மார்க்கண்டேய தத்துவம்

மார்க்கண்டேய தத்துவம்

மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.

இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்… பின்னும்… மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.

அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் “ஆத்ம பதிப்பு” உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.

புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்…!

உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்…!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.

பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.

1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது

என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை…”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.

எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.

விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில் சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை “நான்” என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.

விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உணமைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனித தத்துவத்திலும் மெய் ஞானத் தத்துவத்தால் மாற்ற முடியும்.

1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
(அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே)

ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது…?

உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள்.

எப்படி…?

1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் – பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.

மனிதனின் முதிர்வு நிலை அதுவே…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பயன்படுத்தும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பயன்படுத்தும் முறை

 

இந்த மனிதனின் வாழ்க்கையில் அன்பும் பரிவும் பாசமும் கொண்டு வாழும் நிலையில் பிறருடைய துயர்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு நாம் உதவி செய்கிறோம்.

உதவி செய்தாலும் அவருடைய துயரமான உணர்வுகளை நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுக்களாக உடலுக்குள் நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

மீண்டும் மீண்டும் அவர்களுடைய துயர்களை எண்ணும் பொழுது அந்த அணுக்கள் நமக்குள் பெருகி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை நம்மை அறியாமலேயே மடியச் செய்து விடுகின்றது.
1.அப்போது நல்ல குணங்களை நாம் காக்க முடியாது போய் விடுகின்றது.
2.உயிரான ஈசனை நாம் மறந்து விடுகின்றோம்
3.மனித உடலில் இருந்து வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்
4.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளில் இருந்து விடுபடத் தெரியவில்லை.

அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நிலைகளிலும் நீங்கள் தெளிந்து தெரிந்து அந்த அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத் தான் இப்போது உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

ஆக… ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வதைத்தான் “தொட்டுக் காட்டுவது…” என்று சொல்வது.

1.உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் அது எப்படி இயங்குகின்றது…? தீமைகள் விளைவது எப்படி…? என்ற நிலையில்
2.தீமையிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை யாம் (ஞானகுரு) உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது
3.இந்த இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்

நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. இந்த அணுக்கள் உடலில் பெருகிவிட்டால் இதற்கு முன்னாடி உடலில் உருவான தீமை என்ற உணர்வின் அணுக்களை வளராது இது தடுக்கும்.

நல்ல பண்பு கொண்ட மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் சந்தர்ப்பத்தால் பிறருடைய வேதனையைக் கவர்ந்து கொண்டால் அது வலிமை பெற்று விடுகிறது.

வேதனைப்படுகின்றான் வேதனைப்படுகின்றான் என்று மீண்டும் எண்ணும் பொழுது அந்த வேதனை உணர்வே நமக்குள் இரையாகி வேதனைப்படச் செய்யும் அணுக்களாக வளர்க்கப்படும் பொழுது நல்ல அணுக்கள் வாழ முடியாதபடி கடும் நோயாக வந்து விடுகின்றது.

நோய் வளர்ந்து விட்டால் அந்த நோயை நீக்கும் உபாயம் வேண்டுமல்லவா…!

1.வேதனையால் உருவான நோயின் அணுக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து கலந்து விட்டால்
3.அதே உணர்வு ஓம் என்று பிரணவமாகி இந்த உணர்வின் கருவாக அதை மாற்றுகின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோய்வாய்ப்பட்டவர் உடலில் படர வேண்டும் அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

நமக்குள் அதை வளர்த்துக் கொண்ட பின் அந்த அணுவின் தன்மையாக விளைகிறது. விளைந்த பின் நோயுற்றவரிடம் இதை வாக்காகச் (சொல்லாக) சொல்லி அவருக்குள்ளும் இது விளையப்படும் பொழுது
1.நம்முடைய பார்வையும் நம்முடைய சொல்லும் அவருடைய நோயை நீக்கக்கூடிய தன்மையாக வரும்
2.நமக்குள் நோய் வராது தடுக்கும் சக்தியும் பெறுகின்றோம்.

