சண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…! எப்படி…?

bravaveness-of-sages

சண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…! எப்படி…?

 

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.

அப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…
1.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று
2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால்…
1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.
2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.
3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.

ஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…!”

ஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்…? அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.

ஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.

அந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.

நமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…
1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்
2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.

இங்கே உடலுக்குள் பளீர்…ர்ர்ர்…! என்று மின்னும்.

கை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…! என்று மின்னும்.

ஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாக்காதபடி நாம் எப்பொழுதுமே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளைக் காண நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…
1.இணைந்து வாழும்…
2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு)… இதை மறவாது செயல்படுத்துங்கள்.

இன்றைய உலகில் “உதவி செய்வதிலும்… உதவி பெறுவதிலும்…” உள்ள உபத்திரவங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Socialism

இன்றைய உலகில் “உதவி செய்வதிலும்… உதவி பெறுவதிலும்…” உள்ள உபத்திரவங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 

உலக நிலைகளிலேயே இன்று ஒருவரை ஒருவர் அடக்கி ஆளும் தன்மைகள் அதிகரித்துவிட்டது. அந்த உணர்வுகள் எல்லாமே அரசர்களால் உருவாக்கப்பட்டது. மனிதனான பின் அரவணைக்கும் உணர்வையே மறந்து அடக்கி ஆளும் தன்மையே பெறுகின்றது.

1.எப்படியும் ஏதோ ஒரு வகையில் மிரட்டி வாழ்வது
2.இல்லை என்றால் ஒன்றைக் கொடுத்து தனக்குக் கீழ் அடிமையாக்குவது.

அதாவது உங்களுக்கு நான் ஒரு பொருளைக் கொடுத்து அதன் வழியில் அடிமையாக்குவது. உங்கள் நிலைகளிலிருந்து அதை நான் பெற்று என்னுடைய சுகத்திற்கு வருவது.

1.ஆனால் நான் கொடுத்து நீங்கள் பதிலுக்கு உதவவில்லை என்றால்
2.நான் எண்ணியபடி நீங்கள் வரவில்லை என்றால்
3.உடனே உனக்கு நான் இன்னதைச் செய்வேன்…! என்று
4.அந்தத் தீங்கின் நிலையே (மிரட்டும் நிலையாக) வருகின்றது.

ஆக ஒருவருக்கு உதவி செய்யப்படும் பொழுது அவன் தனக்கு இணைந்தவனாக வர வேண்டும். தனக்கு இணைந்து வரவில்லை என்றால் அடுத்து அவனைக் குற்றவாளியாக்கும் நிலையே வருகின்றது.

மனிதர்களாக இன்று வாழ்பவர்கள் அவரவருக்குத் தகுந்த மாதிரி மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். ஆனால் உதவி செய்தபடி அந்த உதவி பெற்றவர்கள் தன் வழிக்கு வரவில்லை என்றால்
1.நான் உதவி செய்தேன்… அவன் எனக்குத் தக்க நேரத்தில் உதவி செய்யவில்லை
2.ஆகவே அவன் தீங்குள்ளவனாக ஆகி விட்டான்..! என்ற
3.இப்படிப்பட்ட பகைமை உணர்வைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

பகைமையை ஒரு பக்கம் வளர்க்கின்றோம். அதே சமயத்தில் அன்பு கொண்டு மற்றவரைத் தனக்குள் அடிமையாக்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

தன் வீரிய உணர்வு கொண்டு ஒருவரை அடக்கி ஆளும் உணர்வு கொண்டு செயல்படுத்துகின்றனர். அடுத்து பொருள்களைக் கொடுத்துத் தனக்குக் கீழ் அவர்களை அடிமையாக்கும் தன்மையே வருகின்றது.

1.உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு ஒன்றி வாழ வேண்டும்
2.இணைந்து வாழ வேண்டும்
3.பேதங்கள் நீங்க வேண்டும்
4.பேரருளைப் பெறவேண்டும் என்ற உண்மை நோக்குடன்
4.உதவிகளைச் செய்தால் அங்கே எதிர்பார்ப்பின் தன்மை இருக்காது.

உதவி செய்தேன்…! என்றால் உங்களிடம் ஒன்றை எதிர்ப்பார்க்கும் தன்மையே தான் இன்று வருகின்றது.

சில இடங்களில் பார்க்கலாம். சில உபகாரங்களைச் செய்வது போல் செய்வார்கள்.
1.ஆனால் அவர் செய்யும் தவறுக்கெல்லாம் இவர்கள் அடிமையாக வேண்டும்
2.அப்படி அடிமையாகவில்லை என்றால் அதற்கு வேண்டிய தொல்லைகளைக் கொடுப்பார்கள்
3.நான் அவனுக்கு இவ்வளவு உபகாரம் செய்தேன்… எனக்கு இவன் இவ்வாறு தீங்கு செய்கின்றான் என்று
4.குற்றவாளியாக்கும் உணர்வுகளைத்தான் பாய்ச்சுகின்றார்கள்.

தனக்கு வேண்டியதை எதிர்பார்த்துச் செயல்படும் தன்மைகள் தான் இங்கே வருகின்றது. ஒன்று… அடக்கி ஆள்வது இரண்டாவது… அரவணைத்துப் பார்ப்பது. வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக்குவது..!

அன்றைய அரசர்கள் காலங்களில் அரசர் பண்பு கொண்ட நிலைகள் வளர்க்கின்றனர். ஒரு அரசன் அடுத்த அரசனுக்கு உதவி செய்கின்றான்.

உதவி செய்யப்படும் பொழுது அந்த அரசனிடம் உன் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடு என்கிறான்… அல்லது இந்த ஊர் எனக்கு உகந்தது அதைக் கொடு…! என்று கேட்கின்றான்.

அவன் கேட்டதை எல்லாம் உதவி பெற்ற அரசன் கொடுக்கவில்லை என்றால் இதுவரை உனக்கு அரவணைத்து உதவி செய்திருக்கிறேன். பதிலுக்கு உன்னால் இந்தச் சிறு உதவி செய்ய முடியவில்லையா…? என்று உடனே போர் முறை தொடுக்கின்றான்.

இதைப் போல் தான் மக்கள் மத்தியிலும் அன்று அரசன் எதைச் செய்தானோ அதே உணர்வுகள் இங்கே படரப்பட்டு இயக்கிக் கொண்டிருக்கிறது.

