உயிரை ஈசனாக மதித்து வாழ்ந்தால் தான் பிறவி இல்லா நிலை அடைய முடியும்

உயிரை ஈசனாக மதித்து வாழ்ந்தால் தான் பிறவி இல்லா நிலை அடைய முடியும்

 

கைகளில் அழுக்குப் பட்டால் எப்படித் துடைக்கின்றோமோ இதைப் போல் வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களையும் கோபங்களையும் குரோதங்களையும் பார்க்க நேர்ந்தால் நம் ஆன்மாவில் படும் அந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரன்… சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…” என்று காட்டுகின்றார்கள்.
1.நாம் சுவாசிக்கும் குணங்கள் எவை அதிகமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்தால் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறுகின்றோம்.
3.இது மனிதனின் கடைசி நிலை.

ஆகவே அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் அருள் சக்தி பெற்றது தான்… “நாம் இன்று இருக்கும் இந்த மனித உடல்…” என்பதை மறந்திடலாகாது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாகப் பிறந்த நிலையில் கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவைப் பெற்றிருக்கின்றோம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி ஒளிச் சுடராக ஆக்குகின்றதோ இதைப் போல் நாமும்
1.இந்த உடலான பிரபஞ்சத்திலிருந்து நன்மை தீமைகளை அறிந்து
3.தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதி பெற்றவர்கள்.

நம் உடலுக்குள்ளே… இது ஒரு உலகம் தான். நமக்குள் சேரும் வெறுப்பு விருப்பு இத்தகைய உணர்வுகளை இந்த உடலான உலகில் இருளை நீக்கி அருளைப் பெருக்கி ஒளி என்ற உணர்வை நாம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இரத்தத்தில் கலக்கச் செய்து இரத்தத்தில் உள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உறுப்புகளில் படரச் செய்து அதிலுள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும் தான் ஆத்ம சுத்தி என்பது.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் பட்ட மாசுகளைத் தூய்மைப்படுத்திடும் நிலையாக
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கண்ணில் கருமணிகளில் உள்ள விஷத்தன்மைகளைத் துடைக்க வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து நாம் பார்த்ததை உடலுக்கெல்லாம் எடுத்துப் பாய்ச்சும் கண்ணின் நரம்பு மண்டலங்களிலும் அதை உருவாக்கிய அணுக்களிலும் பாய்ச்சி அதிலே தோய்ந்த விஷத் தன்மைகளைத் துடைக்க வேண்டும்.
3.அதைப் போன்றே நரம்பு மண்டலம் எலும்பு மண்டலம் தசை மண்டலம் தோல் மண்டலம் எலும்புக்குள் இருக்கும் ஊன்… அந்த ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து எடுத்து உள்ளே செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

இவ்வாறு நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டே வந்தால் இந்த உடலுக்குப் பின் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த மனித வாழ்க்கையில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ பிறவி இல்லாத நிலையை நாம் அடைகின்றோம்.

இப்பொழுது உள்ள நிலைகளில் சிறிது நேரம் நன்மை செய்தாலும்… சிறிது நேரம் நாம் தியானம் செய்தாலும்… அதற்கடுத்து வரும் கவலைகள் சங்கடங்கள் வெறுப்புகள் சஞ்சலங்கள் கோபங்கள் இதைப் போன்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது “தியானத்தின் பலனைக் கூட அது மாற்றிவிடும்…”
1.காரணம் அது அதிகரித்து விட்டால் விஷத்தின் இயக்கமே அதிகரித்து விடுகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட “வாழ்க்கையே தியானம்…” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

ஆகவே எப்பொழுதெல்லாம் தீமையைப் பார்க்கின்றோமோ அப்போதெல்லாம் அந்தத் தீமைகள் நமக்குள் வளராதபடி தடுத்து நம் ஆன்மாவைத் தூய்மையாக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

மனிதனான நிலையில்
1.உயிரை ஈசனாக மதித்து எவர் எவர் அந்த உணர்வுகளை வளர்க்கின்றனரோ
2.அவர்களுக்கெல்லாம் பிறவி இல்லை என்பதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

நாம் எதனால் இயங்குகின்றோம்… இயக்கப்படுகின்றோம்…? என்பதை அறிய வேண்டியது மிக மிக அவசியம்

நாம் எதனால் இயங்குகின்றோம்… இயக்கப்படுகின்றோம்…? என்பதை அறிய வேண்டியது மிக மிக அவசியம்

 

வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். இருந்தாலும் பிறர் தவறு செய்வதையும் பார்த்து தவறு என்று உணர்கின்றோம்.
1.அதற்குத் தக்க விலகிச் செல்கின்றோம் அல்லது
2.அந்த உணர்வுக்கொப்ப நாமும் போருக்குச் (எதிர்நிலையாகி) செல்கின்றோம்.

போர்முறையாகிறது (வெளியில்) என்று வைத்தாலும் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் நம் உயிரிலே பட்டுத் தான் இயக்கமாகிறது. உயிர் தான் உடலுக்குள் குருவாக இருக்கிறது.

அப்போது நாம் நுகர்ந்த உணர்வுகள் (தவறு என்று நுகர்ந்தது) உயிரிலே படும் பொழுது “குருக்ஷேத்திரப் போராகிறது…”
1.என்னை இப்படிப் பேசி விட்டான் என்றோ அல்லது
2.எனக்கு இப்படி இடைஞ்சல் செய்துவிட்டான் என்றோ நாம் எண்ணும்போது
3.அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகள் உடலுக்குள் பரவிய உடனே
4.இந்த உடலைக் காக்க உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் போர்முறைக்கு (அதிகமாக) வருகின்றது – “மகாபாரதப்போர்…”
5.அவனை உதைக்க வேண்டும் என்ற நிலையில் அவன் உணர்வுகள் அவனைத் தாக்கும் நிலைக்கு அழைத்துச் செல்கின்றது
6.அதே சமயத்தில் அவன் நம்மைத் தாக்கி விடுவான் வலுவானவன் என்று சொன்னால் நம்மை விலகிச் செல்லும்படி செய்கின்றது.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். ஒருவன் போக்கிரி என்று தெரிகின்றது வருபவரை எல்லாம் அவன் மிரட்டுகின்றான். நாம் பார்க்கின்றோம்.

