குருநாதர் காட்டிய அருள் வழியில் வாழ வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் வாழ வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். வெறும் ஞான வித்து அல்ல… அருள் ஞான வித்து…!

இருளை நீக்கும் அருள் ஞான வித்தை… இருளை நீக்கிட்ட அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். உங்கள் மனதில் தான் இனி அதை வளர்த்துக் கொள்ளும் நிலை இருக்கின்றது,

1.இந்த உலகில் நாம் வாழக்கூடிய காலம் மிகக் குறுகியது…
2.எந்த நிமிடத்தில் இனி எது வேண்டுமென்றாலும் நிகழலாம்
3.உலகம் எப்படி இருக்கும்…! என்றும் சொல்ல முடியாது
4.மனிதன் சிந்தனையுடன் இருப்பானா என்பது கேள்விக்குறிதான்…!
5.அதற்குள் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் வழி வாழ வேண்டும் என்று உங்கள் மனதிலே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
6.எந்த நிமிடம் எதுவானாலும் உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழ்வோம்.
7.”பிறவி இல்லா நிலை அடைவோம்…!” என்ற உணர்வுகளுக்கு நீங்கள் திரும்பி ஆக வேண்டும்.
8.ஆகவே உடல் பற்று வைக்காதீர்கள்.
9.யாம் சொல்லும் உணர்வின் தன்மையை உயிரிலே வளர்க்கப்படும் போது உடலைக் காக்கும் உணர்வுகள் தன்னிச்சையாக வரும்
10.அது இல்லை என்றால் உடலை காக்க முடியாது…!
11.காப்பதாக எண்ணுவோம்… ஆனால் வேதனை கொண்டு உடலை அழித்துக் கொண்டுதான் இருப்போம்
12.தன்னைப் பாதுகாக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்

ஆகையினால் இதைப்போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு மெய் ஞானத்தை வளர்க்கும் அருள் சக்தியைப் பெறுங்கள். அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்ளுங்கள்.

எங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும். எங்கள் குழந்தைகள் நல்லவர்களாக ஆக வேண்டும். என் கணவர் உயர்ந்தவராக வரவேண்டும்… என் மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும்… நாங்கள் ஒருவருக்கொருவர் மதித்திடும் பண்புகள் வளர வேண்டும்… அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அறியாது சேர்ந்த பகைமைகளை மாற்றுங்கள்… அருளைப் பெருக்குங்கள்.

நீங்கள் எண்ணியவுடனே அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்வதற்குத் தான் இந்நேரம் வரை இதை ஞான வித்தாகப் பதிவாக்குகின்றோம்.

காரணம்…
1.படிக்காதபடி ஒன்றும் செய்ய முடியாது…
2.ஆசிரியர் சொல்லிக் கொடுத்தால் தானே எடுக்க முடியும்
3.ஆசிரியர் சொல்லத் தவறி விட்டால் தவறாகத்தான் போய்விடும்.

நம் குருநாதர் நமக்குத் தெளிவாக காட்டிய வழிப்படித் தான் உங்களுக்கு இதை எல்லாம் எடுத்துக் காட்டுகின்றேன் (ஞானகுரு). உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலை ஆலயமாக மதிக்கின்றேன். மனித உடலை உருவாக்கிய அரும் பெரும் சக்தி கொண்ட ஞான சக்தியான தெய்வங்களை மதிக்கின்றேன். உங்களுக்குள் அமைதியும் சாந்தமும் பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.

என்றுமே இந்த உணர்வுகளை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால் நீங்கள் எண்ணியது இறையாகி… இறையின் உணர்வு செயலாகும் போது… அதுவே உங்களில் தெய்வமாகிறது.

ஆகவே…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் இறையாகி அதனின் உணர்வு தெய்வமாகி
2.இருளை நீக்கிடும் சக்தியாக உணர்வின் ஒளியாகி பிறவி இல்லா நிலை அடைவீர்கள்…!

இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்து… பூமியையே நிலை தடுமாற வைத்துவிட்டார்கள்

இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்து… பூமியையே நிலை தடுமாற வைத்துவிட்டார்கள்

 

உலகிலுள்ள உண்மை இயற்கைத் தன்மைகளை மெய் ஞானம் கொண்டு விளக்குகிறோம்…! இதனை விஞ்ஞானத்தவர்களும் எடுத்து ஆராயலாம்.

நம் பூமியில் மட்டுமல்லாமல் அனைத்துக் கோளங்களுக்கும் பொதுவாக உள்ள பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில குணங்கள்
1.அதனதன் நிலைக்கொப்ப அதனதன் இனத்துடன் சென்று எப்படி ஐக்கியப்படுகிறது…?
2.ஒவ்வொரு மண்டலமும் இயற்கைக் குணத்தில் எப்படியெல்லாம் வளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டது…?

மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்பட… ஏற்பட… ஒவ்வொரு பூமியின் வளர்ச்சித் தன்மையும் கூடுகிறது…! என்று அர்த்தம்.

1.இரண்டு அமில குணங்கள் மோதுண்டு வான மண்டலத்தில் சுழலும் தன்மையில்
2.அதன் மேல் மழை நீர் பட்டு இடி ஏற்பட்டு அந்த இடியின் ஈர்ப்பு பூமியில் பதிந்து
3.அதன் நிலையில் வளரும் காளான்களின் வளர்ச்சியிலிருந்து புதிய புதிய இன இயற்கை வளங்கள் வளருகின்றன.

எந்நிலை கொண்டு…?

பூமியில் காளான் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு நாளில் அதன் நிலை மாற்றம் கொள்கிறது. காளானிலிருந்து வெளிப்படும் அமிலத்தினால் அந்த நிலை காற்றாக பூமியில் படரும் பொழுது அதன் அமிலம் காற்றுடன் கலக்கப்பட்டு எந்தெந்த இடங்களில் அக்காற்றினில் அவ்வமிலம் படர்கின்றதோ எங்கெல்லாம் “புதிய இன வளர்ச்சி” ஏற்படும்.

மற்றும் இக்காளான் வகைகளிலேயே கணக்கிலடங்கா குண வகைகள் வளர்கின்றன மழைக் காலங்களில். பூமியில் மட்டுமல்ல. கடல்களிலும் நீர் நிலைகளிலும் பல வகைக் காளான்கள் மழைக் காலங்களில் ஏற்படுகின்றன.

மரங்களில் வளரும் காளான் ஒன்று இரண்டு நாளில் மடிந்து அந்த மரத்தின் மீது அக்காளான் செடி அழுகிய நிலையில் படர்ந்து விடுகிறது.
1.அந்த மரத்திலிருந்து வெளிப்படும் சுவாசக் காற்று அவ்வழுகிய காளான் மேல் பட்டு
2.அக்காளானிலிருந்து ஆவியான அமிலம் மற்றொன்றின் மேல் படும் பொழுது
3.வேறு வகையான இன வளர்ச்சி தோன்றக்கூடிய உண்மை இதன் தொடரில் தான் வருகிறது.
4.இப்படித்தான் இயற்கையின் வளர்ச்சியே உள்ளது.

நம் பூமியில் சூரியன் மேலிருந்து நம் பூமிக்கு வரும் ஒளி அலை ஒன்று போல் உள்ளதா..? என்று முந்தைய கால விஞ்ஞானத்திற்கும் இன்றைய விஞ்ஞானத்திற்கும் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படுகின்றன.