எதிர்ப்பில்லாது இருக்கும் என்பதற்காக இந்த உதவிகளைச் செய்கின்றனர். அந்த எதிர்ப்பில்லாத நிலைகளில் இந்த உதவிகளைச் செய்தாலும் தான் எதிர்பார்க்கும் நிலைகள் ஏராளம் உண்டு.
1.தான் தவறு செய்து கொண்டு
2.அந்தத் தவறைக் காக்க
3.மற்றவருக்கு உதவி செய்யக்கூடிய பண்புகள் தான் இருக்கின்றது.

தன் தவறை மாற்ற தன் தவறின் நிலைகளை மாற்றியமைக்க மற்றவர்ககளுக்கு உதவி செய்து கடைசியில் அந்தத் தவறு செய்யும் நிலைகளே தான் அதிகரிக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் தான் மக்கள் மத்தியில் இன்று ஒரு அலுவலகத்திலும் சரி… வீட்டிலும் சரி… மற்ற நிலைகளிலும் சரி.. இருக்கின்றது.

இப்படி வரப்படும் பொழுது இது சுயநலத்தைக் கூட்டுகின்றது. பொது நலம் ஆகாது.

அந்தப் பொது நலத்தின் தன்மைகளை அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்துவிட்டால் அந்தக் குற்ற இயல்புகள் இருவரிடத்திலும் வராது.

1.நல்ல பண்பினைக் காக்க
2.பரிவினை ஊட்ட
3.அன்பினைக் கூட்ட அரவணைக்கும் தன்மை வந்தால்
4.அந்த அரவணைக்கும் உணர்வே நாம் செய்த பண்பின் அரவணைப்பு நமக்குள் என்றும் நிலைத்திருக்கும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும்… இருளை அகற்றிடும் நிலை பெறவேண்டும்… அவர்கள் வாழ்வில் தெளிந்த நிலைகள் பெறவேண்டும் என்ற நிலையில் நாம் செயல்பட வேண்டிய நெறிகளைத்தான் நம் குருநாதர் தெளிவாக்கினார்.

சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

Rama breaking dhanush

சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

 

கணவன் மனைவிக்குள் சண்டை வந்துவிட்டது. கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்தால் எப்படிச் செய்வீர்கள்…?

நான் கணவன் மீது எப்படியெல்லாம் பிரியமாக இருக்கின்றேன்… ஆனால் கணவன் என்னை இப்படி எல்லாம் பேசுகிறாரே… துயரத்தைக் கொடுக்கின்றாரே… உனக்கு அர்ச்சனை செய்தேனே… விரதம் இருந்தேனே… என் கணவர் இப்படிச் செய்கிறாரே…! ஆக சாமியிடம் எதைச் சொல்கிறீர்கள்..?

கோவிலில் கணவன் என்ன நினைக்கிறார்..?

மனைவி எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறது… எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறது… ஏதோதோ பேசுகிறது..! நான் என்ன தான் செய்வது..?

1.இரண்டு பேரும் சேர்ந்து கோவிலில் எதை முறையிடுகின்றீர்கள்…?
2.அங்கே போய் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறீர்கள்.

அங்கே முறையிட்டு வீட்டுக்கு வரும் பொழுது அதே வெறுப்புடன் வருவோம். வீட்டுக்குள் வரும் பொழுது என்ன நடக்கும்…? கணவருடைய செயலைப் பார்த்தாலே ஒருவிதமான நடுக்கம் வரும். கோபமாக இருக்கிறார் என்ற நிலையில் கையில் இருக்கும் டம்ளரை மனைவி கீழே விட்டால் போதும்.

சனியன்…! எப்பொழுது பார்த்தாலும் எதையாவது போட வேண்டியது தான்… எல்லாவற்றையும் போட்டு உடைக்க வேண்டியது தான் வேலை..! என்பார்.

ஏனென்றால் நுகர்ந்த உணர்வுகள் இந்த வேலையைச் செய்யும் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்…! தவறு செய்யவில்லை. ஆனால் இந்த வேலையைச் செய்யும்.

அதே சமயத்தில் மனைவி கணவனைப் பார்த்து எப்பொழுது பார்த்தாலும் நம்மைத் திட்டுவது தான் இவருக்கு வேலை…! எப்படியோ தொலைந்து போ…!

ஆக கோவிலுக்குச் சாமி கும்பிட எதற்காகப் போகின்றோம்…? இதற்காகவா…? சிந்தித்துப் பாருங்கள்.

நம்மைச் சுத்தப்படுத்துவதற்குத்தான்…! கோவிலைக் கட்டினார்கள் ஞானிகள். எல்லோருக்கும்
1.இந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்… தெய்வீக குணம் பெறவேண்டும்
2.மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
3.தெளிந்த மனம் பெறவேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.இந்த அருள் உணர்வுகள் எனக்குள் என்றென்றும் பாய்ச்சும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
5.வைரத்தைப் போல் சொல்லும் செயலும் ஜொலிக்க வேண்டும்
6.தங்கத்தைப் போல் எங்கள் மனது மங்காமல் இருக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்

இதற்குத்தான் கோவில்…! இந்த மாதிரி எத்தனை பேர் கோவிலில் எண்ணுகிறார்கள்..?

என் கணவர் தினமும் குடித்துவிட்டு வருகிறார் நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாய்…! இப்படிச் சொல்பவர்கள் தான் உள்ளார்கள்.

ஆனால்…
1.என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு அந்த அருள் உணர்வு பெறவேண்டும்
2.அவர் தெளிவான நிலைகள் பெறவேண்டும் அந்த மலரைப் போல் மணம் பெறவேண்டும்
3.தெய்வீகப் பண்பும் தெய்வீகச் செயலும் என் கணவர் பெறவேண்டும்
4.வைரத்தைப் போல் அவர் சொல் செயல் வாழ்க்கை எல்லாம் ஜொலிக்க வேண்டும்
5.இருளை நீக்கும் அருள் சக்தி என் கணவர் பெறவேண்டும்
6.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் என் கணவர் பெறவேண்டும் என்று கோவிலில் வேண்டினால் எப்படி இருக்கும்..?

அந்த உணர்வுகள் உடலுக்குள் இறையாகி உணர்வின் தன்மை தெய்வமாகின்றது. அப்பொழுது இந்த உணர்வுடன் நாம் எண்ணினால் தான் நல்லதாகும்.

அதே சமயத்தில் கணவரும் என்ன செய்ய வேண்டும்…?