உதாரணமாக… வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு குறை (எதிர்நிலை) வந்தால் போதும்…! கணவர் என்னை இப்படிப் பேசி விட்டாரே என்று மனைவி சொல்லும்.

ஆனால் ரோட்டிலே செல்லும் பொழுது போக்கிரி நம்மைக் கண்டபடி பேசுகின்றான்… அடிக்க வருகின்றான்.

ஐய்யய்யோ… என்று சொல்லித்தானே ஓடுகின்றோம் அவனைத் திருப்பி அடிக்கும் நிலையோ அல்லது அசிங்கமாகப் பேசுகின்றான் என்று சொல்ல முடிகின்றதா…?

இல்லை.

அடுத்தாற்போல் மற்றவர்கள் விசாரிக்கின்றார்கள். அவன் உன்னை என்ன செய்தான்…? என்று…!

போக்கிரி என்னை அடித்தான்… திட்டினான்… என்று அங்கே அவனுக்கு முன்னாடி சாட்சி சொல்ல முடிகிறதா…! அடித்தாரா…? என்று கேட்டால் நாம் “இல்லை…” என்று தான் சொல்வோம்.

காரணம்… “அடித்தான்” என்று சொன்னால் நம்மை மீண்டும் உதைப்பான். இது தான் நடக்கின்றது.

ஆனால்
1.வீட்டில் “ஏன் இப்படிச் செய்தாய்…?” என்று கணவன் மனைவியிடம் கேட்டால் கணவன் மீது மனைவிக்குக் கோபம் வருகிறது சண்டை வருகிறது அல்லது
2.மனைவி கணவனைக் குறையாகச் சொன்னால் கணவனுக்குக் கோபம் வருகிறது.

ரோட்டிலே நாம் வேடிக்கையாகத் தான் பார்த்தோம். அந்தப் போக்கிரி என்னடா வேடிக்கை பார்க்கின்றாய்…? என்று நம்மை அதட்டிக் கேட்கின்றான். அவன் தவறு செய்தே பழக்கப்பட்டவன்.

வேடிக்கை பார்ப்பதற்கு “என்னடா…” என்று கேட்கின்றான். சும்மா…! என்று சொன்னால் “என்னடா சும்மா…?” என்று அடிக்க வருகின்றார். அடித்தவுடன் என்ன செய்கின்றோம்…? நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை… பேசாமல் இருக்கின்றோம்.

இது போன்றுதான்…
1.நமக்குள் எத்தனையோ நல்ல குணங்கள் இருப்பினும்
2.நாம் பார்த்து நுகர்ந்த தீய உணர்வுகள்… எந்த நல்ல குணத்தோடு நாம் பார்த்தோமோ
3.அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்தை (போக்கிரியைப் போன்று) அடக்கி விடுகின்றது

அதாவது தீமை செய்யும் உணர்வுகளை நாம் சுவாசித்தால்… சுவாசித்த உணர்வுகள் நம் நல்ல குணங்களை அடக்கி விடுகின்றது. கணங்களுக்கு அதிபதி கணபதி என்று அது அதிபதியாக இருந்து நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

போக்கிரியின் உணர்வுகள் நமக்குள் கூடி… பயம் அதிகரித்து விட்டால் வீட்டில் நமக்கு அமைதியே இருக்காது. சிந்தனை இழந்து… சிந்தனையற்றவர்களாகி விடுகின்றோம்.
1.அடுத்து யார் எதைச் சொன்னாலும் நம்முடைய சொல்லும் கடுமையாகி விடுகின்றது
2.குடும்பத்திற்குள் ஒற்றுமை இழக்கப்படுகின்றது… குடும்பத்திற்குள் மட்டுமல்ல.
3.உயிரிலே குருக்ஷேத்திரப் போராக நடக்கப்பட்டு உடலுக்குள் பார்த்தால் மகாபாரதப் போரே நடக்கின்றது.

நாம் எத்தனையோ நல்லதை எடுத்திருக்கின்றோம். நமக்குள் நல்ல அணுக்கள் உண்டு.. பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய உணர்வுகள் நமக்குள் இருப்பினும்… இத்தகைய தீமையின் உணர்வு நமக்குள் சென்றால் குருக்ஷேத்திரப்போர் இங்கே போகாது தடுக்கின்றது… உடலை இயக்குகிறது

இருந்தாலும் இந்த உணர்வுகள் உடலுக்குள் போய்விட்டால் அந்த உணர்வுகள் உமிழ்நீருடன் சேர்த்து நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறுகின்றது. இரத்தமாக மாறிவிட்டால் பயமான எண்ணங்களே வருகின்றது.

இப்படி…
1.நமது வாழ்க்கையில் நல்லது என்று நினைத்து வந்தாலும் நல்லது செய்ய முற்பட்டாலும்
2.கேட்ட உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமல் ஆட்டிப் படைக்கின்றது.

இதைத் தான் சீதாவை இராவணன் சிறை பிடித்தான் என்று நம் காவியங்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. நாம் உணர்ந்தோமா…?

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலுக்குள் துரிதமாகச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலுக்குள் துரிதமாகச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

 

எத்தனையோ பேருக்கு நாம் பல நன்மைகளைச் செய்திருந்தாலும் அதிலே தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாதபடி அவ்வப்பொழுது சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

உதாரணமாக… ஊசி மூலம் நம் உடல் இரத்தத்திலே மருந்தை கலக்கச் செய்ய்யும் போது அந்த மருந்து செல்லும் இடங்களில் எல்லாம் தீமைகளை (நோய்களை) நீக்குகிறது.

இந்த மருந்தைக் கண்டவுடன் அந்த அணுக்கள் ஏற்க மறுக்கிறது. மருந்து அணுக்களுக்குள் சேரச் சேர அது பலவீனம் அடைகின்றது.

இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீங்கள் எடுத்துப் புருவ மத்தியில் எண்ணி உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்
2.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.கண்ணின் நினைவைச் செலுத்தி விட்டால் இது துரிதமாக அந்த அணுக்களிலே போய்ச் சேருகின்றது.
4.மேலே சொந்னது போன்று அறியாது உட்புகும் தீமைகளைப் பலவீனப்படுத்துகிறது.

உதாரணமாக… நண்பர்களுக்குள் பழகப்படும் பொழுது “நன்மை செய்தான்…” என்று எண்ணும் பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது.. நன்மை செய்யும் சக்தியாக இயக்குகிறது.

ஆனால் பகைமை என்று ஆகி “துரோகம் செய்தான் பாவி…” என்று வேதனையுடன் எண்ணினால் நண்பன் உணவு உட்கொண்டிருந்தாலும் அங்கே புரை ஓடுகின்றது.

யார் இப்படி எண்ணுகிறாரோ அவருக்கும் இருள் சூழச் செய்து சிந்தனை இழந்து அடுத்து விபத்தாகின்றது. அதே சமயத்தில் யாரை எண்ணினாரோ அங்கேயும் விபத்தாகிறது. ஆக… நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வின் வழி தான் இயக்கச் சக்தியாக மாறி இயக்குகிறது.

வேதனை வேதனை என்று எண்ணினால் கண்கள் இருண்டு விடுகின்றது.
1.அந்த நேரத்தில் நேரடியாகப் பார்த்தாலும் மேடு பள்ளம் இருப்பதை நம்மால் பார்க்க முடியாது போகின்றது.
2.கரு விழிகளில் அடுத்தடுத்து இந்த வேதனைகள் படப்படும் போது விஷத்தன்மை என்ற மாசுகள் பெருகத் தொடங்கி விடுகின்றது.
3.இப்படிப் பெருகத் தொடங்கினால் கண் கருவிழிக்குள் இருக்கும் கண்மணியும் பலவீனம் அடைகின்றது
4.அது பலவீனம் அடைந்தால் விஷத்தின் தன்மையை அதிகமாகக் கவர்ந்து
5.கண் நரம்பு மண்டலம் முழுவதும் விஷத்தன்மைகள் பரவி விடுகின்றது.
6.விஷத்தன்மை பரவினால் உடல் முழுவதற்கும் அது எளிதில் பரவும் தன்மை வருகிறது.

இது போன்று “ஒன்றுடன் ஒன்று தொடர் கொண்டு” அதன் தொடர் வரிசையில் இயற்கையின் நியதிகள் நம்மை மாற்றிக் கொண்டிருக்கின்றது..

ஆனால் இதையெல்லாம் மனிதன் ஒருவன் தான் மாற்றி அமைக்க முடியும்.

மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று இங்கே கூர்ந்து கவனிக்க வைத்து
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்கச் செய்கிறோம் (ஞானகுரு).

பதிவானதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து தீமை என்று வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கப் பெருக்க இந்த உடலுக்கு பின் பிறவி இல்லாத நிலை அடையும் தகுதி பெறுகின்றீர்கள்.

முந்தைய நிலைகள் இதை எல்லாம் செய்யத் தவறி இருந்தாலும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிர் வழி கவர வேண்டும்.

நமக்கு முன் இருக்கும் ஆன்மாவிலே பலவிதமான உணர்வுகள் உண்டு. அதிலே தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும் நிலையாக
1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்திலே கலக்கச் செய்து
2.இரத்தத்தின் வழி உடலில் உள்ள அணுக்களில் அதைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.துரிதமாக நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

நம்மை அறியாது கோபப்படும் அல்லது வேதனைப்படும் செயல்களையும்… ஏன்… எதற்கு…? என்று அறியாதபடி செயல்படுத்தும் சில தவறுகளிலிருந்து மீட்பதற்குத் தான் இதை எல்லாம் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை அடிக்கடி இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது தீமைகளை அது ஏற்றுக் கொள்ளாது தடுக்கப்படுகின்றது.

1.நம்முடைய சிறுநீரகங்களும் (KIDNEY) துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் பெற்று
2.இரத்தங்களில் கலந்து வரக்கூடிய மாசுகளைத் தூய்மைப்படுத்தும் சக்தி பெறுகின்றது.
3.அப்போது நல்ல இரத்தம் இருதயத்திற்கும் செல்கின்றது… சிந்திக்கும் ஆற்றலும் வலுப்பெறுகின்றது.

வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறக்கூடிய உறுதி உங்களுக்குக் கிடைக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து நம் இரத்தங்களிலே அதிக அளவில் கலக்கச் செய்ய வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து நம் இரத்தங்களிலே அதிக அளவில் கலக்கச் செய்ய வேண்டும்

 

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது…
1.நாளை கடன்காரனுக்கு எப்படிக் கொடுப்பது…
2.குடும்பத்தை எப்படி வழி நடத்துவது… என்று சோர்வின் நிமித்தம் வேதனை என்ற உணர்வுகள் தான் வருகின்றது.

இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்தால் உடனே மன உறுதி கிடைக்கும்.

1.நாம் எதைச் செய்ய வேண்டும்…? எப்படிச் செய்ய வேண்டும்…? என்று
2.தனக்குள்ளேயே ஞானங்கள் கிடைக்கின்றது.
3.அதன் வழி நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் தொழிலை விருத்தி செய்யவும் மன அமைதி பெறவும் இது உதவும்.

ஆனால் மன அமைதி இழந்து குடும்பத்தில் சிக்கல்கள் அதிகமானால் அந்தக் குடும்பத்தில் இதை நுகர்வோர் உணர்வுகள் அனைத்துமே சோர்வடைகின்றது. சோர்வடைந்து வேதனைப்படும் நிலை வரும் பொழுது சிந்தனை இழக்கப்படுகிறது.

