தியானப் பயிற்சி

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று கண்களை மூடிப் புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியனியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சி.

வேதனை… வேதனை… என்று எண்ணும்போது அதை நுகர்ந்தறிந்தால் உடல் உறுப்புகளில் உள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.

எந்த உறுப்பில் விஷத்தன்மை (வேதனை) அதிகமாகின்றதோ அங்கே விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.
1.அதை மாற்றி அமைப்பதற்கு விஷத்தின் தன்மையை முறித்த
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெறுதல் வேண்டும்.

ஒளி உடல் பெற்ற துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது,
1.அதை நாம் கவர்ந்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து
2.எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்தப்படும் பொழுது
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று வலிமை பெறுகின்றது.

தினமும் இதைச் சேர்த்துக் கொண்டு வந்தால் நம் உடலில் உள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் வெறுப்புகளையும் மாற்றிவிடுகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இருதயத்தில் செலுத்தப்படும் போது
2.இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் வீரியமடைகிறது
3.மன உறுதி கொண்டு சிந்தித்து செயல்படும் சக்தியும் நமக்குள் வருகின்றது.

வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் கொண்டு வாழ இது உதவும். அதிகாலையில் இதைப் போன்று தியானத்தின் மூலம் சக்தி ஏற்றிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக தொழில் நஷ்டம் என்று வைத்துக் கொள்வோம். அதனால் மனம் சோர்வாக இருக்கும்போது அந்த வேதனை இரண்டும் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை கூட்டிவிடுகிறது.

சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது… தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகிறது. கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஐந்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானித்தால் சிந்திக்கும் வலிமை பெற்று
1.அடுத்து நம் காரியங்களை எப்படிச் செய்யலாம் என்று உறுதியான எண்ணம் தோன்றும்.
2.நாம் பிறரிடத்தில் உதவியோ மற்றதோ கேட்கப்படும் பொழுது அவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
3.குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் கொண்டு பரிவு கொண்டு வாழ இது உதவும்.

விஷத்தை வென்றிடும் நுண்ணிய உணர்வுகள் தான் இன்று நமக்குத் தேவை

விஷத்தை வென்றிடும் நுண்ணிய உணர்வுகள் தான் இன்று நமக்குத் தேவை

 

இந்த உலகில் நடக்கும் சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் “ஆ… இப்படி ஆகிவிட்டதா…?” என்று எண்ணாதீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் அந்தத் தீமையின் உணர்வுகள் இங்கே வருவதில்லை.

சிவன் ராத்திரி அன்று “நீ விழித்திரு…” என்றால்
1.வாழ்க்கையில் எப்பொழுது பிறருடைய துயரங்களைக் கேட்டறிகின்றோமோ
2.அந்த நேரத்தில் எல்லாம் விழித்திருக்க வேண்டும்.

எப்படி…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை வலுப்படுத்தி உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் பார்க்கும் அனைத்துக் குடும்பங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் உணர்வுகள் அவர்கள் குடும்பத்தில் வளர வேண்டும் என்று இப்படி எண்ணினால்… “அவருடைய தீமைகள் நமக்குள் புகுவது இல்லை…”

1.இந்தச் சொல்லின் தன்மையை அங்கே சொல்லி
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருப்பீர்கள்…! என்று சொல்லப்படும் பொழுது
3.இந்த உதவியை அவருக்குச் செய்கின்றோம்… அவருக்குள் தீமைகள் புகாது தடுக்கின்றோம்
4.அவர்களும் அவ்வாறு எண்ணினால் அவர்களுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது
5.நமக்குள்ளும் தீமைகள் வருவதில்லை… நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

சிவன்ராத்திரி… விழித்திரு…! அன்றைய தினம் முழுவதும் இவ்வாறு நாம் தூய்மைப்படுத்தும் உணர்வாக இருந்தோமென்றால் நம் ஆன்மாவில் உள்ள கெட்ட உணர்வுகள் அப்புறப்படுத்தப்படுகின்றது.

எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏகோபித்துச் சொல்லும் பொழுது… தீமை செய்யும் உணர்வுகளுக்குப் பூமியில் ஈர்ப்புத் தன்மை இல்லை என்றால்… சூரியன் அவைகளை இழுத்துச் சென்று அதன் உணர்வின் தன்மையைக் கருக்கி… மற்ற பிரபஞ்சத்தில் பரவச் செய்து அந்த விஷத்தின் தன்மையை மாற்றி விடுகின்றது.

