அருள் ஒளி கொண்டு அனைத்தையும் அரவணைத்துச் சென்றால் தான் பேரானந்தப் பெரு நிலை பெற முடியும்

அருள் ஒளி கொண்டு அனைத்தையும் அரவணைத்துச் சென்றால் தான் பேரானந்தப் பெரு நிலை பெற முடியும்

 

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அதற்கு மத்தியிலே இடைப்பட்ட நிலைகள் வரப்படும் பொழுது ஒருவர் வந்து அவன் மோசமான ஆள்… உதவி செய்யாதீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அப்போது நமக்கு வெறுப்பின் தன்மை வருகிறது.

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணும் போது மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று சொன்னால் நாம் எண்ணிய எண்ணங்களுக்கு அது எதிரியாகிறது. நமக்குள்ளே போர் வருகிறது.

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று தான் நமக்குள் அந்த எதிரியின் தன்மைகள் உருவாகி விடுகிறது. இப்படி உருவாகும் அந்தச் சக்திகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.

கைகேயி இராமன் மீது வெறுப்பு காட்டுகிறது… ஏனென்றால்
1.தன் பையன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி
2.இது தன்னிலே வளர்ந்த உணர்வு…. அந்த அணுக்கள் அதை எண்ணுகின்றது
3.அந்த உணர்வின் தன்மை இங்கே உருவாக்குகின்றது

தசரதனுடைய ஆசையோ இராமன் மீது இருக்கின்றது. அதே சமயத்தில் தனக்குள் இருக்கும் சக்தி (தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவி) அதனுடைய பாசத்தால் ஓங்கி வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அதாவது தசரதன் அவன் மனைவியின் நிலையை மீற முடியவில்லை.

அன்பு கொண்ட மனைவி கோசலை தியாகம் செய்கிறது…! மூத்த மகன் இராமன்… சீதாராமா ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைகள் இருக்கின்றான்.

சுவைக்கொப்பத் தான் எண்ணங்கள் (சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணம்) என்று அவனுடைய எண்ண அலைகள் இருப்பினும் தூண்டிய உணர்ச்சிகள் தன் சகோதரனாக இலட்சுமணனாக இருக்கின்றான்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு எந்த உணர்வின் தன்மை எண்ணி எடுக்கின்றோமோ அதன் சக்தியாக இயக்குகிறது. ஆனால் அதிலே இந்த விஷத்தின் தன்மை கலந்தால் எதிலே இது கலக்கின்றதோ அந்த வேகத்தின் தன்மை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இது எல்லாம்
1.ஒரு அணுவுக்குள் இருக்கும் நிலையும்… அது கவர்ந்து கொண்ட உணர்வின் சக்தியும்
2.அது எவ்வாறு இயக்குகிறது…? என்று தான் இராமாயணம் காட்டுகிறது.

இராமன் காட்டிற்குள் செல்கின்றான். அங்கே புலியும் இருக்கிறது கரடியும் இருக்கிறது. இருந்தாலும் அதைச் சீராக்கிக் கொண்டு வரும் நிலையாக இராமன் என்ன செய்கிறான்…?

1.இந்த உடலுக்குள் வரும் மற்ற ஆசைகளை விடுத்து அமைதியாகச் செல்கிறான்…
2.எல்லாவற்றையும் இவன் சகோதரனாக ஆக்குகின்றான் என்று காட்டுகிறார்கள்.

அதாவது இந்த மனித வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் நம் உடலுக்குள் சகோதரனாக ஆக்க வேண்டும்…!
1.எதையுமே பகைமை ஆக்காது…
2.எதிரியாக உருவாக்காது…
3.இணைந்து வாழச் செய்யும் அரும் பெரும் சக்திகளை நாம் எடுக்க வேண்டும்
4.உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும் என்று இராமாயணம் காட்டுகிறது.

வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

 

வேண்டாதவரைப் பார்க்கும் பொழுது எதிரி என்ற நிலையில் அவர் செய்வது தப்பு என்று நினைக்கின்றோம்… அடுத்தவரிடத்திலும் அதைத் தான் சொல்வோம்.

அவன் நல்லதையே செய்தாலும் கூட…
1.அவனை எந்தக் குறிக்கோளுடன் நாம் முதலில் பதிவு செய்திருக்கின்றோமோ
2.பார்த்தவுடனே ஊரை “ஏமாற்றுவதற்கு என்னவோ… அதைச் செய்கின்றான்…” என்று சொல்கிறோம்.

அவன் நல்லதைச் செய்வான். அவன் செய்வதை நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. அவனைப் பற்றிய தவறான உணர்வுகளையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அதே சமயம் நமக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தப்பு செய்து விட்டால்… அது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது… “அவர் தப்பே செய்ய மாட்டார்…!” என்று தான் நாம் சொல்கிறோம்.

1.இங்கே பாசத்தால் தவறை மறைக்கின்றோம்… தப்பை வளர்க்கின்றோம்
2.அங்கே வெறுப்பால் நியாயத்தையே மறைக்கின்றோம்… ஆனால் தவறை வளர்க்கின்றோம்

இதைப் போன்று நம்மை அறியாது வரக்கூடிய உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வந்து நமக்குள் இயக்குவதைத் தான் கூனி என்றும் சகுனி என்றும் காவியங்களில் காட்டுகிறார்கள்.

ஒருவர் மீது பற்று இல்லை என்றால் அந்த வெறுப்பின் தன்மை வரும் பொழுது கூனி… பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அது இணைத்து விடுகின்றது.

இவ்வாறு நமக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட…
1.என்ன பெரிதாகச் செய்து விட்டார்…!
2.ஏமாற்றுவதற்குத் தான் இதைச் செய்கிறார்..! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோம்

இராமாயணத்தில் கூனி என்ன செய்கிறது…?

இராமன் உயர்ந்தவனாக இருந்தாலும் அது பிடிக்காதபடி அவனைப் பகைமையாக ஊட்டுவதற்கு சிற்றன்னையான கைகேயியிடம் அதை உருவாக்குகின்றது.

