எமது நண்பர் மனைவியின் உதிரப் போக்கை “பிரேக்..” போட்ட மாதிரி… நிறுத்தச் செய்தார் குருநாதர்

Arul Guru Gnanaguru

எமது நண்பர் மனைவியின் உதிரப் போக்கை “பிரேக்..” போட்ட மாதிரி… நிறுத்தச் செய்தார் குருநாதர்

 

எனக்கு (ஞானகுரு) மூல நோய் இருந்தது. அதே சமயத்தில் என்னுடைய நண்பர் தன் மனைவிக்கு உதிரப் போக்கு என்ற நிலைகள் வரப்படும்போது என்னிடம் சொல்லி குருநாதரிடம் கேட்டு மருந்து வாங்கிக் கொடுங்கள் என்றார்.

அப்பொழுதெல்லாம் விநாயகர் சிலை ஒன்றை வைத்து குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) சொன்னபடி அதை உற்றுப் பார்த்தால் காட்சிகள் கிடைக்கும். அந்தக் காட்சியின் தன்மை கொண்டு தெரிந்து சிலருக்குச் செய்வது உண்டு.

என்னுடைய சிறிய குழந்தை மீரா என்ற பெண்ணுக்குக் காட்சியாகக் கிடைக்கும். அது எல்லா விபரத்தையும் சொல்லும்.

இந்த மாதிரி நேரத்தில் என் நண்பர் வந்து தன் மனைவியின் உதிரப் போக்கை நீக்குவதற்கு குருநாதரிடம் மருந்து கேட்கச் சொல்கிறார்.

வீட்டில் கண் தெரியாத குழந்தை ஒன்று இருக்கின்றது, அது போக 4 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த உதிரப் போக்கு நிற்கவே இல்லை. டாக்டர்களால் ஆபரேஷன் செய்தும் முடியவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை.

இன்றோ நாளையோ என்ற நிலையில் என் மனைவி உள்ளது. இரத்தக் கசிவு அதிகமாகி அதனால் சேதமாகி இந்த உடலை விட்டு மனைவியின் உயிர் பிரிந்துவிடும் போலிருக்கின்றது என்று என்னிடத்தில் சொல்கின்றார்.

சரி.., சாமியிடம் கேட்கலாம் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.

அப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது குருநாதர் ரோட்டிலிருந்து சப்தம் போடுகின்றார். இங்கே நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். ரோட்டிலிருந்து சப்தம் போடுகின்றார்.

“டேய்.., ஓமப் பொடியை வாங்கிக் கொடுக்கச் சொல்லுடா.., உதிரப் போக்கு சரியாகப் போய்விடும் என்று சொல்லுடா” என்கிறார். எனக்குத்தான் தெரியும் நண்பருக்குத் தெரியாது.

ரோட்டில் இருக்கும் எலக்ட்ரிக் போஸ்டில் கல்லைக் கொண்டு “தட்டோ.., தட்டு” என்று தட்டி காது கேட்க வைத்து
1.“ஓமப் பொடியை வாங்கி வரச் சொல்லுடா..,
2.சரியாப் போகும் என்று சொல்லுடா” என்கிறார் குருநாதர்.

நண்பர் சொல்கிறார் இங்கே இத்தனை மருந்து கொடுத்து ஒன்றும் ஆகவில்லை. அது என்னங்க..! ஓமப் பொடியை வாங்கிக் கொடுக்கச் சொல்கிறீர்கள்? இப்படிச் சொல்லிவிட்டு வாங்கப் போய்விட்டார்.

அதைச் சொன்னவுடன் என்ன செய்தார் குருநாதர்?

எனக்கு (ஞானகுருவிற்கு) ஆனி மூலம் இருந்தது என்னால் ரொம்ப நேரம் உட்கார முடியாது.

உனக்கே மூல நோய் இருக்கின்றது, நீ அவர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போகின்றாயா? என்கிறார் குருநாதர்.

கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “படீர்..” என்று வெளியில் தள்ளிவிடுகிற மாதிரி அந்த ஆனி வெளியில் வந்துவிட்டது. என் வேஷ்டியெல்லாம் இரத்தமாகிவிட்டது. வேறு வேஷ்டியை மாற்றிவிட்டு வந்தேன்.

ஓமப் பொடியை வாங்கிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார் நண்பர். அவரிடம் சொல்லிக் கொடுத்து உங்கள் மனைவியைச் சாப்பிடச் சொல்லுங்கள் என்றேன்.

சாப்பிட்டவுடன் “பிரேக்..,” போட்ட மாதிரி ஆகிவிட்டது. ஏனென்றால்,
1.குருநாதருடைய அருள் வாக்கு,
2.பார்ப்பது ஓமப் பொடி
3.குரு அருள் அங்கே இருக்கின்றது.
4.அதன் வழி அங்கே நன்றாகிவிட்டது.

நண்பர் ஓடி வருகின்றார். நிற்காது போய்க் கொண்டிருந்த உதிரப் போக்கு அது பிரேக் ஆனது மாதிரி ஆகிவிட்டது.

நாளைக்கு வரையிலும் பார்க்கலாம் என்றார். இப்பொழுது நின்று விட்டது. நாளைக்குப் பார்த்தால் நாளைக்கும் இல்லை…! நன்றாகிவிட்டது…!

இதே போல குருநாதர் அவருடைய உணர்வின் ஆற்றல் மிக சக்திவாய்ந்த நிலைகளில் இருப்பதால்
1.நாம் இங்கே பேசினாலும்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு
3.சொல்லாகச் சொல்லச் சொல்லி
4.இந்த ஓமப் பொடிக்குள் வார்த்தையை விட்டு
5.நோய் சரியாகப் போகும் என்று சொல்லி அது கொடுக்கும்போது
6.இப்படித்தான் குருநாதர் அனுபவத்தில் கொண்டு வருகின்றார்.

அகோரிகளுக்கு முன்னாடி “என் தாய் காளியின் காட்சி…!”

Mathaji Kali

அகோரிகளுக்கு முன்னாடி “என் தாய் காளியின் காட்சி…!”

 

“ஆனந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள்…!” என்று இருக்கின்றார்கள். அதில் சேர்ந்தால் தவறு ஏதாவது செய்தால் கொலை செய்து விடுகிறார்கள். இப்படிக் கடவுளின் பேரைச் சொல்லிக் கொண்டு தன் மதம் என்ற நிலையில் இது ஒரு மார்க்கம் என்று தவறான வழியில் செயல்படுகிறார்கள்.

நான் (ஞானகுரு) காசிக்குப் போகும் போது அந்த அகோரிகள் மனிதப் பிணத்தை சாப்பிடுகிறார்கள் என்று சொன்னேன். யாருமே இதை நம்பவில்லை…!

அப்புறம் ரொம்ப நாள் கழித்து இந்தியா டுடே பத்திரிக்கையில் வந்த பின் நம்பினார்கள். அதில் ஒரு மாநில கவர்னரின் மகனும் இருந்தான். நர மாமிசத்தைச் சாப்பிடுகிறார்கள். பிரேதத்தை எடுத்துக் கொண்டு வந்து அறுத்துப் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள் என்று போட்டிருந்தார்கள்.

ஏனென்றால் நான் அங்கே நடப்பதை நேரடியாகப் கண்ணில் பார்த்தேன். அதைத்தான் சொன்னேன்.
1.இப்படி எல்லாம் உலகத்தில் இருக்குமா…!
2.அது எப்படிங்க அறுத்துச் சாப்பிட அரசு (GOVERNMENT) அனுமதிக்கும் என்றார்கள்…?

ஏனென்றால் என்னையே (ஞனாகுரு) அந்த அகோரிகள் கொன்று சாப்பிட வந்தார்கள். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன முறைப்படி காசி கங்கைக் கரையில் நாற்பத்தெட்டு நாள் தியானம் இருந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஓ…ஹோ… ஓ…ஹூ…! ஓ…ஹோ…ஹோ…ஹோ…! மாதாஜி…! என்று சப்தம் போட்டுக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

நான் இங்கே கங்கை மணல் திட்டில் வருவதற்கு முன் நாதுராம் என்ற ஒருவனிடம் பணத்தையும் கொடுத்து விலாசத்தையும் கொடுத்திருந்தேன். ஒரு டெலஸ்கோப்பையும் கொடுத்துவிட்டு இங்கே ஏதாவது வித்தியாசமாக ஆனால் நேராக மங்களூருக்குத் தந்தி கொடுத்துவிடு…! என்று சொல்லி இருந்தேன்.

நான் சொன்ன மாதிரி அவன் அங்கே கங்கைக் கரையிலிருந்து இங்கே என்ன நடக்கிறது…? என்பதை டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

இங்கே அகோரிகள் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். திடீரென்று அவர்கள் முன்னாடி காளி ரூபம் கிடைத்தவுடனே “மாதாஜி… மாப் கரோஜி…! மாதாஜி… மாப் கரோஜி…! என்று தாளத்தை மாற்றி எல்லாம் ரவுண்டு அடித்தார்கள்.

1.“என் தாய் காளியை…
2.அதாவது கல்கத்தா காளியை… அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்…!”
3.அந்த ரூபத்தில் வந்தவுடனே அப்படியே அரண்டு போய் “மாதாஜி மாப் கரோஜி…!” என்றார்கள்.

அப்புறம் அந்த நேரத்தில் நாதுராம் படகை அனுப்பி வைத்தான். நான் அங்கிருந்து திரும்ப வந்துவிட்டேன்.

அதே சமயத்தில் காசியில் பண்டாக்கள் என்று இருப்பார்கள். ஒவ்வொரு மடத்திற்கும் ஐம்பது பேர் நூறு பேர் என்று இருப்பார்கள். ஏதாவது என்றால் உடனே சண்டைக்குப் போவார்கள். கையில் துப்பாக்கி கத்தி எல்லாமே வைத்திருப்பார்கள். இப்படி இந்தப் போக்கிரிகள் வாழக்கூடிய இடம் காசி.

