இருதய அடைப்பு… சிறுநீரகம் பழுதடைதல்… இன்று அதிகமாக வருவதற்குக் காரணம் என்ன…?

இருதய அடைப்பு… சிறுநீரகம் பழுதடைதல்… இன்று அதிகமாக வருவதற்குக் காரணம் என்ன…?

 

வான் வீதியிலே முதலில் உருவானது உயிரணு. மனிதர்கள் நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அது அணுவாக மாற்றுகின்றது நம்முடன் சேர்ந்து நம் உடலில் அதனுடைய இனத்தைப் பெருக்கும் பொழுது அது ஜீவ அணுவாக மாறுகின்றது.

வான் வீதியில் இருந்து வரப்படும் பொழுது
1.மற்ற கோள்களின் சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கொண்டால் அது வெறும் அணு
2.அந்த அணுவை உயிரணுக்கள் (உயிரினங்கள்) சுவாசித்து நுகர்ந்தால் ஜீவ அணுவாக மாறுகின்றது… ஜீவ அணு அடுத்து ஜீவான்மா.

ஒருவன் நோய்வாய்ப்பட்டிருக்கின்றான் என்றால் அந்த உணர்வுகள் அந்த உடலில் அது ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உடலிலே விளைந்ததை கூர்மையாக உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தன்மை நம் உடலில் எடுத்துக் கொள்ளும்

நோய்வாய்ப்பட்ட மனிதன் உடலை விட்டுப் பிரிந்தான் என்றால்
1.அவன் உடலில் விளைந்த சக்தி நமக்குள் இருப்பதால்
2.அதன் வலிமை கொண்டு அந்த ஆன்மா நமக்குள் வந்து விடும்.
3.நம் உடலில் வந்த பின் ஜீவான்மாவாக மாறும்… நமக்குள் வட்டமிடும்

ஜீவான்மா எங்கே இருக்கிறது என்றால் இரத்தத்திற்குள் தான் இருக்கும். சில ஆவி பிடித்தவர்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அதனுடைய வேகத் துடிப்புகள் இருக்கும் பொழுது… இரத்த ஓட்டங்களில் சுற்றிக் கொண்டு வருவதைக் காணலாம்.

மூளை பாகம் அந்த ஆன்மா வரப்படும் பொழுது தன் எண்ணங்களைஅது இயக்கும். மறுபடி நகர்ந்து ரிட்டன் ஆகும். வெளியே வந்த பின் சாந்தமாகிவிடும்

1.தன் உணர்வின் எண்ணங்களை அது எதை எதை எடுத்து இருக்கின்றதோ அதை எல்லாம் அங்கே பேசும்.
2.அந்த உணர்வுக்குத் தக்கவாறு வேண்டாததை எல்லாம் கேட்கும்… வேண்டாததை எல்லாம் பேசும்.

இரத்த நாளங்களில் உள்ள ஜீவான்மா என்பது இது தான்.

நமக்குள் வந்து அதற்கு வேண்டிய உற்பத்திகளை செய்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். அதனுடைய எண்ணங்கள் தோன்றப்படும் பொழுது நாம் சுவாசிக்கின்றோம்… உடலுடன் சேர்கின்றது… உணர்வின் அணுக்களாகிறது.

ஜீவணுக்கள் என்பது தசைகளில் போய்ச் சேர்ந்து கொள்கின்றது. எந்தெந்த குணங்களை எடுத்தோமோ வெளியில் இருந்து அந்த உணர்வுகளை எடுத்து விளையும்.

செடியிலே வித்து விளைகின்றது அதே போன்றுதான் ஒரு மனித உடலில் எண்ணங்கள் உருவாகி ஊழ் வினை என்று வித்துக்களாக உருவாகின்றது. பின் உடலில் இருந்து அலைகளாகப் பாய்கின்றது.

நான் பேசுகிறேன் என்றால் சூரியனின் காந்த சக்தி அதை அணுக்களாகக் கவர்கின்றது. சுவாசித்து அந்த உணர்வு உடலுக்குள் வரும் பொழுது ஜீவணுக்கள்.

நான் இறந்து விட்டால் அந்த உணர்வை நுகர்ந்தால் ஜீவாத்மாவாக வருகின்றது இரத்தத்திலே தான் இருக்கும் இரத்தத்திலே சில மாற்றங்களை எடுத்து… உணவை எடுத்து வாழும்.

பேய் பிடித்தது… ஆவி பிடித்தது… ராட்சச உணர்வு வருகிறது என்றெல்லாம் சொல்வார்கள். பல் நீட்டிக் கொண்டிருப்பது போன்று எந்தெந்தக் கொடூரமான சிலைகளை உருவாக்கினார்களோ அதையே வணங்கி அந்த உணர்வினை எடுத்து அந்த அலைகள் பதிவான பிற்பாடு இறந்து விட்டார்கள் என்றால் அதே உருவமும் இயக்கமும் வரும்.
1.அது எப்படி அடக்கி ஆட்சி புரியும் தன்மை வந்ததோ
2.உடலுக்குள் வந்த பின் வாய் பேச விடாது.

(ஆவி பிடித்தவர்கள் பேசாத நிலைகள் எத்தனையோ உண்டு).

அது நம் இரத்தத்திற்குள் தான் இருக்கும். இந்த அணுக்கள் உடலுடன் ஒட்டி வரும். தீமையின் உணர்வு வரப்படும் பொழுது அணுக்களாக மாற்றாது.

இரத்தத்தில் தான் அணுக்கள் பெருகும். இந்த அணுக்கள் பரப்பப்படும் பொழுதுதான்
1.சில சமயம் இருதயத்திற்கு அந்த ஆன்மா வரப்படும் பொழுது இருதயத்தின் துடிப்புகள் குறையும்… அதை அடைக்கும் (ஹார்ட் அட்டாக்)
2.இரத்தத்துடன் கழிவுகளாக வரும் பொழுது கிட்னிக்குள் வந்தால் கிட்னி ரிப்பேர் ஆகும்
3.அதை வடிகட்டும் தன்மை இழக்கப்படும் பொழுது விஷத்தன்மை பாய்ந்து சிறுநீரகங்கள் பழுதடைந்து விடும்.

இன்றைய உலகில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதை “நாம் தெரிந்து நடப்பது தான் நல்லது…!”

இன்றைய உலகில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதை “நாம் தெரிந்து நடப்பது தான் நல்லது…!”

 

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம் ஆனால் அஞ்ஞான வாழ்க்கையே வாழுகின்றோம்.

ஆனால்
1.வாழ்க்கையில் வரும் துன்பங்களை எவ்வாறு நீக்குவது…?
2.மனிதன் ஆன பின் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எப்படிப் பெருக்குவது…?
3.தீமை இல்லாத வாழ்க்கையாக எவ்வாறு வாழ்வது…? என்பதனை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளது.

அவ்வாறு காட்டியிருந்தாலும்… இன்றைய உலகில் அரசர்கள் காட்டிய வழியில் அவர்கள் தத்துப்படித் தான் ஜாதகம் ஜோதிடம் யாகங்கள் வேள்விகள் என்று அனைத்துமே செயல்பட்டு கொண்டுள்ளது.

அரசன் வழியில் எடுத்துக் கொண்டால் “சத்ரிய தர்மம்” என்ற நிலையில் அவன் வாழ்க்கையில் தான் எதை ஆசைப்படுகின்றனோ அந்த ஆசையை நிறைவேற்ற எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று தான் உருவாக்கி வைத்தனர்.

உதாரணமாக ஒரு நாட்டிற்கு சென்று எனக்கு சிறிதளவு இடம் வேண்டும் என்று கேட்பான்.

இல்லை… கொடுக்க முடியாது என்றால் போர் முறை கொண்டு அதை எடுத்துக் கொள்வான். இப்படித்தான் ஆட்சிகள் நடந்து ஓர் அரசன் மற்ற அரசனை அடிமையாக்கி… தன் வாழ்க்கை என்ற நிலை வரும் பொழுது எல்லோரையும் அரசனுக்குக் கீழ் அடிமையாக்கும் நிலைகள் வளர்ந்து வந்தது.

ஆனால் அரசனை மதிக்கவில்லை அரச வழியில் நடக்கவில்லை என்றால் அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் பின் குற்றவாளியாக ஆக்கி உதைக்கவும் செய்கின்றார்கள். இதற்குச் சாட்சிகள் யாரும் இல்லை (பழைய சரித்திரத்தைப் படித்தால் தெரியும்).