தசரதன் உன்னுடைய கணவன் தானே… அவனுக்குப் பிறந்த மகன் தானே பரதனும்…! அவனுக்கு ஏன் அந்த அரசில் உரிமை கிடையாது…? என்ற உணர்வை ஊட்டுகிறது.

இராமன் இருந்தால்தான் சாம்ராஜ்யத்தை ஆள முடியும். இங்கிருந்து அவனை அனுப்பி விட்டால் “பரதன் எளிதாக ஆட்சிக்கு வரலாம்…” என்று இந்த ஆசையின் உணர்வுகளைத் தூண்டுகிறது கூனி.

இராமனைப் பிடிக்கவில்லை… அதனால் பகைமையை ஊட்டி அவ்வாறு செயல்படுகிறது. ஏனென்றால்
1.நமக்குள் எதிரியான உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உடலுக்குள் அணுக்களாக விளைந்து விட்டால் அது எதைச் செய்கிறது..?
2.ஆசையினால் குற்றவாளிகளை எப்படி உருவாக்குகின்றது…? என்ற உணர்வைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

காவியங்களில் மகரிஷிகளால் காட்டப்பட்ட மூலக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.

பகைமைகளை அகற்றி ஒன்றி வாழும் உணர்வை நமக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்தமாக வாழும் வழியைத் தான் காவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு

மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு

 

1.நாம் கவர்வது (சுவாசிப்பது) எல்லாம் மணமாக மாறுகின்றது.
2.அந்த மணத்தை நுகரும் பொழுது அது உணர்வாக ஆகின்றது
3.அந்த உணர்வின் தன்மை தான் இயக்கம் ஆகின்றது
4.அந்த உணர்வின் தன்மை தான் செயலாகின்றது
5.அந்த உணர்வின் தன்மை தான் உடலாகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான்
6.ஆலயத்திலிலுள்ள தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களையும் வைரக் கிரீடத்தையும் வைத்து
7.மலர் மாலைகளையும் பல ஔஷதங்களையும் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களை மார்பில் அணிந்து காட்டி உள்ளார்கள் என்றால் அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
1.அந்தத் தங்கத்தை போல என் மனம் மங்காது இருக்க வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் அவர்கள் மனம் மங்காத நிலை பெற வேண்டும்
3.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் மனம் மங்காத நிலையில் வரவேண்டும்…
4.தங்கத்தைப் போல அவர்கள் மனங்கள் வளர வேண்டும் என்று எல்லோரையும் எண்ணும்படி செய்கிறார்கள்.

ரோட்டில் செல்லும் பொழுது ஒருவன் அடிபட்டுக் கீழே விழுகின்றான். அடப் பாவமே யார் பெற்ற பிள்ளயோ…? என்று உற்றுப் பார்க்கின்றோம். வேதனையான உணர்வை நுகர்கின்றோம்.

ஆனால் அவன் அடிபட்டிருந்தாலும் அவனை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே “அவன் உடல் நலம் பெற வேண்டும்” என்று எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்க வேண்டும்…
1.உடனடியாக நல்ல உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர்…
2.உயர்ந்த பண்புகளையும் எண்ணி எடுக்கும்படி செய்தனர் ஞானிகள்.

ஆலயத்தில் கனிகளை வைத்துக் காட்டியிருக்கின்றார்கள். கனிகளைப் பார்த்த பின் அதனின் சுவையை எண்ணி… அதை உட்கொள்ள வேண்டும் என்று எப்படி விரும்புகிறோமோ அதே போன்று அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆண்டவனுக்குச் சுவை கொண்ட பொங்கலையும் படைத்து வைத்திருக்கின்றார்கள். பலவற்றையும் சேர்த்துச் சமைத்துச் சுவைமிக்க நிலையாக அந்தப் பொங்கலை உருவாக்கியது போன்று
1.வாழ்க்கையில் வரும் அனைத்து உணர்வுகளும் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக நமக்குள் விளைய வேண்டும்
2.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் சுவை கொண்ட வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றும்.
3,இப்படி உயர்ந்த பண்புகளை எண்ணி எடுப்பதற்குத் தான் அங்கே பொங்கலை வைக்கும்படி காட்டுகின்றார்கள்.
4.பல பல சுவை கொண்ட பதார்த்தங்களையும் அங்கே வைக்கின்றார்கள்.

இது எல்லாம் துவைதம்… கண்ணுக்குப் புலப்படக் கூடியது. இதை வைத்துக் கண்ணுக்குப் புலப்படாத உயர்ந்த சக்திகளை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

ஆகவே…
1.இபபடி ஆலயத்தில் ஞானிகளால் உருவாக்கப்பட்ட தெய்வீக நிலையை எண்ணி
2.நமக்குள் அந்தத் தெய்வ குணத்தை உருவாக்கக் கூடிய நிலையும்
3.நமக்குள் அதை உருபெறச் செய்யக்கூடிய நிலையையும்
4.நம் உடலுடன் இணைக்கக் கூடிய நிலையையும்
5.நம் சொல்லால் பிறருடைய நிலைகளை அருள் வழியில் இயக்கக்கூடிய சக்தியையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்…!

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…! (ஞானகுரு).

அண்ணாமலையான் தீபம்

அண்ணாமலையான் தீபம்

 

கார்த்திகை தீபம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனிதனின் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காட்டினார்கள் ஞானிகள். அனைத்தையும் தெரிந்து கொள்ளக்கூடிய நிலைகள் மனிதனின் ஆறாவது அறிவு.

ஒரு விளக்கை ஏற்றினால் அந்த விளக்கின் ஒளி கொண்டு மற்ற பொருள்களைப் பார்க்க நேர்கின்றது… தெரிய முடிகின்றது. அதைப்போல ஆறாவது அறிவால் நாம் தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.

