மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்

மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்

 

ஒருவன் தவறு செய்கின்றான் என்று பார்க்கின்றோம். ஆனால் தவறை அவன் நமக்குச் செய்யவில்லை. பிறருக்குத் தவறு செய்கின்றான் என்ற உணர்வினை நுகரப்படும் பொழுது அந்தத் தவறின் உணர்ச்சிகள் நமக்குள் வந்து தவறு செய்கின்றான் என்பதை உணரச் செய்தாலும் அந்தத் தவறின் உணர்ச்சிகளை ஊட்டினாலும் அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் அதே உணர்ச்சிகளை ஊட்டித் தவறு செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக நம் அணுக்களை மாற்றி விடுகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். விஞ்ஞான உலகில் தான் இன்று வாழ்கின்றோம் நாம் எப்படி வாழ வேண்டும்…?

1.ஒருவரை நாம் பார்க்கப்படும் பொழுது அவருடைய தீமை நமக்குள் வந்தால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?
2.தவறு என்ற அந்தச் சிறு திரையை நாம் நீக்க வேண்டும்… திரையை நீக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்
3.நம்முடைய ஆன்மாவில் அத்தகைய தீமைகள் பட்டால் மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்.

முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டால் “துடைத்த பின் தான்” முகம் தெரிகின்றது.

அழுக்குப் படும்போது நம்முடைய மனது பிறருடைய மனதை அறிய முடியாதபடி நம்மை அறியாமலே வேதனைப் படும் பொழுது என்ன செய்வது…? என்று அறியாதபடி அந்த வேதனைகள் தூண்டப்பட்டு தீமையைத் துடைப்பதற்கு மாறாகக் கண்ணாடியை உடைக்கும் தன்மை வந்து விடுகின்றது.

கண்ணாடியை உடைத்து விட்டால் என்ன செய்யும்…? முகத்தைப் பார்க்க முடியுமா…? இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நமது வாழ்க்கையில் சதா இது நடந்து கொண்டே இருக்கின்றது.

இதை அவ்வப்பொழுது நாம் மாற்றிப் பழக வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி இத்தகைய இருளை எல்லாம் வென்ற ஒரு நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வினை உடலுக்குள் சேர்த்து நம் ரத்தங்களிலே கலக்கச் செய்து இருளை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழகுதல் வேண்டும்

ரோட்டிலே செல்லுகின்றோம்… உடையில் தூசி படுகின்றது… துணியைத் துவைத்து விடுகின்றோம். ஏதோ ஒரு பொருளைத் தொடுகின்றோம் அழுக்காகி விடுகின்றது… சாப்பிடுவதற்கு முன் நம் கையைக் கழுவிக் கொள்கின்றோம்.

ரோட்டிலே ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் பார்க்கின்றோம். அதை நுகர்ந்த பின் இரத்த்த்தில் அழுக்காகப் படுகின்றது. அந்த வேதனையைத் துடைக்க வேண்டும் அல்லவா.

நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய உணர்வுகள் அந்த நல்ல குணங்களிலே சித்திரையாக அதை மாற்றி விடுகின்றது.. சிறு திரையாக மூடுகின்றது.

அந்த வேதனை உணர்ச்சி தான் முன்னணியில் வருகின்றது. ஆனால்
1.அதை நீக்க வேண்டும் என்று நிலைகள் தான் வரவேண்டும்.
2.அதை நீக்க வேண்டும் என்றால் வேதனைகளை எல்லாம் நீக்கியது துருவ நட்சத்திரம்
3.அதை நுகர்ந்து இரத்தத்தில் கலந்து தீமைகளைப் பிரித்தல் வேண்டும்.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலை

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலை

 

ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில் உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டும் என்று அவர்களை அறியாமலே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது. ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால் செயல்படுத்த முடியவில்லை நல்லுணர்வுகளை.

பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும் இவ்வாத்மாக்களை நல்லுணர்வு படுத்திடப் பல உடல்களை ஏற்றும் பல எண்ணங்களில் பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து செயலாக்குவதில்லை…?

1.சப்தரிஷியாய்… சகலத்துடன் கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை.
2.பிறப்பில் வரும்பொழுதே இவ் ஆண் பெண் என்ற இச்சையில், ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி தடைபடுகிறது.
3.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும்பொழுது முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இவ் இச்சை நிலையினால் தான்.

பிறப்பிற்கு வந்துவிட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும்
1.இப்பிறப்பு என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது.
2.அதனால் தான் எம் மகான்களும் பிறப்பில் வந்து பிறப்பதில்லை.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன். பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார்.

அந்நிலையில் அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார், பைத்திய கோலம் பூண்டு. பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக மக்களின் பேராசையான தங்கம் என்ற உலோகத்தைச் செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல்படுவதையும் உணர்த்திட்டேன்.