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம்மை மாற்றுகின்றது. அதை மாற்ற… கொடுத்த சக்தியைப் பயன்படுத்திப் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற நிலையில் இந்த ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்தச் சக்தியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

மனிதனின் நிலைகளில் உயர்ந்தவன் அகஸ்தியன் அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நமக்குள் சேர்த்துக் கொண்டால் தீமைகளை நீக்கி நோய்களை நீக்கி அது நமது ஆன்மாவைத் தூய்மை ஆக்குகின்றது.
1.அந்தத் தூய்மையான உணர்வுகள் வளர வளரத் துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் வருகின்றது
2.இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வு கொண்டு
3.உயிர் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து… ஆறாவது அறிவு கொண்ட நிலையை ஏழாவது நிலையாக ஒளியாகப் பெறச் செய்யும்.

“நான்…” என்னும் பலனை நாம் அறிந்திருக்கின்றோமா…?

“நான்…” என்னும் பலனை நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?

சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

சுவாசம் எடுத்துவிடுவதும்… கண் இமை மூடித் திறப்பதும்… செவி ஒலி கேட்பதும்… சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்… தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்கவேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக்கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

இறந்தபின் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் (ஆவி) அடுத்த உடலில் எப்படிச் சாடுகிறது…?

இறந்தபின் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் (ஆவி) அடுத்த உடலில் எப்படிச் சாடுகிறது…?

 

நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் இது நடந்த நிகழ்ச்சி. ஒரு ஊரில் இரண்டு பேரில் ஒருவருக்கொருவர் பகைமையில் அடுத்தவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகின்றார்கள்.

எதிரி என்ற நிலையில் இருக்கப்படும் பொழுது இறந்தவருக்கோ தன்னிடம் வேலை செய்யும் ஒரு சாதாரண கூலி ஆளிடம் பேசிப் பழக்கம் இருந்திருக்கின்றது. இறந்த பின் அவருடைய ஆவி அந்த கூலி ஆளின் உடலுக்குள் சென்று விட்டது

அந்த உடலுக்குள் சென்ற பின் “ஐய்யய்யோ… என்னை வெட்டிப் போட்டு விட்டார்களே… வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்களே…! என்று சொல்லத் தொடங்குகின்றார்.

ஆனால் இப்படிப் பேச ஆரம்பித்ததும் “இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது…” என்று ஊர்க்காரர்கள் எல்லாம் சொல்கின்றார்கள். அந்த ஆளை என்னிடம் அழைத்து வருகின்றார்கள்.

என்னை வெட்டி விட்டார்கள்… வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்கள்… என் துணி எல்லாம் இங்கே இருக்கின்றது… அரிவாள் எல்லாம் இங்கே இருக்கின்றது… புதைத்தவர்கள் இன்னார்…! என்று அந்தப் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றது இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று சொல்கின்றது.

அந்த நேரத்திலே போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்த்தாற் போல் தான் நான் சைக்கிள் தொழில் செய்து கொண்டிருக்கிறேன் அங்கே இருக்கக்கூடிய சப் இன்ஸ்பெக்டர் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

காரணம் அவருக்கு ஏற்கனவே இங்கே என்னிடம் பழக்கம் இருந்தது.

அவருடைய கொழுந்தியாளுக்கு ஒரு சிக்கல் இருந்தது. அவர்கள் கேரளாவில் இருப்பவர்கள். அந்தப் பெண்ணிற்கு அங்கே செய்வினை செய்து விட்டார்கள்.

சேலை கட்டினால் சேலை கிழிந்து விடும் வெளியிலே வர முடியாது இரவில் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்து விடும்.