இதை அண்ணாமலை தீபம் என்று சொல்வார்கள்…! அண்ணாமலை தீபம் என்றால்…
1.நமது உடல் மலையாக இருக்கின்றது
2.நம் உயிர் இருக்கும் இடம் ஒளியாக இருக்கின்றது
3.இந்தச் சுடரின் ஒளியைப் போல நம் உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாக்கி ஒளியாக சுடராக மாற்றிடும்
4.அதை நினைவுபடுத்தும் நாள் தான் இந்த கார்த்திகை ஜோதியின் தன்மைகள்.

அன்றைய தினம் நம் வீட்டு முச்சந்தியில் விளக்குகளைக் கொளுத்தி வைப்போம். எல்லா நாளும் அல்லாது வீட்டு முகப்பில் ஏன் விளக்குகளை வைக்கின்றோம்…?

முகப்பில் ஒளி என்ற உணர்வை வைத்து இருளை அகற்றிடும் தன்மையாக மெய் என்ற உணர்வை நமக்குள் அறிந்துணர்ந்து… எது மெய்…? எது பொய்…? என்று வெளிச்சத்தின் மூலமாக நாம் காண முடிகின்றது.

நமக்குள் எந்தத் தீமைகளும் புகாது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும் என்று காட்டுவதற்குத்தான் வீட்டு வாசலின் முகப்பில் விளக்கை வைப்பது.

அந்த சாஸ்திர வழக்கப்படி மனிதர்களுக்கு நினைவுபடுத்தும் நாள் தான் இது. நாம் சுவாசிக்கும் உணர்வு (மூக்கிற்கு நேராக உயிர்) முகப்பில் இருக்கின்றது. தெளிவான உணர்வின் தன்மையை அருள் ஒளி என்ற உணர்வை நாம் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சேர்த்து இருளை அகற்றும் தனக்குள் தெளிந்த உணர்வு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்.

இந்த மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்…
1.நாம் சுவாசிக்கும் முகப்பிலே உயிரிலே பட்டுத்தான் உண்மையின் உணர்வை நாம் அறிகின்றோம்.
2.அங்கே ஒளி என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது பொருளைக் காணும் தன்மைகள் வருகின்றது.

ஆகவே தான் இதை நினைவுபடுத்தும் நாளாக “அண்ணாமலை தீபம்” என்று காட்டுகின்றனர். அண்ணாமலையான் என்றால் நம் உயிர் உடலின் உச்சியிலிருந்து கொண்டு அந்த ஒளியின் தன்மையாக நம்மை இயக்குகிறான்.

உடல் சிவம் என்றாலும் சிவனின் ரூபத்தைக் காட்டி அண்ணாமலையான் என்று உயிரான ஈசனைக் காட்டி… உடலை (சிவத்தை) இயக்குகிறது என்று காட்டுகின்றனர்.

ஆனாலும் நாம் சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு எதன் உணர்வைத் தெரிகின்றோமோ அதன் ஒளியின் தன்மை கொண்டு தான் நாம் இயங்குகின்றோம்.

1.கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றும் போது ஒளியின் உணர்வாக நம் உடலே ஒளியாகின்றது
3.நம் சொல்லும் ஒளியாகின்றது… செயலும் ஒளியாகின்றது.

இதை நினைவுபடுத்தும் நாள் தான் அண்ணாமலையான் தீபம்.

ஆறாவது அறிவு கொண்டு தெரிந்து… தெளிந்து… நாம் வாழும் இந்த மனித உடலில் வேதனை என்ற விஷத்தின் தன்மை எடுத்து நம் ஆன்மாவை அது மறைத்திடாது அருள் ஒளியைப் பெருக்க வேண்டும்.

உதாரணமாக… தான் சேமிக்கும் நஞ்சினை ஒளியாக மாற்றி வைரங்களாக மாற்றுகின்றது நாகம். விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது அது நாகரத்தினமாக மாறுகின்றது.

அதைப் போன்று தான்…
1.மனிதனின் உணர்வின் தன்மைகளை அணுக்களாக்கப்படும் பொழுது உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
2.மற்றொன்றில் இருக்கும் இருளை மாய்த்து அந்த உணர்ச்சிகளை மாற்றி ஒளி என்ற நிலைகளாகப் பிரகாசிக்கச் செய்யும்.

ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதப்படும் பொழுது “ஒளி” என்ற நிலைகள் வருகின்றது. ஒரு உணர்வுடன் ஒரு உணர்வு மோதும் பொழுது “வெப்பமாகி” உணர்வுகள் மாற்றம் அடைகின்றது.

எதன் வழி கொண்டு வருகின்றதோ அதற்குத்தக்க இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றது. இப்படித்தான் உயிர் நம்மை இயக்குகின்றது. நாம் நுகரும் உணர்வை வைத்துத்தான் நம் உயிர் ஆட்சி புரிகின்றது.

ஆகவே இருளை அகற்றி நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை ஏங்கிப் பெறுவோம்.
1.நாம் தெளிந்த மனம் பெறுவோம்… தெளிவான வாழ்க்கை வாழ்வோம்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே இருப்போம்.

தன்னைத் தான் அறிந்திடும் நிலையை மக்களுக்கு ஞானிகள் ஊட்டிய வழி முறை

தன்னைத் தான் அறிந்திடும் நிலையை மக்களுக்கு ஞானிகள் ஊட்டிய வழி முறை

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

இதை உணர்த்துவதற்காகதான் சிவ ரூபத்தைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சிவனுக்குப் போட்டிருக்கும் ஆடைகளைப் பார்த்தால் யானைத் தொலி (தோல்) புலித் தொலி மான் தொலி என்று காட்டியிருப்பார்கள். நாம் அந்தந்தச் சரீரத்தை எல்லாம் பெற்றுத் தான் இந்த மனித உடலாக வந்தோம்.