1.எம்மை ஒரு கருவியாக்கி எம் சக்தியில் உள்ள பொருள் சக்தியைத்தான் அவ்வாத்மாக்கள் விரும்பினவே அன்றே
2.அழியாப் பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும் அங்கு விரும்பவில்லை.

பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்.
1.எம்மிடம் உள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயன் என்ன…?
3.பயன் என்பதையே அழுகிப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!

அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் பிடித்தேன்.

முன் ஜென்மத்தில், அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான். அஜ்ஜென்ம ஆசையில் இருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான்.
1.அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.
2.மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம்.
3.பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின் வழித்தொடர் அறிய வைத்தேன்.
4.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான்… அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்.

பல ஆசை நிலைகளையும் ஊட்டிவிட்டேன். இவ்வாத்மாவையே முடித்துக் கொள்ளலாம் என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.

பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து… அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கிப் பல சக்திகளை வெளிப்படுத்திப் பல ஆத்மாக்களுக்கு ஞான வழித்தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்நிலையில்தான் எமக்குச் சிஷ்யனாக்கி “அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம்” என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப் பிரிந்தேன்.

அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது. ஈஸ்வரப்பட்டரின் உடலில் இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தி வருகின்றேன்.
1.எம்மைப் போலுள்ளவர்களின் நிலையெல்லாம் இவ்வாத்மாக்கள் எங்கெங்கு உள்ளனவோ
2.அங்கெல்லாம் ஒவ்வொரு ரூபத்தில் மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செய்திகளைச் செய்விக்கின்றோம்.

வேணுகோபாலனைக் கருவியாக்கித்தான் ஞானத்தின் வழித்தொடரைச் செயலாக்கும் ஆத்மாவாய் உணர்ந்தே அவரால் இவ்வுலகிற்குச் செயல்படுத்துகின்றேன்.

பல ஆத்மாக்களை இவ்வுலகில் உள்ள பொழுது அவரை ஏன் செயல்படுத்தினீர்…? என்ற வினாவும் எழலாம்.

அவரது எண்ணமே எம் எண்ணத்தின் தொடர்பு கொண்டதாயும் அவர் செயலாற்றும் வழியும் சத்திய நெறியும்தான் அவ்வாத்மாவை யான் ஏற்று அவ்வாத்மாவின் சக்தியினால் இவ்வுலகத்தை சக்தி நெறியில் ஈர்க்கச் செயல் கொள்கின்றேன்.

அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான். எம் செயலை வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
1.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின் சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாய் ஏற்க முடிந்தது
2.அவ்வாத்மா வேறல்ல யான் வேறல்ல…! என்ற நிலையில் ஐக்கியப்பட்டே “எம் செயல் நிலை இனி இவ்வுலகினில் நடந்திடும்…”

ஈஸ்வரமங்கலம்

ஈஸ்வரமங்கலம்

 

ஈஸ்வரபட்டர் என்ற நாமமுடைய உங்களினால் குருவின் குருவாய் சூட்சும நிலை கொண்டு காணும் எம் நிலையை அறிய…
1.எம் நிலை என்பது “ஈஸ்வரப்பட்டர்” என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில் யாம் செயல் கொண்டதையும்
2.எம் சக்தி நிலையை எந்நிலையில் உணர்த்தி வந்தோம்…? என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசை உண்டு.

இன்று கர்நாடக மாநிலம் ஆகியுள்ள அம் மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாய் ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில்… பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உள்ள கிராமத்தில் அவ்வூரின் நாமம்… அவ் ஊரில் உள்ள கோவிலின் நாமம்… அங்குள்ள குடும்பங்களின் நாமம்… எல்லாமே “ஈஸ்வர நாமத்தை” முதன்மை பெற்ற உள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் பிறந்த ஈஸ்வரப்பட்டன் யான். யான் பிறந்து சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வியறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார். சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன் கோவிலில்…!

ஈஸ்வரர் கோவிலில் “அவ்வாண்டவனே அனைத்தும்…” என்ற நிலையில் எண்ணம் குன்றி… ஜீவிதத்திற்கு வழி அறியாமல் அவ்வாண்டவனை பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில்
1.என் உடலை… ஒரு மகான் ஏற்றுக் கொண்டே
2.என்னையும்… என்னையும் என்பது பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
3.அவ்வுடலில் நான் விட்டுப் பிரிந்த உடலில் அம் மகானினால் அவ்வுடலுக்கு ஈர்க்கப் பெற்று
4.அம்மகானே எம் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி எம்மை… எம்மை என்பது ஈஸ்வரப்பட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறாவது வயதில் பழனிக்கு வந்தோம்…! “வந்தோம்” என்பதின் பொருள் புரிந்ததா…? எம் உடலை ஏற்ற அம்மகானின் செயல்நிலை வெளிப்படும் நிலையிலிருந்து
1.நான் வேறல்ல அம்மகான் வேறல்ல என்ற நிலையில்
2.அம்மகானே தான் எல்லாமில் எல்லாமாய் செயல் கொண்டார்.