அதாவது (பொதுவாக)…
1.தான் கவரும் விஷத்தைச் சூரியன் பாதரசத்தால் மோதி வெப்பத்தையும் காந்தத்தையும் உருவாக்குகிறது
2.விஷத்தைப் பலவீனப்படுத்தி அதை அகற்றி விடுகின்றது.
3.நல் உணர்வாக பரவச் செய்து விஷத்தினைக் குறைக்கச் செய்கின்றது.
4.இப்படி மற்றதுடன் கலந்து இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

உதாரணமாக… ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தவர்களுக்கு எல்லாம் மயக்கம் வருகின்றது.

ஆனால்
1.ஆயிரம் குடம் பால் அந்த விஷத்தின் தன்மையில் பட்டால்
2.இந்தப் பாலைக் குடித்தோருக்கெல்லாம் “வீரியத்தன்மை…” கிடைக்கின்றது.

இதைப் போன்றுதான் கடல் அலைகள் போலப் பரவப்படும் பொழுது விஷத்தின் தன்மை அங்கே சேர்க்கப்படும்போது அது பிரபஞ்சத்தில் மற்றதன் நிலைகளை “தீமைகளை நீக்கும்… நல்ல உணர்ச்சிகளை உருவாக்கும் சக்தியாக…” அங்கே மாற்றுகின்றது.

ஆகவே எதனின் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதனின் உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.
1.அருள் ஞானிகளின் உணர்வை ஆயிரம் குடம் பாலைப் போன்று ஊற்றினால்
2.விஷத்தை வென்றிடும் ஆற்றலைப் பெற்று நாமும் மகரிஷிகளைப் போன்று ஆக முடியும்.

எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!

எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!

 

மனிதனுடைய வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும் இன்று நாம் அறிந்து கொள்கின்றோம்… பலராமன்…! அதே சமயத்தில் தீமையின் நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நாக்கு இருப்பதனால் நரசிம்மா…!

1.எதனையும் உட்புகாதபடி வாசல்படி (சுவாசம் உட்புகும் இடம்) மீது அமர்ந்து…
2.தீமைகள் வராதபடி ஒவ்வொன்றையும் தீமையை இங்கேயே பிளந்து விடுகின்றான்…
3.உள்ளுக்குள் சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.

ஆகவே அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் ஒவ்வொரு நிமிடமும் நாம் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆனால் தீமை செய்வான் என்று முதலிலேயே பதிவு செய்து கொண்டால்
1.அந்த தீமையை அடக்க மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்.
3.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை
4.நமக்குள் நாம் ஆழமாகப் பதித்து விட்டால்…
5.அவர்கள் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் பதிவாகாது… அதை ஈர்க்கும் தன்மையும் வராது.

காரணம்… ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் வலுப் பெறச் செய்யும் பொழுது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது பிறருடடைய தீமையின் உணர்வுகளை இது அடக்கும்.

இதைத்தான் “நீ விழித்திரு…” என்று சொல்வது.

1.எந்த நேரத்திலும்… எதனின் நிலைகள் கொண்டாலும்… நாம் ஒவ்வொரு நிமிடமும்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கே வேண்ட வேண்டும்.
4.இந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று பரப்ப வேண்டும்.

“அப்பொழுது அவன் (உயிரான ஈசன்) பார்த்துக் கொள்வான்…!”

அதை விடுத்துவிட்டு…
1.எனக்கு இது தேவை… அது தேவை…! என்றும்
2.இன்னாருக்கு நல்லதைச் செய்தேன். அவன் எனக்குத் தீமைதான் செய்கிறான் என்று எண்ணினால்
3.நம்மை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.

ஆகையினால் நாம் எந்த நல்லதைச் செய்கின்றோமோ அந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைதல் வேண்டும். அப்படி நல்லது விளைய வேண்டும் என்றால் “அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…!” என்ற இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டால் நமக்குள் தீமை விளையாது.

நம்மைப் பார்க்கும் பொழுதே அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே ஒடுங்கும். இது தான் நரசிம்மா…!

வாசல்படி மீது. நமக்குள் நுகரும் சக்தி இங்கே வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமை விளைவிக்கும் எண்ணங்கள் வராது
2.தீமையை விளைவிக்கும் அருள் வித்து இங்கே உருவாகாது
3.அந்த வினையாக வராது… வினைக்கு நாயகனாக இயக்காது…!