சிவன் கையிலே திரிசுலம் இருக்கும்… அதிலே உடுக்கையும் இருக்கும்.
1.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற இதனின் இயக்கத்தில் தான்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் எது எது இணைகின்றதோ அது “ஒலியாகின்றது…” (திரிசூலத்தில் உடுக்கையை வைத்தது இதற்குத் தான்)
3.முதலில் மோதும் இசைகள் அதனுடன் ஒடுங்கி விடுகிறது
4.மீண்டும் மற்றொன்றின் ஒலிகள் இணைந்த பின் மறுபடியும் சுருதிகள் மாறுகின்றது.
5.சிவன் உலகை ஆட்டிப் படைக்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.

ஆக சிவ உருவத்தைக் கண்ணுற்றுப் பார்த்தாலே உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைக் காட்டுகின்றார்கள்.

சிரசில் பட்டைகள் மூன்று இருக்கும். விபூதியால் பூசப்பட்டிருப்பினும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும்
1.தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
2.அது தனக்குள் அங்கீகரித்துக் கொள்கிறது… தன் நிலையை மாற்றிக் கொள்கிறது என்ற நிலையை
3.நாம் அறிவதற்காக இவ்வாறு வைத்துள்ளார்கள்.

சிவனின் சிரசில் கங்கையும்… சிவன் பாதி சக்தி பாதி என்றும் காட்டுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் வெப்பம் கலந்தே இருக்கும். அந்த வெப்பத்தின் இயக்கத்தால் தான் அனைத்தும் இயங்குகிறது என்று பராசக்தியாகக் காட்டி “இந்த வெப்பம் சர்வத்தையும் உருவாக்கும்…” என்ற நிலையை இங்கே தெளிவாக்குகின்றார்கள்.

சிவன் உடல் முழுவதிலும் பாம்பைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள். ஜடா முடியிலும் இந்த விஷப் பாம்பு இருக்கும்.
1.ஒவ்வொரு அணுக்களிலும் உள்ள இந்த விஷமே
2.இயங்குவதற்கு மூல காரணம் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.

இப்படி ஒரு உருவத்தைக் காட்டி அருவ நிலையின் செயலாக்கமும்… சேர்ந்த பின் இந்த உருவத்தின் நிலைகள் எவ்வாறு…? (உருப் பெறுகிறது) என்று தெளிவாக்குகின்றது நம் வேதங்கள்.

வேதங்களின் மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரிக் சாம அதர்வண யஜூர் என்று முழுமையாக யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அறிந்து கொண்டால்
1.எப்படி எல்லாம் உருவாகி இன்று மனிதனாக வந்துள்ளோம் என்று தன்னை அறிந்திட முடியும்.
2.தன்னைத் தான் அறிந்தவன் (ஞானிகள்) வெளிப்படுத்திய உணர்வு தான்
3.சூட்சமத்தில் நடப்பதை உருவமாக எப்படி வருகிறது என்பதனை உருவத்தை அமைத்துத் தெளிவாக்கினார்கள் ஞானிகள்.

ஜடாமுடியில் கங்கை சிவன் பாதி சக்தி பாதி என்று உடலில் சரி பகுதி வைத்துள்ளார்கள்… அர்த்தநாரீஸ்வரர். சிரசிலே பிறைச் சந்திரன்.

காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் இரண்டறக் கலந்து விட்டால் அதுவும் இதுவும் கலக்கப்படும் போது சரி பகுதியாக மாறுகின்றது. இதன் ஒளியும் மங்குகிறது… அதன் ஒளியும் மங்குகிறது.

இப்படி மாறுவதைக் காட்டுவதற்குத்தான் சிவனின் சிரசிலேயும் பிறைச் சந்திரனைப் போட்டுள்ளார்கள்.

இதை எல்லாம் ஞானிகள் தன் இன மக்களுக்குத் தன்னை அறிந்து செயல்படும் வல்லமை வர வேண்டும் என்பதற்குத் தான் அருவத்தை உருவமாக்கிக் காட்டினார்கள்.

1.நாம் மனிதனாக எப்படிப் பிறந்தோம்…?
2.அணுக்களின் செயலாக்கங்கள் எது…? என்ற நிலையைத் தான்
3.வேதங்களில் நான்கு மறைக்குள் உலகமே அடங்கியுள்ளது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பெரும்பகுதியான தெய்வங்களின் காலடியிலே அசுரனைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

பெரும்பகுதியான தெய்வங்களின் காலடியிலே அசுரனைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

 

ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை படரப்பட்டு நல்ல அணுக்களை வீழ்த்தி விடுகிறது.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

“ஆதி மூலம் என்ற உயிர் தான்…” மிருக நிலையிலிருந்து தீமைகளை நீக்கிட வேண்டும் நீக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை வலு சேர்த்துச் சேர்த்து பரிணாம வளர்ச்சியாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது

நம் உயிரை ஈசனாகவும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக சிவமாகவும் இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட அந்த உணர்வு வினைக்கு நாயகனாகவும் இயங்குகிறது என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர் ஞானிகள்.

உடல் சிவம் என்றாலும் அதிலே நாம் சேர்த்துக் கொண்ட பல கோடி வினைகளுக்கொப்ப நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது…
1.இந்த கணங்களை எல்லாம் உருவாக்கியது உயிர் என்று அந்த உயிரை எண்ணி
2.இந்த கணங்களுக்கெல்லாம் ஈசா… “கணேசா…” என்று உயிரை வணங்கும்படி செய்கின்றனர்.

தீமைகளை நீக்கிக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி “கணபதி…”

1.நல்ல உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.அது தீமையை அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது என்ற நிலையை உணர்த்துவதற்காக
3.அங்குசபாசவா…! என்று விநாயகர் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது.