மகான் என்பது ஒளியுடனே ஒளியாய் அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான்… இவ் உடலை ஏற்றுச் செயல் கொண்டார்.

இனி யான் என்று ஈஸ்வரப்பட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாதுள்ளது…?
1.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல்
2.அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டுவிட்டது எம் உயிராத்மாவும்.

மகான்களின் நிலை எல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.

இப்பூமியில்… இப்பூமி உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாய் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

அவ்வாத்மாக்களின் நிலை பெற்ற மகான்கள் எல்லாம்
1.அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் “ஒவ்வொரு ரூபத்தில்” இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டேதான் உள்ளனர்
2.மற்ற ஜீவ ஆத்மாக்களின் மூலமாய்த்தான் அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

போகர் எப்படி முருகா என்ற பிரணவ நாமத்தையும் இன்னும் இவ்வுலகினில் அங்கங்கு இப்பக்தி நிலைக்கு தனக்குகந்த நாம சக்தியைச் சுழலவிட்டே எண்ணங்களுக்கு பக்தி நிலையூட்டி… அப்பக்தி நிலையில் ஈர்ப்பு நிலை கொண்ட நல்ல ஆத்மாக்களையெல்லாம் அவ்வாத்மாக்கள் ஜீவன் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை நிலையிலேயே… இவரின் ஒளி வட்டத்தைப் பாய்ச்சி இவரின் ஈர்ப்புக்குள் பல ஆத்மாக்களை ஒளியாக்கிக் கலக்கச் செய்து கொள்கின்றார்.

“ஓம் முருகா…” என்ற அந் நாமத்திலேயே அவரின் ஒளியைப் பாய்ச்சி ஒளியை ஈர்த்து ஒன்றைப் பலவாக்கி பலவற்றை நிறைவாக்கிக் காண்கின்றார்.

ஒவ்வொரு மகானும் இந்நிலையில்தான் அவர்களின் நல் உணர்வை நலமாகப் பரப்பிட ஒவ்வொரு நாமத்தை ஆண்டவனாய் வெளிப்படுத்தி இம் மனித ஆத்மாக்களை நல்லுணர்வாக்கினார்களேயன்றி… இன்று நாஸ்திக வாதத்தில் கேட்கப்படும் இந்து மதத்திற்கு ஏன் இவ்வளவு ஆண்டவன்கள்…? என்ற வினா எழுப்பப்படும் நிலைக்காக அல்ல.

இந்து மதத்தின் உண்மை நிலை இதுதான்.

1.ஒவ்வோர் உயிராத்மாவும் நல் நிலை பெற்று
2,அந் நல்லதையே அனைவருக்கும் உணர்த்திடத் தன்னையே ஒளியாக்கி
3.அவ்வொளியையே அனைத்திலும் காணப் பல ரூபங்களைக் கல்லிலும் மண்ணிலும் வடித்து
4.இம் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை அவ்வொளி வட்டமுடன் நல்லுணர்வு பெற வேண்டும் என்ற நிலைப்படுத்தி வந்த நிலைதான்
5.இந்து மதத்திலுள்ள “இப் பல ஆண்டவங்களின் நிலை…”

“நம் உயிரை…” குருவாக மதித்து ஈசனாக மதித்து நாம் வாழ்தல் வேண்டும்

“நம் உயிரை…” குருவாக மதித்து ஈசனாக மதித்து நாம் வாழ்தல் வேண்டும்

 

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உங்கள் உயிரை குருவாக இருக்கிறது என்று எண்ணி உங்கள் உயிரை “குருவாக மதித்து… ஈசனாக மதித்து…” வாழ்தல் வேண்டும்.

ஆலயங்களில் ஈசனுக்கு எப்படி அடிபணிகின்றோமோ இதைப்போல
1.நம் உயிருக்குத் தீமை என்றோ தீமையான சொல் என்றோ இவையெல்லாம் நாம் நுகர்ந்தால்
2.நம் உயிரிலே பட்டு உயிரான ஈசனுக்குத் தீமையின் உணர்ச்சிகளை ஊட்டப்படும் பொழுது
3.ஈசனுக்கே தவறு செய்கின்றோம் என்ற பொருளாகின்றது.

அதே சமயத்தில் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது. ஆகவே குருவுக்கு இன்னலோ சலிப்போ சங்கடமோ ஏற்படும் நிலைகளை நாம் செய்தல் ஆகாது.

ஆகவே நமது உயிரை ஈசனாகவும் குருவாகவும் மதித்து நடத்தல் வேண்டும்.