உலகச் சுழற்சியில் ஏற்படும் இந்த ஒளி அலைகள் ஒன்று போல் சுழன்றாலும் பூமி எடுக்கும் விதத்தில் அதனதன் நிலைக்குகந்த ஒளி அலையைத்தான் இந்தப் பூமியினால் எடுக்க முடிகின்றது.

நம் பூமியில் சில இடங்களில் எரிமலை தோன்றுகிறது. சில இடங்களில் பனிமலைகள் உள்ளன. அந்த இடங்களில் உள்ள ஒளி அலைகளை பூமி எப்படி ஈர்க்கிறது…?

எரிமலையாகக் கக்கும் இந்த உஷ்ண பூமியில் அதற்குகந்த ஆகாரத்தை அது அதிகமாகத்தான் எடுத்துக் கொள்கிறது. இந்த ஒளி அலையின் மூலமாகத்தான் நம் பூமியின் ஜீவனே வாழ்கிறது. நம் பூமிக்கும் ஜீவனுண்டு… உணர்வுண்டு… உருவ சதைகளும் உண்டு.

நம் பூமியின் உள் நிலையை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. பூமியின் உள் நிலையில் உள்ள சக்திகளிலும் செயற்கையின் ரூபம் காண நாம் விரயப்படுத்தி வாழ்கிறோம்.

1.வரும் இடியை இடி தாங்கியினால் தடுக்கின்றோம்.
2.இடி இல்லாவிட்டால் இன வளர்ச்சிக்குகந்த இயற்கைத் தன்மையை நாம் பெற முடியாது.
3.இயற்கையின் தாவர வளர்ச்சி அதிகம் கொண்டால் தான் நாம் இந்தப் பூமியில் வாழ முடியும்.

மனித ஆத்மாக்கள் குறுகிய காலத்திலே செயற்கைக்கு மிகவும் அடிமைப்பட்டு
1.இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்து
2.இந்தப் பூமியையே நிலை தடுமாற வைக்கின்றார்கள்.

பூமியிலிருந்து எடுக்கப்படும் கனிவளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண… காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் “பூமியிலிருந்து” அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.

இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகக் கொண்டு போய் அதில் உள்ள பல சக்திகளையும் விரயப்படுத்துகின்றோம்.

ஆங்காங்கு உள்ள கனிவளங்களை எடுத்தாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருந்த நிலையையும் இன்று செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்தி விட்டது.

அதாவது… பல ஆயிரம் ஆண்டு காலங்களாகப் பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்துள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.

ஆனால் இந்தக் குறுகிய நூற்றாண்டுகளில்…
1.பெட்ரோலிய இனத் திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காகக் காந்த அலையின் அணு சக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததனால்
3.பூமியில் வளர வேண்டிய கனி வளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன்
4.அவைகளின் வளர்ச்சியும் சுத்தமாகக் குன்றிவிட்டது.

பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல் ஆகிவிட்டது…!

வாத்து தானாகத் தினசரி இட்ட முட்டைகளைப் பேராசை கொண்டு ஒரு நாள் அந்த வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல் இந்தப் பூமியின் நிலையை மனிதர்கள் சிதறடித்துவிட்டனர்.

1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும்… அறிவாற்றலிலும்… ஞானத்திலும் வேகமில்லை…!
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டும் என்ற
3.பேராசையின் வெறி… வேகம்… மனிதர்களிடம் மிகவும் துரிதப்பட்டதனால்
4.இயற்கையின் பொக்கிஷத்தை எல்லாமே அழித்து வாழ்கின்றோம்.

இதனின் விளைவைக் கூடிய சீக்கிரம் நீங்கள் உணர்வீர்கள்.

எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

 

உடல் முழுவதற்கும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் இங்கே பயிற்சி கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நம் கண்ணின் கரு விழிக்குள் இருக்கும் கருமணி தான் எல்லாவற்றையும் படமாக்கிக் கொடுக்கின்றது…
2.அதனுடன் தான் எல்லா வயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றது…
3.வெளியிலிருந்து எடுத்துக் கொடுப்பது அது தான்.

வேதனை வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்தக் கருவிழி மாசுபட்டு விடுகின்றது. விஷத்தின் தன்மை முன்னணியில் இருந்தால் அது அதிகரித்து கருமணிகள் விஷத்தன்மை அடைந்து விடுகிறது.

நம்மை அறியாமலே விஷத்தின் தன்மை அடைந்து உடலுக்குள் பரவப்பட்டு உடலில் கடும் நோயையும் உருவாக்கி விடுகின்றது.

கண்ணுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலங்களிலும் விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்ட பின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமாகி கண் பார்வை மங்கி விடுகின்றது… அல்லது இழந்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களில் “தான் பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு கொண்டு தான் கண்கள் உருவானது. ஒன்றை ஒன்று பார்த்து வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது.

பரிணாம வளர்ச்சி அடைந்த அந்த உணர்வுகளைப் பெற்றால்… நம் கண்கள் மாசுபடும் தன்மைகளை மாற்றலாம். அதை வைத்து மற்ற உடலில் உள்ள உறுப்புகளுக்கும் உயர்ந்த சக்திகளை பாய்ச்ச முடியும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால்…
1.அந்த எண்ணம் முதலில் கண்ணுக்குத் தான் வரும்… கருவிழி அதைத்தான் கவரும்.
2.ஆகவே முதலில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் அதிகமாகப் படரச் செய்ய வேண்டும்.

அதைத்தான் தியானப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.

நம் உடலில் இருக்கக்கூடிய நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் விஷத்தன்மை பரவி விட்டால் நரம்புகளில் வேதனை வருகின்றது… வாத நோய்கள் வரக் காரணமாகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நரம்பு மண்டலத்தில் பாய்ச்சி அதைச் சீராக்க முடியும். வாத நோய் வராது தடுக்க முடியும்.

அடிக்கடி வேதனைகளை எடுக்க எடுக்க எலும்பை உருவாக்கிய அணுக்கள் பலவீனமாகின்றது. சில நேரங்களில் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள்
1.வெறுமனே கையை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.
2.நடந்து போனேன்… காலை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.

இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள்… உணர்வுகள்… அந்த எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குண்டான உணவுகளைக் குறைக்கப்படும் போது அந்த எலும்புகளின் மலம் பலவீனமாகி எலும்பின் பலம் குறைந்து விடுகின்றது.

எலும்பில் பலம் குறைந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

நிலத்திற்குள் எத்தனையோ வித்துக்கள் மறைந்துள்ளது. நிலத்தின் அடியில் ஆழத்தில் நீர் இருக்கிறது. இருந்தாலும் அந்த வித்துகள் கீழ் இருக்கும் நீரை எடுப்பதில்லை. நிலங்களில் பரவி இருக்கும் நீரைத் தான் எடுக்கிறது.

ஆனால் பாறைகளோ கற்களோ இருந்தாலும் மரங்களுக்குத் தன் விழுதுகளைப் பாய்ச்சி நீரை எடுத்துக் கொள்ளும் சக்தி இருக்கின்றது… மற்ற செடி கொடிகள் சிறிது காலமே வாழும்… அதற்கு அந்தச் சக்தி இல்லை.