உடல் வலு பெற்றுப் பெற்றுத் தான் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தோம் என்று யானையின் சிரசை மனித உடலில் பொருத்திக் காட்டுகின்றனர். ஆனாலும் எண்ணத்தின் வலுக் கொண்டவன் தான் மனிதன்

பல கோடி உடல்களிலே புலிக்கும் வலு அதிகம்… மானுக்கும் வலு அதிகம்… புழுவிற்கும் வலு அதிகம்… ஒரு எறும்புக்கும் வலு அதிகம்…! ஏனென்றால் விஷத்தின் தன்மை அந்த உடலிலே அதிகமாக இருப்பதால் தான் தன் சக்திக்கு மீறிய எடை உள்ள பொருளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது ஒரு எறும்பு. ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை எதற்குள் அதிகம் இருக்கின்றதோ
2.அதிலே வலுவின் தன்மையும் அதிகம் இருக்கின்றது.

இப்படி உருவான இந்த நிலை தான் நாம் பல கோடிச் சரீரங்களில் நஞ்சை நீக்கி இந்த மனித உடல் பெற்ற நிலை. இருந்தாலும் மனிதனாக ஆன பின் நஞ்சை நீக்கும் அருள் சக்தி பெற்ற நாம்
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

துருவ நட்சத்திரம் மனிதாக இருந்து (அகஸ்தியன்) எப்படிப் பேரொளியாக மாறியதோ அந்த உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து அதனின் உணர்வை நம் உடலில் பெருக்கினால் அதன் உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பிறவி இல்லா நிலைகள் அடைவோம்.

இந்தப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத்தான் விநாயகரை வடமேற்காக வைத்து வடகிழக்காக நம்மை வணங்கும்படிச் செய்தார்கள். வடகிழக்காகத் தான் துருவ நட்சத்திரம் இருக்கின்றது. விநாயகருக்குப் பின்னாடி வேப்ப மரமும் அரச மரமும் வைத்தார்கள்.

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கசந்த உணர்வைக் காட்ட வேப்ப மரத்தைக் காட்டினார்கள். அதே சமயத்தில்
1.இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையாக (துருவ நட்சத்திரம்)
2.இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றும் திறன் பெற்றதை அரசு என்றும்
3.அரச மரத்தை வைத்துக் காட்டினார்கள்.

பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உணர்வும் எதனின் நிலை கொண்டு செயல்படுகின்றதோ அதைத்தான் அங்கே வைத்துக் காட்டுகின்றார்கள்.

புராணத்தில் காட்டியபடி பார்த்தோம் என்றால் முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது என்று சொல்வார்கள். போர் நடக்கும் பொழுது கடைசியில் அசுரனை முருகன் கொல்கிறான்.

அந்தத் தருணத்தில் அசுரன் முருகனிடம் சொல்கிறான்…
1.நான் தோற்றுவிட்டேன்…
2.உன் காலடியிலே இருக்கின்றேன் என்று வரம் கேட்கிறான்.

ஆகையினால் அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்துத் தன் காலடியிலே முருகன் வைத்துக் கொண்டான் என்று இப்படிக் கதைகளைச் சொல்கிறார்கள்.

1.விஷம் என்ற நிலைகளை அடக்கும் சக்தி பெற்றதை உணர்த்தாதபடி
2.இப்படிப்பட்ட காரணங்களை இடையிலே இணைத்து விட்டார்கள்.

மயில் விஷத்தை உணவாக உட்கொண்டாலும் நஞ்சை அது அடக்கி ஆட்சி புரிகிறது என்று உணர்த்துவதற்காக மயிலின் காலடியில் விஷப் பாம்பைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

1.மனிதன் தன் ஆறாவது அறிவால் நஞ்சை அடக்கி
2.மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும் அருள் உணர்வை நாம் தெரிந்து உணர்ந்து
3.அதன் வழியின் நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதற்கு இவ்வாறு காட்டினார்கள்.

தெய்வத்தின் ஆணை நமக்குள் எப்படி ஒலிக்கும்…?

தெய்வத்தின் ஆணை நமக்குள் எப்படி ஒலிக்கும்…?

 

இந்த மனித வாழ்க்கையில்…
1.அன்றாடம் நாம் எத்தனை பேரைச் சந்திக்கின்றோமோ
2.எத்தனை பேர் துயரங்களைக் கேட்டோமோ
3.அவர்களுக்கெல்லாம் நாம் உதவி செய்தாலும் அந்த உணர்வுகள் (துயரம்) எல்லாம் நமக்குள் இயக்கமாகிறது.
4.நமக்குள்ளும் அந்தத் தீமையின் உணர்வுகளாக விளைந்து விடுகிறது.

ஆகவே நம் உடலான ஆலயத்திற்குள் எதைச் சேர்க்க வேண்டும்…?

எத்தனையோ உணர்வுகளை நாம் நுகர்ந்தோம். அதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெறவேண்டும்
2.அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும். என்று
4.இந்த உணர்வுகளை உட்செலுத்தி வலுவாக்கிக் கொள்ள வேண்டும்,

பின்… எங்கள் வாழ்க்கையில் எத்தனை பேரைச் சந்தித்தோமோ பார்த்தோமோ… அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெறவேண்டும்… அவர்கள் தொழில்கள் எல்லாம் வளம் பெறவேண்டும்… அவர்கள் வாழ்க்கை எல்லாம் வளம் பெற வேண்டும்… அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்று எண்ணி எல்லோரையும் (எல்லா உணர்வுகளையும்) ஒன்று சேர்க்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றாக ஆன பின் என்ன ஆகிறது…?

1.ஒரு வேம்பின் உணர்வைக் கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் எப்படி ஓடுகின்றதோ
2.ஒரு விஷமான செடியின் மணத்தின் தன்மை கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் சுழற்சி ஆகின்றதோ
3.இதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்கும் பொழுது
4.தீமை செய்யும் உணர்வலைகள் நம் ஆன்மாவிலிருந்து அகன்று ஓடிவிடும்.

ஒவ்வொருவரும் இதே போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.அனைவருக்கும் அந்த நற்பயன்கள் கிடைக்க வேண்டும்
2.அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3.அனைவரும் அரவணைத்து வாழும் சக்தி பெறவேண்டும்
4.அனைவரும் பேரன்பு கொண்டு பெரு வாழ்வு வாழ வேண்டும்
5.அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று எண்ணி இந்த மூச்சலைகளை வெளிப்படுத்த வேண்டும்.

எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு இப்படி வெளிப்படுத்தும் இந்த உணர்வுகள் எல்லாம் அலைகளாக மாறினால் நமக்கு முன் இருக்கும் மற்ற நஞ்சான தீமை செய்யும் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளிவிடும்… பரமாத்மா (காற்று மண்டலம்) தூயமையாகும்..!

இந்தப் பூமியின் நிலைகளை மாற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் ஞானிகள் இதைச் செய்தார்கள்.

ஆகவே தீமையை நீக்கிய உணர்வை இந்த முறைப்படி வினைக்கு நாயகனாக ஆக்கப்படும் பொழுது இது நமக்குள் இணைந்து வலிமை மிக்க சக்தியாக மாறுகின்றது.

இதே உணர்வை வைத்து…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று உயிரிலே மோதச் செய்தால்
2.அது எப்படித் தீமைகளை நீக்கியதோ அந்த உணர்வுகள் தெய்வ ஆணை…! தீமையை நீக்கிய அந்த எண்ணங்கள் நமக்குள் வருகிறது
3.அந்த ஆணைப்படி செய்தால் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி.

நம் ஞானிகள் மிகவும் அற்புதமாக சாதாரண மனிதனும் புரிந்து தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்ற இவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் அன்றாடம் செய்கின்றோமா…? இல்லை…! ஞானிகள் சொன்ன முறைகளுக்கு மாறான நிலைகளைத்தான் நம் வாழ்க்கையில் அமைத்துக் கொள்கிறோம்.

“சிவனுக்கு முந்தியவனாக…” விநாயகன் எப்படி ஆகின்றான்…

“சிவனுக்கு முந்தியவனாக…” விநாயகன் எப்படி ஆகின்றான்…

 

“உயிர் தான் ஈசன் என்றும்… கடவுள் என்றும்… உள் நின்று அவன் தான் இயக்குகிறான்…! என்றால் நம்புகின்றோமா…? என்றால் அது எப்படிக் கடவுள் என்று கேட்கிறோம்…!

இப்பொழுது நான் (ஞானகுரு) இங்கே பேசுகின்றேன். இந்த உணர்வுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது… வினையாக மாறுகின்றது.
1.இதை நீங்கள் நுகர்ந்து அறிந்தால் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.இந்த உணர்வுகளை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாறுகிறது உயிர்.

சிவனுக்கு முந்தியவன் விநாயகன்… சிவனின் பிள்ளை விநாயகன்…!

நான் சொல்லாகச் சொல்லும் உணர்வுகள் (வினை) இது முந்தியது… விநாயகன். உயர்ந்த உணர்வின் சக்தியை இப்பொழுது சொல்கிறேன். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டு நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாகி உடலானால் இது சிவமாகின்றது.

ஆகவே சிவனின் பிள்ளை விநாயகன். இவ்வளவு தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

1.நான் சொல்லும் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது அது சிவனுக்கு முந்தியது (அந்த வினை – விநாயகன்)
2.இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவானால் அது சிவனின் பிள்ளை விநாயகன்…!
3.உடல் சிவமாகிறது… இந்த உணர்ச்சிகள் வினை இயக்குகிறது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.

இப்படிப் பல கோடிச் சரீரங்களில் நாம் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றோம் கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…! கணங்களுக்கு அதிபதி கணப்தி…! என்று உயிரை வணங்கும்படி சொல்கிறார்கள் ஞானிகள்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது. நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வினை உடலாக மாற்றி நமக்குள் தெளிவாகிறது.

ஆகையினால் தான் இதைத் தெரிந்து கொண்ட உணர்வு கொண்டு அங்குசபாசவா…!
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதனை அடக்கும் வல்லமை பெற்றது என்று
2.விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்துள்ளார்கள்.

விஷத் தன்மை கொண்ட ஒரு கொசு என்ன செய்கிறது…?

மனிதனாக உருவாவதற்கு முன் விஷத் தன்மை அதிகம். யானையின் உடல் மேல் உள்ல தோல் மிகவும் வலுவானது..

ஆனால் இந்தக் கொசு அந்த யானைத் தோல் மீது அமர்ந்து தன் உடலில் உள்ள விஷத்தை அங்கே பாய்ச்சி அந்தத் தோலை அப்படியே விரியச் செய்து அதனின் இரத்தத்தைக் குடிக்கிறது.

யானை உடல் வலுப் பெற்றது. இருந்தாலும் தன் எண்ணத்தின் வலு கொண்டு அதிலிருந்து தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டு எண்ணத்தின் வலுப் பெறுகின்றது.

மண்ணை வாரித் தன் மீது வீசிக் கொள்கிறது.. வாலால் அடிக்கிறது… கொசுவிடமிருந்து தப்ப…!

இப்படிப் பல கோடிச் சரீரங்களில்…
1.”தீமையிலிருந்து விடுபட வேண்டும்..” என்ற வலுவான உணர்வுகள் கொண்டு எண்ணி எடுத்து
2.மாற்றியமைத்த உடல் தான் இந்த மனித உடல் என்று காட்டுவதற்கு
3.சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்கு யானையின் தலையை மனித உடலில் போட்டு விநாயகா என்று காட்டுகின்றார்கள்.

விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு வைத்துள்ளார்கள். உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்து அவரின் உணர்வினை நுகர்ந்தால் மூஷிகவாகனா (மூச்சு).

அந்த உணர்வு ஆன பின் அதே உணர்ச்சிகளைத் தூண்டி அவருக்குத் தக்க உதவிகளைச் செய்யச் செய்கின்றது.

நுகர்ந்தறிந்த உணர்வுகள் கொண்டு அவருக்கு நாம் உதவி செய்தாலும் அவரின் வேதனை உணர்வுகள் நம் நல்ல குணங்களை வங்கிட்டு விடுகிறது. அதனால் தான் அங்கே எலியைப் போட்டு வைத்துள்ளார்கள்.