ஆரம்பத்தில் இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு அந்தச் சப் இன்ஸ்பெக்டர் என்னை அது விஷயமாகச் சந்தித்தார். என்னை அவர்கள் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் பெண்ணுக்கு இப்படி இருக்கின்றது… என்ன செய்ய வேண்டும்…? என்று கேட்டார்.

மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்து இருக்கின்றார்கள். சுருட்டையும் மதுவையும் வைத்திருப்பார்கள். ஒரு ரூமில் கொண்டு போய் அந்தப் பதார்த்தங்களை வையுங்கள் என்று சொல்லி வைக்கச் சொன்னேன்.

சொன்ன மாதிரி வைத்தவுடன் அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்று இந்தப் பெண்ணை எதுவும் செய்யவில்லை. சேலை எல்லாம் அப்படியே இருக்கின்றது… முகத்தில் காயமும் இல்லை.

சுயநினைவு வந்த பின் இங்கே என்னிடம் அழைத்து வந்தார்கள். அந்த அம்மாவிடம் சில விவரங்களைச் சொல்லி இந்த மாதிரிச் செய் உனக்கு நன்றாகி விடும்… பாதுகாப்பாக இருக்கும்…! என்று சொன்னேன் செய்தது

அதன் பிறகு அது நன்றாக ஆனது. செய்வினை எதுவும் பாதிக்கவில்லை. அதற்குப் பின் சப் இன்ஸ்பெக்டர் இங்கே வந்தார் என்றால் உள்ளே சிறிது நேரம் உட்கார்ந்து நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படி அவர் இருக்கும் நேரத்தில் இந்த ஆள் வந்து இப்படிப் புலம்ப ஆரம்பிக்கின்றான்.

என்னை வெட்டி விட்டார்கள்… புதைத்து விட்டார்கள்…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவர் உடனே என்ன…! ஏது…? என்று கவனித்துக் கொண்டே சென்று அது நிஜமா… பொய்யா…? என்று அது எத்தனாவது வாழை மரம்…? என்று விசாரித்து அங்கே சென்று தோண்டிப் பார்க்கின்றார்கள்.

பார்த்தால் அங்கே எல்லாமே இருக்கின்றது.

துணி எங்கே இருக்கிறது என்று சொன்னது…? கொன்ற ஆயுதங்கள் எங்கே இருக்கிறது…? என்று சொன்னது. எல்லாம் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

எடுத்த பின் மற்றவர்கள் தலைமறைவாகப் போய்விட்டார்கள்…
1.கடைசியில் என்னைக் (ஞானகுரு) கொலை செய்ய வந்து விட்டார்கள்
2.இந்த ஆள்தான் எல்லாம் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்று என்னைத் தேடி வருகின்றனர்.

பின் அவர்களை அரெஸ்ட் செய்து விட்டார்கள். மரண தண்டனை கிடைத்தது.

இருந்தாலும்…
1.சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லப்படும் பொழுது நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வருகின்றது…? என்ற வகையில்
2.அப்பொழுது குருநாதர் சில உணர்வுகளை உணர்த்துகின்றார்

அவர்கள் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

1.ஆபத்து வந்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இப்படிச் செய்…! என்று சொன்னார்
2.அதனால் அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கின்றது என்ற நிலையை
1.ஒரு ஆன்மா எப்படி வெளியில் செல்கின்றது
2.இன்னொரு உடலுக்குள் சென்ற பின் என்ன செய்கின்றது
3.இதையெல்லாம் அறிந்து கொள்வதற்குத் தான் மூன்று லட்சம் பேரைப் பார்த்தது.

எல்லாம் அனுபவபூர்வமாகக் கண்ட நிலைகள்.

மூலமும் இவனே… மூலக் காரணமும் இவனே…!

மூலமும் இவனே… மூலக் காரணமும் இவனே…!