அந்த குடும்பத்தை சார்ந்தவர் வெளியிலே செல்லப்படும் பொழுது
1.அந்தக் கலக்கங்கள் – எதிர்பாராத விபத்துகளை உண்டாக்கி விடுகின்றது
2.பட்ட காலிலே படும்… கெட்ட குடியே கெடும்…! என்ற நிலைகளில்
3.சங்கடங்கள் குடும்பத்தில் பரவப்படும் பொழுது விபரீத விளைவுகள் வந்து விடுகின்றது.

மேலும் மேலும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையே முடியாது போய் விடுகிறது. தேடிய செல்வங்களையும் பாதுகாக்க முடியாது போய்விடுகிறது. மேலும் வேதனை என்ற உணர்வுகளே அதிகமாக வளர்கின்றது.

இந்த உடலில் அத்தகைய நிலைகளை வளர்த்துக் கொண்டால் இன்று நாம் மனிதர்கள்.

வேதனை என்ற உணர்வு கூடினால் எந்த ஆசை கொண்டோமோ பேய்…! இன்னொரு மனித உடலுக்குள் சென்று பேயாக ஆட்டி அவனையும் வீழ்த்திவிட்டு வேதனையை உருவாக்கி வெளி வந்தபின் அடுத்து “மனிதனல்லாத உடலை இந்த உயிர் உருவாக்கிவிடும்…”

ஆகவே எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுளாக மதித்தல் வேண்டும். அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலைக் கோவில் என்று மதித்துப் பழக வேண்டும்.

அப்படி மதித்தோம் என்றால்… வாழ்க்கையில் சந்திக்கும் சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் குரோதம் பயம் போன்ற நிலைகள் நமக்குள் புகாது தடுக்க முடியும். நல்ல சிந்தனைகள் நமக்குள் கூடும்.

வாழ்க்கையில் தீமைகளைச் சந்திக்க நேரும் அந்தந்த நேரங்களில் உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நம் உடலில் எத்தகைய கஷ்ட்ங்கள் வரினும் அதைச் சிறுகச் சிறுக நாம் தடுக்க முடியும் உடலுக்குள் நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

காரணம்… தீமைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கியது அந்தத் துருவ நட்சத்திரம்…!

1.கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரில் இணைத்து…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணை மூடி…
3.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவு அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெற வேண்டும் என்று
4.உயிர் வழி கவர்ந்து நம் உடலுக்குள் சேமித்தல் வேண்டும்.
5.நம் இரத்தங்களிலே இதைக் கலக்கச் செய்ய வேண்டும்
6.கண்ணின் நினைவை உள்ளே செலுத்தப்படும் போது நம் இரத்தங்களை அது தூய்மைப்படுத்தி விடுகின்றது.

ஆத்ம சுத்தியின் சூட்சமமே புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “அழுத்தமாக…” நிலை நிறுத்துவது தான்

ஆத்ம சுத்தியின் சூட்சமமே புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “அழுத்தமாக…” நிலை நிறுத்துவது தான்

 

உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பத்திரிகைகளைப் படிக்கின்றோம். ஒரு இடத்திலே விபத்தாகி விட்டது… அடிபட்டனர்… விபரீத நிலைகள் ஆகிவிட்டது என்று அங்கே நடந்த நிகழ்ச்சிகளை… அவர்களுக்குக் கிடைத்த ஆதாரப்படி… அறிந்ததைச் சொல்கின்றார்கள்.

எழுத்து வடிவில் இருப்பதைப் பார்த்து நாம் படித்தாலும் அதே உணர்வுகளை நாம் நுகரக்கூடிய சந்தர்ப்பம் வந்து விடுகின்றது.

இதைப் போன்று பிறிதொரு தீமையின் உணர்வுகளை நாம் அறிந்து தெரிந்து கொண்டாலும் அது நம் உடலுக்குள் உருவாகாதபடி அவ்வப்போது அதைத் தூய்மையாக்க ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

ஈஸ்வரா… என்ற உயிரை எண்ணி…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை நம் புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.நாம் படித்துப் பதிவாக்கிய உணர்வும்… இதற்கு முன் நமக்குள் உருவான தீய வினைகளும் உள்புகாது தடுத்தல் வேண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வைத்து நாம் தடுத்து நிறுத்தினால்
5.அந்த விபரீத உணர்வுகள் உள்புகாது தடுக்கப்படுகின்றது.

ஏனென்றால் அதிர்ச்சியான செய்திகளை நாம் பார்த்தவுடன் நமக்குள் பதிவாகிறது.
1.பதிவான உணர்வுகளை நாம் சுவாசித்து
2.அந்த எண்ணங்கள் அந்த உணர்ச்சிகள் கொண்டு அந்தந்த வாழ்க்கை வாழ்ந்தாலும்
3.இப்போது (அடுத்து அடுத்து) மீண்டும் எண்ணத்தால் அதை எண்ணும் பொழுது
4.அதே உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து அதே உணர்ச்சிகள் இயக்கப்பட்டு
5.அதே செயல்களை நமக்குள் உருவாக்கி விடுகின்றது அல்லது வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க செய்கின்றது.

இப்படி நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தோம் என்றால் அது அனைத்தும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து இரத்தத்திலே “மாசுபடும் உணர்வுகளாக” மாறுகிறது.

மாசுபட்ட உணர்வுகளை நம் உடலில் மீண்டும் சேர்க்க உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்குள் அது சேரும் தன்மை வந்து விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வராதபடி தடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திப் பழக வேண்டும். தடுத்து நிறுத்தவில்லை என்றால் உடலுக்குள் சென்று அந்த நல்ல அணுக்களைக் கெடுத்துவிடும்.

கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று “இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்…”

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது வலு கொண்டதாக மாறுகிறது. இப்படி “அந்த வலுவை” நாம் ஏற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படிச் சேர்த்துக் கொண்டால் “இதன் அழுத்தம்… துருவ நட்சத்திர வலு” நாம் அங்கே எண்ணும் இதே உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆதாரத்துடன் கலந்து அந்த வெறுப்பு அல்லது வேதனை போன்ற தீமை செய்யும் உணர்வுகளை நுகராது உயிரிலே அடக்கி… ஆகாரத்தைச் சீராக அமைத்து நல்ல இரத்தமாக மாற்ற இது உதவும்.