மனைவி வணங்குவது மாதிரியே வணங்கி
1.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
3.தங்கத்தைப் போல் என் மனது மங்காது இருக்க வேண்டும்
4.என் செயல் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யாமல் ஒருவருக்கொருவர் குறைகளைக் கொட்டி அழுகிறோமே தவிர நம் உடலை அசுத்தப்படுத்துகின்றோமா…? கோவிலுக்கு வருபவர்களுக்கும் நாம் எந்த உணர்வுகளை ஊட்டுகிறோம்…? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இராமாயணத்தில் இதைக் காட்டுகிறார்கள். சீதாவைத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரம் ஏற்படுத்துகின்றார்கள், “சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய இடம் கோவில்…!” என்பதைக் காட்டுவதற்குத்தான் அந்த இடத்தில் வைக்கின்றார்கள்.

நாம் வெறுப்படைந்தவர்களுக்கெல்லாம் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இப்படி முறைப்படி செய்துவிட்டோம் என்றால்
1.அந்தத் தீமை செய்யும் வில்லை இராமன் ஒடித்து விடுகிறான் என்று காட்டுகின்றார்கள்.
2.ஆக சீதாவை அரவணைத்துக் கொண்டான் கல்யாணராமா…!
3.நம் உடலுக்குள் இருக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்கிறது… பகைமை இருக்காது.

பகைமையை நீக்கி எல்லோரும் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது கல்யாணராமனாகின்றது. நமக்குள் மற்றவர்களுடைய பகைமை உணர்வை மறக்கின்றோம்.

எல்லொரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கின்றோம். ஆக பகைமையை நாமும் மறக்கின்றோம். பகைமையை அவரும் மறக்கின்றார் கோவிலை இதற்குத்தான் வைத்தார்கள் ஞானிகள்,

ஏனென்றால் நாம் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது. அந்த உணர்வின் செயலாக நாம் செயல்படுகின்றோம்.

வேதனை என்று எண்ணினால் உயிர் அதை உருவாக்குகிறது. நம் உடலில் உள்ள உறுப்புகள் கெடுகிறது. ஆனால் வேதனைகளை நீக்கிடும் அருள் சக்தியைப் பெறும் பொழுது நம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகின்றது. நம் சொல்லும் செயலும் நன்றாக இருக்கின்றது.

தனக்குள் கூட்டிப் பெருக்கும் உணர்வு கொண்டு வாழ்க்கையில் எப்படி வளர வேண்டும்…? என்று காட்டுவதற்குத்தான் “பல்லாங்குழி விளையாட்டு”

PALLANGUZHI

தனக்குள் கூட்டிப் பெருக்கும் உணர்வு கொண்டு வாழ்க்கையில் எப்படி வளர வேண்டும்…? என்று காட்டுவதற்குத்தான் “பல்லாங்குழி விளையாட்டு”

 

என் வாழ்க்கைக்காகத் தொழில் செய்கின்றேன்… அதிலே எனக்கு இலாபம் இல்லை… நஷ்டமாகிறது…! என்ற வேதனையை எடுத்தால் நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை நஷ்டப்படச் செய்து இந்த உடல் உறுப்புகளும் நலிகின்றது.
1.வேதனை என்ற இருள் சூழும் பொழுது நம் சிந்திக்கும் திறனும் குறைகின்றது.
2.என்ன வாழ்க்கை…? என்று வெறுக்கும் தன்மை வருகின்றது.
3.தற்கொலை செய்யும் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
4.இந்த உடலை உருவாக்கிய உயிரை மதிக்காது உடலை அழித்துவிடும் எண்ணங்கள் வருகின்றது.

எதன் பால் இந்த உணர்வின் தன்மை பற்றாகியதோ தன்னால் முடியவில்லையே…! என்று எண்ணத்திலேயே வேதனையுடன் இறந்தால்
1.அவருடன் பழகியவர்கள் “அடடா…! நன்றாக இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணினால்
2.எண்ணியவர் உடலுக்குள் அவர் ஆன்மா சென்று பேயாக ஆட்டிப் படைத்து
3.நன்றாக இருப்பவரையும் மடியச் செய்யும். அதற்குத்தான் இது உதவும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மாறுதல் வேண்டும். நமக்கு எந்த ஆசை வேண்டும்…? பேய் மனம் இல்லாது அருள் மணம் நமக்குள் வர வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளை உணர்துவதற்குத்தான் அன்று பல்லாங்குழி விளையாடுவார்கள். அந்த விளையாட்டை அமைத்ததின் நோக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

1.தனக்குள் கூட்டிப் பெருக்கும் உணர்வு கொண்டு
2.தன் வாழ்க்கையில் எப்படி வளர வேண்டும் என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான் அந்த விளையாட்டை உருவாக்கினார்கள்.

அதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தனக்குள் இலாபத்தை ஏற்றிக் கொள்ளும் நிலை வருகின்றது.

வாழ்க்கையின் நிலையில்…
1.சந்தர்ப்பத்தால் ஒருவர் நான் தோற்றுவிட்டேன்… என்ற நிலைகள் வரும் பொழுது
2.உன்னைத் தோற்கச் செய்கிறேன் பார்…! என்ற நிலைகள் இருக்கக் கூடாது.

அதாவது அவனும் வளர வேண்டும்… அவன் சிந்தனையும் வளர வேண்டும்…! என்ற நல்ல எண்ணத்தில் பல்லாங்குழி விளையாண்டால் அந்தக் குழந்தை நன்றாக இருக்கும்.

ஆனால் பல்லாங்குழி விளையாடும் பொழுது நான் ஜெயித்து விட்டேன் என்று சொன்னவுடனே அடுத்தவர் தோற்றுவிட்டால் “நம்மைக் கேவலமாக நினைப்பார்களே…!” என்று முகம் வாடும்.

குழந்தையாக இருந்தாலும் இந்த உணர்வின் தன்மை அந்த விளையும் பருவத்தில் வரப்படும் பொழுது தோல்வியைச் சந்தித்த பின் வெறுப்பின் தன்மை வரும்.

1.ஆனால் ஞானிகள்… மனோதத்துவரீதியில்
2.மனிதன் தன்னைத் தான் எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்று தான் இதைக் கொண்டு வந்தார்கள்.

நாம் தொழிலைப் பற்றி எண்ணும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் உணர்வுகளை வலிமையாக எடுத்துக் கொண்டு
1.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெறவேண்டும்
2.நாங்கள் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெறவேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்டோர் நலம் பெறவேண்டும் என்றும் இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தவிடுபொடியாகி விட்டது. மாறாக எண்ணங்களை மாற்றிவிடுகின்றனர்.