விவரம் தெரியாமல் அங்கே படகில் போனால் போதும். கங்கையிலே குதிப்பார்கள். உள்ளே சென்று போகின்ற படகை அப்படியே கவிழ்த்தி விடுவார்கள்.

தண்ணீருக்குள் போனவுடனே அப்படியே போட்டிருக்கும் நகை எல்லாம் அத்து எடுத்துக் கொண்டு போய்விடுவான். காசியில் இப்படி எல்லாம் காரியங்கள் நடக்கிறது. அங்கே தான் புனித நீராடுகிறார்கள்.

ஏனென்றால் இந்த ரகசியம் எல்லாம் அறிவதற்காக வேண்டித்தான் 48 நாட்கள் குருநாதர் என்னை (ஞானகுரு) அங்கே இருக்கச் சொன்னார்.
1.இங்கே என்ன நடக்கிறது…?
2.காசி விஸ்வநாதர் என்ன எல்லாம் செய்கிறார்…?
3.என்னென்ன பாவத்தை எல்லாம் போக்குகிறான் பார்…! என்று காட்டுகின்றார்.

ஏனென்றால் கங்கையிலே “நீர் சமாதி…!” என்று வைப்பார்கள். அங்கே இருக்கும் போக்கிரிகள் அவர்களுக்கு ஆகாதவர்களைக் கொன்று இங்கே தண்ணீரில் தள்ளி விட்டுப் போய்விடுவார்கள். தண்ணீரில் போய்விட்டது என்றால் யார் அடித்தார்கள்…? எவர் அடித்தார்கள்…? என்ற கேள்வி இல்லை.

காலையில் கங்கைக் கரையில் பார்த்தோம் என்றால் தலை கை கால் முண்டமெல்லாம் நாய் இழுத்துக் கொண்டு வந்து தின்று கொண்டிருக்கும். காசியில் அங்கே என்னென்ன நிலைகள் நடக்கிறது என்று எல்லாவற்றையும் பார்த்து விட்டு வந்தேன்.

அதே மாதிரி “அரிச்சந்திரா காட்..!” (இடுகாடு) என்று உண்டு. அங்கே வைத்து இறந்தவர்களை எரிப்பார்கள். பிரேதம் வேகும் பொழுதே இந்த அகோரிகள் வந்து விடுவார்கள்.

அது நல்ல சரீரமாக இருந்தது என்றால் உடனே “நிறுத்து…!” என்பார்கள். சரீரம் வெந்திருந்தது என்றால் அதற்குள் இருக்கும் ஈரலை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். அமாவாசை அன்றைக்கு இந்த வேடிக்கை எல்லாம் நடக்கும்.

நல்ல பிரேதமாக இருந்தால் அகோரிகள் பார்த்தவுடனே சலோ…! சலோ…! என்பான். உடனே விலகிக் கொள்வார்கள். விலகவில்லை என்றால் முழித்துப் பார்ப்பான். சாபமிடுவான்…! இதற்குப் பயந்தே விட்டு விலகிவிடுவார்கள். அந்தக் காட்டில் எல்லாம் அவர்களுடைய இராஜாங்கம் தான். அவர்களிடம் கப்பம் கட்டிவிட்டுத்தான் ஏரிக்க வேண்டும்.

அன்றைக்கு அரிச்சந்திரன் எப்படி இருந்தானோ அதே மாதிரித்தான் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பிரேதத்தை எடுத்துக் கொண்டு போய் அதனின் நெற்றியில் சூடத்தைப் பொருத்தி வைத்து ஜெபத்தைப் பண்ணுவான்.

இந்தச் சரீரம் நகரும். நகர ஆரம்பித்தவுடனே அறுத்து அப்படியே பச்சையாகவே தின்பார்கள். அதாவது ஆண்டவனுக்காக வேண்டி அர்ப்பணிக்கிறோம் என்று செய்கிறார்கள்.

புதிதாக யாராவது போனாலும் இதை எல்லாம் பார்த்துப் பயந்தான் என்றால் அவனையும் கொன்று சாப்பிட்டு விடுவார்கள். ஏனென்றால் ஆண்டவனை அடைய வந்தான், அவனுக்காக வேண்டி உடலைக் கொடுத்தாலும் இந்த உயிர் ஆண்டவனிடம் போய்ச் சேருகிறது அதனால் பயப்படாமல் இதைச் செய்…! என்று இப்படி ஒரு தத்துவத்தை வைத்திருக்கிறார்கள்.

ஆண்டவனை அடைய வேண்டும் என்றால் அவன் உடலிலிருக்கக் கூடிய எதையும் கழிக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுகின்றார்கள், ஆக ஆண்டவனுடன் ஐக்கியமாகின்றான் என்று இப்படி ஒரு தத்துவம்.

நான் (ஞானகுரு) இதை எல்லாம் பார்த்துவிட்டு வந்து இங்கே சொன்னால் யாருமே நம்பவில்லை. சாமி “டூப்” விடுகிறார்… சரியான “கப்சா” விடுகிறார்…! என்றே சொன்னார்கள்.

அப்புறம் பல வருடம் கழித்துப் பத்திரிக்கையில் வந்ததும் அந்தப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்து “சாமி…! நீங்கள் ஏற்கனவே சொன்னீர்கள்.. அது நிஜமாகவே நடக்கிறது….! அன்றைக்கு டூப் விடுகிறீர்கள் என்று சொன்னேன்… என்னை மன்னித்து விடுங்கள்…! என்று சொன்னார்.

ஏனென்றால் இது எல்லாம் உலகில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.
1.உலகம் எப்படி இருக்கிறது…?
2.மதங்கள் எப்படி இயக்குகின்றது…? என்று இதெல்லாம்
3.முழுமையாகப் பார்த்துவிட்டு வந்து தான் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்… சும்மா இல்லை…!

மனிதன் மதத்தின் நிலைகள் கொண்டு செல்லும் பொழுது சாகாக்கலையாகிறது. இறந்தால் இந்த உடலில் எதைச் செய்தோமோ மீண்டும் அந்தக் கலையாக மீண்டும் உடலாக உருவாகும்.

ஆனால் மகரிஷிகள் அனைவருமே வேகா நிலை என்ற அழியா ஒளியின் சரீரம் பெற்றவர்கள். நாம் அதை அடைய வேண்டும். அந்தப் பக்குவம் வேண்டும்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் சில குறைகளைக் காண நேரினும் அதை அகற்றும் இந்த ஞாபக சக்தியும் அந்த ஞானமும் பெற வேண்டும் என்பதற்கு தான் இதை உங்களுக்குள் பதிவாக்குவது.
1.உங்கள் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து
2.அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரும் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத் தான் இதை உபதேசித்தது.

ஆகவே மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம். அந்த அருள் ஞானத்தைப் பெறுவதற்கு நம் உடலிலுள்ள ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் முகப்புகளிலும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் செருகேற்றிக் கொள்வோம்.

அந்த மகரிஷிகள் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் நம்மைப் பற்றாது ஆத்ம சுத்தி என்ற ஆயுத்தைப் பயன்படுத்தி எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

“கடவுளை அடைய வேண்டும்…!” என்ற நிலையில் மதங்கள் கலாச்சாரத்தைப் பற்றி டெல்லியில் நடந்த உலக மாநாடு

Kalki of our aoul

“கடவுளை அடைய வேண்டும்…!” என்ற நிலையில் மதங்கள் கலாச்சாரத்தைப் பற்றி டெல்லியில் நடந்த உலக மாநாடு

 

ஒரு சமயம் (40 வருடம் முன்பு) டெல்லியில் மதங்கள் கலாச்சாரங்களைப் பற்றி உலகெங்கிலும் உள்ளவர்களை வரச் சொல்லியிருந்தார்கள். நானும் (ஞானகுரு) போயிருந்தேன்.

கடவுளின் தன்மை நாம் அடைய வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலிருந்து ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

எல்லாம் தொடங்கியதும் ரஜ்னீஷ் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தோம் என்றால் அவர்கள் பாட்டுக்கு ஆட ஆரம்பிக்கின்றார்கள், மேலே போட்டிருக்கிற துணியெல்லாம் கீழே விழுகிறது.

இது பக்தி மார்க்கங்களில் தன்னை அறியாது சொர்க்கம் போகும் மார்க்கங்கள் என்று எல்லோருக்கும் முன்னாடி இப்படிச் செய்கிறார்கள்.

ஒருவர் என்ன செய்தார் என்றால் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கிறார். குண்டலினி யோகா என்று சொல்லி மூச்சை நிறுத்தி அதாவது உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு
1.நான் எத்தனை நாள் என்றாலும் பசி இல்லாமல் இருப்பேன்.
2.காற்றே இல்லாத இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் பிராணனை எடுத்து நான் உருவாக்கிக் கொள்வேன்.
3.மூன்று நாள் அடக்கி வைத்து இருக்கின்றான்.

அந்தச் சமயம் அங்கே குளிர் காலம். மார்கழியில் நல்ல குளிர் சும்மா வெளியிலே போனாலே கிடு…கிடு… என்று நடுங்கும். ஒரு சாமியார் சட்டை போடாமல் அங்கே உட்கார்ந்தார். துண்டு ஒன்றைப் போர்த்தியிருக்கின்றார்.

ஆனால் நான் அந்தத் துண்டு கூடப் போர்த்தவில்லை. சட்டை இல்லாமல் அப்படியே அங்கே உட்கார்ந்தேன். ஏனென்றால் குருநாதர் எம்மை ஏற்கனவே இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தார் அல்லவா…!

கடைசியில் எல்லோருக்கும் ஐந்து நிமிடம் தான் பேச விட்டார்கள். சமாதி நிலை போன்றவர்களுக்கு மட்டும் ஒரு அரை மணி நேரம் கொடுத்தார்கள்.