அதைப் போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினை என்று வித்துக்களின் இயக்கங்களும். ஆகவே…
1.என்றுமே… எங்கிருந்தும்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துக் கொள்ளக்கூடிய சக்திகளை
2.அந்த ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் நாம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும்.

நம் பிரபஞ்சத்தின் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதனால் அதன் உணர்வைக் கவர்ந்து உங்களுக்குள் எளிதில் வளர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்தால் கருவிழி இழுத்து இங்கே நெஞ்சின் எலும்புக்குள் தான் பதிவாக்குகின்றது. இங்கே பதிவானால்தான் அந்த நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறியவும் முடிகின்றது

நோயாளியைக் கூர்ந்து கவனித்தால் பதிவாக்குகின்றது.
1.கருவிழி ருக்மணி (கருமணிகள்) உடலுடன் இணைத்துக் கொள்ளும்.. அதாவது ரெக்கார்ட் செய்வதுதான் அதனின் வேலை.
2.பதிவான பிற்பாடு கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிலிருந்து வரும் அதனின் இனமான உணர்வினைக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருப்பதை மூக்கின் வழியாக உயிரின் காந்தப்புலன் கவர்ந்து உயிரான்மாவாக மாற்றுகின்றது.
4.இதிலே எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் செயல்படுத்தும்.

எத்தனையோ வருடங்கள் நாம் சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.

ஒரு நிலம் கேட்டு விட்டால் அதைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்து அதன் பின் அதிலே நல்ல பயிரினங்களை வளர்க்கின்றோம். பண்படுத்தவில்லை என்றால் விஷம் கொண்ட பயிரினங்கள் தான் அதிகமாக விளையும்.

இதைப் போன்று நம் உடலான நிலைகளைப் பண்படுத்த…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி
2.அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பதிவாக்கும் திறனுள்ள ஊனாக மாற்றி அமைப்போம்.

மனித உடலுக்குள் உஷ்ணமாக இருப்பது ஏன்…? பூமிக்கு அடியில் உஷ்ணமாக இருப்பது ஏன்…?

மனித உடலுக்குள் உஷ்ணமாக இருப்பது ஏன்…? பூமிக்கு அடியில் உஷ்ணமாக இருப்பது ஏன்…?

 

உடல் பொறுக்கும் சூட்டைக் காட்டிலும் நம் உடலுக்குள் உள்ள உள் உறுப்புகள் அதிகச் சூட்டை ஏற்கும் தன்மை கொண்டுள்ளன.

உடம்பின் மேல் நாம் சூடாக அருந்தும் பானத்தின் சூடு பட்டவுடன் உடம்பின் மேல் அங்கங்கள் அந்நிலைச் சூட்டைப் பொறுப்பதில்லை. ஆனால் உள் உறுப்புகள் அந்தச் சூட்டை ஏற்கின்றன.

1.ஒரே பிம்ப உடல் தான்…
2.ஆனால் ஒவ்வொரு அவயங்களின் நிலைக்கொப்ப உஷ்ணத் தன்மைகள் உள்ளன.
3.இவ் உடலிலிருந்து இச் சுவாசம் ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் நிலைக்கொப்ப நம் உடல் உறுப்பு உள்ளது.

தாவரங்களின் தன்மையிலும் இத்தகைய நிலையுள்ளது. நம் பூமியின் தன்மையிலும் இதுவே தான். பூமியில் உள் நிலை பூமியின் மேல் நிலையை காட்டிலும் சில இடங்களில் அந்த உஷ்ண நிலை மாறு கொள்கின்றது.

கோடை காலங்களில் பூமியைப் பறிக்கும் பொழுது அந்தப் பூமியின் உள் நிலை மேல் நிலையைக் காட்டிலும் உஷ்ணமாகவே உள்ளது. நாம் நினைக்கின்றோம்.. சூரியனின் வெக்கையினால் அந்தப் பூமியில் சூடு உள்ளதென்று.

1.பூமிக்கு உஷ்ணத்தை ஈர்ப்பதுவே
2.பூமியின் சுவாசத்தினால் தான்..!

உள் இழுத்து வெளிக்கக்கி இந்த உலகம் சுழன்று… சுழற்சியின் மோதலில் ஒளி அலையை ஈர்த்து வெளிக் கக்கும் நிலையில் அந்தந்தக் கால நிலைகளில் எந்தெந்த மண்டலங்களின் ஈர்ப்பலையின் சக்தி அதிகமாக ஈர்க்கப்படுகின்றதோ.. அதன் நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறுபடுகிறது.

அதே போல் உஷ்ண அலையின் தன்மையும் மாறு கொண்டே உள்ள நிலைக்கொப்ப மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறு கொண்டுள்ளன.

சனி மண்டலமானது மிகவும் குளிர்ந்த அமிலத் தன்மை கொண்ட மண்டலம். அந்த மண்டலத்தின் ஒளி அலையே நம் பூமியைப் போல் வெளிச்சமானதாக இல்லை.

வளர்ந்த மண்டலம் தான் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது. அதன் தன்மையே மிகவும் குளிர்ச்சி வாய்ந்த அமிலத்தை ஈர்த்து வெளிப்படுத்தி அதன் நிலைக்கொப்பப் பனி மண்டலமாக உருளுகின்றது.

சனி மண்டலத்தின் ஈர்ப்பலையின் காலங்களில் நம் பூமியின் வட துருவ தென் துருவ ஈர்ப்பின் நிலைக்கொப்பக் குளிர் காலங்கள் பூமியில் ஏற்படுகின்றன.

அதே போன்ற நிலை தான் நம் பூமியைக் காட்டிலும் அதிகமான உஷ்ணத்தை ஈர்த்து வெளிப்படுத்தும் ராகு கேது போன்ற சில மண்டலங்களின் தொடர்பினால் நம் பூமியில் கோடையில் ஏற்படும் உஷ்ண நிலை.

ஆகவே உஷ்ண நிலை என்பது…
1.சுவாசிக்கும் சுவாசத்திற்கொப்பவும்
2.வந்து மோதும் பிற உணர்வுகளுக்கொப்பவும் தான் என்பதை
3.நாம் அறிதல் வேண்டும்.
(கோபம் வரும் பொழுது உடலுக்குள் உஷ்ணம் அதிகமாவதையும் பயம் வரும் பொழுது உடல் குளிர்ச்சியாவதையும் நீங்கள் பார்க்கலாம்)

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற இச்சைப்படுங்கள்

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற இச்சைப்படுங்கள்

 

“இக்ஷ்வாகு வம்சம்…!”
1.உயிரின் தன்மை தான் இச்சைப்பட்டு
2.அதன் நிலையில் வளர்ந்தது தான் மனிதன் வரையிலும்.

புழு பூச்சி என்று பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொரு தீமையைச் சந்திக்கும் போதும் “அதிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று இச்சைப்பட்டு அந்த இச்சைப்பட்ட உணர்வுக்கொப்ப மனிதனாக உருவாக்கியது “இக்ஷ்வாகு வம்சத்தின் உயிர்…”

ஆகவே இப்போது இச்சை எதிலே பட வேண்டும்…?

அகஸ்தியன் தாய் கருவிலே விஷத்தை நீக்கிடும் சக்திகளை சந்தர்ப்பத்திலே தான் பெற்றான். அவன் பிறந்த பின் எதிலே இச்சைப்பட்டான்…?
1.தீமையிலிருந்து விடுபட வேண்டும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலையை.
2.தீமை என்ற உணர்வுகள் எது… எது… எது…? என்ற நிலைகளைக் கேள்விகளைக் கேட்டு
3.இந்தக் கேள்விகளுக்கு மத்தியிலே அகஸ்தியன் அறிந்தான்.