ஆனால் நாம் நுகர்ந்ததை எல்லாம் நம் உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றுகின்றது. அதை மீண்டும் மீண்டும் எண்ணப்படும் பொழுது உருவான அந்த அணுவின் தன்மை தன் இனத்தைப் பெருக்கிவிடுகின்றது.
1.இது தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…
2.மூஷிகவாகனா…! நாம் சுவாசித்தது எதுவோ (நம் மூச்சு) அதன்படித் தான் இந்த வாழ்க்கையில் நடக்கின்றது.

ஒருவரை நாம் அடிக்கடி வேதனைப்படும்படிச் செய்து அதைப் பார்த்து ரசித்தால்… நமக்குள் அந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி… நமக்கும் அதே வேதனையை உருவாக்கிவிடும். தப்ப முடியாது.

நாம் நினைக்கின்றோம் தப்பிவிட்டோம் என்று. இந்த உடலில் கடும் நோய்களாகும் பொழுது அது முன் சேர்த்துக் கொண்ட வினை…!

அந்த வினைகள் இருப்பினும் நாம் அதைக் கடந்து அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு இருளை மாற்றும் திறனைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைக் கூட்டினால் பழைய தீய வினைகள் அனைத்தும் அகன்று அது சுத்தமாகின்றது.

ஜாதகமும் யாகமும் திருமணமான தம்பதியர்களை ஒற்றுமையாக… மகிழ்ச்சியாக வாழச் செய்கிறதா…?

Sivaparvathi

ஜாதகமும் யாகமும் திருமணமான தம்பதியர்களை ஒற்றுமையாக… மகிழ்ச்சியாக வாழச் செய்கிறதா…?

 

யாகங்கள் செய்த வீடெல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். “நன்றாக இருக்க வேண்டும்..!” என்று தானே புதுமனை புகும் பொழுது யாகத்தைச் செய்கிறோம்.

அதே மாதிரி ஜாதகம் பார்த்த பின் தானே கல்யாணம் செய்கின்றோம். அவர்களும் நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்து நாம் பார்க்கப்படும் பொழுது கணவன் மனைவி நன்றாகத் தானே இருக்க வேண்டும்.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்தாலும் எத்தனை பேர் எத்தனை குடும்பங்கள் பிரிந்திருக்கின்றது…?

திருமணமானாலும் முழுமையாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்று தானே ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்கிறார்கள். இடைவெளியில் ஏன் மடிந்துவிடுகின்றார்கள்…? இதற்கு எங்கே போவது…?

மனச் சாந்திக்கு வேண்டுமானால் பார்க்கலாம். அவன் சொன்ன உணர்வை எடுத்து நாம் என்ன செய்வோம்…? ஐயோ.. ஜாதகம் பார்க்கவில்லை என்றால் தப்பு வந்துவிடும்..! என்ற பய உணர்வு வந்துவிடும்.

அப்படி எண்ணவில்லை என்றாலும்
1.ஜாதகப்படி எடுத்துக் கொண்டால் இரண்டு எதிர்ப்பு நிலையும் ஒன்றாகும்.
2.அப்பொழுது எதிர்மறை இரண்டும் ஒன்றாகும் பொழுது
3.எதிரியின் நிலையாக ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருந்தால் இரண்டும் ஒத்துப் போகும்.
4.ஆனால் ஒருவர் சாந்தமாக இருப்பார்.. ஜாதகப்படி சாந்தம் என்றும் இருக்கும். இவரோ கோபக்காரராக இருப்பார். இது இரண்டும் ஒத்து வராது என்பான்.
5.அடிக்கடி வேதனைப்படுத்தக்கூடியவர் அதே மாதிரி இன்னொருவர் வேதனைப்படுபவர் இவர்கள் இரண்டும் வந்தால் ஜாதகப்படி பொருந்தும் என்பான்.
6.கல்யாணம் செய்த பின் அங்கே வேதனைப்படுத்தும் நிலைகள் தான் மிஞ்சும்.

ஆக ஜாதகப் பொருத்தம் எதிலே இருக்கிறது…?
1.இந்த உணர்வின் நினைவு வரப்படும் பொழுது அதுவும் விஷத் தன்மை இதுவும் விஷத் தன்மை.
2.இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளும். இப்படித் தான் பொருத்தம் பார்ப்பது இருக்கிறது.

பொருத்தம் பார்த்துச் செய்த வீடுகளில் எல்லாம் எப்படி இருக்கிறது…?

அதுவும் அங்கே திருமணம் செய்யும் பொழுது இத்தனை மணிக்கு.. இந்த நிமிடத்திற்குள் செய்ய வேண்டும்…! என்று சொல்லிவிடுவான்.

இங்கே அலங்காரம் செய்து உட்கார்ந்து யாகம் எல்லாம் முடிக்கும் பொழுது தாலி கட்டும் முன்னாடி இன்னும் இரண்டு நிமிடம் தான் இருக்கின்றது… ஒரு நிமிடம் தான் இருக்கின்றது…! என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

நேரமாகி விட்டது என்ற இந்த நினைவுடனே தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாப்பிள்ளை வீட்டிலும் பெண் வீட்டிலும் பாருங்கள்… அலங்காரம் செய்து வருவதற்கு முன்னாடி அந்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…?

ஒரு நிமிடம் தான் இருக்கிறது.. அதற்குள் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றார்களே…! என்ற வேகத்தில் கொட்டு மேளம் வாசிப்பவர்களைப் பார்த்துக் “கொட்டுய்யா… கொட்டுய்யா…! மேளத்தைத் தட்டுய்யா.. தட்டு…!” என்று சப்தம் போடுவார்கள்.

அங்கே அந்த மந்திரம் சொல்வது முழுமையாகச் சொனனர்களா…? இல்லை. அந்தப் பரபரப்பு தான் வருகிறது. தாலி எடுத்துக் கொடுத்துக் கட்டச் சொல்லும் பொழுது என்ன செய்கிறார்கள்…?

இங்கே பணம் எவ்வளவு கொடுப்பார்கள் என்று நினைப்பான். ஏழ்மையான வீட்டில் இப்படி நினைப்பான். பணக்கார வீட்டில் நிறையக் கொடுப்பார்கள் என்பதால் அதைப் பற்றி எண்ணுவதில்லை.

தாலி எடுத்துக் கொடுக்கும் முன் அவனுக்கு ஒரு நூறு ரூபாய்த் தாளைக் கொடுங்கள். உடனே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி வரும். அதற்காக வேண்டித் தான் தாலியை மற்றவர்கள் எடுத்துக் கொடுப்பதற்குப் பதில் இவனே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பான்.