“ஆத்ம சுத்தி என்பது சாதாரணமானதல்ல…”
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் பதிவாக்கி
2.இதைத் தெளிவாக்கி அந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான் இவ்வளவு காலம் உங்களுக்கு உபதேசித்தது (ஞானகுரு)
3.ஓரளவுக்கு அந்த வலிமை பெறக்கூடிய தகுதியைப் பெற்ற பின் இதை இப்போது முழுமையாகக் கொடுக்கின்றோம்.

காரணம்… உலகம் முழுவதும் விஷத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… உங்களுக்குள் யாம் சொன்ன முறைப்படி வலுக் கொண்டு இந்தக் காற்றுக்குள் மறைந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவர்ந்து உங்கள் உடல் உறுப்புகளில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை அதிகமாகச் சேர்த்துக் கொண்டு வர.. வர…
1.துருவ நட்சத்திரத்தின் வலிமையைப் பெறுகின்றீர்கள்…
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைகின்றீர்கள்.

நம்மால் மற்றவர்கள் தீமைகள் அகல வேண்டுமே தவிர… அவர்கள் தீமைகள் நம்மை மாற்றிவிடக் கூடாது

நம்மால் மற்றவர்கள் தீமைகள் அகல வேண்டுமே தவிர… அவர்கள் தீமைகள் நம்மை மாற்றிவிடக் கூடாது

 

கோடிக் கோடி சொத்துக்கள் தேடி வைத்தாலும் பொறாமை உணர்வு வந்து… “அவன் அப்படிச் செய்கின்றான்… இவன் இப்படிச் செய்கிறான்…!” என்று விரோதிகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்கிறோம்… பகைமைகளைத் தான் உருவாக்கிக் கொள்கின்றோம்.
1.பகைமை உணர்வுகளை உடலுக்குள் சேர்த்துப் பகைமை உணர்வோடு தான் வாழ்கின்றோம்
2.துடிப்பும் துயரமும் தொல்லையும் தான் நம் உடலுக்குள் வருகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.

வெளியிலே சென்றாலும் எத்தகைய துயரங்களைக் கேட்டாலும் தீமைகளைப் பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதனின் வலுவை வைத்து அவைகளை அடக்கிப் பழக வேண்டும்.

யார் மேல் பகைமை ஆனதோ… அறியாத இருள்களிலிருந்து அவர்கள் மீள வேண்டும்… பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலில் படர்ந்து அவர்கள் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் நோய்கள் நீங்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

தொழில் செய்யும் இடங்களில் குற்றம் குறைகள் இருந்தாலும்
1.ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.அவர்களும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.உண்மையின் உணர்வை அறிய வேண்டும்
4.அவர்கள் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணி நாம் இதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

தொழில் செய்யும் இடங்களில் ஒருவருக்கொருவர் வரும் பகைமைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும் “ஈஸ்வரா…” என்று எண்ணி… துருவ நட்சத்திரத்தின் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்தி அந்தக் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும் அது உடல் நலம் பெற வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

முதலில் அந்தச் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் அங்கே பாய்ச்ச வேண்டும்… நோய் அகலும்.
1.உங்களால் அவர்கள் நோய் போக வேண்டும்
2.அவர்கள் நோய் உங்களுக்கு வரக்கூடாது.

அதற்குத்தான் இந்த அருள் வாக்குகளைக் கொடுத்து ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குப் பாதுகாப்பான நிலைகள் கிடைக்கும்படி செய்கின்றோம் (ஞானகுரு). உலக விஷத்தன்மைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கும் இது உங்களுக்கு உதவும்.

நல்லதைச் செய்தாலும் “அதைத் தடைப்படுத்துகின்றார்களே…” என்று எண்ணினால் இரு மடங்கு வேதனையாகிவிடும்

நல்லதைச் செய்தாலும் “அதைத் தடைப்படுத்துகின்றார்களே…” என்று எண்ணினால் இரு மடங்கு வேதனையாகிவிடும்

 

தியானம் செய்து நல்லதையே வளர்த்துக் கொண்டு வரும் பொழுது ஒருவன் கடுமையான தவறு செய்தால் எப்படி நினைக்கின்றோம்…?

1.நான் இவ்வளவு நல்லது செய்து கொண்டிருக்கின்றேன்…
2.இப்படித் தவறு செய்கின்றானே…! என்று “இரண்டு மடங்கு” வேதனைப்படும் நிலைகள் வந்து விடுகின்றது.

அதாவது… தியானம் செய்து நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும்… வேதனைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக இணைந்து விடுகின்றார்கள்.

ஆனால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீக்கும் நிலைகளுக்குத் தான் இங்கே உபதேசம் கொடுக்கின்றோம்.
1.நல்லதைச் செய்தாலும்… தர்மத்தைச் செய்தாலும்
2.எத்தனையோ பல நன்மைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று செயல்பட்டாலும்
3.வாழ்க்கையின் நிமித்தம் இடையில் வரக்கூடிய தவறுகளையும் தீமைகளையும் வேதனைகளையும் சுத்தப்படுத்தும் நிலைக்கு வர வேண்டும்.

பரிவு கொண்டு பண்பு கொண்டு பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை எடுத்து நம்மையே படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையாக வந்து விடுகிறது.

அது போன்று ஆகாதபடி தடுப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

திட்டியவனை மட்டும் இப்படித் திட்டினான்… திட்டினான்… என்று நினைவுக்குக் கொண்டு வருகின்றோம். அப்பொழுது அது கோப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.

அந்த நேரத்தில்
1.நம் குழந்தை ஏதாவது அழுதால் கூட “போடா நாயே…” என்று திட்டும்படி செய்யும்.
2.யாராவது நல்லது செய்தால் அட போய்யா…! என்று கோபமாகப் பேசும்படி வரும்… ஆக நல்லது செய்தாலும் கூட வெறுப்போம்.