சஞ்சலத்தையோ சங்கடத்தையோ கோபத்தையோ குரோதத்தையோ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.உயிரான ஈசனை அசுத்தப்படுத்துகிறோம் என்று பொருள்.
2.உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் உயிர் உருவாக இருப்பதனால் “குருவுக்குத் துரோகம் செய்கிறோம்” என்று பொருள்.

ஏனென்றால் இதே உயிர் தான் பல கோடிச் சரீரங்களைக் கடந்து கடந்து ஒவ்வொரு சரீரத்திலும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து… நுகர்ந்த உணர்வுகளை அதற்குத் தக்க உறுப்புகளை மாற்றி… உடல்களை மாற்றி… குணங்களை மாற்றி… மனிதனாகும் பொழுது இவையெல்லாம் தீமை என்று நினைத்துத் தீமையை அகற்றக் கூடிய வல்லமை பெற்றது “ஆறாவது அறிவு…”

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிடும் உணர்வினை உயிர் தான் உருவாக்கியது.

நஞ்சினை மலமாக மாற்றப்படும் பொழுது நஞ்சு என்ற நிலையோ தீமை என்ற நிலையோ நாம் நுகர்ந்தறிந்தால் அந்தத் தீமைகள் உயிரான ஈசனுக்குப் படும்பொழுது அந்த நஞ்சினையும் அந்த உணர்வுக்கொப்ப அது உருவாக்கிவிடும்.

1.ஆகவே ஈசனாக மதிக்கத் தெரிந்த நாம் தீமை என்ற உணர்வுகளை நுகராது
2.அவ்வப்பொழுது மகரிஷிகள் உணர்வுகளை எடுத்து மனத்தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

துருவ தியானம்

துருவ தியானம்

 

தியானம் இருப்பவர் அனைவரும் காலையில் நான்கிலிருந்து ஆறரைக்குள் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோம் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள ஜீவ அணுக்களில் அதைப் பெறச் செய்யும் போது… ஏற்கனவே நமக்குள் சங்கடமான சலிப்பான வெறுப்பான வேதனையான பகைமையான எத்தனையோ வகையான கொடிய நோய்களை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் “நம் சுவாசத்தின் வழி உள்ளே செல்லாதபடி” அந்தத் தீமையான உணர்வுகளை தடுத்துக் கொள்ள முடிகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இவ்வாறு வலுப்படுத்தும் போது
1.காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் வெளிப்படும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகள் ஒடுங்கி சூரியனின் ஈர்ப்பு வட்டதிற்குள் சென்றுவிடும்.
3.சூரியன் அதைக் கவர்ந்து தன் அருகில் கொண்டு சென்று அந்தத் தீமையான உணர்வுகளை அங்கே கருக்கி விடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு நம் மூதாதையர்களான முன்னோர்களின் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்தால்… உடலில் பெற்ற நஞ்சால் ஏற்பட்ட நோயை உருவாக்கும் நிலைகளை அங்கே கரைக்கச் செய்து விடுகின்றது.

உயிருடன் ஒன்றிய நல்ல உணர்வுகளை துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை அடையச் செய்கின்றது.

அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற உணவினை அடிக்கடி எண்ணினோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்
2.சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும் நம் உடலில் அவை எளிதில் பெறப்பட்டு
3.பரம்பரை நோய் பரம்பரைக் குணம் இது போன்ற தீமைகள் வராது தடுக்க முடிகின்றது.

அருள் மகரிஷிகள் உணர்வினை நமக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை அடையும் முழுமை அடைய இது உதவும்.

ஆகவே ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தை அனுதினமும் செயல்படுத்துங்கள். இந்த வாழ்க்கையில் பாக்கி எந்த நேரம் வேண்டுமென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் நம் உடலில் இரத்தத்தில் கலக்கச் செய்து தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ சங்கடமோ கோபமோ வேதனையோ, பயமோ இது போன்ற உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கி நம் ஆன்மாவை வலுப்படுத்தி
1.பயத்தையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் போக்கி சிந்தித்துச் செயல்படும் மன வலிமை பெற்று
2.பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளலாம்.
3.மன பலத்துடன் வாழலாம் பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்.

இவ்வாறு செய்து வந்தால் தொழிலையும் சீராகப் பார்க்க முடியும் உடலையும் குடும்பத்தையும் பண்புடன் பார்த்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் நிம்மதியும் இந்த உடலுக்குப் பின் என்றும் ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலையும் இன்னொரு உடல் பெறாத நிலையும் அடைய முடியும்.

எல்லாம் அவனே…!

எல்லாம் அவனே…!