தாவர இனங்களுக்கு அதனுடைய உணவு எங்கிருந்து வந்தது…? துருவத்தின் வழியாக வந்தது…! என்று துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்கினான்.

துருவத்திற்கு எது வருகின்றது…? 27 நட்சத்திரங்களின் உணர்வு தான் வருகின்றது… அதைச் சூரியன் கவர்கிறது. மற்ற கோள்கள் எதெனதன் உணர்வு பெற்றதோ அது அது உருவாகின்றது.

அதைப் போன்று தான்
1.நாம் நுகரும் (சுவாசிக்கும்) உணர்வுகள் இரத்தத்தில் கலந்தாலும்
2.உடலில் இருக்கக்கூடிய கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் இருதயம் சிறுநீரகம் பித்தசுரபி இவையெல்லாம்
3.இரத்தத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத் தான்… தன் தன் உணர்வை அதிலே வருவதை எடுத்து அவைகள் வளர்கின்றது.

ஆனால் நாம் சுவாசித்ததில் வேதனை என்ற உணர்வு அதிகரித்து விட்டால் வேதனையை உருவாக்கும் அணுக்கள் அதிகமாகி… உடலுக்குள் போர்முறையாகி… மனிதன் சிந்தனைகள் குறைக்கப்படுகின்றது. நம் உடலில் உள்ள உறுப்புகள் பாழாகின்றது.

இதே போல் தான் பிரபஞ்சத்திலும் சில கோள்கள் பாழாகி விடுகின்றது. பிரபஞ்சத்தின் இயக்கம் தடுமாற்றமானால் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் பூமியின் இயக்கத்திலும் மாற்றமாகி
1.தாவர இனங்களின் விளைச்சல் இங்கே குறைவாகும்.
2.தாவர இனங்களை உணவாகப் புசித்த மற்ற உயிரினங்களும் குறைவாகும்
3.இது அனைத்தும் மனிதனாக்கப்படும் பொழுது அவனுடைய சிந்தனைகள் குறையும் என்ற நிலையை
4.அன்றே அகஸ்தியன் உணர்ந்துள்ளான் அணுவின் இயக்கத்தை…!

ஆக… நம் பூமியின் துருவப் பகுதியின் வழியாகத்தான் அனைத்தும் வருகின்றது என்று உணர்ந்து கொண்ட அகஸ்தியன் தான் கண்ட பேருண்மையின் உணர்வுகளை வைத்துப் புது புதுத் தாவர இனங்களை உருவாக்கினான்.

அதை மனிதன் தனக்குள் சுவைத்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் தாவர இனங்களாக உருவாக்கினான். அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் பழக்கத்தை விடுத்தான்.

காரணம்… மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தன் உடலாக ஆக்கும் தன்மை பெற்றது. அவைகளைக் கொன்று புசித்தால் அதே விஷம் நம் உடலில் அணுக்களாகி உறுப்புகளாக மாறிவிடும்… மனிதனல்லாத நிலையாக உருவாக்கிவிடும் என்று உணர்ந்தவன் தான் அணுவின் இயக்கத்தை அறிந்த அகஸ்தியன்.

இதைப்போன்று துருவத்தின் ஆற்றலை தனக்குள் கண்டுனர்ந்து திருமணம் ஆன பின் அதையெல்லாம் தன் மனைவியிடம் சொல்கின்றான். ஆண் பெண் என்ற நிலையில் தான் உருவாக்க முடியும் என்று உணர்கின்றான்.

செடி கொடிகள் கல் மண் எதுவானாலும் ஆண் பெண் நட்சத்திரங்களுடைய உணர்வின் கலவைகளால் தான் உருவாகிறது என்பதை உணர்ந்தான்.
1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையே முழுமையாகக் காணும் திறன் பெற்றான்
2.நம் துருவத்தின் ஆற்றலை உணர்ந்து மக்களுக்கும் அதை எடுத்துக் கூறுகின்றான்… துருவனாகின்றான்.

திருமணமான பின் துருவ மகரிஷியாக மாறுகின்றான் தீமைகளை வென்றிடும் உணர்வு கொண்டு…
1.உயிர் எப்படி உணர்வின் அறிவாக இருக்கின்றதோ
2.உயிரைப் போலவே உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டான்… கணவனும் மனைவியாக.

ஆண் பெண் என்ற நிலை இல்லை என்றால் எதுவுமே நடக்காது… அது வளர்ச்சி அடைய முடியாது.

இப்படி ஆனவன் தான் துருவத்தின் எல்லையில் நின்று… இந்த பிரபஞ்சத்திலும் சரி… மற்ற பிரபஞ்சத்திலிருந்து நம் பூமி கவரும் நிலைகளில் விஷத்தன்மைகள் வந்தாலும்… அதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம்.

ஆவிகளுக்கு அதனின் பாதம் நிலத்தில் பாவாது… ஏன்…?

ஆவிகளுக்கு அதனின் பாதம் நிலத்தில் பாவாது… ஏன்…?

 

தேவர்கள்… அசுரர்கள்.. மனிதர்கள்… என்று இனம் பிரித்துக் காட்டினார்கள் நம் முன்னோர்கள். தேவர் என்பவர் யார்…? அசுரர் என்பவர் யார்…? மனிதர் என்பவர் யார்…?

எந்தெந்த வளர்ச்சி செயல் புரிந்து எந்தெந்த எண்ண ஓட்டத்தில் வாழ்கின்றார்களோ அதனை இனம் பிரித்துத் தேவனாகவும் அசுரனாகவும் மனிதனாகவும் காட்டினர்.

இன்று நம்மிலேயே இந்த மூன்று வகைக் குணத்தவர் உள்ளனர். அவரவர்களின் எண்ணப் பயனால் அமைவதுவே இந்தக் குண நிலை. மனித ஆத்மாவுக்கு மட்டுமல்ல. அனைத்து நிலைகளுக்கும் இது உண்டு என்று உணர்த்தியுள்ளேன்.

நம் பூமியின் ஒத்த நிலைகள் மற்ற மண்டலங்களுக்கு மாறுபாடு கொள்கின்றன. சூரியனின் ஒளி அலையை ஈர்த்து நம் பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் சக்தி நிலைப்படி நம் பூமியின் சுழற்சி ஓட்டமும் இயற்கைத் தன்மையும் அமைந்துள்ளன.

அது அல்லாமல் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட விகிதத் தூரத்தைக் கொண்டும் நம் பூமியின் நீர் நிலையின் தன்மை கொண்டும் நம் பூமிக்குத் தொடர்புடைய மண்டலங்களின் ஈர்ப்பு அலைகளின் வெளிக்கக்கும் அமில குணத்தைக் கொண்டும் நம் பூமியின் இன்றைய குண நிலை உள்ளது. இது போல் மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறுபடுகின்றன.