அது தான் கோதண்டத்தை முறித்தபின் “சீதா…” என்ற மகிழ்ச்சியைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா…!

தீமைகளை அடக்கிடும் அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.அந்த அரவணைக்கும் சக்தியை நுகர்ந்து… அருள் ஞானிகளுடன் சேர்ந்து…
2.என்றுமே மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து… மெய் ஞானிகளுடன் ஒன்றி
3.பிறவியில்லாப் பெரு நிலையை நாம் அடைய முடியும்.

சந்தர்ப்பவசத்தால் தீமைகளை நுகர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தை இணைத்துத் அந்தத் தீமைகள் விளையாது தடுக்க முடியும்

சந்தர்ப்பவசத்தால் தீமைகளை நுகர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தை இணைத்துத் அந்தத் தீமைகள் விளையாது தடுக்க முடியும்

 

ஓ..ம் ஈஸ்வரா.. குருதேவா.. என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

காலையிலிருந்து இரவு வரையிலும் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை என்று
1.எத்தனையோ வகையான உணர்வுகளை நுகர்ந்தறிந்தாலும்
2.இவை அனைத்தும் நம் இரத்தத்தில் கரு முட்டைகளாக மாறிவிடுகின்றது.

பின் நாளடைவில் அந்தக் கரு முட்டைகள்
1.அதனதன் குணத்திற்குத்தக்க அணுக்களாக உருவாகி
2.எந்த உறுப்புகளில் இந்த முட்டைகள் தேங்கி விடுகின்றதோ
3.அந்த உறுப்புகளில் இந்த வேதனையாகி அங்கே நோயாகி
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று விழுங்கும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஆனால் இதைப் போன்ற நிலைகளைத் தடைபடுத்த நம்மால் முடியும்.

ஒரு மல்லிகைச் செடியின் மேல் தட்டான் பூச்சி முட்டையிட்டாலோ அதைப் போல பல வண்ணங்கள் கொண்ட மலரில் தட்டான் பூச்சி முட்டையிட்டாலோ அந்தந்த வண்ணம் கொண்ட பூச்சிகளாக பட்டாம் பூச்சியாக மாறுகின்றது.

இதைப் போலத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை
1.இரத்தநாளங்களில் உருவாகும் பல குணங்கள் கொண்ட அணுக்கருவிற்குள் சேர்த்தால்
2.அந்தக் கரு முட்டைகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறும் வலிமை பெறுகின்றது.
3.அப்பொழுது இரத்தத்தில் உருவாகும் கரு முட்டையிலேயே தீமையை நீக்கும் சக்தி பெறுகின்றது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஊசி (INJECTION) மூலம் நோய்களை நீக்குகின்றனர். உடல் ஊனமானதையும் மாற்றியமைக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

1.தாயின் கருவில் உருவான சிசு உடலில் சில குறைபாடுகள் இருந்தாலும்
2.அந்த உணர்வின் தன்மையை மாற்றி
3.உயர்ந்த ஞானக் குழந்தையாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானம் ஊட்டுகின்றது.

இதைப் போல மெய் ஞானிகள் கூறிய உணர்வின்படி கண்ணின் உணர்வினைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்தங்களில் செலுத்த முடியும்.

இரத்தத்தில் வளர்ந்து வரும் கரு முட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அதாவது…
1.அந்தத் தீயவினைகள் உருவாக்கும் கரு முட்டைகளில்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணையச் செய்து
3.அதிலுள்ள தீயதை நீக்கி நல்ல உணர்வு பெறச் செய்யும்
4.அந்த முட்டைகளாக மாற்றி அமையுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரோளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

ஒரு நண்பரிடம் பழகுகின்றோம். அவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு நமக்குள் அதிகமானால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

அவர் பட்ட துயரமும் நம் இரத்தத்தில் விளைந்து நமக்குள் கலந்துவிடும். அந்தக் கருக்களை உருவாக்கி நம் உடலுக்குள்ளே தீய அணுக்களாகி நம் உடலை வீழ்த்தி விட்டு வெளிச்சென்ற பின் அந்த தீய அணுவின் உணர்வு கொண்டு வேறொரு உடலாக மனிதனல்லாத உடலாகத்தான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு…
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறும்படி செய்தால்
3.அதன் வளர்ச்சியில் நம் உடலிலுள்ள நோய்களை நீக்கவும்
4.உறுப்புகளை நல்வழியில் வழி நடத்தவும் உதவும்.

