டது சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும். இது தான் தியானம் என்பது.

பக்தியில் என்ன செய்கின்றோம்…? ‘பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள்.
ஆனால், தியானம் என்பது நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.

தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்தியை எடுத்து நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது. இந்தச் சக்தி இல்லையேல் அதைச் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்ய வாக்கின் நிலையாக உங்களுக்குக் கடும் ஆயுதமாகக் கொடுத்துள்ளேன்.

நீங்கள் எப்பொழுது, கடுமையான நிலைகளில் துன்பம் என்று பார்க்கின்றீர்களோ நுகர்கின்றீர்களோ கேட்கின்றீர்களோ அவைகள் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான் “ஆத்ம சுத்தி’’ என்ற ஆயுதம்.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.‘’நாளை நடப்பவை யாவும் நல்லவைகளாக இருக்கவேண்டும்
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்.
4.எங்கள் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் சக்தியாகப் படர வேண்டும் என்ற எண்ண அலைகளை நீங்கள் பரப்புங்கள்.

சதுர்த்தி

சதுர்த்தி

 

சதுர்த்தி என்றால் “நிறுத்துதல்…” என்று பொருள். ஒரு தவறு நடக்கின்றது என்று பார்த்து என்ன… ஏது…? என்று அதை நுகர்கிறோம் என்றால் உடலுக்குள் அணுவாக உருவாகதபடி அதை நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களில் கலக்க வேண்டும் என்று உள்ளே செலுத்தி விட வேண்டும்.

1.இந்த ரத்தம் தான் உடலில் உள்ள எல்லா உறுப்புகள் முழுவதும் சுற்றி வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் முன்னக்கூடியே செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு அணுவின் முகப்பிலும் அந்தக் காந்தப்புலன் இருக்கும். இதன் துணை கொண்டு அங்கே எண்ணப்படும் பொழுது ரத்தத்தில் இந்தச் சக்தி கலக்கின்றது.

உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் ரத்தத்தின் வழி தான் உணவை எடுத்து வாழ்கிறது.
1.காற்றில் இருக்கும் தன் இனமான சத்தைச் செடி கொடிகள் எப்படி எடுத்துக் கொள்கிறதோ
2.அதே மாதிரி உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் இரத்தத்தின் வழி தன் உணவை எடுத்துக் கொள்கின்றது.

இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் முன்னக்கூடியே அந்த அணுக்களுக்குச் செலுத்தி விடுகின்றோம்.

நாம் முதலில் நுகர்ந்த தீமை சிறிதளவு தான் உள்ளே சென்றிருக்கும். அதே சமயத்தில்
1.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லும் பொழுது…
2.முதலில் புருவ மத்தியில் தடுத்தது போல உள்ளேயும் நாம் தடுத்துக் கொள்கின்றோம்.

அதற்குப்பின் கண் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கருமணி தான் நாம் பார்ப்பதையெல்லாம் படமாகப் பதிவாக்குகின்றது.

அதனுடன் இணைந்த நிலையில் தான் நரம்பு மண்டலம் உள்ளது அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வின் செய்திகள் கண் கருமணி வழி… அதனுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் வழி தான் எல்லா அணுக்களுக்கும் செல்கின்றது.

1.அந்தக் கண் கருமணியுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் முழுவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி இணைக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியை எல்லோரும் நீங்கள் எடுக்க முடியும். ஒன்றும் சிரமம் இல்லை. ஒருவன் திட்டினான் என்றால் அவனைத் திரும்ப எண்ணுகின்றோம் அதே போல இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால் தீமை நமக்குள் வராது தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து… அதை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதை நீங்கள் செய்து பழகுங்கள்… தீமைகள் வராதபடி நாம் தடுக்கின்றோம்… அது தான் விநாயகர் சதுர்த்தி.

ஒவ்வொரு நிம்டமும் நாம் நுகர்வது உடலுக்குள் வினையாகின்றது. ஆனால் தீயவினை உருவாக்காதபடி அதை நாம் நிறுத்திப் பழக வேண்டும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. அறியாமல் தான் அத்தகைய உணர்வுகள் தீயவினைகள் நம் உடலுக்குள் நுழைந்து எத்தனையோ கலாட்டா செய்கின்றது.

அதை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. சுண்ணாம்புச் சத்தை எல்லாம் எடுத்து எலும்பாக மாற்றிக் கொள்கின்றது. அதற்குள் இருக்கக்கூடிய அணுக்கள் ஆகாரமாக எடுக்கிறது.

ஆனால் வேதனை அதிகமானால் அந்த விஷம் எலும்பை உருவாக்கிய அணுக்களை உணவாக எடுக்கத் தொடங்குகிறது. டி.பி. என்று சொல்வார்கள்.

அந்த விஷமான உணர்வுகள் எலும்புகளைத் தாக்கி விடாதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எலும்பை உருவாக்கிய அணுக்களுக்கு இணைத்து விட வேண்டும்.

இவ்வாறு…
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களிலும் நாம் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைச் சேர்த்து
2.தீமைகள் புகாத வண்ணம் ஒரு அடைப்பாக… அணைப்பாக… நாம் போட்டுக் கொள்ள வேண்டும்.