இப்படித்தான் அந்த அரசர்கள் வெளிப்படுத்தியது மக்கள் மத்தியில் பரவி தர்மம் நியாயம் சத்தியம் என்று பேசுவது அனைத்தும் “வெறும் பேச்சு தான்…”
1.தர்மமும் நியாயமும் எல்லாம் எங்கே இருக்கிறது என்றால் அதர்மவாதி கையில் தான் இருக்கின்றது
2.அதர்மம் எவன் செய்கின்றானோ அவன் கை ஓங்கி வலு இருக்கின்ற நிலையில்
3.தர்ம நியதிப்படி ஒருவன் நடந்தான் என்றால் அவனை அதர்மவாதி என்று இவன் குற்றத்தைச் சுமத்தி அவனை அடக்குகின்றான்…
4.அவன் வழியில் தான் இவன் நடக்க வேண்டும்.

விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இப்படித்தான் இன்று நாம் வாழுகின்றோம்.

ஆனால் எந்த வழியில் வாழ்ந்தாலும் “செல்வம் இல்லை” என்று ஒருவர் வேதனைப்படுகின்றார்… அது ஒரு புறம். அடுத்து அவருக்குச் செல்வம் வந்து விட்டாலோ தேடிய செல்வத்தைப் பாதுகாப்பதற்கு எத்தனையோ பயப்பட வேண்டியுள்ளது.

செல்வம் இல்லாதவன் திடீரென்று செல்வத்தைச் சேர்த்து விட்டால் “நேற்று வரையிலும் இவன் ஓன்றுமில்லாதவனாக இருந்தான்… இப்போது எங்கிருந்தோ கொள்ளையடித்து வந்து விட்டான்” என்று ஒரு சாரார் சொல்கின்றனர்.

இவன் கடுமையாக உழைத்தான்… நல்ல முறையில் சம்பாதித்தான் பரவாயில்லை…! என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

நேற்று வரையிலும் சாதாரணமாக இருந்தவனுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று இன்னொருவர் சொல்கிறார்.
1.செல்வத்தைத் தேட இப்படிப் பல வகைகளிலும்
2.எதிரிகளை உருவாக்கும் நிலை தான் நடந்து கொண்டிருக்கிறது.

இது எல்லாம் அவருடைய செவிகளில் படும்பொழுது நான் நியாயமாகத்தான் சம்பாதித்தேன்… ஆனால் இப்படிப் பேசுகின்றார்களே என்ற வேதனை உணர்வுகளை நுகர்கின்றார்.

அவர்கள் எவ்வளவு பொறாமைப்பட்டனரோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது உடலுக்குள் பொறாமையின் உணர்வின் அணுக்கள் கருவாகி… அணுவாக உருவாகத் தொடங்கி விடுகிறது.

பிறர் பேசும் அத்தகைய நிலையை உற்றுப் பார்த்தால் அதை நகர நேர்ந்தால்
1.உயிர் அந்த உணர்வை இயக்கிக் காட்டுகின்றது…
2.இயக்கினாலும் அந்த உணர்வின் அணுவாக மாற்றி விடுகிறது.

ஆனால் அணுவின் கருவாக அது உருவாக்கி விட்டால் மீண்டும் அவன் எப்படிப் பொறாமைப்பட்டனோ அதன் உணர்வை மீண்டும் எண்ணி “என்னை இப்படிப் பேசுகின்றார்களே… என்னை இப்படிப் பேசுகின்றார்களே…! என்ற அந்த உணர்வை எடுத்து அதனின் அணுக் கருக்களாக உருவாகின்றது. அதன் வழி பேதமடையச் செய்யும் உணர்வுகள் உடலில் வளரத் தொடங்குகிறது.

நல்லதைச் செய்ய வேண்டும் என்றாலும் அடுத்து என்னை இப்படிப் பேசுகின்றான்… அப்படிப் பேசுகின்றான்… என்ற உணர்வுகளைத் தான் தோற்றுவிக்கின்றது. உண்மையின் இயக்கத்தை அறியாத நிலைகள் கொண்டு மாறுபட்டு வந்து விடுகிறது.

இப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதை “நாம் தெரிந்து நடப்பது தான் நல்லது…!”

காரணம்…
1.பகைமை உணர்வுகள் உலகெங்கிலும் அதிகரித்து விட்டது
2.எல்லோருடைய உடல்களிலும் அது விளைந்து விட்டது
3.பகைமையினால் ஏற்பட்ட அணுக்கள் அந்த உணர்வைத் தான் உணவாக எடுத்து கொள்ள நேர்கின்றது
4.அதை நுகர நேர்ந்தால் பகை உணர்ச்சிகளும் வெறுப்பு உணர்ச்சிகளும் காழ்ப்புணர்வுகளையும் தான் நமக்குள் தோற்றுவிக்கின்றது.

எந்தெந்தக் குணங்களை நுகர்ந்தோமோ அனைத்தும் உடலுக்குள் அந்த அணுவாக மாறிய பின் அதற்கு இரை தேவை… அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழி இந்த உயிர் எடுத்துக் கொடுத்து அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில்… அந்த மெய் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

1.அதை நீங்கள் வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தி பெற்று
2.என்றென்றும் அவர்களின் அருள் வட்டத்திலே வாழ்ந்திட வேண்டும்.
3.விஞ்ஞானத்தால் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்.

போற்றலுக்காக ஏங்கினால் ஆற்றலை இழந்து விடுவோம்

போற்றலுக்காக ஏங்கினால் ஆற்றலை இழந்து விடுவோம்

 

விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்தால் எந்த நிலை ஆகிறது…? என்று பார்ப்பார்கள். அதைச் செய்து முடித்து ஓட்டும் போது செயலிழந்து விட்டால் அது எப்படி… ஏன் தவறாக ஆனது…? என்று உடனே கண்டுபிடிப்பார்கள்..

உதாரணமாக ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றார்கள் என்றால் கால சூழ்நிலை எல்லாம் பார்த்துத் தான் அனுப்புகின்றார்கள்.
1.போகும் பாதையில் 27 நட்சத்திரங்களுடைய அதிர்வுகள் வரும்.
2.இராக்கெட் செல்லும் பாதையில் இந்த அதிர்வுகள் அதிகமானால் இயந்திரத்தைத் தாக்கும் தன்மை வரும்.
3.அதிர்வுகளிலிருந்து மீட்பதற்காக மேக்னட்டை (காந்தத்தை – SENSOR) வைத்திருப்பார்கள்.

அதிர்வினால் தாக்கப்பட்டு கீழே விழுந்தாலும் அந்த உணர்வின் தன்மையை பூமியில் (தரையில்) தொடர்பு வைத்திருப்பார்கள்.

இராக்கெட்டில் சென்றவன் இறந்தாலும் இது எந்த அதிர்வினால் தாக்கப்பட்டது…? என்று கண்டறிந்து… இதற்கடுத்து பாதுகாப்பான நிலைகள் கொண்டு இராக்கெட்டை அனுப்ப முற்படுகின்றார்கள்.

ஏற்கனவே அனுப்பியது எரிந்து கடலிலே விழுந்து விடுகின்றது. ஆனாலும் அதிலே எதிர்மறையான உணர்வின் எக்கோ (ECHO) அதிலே பதிய வைத்திருப்பான்.

பதிவானதை எடுத்துப் பரிசீலித்து
1.இராக்கெட் எதனால் செயல் இழந்தது…?
2.எதனுடன் எது மோதியது…? ஏன் இவ்வாறு பாழடைந்தது…?
3.எதனால் கீழே விழுந்தது…? என்று கண்டுபிடித்து அதைச் சரி செய்து மீண்டும் இராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புகின்றனர்.

அது ஏற்கனவே நடந்த நிகழ்ச்சி. ஆரம்பத்தில் அமெரிக்கா… இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அதை மீண்டும் திரும்பத் தரையில் இறக்கலாம் என்று விரும்பினார்கள்.

ஆனால் ரஷ்யா அதை என்ன செய்தது…?