 

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

உயிரான “ஈசன்…” நமக்குள் இருக்கின்றான் என்ற பயம் நமக்கு வர வேண்டும்

உயிரான “ஈசன்…” நமக்குள் இருக்கின்றான் என்ற பயம் நமக்கு வர வேண்டும்

 

என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன் உன்னிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணிப் பாடலைப் பாடுகின்றோம்.

அதனின் உட்பொருளே…
1.“உயிரான ஈசன்” நீ எப்படி ஒளியாக இருந்து எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ…
2.இருளை அகற்றி நீ எப்படி என்றுமே ஒளியாக இருக்கின்றாயோ…
3.அதன் உணர்வாக என்னை நீ இயக்குதல் வேண்டும்.
4.அதன் வழியே நான் வாழ வேண்டும்…
5.பொருளறிந்து செயல்படும் தன்மை நான் பெற வேண்டும்
6.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி எனக்கு வேண்டும்.

ஒளி பட்டால் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப்போல எனக்குள் இருளை நீக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும். ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலான சிவம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

உயிரால் இயக்கப்பட்ட நிலையும்… உணர்வால் என்னை உருவாக்கிய நிலையும்… மகிழ்ச்சி என்ற உணர்வின் சக்தியை நான் எண்ணும் பொழுது என் இசையில் நீ இயக்குகின்றாய்
1.என் நினைவில் நீ எப்பொழுதும் வர வேண்டும்.
2.”நீ இருக்கின்றாய்…” என்ற நிலையில் அந்தப் பயம் எனக்குள் வரவேண்டும்.
3.தவறு என்ற உணர்வு எனக்குள் வராது தடுத்து நிறுத்தும் அந்த ஆற்றல் பெற வேண்டும் ஈஸ்வரா.

என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…! என்று உயிரே வேண்டுகிறோம்.

ஆனாலும்… அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றோம்.
1.அந்த ஆசையினால் நமக்குள் தீமை என்ற உணர்வுகள் வந்து சேர்ந்து விடுகின்றது.
2.தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகிறோம்
3.இந்த உடலின் ஆசைதான் நமக்குள் வருகின்றது
4.”உயிரான ஈசன் இருக்கின்றான்…” என்ற நிலை மறந்துவிடுகின்றது.

வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் கடும் வேதனை உருவாகின்றது. அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலான கோவிலில் “அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர…” ஈசனான நிலையை நாம் வணங்க மறுக்கின்றோம். அவன் அறிவை நாம் தெளிவாக்கும் நிலையையும் இழந்து விடுகின்றோம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்கு நாம் செல்லாதபடி அருள் ஒளி பெற்று இருளை அகற்றிடும் சக்தி பெற்று… உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும். இருளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

உயிர் எவ்வாறோ… நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வுகள் அனைத்தும் ஒளிமயமாக மாறுதல் வேண்டும்

தீமையைப் பிளக்கும் நரசிம்மா என்ற நிலையில் வரும் தீமைகளை மாற்றி விட்டால் கல்கி. இந்த உயிர் ஒளியாக உள்ளது. அதைப் போல் நம் உணர்வின் தன்மை பத்தாவது நிலை ஆகும் போது தான் கல்கி.
1.பூமியின் ஈர்ப்பை விடுத்து விண்ணுலகம் செல்கிறது…
2.எதுவுமே தன்னை ஈர்த்து விடாது பறந்து செல்கின்றது.
3.குதிரை மேல் பறந்து சென்று வாளை வீசித் தப்பிச் செல்வதாக உருவம் அமைத்து
4.அருவ நிலையில் நாம் உயர்ந்த சக்திகளை எப்படிப் பெற வேண்டும்…? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

வான் வீதியில் தோன்றிய “உயிர்” மனிதனான பின் இனி பிறவி இல்லா நிலை அடைவது தான் கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் “துருவ நட்சத்திரம்…”

கண்களுக்கு நாம் கூட்ட வேண்டிய உயர்ந்த சக்திகள்

கண்களுக்கு நாம் கூட்ட வேண்டிய உயர்ந்த சக்திகள்

 