ரஜ்னீஷ் ஆள்கள் எல்லாம் டேப் ரிகார்டு புஸ்தகம் எல்லாம் வைத்துக் கொண்டு வெளிநாட்டிலிருந்து நிறையப் பேர் வந்து இருக்கிறார்கள். அது வியாபாரம் நிறைய ஆகிறது.

பெரிய பெரிய ஆபிசராக இருக்கின்றார்கள். பார்த்தோம் என்றால் இது ஒரு கலை என்று ஆடுகிறார்கள். துணி மேலே இருக்கிறதில்லை. ஏனென்றால்
1.தன்னை மறந்து எவன் இருக்கிறானோ
2.அவன் ஆண்டவனை அடைவான் என்று இப்படி ஒரு நம்பிக்கை
3.ஆடுகிறார்கள் என்றால் அந்த உணர்வின் தொடர் கொண்ட ஆவிகள் தொடரும்.
4.ஆக எதை அடையப் போகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை.

என்னைப் பேசச் சொன்னார்கள். அங்கே செகரட்டரியில் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்துப் பேசச் சொன்னார்கள்.

குருநாதர் காட்டிய வழியில் அன்னை தந்தையிலிருந்து… கடவுள்…! என்ற நிலைகள் கொண்டு வந்து அந்த மெய் உணர்வுகளைக் கொஞ்சம் சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரும் மெய் மறந்து போய் விட்டார்கள்.

நேரம் ஆகி விட்டது….! பேச்சை நிறுத்தலாமா…? என்று கேட்டேன். இல்லை இல்லை…! நீங்கள் பேசலாம் என்று என்னை விட்டுவிட்டார்கள்.

எனக்கு அடுத்துப் பேச வந்தவருக்கு என்னாகிப் போனது..? அவர் அந்த நேரத்திற்கு வந்து பேச வேண்டும் அல்லவா…! என்னைப் பேசச் சொன்னதும் அவரைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. எல்லாக் கூட்டமும் என்னிடம் வந்துவிட்டது.

இஸ்ரேலில் இருந்து யூதர்கள் கூட அதில் வந்திருந்தார்கள். மற்ற நாட்டிலிருந்தும் இமயமலையில் இருக்கக்கூடியவர்களும் ஜைன மதம் புத்த மதம் என்ற் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே வந்து இருந்தார்கள்.

அந்த இயற்கையின் உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் உயிரின் இயக்கங்களையும் பேச ஆரம்பித்ததும் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் ஆனது. பத்து நிமிடம் அரை மணி நேரம் ஆகிப் போனது.

அந்தக் கூட்டம் என்னை வெளியே விட மாட்டேன் என்கிறார்கள். அப்புறம் ஒரு வழியாக விட்ட பின் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுத்தேன். ஆனால் நான் (ஞானகுரு) ஹிந்தியில அரையும் குறையுமாக இருந்ததால் அவர்கள் கேட்பதற்கு முழு விளக்கம் கொடுக்க முடியவில்லை.

அப்பறம் அங்கே இரண்டு நாள் இருந்து இன்னொருவர் உதவியுடன் ஹிந்தியிலே புத்தகத்தை அடித்துக் கொடுத்து விட்டு வந்தேன். ஏனென்றால்
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை
2.தானும் அறிந்து வளர்க்க வேண்டும் என்ற நிலையில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.

ஆனால் இதைச் சரியான நிலையில் அறியாதபடி “கல்கி வந்து விட்டார்…!” என்கிறார்கள். கல்கி யார்…? என்றே தெரியாதபடி. கல்கி அவதரித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்..!

எங்கே வந்தார் கல்கி…?

1.நம் உயிர் கல்கி ஆகப்போகும் போது தீமையை வென்று அங்கே விண்ணுலகம் செல்வது தான் அது
2.மண்ணுலகில் வந்த தீமைகளை வீழ்த்திவிட்டு தீமையற்ற உலகை அடைவது தான் கல்கி…!
3.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிவிட்டால் அது தான் கல்கி..!

குருநாதர் காட்டிய வழியில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செல்லும் பொழுது நடந்த நிகழ்ச்சிகளை அனுபவமாக இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு தொண்ணூறு வயதுக் கிழவி உடலுக்குள் புகுந்த ஆன்மாவின் வீரியச் செயல்கள் – நடந்த நிகழ்ச்சி

sudalai madan

ஒரு தொண்ணூறு வயதுக் கிழவி உடலுக்குள் புகுந்த ஆன்மாவின் வீரியச் செயல்கள் – நடந்த நிகழ்ச்சி

 

ஒரு சமயம் நான் சித்தான (ஞானகுரு) புதிதில் ஒரு அம்மாவை என்னிடம் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அந்த அம்மாவிற்குத் தொண்ணூறு வயது இருக்கும்.

எனக்கு வரும் இம்சைகளைத் தாங்க முடியவில்லை ஐயா…! என்று தன்னுடைய குறையைச் சொல்கின்றது. சொன்ன உடனே உஹ்ஹூ.. ஹ்ஹூ…! என்று அது ஆட ஆரம்பித்து விட்டது.

கூடக் கூப்பிட்டு வந்தவர்கள் என்ன செய்து விட்டார்கள்…? எல்லாம் அரண்டு ஓடுகிறார்கள். என்னடா…! இந்த மாதிரி இப்படி ஆடுகிறது என்று…!

பக்கத்தில் ஒரு உரல் இருந்தது. அந்தக் கல்லை அப்படியே தூக்குகிறது. அப்படியே தூக்கிப் போட்டு விடுவேன்…! என்று ஆட்டம் ஆடுகிறது.

இந்த மாதிரி எல்லாம் ஏதாவது சேஷ்டை செய்து விடும் என்று தான் துணைக்குக் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். அப்பொழுது அந்த அம்மா கண்களைப் பார்த்தோம் என்றால் தொண்ணூறு வயதுக் கிழவி என்று சொல்ல முடியாது. அவ்வளவு கொடூரமாக இருக்கிறது.

அப்பொழுது குருநாதர் இது எப்படி…? என்று அங்கே எனக்குக் காண்பிக்கிறார். எனக்குச் சாப்பாடு கொடு… சாப்பாடு கொடு…! என்று சப்தம் போடுகிறது.

மாடசாமி… அந்த சாமி… இந்த சாமி… என்று சில கோயில்களில் “மண்ணில் சுட்ட குதிரைகளைச் செய்து வைத்திருப்பார்கள்….!” அந்த ஓடு (மண்னால் செய்த ஓடு) தான் இதற்குச் சாப்பாடு.

அந்த அம்மாவிற்குப் பல்லே இல்லை. எனக்கு அதைக் கொடுடா…! என்று கேட்கிறது. ஏற்கனவே ஒரு கூடையில் அதைக் கொண்டு வந்திருந்தார்கள். அதைக் கொண்டு வந்து போட்டவுடனே நறு…மொறு…! நறு…மொறு…! என்று அப்படியே எடுத்துச் சாப்பிடுகிறது.

சாப்பிட்டு முடித்தவுடனே அப்பா… கொஞ்சம் தண்ணீர் கொடுடா சாமி…! என்கிறது. தண்ணீரைக் குடித்தவுடனே அந்த ஆவி ஒடுங்கிவிட்டது. அந்த அம்மா தன் கதையைச் சொல்கிறது.

இப்படித் தான் சாமி…! என்னுடைய நாற்பது வயதிலிருந்து இப்படிச் செய்து கொண்டிருக்கின்றது. என்னை வாழவே விடவில்லை. என் புருஷன் இரத்தத்தைக் குடித்துக் கொன்று விட்டது, வெளியில் தெரியவில்லை. நான் இந்த மாதிரி இதில் சிக்கிக் கொண்டிருக்கின்றேன். என்னைக் காப்பாற்றுங்கள் சாமி…! என்று கேட்கிறது.

அந்த அம்மாவுக்குத் தொண்ணூறு வயது. கொடூரமான உணர்வுகள் கொண்டு காட்சி கொடுப்பதும் தன்னை அறியாமல் இயக்கக் கூடியதும் பல்லே இல்லாமல் அந்த ஓடுகளைத் தின்பதுவும் ஆக இருக்கிறது.
1.அந்த உரலை அப்படியே தூக்குகிறது என்றால்
2.அதற்கு எவ்வளவு வீரியம் இருக்கும்…! என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

ஓடுகளைத் தின்ற பிற்பாடு ஆடுகள் பல வெட்ட வேண்டுமாம். என்னமோ… இங்கு ஆடு இல்லாமல் போய்விட்டது. ஒன்றும் வெட்டச் சொல்லவில்லை….!

ரோட்டில் ஏதாவது போனது என்றால் அதைக் கொல்லும். பல்லைக் கொண்டு கடிக்கும். யாராலேயும் பிடித்து நிறுத்த முடியாது. ஒன்றும் சிக்கவில்லை என்றால் நம்மையே பிடித்துக் கடித்துவிடும்… இரத்தத்தையே உறிஞ்சிவிடும் என்று சொல்லித்தான் நாங்கள் ஓடிப் போய்விட்டோம் என்று கூட வந்தவர்கள் சொன்னார்கள்.

அப்புறம் அந்த அம்மாவிற்குச் சில விபரங்களைச் சொல்லிச் செய்யச் சொன்னேன்.
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உன் உயிரை எண்ணு…!
2.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணு…
3.என் உடலில் இருக்கும் இந்த ஆன்மா “பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்…! என்று சொல்லிக் கொண்டே இரு…!” என்றேன்.
4.அப்புறம் ஆசிர்வாதம் கொடுத்து நீ இந்த மாதிரிச் செய்து கொண்டே வா அம்மா என்று சொன்னேன்.

அதற்கப்புறம் நான் குருநாதர் சொன்ன வழியில் உலக அனுபவம் பெறுவதற்காக வெளியிலே போய்விட்டேன். மீண்டும் திரும்ப வந்த பின் அந்த அமமாவைப் பற்றி விசாரித்தேன்.