விஞ்ஞானத் தத்துவப் பிரகாரம்
1.மனிதனின் உணர்வுகளை அந்த இயந்திரத்தில் (அமெரிக்க செலுத்திய இராக்கெட்டில்) பின்னாடி அது இணைக்கப்பட்டு
2.எக்கோ (ECHO)… கண்களைக் கொண்டு உடலில் பதிவு செய்து “எர்த்” ஆக்கி
3.இராக்கெட் விண்ணிலே சென்ற பின் உணர்வைப் பாய்ச்சி எரியும்படி செய்தான்.

இரண்டு மூன்று தடவை இவ்வாறு செயல்படுத்தினார்கள். அமெரிக்கா இராக்கெட்டுகள் இப்படி வீழ்ச்சி அடைந்தது.

பின்பு இது எதனால் வந்தது…? அந்த எக்கோ எதிலிருந்து பாய்ச்சப்படுகிறது…? என்று அவன் அறிகின்றான். ரஷ்யாவில் இருந்து தான் இது பாய்ச்சப்பட்டது என்று அறிந்து கொள்கிறார்கள்.

அறிந்த பின் அமெரிக்கா என்ன செய்கின்றது…?

ரஷ்யா தான் தன் இராக்கெட்டுகளை வீழ்த்தியது என்று கண்ட பின் ரஷ்ய அணு மின் நிலையத்தைக் கதிரியக்கங்களைப் பாய்ச்சி அதைச் செயலிழக்கும்படி செய்தான் அமெரிக்கா.

விஞ்ஞானத்தின் இவன் உணர்வுகள் எப்படி வளர்ந்தாலும் இதை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

ரஷ்ய அணு மின் நிலையம் வெடித்த பின் விவசாயம் மற்றது எல்லாம் அங்கே பாழ்பட்டது. விஷத்தின் தன்மை அதிகமான பின் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டது.

அந்த நாட்டிற்குள் கடவுளின் தன்மையைப் புகுத்தி மதப் போர்கள் இனப் போர்கள் அதிகமாகி… மக்களை அதை வைத்துப் பிரிக்கும் தந்திரத்தைக் கையாண்டது அமெரிக்கா.

அதனால் ரஷ்யா வல்லரசாக இருந்தாலும் பிரிந்து… வீழ்ச்சி அடைந்து விட்டது. இருந்தாலும் எல்லாப் பக்கமும் சேர்ந்து நெருக்கடி ஆகும் பொழுது அமெரிக்காவும் இன்று செயலிழக்கும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

உலகம் சுருங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய வேளையில் உலகைக் காக்கும் ஞானிகள் நம் நாட்டில் இருந்து வருவார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எந்தத் தாய் தந்தையர் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டார்களோ அவர்கள் கருவிலே ஞானக் குழந்தைகள் உருவாகி அவர்கள் தான் அதைச் செயல்படுத்துவார்கள்.

மெய் ஞானிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் எடுக்கப் பழக வேண்டும் ஒவ்வொரு நிமிடத்திலும் அதை சேர்த்துப் பாருங்கள்.
1.உடலில் அந்த அணுக்கள் விளைந்து கொண்டே வரும்
2.நீங்கள் எண்ணக்கூடிய காரியங்கள் ஜெயமாகிக் கொண்டே வரும்
3.நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை செல்வம்.. தன்னாலே தேடி வரும்
4.உங்கள் சொல் பேச்சு இவைகளுக்கு மரியாதை கிடைக்கும்
5.பிறருடைய கஷ்டங்களும் நீங்கும்… உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணங்களும் வரும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் விளைய வைத்து அதை நீங்கள் வெளிப்படுத்தும் போது நண்பர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கும் நல்லதாகும்.

உங்களிடம் பேசி விட்டுச் சென்ற பின் என் தொழிலில் நன்றாக நடந்தது குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைத்தது என்று சொல்வதை நீங்கள் கேட்க முடியும். இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அருளைப் பெற வேண்டும் என்று சென்றால் நல்ல சிந்தனை வரும் எல்லாமே நம்மைத் தேடி வரும். உங்கள் எல்லோரையும் உயர்த்தும்.

அதைக் கண்டு மற்றவர்கள் போற்றலாம்
1.போற்றலுக்கு ஆசைப்பட்டு அதன் வழி சென்று விட்டால் நம்முடைய ஆற்றல் போய்விடும்
2.நாம் போற்றலுக்காக ஏங்கக் கூடாது.

எல்லோரும் உயர வேண்டும் என்ற அந்த உணர்வைத் தான் நாம் போற்ற வேண்டும். இல்லை என்றால் ஆற்றலை இழந்து விடுவோம்… நல்லதைச் செய்தும் பலன் இல்லாது போகும்.

எதுவாக இருந்தாலும் போற்றலுக்காக வேண்டி அதைச் செய்தால் பின்னாடி வெறுப்பின் தன்மையைத் தான் ஊட்டும். வெறுப்பான பின் நாம் செய்தும் பலன் இருக்காது. வெறுப்பு வளர வளர எல்லார் மேலும் அதிகமாகி கார உணர்ச்சிகள் தான் அதிகமாகும்.

ஆகவே… உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் கார்த்திகேயா என்ற நிலையில் ஞானிகள் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து ஒளியின் சரீரமாக நாம் உருவாக்குதல் வேண்டும்.
1.மீண்டும் இன்னொரு உடல் பெறக் கூடாது
2.இந்தச் சரீரத்திலிருந்தே ஒளிச் சரீரம் பெறுதல் வேண்டும்
3.உயிருடன் ஒன்றும் உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

காட்டிற்குள் குருநாதர் அழைத்துச் சென்றார் பல அனுபவங்களைக் கொடுத்தார்… நான் பெற்றேன். அது எப்படி…? என்ன…? என்று அறிந்து கொள்ளும்படி செய்தார்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனையோ வேதனைகளை நான் அனுபவிக்க நேர்ந்தது. வேதனையை நுகர்ந்த பின்
1.என் உடலுக்குள் எப்படி எல்லாம் மாற்றங்கள் ஏற்படுகிறது…?
2.உடலுக்குள் எப்படி எல்லாம் மாறுபடுகின்றது…? என்று அதையெல்லாம் காண்பிப்பார்.

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் திடீரென்று சில நேரங்களில் வயிற்றால் போய்விடும்… ஒன்றுமே செய்ய முடியாது.

சாமி எனக்குக் கிரக்கமாக வருகின்றது என்பேன்.

1.நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா… நுகர்ந்தாய் அல்லவா
2.அது உன் உடலுக்குள் சென்ற பின் மற்ற அணுக்களை எல்லாம் அடக்கி
3.உன் உறுப்புகளைச் சீராக இயக்க விடாதபடி எப்படி இயக்குகிறது…? பார்…!

ஆனால் நீ தவறு செய்யவில்லை.

1.நீ நன்றாகத்தானே சுவாசித்துக் கொண்டிருந்தாய்
2.நீ ஆகாரம் ஒன்றும் சாப்பிடவில்லை.
3.சாப்பிடவில்லை என்றாலும் இது எப்படி வயிற்றால் போகின்றது…?

இப்படித்தான் பல வகைகளிலும் என்னைச் சிரமப்படுத்தி அதை அறிந்து கொள்வதற்குச் சூழ்நிலைகளை உருவாக்கினார்.

அதே போன்று உங்களுக்கும் இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கலாமா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

சாதாரணமான நிலைகள் நீங்கள் நுகர்ந்த உணர்வு உங்களுக்குள் சென்ற பின் “சாமி எங்களை ரொம்பச் சோதிக்கின்றார்…!” என்று எண்ணுவீர்கள்.

ஏனென்றால் சாமி சொன்னதைக் கேட்டு அதன் வழி நடந்து வரும் பொழுது சாமியை நினைப்பார்கள்.
1.சாமி சொன்னார் என்று நான் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றேன்
2.ஆனால் என்னை எப்படி எல்லாம் பேசுகின்றார்கள்…?
3.என்னால் பொறுக்க முடியவில்லை… என்னால் தாங்க முடியவில்லை நான் எப்படி இப்படியே பொறுமையாக இருப்பது..? என்று
3.நான் சொன்ன உயர்ந்த கருத்துக்களை விட்டு விடுகின்றார்கள்… பிறர் உணர்வை எடுத்துக் கொள்கின்றார்கள்.
4.நான் சொன்னதை நிறுத்திவிட்டு அதைத் தான் வளர்க்க முடிகிறது.

சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் இயக்குகின்றது. இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

சில குடும்பங்களில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் பொழுது ஒருவருக்கொருவர் கவலையாக… சங்கடமாக… பேசிக்கொள்வார்கள்… சஞ்சலமாகப் பேசுவார்கள்.

சாப்பிடும் போது இப்படிக் கவலையாகப் பேசுவது எல்லாம் என்ன ஆகும் என்றால் அவர்கள் பட்ட வேதனை எல்லாம் அந்த உணவோடு சேர்த்து உடலில் அணுக்களாக உருவாகும்.

1.ஒருவர் சொல்வதை எல்லோரும் உ..ம் கொடுத்துக் கேட்பார்கள்.
2.இது வளர்ந்த பின் சாப்பிடும் பொழுதெல்லாம் அந்த எண்ணங்கள் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்
3.அந்த அணுக்கள் வளர்ச்சி அடைவதற்கு இதுவே ஏதுவாக மாறிவிடுகின்றது.

ஆனால் சந்தோஷமாகச் செய்து அந்த மகிழ்ச்சியான உணர்வு கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். எல்லாமே சந்தோஷமாக இருக்கும்.

ஆனால் சாப்பிடும் போது வேதனையாகச் சொல்லிப் பாருங்கள். அது எத்தகைய வேதனைகளை உருவாக்குகிறது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதனால் பல நோய்கள் வரக் காரணமாகின்றது.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நன்மை தீமையைப் பார்ப்பதைக் காட்டிலும்… “வேண்டியவரா… வேண்டாதவரா…” என்று தான் முதலில் பார்க்கின்றோம்

நன்மை தீமையைப் பார்ப்பதைக் காட்டிலும்… “வேண்டியவரா… வேண்டாதவரா…” என்று தான் முதலில் பார்க்கின்றோம்

 

கண் கொண்டு ஒருவரைப் பார்க்கின்றோம்…
1.அவர் தனக்கு வேண்டிய நண்பர் என்று எண்ணும் பொழுது அவர் செய்யும் குறைகளை மறந்து விடுகின்றோம்.
2.அவர் எவ்வளவு குறைகள் செய்யட்டும்… தப்புகள் செய்யட்டும்… அந்தக் குறைகளை எண்ணுவதில்லை.

அவர் செய்யக்கூடிய தவறுகளைப் பற்றி யாராவது நம்மிடம் வந்து சொன்னால் “இல்லைங்க… அவர் நல்ல மனிதர்” என்று நாம் சொல்லி விடுகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் “நமக்கு அவரைப் பிடிக்கவில்லை” என்ற உணர்வை எடுத்தவுடன்
1.அவர் நல்லது செய்கிறார் என்றாலும் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பாகத்தான் எண்ணுகின்றோம்
2.அவர் எவ்வளவு நல்லது செய்யட்டும்… வெறுக்கத்தான் செய்வோம்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டப்பட்டது.

பாசத்தால் வரும் போது “வேண்டியவர்” என்று எண்ணும் பொழுது குறைகளை நீக்கும் உபாயத்தைக் காட்டுகின்றோம்.

ஆனால் “நமக்குப் பிடிக்கவில்லை” என்றால் அவர் நல்லது செய்தாலும் அவர் செய்வதைக் கெடுப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

1.ஆக எந்த எண்ணத்தை எடுத்துக் கொள்கின்றோமோ அதுவாக நாம் ஆகின்றோம்.
2.நம் கண் பார்வையும் அதுவாக ஆகின்றது…. அதன் செயலாக்கமாகவே நம் கண்ணும் வழிகாட்டுகின்றது.

ஒன்றைப் பார்க்கப்படும் பொழுது உணர்வின் ஒளியாகக் காட்டுவது கண்களே. அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் குருக்ஷேத்திரப்போர்… அந்த உணர்வின் இயக்கமாகத்தான் நம்மை இயக்குகின்றது.

கண் எதைக் காட்டியதோ அந்த உணர்வின் அணுவாக அது விளைகிறது. அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எண்ணும் போது அதுவே நமக்குள் பார்வையாக வருகின்றது

அதனால் தான்
1.மகரிஷிகள் இத்தகைய தீயவினைகளை நீக்கிடும் விதமாக விநாயகர் சதுர்த்தி என்று காட்டியுள்ளார்கள்.
2.தீமைகள் உனக்குள் விளையாது நிறுத்து… சதுர்த்தி செய்…! என்று சொன்னார்கள்.
3.சந்தர்ப்பத்தால் நமக்குள் வரும் பகைமைகளை உருவாகாதபடி தடுக்க வேண்டும்.

ஆனால் இன்றைய காலகட்டங்களில் விநாயகர் சதுர்த்தி அன்று தீய வினைகளை நாம் ஞானிகள் காட்டிய வழியில் நீக்குகின்றோமா…?

நண்பன் என்று தான் முதலில் பழகினோம். அவர்கள் வாழ வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் சந்தர்ப்பம் வெறுக்கும் உணர்வுகள் வளர்ந்து விடுகின்றது. இருவருக்குள்ளும் பதிவான பின் இருவரையுமே அது வீழ்த்துகின்றது.

இப்படி நம்மை அறியாமலே நமக்குள் வரும் பகைமைகளை நீக்க வேண்டும் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றது

வினையெல்லாம் தீர்ப்பவனே… விநாயகனே ஆதி முதல்வனே… ஓம் என்ற பிரணவத்திற்கு உரியவனே…! என்று பாடல்களைப் பாடுகின்றோம் புகழ் பாடுகின்றோம்… பொருளைத் தேடுகின்றோம்…!
1.அகம் காண அறிவின் தன்மை நாம் தேடுவதே இல்லை
2.அகம் காட்டும் அறிவினை அகத்திற்குள் சேர்த்து… அந்த அறிவினை நாம் தேடுவதில்லை
3.அகத்திற்குள் அந்த உணர்வின் அறிவு இருந்தால் தான் பொருளின் உண்மையின் உணர்வை (மெய்ப்பொருள்) நாம் அறிய முடியும்.

நமக்குள் தெளிந்திடும் அறிவை ஊட்டிய அருள் ஞானிகள் உணர்வை வினையாகச் சேர்க்க வேண்டும். இது தான் மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை. சாஸ்திரங்களில் கூறப்பட்ட உண்மைகளும் இது தான்.

பேரானந்தப் பெரு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்… அதை வினையாக மாற்ற வேண்டும்.
1.என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் மகரிஷிகளின் அருள் உணர்வு கிடைக்க வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

கோவிலில் இதைக் காட்டி இருந்தால் அதை நாம் அவமதிக்கக் கூடாது. ஞானிகள் காட்டிய முறைப்படி இதை எண்ண வேண்டும். ஆலயங்களுக்குச் சென்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை வளர்க்க வேண்டும்.

நல்லதை வளர்ப்பதற்காக நாங்கள் சேவை செய்கிறோம் என்பார்கள்

நல்லதை வளர்ப்பதற்காக நாங்கள் சேவை செய்கிறோம் என்பார்கள்

 

மனதில் நாம் எதைப் பதிவு செய்கிறோமோ அது தான் இயக்கும்.

உதாரணமாக… உங்களுக்கு முன்னாடியே நல்லது செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.ஆனால் அதை நீங்கள் மோசமாக எண்ணுகின்றீர்கள்
2.அப்போது நல்லது செய்தார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வீர்களா…?
3.அதில் எப்படிக் குறை காணுவது…? என்ற உணர்வு தான் வரும்.
4.அது உங்களுக்கே தெரியாது… உங்களுக்குத் தெரியாமல் அது இயக்குவது தான்.

ஆகையினால் குறையான உணர்வுகள் வந்தபின் நல்லது செய்கிறார்கள் என்றால் அதிலே எப்படியெல்லாம் குறைகளைக் காண வேண்டுமோ அப்படி எல்லாம் அதைத் திருப்பிக் கொண்டு வரும். ஆக நல்லதாக்கும் நிலைகளுக்கு வராது. இது எல்லாம் மனிதனுடைய இயற்கையின் நிலைகள்.

எவ்வளவு பெரிய சக்தி எடுத்தாலும் எல்லாம்… எல்லாம் அனுபவித்தாலும் “நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த ஆதங்கம்”
1.மற்றவருடைய நிலைகளைப் பார்க்கப்படும் போது
2.தன்னை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் நிலை வருகின்றது.