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே நம் ஆத்மாவில்
3.நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய ஐந்தாம் நிலையான ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…!” (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த ஆறாம் நிலையில் அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.ஏழாம் நிலையான படைப்பின் படைப்பாக்கும் செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த உயிரும் ஆத்மாவும் இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (நம் விழிப்பு நிலை) இந்த கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான நம் உயிர் ஈர்ப்பது போல் அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் ஆன்மாவின் விழிப்பு என்ற அந்தக் கண்கள் வழியாக நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும். அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

“அழியும் சொத்தைச் சேமிப்பதற்காக…” நாம் மன உறுதியைக் கொண்டு வர வேண்டியதில்லை

“அழியும் சொத்தைச் சேமிப்பதற்காக…” நாம் மன உறுதியைக் கொண்டு வர வேண்டியதில்லை

 

அகஸ்தியன் நஞ்சினை வென்றான் இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான். அவனில் விளைந்த உணர்வு இந்தப் பூமியில் படர்ந்துள்ளது.

அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வினைப் பெற நாம் ஏங்கித் தியானிப்போம். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்குங்கள்.

கண்களை மூடி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உயிரான ஈசனிடம் “இந்த உணர்வை இயக்குங்கள்… அதை நுகருங்கள்…”
2.நுகர்ந்த உணர்வை… அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்தியை உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உயிர் உருவாக்கும்
3.ஓ… என்று ஜீவ அணுவாக உருவாக்கும் கருத்தன்மை அடையச் செய்யுங்கள்.

உங்கள் உடலுக்குள் அந்த அகஸ்தியனின் அணுக்கருக்கள் பெருகும். அணுக்களாக வளர்ச்சி பெற்ற பின் அகஸ்தியன் உணர்வுகளை உட்கொள்ளும் அந்த உணர்ச்சிகளை உந்தும்.

அப்போது அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகள் நீங்குகிறது… நஞ்சினை நீக்கி… இருளை அகற்றி… மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெறும் தகுதி நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அந்தப் பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள்
2.பேரொளி பெரும் கரு உலகமாக… உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
3.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைப் புருவ மத்தியிலே உணரலாம்.

ஒரு நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது… அந்த உணர்வுகள் “மின் கற்றைகளாக… மின்னல்களாக எப்படி வெளி வருகின்றதோ…” இதைப் போன்று உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி இருளினை அகற்றி உடலுக்குள் ஒளியின் நிலையாக உருவாகும்.

1.உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுக்கும்
2.இருளை அகற்றும் அருள் ஒளி என்ற உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே பெருகும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எடுக்க இப்படிப் பழகிக் கொள்ளுங்கள்.

“டக்… என்று அந்த ஞாபகம் வரும்… நோய் வராது தடுக்க முடியும்

இதற்கு முன்னாடி நோய்கள் இருந்தாலும் அடுத்தடுத்து வேதனை வரும் பொழுது இதைக் கலந்து எடுத்துக் கொண்டே வாருங்கள்.
1.நல்ல உணர்வுகளுக்குள் மற்ற கஷ்டம் என்ற உணர்வுகளைக் கேட்டறிந்த பின் அந்த நல்ல உணர்வை அது எப்படிக் கெடுக்கின்றதோ
2.அதே போன்று தீய உணர்வுகளை அழித்த அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாககச் சேர்த்துக் கொண்டு வாருங்கள்.

அந்த உணர்வுகள் மாறும். ஆகவே துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வரவேண்டும்… வாழ்க்கையில் வரும் நிலைகளை பற்றதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

செவிகளில் கேட்கின்றீர்கள்… கூர்ந்து கவனிக்கின்றீர்கள்… நுகர்கின்றீர்கள் இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலில் அணுக் கருவாக மாறுகின்றது கருவானால் உங்களுக்குள் அது விளையத் தொடங்கும்.