நமக்குள் அரும் பெரும் சக்திகளைச் சேர்க்கும் வழி இது தான்…!

மனதைச் சமப்படுத்துங்கள்…!

மனதைச் சமப்படுத்துங்கள்…!

 

ஒரு சமயம் ஒருவர் தவறு செய்தார் என்றால் அந்தத் தவறின் நிலையை நாம் சுட்டிக்காட்ட நேர்கின்றது. ஆனால்
1.சுட்டிக்காட்டும் நிலை தவறினால் வெறுப்பின் உணர்வையே ஊட்டுகின்றது.
2.வெறுப்பின் நிலை வளர்த்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம்
1.எதனை…
2.எவ்வாறு…
3.எதன் வழியில் உருவாக்குதல் வேண்டும்…? என்ற நிலைகளை அறிந்துணர வேண்டும்.

அதை நாம் பக்குவப்படுத்தும் நிலைகளுக்குச் சமப்படுத்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்… “பக்குவப்படுத்தும் பண்பு” வருகின்றது.

பக்குவப்படுத்தும் பண்பு வர வேண்டும் என்றால் “அருள் ஞானத்தின் உணர்வை” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் விளைவிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளைய வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளையும் நஞ்சான உணர்வுகளையும் கார உணர்ச்சிகளையும் “அடக்கும் தன்மை” வருகின்றது.

தீமைகளை அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை” வருகின்றது.

சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல்கள் அனைத்தும் “சீராக அமைய” இது உதவும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை நமக்குள் அணுக்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அருள் ஒளியினை வளர்த்துப் “பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

நாம் உலகில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் அனைவரும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் குடும்பத்தில் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
4.தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும்.
5.மகரிஷிகள் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்.
6.அருள் ஞானம் அவர்களுக்குள் பெருக வேண்டும்.
7.இருளை நீக்கிடும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.
8.நஞ்சினை வென்றிடும் அருள் ஞானம் அவர்கள் பெற வேண்டும்.
9.அருள் வாழ்க்கை வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் சந்தித்தோர் பார்த்தோர்… நாம் தொழிலின் நிமித்தம் சந்தித்தோர்… தொழிலின் நிமித்தம் இணைந்து வாழ்ந்தோர்… “இவர்கள் அனைவரையும்” நாம் இவ்வாறு நாம் எண்ணினோம் என்றால்
1.நமக்குள் பகைமை என்ற உணர்வை மாற்றி
2.அருள் ஞானத்தின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது.

கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும்

 

காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் எப்பொழுது விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று குறைந்தபட்சம் பத்து நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையாவது எடுக்க வேண்டும்.
1.கண் விழித்து இருந்தாலும் சரி… கண்களை மூடி இருந்தாலும் சரி…
2.கண்ணின் நினைவலைகள் புருவ மத்தியில் வரவேண்டும் (முக்கியம்)
3.உயிர் வழி தான் நாம் உடலுக்குள் அனுப்ப வேண்டும்.

காரணம்… நாம் வெளியிலே பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவாக இருக்கின்றது… நல்ல எண்ணங்களை எண்ண விடாது. ஏனென்றால் நாம் எத்தனை பேருடைய தீமைகளைப் பார்த்தோமோ அதற்கெல்லாம் வலு அதிகம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் மற்ற பொருள்களைப் போட்டாலும்… சிறிதளவு விஷத்தைப் போட்டு விட்டால் பாதாமிற்கும் சக்தி இல்லை… பாலுக்கும் சக்தி இல்லை.

அதே போல் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டுவிட்டால் அதனுடைய சுவைகளை அறிய முடியாது. காரத்தின் சுவை தான் முன்னணியில் இருக்கும். உப்பின் தன்மை இணைத்து விட்டால் அந்த உப்பின் தன்மை முன்னணியில் வந்து விடும்.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பிறரிடம் கோபப்பட்டது ஆத்திரப்பட்டது வேதனைப்பட்டது சலிப்புப்பட்டது எல்லாமே நம் ஆன்மாவில் வந்துவிடுகிறது.

அதையெல்லாம் மாற்றி அமைக்க அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும். அந்தச் சக்திகள் கூடிய பின் உடலிலிருந்து வரக்கூடிய மணம் நம் கேட்டறிந்த தீமைகளை ஆன்மாவிலிருந்து அப்புறப்படுத்தும் நிலையாக வரும்.