நன்மை செய்வதற்கு நான் பற்று கொண்டுள்ளேன்… ஆனால் மற்றவருக்குப் பற்று இல்லை என்கிற பொழுது இந்த மாதிரிக் குறைகளை வடிவமைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இதனால் எத்தனையோ பிழைகள் வருகின்றது.

இத்தகைய உணர்வுகள் ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றும். நாம் போகும் பாதையை விட்டுவிட்டுத் திசைகளைத் திருப்பும்… ஆனால் சேவை செய்ய வேண்டும் என்ற பற்று இருக்கும்.

எல்லா உணர்விலும் அது சாம்பிள் போட்டுக் கொண்டே இருக்கும் நன்றாக இருக்கின்றது நல்ல ருசியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஸ்ஸ்…ஆ…! காரமாக இருக்கிறது நல்லதைக் காரமாகச் சொல்வது போன்று காண ஆரம்பிக்கும்.

இது எல்லாம் அன்பைக் காட்டுகின்றது ஆனால் பேராசையைக் காட்டுகின்றது ஆனால் கடைசியில் நிராசையாக மாறுகின்றது.
1.இந்தப் பேராசை (நல்லது செய்ய வேண்டும்) என்ன செய்யும்…?
2.நிராசையாக மாற்றிக் கொள்ளும் சக்தி தான் வருகின்றதே தவிர நல்லாக்கும் நிலை இல்லை.

பேராசை என்கின்ற பொழுது எப்படி இருக்க வேண்டும்…?

நீங்கள் (அடுத்தவர்கள்) உயர வேண்டும் என்றால் இது பேராசை.
1.நான் உயர வேண்டும்…
2.நான் உயர்ந்திருக்கின்றேன் என்ற இந்தப் பேராசை வரக்கூடாது.

இதுவும் பேராசை தான்… அதுவும் பேராசை தான்.

மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எப்படியும் தெளிந்த மனம் எல்லோருக்கும் வர வேண்டும் என்ற இந்தப் பேராசை நம்மைக் குறைகளிலிருந்து மீட்கச் செய்யும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறை காணும் இயல்புகள் உண்டு எனக்கும் கூட உண்டு உங்களிடம் எல்லாம் சொல்கின்றேன் அந்த மாதிரி உணர்வு… சில நேரங்களில் எனக்குள்ளும் (ஞானகுரு) வரும்.

இதனால் தான் குருநாதர் என்ன செய்தார்…?

ஒரு சந்தர்ப்பம் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு மரத்தைக் காண்பிக்கின்றார். “தூக்கி வீசுடா…..!” என்றார் அவர் சொன்ன முறைப்படி செய்த பின் மரம் பறந்து போய் அங்கே விழுகின்றது.

1.அடுத்து எனக்குத் திமிரே வருகின்றது
2.யாராவது ஏதாவது செய்யட்டும்… நான் தூக்கிப் பந்தாடுகின்றேன் பார்…! என்று சொல்கின்றேன்.

“இப்போது உனக்குத் திமிர் வந்து விட்டது” என்று குருநாதர் சொல்கின்றார். எதற்காக வேண்டி உன்னை மரத்தைத் தூக்கி எறியச் சொன்னேன் தெரியுமா…?

ஒருவருக்குள் ஆட்டிப் படைக்கும் தீய சக்திகளைத் தூக்கி எறிய வேண்டும்.

சாதாரணமாக ஜீவனுடன் வாழும் அந்த மரத்தைத் தூக்கி எறிந்த உடனே உனக்குத் திமிர் வருகின்றது. அதை வைத்து யாரை வேண்டுமென்றாலும் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணம் தானே உனக்கு வருகின்றது என்று அந்த இடத்தில் அதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அந்தத் திமிர் வருவதனால்… யாராவது கோபித்துச் சொன்னால் அல்லது தவறாகச் செய்தால்
1.இருக்கட்டும்… கொஞ்சம் சுண்டிப் பார்க்கலாம்
2.அப்போதுதான் அவருக்கு அந்த அனுபவம் வரும் என்று நான் இதைச் செய்தால் எப்படி இருக்கும்…?

குறைகள் தான் வரும்.

அதை நிவர்த்திப்பதற்குண்டான வழியைத் தானே நான் சொல்ல வேண்டும்.
1.இன்னென்ன காரணத்தால் குறைகள் ஏற்பட்டது
2.அதனால் அது உங்களை இப்படிப் பாதிக்கின்றது என்று வழி காட்ட வேண்டுமே தவிர
3.அங்கே குறையைக் குற்றமாக ஆக்கி அவரைத் தண்டிக்கும் நிலைகளுக்கு வரக்கூடாது.

குருநாதர் எனக்கு முதலில் இதைத் தான் உணர்த்தினார்.

என்னைப் பெரிய ஆளாகக் காட்டுவதற்கும்… என்னை மெச்சும்படி செய்வதற்கும்… உங்களுக்கும் அந்தச் சக்தியைக் கொடுத்து மரத்தை தூக்கி எறியச் செய்யலாம்.

அப்போது உங்களுக்கும் அதே எண்ணம் தான் வரும். மனிதனுக்குள் இது போன்ற சக்திகள் கிடைத்தால் உடனே… அப்போதே… அந்தத் திமிர் வரும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.நல்லது என்ற எண்ணத்தில் மற்றவருக்குச் சேவை செய்யும் நேரங்களில் இது போன்ற சில உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.
2.நாம் அல்ல… நாம் எடுத்துக் கொண்ட ஆர்வத் துணிவு குற்றத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதில் குற்றத்தைப் பெருக்கத்தான் செய்யும்.

குற்றம் என்ற நிலையில் அவர்கள் தாழ்ந்து போனால் “பேசாமல் போகின்றார்கள் பார்…” என்ற நிலை வந்துவிடும். அதைக் கொண்டு குற்றங்களை எப்பொதுமே மாற்ற முடியாது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆகவே சேவை செய்ய நாம் அணுக வேண்டிய முறைகள் எப்படி இருக்க வேண்டும்…?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று அவர்களை மதித்து
1.அங்கே அமைதி பெறும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.அமைதி பெறச் செய்யும் அந்தச் சக்தியை கொண்டு வந்தால் தான் அது சீராகும்.

அது அல்லாதபடி மற்ற எத்தனையோ பெரிய நிலைகளைச் செய்தாலும்
1.ஞானத்தின் வழியில் தேர்வு பெறுவது கடினம் தான்…
2.ஒரு சிலர் தான் தேற முடியும்.

கூட்டமாக ஒரு பக்கம் வந்து கொண்டே இருந்தாலும் “இதிலே என்னடா இருக்கின்றது…?” என்று களைந்து வெளியில் போய்க் கொண்டு தான் இருப்பார்கள்…. வர முடியாது… இதை வளர்க்கவும் முடியாது.

உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா…!

ஞான வழியில் வளர்வதற்கு மாறாகத் “தன்னுடைய செயல்கள்தான் உண்மை…” என்று அதை நிலை நாட்டும் போது நல்லதை நிலைநாட்ட முடியாது போய் விடுகிறது.

இரக்கப்படும் குணத்தைப் பற்றிய உண்மை – “நன்றிக் கடன்”

இரக்கப்படும் குணத்தைப் பற்றிய உண்மை –  “நன்றிக்கடன்”

 

உதாரணமாக நாம் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அப்பொழுது பக்கத்திலே ஒருவர் கடுமையாக வேதனைப்படுகின்றார்… பார்க்கின்றோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள்.

இதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் அவரிடம் அதிகமான பழக்கமில்லை. இரயிலில் போகும் பொழுது தான் அவரிடம் நாம் யதார்த்தமாகப் பழகுகின்றோம்.
1.அவர் படும் வேதனையை நாம் மிகுந்த இரக்கத்துடன் பார்க்கின்றோம்.
2.ஆனால் அவருடன் கூட வந்தவர்கள் சலிப்பாக சஞ்சலமாகத் தான் பேசுவார்கள்.
3.ஏனென்றால் அடிக்கடி அவர்களிடம் துயரப்பட்டுப் பழகியதால் அந்த நிலை.

இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இந்த மாதிரி அடிக்கடி அது வேண்டும்… இது வேண்டும்… என்று கேட்கிறாய்…? என்பார்கள்.