உதாரணமாக…
1.கோழி அடைகாக்கத் தவறினால் அந்த முட்டை குஞ்சாகப் பொரிக்காது.
2.அது போல் தீமையான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த எண்ணத்தை அங்கே இணைத்தால்
4.அந்த பேரருள் என்ற உணர்வின் தன்மை அணுத் தன்மையாக உங்களுக்குள் விளையும்
5.தீமைகள் விளையாது தடுக்கப்படுகிறது… உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும்.

தொடர்ந்து இதைச் செயல்படுத்துதல் வேண்டும். மனிதனான பின் பிறவி இல்லா நிலை தான் நாம் அடைதல் வேண்டும்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? மின்னலைப் போல மறைவதைப் பாராய்…! ஏன்று குருநாதர் பாடியது போன்று
1.செல்வத்தை எவ்வளவு தேடிச் சென்றாலும்… அதன் வழி சம்பாரித்து வைத்திருந்தாலும்…
2.அந்தச் சொத்தைக் குழந்தைகள் சீராக அமைக்கின்றனரா…? பாதுகாக்க முடியவில்லை.
3.எத்தனையோ அரசுகளை அரசர்கள் ஆண்டார்கள்… சாம்ராஜ்யத்தை ஆண்ட அந்த அரசர்கள் இருக்கின்றார்களா…? அவருடைய சொத்துக்கள் இருக்கின்றதா… “இல்லை…”
4.இல்லாததற்கு நாம் ஏன் இந்த மன உறுதியைக் கொண்டு வர வேண்டும்…?
5.என்றும் நிலையானதாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

எப்படி அணுவாகிச் சூரியன் ஆனதோ பிரபஞ்சமான பின் உயிரணு ஆக ஆனால் அது என்றுமே அழிவதில்லை. தீயில் குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகள் கருகுகின்றது.

எதிலும் அழியாத உயிரை… அந்த உயிரைப் போன்றே ஒளியான அணுக்களின் தன்மையாக நாம் பெருக்குதல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்.

“சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதால்தான் கடைசியில் இறப்பை எய்துகிறோம்

“சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதால்தான் கடைசியில் இறப்பை எய்துகிறோம்

 

இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியால் பூமி எதை எதை எடுத்து வளர்க்கின்றதோ அந்தத் தொடரின் அமிலக் கலவையின் உயர்ந்த வீரியம் கொண்ட உயிர் நிலை தான் மனிதச் சரீரம் எடுக்கும் உண்மை நிலை.

பூமியின் இயற்கைத் தன்மையிலேயே அறிவின் ஆற்றலைச் செயலாக்கும் திறன் கொண்ட
1.மனித நிலையில் ஜீவித சரீர ஓட்டத்தில்
2.எந்தச் சுவையின் உணவு முறையில் மனிதன் உண்டு வாழ்கின்றானோ
3.அந்த அமிலம் மட்டுமல்லாமல் இந்தப் பூமியிலுள்ள கனி வள அமிலத் தன்மையின் குணமும் மனிதச் சரீரத்தில் உண்டு.

மனிதன் தான் எடுக்கும் சுவாசத்தின் உணர்வால் இந்தப் பிறப்பின் தொடர் வாழ்க்கையில்
1.பிறப்பு… இறப்பு…! என்ற இயற்கையின் கதியில் உட்பட்டு
2.அதையே நியாயப்படுத்தி வாழ்கின்றானே தவிர
3.மனிதனுக்குள் மறைந்துள்ள “நான் என்பது யார்…?” என்ற நிலையை மனிதன் உணரவில்லை.
4.பிறப்பையும் இறப்பையும் ஏற்றுக் கொண்ட நிலை தான் உள்ளது
5.எங்கிருந்து வந்தோம்… எங்கே செல்ல வேண்டும்… ஏன்… எதற்காக.. எப்படி…? என்று அறியும் நிலை இல்லை.