உஷ்ண அலையில் வாழும் நம் பூமியில் பிரிந்து வாழும்… பிரிந்து என்பது
1.இந்தப் பூமியில் வாழ்ந்த ஆன்மாக்கள்
2.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்துடன் எந்த இடத்தில் எந்த எண்ணத்தில் தன் ஆத்மா பிரிந்ததுவோ
3.அதே எண்ண நிலைக்கொப்ப அந்த உஷ்ண அலையின் நிலையுடனே
4.இந்தப் பூமியின் சுழற்சியுடன் இந்தப் பூமியின் ஓட்டத்திலும் இந்தப் பூமியின் ஈர்ப்புடனும் அதன் சுழற்சி நிலை உள்ளது.

நம் பூமி ஓர் இடத்தில் நிற்பதில்லை. சுழன்றே ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியிலிருந்து பிரிந்த ஆத்மாக்களும் அதன் சுழற்சியிலேயே ஓடிக் கொண்டே சுழன்று கொண்டே வருகின்றன.

ஆத்மா பிரிந்த பிறகு மேலுலகம் சென்றுவிட்டான் என்கிறனர்.
1.மேல் உலகம் என்பது எந்த உலகம்…?
2.இந்தப் பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் மேல்… கீழ்… என்ற நிலை உள்ளதுவா…?
3.சூரியனின் ஒளி அலைகள் பாயும் மத்திய பாகத்தை மேல் பாகம் என்றாலும் இரவிலே கீழ் பாகத்தில் வாழுகின்றோமா…?

சுழலும் சுழற்சி வட்டத்தில் கீழும் இல்லை… மேலும் இல்லை…!

இந்தப் பூமியின் காந்த ஈர்ப்பின் நிலையுடன் ஒட்டி… பூமியின் சுழற்சியுடன் நாம் எப்படி அதன் ஈர்ப்பில் வாழ்கின்றோமோ அதைப் போல் தான் இந்த உலகில் வாழ்ந்து பிரிந்த உயிராத்மாக்கள் இந்த உலகின் ஈர்ப்பின் வட்டத்திற்குள் காந்த அமில வட்டத்திற்குள்ளேயே நம்முடன் கலந்தே தான் அவர்களின் அமில வட்டக் குணங்களும் உள்ளன.

ஆவி பிரிந்து அந்த ஆத்மா ஆகாயத்தில் சென்று நிற்பதில்லை…!

நம் மூதாதையர்களினால் சொல்லப்பட்ட நடந்த கதைகளில் பேய் பிசாசு வந்ததாகவும்… அதன் பாதம் நிலத்தில் பதியவில்லை…! என்றும் பேய்க்கும் பிசாசிற்கும் பாதம் நிலத்தில் பாவாது…! என்றெல்லாம் கதைகளாகக் கேட்டிருப்பீர்.

இவைகள் எல்லாம் கதைகள் அல்ல…! உண்மை நிலையில் வெளிப்பட்ட சில அர்த்தம் கொண்ட செயல் முறைகள் தான்.

1.பிம்ப உடல் இல்லாததினால் அவற்றின் உடல் பூமியில் பதிவதை நாம் காண முடியாதேயன்றி
2.மனித ஆன்மாக்கள் எப்படிப் பூமியில் வாழ்கின்றனவோ அதைப் போல்
3.ஆவி ஆத்மாக்களும் இந்த ஈர்ப்பின் வட்டத்திற்குள்ளேயே இருக்க முடியும்… இருக்கின்றன…!

இந்த ஈர்ப்பின் வட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால் அதற்குகந்த ஞானம் பெற்றிருந்தால் தான்… அந்தப் பக்குவ வழியில் சூட்சமம் கொண்டோர்களினால் தான்… இந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு மேலே (வெளியிலே) செல்ல முடியும்.

1.இந்தப் பூமியின் சக்தி அலையில் இருந்து நம் ஆத்ம நிலை மற்ற நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்றால்
2.அதற்குகந்த பயிற்சித் திறன் நாம் பெற்றிருந்தால் அதன் செயலில் செல்ல முடியும்.

மனிதனிலிருந்து பிரிந்து சென்ற ஆத்மாக்களினால் இந்த ஈர்ப்பின் தன்மையிலிருந்து பறந்து எங்கே வேண்டுமானாலும் செல்ல முடியாது.

பூமி சுழன்று கொண்டே உள்ள பொழுது பூமி சுழலுவதும் ஓடுவதும் நமக்குத் தெரிகின்றதா..? இல்லை…! அதே போல் அதன் ஈர்ப்பில் ஐக்கியப்பட்டுள்ள நம்மைப் போன்ற நிலைதான் இந்தப் பூமியில் பிறந்து இந்தப் பிம்ப உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்கள் நிலையும் உள்ளது.

ஆக உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆன்மாவாக இருந்தாலும் இந்தப் பூமியின் பிடிப்பிலே இதனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் இருக்க முடியும். மீண்டும் மீண்டும் உடல் பெற்றுத் தான் ஆக வேண்டும்.

1.இதிலிருந்து தப்பி இந்தப் பூமியின் ஈர்ப்பைக் கடந்து சென்று பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் சப்தரிஷி மண்டலங்களுடன் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இந்தப் பாடநிலைகளை விளக்கவுரைகளாகத் தொடர்ந்து கொடுக்கின்றேன்.

ஆலயங்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யச் சொன்னதன் உள்கருத்து என்ன…?

ஆலயங்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யச் சொன்னதன் உள்கருத்து என்ன…?

 

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது வரக்கூடிய பகைமைகள் மகாபாரதப் போராக நம் உடலுக்குள் எத்தனையோ நடந்து கொண்டுள்ளது.

புறத்திலே நாம் பார்த்ததெல்லாம்… நம்மைச் சந்தோஷப்பட விடாதபடி மனக்கலக்கங்களும் வேதனைகளும் துயரங்களும் உடலுக்குள்ளேயே வருகின்றது

இடுப்பு வலிக்கின்றது தலை வலிக்கின்றது நெஞ்சு வலிக்கின்றது கண் வலிக்கின்றது கை வலிக்கின்றது மூட்டு வலிக்கின்றது என்று சொல்வது… இது எல்லாம் மகாபாரதப் போர் தான்.

ஒவ்வொருவருமே நாம் தெரிந்து கொள்ளலாம்…! வீட்டில் கஷ்டம்… கஷ்டம்… என்று சொல்லி வேதனைப்பட்டுப் பாருங்கள்
1.பையன் வெளியே சென்றால் கீழே விழுந்து விடுவான்
2.கணவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது… என்ன என்று தெரியாதபடி திடீரென்று வேலையிலிருந்து வெளியேற்றி விடுவார்கள்
3.பக்கத்து வீட்டுக்காரர்கள் இனம் புரியாதபடி சண்டையிடுவார்கள்
4.தொழில் செய்யும் இடத்தில் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது உடைந்து நொறுங்கி விட்டது என்று
5.இதை எல்லாம் சில குடும்பங்களில் பார்க்கலாம்.

நமது எண்ணமே… நமக்குள் மட்டுமல்ல நமது உணர்வுகள் நம்மிடம் வேலை செய்பவருக்குள்ளும் அவ்வாறு இயக்கச் செய்கிறது. நம்மைக் காட்டிலும் மேலதிகாரியாக இருந்தாலும் அவரை அறியாமலே மறைமுகமாக அவரையும் இயக்கி விடுகின்றது.