ஆனால் நாம் இரக்க மனம் கொண்டு ஏனம்மா…! என்ன செய்கிறது…? உனக்கு என்ன வேண்டும்…? என்று இரக்கத்துடன் கேட்கின்றோம். ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே நாம் பழகியது…!
1.அது அவருக்குள் பதிவாகிறது.
2.அவருக்கு ஆதரவாக நாம் அப்படிப் பேசுகின்றோம்.
3.பண்புடன் நாம் அங்கே சொல்லப்படும் பொழுது அவர்களுக்குக் கொஞ்சம் தணிவாகின்றது.
4.இந்த உணர்வு “அவருடைய உடலில் வலுப்பெற்று விடுகின்றது…”

நாம் என்ன நினைக்கின்றோம்…? அந்த அம்மா இவ்வளவு தூரம் சிரமப்படுகின்றது ஆனால் கூட வந்தவர்கள் கொஞ்சம் கூட இரக்கமில்லாதபடி இப்படிப் பேசுகிறார்கள்… சமுதாயம் இப்படி இருக்கின்றதே…! என்று “அவர்கள் உணர்வை நமக்குள் பதிவு செய்கிறோம்…”

ஆனால் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் அவரை சார்ந்தவர்கள் வரப்படும் பொழுது நோயாளிக்குள் எண்ணங்கள் அதிகமாகிறது.

பார்…! ஆரம்பத்திலிருந்து இவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தோம்… எத்தனை வசதிகள் செய்தோம்… நல்லது செய்தோம்…! நம்மை இவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை…!

ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது அந்த மகாராசி எனக்கு அவ்வளவு ஆதரவாக உதவி செய்தார்… எந்த அளவுக்கு உபசாரம் செய்தார்…! என்று இந்த உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

நாம் அவர்கள் பட்ட வேதனையை வலுப்பெற்று வைத்திருக்கின்றோம்
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…
2.நம்முடைய உணர்வுகள் பதிவானது அங்கே….
3.அவர் வீட்டில் அவரைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பு.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் போது தனக்கு இரயில் பிரயாணத்தில் உதவி செய்த நல்லவர் மீது… அதாவது நம் மீது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது.

விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்…!

அப்படி எண்ணிய உடனே அந்த உயிரான்மா
1.நாம் இங்கே இருந்தாலும் எதனின் வலுப்பெற்றதோ இங்கே இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது.
2.நம் உடலில் புகுந்து விடுகிறது… நமக்குத் தெரியாது… ஒன்றுமே தெரியாது.

ஆனால் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்படைந்த உணர்வைப் பதிவு செய்தது… “எல்லோரும் பாவிகள்” என்று அங்கே அந்த எண்ண அலைகளைப் பரப்புகின்றது.

அந்தச் சாப அலைகள் அந்தக் குடும்பத்தையே சாடுகின்றது. இந்த உடலில் விளைந்தது அங்கே போகின்றது

தன் மீது பற்று கொண்ட உணர்வின் நினைவுடன் “மகராசி எனக்கு உதவி செய்தார்…” என்று அவர் உடலில் விளைந்தது இங்கே வந்து… விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்குமோ அது போன்று அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.

கடைசி நேரத்தில்
1.என்னென்ன வேதனைப்பட்டுப் புலம்பல் ஆனதோ
2.தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாவிகள் என்று வெறுப்புடன் எப்படிப் பேசியதோ
3.அது எல்லாம் இங்கே வந்து அவர் செயல்படுத்தியது போன்றே தன் குடும்பத்தில் வெறுப்பாகப் பேசும்.

குடும்பத்தில் சிலருடைய நடவடிக்கைளைப் பார்க்கலாம்…! நேற்று வரை எல்லாம் செய்தார்… இப்பொழுது என்னமோ தெரியவில்லை “கண்டபடி வெறுத்துப் பேசுகின்றார்…! நல்லது செய்தவர்தான்… ஆனால் வெறுத்துப் பேசுகின்றார் என்று அவருடைய செயலாக்கங்கள் திடீரென்று மாறுவதைப் பார்க்கலாம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே ஏற்படக்கூடிய சில தீங்கான நிலைகள்…!

இதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம்.
1.அறியாமல் வரக்கூடிய தீங்குகளை… அதனின் உண்மையை உணர்ந்து
2.ஞானிகள் காட்டிய வழியில் அதை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

பிறருக்கு நாம் எப்படி உதவி செய்ய வேண்டும்…? உதவி செய்தாலும் அவர் பட்ட துன்பங்கள வேதனைகளும் நமக்குள் வராதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்…?

1.நம்மையும் காத்து பிறரையும் காக்கும் சக்தியாக
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்பதற்குத்தான்
3.இதை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு

ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு

 

தியானம் செய்யும் அன்பர்களுக்குள் கொஞ்சம் குறையாக வந்து விட்டால் குறையை வளர்த்துக் கொள்ளத்தான் முடியுமே தவிர “மகரிஷிகள் உணர்வை எடுக்க முடியாது…”

1.கூட்டமைப்பாக இருக்கும் ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்ற நிலை வரும் ஆனால் குறைகள் தான் வளரும்…
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்பது முதலில் வராது.

தன்னுடைய நிலைகள் முன்னணியில் எது போகும்…?

எதன் வளர்ச்சி வந்ததோ நம்மை அறியாமலே ஸ்தாபனத்தின் உணர்வுகள் குரு கொடுத்த உணர்வுகளை பெறாதபடி தடுக்கும் நிலை தான் வருமே தவிர இதை வளர்க்க முடியாது. காப்பதாக நினைப்போம்… அதைக் காக்க முடியாது.

காப்பதாக நினைத்துக் கொண்ட பற்று என்ன செய்யும்…?
1.உயர வேண்டும் என்று ஆசை இருக்கும்
2.ஆனால் காக்க வேண்டும் என்ற நிலை இருக்காது
3.நம்மை அறியாமலே காக்கும் நிலைகள் தவறிவிடும்.

காக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கும் ஆனால் அந்தப் பற்றின் தன்மை என்ன செய்யும்…? அறியாதபடி “பிழைகளாக” வந்துவிடும்.

எப்படி…?

நான் (ஞானகுரு) ஸ்பின்னிங் மில்லுக்குள் இயந்திரம் எவ்வாறு ஓடுகின்றது என்று பார்ப்பதற்குச் செல்கிறேன். அப்பொழுது என்ன நடந்தது…?

வழியில் இருந்த சாக்கடையைத்தான் நான் கவனித்தேன் தலைக்கு மேல் உயர்ந்த இடத்தில் இருக்கும் கம்பியை நான் பார்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு நான் எல்லாவற்றையும் உபதேசிக்கின்றேன் அதே சமயத்தில் அந்த அவசர காலம் அதில் மோதுகின்றது மோதும் பொழுது மண்டையில் இடித்து விட்டது.
1.தவறிப் போய் இடித்து இருந்தால் ஆள் அவுட் ஆயிருக்கும் (நான் இறந்திருப்பேன்). அந்த மாதிரியான இடத்தில் தான் மோதி இருக்கின்றது.
2.ஆகவே… தவறுகள் யார் எதைச் செய்தாலும் அந்த சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது…?
3.அதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செல்லும் பாதைகளில் அது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது அந்த தீமை நம்மை இயக்கி விடாதபடி அந்த நேரத்தில் “நம்மைப் பாதுகாக்கும் உணர்வை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்…”

ஒரு சந்தர்ப்பம் இப்படி நடந்து விட்டது என்றால் உடனே
1.ஈஸ்வரா…! என்று அந்த உணர்வை நுகர வேண்டும். உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நாம் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

உதாராணமாக சமையலே செய்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பிலே வைத்திருக்கின்றோம்… அதிலே வேறு ஒரு பொருள் தவறி விழுந்து விட்டால் என்ன ஆகும்…? ஒரு பல்லியே விழுந்து விட்டால் சமைத்த பொருள் அனைத்தும் விஷமாக மாறிவிடும்.

நல்ல குழம்பை வைக்கின்றோம் அதிலே கசப்பை அதிகமாகப் போட்டு விட்டால் குழம்பின் ருசி கேட்டுவிடும் அதை நாம் மாற்ற வேண்டும் அல்லவா…?