நீங்கள் சொல்லிவிட்டுப் போன பிறகு அந்த அம்மாவிடம் ஆட்டம் வரவில்லை. அது பாட்டுக்கு “ஈஸ்வரா… ஈஸ்வரா…! என்று சொல்லிக் கொண்டே கடைசியில் தன் உடலை விட்டுப் பிரிந்து விட்டது என்று சொன்னார்கள். இது நடந்த நிகழ்ச்சி.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருப்பணச்சாமிக்கு ஆடு கோழி பலி கொடுக்கிறார்கள் என்ற நிலையில் அந்த உணர்வை எடுத்து வளர்த்துக் கொள்கிறார்கள். அத்தகைய உணர்வு கொண்டவர்கள் உடலை விட்டுப் போன பின் இன்னொரு உடலுக்குள் போய்விட்டால் அருளாடத் தொடங்கும்.
1.ஆடு கொண்டடா…! என்று கேட்கும்.
2.கொடுக்கவில்லை என்றால் உன் குடும்பத்தையே நாசம் செய்து விடுவேன்டா…! என்று சொல்லும்.
3.இந்த மனித உடலில் ஏற்பட்டது தான் இந்தத் தெய்வங்களாக வருவது.
4.அதில் எவ்வளவு கொடூரப் பற்களைக் காண்பித்து இருக்கிறார்களோ அதே மாதிரிக் கண்களில் வரும்.

சில இடங்களில் ராட்சஷ பொம்மைகளைப் போட்டுக் காட்டுகிறார்கள். அதன் வழி வணங்கி அவர்கள் இறந்து விட்டார் என்றால் அதே உணர்வு இந்த அலைகளாக வந்து பாயும்.

இவர்கள் இறந்த பிற்பாடு இவர்கள் உடலில் சேர்த்த அலைகள் தான் பரவுகின்றது. அதை இன்னொருவன் நுகர்ந்தவுடனே குவித்து அந்த ரூபத்தை அங்கே காட்டும்.

ஏனென்றால் ஒரு மனித உடலில் விளைய வைத்த உணர்வின் அணுக்கள் தான்….
1.பேயைப் பார்க்கிறதும்
2.முருகனைப் பார்க்கிறதும்
3.காளியைப் பார்க்கிறதும்
4.மாடனைப் பார்க்கிறதும்.. இப்படி எல்லாமே…!

இதுகளெல்லாம் அன்றைய அரசர்கள் மற்ற உயிர்களைப் பலியிடப்பட்டு காவல் தெய்வமாக வைத்தனர். இது போன்ற நிலைகள் நம் நாட்டில் மட்டும் என்று இல்லை. உலகம் முழுவதும் இதைப் போன்ற காவல் தெய்வங்களை வைத்து இருப்பார்கள்.

கிறிஸ்தவர்களை எடுத்துக் கொண்டால் நாட்டை ஆட்சி புரிவதற்காகவும் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் வேண்டி பிறந்த கன்றுகளை பலி கொடுப்பார்கள்.
இதே போன்ற நிலைகள் முஸ்லீம் நிலைகளிலும் உண்டு. ஏனென்றால் இவை எல்லாம் அந்த யூத வம்சத்திலிருந்து பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது தான்.

அதர்வண வேதம் என்ற நிலையில் ஒன்றை அழித்து ஒன்றின் நிலைகள் வந்தது தான் எல்லாமே. மனிதன் திரிபு செய்து வேதங்களை மந்திர ஒலிகளாக மாற்றப்பட்டு ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசமாக வந்தது. இது மனித உடலுக்குள் எடுத்து சில வேலைகளைச் செய்யும் .

1.நம் நாட்டில் தோன்றிய பெரும் பகுதி ஞானிகள் அனைவருமே
2.விண்ணுலக ஆற்றலை வைத்து அகஸ்தியன் வழியிலே விண் சென்றவர்கள்.
3.இருந்தாலும் காலத்தால் அந்த நிலைகள் மறைந்தது.

அந்த மறைந்த உண்மைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் சிறுகச் சிறுக அந்த மெய் ஞானத்தின் உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் ஊட்டிக் கொண்டே வருகின்றோம். எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

தங்கம் செய்யும் வித்தைக் காட்டிவிட்டு அதன் பின் உன் மனதைத் தங்கமாக்குடா போடா…! என்றார் குருநாதர்

Golden heart

தங்கம் செய்யும் வித்தைக் காட்டிவிட்டு அதன் பின் உன் மனதைத் தங்கமாக்குடா போடா…! என்றார் குருநாதர்

 

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் என்னைத் தங்கம் செய்யச் சொன்னார் குருநாதர். பாதரசம் ஈயம் காரீயம் இதை எல்லாம் கொண்டு வரச் சொன்னார். ஒரு இரும்புக் கரண்டியையும் கொண்டு வரச் சொன்னார்.

எல்லாம் போட்டு அதிலே அதிலே பாஷாணக் கல்களைப் போட்டவுடனே தண்ணீராகக் கரைகிறது. ரசமாக மாறி குழம்பு மாதிரி ஆகிவிடுகிறது.

அது குழம்பு மாதிரி ஆன பிற்பாடு அங்கே இருக்கிற குப்பை செத்தை எல்லாவற்றையும் போட்டு எரிக்கச் சொன்னார். அது எரித்தவுடனே அதிலே இருக்கக்கூடிய அழுக்குகள் எல்லாம் ஆவியாகப் போய்விடுகிறது.

அதிலே பாதரசம் மாதிரி மிஞ்சுகிறது, பல பொருள்களும் அது வேக வேக இந்த உணர்வுகள் அதிகமாகிறது. கடைசியில் “இது எப்படிடா இருக்கிறது…?” என்று கேட்டார் குருநாதர்.

நெருப்பிலே இருந்தால் எப்படி இருக்கும்..? அது பளீர்…! என இந்த நெருப்பு மாதிரியே தெரிந்தது.

எப்படிடா இருக்கிறது…? என்றார்.

தக…தக…! என்று இருக்கிறது என்று சொன்னேன்.

என்னடா…! தக…தக…? என்று சொல்லி எனக்கு இரண்டு அடி கொடுத்தார். அவர் எப்படி இருக்கிறது என்று கேட்கக் கேட்க நான் தக…தக…! என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

தக…தக…! என்றால் என்ன…? என்றார்.

தங்கம் மாதிரி இருக்கிறது….! என்றேன்.

தூ……! என்று துப்புடா… போட்டு விட்டார். தூ…! என்று அவர் துப்பினார். இது எனக்குத் தெரியாது. தூ…! என்று உமிழ் நீரைத் துப்பி அதாவது
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லச் சொல்லி விட்டு
2.அந்த உணர்வை எடுத்து அது மேலே துப்புகின்றார்.

மூடுடா…! என்றார். அப்புறம் பார்த்தால் தங்கக் கட்டியாக இருக்கிறது. இதிலே இத்தனை வேலை இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்லி அந்த உணர்வை எல்லாம் எனக்குள் ஊட்டி ஒவ்வொரு அறிவையும் கொடுக்கிறார்.

தங்கத்தைக் கொண்டு போய் கடையில் விற்று வா என்றார் குருநாதர். நகைக் கடை ஆசாரி ஒருவரிடம் கொடுத்ததும் அவர் உரசிப் பார்த்தார்.

அட… அட… அடா…! நைனா… கிடைத்துவிட்டது கிடைத்துவிட்டது…! அவருக்கு வார்த்தையே வர மாட்டேன் என்கிறது. நீங்கள் இதை எதிலே செய்தீர்கள்…? எப்படிச் செய்தீர்கள்…! என்று கொஞ்சம் சொல்ல வேண்டும். பெரிய கட்டிடமாகவே கட்டிவிடலாம் என்று சொல்கிறார்.

நீ கிழவனுடன் (ஈஸ்வரபட்டருடன்) சேர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும் போதே எனக்குத் தெரியும் என்று சொல்கிறார் அந்த ஆசாரி. இன்னும் கொஞ்சம் செம்பை அதிலே சேர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா நான் வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். அதை விற்று வந்துவிட்டேன்.

ஏனென்றால் குருநாதர் தங்கம் செய்ய என்னென்ன வேலை செய்தார்…? என்று
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லி
2.அந்த உணர்வுக்குண்டான கலவைகள் என்னென்ன…?
3.அதைச் சொல்லும் பொழுது என்னென்ன உமிழ்நீர்கள் சுரக்கிறது…? எனக்கு அந்த உணர்வை ஊட்டுகிறார்.

ஏனென்றால் பல கோடித் தாவர இனங்களையும் சாப்பிட்டு விட்டுத் தான் இன்று மனிதனாக வந்து இருக்கிறோம். அதில் எதை எதைக் கலக்க வேண்டும்…? என்று உணர்த்தி அந்த உமிழ்நீரை அதில் துப்பும்படிச் சொல்லி அதில் பட்டவுடனே எப்படித் திரவகத்தை ஊற்றியதும் நிறங்கள் மாறுமோ அது மாதிரி அங்கே உயர்ந்த தஙகமாகிறது.

இப்படி அனுபவபூர்வமாகச் செய்து காட்டினார் குருநாதர்.

(ஆனால் மற்றவர்கள் தங்கம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பாதரசத்தையும் பச்சிலைகளையும் உருட்டிப் பிரட்டி என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள். கடைசியில தங்கத்தையும் கலக்கின்றார்கள். எல்லாம் முடிந்ததும் பார்த்தால் போட்ட தங்கம் மட்டும் இருக்கிறது மற்ற எல்லாம் கரைந்து போய்விடுகிறது. தங்கம் செய்வதைக் கொஞ்சம் காட்டிக் கொடுங்கள். உங்களுக்குக் கோவிலையே கட்டிவிடலாம் என்று எமக்குப் (ஞானகுரு) பின்னாடி சுற்றியவர்கள் ஏராளம் பேர்)

அப்புறம் குருநாதர் எப்படிச் செய்தாரோ அதே போல் நானும் முயற்சி செய்தேன். அவர் எங்கெங்கே போய் குப்பை செத்தை எல்லாம் அள்ளச் சொன்னாரோ மறுபடியும் நான் அதை எடுத்தேன்.
1.எல்லாம் செய்து அவர் சொன்ன மாதிரி அந்த உணர்வு கொண்டு தூ……! என்று துப்பினேன்.
2.இரண்டாவது தரம் தங்கமாகிப் போனது…!