 

சுகம் துக்கம் சஞ்சலம் சாந்தம் சகலமும் கலந்த நிலை தான் ஒவ்வொரு மனித ஆத்மாவின் வாழ்க்கையிலும் நடைபெறுகின்றது. நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் நம் உடலுக்குகந்த அமிலத்தன்மை பெற்றுள்ளோம் என்பதல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும் அம்மனித ஆத்மா பெற்ற நிலையில் இருந்தே… அவ் ஆத்மாவுக்குகந்த எண்ண சக்தியின் சுவாசத்திலிருந்துதான் அம்மனிதனின் உடல் உறுப்புகளும் அவ்வுடலின் பிம்பமும் அவ்வுடலின் வண்ணமும் அமைகின்றன.
1.எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாச நிலைக்கொப்பத் தான் உடலின் பிம்ப நிலையும்
2.அதற்குகந்த அமில சக்தியின் செயல் கொண்டு சேமித்த எண்ணத் தொடரின் நிலைகளும் அவ் உடல் பெறுகின்றது.

மேல் நோக்கிய சுவாசம் கொண்ட தாவர இனங்கள் அவற்றுக்குகந்த ஆகாரத்தைச் சுவாசமாய் மேல் நோக்கியே சூரிய வெப்பத்திலிருந்து இக்காற்றினில் கலந்துள்ள தனக்குகந்த ஆகாரத்தை ஈர்க்கும் தருவாயிலேயே ஒரு நிலை கொண்ட தனக்கு வேண்டிய ஆகாரத்தை மேல் நோக்கிச் சுவாசித்து ஆவியாக்கி ஈர்த்து அவ்ஆணிவேரின் நிலைக்குப் படர விட்டு பூமியில் வேரினுள் சேமித்துக் கொள்கின்றது.

மேல் நோக்கிய சுவாசம் பெற்ற தாவரங்களின் நிலைக்கொப்ப சக்தி நிலை ஜீவ ஆத்மாக்களுக்கு இல்லை.

நாம் உண்ணும் உணவில் இருந்து அவ்வுணவே அமிலமாகி, அவ்வமிலமே நம்மை வளர்க்கின்றது. நம் எண்ணமும் இவ் அமிலத்துடன் கலந்து செயல் கொள்கின்றது.

நம் மனித ஆத்மாவை நம் செயலுக்குகந்த நிலை கொள்ளும் பக்குவம் மேற்கொள்ள நமக்கு என்று நம் சக்தியை எவ்வெண்ணத்தின் சக்தியுடைய ஞானம் பெறும் நிலை எய்துகின்றோமோ அத்தொடர் பெற்றிட “நம் எண்ணத்தைச் சமமாக்கினாலன்றி” எந்நற்சக்தியின் வழித்தொடரை அடைவதும் சிரமம் கொள்கின்றது.

நம் ஆத்மாவை நாம் நற் ஜெப சக்தியின் வழி பெற்றிட நம் ஆத்மாவும் அப்பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை எய்திட நாம் பக்குவ நிலை கொள்ளும் தருவாயில் நம் நிலையைக் கண்டு ஏளனம் செய்பவரின் எண்ணத்தையும் புகழ்பவரின் எண்ணத்தையும் நம் எண்ணத்துடன் மோதி விடலாகாது.

ஞானத்தின் வழித்தொடர் பெற்ற பின்…
1.சலிப்பு நிலையையும் சங்கட நிலையையும் பேராசை நிலையையும் நம்மை நாமே ஆட்படுத்திக் கொண்டிடலாகாது.
2.”பலருடன் கலந்து வாழ்ந்திட முடியவில்லையே” என்று ஏக்கப் பெருமூச்சம் நாம் சென்றிடும் சத்தியத்தின் வழிக்கு உகந்ததல்ல.

ஞானம் பெற்று நற் சக்தியை ஈர்த்தே சித்து நிலை பெறுவதற்கு
1.இவ்வெண்ணச் சிதறலை மாற்றியே சமமெய்திடும் முறை பெற்றே
2.நம் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே…! என்னும் உணர்வு பெற வேண்டும்.

இவ் வாழ்ந்திடும் குறுகிய காலத்திற்காக நம் ஆத்மாவுக்கு உகந்த சக்தியைப் பெறாமல் சிதறவிட்டு வாழ்ந்திடாமல் நம் ஆத்மாவிற்குத் தான் நல் ஞானத் தொடர் பெற்று சத்தியத்துடன் கலக்கப் போகின்றோமே என்ற “நான்” என்ற நினைப்பும் சத்திய நிலைக்கு உகந்ததல்ல.

அனைத்து ஆத்மாவுடன் கலந்தே மற்ற ஆத்மாவிடமிருந்து ஒதுங்கிய நிலை பெறாமல் நம் ஆத்மாவிற்கு நற்சக்தியை சேமித்திடல் வேண்டுமப்பா.
1.உண்ணும் உணவும் அவனே
2.உணரும் உணர்வும் அவனே
3.எண்ணக் கலவையும் அவனே.
4.எடுக்கும் ஞானமும் அவனே
5.ஞானத்தின் சத்தியமும் அவனே
6.இவ்வுடலும் நம் உணர்வும் இவ்வுலகமும் மற்ற எதுவுமே நமக்குச் சொந்தமல்ல என்பதனை உணர்ந்து
7.அனைத்திலும் அனைத்தாக உள்ள அவ்வனைத்தாண்டவனுடன் ஒன்றிடும் பக்குவத்தை நாம் பெற்று
8.நம் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் நல்லெண்ணம் பெறும் சக்தி ஆக்கிட நம் சக்தியை வளர விடல் வேண்டும்.

நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம்… “நம் வசப்படுத்தி” நல் அணுக்களாக்கிட வேண்டும்

நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம்… “நம் வசப்படுத்தி” நல் அணுக்களாக்கிட வேண்டும்

 

மண்டலமாய்ச் சுழன்றாலும் மண்டலத்திற்கும் எண்ணமுண்டு சப்தரிஷிக்கும் எண்ணமுண்டு.

பரமாத்மாவின் நிலையுடன் ஐக்கியப்படும் நிலையென்ன…? சப்தரிஷியாய் சகலத்திலும் ஒளிந்து ஒளியாய்ச் செயல் கொண்டு சூரியனாய் ஒளி பெற்றாலும் அச்சூரியனக்கும் “தான்” என்ற நிலை வந்துவிட்டால் கோடி கோடி கோடி ஆண்டாய் பெற்ற சக்தியும் இழக்க நேரிடும்.

1.மனித ஆத்மாவாய் இருந்துதான் ஒளியுடன் கலந்திட முடியும்.
2.அவ்வொளியின் ஈர்ப்பினால் மண்டலமாய்ச் சுழன்று செயல் கொண்டிட முடியும்.
3.செயலிலேயே வழித்தொடர் பெற்றுச் சூரியனாயும் சூரியனுக்கு மேல் சக்தி பெற்ற பல சூரியனாயும் சுழன்றிட முடியும்.

அனைத்தையுமே செயல்படுத்திடும் அப்பரம்பொருளிடம் ஐக்கியப்படும் சக்தியைப் பெற்றிடும் சக்தியை அப்பரம்பொருளான அவ் ஆதிசக்திக்குதான் தெரிந்திடும் அனைத்துமே.

அவரவர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டு “பல கோடி ஆண்டுகள்” வளர்ச்சியுறல் வேண்டும். இம்மனித ஆத்ம உடலிலேயே வளர்ச்சி பெற்றால் தான் நம் ஆத்மா ஒளியுடன் கலக்க முடியும்.

இச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மிருக ஜெந்துவாகி மிருகத்திலிருந்து கொசுவாய்… புழுவாய் பிறிதொரு உலக மாற்றத்திலிருந்து இவ்வுயிரணுக்கள் உயிராத்மா நிலை பெற எண்ணிலடங்கா ஆண்டுகளாகி அச்சந்தர்ப்பத்தில் நம் ஆத்மா எய்தும் நிலையைக் கொண்டுதான், நம் நிலை உயர்ந்திட முடியும்.

இதனை உணர்ந்தே…
1.பரம்பொருள் என்பது யாது…?
2.அப்பரம்பொருளுக்கு என்ன ஏற்றத்தாழ்வு…?
3.ஆண்டவன் அளித்த கஷ்டம் என்று வாழ்க்கையை எண்ணாமல்
4.இன்று வாழும் நம் ஆத்மாவை நல்ஞானம் பெறும் நிலையை எய்திட நம் ஆத்ம நிலை எப்படிச் செயல் கொண்டிடல் வேண்டும்…?
5.எப்படி எப்படி நம் வாழ்க்கை முறை அமைய வேண்டும்…? என்பதனை உணர்ந்து
6.நம் சுவாசம் சத்தியத்துடன் கலக்கும் நிலையினை முதல் பாடமாய்ப் பெறும் வழியினை உணர்த்திடுவேன்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அவ்வாத்மாவின் உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. எவ்வாத்மாவும் தனித்து வாழவில்லை என்பதனை முதல் பாடமாய் உணரல் வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் உள்ள உயிரணுக்கள் அவ்வாத்மாவின் எண்ணத்தைப் பல திசைகளில் மாற்றிச் சென்று வாழச் செயல்படுத்துகின்றது.

அவ்வுயிர் அணுக்களின் ஆசைக்கும் அதனுடைய தூண்டுதலின் சோர்வுக்கும் நம்மை அறியாமலே, நமக்குத் தெரியாமலே அடிமைப்பட்டு சிக்குண்டுள்ளோம்.

நம் ஆத்மா ஞானம் பெற்று ஒளி பெறும் நிலையினால் நம் உடலில் குடி புகுந்துள்ள பிற உயிரணுக்களுக்கும் நம்மால் விமோசனம் கிட்டும்,

1.நம் உடலில் உள்ள அமிலத்தை ஞானத்தின் அமிலம் ஆக்கி
2.பரமாத்மாவின் சொத்துதான் நாம் என்பதனை உணர்த்து
3.தீய எண்ணப் பேய்க்கு அடிமை கொண்டிடாமல் நம் ஆத்மா செயல்படுவதினால்
4.நம்முள் உள்ள பல கோடி உயிரணுக்களும் இவ்வெண்ணத் தொடரின் சக்தியினால் ஒளிர்ந்திடும்.