இதைப் போன்று நாம் நல்ல செயல்கள் செயல்படும் பொழுது
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் “வந்தே தீரும்…!”
2.அப்படி வரும் பொழுது அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

அதை நீக்குவதற்கு வழி…?

அதற்குத் தான் “குரு வழி” என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடனுக்குடன் தீமைகளைத் தடைப்படுத்த வேண்டும் என்று திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்வது…!

இதை இராமாயணத்தில் தெளிவாகவே காட்டுகின்றார்கள். இராமன் குகை மீது இருக்கும் பாறையைத் தட்டி வாலி வெளியே வர முடியாதபடி பாதையை மூடி விடுகின்றான். வாலி செயல் இழந்து விடுகிறான்.

குகை மேல் என்கிற பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இங்கே நம் புருவ மத்தியில் வைத்து மூடி விட்டால்
2.தீமை உள்ளே புகுவதற்கு வாய்ப்பு இல்லை… புறத்தால் தடுக்கப்படுகிறது.

உடலுக்குள் வாலி என்ற (தீமை செய்யும்) உணர்வுகள் அதிகமாகி விட்டால் இரண்யன் நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும் ஆகவே தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து அதை நிறுத்த வேண்டும் என்று சொல்வது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “சுக்ரீவன்” என்று காரணப் பெயராக வைக்கிறார்கள்.

பக்தி கொண்டு வாழ்ந்து உடலை விட்டுப் பிரிவோரின் கடைசி நிலை

பக்தி கொண்டு வாழ்ந்து உடலை விட்டுப் பிரிவோரின் கடைசி நிலை

 

யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்த காலங்களில்
1.இறந்த பக்தி கொண்ட ஆன்மாக்கள் அதே போல் பக்தி கொண்டவர்கள் உடலுக்குள் புகுந்த பின்
2.எப்படி எல்லாம் அவர்கள் அவஸ்தைப் படுகின்றார்கள்…? அவருடைய எண்ணங்கள் எப்படி ஆகின்றது…? என்பதையெல்லாம்
3.குருநாதர் காட்டிய வழியில் அறிந்து கொண்டோம்.

கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.

என்னை அந்த அம்மா இருந்த வீட்டில் திண்ணையில் உட்காரச் சொன்னார் குருநாதர். அந்த அம்மாவால் எழுந்து நடக்க முடியாது.

அந்த அம்மாவிற்கு வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது.

என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, என்னை அநாதையாக்கி விட்டார்கள். செல்வமும் செருக்கும் உள்ள பொழுது என் மடி மேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா…!”

இப்பொழுது எங்கடா போனாய்…? செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா…? நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா…? நான் அநாதைதானா…? என்று புலம்பிக் கொண்டு உள்ளது.

ஆனால் உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து அசிங்கமாக வைத்திருந்தது.

அந்த அம்மா வீடு பெரியது… சொத்துக்களும் அதிகம். ஆனால் நோய்வாய்ப்பட்ட பின் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

“முருகா…!” நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய். நான் சொல்கின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய். எனக்கு நல்ல வழியும் காட்டினாய்.. என்னிடம் செல்வம் இல்லையென்று நீ கூட இப்போது வராமல் போய் விட்டாயேடா…! என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே… எனக்கு இப்படிச் செய்கின்றார்களே…! எனக்குச் சொத்து வேண்டாம்.. நீ இருந்தால் போதும் முருகா…!

என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள்… நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன்… என்னைக் கவனிப்பதற்கு நீ கூட வரவில்லையே. இந்த அசிங்கத்தைப் பார்த்து நீ கூட விலகி விட்டாயா…?” என்று கேட்டுக் கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரம் அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். அந்த அம்மவைப் பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்துத் துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர், செய்தேன்.

பின்பு ஆசீர்வாதம் கொடுத்தேன். மனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது,

“முருகா…! நீ வந்துவிட்டாயா…?” “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே…” என்று அப்போதும் முருகனைத் தான் நினைக்கின்றது.

என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய். இப்பொழுது பெரிய ஆளாக வந்து இருக்கின்றாய்… “நீ திருடனப்பா…!” என்று சொல்கின்றது.
1.நான் முருகன் இல்லை… சாதாரண மனிதன் தான்…! என்று சொன்னேன்.
2.முதலில் முருகன் வந்தான் என்றால் இப்போது ஏன் வரவில்லை…? என்று கேட்டேன்.

இது எல்லாம் மந்திர வழியால் (மந்திர ஒலிகள்) எடுத்துக் கொண்ட உணவுகள் தனக்குள் சிக்கப்பட்டு இதே உணர்வு கொண்டு முருகன் மேல் பக்தியாகச் சென்ற ஆன்மாக்கள் இறந்த பின்
1.உடலுடன் உள்ளவர்கள் அதே பக்தியை யார் கொள்கின்றார்களோ அந்த உடலுக்குள் புகுந்து
2.அவர்கள் வாழ்ந்த காலத்திலே (இறந்தவர்) கடைசியிலே நோய்வாய்ப்படும் பொழுது அவர்களை எப்படிக் கவனிக்காமல் விட்டார்களோ
3.அதே ஆன்மா இங்கே “முருகனைப் போன்று காட்சி தருவதும்…” பல நிலைகளைச் செய்வதும்
4.ஆனால் நாளடைவில் அந்தக் காட்சியின் உணர்வுகள் விளைந்து இப்படிக் கடும் நோயாக மாறுகின்றது.

சமுதாயத்தில் அவர்கள் குடும்பத்திலே இந்த வயதான அம்மா மீது எப்படி வெறுப்படைந்தனாரோ அந்த வெறுப்பினால்… சேர்த்து வைத்த சொத்தைப் பறிக்கத்தான் முடிந்தது… முருகன் காக்கவில்லை…!

செல்வத்தைப் பெற்றோம்… சந்தோஷமாக இருப்போம் என்ற நிலை இல்லை. எப்பொழுது மடிவார்…! என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்… தொலைந்து விட்டால் தன் இஷ்டத்திற்குச் செய்துவிடலாம் அல்லவா…!

காரணம் என்ன என்றால்
1.உயிரோடு இருக்கும் பொழுது சொத்தை எல்லாம்
2.மற்றவர்களுக்கு உயிலாக எழுதி வைத்துவிட்டால் என்ன செய்வது…?

ஏனென்றால் ஒரு சிலர் உயில் எழுதி வைத்ததைத் தெரிந்து கொண்டால்
1.சொத்து தன் கைக்கு வராது… மற்றவர்களுக்குச் சேர்ந்து விடும் என்றால்
2.இப்படி எல்லாம் சில குடும்பங்களில் நடக்கிறது.

செல்வம் இருந்தாலும்… அதைக் கொடுத்துச் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நிலையில் இருந்தாலும்… அவர்களைக் காக்கும் நிலை கூட மாறி விடுகின்றது.

இந்த அம்மா “யாருக்கோ உயிலை எழுதி வைத்துவிட்டார்…” என்று சொன்னதற்காகறகக வேண்டி இவரைத் தொல்லைப்படுத்திச் சொத்தைப் பறித்து அனாதையாக இப்படி விட்டு விட்டார்கள்.

குடும்பத்தில் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

சொத்து என்று வந்து விட்டால் அம்மா அப்பா என்று கூடப் பார்ப்பதில்லை… சகோதரர்களுக்குள்ளும் பகைமை வருகின்றது…!

1.முருகனை பக்தி கொள்கின்றோம் சிவனை வணங்குகின்றோம் என்று எல்லாம் தான் சொல்கிறோம்.
2.அதே சமயத்தில் அம்மாவோ அப்பாவோ சகோதரர்களோ அவர்கள் எனக்குத் துரோகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்துடன்தான் தெய்வத்தை வணங்குகின்றோம்
3.மந்திரத்தைச் சொல்லி சகோதரன் சாக வேண்டும்.. அல்லது தந்தை சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் முருகனை வணங்குகின்றார்கள்
4.ஆக பக்தி எந்த அளவிலே இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
5.உடலின் மேல் இச்சை கொண்டு தெய்வத்தைச் சாட்சியாக வைத்துச் செய்யக்கூடிய செயல்கள் தான் இது.