நகைக் கடைக்குக் கொண்டு போனவுடனே அந்தக் கட்டியைப் பார்த்தவுடனே துள்ளுகிறார்கள். அடடா…! தினம் இவ்வளவு கொண்டு வந்து கொடுத்தால் போதும்…! என்கிறார்கள்.

அப்புறம் என்னை விரட்டி விரட்டிப் பிடித்தார் குருநாதர்.
1.அவன் ஆசையை ஊட்டி விட்டு உனக்கு யோசனை சொல்கிறான்.
2.”நீ உன் மனதை தங்கமாக்க வேண்டும்…!” என்று நான் சொன்னால்
3.நீ இதைப் போய்த் தங்கமாக்குகிறாயே…!
4.அவன் ஆசையை ஊட்ட நீ தங்கத்தைச் செய்ய எங்கேடா போகிறாய்…?
5.உன்னுடைய ஒவ்வொரு உணர்வும் அது மங்காத நிலைகளுக்கு
6.அந்தத் தங்கம் போல் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்யச் சொன்னேன்..! என்று தெளிவாக்கினார் குருநாதர்.

சாதாரணமாக நான் கற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொன்றிலேயும் அடி வாங்கித் தான் கற்று வந்தேன். சொல்வது அர்த்தம் ஆனதா…?

முதலில் தங்கத்தை விற்றதற்கு ஒன்றரை ரூபாய் கொடுத்தார். இரண்டாவது கொடுக்கும் போது… சுத்தமாகவே நீ பொய் பேசினாய்… ஏமாற்றினாய் அதனால் உனக்குக் காசில்லை… போ…! என்று விற்ற காசு எல்லாவற்றையும் வாங்கி கொண்டு விட்டார்.

அது மட்டுமல்ல. அடி வேறு கொடுத்தார்.
1.நீ திருடன்டா…! என்கிறார்.
2.தங்கம் செய்துவிட்டு ஏமாற்றித் தப்பி ஓடலாம் என்று பார்க்கிறயா…?
3.நீ உன் மனதைத் தங்கமாக்குடா… போடா…….!

வெறுப்புடன் இருந்தால் பொறுமை இருக்காது… பொறுமை இல்லை என்றால் நல்லதை வளர்க்க முடியாது…” – நடந்த நிகழ்ச்சி…!

The SUCCESS of patience

வெறுப்புடன் இருந்தால் பொறுமை இருக்காது… பொறுமை இல்லை என்றால் நல்லதை வளர்க்க முடியாது…” – நடந்த நிகழ்ச்சி…!

 

ஒரு அம்மா தேனியிலிருந்து எம்மைப் (ஞானகுரு) பார்க்க வந்திருந்தார்கள். வெளி ஊருக்குச் சென்று விட்டு அப்பொழுது தான் தபோவனத்திற்குள் வந்தேன்.

சற்று உள்ளே சுற்றிப் பார்த்து விட்டு அதன் பின் என்னுடைய ரூமிற்குப் போகலாம் என்று இருந்தேன். அந்த அம்மாவோ அழுது கொண்டே இருக்கிறது.

அம்மா… “நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்…!” சிறிது நேரத்திற்குள் நான் வந்துவிடுகின்றேன். ரூமிற்கு வந்ததும் வாருங்கள் என்று உள்ளே சென்றுவிட்டேன். எல்லாம் பார்த்து விட்டு ரூமிற்கு வந்து விட்டேன். அந்த அம்மாவைக் காணோம்.

எங்கே அவர்…? என்று விசாரித்துக் கேட்டால் அந்த அம்மா ஊருக்கே திரும்பப் போய்விட்டார் என்று சொன்னார்கள். தியான வழியில் உள்ள அன்பர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டு “அவர் சொல்லி அனுப்பினார்…” என்று சொல்லி அந்த அம்மா இங்கே என்னைத் தேடி வந்திருக்கின்றது.
1.ஆனால் அவர்களின் சங்கடமோ
2.அந்த உணர்வின் இயக்கத்திலேயே தான் இருக்கிறது.
3.சங்கட உணர்வு இயக்கி தேடி வந்த நல்லதைப் பெறவிடாதபடி தடுத்து விட்டது…!

கொஞ்சம் பொறுத்து இரம்மா… அமைதியாக இரம்மா…! இப்பொழுது வந்து சொல்கிறேன் என்று தான் முதலில் சொன்னேன். என்னைச் சந்திக்க வருகிறவர்கள் ரோட்டில் வைத்து விபரம் கேட்டால் என்ன பதில் சொல்வது…?
1.வாக்குக் கொடுப்பது…
2.வாக்குச் சொல்வது…
3.மற்ற விபரங்களை எல்லாம் ரோட்டில் இருந்து சொல்ல முடியுமா…?

என்னைச் சந்திக்க வாங்க…! என்று தான் சொன்னேன். ஆனால் தன் கஷ்டத்தைச் சொல்லி அழுது கொண்டே போகிறது. இதற்கு என்ன செய்வது…?

ஏனென்றால்
1.ஏற்கும் உணர்வு அங்கே இல்லை…!
2.வெறுப்பு வரும் போது நல்லதைப் பெறுவதற்குண்டான பொறுமை இல்லை.
3.பொறுமை இருந்தால் ஏற்கும் தன்மை அங்கே வரும்.
4.ஏற்கும் தன்மை வந்தால் உணர்வுகள் பதிவாகும்.
5.அப்பொழுது தான் இருளை நீக்க அது உதவும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நம்மை இயக்குவது எது…? நம்மைப் பேசச் செய்வது எது…? நம்மைக் கோபப்படச் செய்வது எது…? நம்மை வெறுப்படையச் செய்வது எது…? நம்மை வேதனைப்படச் செய்வது எது…? என்று இதைப் போன்ற நிலைகளை எல்லாம் தெளிவாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுவாசிக்கும் உணர்வே நம்மை இயக்குகின்றது…! அப்பொழுது பிறிதொரு தீமையான உணர்வு நம்மை இயக்காதபடி தடுத்தே ஆக வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உயிர் வழியாகச் சுவாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனின் இயக்கமாகவே நாம் இருத்தல் வேண்டும்.

தெய்வீக குணங்களை வளர்த்துத் தெய்வீகப் பண்புகளை வளர்த்து தெய்வீக ஞானம் பெற்று என்றுமே நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒவ்வொருவரும் இணைந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்.

அதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

மலேசியாவில் அசைவம் சாப்பிடும் இடத்தில் சைவம் சாப்பிடும் பொழுது பெற்ற அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

Protected zone - divine

மலேசியாவில் அசைவம் சாப்பிடும் இடத்தில் சைவம் சாப்பிடும் பொழுது பெற்ற அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

 

நான் (ஞானகுரு) மலேசியா போய் இருந்தேன். சாப்பிடுவதற்காகச் சென்றால் எந்தக் கடையில் பார்த்தாலும் மட்டன் (மாமிசம்) தான் இருக்கிறது. மட்டன் இல்லாத கடையைப் பார்க்க முடியவில்லை.

அப்பொழுது யாம் சைவ உணவு சாப்பிடுவதற்கே பெரிய கஷ்டமாக இருக்கிறது. அந்த மாமிச உணர்வின் மணம் பட்ட உடனே எப்படிச் சாப்பிடுவது…! என்ற நிலை வருகிறது.

அப்பொழுது அதற்கு நாம் என்ன செய்வது…? என்று அதை நினைக்காதபடி நாம் வேறு எதையாவது சாப்பிடுவோம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு சீனர் கடையில் புத்த பிட்சுகள் வந்து சாப்பிடுவார்கள். அதனால் கொஞ்சம் சுத்தமாக இருக்கும் என்று சொன்னார்கள். சைவம் அசைவம் இரண்டு உணவுகளும் இருக்கும் இடத்தில் அசைவத்திற்குப் போடும் கரண்டியை சைவத்திற்குப் போட மாட்டார்கள்.

ஆனால் சில இடங்களில் இரண்டிற்கும் ஒரே கரண்டியைப் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். சரி பரவாயில்லை என்று போனோம்.

இந்தப் பக்கம் நான் வரிசையில் உட்கார்ந்திருக்கிறேன். அடுத்த பக்கம் சீனாவைச் சேர்ந்த புத்த மதத்தைச் சேராதவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அவர்களிடம் ஒரு அடுப்பைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

ஒரு மீனைச் சுரண்டிக் கொண்டு வந்து கொடுத்தவுடன் தண்ணீரில் வேக வைக்கிறார். கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு நாம் டீ சாப்பிடுவது போல வேக வைத்த மீன் தண்ணீரை அப்படியே குடிக்கிறார்.

அதை என் கண் பார்க்கிறது. ஆனால் அந்த வாசனையை நுகர நேர்கிறது. தப்பு செய்யவில்லை.
1.அந்த உணர்வின் வாசனைகள் அவர்களுக்குத் தெரியவில்லை
2.வாசனை தெரியாததால் அந்த உணவை ரசித்து சாப்பிடுகிறார்கள்.
3.ஆனால் எனக்கு இந்த நிலை வருகிறது.

அப்போது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்னபடி அவர்களும் நல்ல வழியிலே இதை மாற்றிச் சாப்பிடக் கூடிய உணர்வுகள் பெற வேண்டும் என்று கொஞ்ச நேரம் பிரார்த்தனை செய்த உடனே “அந்த வாசனையை இழுக்கக் கூடிய சக்தி… என்னிடம் குறைகிறது…!” நடந்த நிகழ்ச்சி இது.