1.காரணம் மகரிஷிகள் அருள் சக்தியை உடலுக்குள் கூட்டும் போது
2.ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளின் பிடிப்பு அற்றுப் போய்விடும்… ஆன்மாவிலே நிற்காது.
3.அப்போது கஷ்டமான எண்ணங்கள் நமக்குள் வராது

இதை நாம் பழகிக் கொண்டால் மிகவும் நல்லது.

வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கப்படும் போதோ அல்லது விபத்தைப் பற்றி அறிய நேரும் பொழுதோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்போரை அவர்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுதோ அது எல்லாம் பதிவாகி விடுகிறது.

அது எல்லாம் ஒரு வித்தாக மாறிவிடுகிறது. மீண்டும் அதை நுகரப்படும் பொழுது அணுவாக மாறுகின்றது. உடலிலே உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக அதே (விபத்து வேதனை) உணர்வலைகளைத் தனக்குள் கவர்ந்து தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

அது வளரத் தொடங்கி விட்டால் நம் ஆன்மாவாக மாறுகின்றது
1.எத்தகைய உணர்வாக இருந்தாலும் அது நம் உயிரிலே படும் போது தான் நம்மை இயக்கும்.
2.நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்… அல்லது நோயாக மாறுவதும் இது போன்று தான்.

இதைப் போன்ற நிலைகளை நாம் தூய்மைப்படுத்த அதிகாலையில் விழித்தவுடனே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்று இல்லை
2.எழுந்து உட்கார வசதியாக உள்ளவர்கள் அப்படிச் செய்யலாம்.
3.படுக்கையில் விழிப்பு வந்த பின்… நேராகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
5.புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் உள்முகமாக உடல் முழுமைக்கும் செலுத்துங்கள்.
6.உள்முகமாகச் செலுத்தச் செலுத்த ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அதை நீக்கிக் கொண்டே இருக்கும்.

தினசரி நீரை ஊற்றி உடல் அழுக்கை எப்படிப் போக்குகின்றோமோ அதைப் போல நம் ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்தியை நம் உடலுக்குள் அவ்வப்போது செலுத்த வேண்டும்.

அது வலுப் பெற்றால் தான்… உடலுக்குள் வலுவானால் தான்… தீமைகளை நீக்க முடியும். எப்படியும் உங்களுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

சக்கரம் போன்று சுழன்று எடுக்க வேண்டிய தியானம்

சக்கரம் போன்று சுழன்று எடுக்க வேண்டிய தியானம்

 

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அடுக்கடுக்காக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்த இயக்க நிலை கொண்டு
1.“அகஸ்தியர் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்…”
2.அகஸ்தியனை நினைவுக்குக் கொண்டு வந்து அவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
2.மீண்டும் மீண்டும் இந்த நினைவினை ஒரு சக்கரம் சுழல்வது போன்ற திரும்பத் திரும்ப இணைத்து
3.இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை
4.அதன் அடிப்படையிலேயே சுழல விடுங்கள்… உங்கள் இரத்த நாளங்களில் அந்த ஆற்றலைப் பெருக்குங்கள்.

இப்படி ஒரு ஐந்து முறையாவது திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துச் செயல்படுத்துங்கள். உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டு அங்கே உள்ளே செலுத்துங்கள்.

இதே மாதிரி சுவாசத்தை எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
1.எத்தகைய நோயாக இருப்பினும்… நோய்க்குக் காரணமாக எத்தகைய அணுக்கள் இருப்பினும்
2.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று அந்தச் சக்திகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்துங்கள்.

இந்த அருள் சக்தி உயரும் பொழுது நோயை உருவாக்கும் அணுக்களின் செயலாக்கங்கள் சிறுகச் சிறுக தணியும். இதற்கு முன் உடலில் அறியாது சேர்ந்த நோய்களை உருவாக்கும் அந்த அணுக்களின் வீரிய சக்திகளைக் குறையச் செய்யும். நோயை உருவாக்கும் அணுக்கள் பலவீனமடையும்.

ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடனே உறங்கச் செல்லுங்கள்.

1.இந்த நினைவாற்றல் உங்களுக்கு அரும் பெரும் சக்தியாக வளரும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்கள் உணர்வலைகளை அழைத்துச் செல்லும்
3.இயற்கையின் உண்மையின் உணர்வினை உங்களுக்குள் உணரச் செய்யும்.
4.அகண்ட அண்டத்தின் ஆற்றல்… உடலான நம் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகிறது…? என்ற உணர்வினை அறிய முடியும்.