அதே சமயத்தில் கட்டும் பொழுது அந்த உணர்வுகள் ஒலியாகப் பாய்ச்சப்பட்டு அவன் கையில் தான் கொடுக்கின்றோம். இந்த மந்திர ஒலியைப் பாய்ச்சிய பின் இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் கைவல்யப்படுத்திக் கொள்ளத் தான் இந்த மந்திரம் உதவும்.

நல்லதானாலும் சரி கெட்டதுக்குப் பயன்படுத்தினாலும் சரி. இந்த உணர்வுகளைப் பதியச் செய்து இந்த நிலை ஆக்கப்படுகின்றது.
1.ஆனால் இதைத் தானே நம்புகிறோம்
2.ஜாதகம் பார்த்து மந்திரம் சொல்லிக் கல்யாணம் முடிக்க வேண்டும் என்று தானே விரும்புகிறோம்.
3.அதன் வழி இப்படித்தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கம் இந்த எண்ணங்களைப் பற்றி சீதாராமா…! எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…? எண்ணத்தின் உணர்வுகள் எப்படி ஆகிறது…? எந்தக் குணமோ அந்தச் சக்தி எப்படி இயக்குகின்றது…?

இராமனைப் பற்றியும் ஒற்றுமையைப் பற்றியும் கல்யாணராமனையும் எங்கே பார்ப்பது…? அதற்கு மாறான எண்ணங்களைத் தான் அங்கே (யாகத்திலும் சரி ஜாதகக் குறிப்பிலும் சரி) உருவாக்குகின்றான்.

தாலி கட்டும் முன் ஒவ்வொருவரும் பரபரப்பாகப் பார்ப்பார்கள். நேரம் ஆகிவிட்டது ஆகிவிட்டது என்றே எண்ணுவார்கள்.

ஏனென்றால் இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும். இருந்தாலும் அவருடைய சொல்லின் நிலைகளே இங்கே மாற்றம் ஏற்படும்.
1.இதிலேயும் பகைமை…
2.நல்ல உணர்வுகளைச் சேர்த்து இன்னொரு உணர்வையும் சேர்த்தவுடன் இப்படிப் போராட்டம்.

இந்தப் பகைமை உணர்வுகள் தனக்குள் வந்த பின் இந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…! என்று இதற்குள் கச..கச…கச..கச….! என்று அந்த உணர்ச்சிகள் மாறிவிடும்.

ஒரு நான்கு பேர் அந்தப் பற்றுடன் எண்ணினால் போதும். அந்தக் கசகசப்பு வரும். அப்படியானால் திருப்பூட்டும் பொழுது எந்த உணர்வை ஊட்டுகிறோம்…?

ஆனால் திருப்பூட்டும் பொழுது எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோருடைய உணர்வுகளையும் ஏகோபித்த நிலைகள் கொண்டு வரச் செய்து
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் நாங்கள் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வைக்க வேண்டும்.

பின் இந்த இரு மனமும் ஒரு மனதாகும் இந்தத் தம்பதியர்கள்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் மணமக்கள் ஒன்றி வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
5.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
6.அவர்கள் அன்னை தந்தையரின் அரவணைப்பில் அவர்கள் இருவரும் வாழ வேண்டும்
7.அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் மெய்ப் பொருள் காணும் சக்தி பெறவேண்டும்
8.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இருவருக்குள்ளும் விளைய வேண்டும்
9.இருவரது எண்ணமும் இரண்டற ஒன்றி அவர்கள் கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும்
10.இந்த உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும்
11.அந்தப் பண்பு கொண்ட அருள் ஞானக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும் என்று
12.திருமணத்திற்கு வந்த உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோருடைய வாக்கையும் இப்படிப் பதியச் செய்ய வேண்டும்.

இப்படி நடக்கும் இந்தத் திருமண நாளை அந்தத் தம்பதிகள் எண்ணினாலே முப்பத்தி முக்கோடி தேவாதி தேவர்கள் வாழ்த்தினார்கள்…! என்ற நிலைக்கு வரும்…! எப்படி…?

நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் என்ன செய்கிறது..? இதற்குள் ஒடுங்கிவிடுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் எல்லோருடைய வாழ்த்தும் அங்கே சேர்க்கப்படும் பொழுது அந்த வாழ்த்தின் தன்மை அங்கே பதிவாகி அந்த மகிழ்ச்சியின் தன்மை அங்கே உருவாகின்றது.

இந்த மாதிரி வாழ்த்துகளின் உணர்வு பதிவான பின் அங்கே “குழந்தை இல்லை…” என்ற சொல்லே வராது…!

இதே மாதிரி திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இதைப் போன்று தியானவழி நண்பர்களைக் கூப்பிட்டு சிறிது நேரம் தியானம் இருக்கச் செய்யுங்கள்.

தியானம் இருந்தபிறகு அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போல இந்த மணமக்கள் வாழவேண்டும். அன்னை தந்தையரோடு அரவணைத்து வாழவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

தொழில் வளம் பெருக வேண்டும். அவர்கள் மற்றவரை மதித்து நடக்கும் அந்தச் சக்தி மணமக்களுக்குக் கிடைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் இருவரும் பெறவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் இந்தெந்த வழிகளில் நடக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு பத்து பேர் சேர்ந்து அந்த இடத்தில் தியானமிருங்கள்.

நீங்கள் அக்னி குண்டம் வளர்த்து வேள்வி நடத்தித் திருமணம் செய்கிறீர்கள் அல்லவா. நீங்கள் ஒரு பத்துப் பேர் சேர்ந்து இந்த தியான முறைப்படி சொல்லி வாழ்த்துக் கூறுங்கள்.
1.தாய் தந்தையரிடம் தாலியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள்.
2.அந்த மணமக்களை (உங்கள் குழந்தைகளை) வாழ்த்துங்கள்.

பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் மற்றவர்களும் இணைந்து நாங்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி வாழ்ந்தோம்.
1.எதிர்காலத்தில் மணமக்கள் நீங்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் குறைகளை நீக்கி வாழுங்கள். தெரிந்துணர்ந்து வாழுங்கள்.
3,உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று இத்தகைய உயர்ந்த எண்ணத்தைச் செலுத்தித் திருப்பூட்டச் செய்யுங்கள்.

அதே நேரத்தில் தியானமிருந்தவர்கள் அனைவரும் யாகம் வளர்ப்பதற்குச் சமம். யாகம் வளர்க்க வேண்டும் என்றால் புற நிலை. ஆனால், நீங்கள் இதை அகத்திற்குள் இருந்து உயர்ந்த அலைகளைப் பாய்ச்சுகின்றீர்கள்.

மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் போல மணமக்கள் வாழவேண்டும். அவர்கள் இருவரும் என்றென்றும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும். அவர்கள் குழந்தைகள் ஞானக் குழந்தையாக எதிர்காலத்தில் வளரவேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். அந்த அலைகள் அங்கே படரும்.

இது தான் ஞானிகள் காட்டிய திருப்பூட்டும் முறை…!

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…? என்பது தான் ஆலயத்தின் பண்புகள்

Lord vinayar

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…? என்பது தான் ஆலயத்தின் பண்புகள்

 

ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது அதைச் சொன்னதும் நமக்கும் அந்தக் கோபமான எண்ணம் வருகின்றது. அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது. அது சமயம்…
1.ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொன்னோம் என்றால் ஒன்றுமில்லை.
2.ஏய்…ய்..! ஏண்டா இப்படிச் செய்கிறாய்…? என்றால் வெறுப்பு தன்னாலே வருகின்றது.
3.காரத்தின் தன்மை அதிகமாகின்றது.
4.ஆகவே சூடாகச் சொல்லும் பொழுது வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொல்லும் பொழுது அந்த உணர்ச்சி “ஏதோ தவறு செய்து விட்டோம்… போலிருக்கிறது…!” என்று வருகிறது.

சாதாரணமாகச் சொல்லும் பொழுது அரவணைக்கும் தன்மையாக வருகின்றது.
1.ஆக இந்தக் கோபம் சுவையை ஊட்டுகின்றது.
2.தன்னைத் திருந்தச் செய்கிறது.

இதைத்தான் நம்முடைய உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதைத் தெளிவாக்கப்படுகின்றது ஆலயங்களில். இந்த உடல் ஒரு ஆலயம். அதிலே எத்தனையோ குணங்கள் நமக்குள் இருக்கின்றது.

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை நாம் பார்த்தால் அந்த உணர்வு நமக்குள் வந்து பதிவாகி விடுகின்றது. உள்ளுக்குள் புகுந்து விடுகின்றது.

ஒருவன் கோபத்துடன் செயல்பட்டு மற்றவரை வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வைப் பார்த்ததும் அதே உணர்வு கோபத்துடன் அடுத்தாற்போல் வேதனைப்படும் சொல்லாகவும் வேதனைப்படும் செயலாகவே நமக்குள்ளும் மாறுகின்றது.

அங்கே சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல…! இங்கே நம் உடலிலேயும் வேதனையை உருவாக்கும் அணுவாகி உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லும் அணுவாக மாறுகின்றது.

எப்படிக் காடுகளில் புலி கரடி பாம்பு போன்ற பிராணிகள் மற்றவைகளைக் கொன்று சாப்பிடுகின்றதோ அது போல் நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமை செய்யும் அணு மற்றதைக் கொல்கிறது.

ஏனென்றால் நம் உடல் ஒரு பெரிய காடு. எந்தெந்தத் தாவர இனங்களின் சத்தை வளர்த்ததோ அதனின் மணம் அந்தக் குணம் அந்த அணுவின் தன்மையாகி ஒன்றுக்கொன்று போர் முறையாகி விட்டால்
1.ஐயோ… பளீர்.. என்று இங்கே (ஊசி குத்துவது போல்) மின்னுகிறதே
2.இங்கே உடலில் வலிக்கின்றதே… வயிறு வலிக்கிறதே… இது எல்லாம் வரும்.

போர் முறை வரப்படும் பொழுது அதைச் சீராக ஜீரணிக்கும் சக்தி இல்லாது போய்விடுகின்றது. உடல் உறுப்புகளின் இயக்கங்கள் தடைப்படுகின்றது.

ஒரு அரசன் ஒரு கிராமத்திற்குப் போகும் பொழுது அதை அடக்கி அங்கே தன் நிலைகளை எப்படிச் செயல்படுத்துகின்றானோ இதே மாதிரி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலுக்குள் அது போகும் பாதைகளில் அங்கே இருப்பதை எல்லாம் துரத்திக் கொண்டே செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! இதுகள் எல்லாம் எதிலிருந்து வந்தது..? என்று ஞானிகள் தெளிவாக்கியிருக்கின்றார்கள்.

எந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருகின்றதோ அது சீதாலட்சுமி… (சீதா என்றால் சுவை) அந்தச் சுவையை வளர்க்கும் சக்தியாக வளருகின்றது.

அதாவது கோப குணத்தை வெளிப்படுத்தினால் அது சீதா..! சூரியனின் காந்த சக்தி கோபத்தை எடுத்து வைத்துக் கொண்டு சீதாலட்சுமியாக மாறுகின்றது.
1.கோபிப்பவரைப் பார்த்ததும் சீதாராமா…
2.அந்தக் கோபத்தின் உணர்ச்சியின் வேகமாக அதே எண்ணங்கள் நமக்குள்ளும் வருகின்றது.

ஒருவன் கசப்பான செயலைச் செய்கின்றான். அந்த உணர்வுகள் சீதா லட்சுமியாக மாறுகின்றது. சுவாசித்ததும் சீதாராமனாக அதே கசப்பான வெறுப்பின் எண்ணங்கள் வருகின்றது. இது தனித் தன்மை.

அதே போல் பண்பு கொண்ட தெய்வீக உணர்வுகளை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்தால் சீதா…! அந்தத் தெய்வ குணங்களை… அந்தச் சுவையை எண்ணுகின்றோம். அப்பொழுது சீதாராமனாக நமக்குள் வருகின்றது.

அது எப்படி வருகிறது..?
1.இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.ஆலயத்தில் காட்டிய தெய்வ குணத்தை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இத்தகைய உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது அதே உணர்வலைகளை எடுத்து எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதைக் கலவையாக்கி நீங்களும் இதே மாதிரிச் சொல்கிறீர்கள்.

அப்பொழுது இந்த உணர்வலைகள் அந்த ஆலயம் முழுவதும் படர்கிறது. கோவிலுக்குள் இந்த உணர்வுடன் சென்றால் மகிழ்ச்சி ஊட்டும் உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.

ஆலயங்களை ஞானிகள் உருவாக்கியதன் நோக்கமே அது தான்.

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!

Shiva - ardhanreeswara

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!

 

இராமாயணத்தைக் கற்றுக் கொண்ட இராகவேந்திர சுவாமிகள் இராம நாம ஜெபத்தைப் பாடிக் கொண்டே “நான் சொர்க்கம் அடைய வேண்டும்” என்ற நிலை பெற்றவர்.