என்ன இவர் இப்படிச் சீறிப் பாய்கிறார்…? என்று அவர்கள் நினைப்பார்கள்.

வேலை செய்யும் இடங்களிலே “மேலதிகாரி” தன்னிடம் வேலை செய்பவர்களை இது போன்று கடுமையாகத் திட்டினால் அது பய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்கள் சிந்திக்கும் வலுவை இழக்கச் செய்யும். கடைசியில் தவறு செய்யும் நிலையில் கொண்டு போய் விட்டுவிடும்.
1.நீங்கள் அதிகாரியாக இருந்து உங்களிடம் வேலை செய்பவர்களை மிரட்டிப் பாருங்கள்.
2.அடுத்து… அவர் செய்யும் வேலைகளில் தவறுகளை அதிகமாகச் செயல்படுத்துவார்கள்.

ஒரு சிலர் அவன் அப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… என்று ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நிச்சயம் இருக்கும்.

இது போன்ற நிலைகள் எல்லாம் நாம் மாற்ற வேண்டும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவசியம் எடுத்து ஆக வேண்டும்.

காரணம் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் நம் காரியங்கள் தடைப்படுகின்றது யாரைப் பார்த்து நாம் கோபித்தோமோ அவனுக்கும் இதே உணர்வுகள் ரிமோட் செய்து அவனையும் இயக்கும்.

ஏனென்றால் காற்றிலே இருக்கின்றது… இந்த உணர்வின் வேகங்கள் அவனை இயக்கி…
1.கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் தப்பாக்கி விடுகின்றது…
2.இயந்திரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் என்றால் அதைத் தவறாக இயக்கச் செய்யும்…
3.வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை இழந்து விபத்து ஆகிவிடும்.

இது எல்லாம் எதனால் வருகிறது…? சந்தர்ப்பம்…!

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் எப்படி மீள்வது…?

சந்தர்ப்பங்களில் இது போன்ற உணர்வுகள் மோதல் ஆனாலும்…
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தீமை புகாது தடைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் யாரால் நமக்குக் கோப உணர்ச்சிகள் தோன்றியதோ அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் கோப உணர்ச்சிகள் வருவதைத் தடைப்படுத்தும்.

நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

ஆயுள் மெம்பர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழி முறை

ஆயுள் மெம்பர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழி முறை

 

பேரருளை நமது குருநாதர் பெற்றார். அந்தப் பேரருள் பெறும் முறையை எனக்குக் (ஞானகுரு) கற்றுக் கொடுத்தார். “துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக எப்பொழுதுமே இருக்க வேண்டும்…” என்று என்னிடம் சொன்னார்.

அதைப் போன்றே உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்த்து அதன் வழியில் நாம் கிளைகளாக இருக்கின்றோம்.

ஆனாலும்… உண்மைகளை எல்லாம் தெரியப்படுத்தி ஆயுள் மெம்பராகச் சேர்ப்பதற்கு வெகு காலம் ஆகிவிட்டது.

காரணம்
1.அதிலே பற்றும் பாசமும் வளரப்படும் பொழுது… உங்களுக்கு உபதேசிப்பதும்… ஏற்றுக் கொள்ளும்படி செய்வதும்…
2.ஏற்றுக் கொள்பவர்களுக்கு அந்தச் சக்திகளைக் கொடுப்பதும்… எல்லாமே செயல்படுத்தியது.

ஆனால் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்குப் பேருக்கு ஆயுள் மெம்பர் என்று சொல்லிக்கொண்டு போவதில் பிரயோஜனம் இல்லை.

1.ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் ஒவ்வொருவருமே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும்
2.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழும் நிலையைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.

குடும்பத்திலோ அல்லது தொழில் செய்யும் இடங்களிலோ நாம் எதிர்பாராத நிலைகளில் சில சிக்கல்கள் வரும். நம்மை வேதனைப்படும்படியாக ஒருவன் செயல்படுவான். உற்றுப் பார்த்து அவன் உணர்வுகளை நுகர்ந்தறிவோம்.

“இப்படிச் செய்கின்றானே…” என்ற நிலை வந்துவிடும். வந்தபின் அதைச் சுத்தப்படுத்தாது விட்டு விட்டால் தீமையின் விளைவுகளுகே நம்மை இட்டுச் சென்றுவிடும்.

அது போன்று ஆகாதபடி ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி… நமது குருநாதர் காட்டிய முறைப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்…” என்று எண்ணி உடனடியாக நாம் தூய்மைப்படுத்தவேண்டும்.

உயிரிலே பட்ட பின் தான் அவர் செய்யும் தவறான உணர்வு அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகின்றது. நம் இரத்தங்கள் முழுவதிலும் அது கவரப்படுகின்றது.

இரத்தங்களிலே கலந்து கொண்ட பின்
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் நல்ல உணர்வை ஈர்க்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது.
2.அந்த வெறுப்பான காரமான உணர்வுகளை நல்ல உணர்வுகள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
3.வெறுப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது கொதிப்பு என்று வருகிறது.
4.அந்தச் சந்தர்ப்பங்களிலே உடலிலே ஒரு விதமான நடுக்கம் வரும்.

ஏனென்றால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குச் சரியான ஆகாரம் இல்லை என்றால் பதட்டமான நிலைகள் வரும். அந்த நடுக்கம் சிறிதளவு உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்ந்து விட்டால் அடுத்து… தவறு செய்யும் உணர்வை எடுத்து அதுவும் வளர ஆரம்பித்து விடும்.
1.நல்ல அணுக்களுடைய செயல்கள் மறைந்து விடும்
2.நல்லதை நுகர விடாதபடி அதனுடைய இனப்பெருக்கமாக ஆகிவிடும்
3.அந்த அணுக்கள் அது இடக்கூடிய மலம் உறுப்புகளில் படும் பொழுது அதனுடைய வளர்ச்சி குன்றிவிடுகிறது
4.அங்கே ஒன்றுக்கொன்று போர் முறையாகி வலியும் வேதனையும் வருகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஒருவர் செய்த தவறான உணர்வை நுகர்ந்த்தால் இந்த நிலை ஆனது. அதே சமயத்தில் இந்த உணர்வுகள் நம் ஆன்மாவிலே முன்னணியில் இருக்கும்.