ஒவ்வோர் உடலில் இருந்தும் ஒவ்வோர் ஆத்மா பிரியும் பொழுதும் அவ்வுடலுடன் கூடிய உயிரணுக்களுக்கு அவ்வுடலில் எடுத்த சுவாசத்தின் வழித்தொடர் கொண்டே இக்காற்றினில் படர்ந்து சுற்றுகின்றது.

இப்பொழுது நாம் வாழும் இவ்வாழ்க்கை உடலில் உள்ள உயிரணுக்கள் இவ்வுடல் காலத்தில் மட்டும் நம் உடலில் ஏறவில்லை.

ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் எண்ணமுண்டு சுவாசமுண்டு அமில சக்தியுமுண்டு மனித ஆத்மாவின் உடலில் உள்ள இவ்வுயிரணுக்களினால் இம்மனிதனின் எண்ணத்தை அதற்குகந்த ஆசையின் நிலைக்கொப்பத் திசை திருப்பிட முடிந்திடும்.
1.நம் ஆத்மா செயல் கொள்ள முதலில்
2.நம் உடலில் உள்ள உயிரணுக்களைத் தான் “நம் வசப்படுத்திடல் வேண்டும்…”
3.நல் அணுக்களாய்ச் செயல் கொள்ளப் பக்குவம் பெறல் வேண்டும்.

அகஸ்தியன் உணர்வை உனக்குள் நீ அணுவாக மாற்று…! என்று கூறினார் குருநாதர்

அகஸ்தியன் உணர்வை உனக்குள் நீ அணுவாக மாற்று…! என்று கூறினார் குருநாதர்

 

நம்மை மனிதனாக உருவாக்கியது நம்முடைய தாய் தந்தையர் தான். அவர்கள் தான் கடவுள். நம்மை தெய்வமாகக் காத்தருளியது அம்மா அப்பா தான் அவர்களே நமக்கு முதல் தெய்வம்…!

குருவாக இருந்து நமக்கு நல் வழி காட்டிய முதல் குரு தாய் தந்தையர் தான். ஆகவே அம்மா அப்பா அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.அகஸ்தியன் தாய் கருவிலே நஞ்சினை வென்று இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.
2.அவன் உடலில் விளைந்த இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்திகள் இங்கே உண்டு.

அதைப் பெறச் செய்யத்தான் என் குரு எனக்குள் பதிவாக்கினார்.

காடு மேடெல்லாம் சென்றேன்.
1.அகஸ்தியன் சென்ற இடத்திற்கெல்லாம் அலைந்து அந்த உணர்வினை நுகரச் செய்து அவன் அறிந்த அறிவை எனக்குள்ளும் அறியச் செய்தார்.
2.அகஸ்தியன் உணர்வை நீ அணுவாக மாற்று…! என்று கூறினார்.

காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… அந்த உணர்வுகளை அறிந்தேன் அதை வளர்த்தேன்… ஆனால் இப்பொழுது நீங்கள் இங்கிருந்து அதைப் பெறும்படி உங்களுக்குள் ஞான வித்தாக ஊன்றுகின்றேன்.

அகஸ்தியன் அருள் ஒளியைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேரும் இருளை அகற்றி மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்து வாழச் செய்யும்… “அப்படி வாழ்ந்திடும் அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்” என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினை உயிருடன் ஒன்றி… “அகஸ்தியன் பெற்று இருளை அகற்றிய அந்த அருள் ஞானைம் என்னிலே விளைய வேண்டும்” என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவனைத்தையும் அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் செலுத்தி
2.அகஸ்தியன் பெற்ற அரும்பெரும் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானங்கள்.

அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது நஞ்சினை வென்று இருளை அகற்றி மெய் உணர்வை அறிந்து… தனது வாழ்க்கையில் மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற்றான்.

அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே பரவி உள்ளது… அதை நாம் பெற வேண்டும். அகஸ்தியன் பெற்ற அவனில் விளைந்த அந்த அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.அவனின் வளர்ச்சியில் துருவனாகி அனைத்தையும் அறிந்து அணுவின் இயக்கத்தை உணர்ந்து
2.துருவத்தை உற்று நோக்கி துருவத்திலிருந்து நம் பூமிக்கு வரும் அரும் பெரும் சக்தியை அவன் நுகர்ந்து
3.அதன் உணர்வின் தன்மை தனக்குள் உணர்த்தித் தனக்குள் வளர்த்துக் கொண்டதை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஒவ்வொரு உயிரணுவும் “அது எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே”

ஒவ்வொரு உயிரணுவும் “அது எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே”

 

எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.ஏன்…! எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்றுச் செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத்தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே செயலும் அவனே…! எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.“அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…?” என்ற எண்ணமும் நமக்குள்ளே.