அந்தச் சக்தி இந்த உபதேசத்தைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்காக நானும் (ஞானகுரு) இரவில் பிரார்த்திக்கப் போகிறேன்… தியானிக்கப் போகின்றேன்.

நீங்களும் அதே நிலையில் அந்த உணர்வின் சக்தியை எடுத்து தியானனத்தின் மூலம் உங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நினைவாற்றலைப் பெருக்கி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது… உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்

எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது… உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்

 

எந்தச் செல்வமும் நம்மைக் காப்பது இல்லை. எந்த உயர்ந்த குணமும் நம்மைக் காப்பதில்லை.
1.அருள் மகரிஷியின் அருள் சக்தியின் துணை கொண்டு தான்
2.அந்த உயர்ந்த குணங்களை நாம் காத்திடல் வேண்டும்.
3.உலகைக் காத்திடும் உணர்வு வரவேண்டும்
4.உலகைக் காத்திடும் உணர்வுகள் நம்மில் விளைய வேண்டும்.

நாம் வெளியிட்ட உணர்வுகள் இந்தக் காற்றிலே பரவ வேண்டும். இதனின் துணை கொண்டு வந்தால் தான் இந்தப் பூமியும் சுகம் பெறும்… நம் உடலும் சுகம் பெறும்… நம் உணர்வும் சுகம் பெறும்…!

ஆகவே மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் இதைப் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.

உலகில் நடக்கும் அசம்பாவிதங்கள் இன்று எத்தனையோ… சொல்ல முடியாது. பத்திரிக்கையை வாங்கிப் படித்தால் அல்லது டி.வி.யைப் பார்த்தால் உலகில் நடக்கும் அந்தத் தீமைகள் எதுவோ அதைக் கண்ணுற்று பார்க்க நேர்கிறது.

அந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் நமக்குள் பதிவு செய்து “அந்த நினைவினைக் கொண்டே தான்” உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அடுத்த சில நொடிகளுக்குள் அது உலகம் முழுவதும் பரவும் அளவிற்கு விஞ்ஞான அறிவு வந்துவிட்டது.
1.இங்கே நடக்கும் செயல்களை அங்கே பார்க்கின்றோம்…
2.அங்கே நடக்கும் செயல்களை இங்கே பார்க்கின்றோம்.

நாம் பார்த்து… கேட்டு… உணர்ந்து வெளிப்படும் இதைப் போன்ற உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து உலகெங்கிலும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய வேளையில் யாம் உபதேசமாகக் கொடுக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு பத்திரிகையையோ டிவியையோ பார்த்தாலும்
1.அதற்கு பின் ஒரு நிமிடமாவது ஒதுக்கி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து
3.உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்… உடனே தூய்மைப்படுத்துங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வலைகளைப் படரச் செய்யுங்கள்.

நாளை நடப்பது அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரது உணர்வுகளிலும் ஊடுருவ வேண்டும். தீமைகள் மறைந்து விட வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் உலகம் எங்கும் பரவ வேண்டும். உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த உணர்வுகளை அனைவரும் ஒருங்கிணைந்து பரப்புங்கள்.

1.நாம் விடும் மூச்சலைகள் வீண் அல்ல
2.நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள்ளும் தீமையை நீக்கிடும் உணர்வாக விளைகின்றது
3.மற்றவரின் தீமையைப் போக்கும் சக்தியாகவும் வளர்கிறது.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் இப்போது கொடுக்கும் அருள் சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று பல முறை சொல்லுங்கள்.

வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும்… துயர்பட்ட நிலைகள் இருந்தாலும்… வேதனைகள் எது இருந்தாலும் அதை எல்லாம் கொடுக்கும் சக்தியை வைத்து மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் அறியாது சேர்ந்த நம் உடலில் பல நோய்கள் இருக்கும். பல இன்னல்கள் இருக்கும். அந்த நோய்கள் இருப்பினும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அது என் உடல் முழுவதும் படரவேண்டும் என் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்க வேண்டும். தீய வினையால் வந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை எண்ணிச் செய்யுங்கள்.

நோய்களை மறக்க இதைச் செய்யுங்கள் அந்த மகரிஷிகள் சக்தியைப் பற்றுடன் பற்றுங்கள்.