இதையெல்லாம் நமக்கு உணர்த்துவதற்கு ஞானிகள் என்ன செய்தார்கள்…?
1.நல்ல குணங்கள் நமக்குள் எப்படி இருக்கின்றது…?
2.அது எப்படி காக்கப்பட வேண்டும் என்பதற்காகச் சாதாரண ஒரு கல்லைச் சிலையாக வடிக்கின்றார்கள்
3.வீட்டு வாசல் படிக்கும் அந்தக் கல் தான்… அதே கல்லைத் தான் சிலையாகவும் வடிக்கின்றார்கள்
4.அதற்குக் காரணப்பெயர் வைத்து… “தெய்வம் நல்லதைக் காக்கும்…” என்று சொல்கின்றனர்.

கல் சிலைக்கு அபிஷேகம் செய்கின்றோம். ஏன் அபிஷேகம் செய்கிறோம்…? என்று நாம் புரிந்து கொள்வதில்லை.

நாம் தெய்வம் என்று மட்டும் தான் நினைக்கின்றோம் இந்த உருவத்திலே தெய்வம் இருந்தது என்றும் எண்ணுகின்றோம். ஆனால்…
1.நல்ல குணங்களைச் சித்தரித்துக் காட்டுவதற்குத் தான்
2.அது இன்னது செய்யும்..! என்று உருவத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

சிலையில் பாலை அபிஷேகம் செய்யும் பொழுது என்ன செய்ய வேண்டும்…?

இந்தப் பாலை போன்ற மனம் நான் பெற வேண்டும் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் இந்த ஆலயத்திற்கு வருவோர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சந்தனத்தை போன்ற நறுமணம் பெற வேண்டும் என்று இப்படி அந்த ஞானிகள் காட்டிய வழியில் எண்ண வேண்டும்.

அது உருவம் தான்… பொருள் தான். கண்களால் நாம் காண முடிகின்றது

சந்தனத்தைப் பார்த்தவுடனே அது நன்றாக மணக்கும் என்றும் தெரிகின்றோம்… உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாலைப் பார்த்த உடனே அதிலே சர்க்கரை போட்டுக் காபித் தூளைப் போட்டுச் சுவையாக்க் குடிக்கின்றோம். பால்கோவாவும் நாம் கிண்டிச் சாப்பிடுகின்றோம்.

நம்முடைய மனதை நல்லதாக்க ஆலயத்தில் அப்படிச் செயல்படுத்துகின்றார்கள்.

ஆனால் அந்தப் பாலிலே சிறிது விஷம் போட்டால் நாம் சாப்பிடுவோமா…!

ஏனென்றால்… நாம் பாலைப் போன்று நல்ல மனதாக இருக்கின்றோம் எதிர்பாராது சந்தர்ப்பவசத்தில் ஒரு தீமையைப் பார்க்க நேர்கின்றது. அல்லது நமக்கு நண்பனாக இருக்கின்றான்… அவன் எல்லோருக்கும் நல்ல உதவிகளைச் செய்கின்றான். இப்பொழுது அவன் வேதனைப்படுகின்றான். அதைப் பார்த்தவுடனே… வேதனை என்ற விஷத்தை நுகர்ந்த பின் நம் உயிரிலே அந்த வேதனை தான் அபிஷேகமாகிறது.

எதன் வழி அபிஷேகம் நடக்கிறது…?

1.நாம் மூக்கு வழி சுவாசித்தது… உயிர் வழி தான் அபிஷேகம் நடக்கிறது
2.உயிரிலே பட்டு அபிஷேகம் ஆகும் போது அந்த வேதனையால் உடலெல்லாம் பலவீனம் அடைகிறது.

ரொம்ப நெருங்கிய நண்பனாக இருந்தால் அவன் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வந்தால் நமக்கு அங்கேயே தலை சுற்றிவிடும். அடுத்து யாராவது ஏதாவது சொன்னால் நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியாது ஒரு பொருளை வைத்து விட்டு அங்கே இங்கே என்று தேட ஆரம்பிப்போம் குழந்தைகளோ மற்ற யாரோ ஏதாவது ஒரு பொருளைக் கீழே போட்டால் நமக்குக் கோபம் பயங்கரமாக வரும்… அடிக்கச் சொல்லும். சிந்தனையற்ற செயலைச் செய்யும்.

யார் அங்கே தவறு செய்தது…? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை இவ்வாறு தவறு செய்ய வைக்கின்றது… அல்லது மயங்க வைக்கிறது.

அதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் ஆலயங்களில் சிலைகளை உருவங்களாக வைத்துக் காட்டினார்கள்.

அந்தப் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும் என்று அப்பொழுது நாம் எண்ண வேண்டும். நாங்கள் பார்க்கும் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் அதைப் பெற வேண்டும்… என்று எண்ணினால் அதே உணர்ச்சிகள் உயிரிலே படுகின்றது.

இப்படி…
1.நாம் எதை நுகர வேண்டும்…? என்று
2.அந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்யும் போது நாம் நம் உயிர் வழி உயர்ந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்படி
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ளும்படி செய்து
4.அதை வைத்து நமக்குள் வரக்கூடிய தீமைகளை நன்மை செய்யக்கூடிய சக்தியாக மாற்றும்படி செய்கின்றனர்.

எவ்வளவு அழகாக ஞானிகள் நமக்கு இதைக் கொடுத்திருக்கின்றார்கள்…!

முடியாதது என்று எதுவும் இல்லை

முடியாதது என்று எதுவும் இல்லை

 

ஒரு சிறு தீப்பொறி காற்றலையில் அதன் நிலைக்குகந்த பொருளின் மீது படும் பொழுது “தீ..” பற்றிக் கொள்கின்றது.

அதன் தன்மைக்குகந்த பொருள்கள் எல்லாவற்றையும் எரித்து அதன் தன்மைக்குகந்த எரிபொருள் இருக்கும் வரை எரிந்து விட்டு அது தீர்ந்தவுடன் தன் நிலையில் சாம்பலாகிப் பூத்துவிடுகின்றது.

இவ் எரியும் நெருப்பை நம்மால் அணைக்க முடிகிறதா..? நெருப்பிற்கு மேல் சக்தி கொண்ட நீரை அதன் மேல் பாய்ச்சித் தான் அதை அணைக்க முடியும்.

அதைப் போல்…
1.தீய சக்தியான இக்கடும் எண்ணக் கலவையின் இன்றைய மனித ஆத்மாக்கள் வாழும் நிலையில்
2.நம் ஜெப நிலைக்குகந்த ஒளி அலைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்றால்
3.இந்த உலக மாயை எண்ணத்தினால் வாழும் நமக்கு…
4.அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகளை எடுத்தால் தான் உலக ஞானத்தை நாம் பெற முடியும்.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை…!

பக்தி கொண்டு வணங்கிப் பிறரின் உபதேசத்தினால் தான் நம் ஞானம் வளருமா…? ஆதி சக்தியின் சக்திக் குழந்தையான நம் சக்தியை பிறரை வணங்கி நாம் ஏன் ஏற்றம் பெற வேண்டும்…? நம் ஞானத்தை நாமே பெறலாகாதா…? என்ற வினா எழும்பலாம்.

அந்த மாமகரிஷிகள் பெற்ற அந்த உன்னத சக்தியின் ஒளி அலையின் சக்தியை நாம் பெற்றால் நாம் அடையக்கூடிய ஞான வழிக்குச் சில வழி முறைப் பாடங்களை “அவர்களின் துணையுடன்” நாம் பெற்றுச் செல்ல முடியும்.