அவர்கள் அசைவத்தைச் சாப்பிடுகிறார்கள். நம்மை ஒன்றும் சொல்லவில்லை. ஆனாலும் அருவருக்கத்தக்க நிலைகளில் அவர்கள் சாப்பிடும் போது அந்த உணர்ச்சிகளை நாம் நுகர நேர்கின்றது.
1.அதைப் பார்க்காத வரையிலும் வாசனை வரவில்லை.
2.ஆனால் அவர்கள் செயலை உற்றுப் பார்த்ததும் வாசனை வருகிறது.

அப்பொழுது அந்த உணர்வு வரும் போது குருநாதர் சொன்னபடி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து நான் மாற்றிக் கொண்டேன்.

நான் மாற்றிக் கொண்டே வருகின்றேன். எப்படி மாற்ற வேண்டும் என்று உங்களுக்கும் சொல்ல வேண்டும் இல்லையா…? அதற்காகத்தான் அனுபவத்தில் நீங்கள் பெறுவதற்கு இதைச் சொல்கிறேன்.

அவர்கள் சாப்பிடுவது அருவருப்பாக உள்ளது. அப்போது என்ன செய்தேன்…? அவர்களும் இந்த உண்மையை உணர்ந்து அதனால் வரக்கூடிய தீமைகளையும் உணர்ந்து அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினேன்.

ஏனென்றால் மனிதனான பின் மற்ற மாமிசங்களை உணவாக உட் கொண்டால் அது மனித உடல் உறுப்புகளை மாற்றும் சக்தியாகி மனிதன் மீண்டும் மனிதனாகப் பிறக்க முடியாது.

1.உதாரணமாக குளவி புழுவைக் கொட்டி புழு மீண்டும் குளவி ஆவது போல
2.பாம்பு மனிதனைத் தீண்டினால் மனிதன் மீண்டும் பாம்பாவது போல
3.எது எதைத் தீண்டுகிறதோ அதுபோல அந்த உணர்வின் வலுவை எது எடுக்கிறதோ அதைப் போல
4.எந்த உயிரினத்தை உட்கொள்கின்றோமோ அது நமக்குள் வலுவாகி அந்த உயிரினமாக அடுத்துப் பிறக்கும் நிலையில்
5.இந்த மாற்றங்களிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று கொஞ்ச நேரம் பிரார்த்தனை செய்து அதன் பிறகு நான் சாப்பிட்டேன்.

இந்த வாழ்க்கையில் இதைப் போன்ற நிலையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இத்தகைய உபாயங்களை அனுபவரீதியில் பெற்றதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

அதன் வழி நீங்கள் செல்லும் பொழுது உங்கள் உயிராத்மாவில் அறியாது சேரும் உடல் பெறும் மணத்தை மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

மலைப்பாம்பிடமிருந்தும் புலியிடம் இருந்து நேரடியாகத் தப்பி வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி…!

Venugopalaswamigal

மலைப்பாம்பிடமிருந்தும் புலியிடம் இருந்து நேரடியாகத் தப்பி வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி…!

 

மங்களூர் பக்கத்தில் ஒரு மலை உள்ளது. அந்த மலைக்கு நானும் (ஞானகுரு) குமாரபாளையம் சென்னகிருஷ்ணன் டாக்டர் அவருடைய இரண்டு பசங்களும் மங்களூர் நாராயணசாமியும் அவர் கடையில் வேலை செய்யும் ஒருவரும் போனோம். அது பெரிய காடு.

ஆனால் போவதற்கு முன்னாடியே அங்கே புலி குட்டி போட்டிருக்கிறது… ஆகையினால் இப்போது போனால் உங்களைத் தாக்கும் என்று சொன்னார்கள்.

பரவாயில்லை… நாம் போகலாம்…! என்று நான் (ஞானகுரு) சொன்னேன். சரி என்று சொல்லி போனோம். குகை மாதிரி ஒரு இடம் அது திறந்தவெளியாக இருந்தது. எல்லோரும் அங்கே படுத்திருக்கின்றனர்.

திடீரெனெ மேலிருந்து மலைப் பாம்பு ஒன்று “சொத்…!” என்று விழுந்தது. நான் விழித்துக் கொண்டேன். மற்ற எல்லோரும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தக் குகையில் ஏற்கனவே ஒரு சாமியார் இருக்கிறார். ஆனால் அவரும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்.

பாம்பைக் கண்டதும் அங்கிருந்த நாய் லொள்…! என்று குரைக்க ஆரம்பித்து விட்டது. இந்தப் பக்கம் வர விடாமலேயே தடுக்கிறது. ஏனென்றால் அந்தப் பாம்பு ஆளையே விழுங்கிவிடும். அந்த அளவுக்கு அவ்வளவு பெரியது.

நான் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

பாம்பு நாங்கள் இருக்கும் இடத்தில் அருகில் வராதபடி குரைத்துக் கொண்டே கடிக்கப் போகிற மாதிரி பாம்பை ஆட்டம் காட்டிக் கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பாம்பு சீறிப் பாயும் வேகத்தைப் பார்த்தால் பயங்கரமாக இருந்தது. கூட வந்திருந்த டாக்டர் பையன்கள் இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடன் குலை நடுங்கிப் போனார்கள்.

அங்கு படுத்திருந்த சாமியார் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்தார். என்ன சாமி…! பாம்பு வந்திருக்கிறது. நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்…? என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்.

1.வேடிக்கை பார்க்காமல் என்ன செய்வது…?
2.அது சாப்பாட்டிற்கு அது வருகிறது….
3.சக்தி பெறுவதற்கு நாம் இங்கே வந்திருக்கிறோம்….
4.ஏதாவது ஒன்று நடக்கட்டும்…! என்று சொன்னேன்.

என்னங்க…? இப்படி விளையாட்டுத்தனமாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்…! என்று அந்தச் சாமியார் கேட்கிறார்.

கொஞ்ச நேரம் பார்க்கலாம்… பாம்பு என்ன தான் செய்கிறது என்று…! நாம் தான் விழித்துக் கொண்டோமே… பாம்பு யாரையும் சாப்பிடாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம்…! என்று சொன்னேன்.

கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த நாய் விடுவேனா…! என்று சுற்றுகிறது. ஒரு மணி நேரம். இருக்கும்.

அப்புறம் என்ன செய்தோம்…? இரண்டு பேராகச் சேர்ந்து ஒரு பெரிய கவட்டையைக் கொண்டு வந்து பாம்பின் தலைப் பக்கம் போட்டு அதே சமயத்தில் வாலைப் பிடித்து அப்படியே உருட்டி விட்டு… உருட்டி விட்டு… ஓரு பெரிய பள்ளத்தாக்குப் பக்கமாகப் பார்த்து அப்படியே உருட்டி விட்டோம்.

அந்தப் பாம்பு மிகவும் பெரியது. கவட்டையை வைத்து தலைப் பக்கம் சீறிப் பாயாதபடி போட்டு வாலையும் பிடித்து அவ்வாறு தள்ளி விட்டோம். வாலைப் பிடிக்கவில்லை இல்லை என்றால் அப்படியே ஆளைச் சுருட்டிவிடும்.

ஆனால் இந்த நாய் குரைத்த சத்தம் கேட்டு குட்டி போட்டிருந்த புலி அங்கே வருகிறது. அந்த வாசனையை மோந்து பார்த்து கீக்….கீக்…கீக் என்று கத்திய உடனே அந்தச் சாமியாரும் புரிந்து கொண்டான்.

இந்தப் புலி தான் இப்போது வருகிறது. நாய் வாசனைக்கு நிச்சயம் வரும். இந்த நாய் இப்பொழுது சத்தம் போட்டுத் தூங்கிக் கொண்டு இருந்த புலியை எழுப்பி விட்டு விட்டது. நம் எல்லோருக்கும் ஆபத்தைக் கொண்டு வந்து விட்டது என்று சொல்கிறார்.

ஒன்றுமில்லையப்பா…! நீ பேசாமல் இரு…! என்று நான் சொன்னேன்.

அங்கே இரும்புக் கூண்டு ஒன்று செய்து வைத்திருக்கிறார்கள். அதற்குள் அந்தச் சாமியார் போய் விட்டார். அந்த நாயும் அங்கிருக்கும் ரூம் மாதிரி ஒன்றுக்குள் போய் கதவைச் சாத்துகிறது. அதனின் விவரம் அப்படி இருக்கிறது.

நாங்கள் கொஞ்ச நேரம் அப்படியே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம்.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருநாதர் சொன்னபடி வாசனையை மாற்றிய உடனே
2.நாய் இருக்கிற பக்கமே புலி மோந்து கொண்டு போகிறது.
3.நாய் இருக்கும் பக்கம் போய் அப்படியே கொஞ்ச நேரம் கழித்துப் போய் விட்டது.
4.இவையெல்லாம் மோப்பத்தால் அறியக் கூடிய நிலைகள். அனுபவ ரீதியில் வந்தது.

ஏனென்றால் புலி எதனின் நோக்கத்தோடு வந்தது…? நாயின் மணத்தை நுகர்ந்து தான் அது வந்தது. அது நாயைத் தான் தேடிப் போகிறது. அவர்கள் கூண்டுக்குள் போய் விட்டார்கள் நாங்கள் இங்கே வந்து விட்டோம்.

ஒன்றின் மணத்தை நுகர்ந்து விட்டால் புலி போன்றவை எல்லாம் அதன் மேல் தான் குறியாக வரும். அந்த நாய் சத்தமில்லாமல் பேசாமல் அப்படியே சப்த நாடியும் ஒடுங்கிப் போய் விட்டது.

ஆனால் அந்தச் சாமியார் புலியைப் பார்த்ததிலிருந்து…
1.எல்லோரும் கூண்டுக்குள் வந்து விடுங்கள்
2.மூடி விட்டால் புலி நம்மை ஒன்றும் செய்ய முடியாது…! என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அந்தப் புலி ஒன்றும் செய்யாது. கதவை ஏன் மூடுவானேன்…? பேசாமல் இருங்கள்…! என்று நான் சொன்னேன்.