1.எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது…
2.உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள தீமைகள் மாறும். தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைய விளைய… கல்கி என்ற பத்தாவது நிலையான ஒளி நிலை அடைகின்றோம்.

ஒளியாக விளைந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டு நாம் அகன்றால் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும். தீமைகள் நாடாத நிலைகள் கொண்டு நிச்சயம் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

தியானம் செய்பவர்கள் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

தியானம் செய்பவர்கள் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

உதாரணமாக இங்கே தியான மண்டபம் இருக்கிறது என்றால் அடிக்கடி இதில் குப்பைகளும் தூசிகளும் வரத்தான் செய்கின்றது அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்தித் துடைத்தால் தான் மண்டபம் தூய்மையாக இருக்கும்.

அது போன்று நம்முடைய உடலில் ஏற்கனவே பதிவான அழுக்குகள் எத்தனையோ உண்டு.
1.நம் உடலில் உள்ள அணுக்கள் அதனதன் உணவுக்காக ஏங்கும் பொழுது
2.அந்த மணம் குவிந்து அதைச் சுவாசிக்கும் பொழுது அத்தகைய குணங்களே நமக்குள் வரும்.

தியானம் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை… என்னால் தியானிக்க முடியவில்லை என்ற நிலையை எண்ணாது
1.எப்படியும் அருள் ஒளியை நான் பெறுவேன்…
2.வலு கொண்டு நான் தியானிப்பேன்…
3.தியானித்து அருள் சக்தியை எனக்குள் சேர்ப்பேன்… என்று
4.வலுக்கட்டாயமாகத் தனக்குள் உள் செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

எப்படி இந்தத் தியான மண்டபத்தை அடிக்கடி தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல நாம் திரும்பத் திரும்ப எண்ணி அருள் சக்திகளைச் சேர்த்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காரணம்… நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு தான் வாழுகிறோம். பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து அவர்களைப் பண்புடன் அணுகிக் கேட்டறியும் போது அவர்படும் வேதனைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் நம் உடலில் அவை “அணுக்கருக்களாக…” மாறி விடுகின்றது.

குடும்பத்திற்குத் தேவையான செல்வத்தையும் சொத்தையும் சேர்த்தோமே… நோயினால் உடலை விட்டுப் பிரியப் போகிறோமே… என்ற ஏக்கத்துடன் அவர்கள் கடைசியில் வாழ்ந்தாலும் அவரின் உணர்வைக் கேட்டறிந்த நமக்குள் அந்த அணுவின் தன்மை வளர்ந்திருந்தால் அவர் இறந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி மன வேதனையைக் கொடுக்கும் நிலையாக மாறிவிடும்.

அதே சமயத்தில் அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்து மீண்டும் மீண்டும் அதே வேதனையான உணர்வை உணவாக எடுத்து அதன் இனங்களை நம் உடலிலே பெருக்கிவிடும்.

1.ஞானிகளைப் பற்றி இங்கே யாம் (ஞானகுரு) சொல்லும் போது நல்ல உணர்வுகளை நுகர விடாது அது தடுக்கும்.
2.தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.
3.தியானத்தில் அமர்ந்தாலும் எழுந்து ஓட வைக்கும்.

காரணம் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதால் அதன் படியே வெளிப்படுத்தும். நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அதை அதை அடக்கப் பழகுவதே யாம் சொல்லும் தியானம்.

அதை நாம் அடக்கப் பழகவில்லை என்றால் அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையாகப் பெறச் செய்துவிடும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் மன வேதனை வரும் பொழுது மன நோயாக வருகின்றது. பின் உடல் நோயாக மாறி மனித உடலையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

எத்தகைய நிலைகள் இருந்தாலும் சரி… நல்லதை எண்ண விடவில்லை என்றாலும்
1.கண்களைத் திறந்து நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும்
3.இருள் மறைய வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்
4.மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும் என்று இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1.என் உடலில் உள்ள ஆத்மாக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று…
2.அது அடங்கி… உயர்ந்த நிலைகளை என்னுள் இருந்து பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

இதனால் நம் உடலில் உள்ள அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு நற்பயன் ஏற்படுகின்றது. நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒளியாக மாறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.

தியானத்தில் உட்கார்ந்தால் என்னால் முடியவில்லை… வெறுப்பாக இருக்கின்றது… எங்கெங்கோ நினைவுகள் போகின்றது…! என்று நிறையப் பேர் சொல்வார்கள்.