வீட்டிற்குள் நுழைந்த பின் குழந்தை ஏதாவது ஒரு பாத்திரத்தைக் கீழே போட்டால் போதும். அல்லது சத்தம் போட்டுப் பேசினால் போதும்…!

மனைவியைக் கூப்பிட்டுப் பிள்ளையை வளர்த்திருப்பதைப் பார்…! என்று அங்கு வெறுப்பாகப் பேசும்படி வந்துவிடும்… நம்மை அறியாமலே இப்படி இயக்குகின்றது அல்லவா…!

காரணம் நாம் பிறரின் உணர்வுகளை நுகர்ந்தது இவ்வாறு இயக்குகின்றது. அப்படி இயக்கும் அந்த உணர்வை…
1.உங்களுக்குக் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு
2.ஆயுள் மெம்பராக இருக்கும் நீங்கள் அந்த நிமிடமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்து தூய்மைப்படுத்தவேண்டும்.

சமையல் செய்யும் போது குழம்பை ருசியாக மாற்றுவது போல் மாற்ற வேண்டும்.

தவறு செய்பவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்றுப் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… தெளிந்த மனம் பெற வேண்டும்… ஒன்று சேர்ந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று நல்லதாக இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் போது தீமையின் உணர்வை இங்கே தணிக்கிறது. அருள் உணர்வுகளை உயிர் கருவாக்கி… உடலில் அணுவாக மாற்றி நமக்குகந்ததாக மாற்றுகிறது.

“ஆயுள் மெம்பர்கள் இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்…”

குடும்பத்தில் நிம்மதியே இல்லை என்று சொல்வார்கள்…!

குடும்பத்தில் நிம்மதியே இல்லை என்று சொல்வார்கள்…!

 

நம்முடைய பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன நினைக்கின்றோம்…? இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்… எதிர்காலத்தில் என்ன ஆகப் போகின்றானோ…! என்று வேதனைப்படுவோம்.

வேதனையாக எண்ண… எண்ண… கை கால் குடைச்சல் ஆகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து பையனை உதைக்கும் நிலைக்கு வருகின்றது. கடைசியில் நாசமாகப் போடா…! என்று சொல்கின்றோம்.

பையனால் இப்படி வேதனை ஆகிவிட்டது என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் இறந்தால் எங்கே போகிறோம்…?
1.பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்.
2.பையன் உடலுக்குள் சென்ற பின் வேதனையை அங்கே கூட்டி அவனைக் கெடுத்து அவனையும் வாழ விடாது செய்யும்.

சம்பாதித்த சொத்தைக் காக்க ஞானம் வேண்டுமா இல்லையா…! ஞானம் இல்லை என்றால் சொத்தைக் காக்க முடியுமா…?

ஆதே போன்று வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் வெளியிலே போய்விட்டு வந்தபின் வெறுப்பாக இருப்பார்கள்.

அப்போது வீட்டிர்குள் வந்த பின் பெண்கள் எதாவது கேட்டால் பதில் வெறுப்பாக வரும்.

எப்பொழுது பார்த்தாலும் என் வீட்டுக்காரர் எரிந்து எரிந்து விழுகின்றார். கொஞ்சம் சாந்தமாகத் தான் சொன்னால் என்ன…! என்று கேட்பார்கள்.

நானா கோபமாகப் பேசுகின்றேன்…! நீ தான் என்னைக் கோபமாகப் பேசத் தூண்டுகிறாய்…! என்று மீண்டும் அங்கே சண்டை உருவாகும்.

சண்டை போட்ட பின் என்ன செய்வார்கள்…? சரி… கணவர் கோபமாக இருக்கின்றார்… “கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யலாம்…” என்று செய்யப் போனால்…
1.கணவர் எண்ணிய வேகத்திற்குச் செய்யவில்லை என்றால்
2.ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…! என்று மீண்டும் சண்டை வரும்

இது எல்லாம் உணர்வுகளின் இயக்கம்.

இப்படிச் சண்டையிட்ட உணர்வுகள் கலவை ஆன பின் அடுத்து சம்பாதிக்க வெளியிலே சென்றாலும்… எடுத்துக் கொண்ட உணர்வுகள் அங்கே வியாபாரத்தைத் தடைப்படுத்தும்… குழந்தைகளிடம் வெறுப்பாகப் பேசச் சொல்லும்… நண்பர்களாக இருந்தாலும் பகைமையாக்கிவிடும்…!

ஆக… சம்பாதிக்கக்கூடிய நிலையை நாம் தெளிவாக வைத்திருக்கிறோமா…?

இதெல்லாம் சந்தர்ப்பம்…
1.மோதலின் உராய்வினால் வரக்கூடிய உணர்வுகள்
2.நம்மை இப்படி எல்லாம் மாற்றி அமைக்கின்றது.

நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்..! எல்லா நல்லதும் செய்து இப்படி ஆகிவிட்டது.. “எனக்குக் குடும்பத்தில் நிம்மதியே இல்லை…!” என்று தொழிலை விட்டுவிடுவார்கள். சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லாது போய் வெளியிலேயும் வெறுப்பு… வீட்டிலும் வெறுப்பு…!

இது எதனால் வருகின்றது…?

1.கோபத்தையும் வெறுப்பையும் எனக்குள் விளைவை வைக்கின்றோம்…
2.பொறுமை இல்லாது பொறுப்பை இழந்து இங்கே பேசப்படும் பொழுது தொழிலும் மட்டமாகின்றது
3.வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரியிடம் கெட்ட பேர் வருகின்றது.