புராணக் கதைகளில் கிருஷ்ணாவதாரத்திலும் இராமாவதாரத்திலும் சில நிலைகளைக் கதை ரூபமாகப் புரியாத வண்ணம் உணர்த்தியிருக்கின்றார்கள்.

கிருஷ்ணர் போர்க்களம் சென்றவுடன் அவரின் மேலிருந்து “ஒளிகள் பாய்ந்தவுடன்…” அனைத்து எதிரிப்படைகளும் நின்றதாக உணர்த்தியிருக்கின்றார்கள்.

இந்நிலை சாத்தியப்படுமா…? ஆண்டவனே வந்து அவதரித்தால் இந்நிலை நடக்கும். கிருஷ்ணர் வாயைத் திறந்து காட்டியவுடன் ஈரேழு உலகமும் கண்டதாக வர்ணிப்புக் கதையும் உண்டு,

கதை அல்ல…! காவியம் தான் என்றாலும்…
1அந்நிலையின் சாத்தியக் கூற்றை ஒவ்வொரு ஆத்மாவினாலும் செய்து காட்டிட முடியும்… அதற்குகந்த ஞானம் பெற்றால்…!
2.முடியாத நிலை என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற குணத்தைக் காட்டலாம்.

பக்குவ ஞானம் பெற்று… பக்குவமான ஜெபத்தைக் கொண்டு… முதலில் அந்நிலைக்குச் சென்ற மாமகரிஷிகளின் துணையுடன் இந்த உலக நிலையிலே எந்தச் செயலையும் நடத்திடவும்.. நிறுத்திடவும்… நம் ஞானத்தால் முடியும்.

எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை

எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை

 

குருநாதர் சொன்ன முறைப்படி இமயமலையிலே நான் (ஞானகுரு) சென்று கொண்டிருந்தேன். அங்கே பனிப்பாறையைக் கடந்து செல்லும் பொழுது அந்தப் பாதை திடீரென்று இடிந்து விழுந்து விட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சொல்லிக் கொடுத்த அத்தனையும் மறந்து விட்டேன். மரணம் அடையும் நிலையே ஏற்பட்டு விட்டது. என் மனைவி மக்களை எல்லாம் எண்னத் தொடங்கிவிட்டேன்.

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…
1.பனிப்பாறைகள் நொறுங்கிய பின் திரும்ப எப்படிப் போவது…? என்று பயந்தாய்…
2.உனக்குள் புயலே வந்து விட்டது… தலை சுற்ற ஆரம்பித்து விட்டது
3.உன்னுடன் இணைந்த மனைவி மக்களள் எல்லோரையும் எண்ணத் தொடங்கி விட்டாய்.

அவர்களை எண்ணும்போது இந்தப் பனியின் குளிரிலிருந்து தப்ப முடியவில்லை நீ மரணம் அடையும் நிலைக்கு வந்து விட்டாய்… இப்போது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.

ஆகவே மனமே இனியாகிலும் மயங்காதே…! இந்த மனித வாழ்க்கையில் நீ தயங்காதே..
1.இந்த உடல் ஆசையை நீ வைக்காதே
2.எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்
3.ஆனால் நடக்காது தடுப்பதற்கு உனக்குள் சக்தி கொடுத்துள்ளேன்.

அதை எண்ணி எடுக்காதபடி… இந்த உடல் இச்சையை நீ பட்டு விட்டால்… “என் குழந்தை… என் பிள்ளைகள்… என் மனைவி…!” என்று நீ எண்ணினால் இந்த உணர்வின் இச்சைப்பட்டு… உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய்.

உன் குழந்தையின் ஈர்ப்பிற்குள் போகின்றாய்… அல்லது மனைவியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல முடியும். அந்தக் குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க வைக்க முடியுமா…?

“நீ இறந்து விடுகின்றாய்…” என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையுடன் அவர்கள் ஏங்கி இருக்கப்படும் பொழுது அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக்கி… நோயாக்கி விடுகின்றாய்.

1.உன்னை நம்பிய அனைவருக்கும் நீ பட்ட வேதனைகளை உருவாக்கி
2.துரித நிலையில் அவர்களும் மடியும் தன்மையை நீ உருவாக்குகின்றாய்.
3.அந்த வேதனையைத்தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும் அவர்களைக் காக்க முடியாது.

ஆகவே நீ எண்ணிய உணர்வுகள் அவர்கள் உணர்வுடன் நீ மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய். அவர்களையும் அழித்து விடுகின்றாய்.

அந்த உடலுக்குப் பின் எந்த வேதனையும் துயரத்தையும் பட்டாயோ இந்த உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்… அடுத்து நீ எங்கே போகின்றாய்…? என்று தெரியுமா…!

நீ எந்த வேதனை என்ற உணர்வை எடுத்தாயோ… அந்த விஷத்தையே தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாக்கும் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் அழைத்துச் சென்று உயிர் அதற்குத் தக்க உடலை அங்கே உருவாக்கிவிடும்.

இதனை அனுபவபூர்வமாகக் காட்சியாகவே குருநாதர் காட்டுகின்றார்.

அதற்குப் பின் அங்கிருந்து டெல்லி வந்து… சென்னைக்கு விமானத்தில் திரும்பும் போது… குருநாதர் இன்னொரு அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது “விமானம் கவிழும்…” சந்தர்ப்பம் ஏற்பட்டது.

விமானி முதற்கொண்டு மற்றவர்கள் எல்லாருமே பயந்து கதிகலங்கி விட்டார்கள். நான் மட்டும் அசையாமல் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.

குருநாதர் அங்கே சில விளக்கங்களைக் கொடுக்கின்றார்.

மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள்… நீ ஏன் பயப்படவில்லை…?
1.உடலின் இச்சையை நீ படவில்லை… நீ உயிரின் இச்சைப்பட்டாய்.
2.உயிர் ஒளியானது.. அறிவின் தன்மை ஆனது.
3.அதே அறிவின் தன்மை நீ அச்சமில்லாது இருப்பதனால் உனது சக்தியும் சேரலாம் என்று சொல்கிறார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நொடிக்குள் எடுத்து அங்கே செலுத்துகின்றாய்… அவர்களையும் காக்கின்றாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்…!

அத்தனை பேரிலும் ஒருவன் நீ எண்ணிச் செயல்பட்டதால் “இது உனக்குள் இருக்கக்கூடிய வலு…” என்று சொல்கின்றார். இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று விமானத்தில் வைத்து குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

இருந்தாலும்… எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை.

இன்று நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி… மகான் என்று மக்கள் மத்தியிலே அவரைப் போற்றிக் கொண்டிருந்தாலும் சரி…
1.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்..
2.எதனுடைய அழுத்தம் அதிகமாகின்றதோ இந்த உடல் போய்த்தான் ஆகும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் இந்த மனித உடல் என்ற இச்சையிலிருந்து விடுபட்டு… உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றது.

உடல் வலுவோ மன வலுவோ இன்று நம்மிடம் இல்லை… காரணம் என்ன…?

உடல் வலுவோ மன வலுவோ இன்று நம்மிடம் இல்லை… காரணம் என்ன…?

 

பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இந்தச் சமீப நூற்றாண்டுகளில் மனிதனால் விஞ்ஞானம் கொண்டு செயற்கை யுகத்திற்கு வழி காட்டிய நாளில் உள்ள நமக்குப் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இன்றைய இயற்கைத் தன்மையின் குண அமில வர்க்கத்திலுள்ள சக்தித் தன்மையே குறைந்து விட்டது.