தியானத்தில் கண்ணை மூடிய பின் இப்படிப் பல உணர்வு வந்தால் உடனே கண்ணைத் திறந்து விண்ணிலே நினைவைச் செலுத்தி மகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.தன்னிச்சையாகவே நம் கண்களை மூட வைக்கும்.
2.நம் நினைவுகளைத் தன்னிச்சையாகத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்லும்.
3.அப்பொழுது துருவ மகரிஷியின் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் வழி வருவதை
3.துருவப் பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை நாம் நுகரும் பருவத்தைப் பெறுகின்றோம்.

தொடர்ந்து இதை வழிப்படுத்தி வாருங்கள்… நல்லதாக அமையும்.

நாம் செய்யக்கூடிய தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்…!

நாம் செய்யக்கூடிய தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்…!

 

1,துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.இந்த உணர்வின் தன்மையை நாம் உலகமெங்கும் பரவச் செய்யும் பொழுது
3.இந்தப் பூமியில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மைகளை நீக்க முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற்று அதை உங்களுக்குள் விளைய வைக்கும் சந்தர்ப்பத்தைத் தான் இந்த உபதேச வாயிலாக ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க சூரியனுடைய காந்த சக்தி இதைக் கவரப்படும் போது சிறுகச் சிறுக ஒரு அடர்த்தியின் தன்மையாக வரும்.

அதன் மூலம் விஞ்ஞான அறிவால் வரும் விஷத் தன்மைகளோ மற்ற எதிர்ப்பு நிலைகளோ வந்தால் தடுக்க முடியும்.

1.சூறாவளி போன்ற கடுமையான காற்றுகள் வரும் பொழுது நம் பக்கம் அது வராதபடி அதனின் திசைகளை மாற்ற முடியும்.
2.நாம் எடுக்கும் தியானத்தினால் இது முடியும்… உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்
3.யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி எண்ணிப் பாருங்கள்… அது திசை மாறிப் போகும்.

அதே போல் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் நம்முடைய எண்ணமும் அந்தப் பார்வையும் அதில் சேர்கின்றது.

மேகங்களில் அருள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அங்கே பெய்யும் அந்த மழை நீரால் தீமைகளை அகற்றிடும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

எந்தெந்த உணர்வுடன் மக்கள் ஆங்காங்கு இருக்கின்றார்களோ அதற்குத்தக்க தான் அங்கே மழை பெய்வதும் இருக்கும். ஊரில் உள்ள மக்கள் நல்ல உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அங்கே சீராக மழை பெய்யும்.

உதாரணமாக அந்த ஊர் மக்கள் வெறுப்பும் சண்டையும் சச்சரவும் குரோதமும் கொண்டிருந்தால் அங்கே மழை பெய்வது அரிதாகின்றது.
1.காரணம் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மோதல் ஏற்படும் பொழுது
2.மற்ற பக்கம் பெய்யும் ஆனால் இங்கே மழையை விலக்கித் தள்ளிக் கொண்டு போய்விடும்.

ஒவ்வொரு நிமிடமும் அன்பு கலந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வை வானிலே பரவச் செய்தால் அந்தப் பகுதிகளில் நிச்சயம் நல்ல மழை பெய்ய வைக்கலாம்.
1.உங்களை நம்புங்கள்…
2.மனிதனுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு…!

ஒரு பாடலை இனிமையாகப் பாடி அந்த இந்த உணர்வின் ஒலி கொண்டு அதை வைத்து அக்காலங்களில் மழை பெய்ய வைத்திருக்கின்றார்கள்.

மழை இல்லாது ஒரு வறட்சி என்று வந்து விட்டால் பெண்கள் எல்லோரும் கூடி குடங்களை எடுத்துக் கொண்டு ஒரு காட்டுப் பக்கம் செல்வார்கள்.

அங்கே இருக்கக்கூடிய கல்லுக்கோ மற்றதுக்கோ அந்த நீரை ஊற்றிய பின் சிறிது நேரத்தில் மேகங்கள் கூடும், மழையை இங்கே அழைத்துக் கொண்டு வருவார்கள்.

இது எல்லாம் அக்காலங்களில் செயல்படுத்தினார்கள். இன்றும் சில இடங்களில் இது போன்று உண்டு.

முன்னோர்களாகிய நம் ஞானிகள் காட்டிய அருள் வழியில் வழி நடந்தால் இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் தப்ப முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.