நீங்கள் என்னங்க…? இப்படி விளையாடுகிறீர்கள். நம்மைக் கொன்று விட்டால் என்ன செய்வது என்கிறார்…?

புலி ஒன்றும் நம்மைக் கொல்லாது. நாயின் வாசனையை நுகர்ந்து புலி வந்ததால் நாயைத்தான் தாக்கும். உன்னைத் தாக்காது என்று சொன்னேன்.

“என்னமோ செய்யுங்கள்…! போங்கள்…! என்றார்.

இந்த அளவிற்குச் சில உண்மை நிலைகள். இது எல்லாம் அனுபவ ரீதியில் குருநாதர் காட்டிய அருள் வழியில் தெரிந்து கொண்டது.

எதைக் குறிக்கோளாக வைக்கிறதோ நாயும் அதைத்தான் நுகருகிறது புலியும் நாயை நுகருகிறது. புலி நாயைத் தாக்கினாலோ நாயின் உயிரான்மா புலியின் உடலுக்குள் சென்று புலியாகத்தான் பிறக்கும்.

இயற்கையின் சில நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படித் தெரிய வைக்கிறார். அதைத்தான் ஒவ்வொன்றாக உங்களுக்கு உணர்த்திக் கொண்டு வருகின்றோம்,

சூறாவளிக்குள் இருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

third-eye-crystals

சூறாவளிக்குள் இருந்து மீண்டு வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

 

முந்தி எல்லாம் திருவிழாக் காலங்களில் வாண வேடிக்கை விடும் பொழுது ஒரு குழாய் வைத்திருப்போம். அந்தக் குழாயில் கந்தகத்தை எடுத்து வைத்து… அதற்கு என்று ஒரு கம்பியை வைத்து லேசாகத் தட்டினால் வெடிக்கும்.

ஏனென்றால் கந்தகத்தின் அழுத்தம் உஷ்ணத்தை உண்டாக்கக் கூடிய நிலைகள். கந்தகப் பாறைகள் எங்கிருக்கிறதோ அந்தப் பக்கமெல்லாம் தண்ணீர் மேலே ஓடி வந்தால் நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) அது சுடு தண்ணீராக வரும்.

சுடு தண்ணீர் வருவதை முதன் முதலில் பம்பாயில் இருக்கும் கணேசபுரியில் தான் பார்த்தோம். நித்யானந்த சாமிகள் அங்கே ஒரு குகையில் சமாதியாகி உள்ளார். அந்த குகைக்கு நடந்து எல்லாம் போக முடியாது. படுத்துக் கொண்டே தான் போக முடியும்.

புலி போன்ற துஷ்ட மிருகங்கள் வராதபடி படுத்துக் கொண்டே குகைக்குள் சென்று பின் கல்லைக் கொண்டு மூடி மறைத்துக் கொள்வது. அங்கே உட்கார்ந்து தியானம் செய்வது என்ற நிலைகள் இருந்ததை எல்லாம் அங்கே போய்ப் பார்த்து விட்டு வந்தேன் (ஞானகுரு).

அங்கே சுடு தண்ணீர் கிணறு ஒரு பக்கம் உள்ளது. இன்னொரு பக்கத்தில் பாறை மேலிருந்து தண்ணீர் வருகிறது.

எந்த இடங்களில் எல்லாம் கந்தகப் படிவம் உள்ளதோ அங்கே பச்சைத் தண்ணீர் ஓடினால் தண்ணீரின் சூடு அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் சுற்றுப் பயணத்தில் குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) என்னை வலுக்கட்டாயமாக போகச் சொன்னார்.

இப்படி அந்தச் சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறார். வீட்டிலேயும் சரி என்னைப் பார்க்கும் நண்பர்களும் உறவினர்களும் சரி எல்லோரும் என்னை வெறுக்கும் நிலையை உண்டாக்கி என்னை விரட்டி விட்டுக் கொண்டே இருக்கிறார்.

1.போகிற போக்கிலே எல்லாம் ஆசையை ஊட்டி
2.சரி… இதைப் பெருக்கலாம்..! இதைச் செய்து அப்படியே தப்பித்துக் கொள்ளலாம்…! என்ற எண்ணம் வருகிறது.
3.இப்படி ஒவ்வொரு எண்ணங்களை நான் எண்ணினாலும் என்னைத் துரத்தி விட்டு கொண்டிருந்தார்.
4.எல்லாமே தனியாகத் தான் சென்று அனுபங்களைப் பெற்று வந்தோம். யாருடைய உதவியும் இல்லை.

ஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார். அங்கே மலை மேலே ஒரு ஊற்று வருகிறது… அதை நீ போய்ப் பாருடா..! என்று சொன்னார். அங்கே போனேன்.

பார்த்து விட்டுக் கீழே இறங்கி வரும் பொழுது ஒரு பெரிய சூறாவளி வந்தது. ஏற்கனவே நாராயணசாமி அவர்கள் பம்பாய் செல்வதற்காக ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். அந்தப் பணத்தில் குடை வாங்கி வைத்திருந்தேன். காட்டிற்குள் செல்லும் பொழுது லேசாக தூறல் வந்தால் பிடித்து கொள்ளலாம் என்று இது “என்னுடைய ஆசை…!”

மலை மேலே ஏறிவிட்டு இங்கே வந்தேன். கீழே வரும் போது காற்றும் புயலுமாக வந்தது. விரித்த குடையைக் காணோம். கம்பி தான் என் கையில் இருக்கிறது. அந்த அளவுக்குக் காற்று.

சூறாவளிக் காற்றில் மரங்கள் எல்லாம் சட…சட…! என்று தாவுகள் எல்லாம் முறிந்து ஓடுகிறது. அப்போது மரத்தின் பக்கம் நான் போனால் ஆபத்து இருக்கிறது.

காற்று எப்படி அடிக்கிறது…? என்று அந்த நேரத்தில் ஒரு சிந்தனை வருகிறது. கூந்தப் பனை என்ற மரம் ஒன்று இருந்தது. அது பெரும்பாலும் கீழே அறுந்து விழாது. பறந்து கொண்டே தான் இருக்குமே தவிர ஒடியாது. ஏனென்றால் அதில் நார் பிடிப்பு அதிகமாக இருக்கும்.

காற்று என்னையவே அப்படியே தூக்குகிறது. அவ்வளவு புயல். ஓடிப் போய் என்ன செய்தேன்…? கூந்த பனையில் காற்றடிப்பதற்கு நேராக நின்று கொண்டேன். சாய்ந்தால் நம்மை அமுக்கி விடும்.

காற்றடிப்பதற்கு நேராக ஒரு வேளை அது சாய்ந்தாலும் கூட நாம் அப்படியே இருந்து கொள்ளலாம். “நம் மேலே விழாது…!” என்று இத்தனை சிந்தனையோடு அதைச் செய்தேன்.
1.அந்த இடத்தில் உணர்ச்சியை ஊட்டுகிறார்
2.நான் அல்ல…! குருநாதர் அந்தக் குரு வழியில் இதைக் கொடுக்கிறார்.

பார்த்தோம் என்றால் மற்ற மரத்தின் தாவுகள் எல்லாம் ஒடிந்து வந்து நான் நிற்கிற கூந்த பனையில் அடித்து அங்கே மேலே வரிசையில் அடுக்குகிறது.

ஆனால் கூந்தப் பனையில் மேலே உள்ள ஓலைகள் விழவில்லை. அது அப்படியே இருக்கிறது. மற்ற மரங்களின் தாவுகள் இதன் மீது ஒரு இரண்டு மூன்று அடித்து அடித்து சொத்…சொத்…! என்று கீழே விழுகிறது.

நான் இந்தப் பக்கம் இருக்கிறேன். என் மேல் விழுகவில்லை. அடி மரம் நன்றாகப் பருத்து வலுவாக இருக்கிறது மேலே ஒல்லியாக இருக்கிறது.

அந்த அடி மரத்தில் பேசாமல் உட்கார்ந்து விட்டேன். உட்கார்ந்து கொண்டு “ஈஸ்வரா… குருதேவா…! “ஈஸ்வரா… குருதேவா…!” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை.

இவ்வாறு அனுபவரீதியில் கடுமையான புயலைச் சந்தித்தாலும் மரங்கள் எல்லாம் ஒடிந்து போனாலும்….
1.ஆனால் குரு என்ன செய்கிறார்..?
2.இந்த இடத்தில் சிந்திக்க வைக்கிறார்.

இது எதற்காகச் சொல்கிறோம் என்றால் நமது குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்திருக்கிறார். அந்த ஆற்றல்களைத் தனக்குள் பேரொளியாக உருவாக்கினார்.

அவர் வழியில் நாம் என்ன செய்கிறோம்…? அந்தத் துருவ நட்சத்திரத்தோடு குரு வழியில் இணைகிறோம். அதற்காக வேண்டித்தான் என்னை இப்படியெல்லாம் அனுபவம் பெறச் செய்தார்.
1.கண்ட அனுபவத்தை இங்கே விளைய வைத்துக் கொண்டிருக்கிறேன்.
2.இதை வித்தாக எடுத்து உங்களுக்குள் முளைக்க வைக்கின்றேன்.

இதை எடுத்து நீங்கள் வளரக்கூடிய பக்குவத்தில் ஒவ்வொரு நேரத்திலும் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் பல வகையிலும் சொல்கிறேன்.
1.இதையெல்லாம் புத்தகங்களில் எழுதி வைத்துக் கொடுக்க முடியாது
2.வாக்காகத் தான் (சொல்) கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே என்னிடம் வாக்கு வாங்கியவர்கள் எத்தனை பேர் வளர்கிறார்கள்…? எல்லோரும் இங்கே ஓடி வருவார்கள். அவர்கள் எதிர்பார்த்த நிலையில் என்னிடமிருந்து (ஞானகுரு) வரவில்லை என்றால் என்னத்தைச் செய்வது..? இன்னொரு சாமியாரைப் பார்க்கலாம் என்று போய்க் கொண்டிருப்பார்கள்.