இது எப்படிக் குறைந்தது…?

பால்வெளி மண்டலத்தில் சுழன்று ஓடும் நம் பூமி அதில் உள்ள காற்று மண்டலத் தன்மை சக்தி குறைந்ததென்றால் அது எப்படிச் சாத்தியப்படும்…?

சூரியனிலிருந்தும் நட்சத்திர மண்டலங்களிலிருந்தும் மற்ற கோளங்களிலிருந்தும் அனைத்து மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்திலிருந்தும் சக்தித் தன்மை ஒவ்வொரு மண்டலங்களுக்கும் கூடிக் கொண்டுள்ளதா…?

பொது மண்டலம் பால்வெளி மண்டலம். நமக்கு ஒளி தரும் மண்டலம் சூரிய மண்டலம். சூரியனிலிருந்து
1.நம் பூமி எப்படி ஒளி பெறுகின்றது…?
2.நம் பூமியிலுள்ள உஷ்ண விகிதம் மற்ற சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரங்களில் உள்ளனவா…?

நம் பூமியின் சுழற்சியினால்
1.நம் பூமி சுவாசித்து வெளிக்கக்கும் அலையின் அமிலம்
2.சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலத்துடன் மோதும் நிலை கொண்டே
3.நம் பூமிக்கு உஷ்ண விகித நிலை செயல்படுகின்றது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் ஐம்பது மைல் விகித தூர அளவில் ஒளி வட்டம் உள்ளதாக இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒளி வட்டம் உள்ளதனால் தான் நம் பூமிக்கு இந்த உஷ்ண அலை ஏற்படுகிறது.

இந்த உஷ்ண அலையான ஒளி வட்டத்திற்கு மேல் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட வழி எல்லாம் பூமியின் உஷ்ணத் தன்மையைக் காட்டிலும் அங்கே குளிர்ந்த நிலை தான் உள்ளது.

சூரியனுக்கு அருகாமையில் 200, 300 மைல்களுக்கு இப்பாலும் நம் பூமிக்குக் காற்று மண்டலம் ஒளி வட்டம் கொண்ட உஷ்ண அலைகளின் நிலையின் தன்மைக்கு அப்பாலும் பால்வெளி மண்டலத்தின் பொதுவான குளிர்ந்த நிலை தான் சூரியனுக்கும் பூமிக்கும். அதைப் போல் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இடைப்பட்ட பால்வெளி மண்டலம் உள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் அமில குணம் தொட்டு அந்த மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத்துடன் அமிலம் மோதும் நிலை கொண்டே உஷ்ண அலைகளும் அதன் குளிர் நிலைகளும் செயல் கொள்கிறது.

இப்படி இயற்கையில் வளர்ந்து ஓடும் நம் பூமியின் நிலையுடன் கூடிய காற்று மண்டலத்தில்
1.காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள ஒளி வட்டத்தின் ஈர்ப்பினால்
2.காற்று மண்டலத்தில் சேமித்துள்ள இயற்கைக் குணத்தை நம்மால் மாற்றப்படுவதனால் அதனின் நிலைகள் மாறிவிட்டன.

மாறினாலும் இந்தக் காற்றில் தானே எல்லாம் கலந்திருக்கிறது என்பீர்கள். இயற்கையாக மாறும் நிலையைச் “செயற்கையுடன் பிரித்துவிடுவதனால்..” அதன் சக்தியின் வலு குறைந்துவிடுகின்றது.

மலைகளிலும் மடுக்களிலும் இருந்து உற்பத்தியாகி வரும் நீரின் சுவைக்கும்
1.ஆறுகளில் நாம் சேமித்து வைத்து அதிலுள்ள மின்சாரத்தைப் பிரித்து எடுத்த பிறகு
2.அந்த நீரின் அமில குணத்தில் சில சக்திகள் குறைந்ததனால் சுவை குறைந்து விட்டது.

அதே சமயத்தில் அந்நீரினால் வளரும் பயிர்களுக்கு
1.நாம் எந்நிலையான அமிலத்தை அந்த நீரிலிருந்து பிரித்து எடுத்தோமோ
2.அதன் நிலைக்குகந்த உரங்களை இட்டால் தான் அந்தப் பயிர்கள் வளரும்.

இப்படி இயற்கையையே நாம் பல நிலைகளுக்காக மாற்றி அமைக்கும் பொழுது இந்த மண்டலத்தின் காற்று அலைகளில் உள்ள சக்தி நிலைகள் குறைந்து விட்டன. மனிதனின் எண்ண சுவாசமும் இதன் தொடர் அலையினால் மாற்றம் கொண்டு விட்டது.

இந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தி… ஞானத்தின் வழித் தொடர் பெற… நம்மையே அந்த ஞானமாக்கும் சக்தி செயலில் நம்முடைய ஜெப நிலை இருத்தல் வேண்டும்.

மின் அலையின் தொடரில் ஒளியைக் காண்கின்றோம். அதே மின் அலையினால் ஒலியைக் (வானொலி) கேட்கின்றோம். இவையும் இந்நீரிலிருந்தும் காற்றிலிருந்தும் தான் மனித விஞ்ஞானத்தினால் கண்டறியப் பெற்றோம்.

நம் சுவாசத்தில் எடுக்கும் காற்றலையின் உரு நினைவலையான எண்ணத்தை அந்த ஆண்டவன் மேல் பாய்ச்சி நாம் செயல்படுவோமேயானால்
1.நம் எண்ண நினைவலை எச்சித்தர்களின் நினைவில் பாய்ச்சப்படுகின்றதோ
2.அவர்கள் பெற்ற ஒளி அலைகளின் சக்திகள் நம் எண்ணமுடன் கலந்து
3.சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் செயல்பட்டு நம் ஞானம் வளர்ந்து
4.அதன் தொடரினால் பல சக்தி நிலைகளை இந்த உடல் என்னும் கூட்டிலேயே நாம் கூட்டிக் கொள்ள முடியும்.

அதன் வழி கொண்டு நம்மால் பல உண்மைகளை இந்த உலகம் உணரச் செய்து இன்றுள்ள இந்த உலகின் ஆன்மாக்கள் வாழும் பயம் கொண்ட செயற்கையிலிருந்து மீள வைக்க முடியும்.

இன்றைய கால நிலையில் அங்கங்கு இயற்கை மாற்றங்களும்… விபத்துக்களும்.. போர்களும்… இவற்றால் ஏற்படும் உயிர்ப் பலியின் பீதியிலிருந்தும்… மனிதனால் செய்யப்பட்ட அணுகுண்டு அணுக் கதிர்வீச்சின் பயத்திலிருந்தும்…
1.மனித ஆன்மாக்களை மீட்டு அவர்களின் எண்ணத்தை மேலோங்கச் செய்தால்
2.நடக்கவிருக்கும் உலக மாற்றத்திலிருந்து மனித ஆன்மாக்களை மீளச் செய்யலாம்.

ஒன்று பலவாகி.. பல நூறாகி… நூறு பலவாகிச் செயல்படும் சக்தி அலையாக நாம் செயல்பட வேண்டிய ஞான அலையின் சக்தியை ஈர்க்கும் செயலை முறைப்படுத்திச் செயல்படுத்துங்கள்.