இராமனுடைய பாடல்களை… இராம ஜென்ம பூமி என்ற நிலைகளில் இராமாயணக் காவியங்களைப் பாடிக் கொண்டவர்.

சங்கர பீடங்களில் இராம நாம ஜெபத்தைத் தினமும் ஆயிரம் முறை எழுதிக் கொண்டிருந்தால் “உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்…!” என்று இன்றும் சொல்வார்கள். இராமன் யார் என்றே அறிய முடியாதபடி அந்த நிலைகள் அவ்வாறு இருக்கிறது.

இராகவேந்திரரின் மனைவி என்ன செய்கிறது…?

நீ இராமனையே பாடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றாய்…! எனக்குச் சாப்பாட்டுக்கு இல்லையே…! என்று கேட்கிறது.

நீ என் கூட வந்தால் பிசாசு…! நீ வரக்கூடாது என்கிறார். நான் இராமனையே பாடிச் சொர்க்கம் அடையப் போகிறேன்…! என்று உலகிற்குச் சொல்கிறார்.

தன் மனைவியைக் கூட வரவிடாதபடி துரத்திவிடுகின்றார். ஆனால் உலகிற்கு இராம நாம ஜெபத்தைப் பாடுகின்றார்.

மனைவியோ இராம நாமத்தைப் பற்றிச் சொல்ல முடியாதபடி அவர் உணவுக்கு வழி இல்லை.

ஆக மொத்தம் திருமணமாகிக் கணவனும் மனைவியும் ஆன பிற்பாடு இங்கே அனாதையாக விட்டுவிட்டு… “நான் போகின்றேன்…!” என்றால் என்ன ஆகிறது…?

அப்பொழுது மனைவி பின்னாடியே வருகின்றது. எனக்கு எப்படியும் உணவைக் கொடு… இல்லை என்றால் உன் கூடவே நானும் பாடுகிறேன்…! என்று சொல்கிறது.

1.நீ (மனைவி) வந்துவிட்டால் எனக்கு உன் மீது ஆசை வந்துவிடும்.
2.அதனால் நரகத்திற்குத்தான் போவேன்…! என்று இப்படிப்பட்ட நம்பிக்கையில் அவர் சொல்கிறார்.

அவரை இன்று கடவுளாகத் துதிக்கலாம். ஆனால் அவர் தன் மனைவியைத் துறந்துவிட்டு இப்படிப் போகிறார். அவருடைய மனைவியும் பின்னாடியே துரத்திக் கொண்டே போகின்றது.

நான் இராமனைப் பாடுகிறேன். நீ பிசாசு… வரக்கூடாது…! என்றே சொல்கிறார்.

நான் பிசாசாகி உன்னிடமே வருவேன்…! என்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறது. வெளி வந்த அந்த ஆன்மா அங்கே அவருக்குள் போகிறது.

அதற்குப் பின் அவரால் பாடல்கள் பாட முடியவில்லை. அப்பொழுது என்ன செய்கிறார்…? அந்தக் காலத்தில் “ஜீவ சமாதி” என்பார்கள்.

இனி என்னால் முடியாது என்று சொல்லிக் குழியைத் தோண்டச் சொல்லி அந்த இராமனைப் பாடிக் கொண்டே ஜீவ சமாதிக்குள் சென்று அதற்குள் ஐக்கியமாகின்றார்.

ஆனால் மனைவியின் ஆன்மா அவர் உடலுக்குள் தான் போனது. போய் இந்த நிலை (ஜீவ சமாதி) ஆன பிற்பாடு உயிர் எங்கே போகிறது…? விண் செல்லவில்லை.

சோறு மேல் தான் ஆசை வந்தது…! இராகவேந்திரர் சாமிகள் கும்பிடுபவர்களை எல்லாம் பெரும்பகுதி பாடல்களைப் பாடி விட்டு சாப்பாடு போட்டார்கள்… சாப்பாடு போட்டார்கள்…! என்று தான் சொல்வார்கள்.

அதனின் உணர்வின் ஆசை இருக்கும் பொழுது அதிலே சிக்கிக் கொண்டு செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொத்து வேண்டும்…! என்று தான் போவார்கள்.

அர்ச்சனை என்று எல்லாக் காசுகளும் போட்டு இந்த ஆசைகளில் தான் கும்பிடுகின்றார்கள். “மோட்சம் அடைய வேண்டும்” என்ற எண்ணம் இல்லை.

இராகவேந்திர சுவாமிகள் பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருளைப் பெற வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
3.ஆனால் தன்னை அணுகி உள்ளவரை (மனைவியை) மறந்துவிட்டார்.

இராகவேந்திரரின் ஆன்மா பல காலம் திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.

அவருடைய உடலில் இராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான் இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெற முடிந்தது.

ஒன்றுமறியாத பாலயோகியினுடைய உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ
1.முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய அருளாசி (ஆசீர்வாதம்)

Spiritual wife.jpg

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய அருளாசி (ஆசீர்வாதம்)

புதிதாகத் திருமணமான கணவன் மனைவி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் சிறு குறைகள் ஏற்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

திருமண நாளில் உங்களுக்கு ஆசீர்வதித்தார்கள் அல்லவா…!
1.அந்த அனைவரின் ஆசீர்வாதமும் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு
2.கணவனுக்கோ மனைவிக்கோ இந்தக் குறைபாடுகள் வந்தாலும் அந்தக் குறைகளை எண்ணாதபடி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெறவேண்டும்… நாங்கள் தெளிந்த மணம் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

மனைவி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் அந்த அருள் ஞானம் பெறவேண்டும் என்று மனைவி பால் உள்ள குறைகளை கணவன் இப்படி எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கணவன் பால் இத்தகைய குறைகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கணவன் பொருளறிந்து செயல்படும் சக்தியும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

என்னை அரவணைக்கும் அந்த அருள் ஞானம் என் கணவர் பெறவேண்டும்… அந்த அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதன் என்ற வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் சிறு குறைகள் வரத்தான் செய்யும்
2.அந்தக் குறைகளை உடனடியாக நீக்கிப் பழக வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே எந்தக் குறைகளைக் கண்டாலும் முதலில் தன் தாய் தந்தையரை எண்ணி உங்கள் திருமண நாளை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கணவர்/மனைவி பொருளறிந்து செயல்படும் அருள் சக்தியும் மலரைப் போல் மணம் பெறும் சக்தி பெற்று அருள் ஞானம் பெறும் அந்த அருளாசி எனக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… “எங்கள் காரியங்கள் எல்லாம் வெற்றி பெறவேண்டும்…” என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

கணவன் வெளியிலே எங்கே சென்றாலும் மனைவியிடம் சொல்லி
1.உன்னுடைய அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
2.எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்
3.அந்த அருள் சக்தி உன்னிடம் தான் இருக்கின்றது…
4.எனக்கு அந்த அருளாசி கொடு…! என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும்.