ஆனால் கோள்களில் செயல்படும் எண்ணிலடங்காத தெய்வ சக்திகளின் சூட்சமத்தின் சூட்சமமே “மனித உயிரும்…!”

மனித உயிரின் ஜீவித உடலின் உயிர் அணுக்கள் தான் உயிர்ப்பித்து உணர்வு கொண்ட சுவாச கதியில் செயல் கொண்ட அமில உயிர்ப்புத் தன்மைகள் அதனுடைய கதியின் நிலைக்கொப்பத்தான் வாழ்க்கையின் எண்ண உணர்வு நிலையின் செயலின் கதி ஓட்டம் இன்று மனிதன் வாழும் நிலை.

(அதாவது உயிரால் ஜீவன் பெறும் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்துமே அந்த உயிரின் தொடர்பால் தான் சுவாசிக்கும் நிலையே பெறுகிறது. அப்படி வெளியிலிருந்து உடலுக்குள் வரும் பல சக்திகள் அது எந்த எந்த உணர்வு கொண்டு வந்ததோ அதற்கு ஒப்பத்தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் இயங்கி நம் வாழ்க்கையே அமைகிறது)

இந்த உலகில் கலந்துள்ள அமிலத்தின் அனைத்துத் தொடர்புகளும் மனித உயிரின் சூட்சமத்தில் அடங்கியுள்ளது. அது எல்லாவற்றையும் பெறும் தகுதியும் உண்டு.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.

உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்…!

இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)

இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது…
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
(2.வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.

இந்தப் பூமியில் சில மகான்களின் தத்துவம் எப்படி வளர்ந்தது…?

நம்முடைய உணர்வின் எண்ணம் எதை எண்ணிச் செயல்படுகின்றதோ அதற்கொப்ப குண அமிலங்கள் உடலுக்குள் வந்து சேர்கின்றது. அத்தகைய உயிர் அணுக்களுக்குள் எது பதிவாகியுள்ளதோ அந்தப் பதிவின் தொடர் அலை ஜீவித வாழ்க்கை தான் மனிதனின் வாழ்க்கை.
1.அதன் தொடரில் எண்ணும் எண்ணமே தான்
2.நம்முடைய ஆத்மாவில் பதிவாகி
3.நம் ஆத்ம தொடரின் வளர்ப்பும் செழிப்பும்.
(உடலில் உள்ள உயிரணுக்களின் நிலையும் நமக்குச் சொந்தமான உயிரணுவின் நிலையும் இங்கே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது)

இந்த நிலையில் இருந்து தான் மனிதனில் சிலருக்கு அபூர்வமான உண்மைத் தன்மைகளை உணரும் நிலை ஏற்பட்டது.

இந்தக் கலியிலேயே பிறப்பால் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு சிறுவன் தன் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட சந்தர்ப்பத்தால் தெய்வ குணத்தின்பால் “கிருஷ்ணர்… இராமர்…!” என்ற தன் எண்ணத்தில் ஈர்க்கப்படுகின்றான்.

அதன் தொடர்பால் அந்தச் சிறுவனின் எண்ணம் சர்வ சதா காலமும் கிருஷ்ணனின் நாமத்தைத் தெய்வ குணமாக எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

அப்பொழுது விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் சக்தி ஒளி அந்தச் சிறுவனின் மேல் பட அந்தச் சிறுவனில் இருந்த இருள் அகலுகின்றது.
1.அந்த மகரிஷிகளின் ஒளி சக்தியால்
2.சிறுவனின் ஆத்மா மங்காத நட்சத்திர ஒளியைப் பெற முடிந்தது. (பாலயோகீஸ்வரர்)

எதைத் தொடர்ந்து எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வே தான் ஆன்மா.
1.அந்த ஆத்மாவின் விதி கொண்டு தான் நற்கதியும் துர்க்கதியும்.
2.நற்கதியின் எண்ணத்தை மதி நுட்பமுடன் எண்ணும் பொழுது ஆத்மா நிச்சயம் ஒளித் தன்மையில் பிரகாசிக்கும்.