ஒரு குளவி கொட்டினால் புழுவின் உடலின் அணுக்களுக்குள் அந்த விஷம் எப்படிச் சேர்கிறதோ அதைப் போல்
1.இந்த வேதனை என்ற உணர்வுகள் நல்ல அணுக்களில் ஊடுருவி விடுகிறது
2.அது வங்கிட்டுக் கொள்ளும்.. அதற்குள் குடியிருந்து கொள்ளும்
3.இதைக் காட்டுவதற்குத் தான் எலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் வளர்த்துக் கொண்ட நல்ல குணங்களைக் காக்க வேண்டும் என்பதற்கே ஞானிகள் அருவத்தின் செயலை ரூபமாகக் காட்டி இப்படித் தெளிவாக்கியுள்ளார்கள்.

மனிதனான பின் தனக்குள் வரும் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றும் பயிற்சியே பிரம்ம சூத்திரம்

மனிதனான பின் தனக்குள் வரும் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றும் பயிற்சியே பிரம்ம சூத்திரம்

 

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசம் செய்கின்றோம். பெரும்பகுதியான படித்தவர்கள் என்ன நினைக்கின்றார்கள்…? யாம் சொல்வதை சரியா தப்பா…! சரியா தப்பா…? சரியா தப்பா…? என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால் அந்த அளவுக்குப் படிப்பில்லாதவர்கள்
1.யாம் என்ன சொன்னாலும் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.
2.குருநாதர் சொன்னார் அல்லவா… இதை நாம் செய்து பார்ப்போமே…! என்று
3.அந்த உணர்வுகள் தூண்டும்போது அவர்கள் ஞானத்தைப் பெறுகின்றார்கள்.

படித்தவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

நான் மகாபாரதத்தைப் படித்தேன் கந்த புராணத்தை படித்தேன்… பிரம்ம சூத்திரத்தையும் படித்தேன். ஆனால் அதையெல்லாம் இங்கே சாமி (ஞானகுரு) சொல்லவில்லை.

ஆக அவர்கள் படித்ததைப் பதிவு செய்து கொள்வார்கள். ஆனால் இங்கே யாம் சொல்லும் ஞானத்தின் நிலைகள்
1.அந்த அருள் ஞானிகள் பெற்றதைச் சொல்லும்போது இந்தச் சூத்திரத்தை விட்டுவிடுவார்கள்.
2.காலி செய்து கொண்டே இருப்பார்கள்…
3.தான் பதிவும் ஆக்க முடியாது. அதைப் பெறவும் முடியாது.

அவர்கள் படித்த பிரம்ம சூத்திரத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மனு நீதி சாஸ்திரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1.மனிதனான பின் இந்த தீமைகளை அகற்றுவது எப்படி…?
2.தீமையை அகற்றியவன் யார்…?
3.தீமையை அகற்றிய உணர்வுகளை நாம் எப்படி எடுப்பது…? என்று
4.இந்த மனு நீதி சாஸ்திரத்தில் இது உண்டு.

மனுஷாள்…! என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அந்தச் சாஸ்திரத்தை தெளிவாக்கும் நிலைகள் இல்லை.

மனு நீதி சாஸ்திரத்தை நான் படித்து இருக்கின்றேன்… இவர் சொல்வது எங்கே இருக்கின்றது…? காணவில்லையே…! இந்த நிலைகள் தான் படித்தவர்களுக்கு எண்ணமாக வரும்.

மகாபாரதத்தைப் படிக்கும்போது படித்த நிலைகள்… அந்தப் படித்தது மட்டும் தான் இருக்கும். குருநாதர் சொல்வதை அதிலே காணோமே…! என்பார்கள்.

உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசியைச் சாப்பிடுகின்றார்கள். அதனின் ருசி வேறாக இருக்கின்றது. இங்கே நாம் பொன்னி அரிசியைப் போட்டுச் சாப்பிட்டோம் என்றால் அந்த ருசி வேறு இருக்கும்.
1.அந்த ருசியை இதிலே காணோமே… என்பது போன்று
2.அந்தப் படித்த உணர்வுகள் எதுவோ அதே தான் வரும்.

நம்மிடம் மொக்கை அரிசியைச் சாப்பிடச் சொன்னால் பார்த்தவுடனே பொன்னி அரிசியின் ருசி அதில் வரவில்லையே என்று தான் சொல்வோம்.

ஏனென்றால் அந்தந்த உணர்வின் சுவை எதுவோ அதனால் வளர்ந்த அணுக்களும் அதே போல் தான் உணர்வினை இயக்கும். ஆக மதங்கள் ஆனாலும் இனங்கள் ஆனாலும்
1.எதன் மேல் பற்று வைத்து நாம் பதிந்து கொண்டோமோ
2.அதன் சுவை தான் அவர்களுக்கு ரசிப்பாக இருக்கும்.

நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் ஞானியின் உணர்வை நாம் பெற வேண்டும். இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்று இங்கே யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவாக்கிக் கொண்டால் அதன் சாரமாக நமக்குள் அருள் ஞானியரின் உணர்வைப் பெருக்கி நமக்குள் அறியாது வரும் தீமைகளை மாற்ற முடியும்.

படித்ததை வைத்து நாம் தெளிவாக்க வேண்டுமென்றால்…
1.படித்தது பாதைகளை அறிவதற்கு உதவும்.
2.ஞானத்தின் நிலைகள் வளர்வதற்கு அருள் ஞானியின் உணர்வைப் பெறுதல் வேண்டும்.
3.ஞானத்தை வைத்துத்தான் படித்த கல்வியின் நிலைகள் ஞானத்தில் கொண்டு செல்ல முடியும்.

கல்வி உடலின் உணர்வுக்குதான் உதவுமே தவிர… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை வளர்க்கும் ஞானத்திற்கு இது உதவாது.