அதே போல மனைவியும் கணவனை எண்ணி என் அன்னை தந்தையரின் அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவர் பெறவேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் அவர் பார்ப்போருக்கெல்லாம் நல்ல நிலை கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

விவசாய நிலங்களுக்குச் செல்லும் பொழுதும் மனைவி தன் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் அவர் பார்வையில் அந்தப் பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் அந்தச் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

எங்கே வெளியில் சென்றாலும் கணவன் மனைவியிடம் சொல்லி
1.என் காரியம் சித்தியாக வேண்டும்
2.உன் அருள் வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுச் செல்ல வேண்டும்.
3.ஏனென்றால் இருவரும் வேறல்ல… சக்தி இல்லையேல் சிவமில்லை… சிவம் இல்லையேல் சக்தியில்லை….!

ஆகவே இந்த வாழ்க்கையில் எப்பொழுதுமே அன்னை தந்தையரின் அருளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றுமே பேரின்பம் கிடைக்கும்.

1.சாதாரணமாக… “மனைவி தான்” என்று எண்ணிவிடக் கூடாது.
2.அருள் தெய்வம் என்ற எண்ணத்திலேயே நாம் வருதல் வேண்டும்.
3.மகாலட்சுமி என்று கூட நீங்கள் எண்ணலாம் – சர்வத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.

பெண்களுடைய வாக்கை என்றுமே ஆண்கள் தொடர்ந்தால் எதை வாழ்த்தி அனுப்புகின்றார்களோ அந்த வாக்கின் பிரகாரம் அந்தக் காரியங்கள் நல்லதாகும்.

கணவன் மனைவி திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாக ஆனது போல
1.என்றுமே இந்த வாழ்க்கையில் எண்ணினால்
2.என்றுமே பிரியாத நிலைகள் கொண்டு உங்களுக்கு இனிப் பிறப்பே இல்லை.

இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இந்த வாழ்க்கையில் எப்பொழுது நீங்கள் பேரின்பம் பெறுகின்றீர்களோ அந்த அருள் வாழ்வு என்றுமே இருக்கும். அடுத்து உடல் இல்லை. இதே உடலின் உணர்வுகள் ஒளியாகிப் பேரின்பமாக வாழ முடியும்.

மனித உடலில் உள்ள நாடிகளின் துடிப்பு எதனால் மாறுபடுகிறது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

nadi chakkar cleaning

மனித உடலில் உள்ள நாடிகளின் துடிப்பு எதனால் மாறுபடுகிறது..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ணக் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

அகண்ட அணடத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி

universe-cosmos

அகண்ட அணடத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் கழிவாகப் பிரித்து விட்டு நல்லதை…
1.நறுமணம் கொண்ட உணர்வாகவும்
2.நறுமணத்தை அறியும் அறிவாகவும்
3.நறுமணத்தை நுகரும் தன்மையாகவும்
4.நறுமணத்தின் உணர்வு கொண்டு நற்செயலைச் செயல்படுத்தும் உணர்வாகவும் உடல் மாற்றுகின்றது.
5.உடலின் மணங்கள் இவ்வாறு இயக்குகின்றது

ஆனால் மற்ற உயினங்கள் விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு தன் உடலில் வலிமை பெறுகின்றது நல்ல உணர்வின் தன்மைகளை நஞ்சாக (கழிவாக) மாற்றுகின்றது.

உடல் வலிமை கொண்டு சிந்திக்கும் செயல் இழந்து ஒன்றோடு ஒன்று போர் முறை கொண்டு அது மற்றொன்றைத் தாக்கி மற்றவைகளின் உணவைப் பரிமாறிக் கொள்கின்றது.
1.இது மிருக உணர்வுகளின் இயக்கங்கள்.
2.ஆக நஞ்சின் வலிமை கொண்டு வரும் பொழுது சிந்திக்கும் தன்மை அவைகளுக்கு இல்லை.

ஆனால் மனிதனோ சிந்தித்துச் செயல்படும் தன்மை பெற்றவன். அந்த நஞ்சினை அடக்கும் உணர்வு கொள்ளும் பொழுது
1.அண்டத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் உணர்வின் தன்மையையும் எட்டிப் பிடித்து
2.அகண்ட அண்டத்தில் அந்த அருள் ஒளியின் சுடராக அறியும் வல்லமை பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு…”

அகண்ட அண்டத்தின் உணர்வுகளை நம் பிரபஞ்சம் கவர்ந்து சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகிறது. அதைப் போல
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரம் பெறும் அறிவின் தன்மையைத்தான் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.கார்த்தி என்றால் வெளிச்சம்.

அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மையும் அண்டத்தில் உருவான நம் பிண்டத்திற்கு (உடலுக்கு) உண்டு. அகண்ட அண்டத்தின் ஆற்றலை நமக்குள் பெறும் தகுதியும் உண்டு.

ஆகவே எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதை வென்றிடும் உணர்வு பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து என்றுமே நமக்குள் பேரின்பம் என்ற நிலையை உருவாக்கிடல் வேண்டும்.

அத்தகைய அருள் ஞானத்தை கணவன் மனைவி இருவருமே பெற்றுப் பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் இரு மனமும் ஒன்றாகி இரண்டறக் கலந்து உணர்வின் ஒளியாக மாற்ற வேண்டும்.

கணவனும் மனைவியும் அருள் ஞான சக்தி பெற்று நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறவேண்டும். உலக ஞானம் பெற்று இந்த உலகைக் காத்திட வேண்டும்.

உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம் உடலுக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. ஆகவே அந்த உலக உணர்வை பகைமையற்ற நிலையாக்கிப் நம்மிடம் பகைமை வளராது தடுக்க வேண்டும்.

ஒளியின் சுடரான அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்தால்
1.உலக ஞானம் பெறலாம். பகைமைகளை அகற்றிடலாம்.
2.அருள் ஒளியின் சுடராகப் பேரருள் வாழ்க்கை வாழ்ந்து
3.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று
4.நம் பேச்சும் மூச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாக வளரும்.
5.இந்த உடலுக்குப் பின் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத வாழ்க்கை வாழலாம்.