மனிதன் “நான் என்பது யார்..?” என்பதை உணரக்கூடிய நிலையில் மெய் ஞானத்தில்
1.மகரிஷியாகக் கூடிய உயிர் தான் தன்னுயிரும் என்பதை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து அந்த நிலையை எய்த முடியும்.

துருவ (நட்சத்திர) தியானத்தை லேசாக நினைத்து விடாதீர்கள்

துருவ (நட்சத்திர) தியானத்தை லேசாக நினைத்து விடாதீர்கள்

 

1.உயிரணு தோன்றி… மனிதனாகப் பிறந்து வளர்ந்து
2.27 நட்சத்திர உணர்வுகளை உணவாக உட்கொண்ட பின்…
3.உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது.

துருவத்தை எல்லையாகக் குறி வைத்து அதன் வழி நட்சத்திரங்களின் உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து அதனின் எல்லையை அடையும் போது துருவ நட்சத்திரமாகிறது.

நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளில் அவைகளை எடுத்தாலும் உயிரணு தோன்றிய பின்… நட்சத்திர உணர்வுகளை உட்கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மை வருகிறது… மற்றதைக் கருக்கி விடுகின்றது.

1.நட்சத்திரம் மின் கதிர்களாக வரப்படும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போன்று தான்
2.இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.

மனிதரான பின் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றான பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது. அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உணர்வுகளும் ஒளியாகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி “சப்தரிஷி…” சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு… அந்த மண்டலங்களாக துருவ நட்சத்திரத்துடன் இயங்குகின்றது.

மகாபாரதத்தில் இது தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் காலத்தால் மறைத்து விட்டார்கள். இந்த உண்மைகளை நாம் மறந்தே போய் விட்டோம்.

காரணம்… அரசர்கள் தனக்குத் தெரிந்த “ரகசியம்…” மற்றவர்களுக்குத் தெரிய கூடாது என்ற நிலையில் அவ்வாறு செயல்படுத்தி விட்டார்கள்.
1.வேதங்களை மாற்றப்பட்டு… உண்மையின் இயக்கங்கள் மறைக்கப்பட்டு…
2.மறைந்த உணர்வுகளை… அந்த உண்மைகளைத் தேடிக் கொண்டே இருக்கின்றோம். இன்னும் கிடைத்த பாடு இல்லை…!

ஆனால் இப்பொழுது நீங்கள் அதை தேடிக் கொள்ள வேண்டாம்..! உங்கள் உடலுக்குள் அனைத்தும் உண்டு.

ஒளியாக எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு) இருந்தாலும் ஏற்றுக் கொள்வார் குறைவாகவே உள்ளனர்… ஏற்றுக் கொள்வதே மிகக் கடினமாக இருக்கின்றது

காலை துருவ தியானத்தில் எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை எல்லாம் தொடர்பு கொள்ளச் செய்கிறோம்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை எடுத்து
1.அந்த இயக்கச் சக்தியை உங்களுக்குள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் இயங்கிப் “பேரொளியாக…”
2.உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளி மயமாக மாற்றி
3.அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலையை அடைந்து
4.என்றும் பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில்
5.வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.

உங்களுக்குள் ஆழப் பதிவு செய்த இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வந்து இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி… இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்துச் செயல்படுங்கள்.

1.மனித வாழ்க்கையில் வரும் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பகைமை உணர்வோ போன்றவைகளை மாற்றி அமைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் தனக்குள் புகாத வண்ணம் தடுத்துக் கொள்ளுங்கள்.

சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்ய முடியும்.

ஆகவே அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து உடலுக்குள் அதை அணுக்களாக மாற்றிடும் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான் துருவ தியானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

அதை லேசாக நினைத்து விடாதீர்கள்…!