நமக்கு நற்பாதையை காட்டுவதற்குத்தான் கல்வி. அந்தக் கல்வியை நாம் சீராக எண்ணி
1.அந்த அருள் ஞானியின் உணர்வுடன் ஒன்றிப் பார்த்தால்
2.இன்றைய விஞ்ஞான உணர்வின் தீமையான விளைவுகளை மாற்றியமைக்கலாம்.

தீப ஒளித் திருநாள் – “கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்…” என்றால் ஞானிகள் கொடுத்த உண்மைகளை நாம் அறிதல் வேண்டும்

தீப ஒளித் திருநாள் – “கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்…” என்றால் ஞானிகள் கொடுத்த உண்மைகளை நாம் அறிதல் வேண்டும்

 

கண்ணின் நினைவு கொண்டு பிறர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் நமக்குள் அணுவானால் நரகாசுரனாகி விடுகின்றது.

இருவர் சண்டை இடுகின்றனர்… அதிலே ஒருவன் கொலை செய்கின்றான்…! என்பதை நாம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாக மாறி நம் நல்ல குணங்களைக் கொன்று தின்று கொண்டே இருக்கும்.

1.கண்களால் பார்த்துத் தான்
2.நமக்குள் நுகர்ந்தறிந்து அதைத் தீமை என்று உணர்கின்றோம்.
3.இருந்தாலும் நம் உயிர் நுகர்ந்த உணர்வினை உடலுக்குள் அணுவாக மாற்றி விடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரம் அருள் ஒளி பெற்று உணர்வின் ஒளியாக இருக்கின்றது. சூரியனின் காந்தப் புலனறிவு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தாங்கி அலைகளாகப் பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது.

நம் பூமியோ துருவத்தின் நிலைகள் கொண்டு அந்த அலைகளைக் கவருகின்றது. நமக்கு முன் பரவி வருகிறது.

தீப ஒளித் திருநாள் அன்று அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு ஒன்று கூடி அந்த அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் அனைவரது உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று அந்த வலுவைக் கூட்ட வேண்டும்.

உதாரணமாக நம் பிள்ளை சேட்டை செய்திருப்பான். அவனை வெறுத்துப் பேசுவதற்கு மாறாக அவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவனுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அவன் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அன்னை தந்தையருடன் ஒன்றுப்ட்டு வாழ வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுதல் வேண்டும்,

அதே போல் மற்றவர்களிடம் முதலில் நண்பராகப் பழகி இருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் பகைமை உணர்வு வந்து ஒருவருக்கொருவர் வெறுப்படைந்திருப்போம்.

அதை எல்லாம் தடுப்பதற்காக நாம் பார்த்த நண்பர்கள் குடும்பங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும். அவர் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் சாப அலைகள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அவர் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இப்படி எல்லோரும் ஏகோபித்த நிலைகள் எண்ணுதல் வேண்டும்.

பிறிதொருவர் என்று சொன்னாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் உண்டு…! உதாரணமாக
1.ஒருவர் நம்மைத் திட்டினார் என்றால் அவர் உணர்வு நமக்குள் வந்து
2.நாமும் பதிலுக்குத் திட்டும்போது அவரின் உணர்வு உடலில் வந்துவிடுகின்றது.
3.(அவர் உணர்வு இயக்கித் தான் நாமும் பதிலுக்குத் திட்டுகிறோம்).

அவன் திட்டிய உணர்வுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. அது நமக்குள் வந்து விடுகிறது. ஏனென்றால் உற்றுப் பார்க்கின்றோம்… பதிவாகிறது. பதிவானதை மீண்டும் எண்ணும் போது அந்த அலைகள் நமக்குள் வரத் தொடங்குகிறது.

ஒரு செடியில் வளர்ந்த சத்தினைச் சூரியன் எடுத்து வைத்துக் கொண்டால் அதிலே விளைந்த வித்தினை மீண்டும் நிலத்தில் ஊன்றும் போது நிலத்தின் துணை கொண்டு சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்தச் சத்தினை எடுத்துத் தான் அது செடியாக அது வளர்கின்றது. அந்தச் செடியின் இனப்பெருக்கங்கள் அதிகமாகின்றது.

இதே போல் தான் நமக்குள்ளும் பிறர் திட்டியது வேதனைப்பட்டது போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால்… உடலுக்குள் வந்து அந்த அணுவின் தன்மையாக அடைந்து விட்டால் அது அது தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

நம்மைக் காக்க அல்லது மற்றவருக்கு உதவி செய்ய என்று நாம் பரிவுடன் கேட்டறிந்தாலும் பிறர்படும் வேதனை உணர்வுகள் நமக்குள் அணுவாகின்றது.

1.ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை எல்லாம் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது.
2.அது நமக்குள் புகாதபடி தடுக்கவில்லை என்றால் அதே வேதனை அதே கோபம் நமக்குள்ளும் விளைந்து
3.அசுர குணங்களாக நமக்குள் மாறத் தொடங்கும்.

ஆகவே நாம் கண்களால் பார்த்து நுகர்ந்து இது போன்ற அசுர உணர்வுகளாக வளர்வதைத் தடுக்க வேண்டும்.

அதற்குத் தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்.

அப்பொழுது அந்த வேதனையான உணர்வைத் தணிக்கச் செய்கிறது. அதே சமயத்தில் அது போன்ற தீமைகளை நீக்கக்கூடிய சக்தியும் நாம் பெறுகின்றோம்.

இப்படி எல்லோரும் எண்ணும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வுகளை (அலைகளை) காலை ஆறு மணிக்கெல்லாம் சூரிய உதயம் வரும் பொழுது அது கவர்ந்து பூமியின் காற்று மண்டலத்தைக் கடந்து லேலே பிரபஞ்சத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது…. அங்கே கரைத்து விடுகின்றது.

அதனால் பகைமை ஊட்டும் உணர்வுகள் நம் பூமியில் தணிகின்றது இப்படி நம்மை நாம் காத்துக் கொள்ளும் வழிகளைத்தான் அன்று ஞானிகள் தெளிவாகக் கூறி உள்ளார்கள்.