அல்லது இங்கே இந்த மந்திரத்தைக் கொடுக்கின்றார்கள். மிகவும் எளிதாகக் (CHEAP) கொடுப்பார்கள் என்று அங்கே சென்று விடுவார்கள். ஜோசியக்காரரையும் தந்திரக்காரர்களையும் போய்ப் பார்க்கலாம் என்று அந்தப் பக்கம் போவார்கள்.

1.ஆகவே என்னிடம் கேட்ட வாக்கின் நிலைகள் என்ன செய்கிறது…?
2.உறுதிப்படுத்தும் உணர்வுகள் இங்கே இல்லாமல் போய் விடுகிறது.

இதுவரைக்கும் ஏன் இதைச் செய்யவில்லை என்று கூட நீங்கள் கேட்கலாம்.

1.உறுதியில் இது தேர்ந்தெடுத்து
2.சல்லடை போட்டுச் சலித்து எடுக்க வேண்டும்.
3.உறுதி கொண்ட நிலையில் எப்படி நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்…?
4.இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் பிறவியில்லா நிலையை அடைவது எப்படி…? என்ற
5.இந்தச் சிந்தனையைத் தூண்டும் உணர்வு உள்ளவர்கள் தான் இங்கே வரவேண்டும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…?

அந்த உறுதி பெறச் செய்யும் நிலைக்காகத்தான் தான் அனுபவ வாயிலாகப் பெற்றதை உங்களிடம் அந்த ஒவ்வொன்றையும் சொல்லி அந்த ஒவ்வொரு உணர்வாகக் கொண்டு வருவது.

காரணம் நாம் கோடிக்கரையில் இருக்கின்றோம். தனுஷ் கோடியில் என்ன செய்கிறார்கள்…? உலகம் முழுவதும் சுற்றி விட்டு இங்கே இராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். ஏன்…?

இராமன் என்ன செய்கிறான்…? நேரம் ஆகி விட்டது…! என்று மணலை எல்லாம் கூட்டுகிறான். சிவலிங்கத்தை உண்டாக்கிப் பூஜையை ஆரம்பித்து விடுகிறான். அப்படி என்றால் என்ன அர்த்தம்…?

இந்த உடலில் ஒவ்வொரு நிமிடத்திலும் தீமை என்ற உணர்வு வரும் போது அந்தத் தீமை என்ற உணர்வை மாற்றிட அருள் உணர்வை எடுத்து ஒவ்வொன்றையும் நல்லதாக மாற்றி நல்ல உணர்வின் தன்மையைச் சேர்த்து கொண்டே வருகிறோம். இது தான் தனுசு கோடி.

1.கோடிக்கரையில் இருந்து கொண்டு கடைசி நிமிடத்தில்
2.அன்றைக்கு… ஒரே நாளில் எல்லாத் தீமைகளையும் நீக்க முடியாது.

வாழ்க்கையில் சங்கடப்படுகிறார்கள் சலிப்புப் படுகிறார்கள் என்றால் அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். மற்றவர்களுக்குள்ளும் இதைப் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால் இதைப் போன்ற நஞ்சை எல்லாம் வேக வைத்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த உணர்வை ஒவ்வொருவரும் எடுத்து நம் மனதைக் குவித்து எண்ணங்களை ஒன்றாக்கி இராமலிங்கமாக அழியாத வாழ்க்கையாக வாழ வேண்டும் என்று அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

காந்திஜி லண்டனிலிருந்து கப்பலில் வரும் பொழுது “அதிசயம்…!” என்று எதைச் சொன்னார்…?

Mystic meditation

காந்திஜி லண்டனிலிருந்து கப்பலில் வரும் பொழுது “அதிசயம்…!” என்று எதைச் சொன்னார்…?

 

ஒரு சமயம் காந்திஜியும் புலாபாய் தேசாயும் மற்ற நண்பர்கள் எல்லோரும் லண்டன் வட்ட மேஜை மகாநாடுக்குப் போய்விட்டு வரும் சமயம் கப்பலில் வந்து கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை எப்படி இருக்கும் என்று பரிசோதிப்பதற்காக டெலஸ்கோப் ஒன்றையும் கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.

உயர்ந்த சக்தி வாய்ந்த கண்ணாடி பொருத்தப்பட்ட அந்தக் கண்ணாடி மூலம் கடலுக்கு அடியில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களை எல்லாம் பார்க்க முடியும்.

அதாவது பல நூறு அடிகளுக்கு அடியில் நடக்கும் அதிசயங்களையும் ஊடுருவிப் பார்க்கும் திறன் வாய்ந்த இயந்திரத்தில் இணைக்கப்பட்ட ஒரு டெலஸ்கோப் அது. அதை வைத்துப் பார்க்கப்படும் போது கடலுக்குள் நடக்கும் அதிசயங்கள் எல்லாம் தெரிகின்றது.

பார்த்தவுடனே… ஆஹா…! பெரிய மீன் வருகின்றது.. சிறிய மீன் வருகின்றது… நத்தைகள் ஓடுகின்றது… அதிசயமான நிறங்களில் பல பல மீன்கள் ஓடுகின்றது…! என்றெல்லாம் சொல்லச் சொல்ல
1.அருகிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் “எங்கே பார்க்கலாம்…! என்று
2.அந்த டெலஸ்கோப்பை ஒருவருக்கு ஒருவர் பறிக்கும் நிலை வருகின்றது.
3.ஒருவர் பார்த்து முடிக்கும் முன்னால் அடுத்தவர் பறிக்கின்றார்.
4.இப்படி மாறி மாறிச் செயல்படுத்தும் பொழுது அங்கே பொறுமை இழக்கும் சந்தர்ப்பங்கள் வருகின்றது.

அப்போது தான் காந்திஜி சிந்திக்கின்றார்.

நம்முடைய ஆர்வ உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…? நாம் எதற்காக லண்டனுக்கு வந்தோம்…? எதை அறிய விரும்பினோம்….? பகைமை உணர்வுகளை அகற்றிச் சகோதர உணர்வை வளர்க்கும் தன்மையா அறிந்துணர்ந்து செயல்படுவதற்காக வந்தோம்.

ஆனால் டெலஸ்கோப்பை வைத்து பொருளைக் காணும் ஆசையில் நான்கு பேருமே ஒன்றாக எண்ணும் போது அதிலே பகைமைகள் எவ்வாறு உருவாகின்றது…?

பார்க்க வேண்டும்… என்ற அவசர உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வரும் பொழுது அடுத்தவர் பறிக்கும் நிலையில் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர் “இப்படிப் பறிக்கின்றார் பார்…!” என்ற வெறுப்புகள் அவருக்குள் எப்படித் தோன்றுகின்றது.

அந்த வெறுப்பும்… வெறுப்பால் பகைமையும்… எப்படித் தோன்றுகிறது…? என்ற நிலையை அங்கே அப்பொழுது விளக்க உரையாகக் காந்திஜி கொடுக்கின்றார்.

உலகம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் வந்தாலும் இதைப் போன்ற நிலைகள் மீண்டும் மனிதனுக்குள் வந்து அந்த உணர்வின் இயக்கமாக “எதிரியாக எப்படி மாற்றுகின்றது…?” என்று உணர்த்துகின்றார்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டு பகைமை உணர்வு உருவாக்கும்படியாக அறிவிலிகளாக நம்மை மாற்றுகின்றார்கள். அறிவு இழந்தவர்களாக மாற்றுகின்றார்கள். நம்முடைய ஒற்றுமையின் தன்மையை இழக்கச் செய்கின்றார்கள்.

இதிலிருந்து விடுபட நாம் என்ன செய்வது…? என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்…! என்று காந்திஜி அங்கே உபதேசிக்கின்றார்.

ஆகவே நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பகைமை ஊட்டும் நிலைகளில் இத்தகைய அதிசயத்தைப் பார்க்க வேண்டாம்.
1.”தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மை…!” ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விளைய வேண்டும் என்று
2.இந்த அதிசய உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம்.
3.பகைமையை அகற்றும் உணர்வின் தன்மையை நாம் வளர்ப்போம் என்று அதே கப்பலில் உபதேசிக்கின்றார்.

ஒவ்வொருவரும் அருள் சக்தியைப் பெற்று ஆற்றலை வளர்ப்போம். அந்த ஆற்றல் ஒவ்வொருவரிடம் வளர்வதைக் கண்டு அதிசயப்படுவோம். அந்த அதிசயத்தைப் பார்க்க விரும்புவோம்.

விஞ்ஞான அறிவால் கண்ட உணர்வை வெறுப்போம். மெய் ஞானத்தால் வளர்ந்த உணர்வை நமக்குள் வளர்ப்போம்.

மெய்ப் பொருளைக் காணும் நிலையில் மனித உடலுக்குள் மறைந்து இயக்கிக் கொண்டிருக்கும் தீமையில் இருந்து விடுபட நாம் அனைவரும் செயல்படுவோம்.

இத்தனை உபதேசங்களும் காந்திஜி கொடுத்தார். ஆனால் அதெல்லாம் வெளியில் வரவில்லை. ஏனென்றால் அரசியல் வாழ்க்கையில் காந்திஜி இருந்தாலும் ஒரு இயந்திரக் கண்ணாடியை வைத்து அங்கே தத்துவ ஞானத்தைத் தான் புகட்டினார்.

அவர் காட்டிய அறநெறியை உங்களுக்குள் இப்பொழுது பரப்புகிறோம் என்றால் பகைமையிலிருந்து மீட்டுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகள் இன்று உண்டு, உங்களுக்குள் இதை பதிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் உங்களை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள இந்த நினைவாற்றல் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!