குடும்பப் பற்றுடன் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் இப்படி உணர்ச்சி வசப்பட்டுச் செய்தார் என்றால் அந்தக் குடும்பம் முழுவதும் வெறுப்பு வளர்கின்றது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

நாம் வேகமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அடுப்பிலே நெருப்பைக் கூட்டினால் என்ன ஆகும்…?

அடியில் இருப்பது கருகிவிடும் நடுப்பகுதியில் இருப்பது ஒரு மாதிரி வேகும்… குழைந்து போகும். மேலே இருப்பது சுத்தமாகவே வேகாது போய்விடும். இந்த மூன்று நிலையில் வரும்.

ஆகவே கோபம் வருகிறது என்றால்…
1.அது எதனால் வருகின்றது என்று தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்
2.அதை மடக்கித் திருப்பி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லும்
3.இது உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் முழுமையாகத் தெரியாதபடி “நானும் தியானம் தான் செய்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டு
1.எதைச் செய்தாலும் வீட்டிலே தொல்லைகள் வருகின்றது
2.எப்பொழுது பார்த்தாலும் சண்டை வருகின்றது
3.யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று இப்படிச் சொல்பவர்களும் உண்டு.

காரணம் இது எல்லாம் பூர்வ புண்ணியத்தில் வருவது. பூர்வ புண்ணியத்தின் வழியில் வந்தாலும் அதை மாற்றுவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டினால் அதை மாற்றிக் கொள்ள முடியும்.

அறியாது இயக்கும் இது போன்ற தொல்லைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக்கூடிய சக்தியை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆனால் செய்து பார்த்தேன்… முடியவில்லை என்று விட்டு விட்டால் என்ன ஆகும்…! ஆகவே நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

சண்டையிடுவோரை எப்படிச் சமாதானப்படுத்துவது…?

சண்டையிடுவோரை எப்படிச் சமாதானப்படுத்துவது…?

 

கோபப்படுபட்டுச் சண்டையிடுவோரைப் பார்க்க நேர்ந்தது என்றால் உடனே ஈஸ்வரா…! என்று சொல்லி உள்ளே புகாதபடி நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்தி விட்டு
1.சண்டை போட்ட இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் திறன் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி எண்ணினால் அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நமக்குள் நல்லதாக மாற்றிக் கொள்கின்றோம்.

அவர்களும் இதே பிரகாரம் எண்ணினால் சரியாக இருக்கும்.

இருந்தாலும்… சண்டை போடுபவர்களிடம் சென்று புத்தி சொன்னால் கேட்பார்களா…!

இரண்டு பேரும் சண்டை இடுகிறார்கள். ஒருவரிடம் சென்று “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…! என்று சொன்னால் நீ அவனுக்குத் தான் சாதகமாகப் பேசுகின்றாய் என்று இவன் நம்மிடம் சண்டைக்கு வருவான்.

சமாதானப்படுத்த முடியுமா…?

ஆனால் அடுத்தவனை பார்த்துப் நீ பொறுத்து போப்பா…! என்று சொன்னால் “நீ அவனுக்குச் சாதகமாக பேசுகிறாய்…” என்று சொல்வான். ஆக இப்படித்தான் வரும்.
1.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் ஒத்துக் கொள்ளவில்லை என்றால்
2.நம்மைத்தான் அவர்கள் குற்றவாளியாக ஆக்கிவிடுவார்கள்.

அதை நாம் நுகர வேண்டியதில்லை…!

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனே ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

அவர்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்ற உணர்வுகளை நாம் வளர்க்க வேண்டும்.

அவர்கள் சாந்தமடைந்த பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…?

இருவரும் சண்டையிட்டதால் கஷ்டமானது. அதனின் விளைவுகள் இப்படி ஆனது. ஆகவே நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்…! என்று
1.நமக்குள் வளர்த்திருக்கும் நல்ல உணர்வுகளை அவர்களைக் கேட்க வைத்து
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்கும்படி செய்யலாம்.

இப்படித் தான் நாம் அவர்களைத் தெளிவாக்க வேண்டும். அட என்னப்பா… நீ தானே சண்டை போட்டாய்…! என்று சொல்லக்கூடாது.

உங்கள் சந்தர்ப்பம்…
1.உணர்ச்சி வசப்பட்டுச் சண்டை போட்டீர்கள்.
2.அதனால் நீங்கள் இருவரும் அன்பைக் கெடுத்துக் கொண்டீர்கள் என்ற
3.”உணர்வின் ஞானத்துடன் சொன்னால்” நாம் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலை வரும்.

அந்த ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அவர்களை நல்லதாக்க முடியாது.

சண்டையிட்டீர்கள்… இரண்டு பேருடைய வாழ்க்கையும் இந்த மாதிரி ஆனது. இது உங்களுக்குள் நோயாக மாறுகின்றது சிந்திக்கும் தன்மையை இழக்கின்றீர்கள்.

ஆகையினால் நீங்கள் பொறுப்புடன் இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… உங்கள் உடலில் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தெளிந்த மனம் வர வேண்டும் என்று எண்ணுங்கள் என்று இரண்டு பேரிடமும் இந்த மாதிரிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

அப்பொழுது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது… சிறிதளவு கேட்பார்கள். கேட்டால் உள்ளுக்குள் செல்லும். சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

ஆக மொத்தம் இந்த முறைப்படி அருள் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய சண்டை நமக்குள் விளைவதில்லை அருள் உணர்வுடன் நாம் எடுத்துச் சொல்லப்படும் பொழுது அவர்களும் மாறுகின்றார்கள்.

ஆகவே…
1.தியானம் என்பது வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வராதபடி
2.அருள் உணர்வுகளைச் சமைத்து அந்த மெய் ஞானத்தினை நமக்குள் வளர்ப்பது தான்.

எல்லோருக்கும் தெளிந்த மனம் வருகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் விளைகின்றது. இதைச் சொல்லிக் கொண்டே வந்தால் கோடிக்கரையில் இருந்து நாம் தனுஷ்கோடியாக பிறவி இல்லா நிலை அடைகின்றோம். சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றோம்.