அனைத்துமே பரம்பொருள்தான். அப்பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…?

1.அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.
2.வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.

எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப்பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?

பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கிறான். அப்பரம்பொருளின் சக்தியில் சக்தி பெற்று வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள் அப்பரம்பொருளிடமே ஐக்கியப்பட்டு அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.

உயிரணுவாய் உதித்துப் பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்து உயிர் ஜீவிதம் பெற்று… இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலை பெற்று…
1.ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் “ஏழு சந்தர்ப்பங்களில்தான்”
2.அவ்ஆத்மாவினால் நற் சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித் தொடரை அடைய முடியும்.

உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித் தொடர் கொள்ளும் அமில சக்தியை இவ் ஏழு தொடரில் ஞானத்தொடர் வழியை அறிந்து… அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால்… அந்நிலையில் சித்துநிலை பெற்று…
1.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு…
2.ஒவ்வோர் உயிர் ஆத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
3.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
4.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.

இவ்வுலகில் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களும் இப்பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம்பொருளினால் படர விட்டவைதான்.

கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம் தான். ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்.

அப்பரம்பொருளான அவ் ஆதிசக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் “அவையவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டுதான்” அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும் செயல்முறையும் வந்திடும்.

விருந்தில் போஜனம் படைக்கிறார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப் படுத்துகின்றதோ அவ்வுணவைத் தான் நம் எண்ணம் விரும்பிகிறது.

அதைப் போல்
1.நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டு தான்
2.ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம்பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.

மண்டலமாயும் சுழல்வது உயிராத்மா தான்; புழுவாய் நெளிதுவும் இவ்வுயிராத்மா தான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பது தான் அனைத்துமே.

ஒளிச் சரீரம் பெறும் மார்க்கம்

ஒளிச் சரீரம் பெறும் மார்க்கம்

 

மெய் ஞானிகள் சொன்னதை இன்று இழந்தே தான் நாம் வாழுகின்றோம். ஆனால் அகஸ்தியன் உண்மையை வளர்த்து… மனித உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைந்திருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.
1.அவன் வளர்த்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.
2.அதை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவன் ஈர்ப்புக்குள் சென்று பிறவியில்லா நிலை அடைந்திட முடியும்.

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த உணர்வைப் பெறக்கூடிய தகுதிக்கு அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆனான்.

அவன் கண்டுணர்ந்த நிலைகள்… எல்லா நட்சத்திரங்களின் இயல்புகளைத் தனக்குள் எடுத்து ஒளியாக மாற்றுகின்றான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று சொல்லும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்
1.இயற்கையின் உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவன்.
2.அவன் தெரிந்து அவனுக்குள் உணர்ந்து உணர்வின் அலைகளைப் பெருக்கியதை நாமும் நுகரலாம்.

ஒரு செடியில் வளர்ந்த உணர்வின் தன்மை அதனின் கசப்பை நுகர்ந்தால் ஓய் என்று வாந்தி வருகின்றது. ஒரு கோபக்காரன் உணர்வினை நுகர்ந்தால் நமக்கும் அந்த உணர்ச்சியின் வீரியங்கள் வருகின்றது.

ஒரு வேதனைப்பட்ட மனித உடலில் இருந்து வெளி வரும் உணர்வைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அதை நாம் நுகரப்படும் பொழுது நமக்கும் வேதனையான உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

இதைப் போல் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அகஸ்தியன்…
1.தனக்குள் வளர்த்து கொண்ட உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது
2.அதை நாம் நுகர்ந்தால் அவன் எப்படி விஷத்தை வென்றானோ அதைப்போல
3.நமக்குள் விஷத்தின் தன்மையை மாற்றிப் பேரொளி ஆக முடியும்.
4.உயிர் எப்படி ஒளியானதோ ஒரு நட்சத்திரத்தின் இயக்கமாக இயக்கியதோ அதைப் போல நாம் ஒளியாக முடியும்.

நம் உடலிலே பல விதமான நட்சத்திரங்களின் தன்மை கொண்டுதான் அணுக்கள் ஆனது.

ஆனால் அதை ஒன்று சேர்த்து இணைத்து
1.27 நட்சத்திரங்களைத் தனக்குள் உணர்வாக்கி
2.27 நட்சத்திரத்தினையும் துருவ நட்சத்திரம் எடுத்து இணைத்து ஒளியாக மாற்றிய அந்த உணர்வும்
2.பிரபஞ்சத்தில் பரவும் மற்ற உணர்வையும் இணைத்து நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

ஆகவே… உயிரை ஒளியாக மாற்ற முடியும் என்று மாற்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.

அதனை நீங்கள் பெறும்படி தான் இங்கே உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.