ஆனால் நல்ல உணர்வுகளை எடுத்துத் தீமைகளை அகற்றும் அந்த உணர்வின் தன்மை பெற்றால் நமக்குள் “நாம் தெய்வமாகலாம்…”
1.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
2.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும்
3.தெய்வீகப் பண்புடன் இருக்க வேண்டும்
4.தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும்
5.பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்றும்
6.நாம் ஒவ்வொருவரும் எண்ணினால் பகைமை மாறிவிடும் என்பதற்காக
7.ஆலயங்களில் இதைச் சொல்லி இருந்தாலும் இதை யாரும் செயல்படுத்துவதில்லை.

பக்தி என்ற பேரில் ஆலயத்திற்குச் சென்றாலும் தன் ஆசையின் நிலைகள் கொண்டு சந்தர்ப்பவசத்தால் சாமி சிலையையோ அல்லது படத்தையோ திரும்பத் திரும்பப் பார்த்துப் பதிவாக்கி எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் “தெய்வமாகக் காட்சி தருவதும்… மற்ற நிலைகளும்…”

இப்படி மனிதனுடன் பழகிய நிலைகள் இந்த மனித வாழ்க்கைக்குத் தான் அது பயன்படுகிறது. தான் எண்ணியது கிடைக்கவில்லை அல்லது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.

வேதனைகள் அதிகமான பின் அடுத்து மற்ற தெய்வங்களை
1.காளிக்கோ அங்களேஸ்வரிக்கோ மாடசாமிக்கோ முனுசாமிக்கோ ஆடுகளையும் மற்றதையும் பலியிட்டு
2.அந்த இரத்தத்தை அபிஷேகித்து மகிழும் நிலையில் தான் இருக்கின்றது.

இப்படி எல்லாம் செய்தால் அந்தத் தெய்வம் நம் கஷ்டத்தை நீக்கும் என்று தவறான வழிகளைத் தான் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்த தவறின் நிலைகளில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்தால் அசுர உணர்வு உண்டு மாடனாகவும் முனியனாகவும் இன்னொரு உடலுக்குள் ஆவியாகச் சென்று ஆட்டிப்படைக்கும்.

ஆகவே நாம் வணங்கும் முறைகள் எதுவோ உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி வெளியே செல்லப்படும் பொழுது நாம் எந்தத் தெய்வத்தை வணங்கினோமோ அந்த உணர்வு தான் அங்கே காட்சியாக… நோயாக மாறுகின்றது.

இது எல்லாம் மனிதனால் மனிதனுக்குள் உருவாக்கப்பட்ட நிலைகள்…!

நாம் இயற்கையான அழகைப் பெற வேண்டும்

நாம் இயற்கையான அழகைப் பெற வேண்டும்

 

இன்று நாம் அணியும் ஆடைகளில் விஞ்ஞான அறிவால் எடுத்துக் கொண்ட நிலைகளில் கடும் விஷம் கொண்ட கெமிக்கல் தான் சாயங்களாகப் பூசப்படுகிறது அதிலிருந்து.

அதிலிருந்து வெளிப்படும் விஷமான ஆவியைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. அதே சமயத்தில் நாம் அந்த ஆடைகளை அணிந்திருக்கும் போது
1.எந்த விஷத்தின் தன்மை அதிலே சாயமாக உருவாக்கப்பட்டதோ
2.நமக்குள் இருக்கும் காந்தப்புலன் அதன் மணத்தை நுகர்ந்து சுவாசிக்கும்படி செய்து
3.உடலுக்குள் அந்த விஷத்தை ஊட்டி விடுகின்றது.

ஆனால் அன்று அகஸ்தியன் காலத்தில் விஷத்தை முறித்திடும் தாவர இனங்களை எடுத்து மற்ற மற்ற தாவரங்களுடன் அது கலக்கப்பட்டு அதைத் தான் சாயங்களாக பல நிறங்களில் உருவாக்கினார்கள்.

அத்தகைய சாயங்களை ஆடைகளிலே பூசி பின் அதை அணிந்து கொண்டால் விஷத் தன்மை புகாதபடி பாதுகாக்கும் சக்தியாக வந்தது… அக்காலங்களில்…!

பல தாவர இனங்களின் தன்மையை ஆடைகளாக உருவாக்கப்பட்டு தீமை உடலுக்குள் புகாதபடி அகஸ்தியன் வாழ்ந்த காலங்களில் பெரும்பகுதி அப்படித் தான் தடுத்துக் கொண்டனர்.

1.தாவரங்களின் பட்டைகளைத் தட்டி ஆடைகளாக நெய்து பல பச்சிலை மூலிகைகளை இந்த நாருடன் கலக்கப்பட்டு
2.பிற விஷங்கள் தங்களைத் தாக்காதபடி பாதுகாப்பாக உருவாக்கிக் கொண்டனர்
3.அன்று அகஸ்தியன் காலத்தில் வாழ்ந்த புலஸ்தியர்கள் என்று சொல்லும் மக்கள் அனைவரும்.

ஆனால் இன்று நாம் அழகுபடுத்த என்ன செய்கின்றோம்…?

முகத்தில் பூசுவதற்கு என்றே எத்தனையோ பவுடர்களை இன்று கெமிக்கல் கலந்து உருவாக்கி வைத்துள்ளார்கள். கெமிக்கல் கலந்த பவுடர்களை நாம் பூசிக் கொண்ட பின் என்ன நடக்கிறது…?

முதலிலே முகம் மிக அழகாகத் தோன்றுகின்றது. ஆனால் பின்னாடி முகத்தில் உள்ள தோல்கள் எல்லாம் சுருங்கி விடுகின்றது நாளடைவில் பார்க்கப்படும் பொழுது “வயதானவர்…” போன்றே தோற்றம் அளிக்கின்றது.

ஆனால் மீண்டும் அந்தச் சாயங்களைப் பூசினால் தான் அழகுபடுத்த முடிகின்றது அதே சமயத்தில் அந்த விஷத்தின் தன்மை சுவாசிக்கப்படும் பொழுது இயற்கையின் அழகையும் கெடுத்து விடுகின்றது…!

குறிப்பாக பெண்களுக்கு என்று எத்தனையோ அழகு சாதன பொருட்களை கெமிக்கல் கலந்த நிலையில் உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

சினிமாவில் நடிக்கக் கூடியவர்கள் அதைப் பூசிக் கொள்கின்றார்கள். அப்படிப்பட்ட அலங்காரம் செய்வதற்கு என்று தனி நபர்களும் இருக்கின்றார்கள் காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

ஆக உள் அழகைப் போக்கிவிட்டு விஷத்தின் தன்மை நாளடைவில் கவரப்படுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

இயற்கையான அழகை நாம் பெற வேண்டும் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து பாருங்கள்… முகங்களில் எவ்வளவு அழகு வருகின்றது என்று…!
2.அருள் உணர்வுகளைப் பெருக்கினால் இயற்கை அழகை நாம் பெருக்கிக் கொள்ள முடியும்.

வேறு ஒன்றுமே வேண்டியதில்லை…! ஒரு தாய் கருவுற்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் மகாலட்சுமி படமோ சரஸ்வதி படமோ எத்தனையோ அழகான தெய்வப் படங்கள் இருக்கின்றது. அழகாக உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதை உற்றுப் பார்த்து அந்த அழாகன வடிவில் என் குழந்தை உருவாக வேண்டும்… வளர வேண்டும்… அழகாக வர வேண்டும்… என்று எண்ணினால் அந்தக் குழந்தை நிச்சயம் அழகாக வரும்.

அதே போன்று தான் உயர்ந்த உணர்வுகளை நுகர்ந்து என் முகம் அழகாக வேண்டும் என்று எண்ணினால் முகம் செழிப்பாக வரும்.

சங்கடமாக இருக்கும் போது முகம் சுருங்கி விடுகின்றது… இருளாகின்றது…! ஆனால்
1.அருளைப் பெற வேண்டும் இருளை அகற்ற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துப் பாருங்கள்.
2.முகத்தில் நல்ல மறுமலர்ச்சி ஏற்படும். மகிழ்ச்சி தோன்றும்… நம்மைப் பார்ப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தோன்றும்.

ஆகவே அன்றைய மெய் ஞானிகள் காட்டிய வழியிலே உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் தகுதியை நாம் பெற வேண்டும்.

இன்று எல்லாவற்றையும் காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்குக் கொண்டு சென்று விட்டோம். இது போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்