நமக்குத் தீமை செய்பவர்களை வைத்து நன்மை பயக்கும் உயர்ந்த சக்தியைப் பெறுவது எப்படி..?

naranarayanan.jpg

நமக்குத் தீமை செய்பவர்களை வைத்து நன்மை பயக்கும் உயர்ந்த சக்தியைப் பெறுவது எப்படி..?

ஒருவர் தவறு செய்தால் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி வழி காட்டாமல் இருக்க முடியுமா…? அதே போல் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம் என்றால் அந்த வேதனை நமக்குள் உணர்த்தப்படும் பொழுது தான் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.

ஆனால் ஒரு சிலருக்கு அவர் ஆகாதவராகப் போய்விட்டால் “அவனுக்கு அப்படித் தான் வேண்டும்…!” என்று சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்குள் அந்த உணர்வு விளைகிறது.

ஆனால் அவரைக் காக்க வேண்டும் என்று நாம் பாசத்துடன் எண்ணினால் இங்கே உடலில் அவருடைய வேதனை வந்துவிடுகிறது.

1.ஆகாதவன் எந்த ரூபத்திலாவது அந்த நோயாளிக்கு அப்படித்தான் வர வேண்டும் என்று ரசிக்கின்றான்.
2.பண்பு கொண்ட மனிதனோ தன் உடலில் பாசத்தால் இழுத்துக் கொள்கிறான்.

காரணம்… நாம் உதவி செய்கிறோம். அந்த உணர்வுகள் இங்கே விளைகிறது. மகராசன்…! “எனக்கு நன்மை செய்தான்…!” என்று நோயாளி எண்ணுகிறான். இந்த இரண்டும் கலக்கிறது. அதிலிருந்து தப்பிக்க முடிகிறதா..? என்றால் இல்லை.

அந்த உணர்வை விளைய வைத்தால் அவர் (நோயாளி) உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது. எந்த உடலில் அந்த வலு இருக்கிறதோ அந்த உடலுக்குள் வந்துவிடுகிறது.

1.உதவி செய்தாலும் உயிர் இந்த மாதிரி இயக்கி நம்மை இந்த நிலைக்கு ஆக்குகிறது
2.இதற்கு என்ன செய்வது…?

உணவு நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தில் சாப்பிடுகிறோம். ஆனாலும் அந்தச் சாப்பாடு “அளவுக்கு மேலே அதிகமாகிப் போனால்” என்ன செய்யும்…? அதிகான அளவில் சாப்பிட்டால் உடல் ஏற்றுக் கொள்கிறதா…?

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். ஆகவே அப்பொழுது அதை ஜீரணிக்கும் சக்தி நமக்கு வேண்டும்.

ஜீரணிக்க வேண்டும் என்றால் தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். அந்தச் சக்தியைப் பெற்றால் அது ஞானம் என்ற ஒரு வித்தாகிறது. மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

எப்படி ஒரு சோப்பைப் போட்டவுடன் எண்ணைச் சத்தை நீக்கி விடுகிறதோ இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகள் கலந்த பின் அவர்கள் எப்படி ஒளியாக மாற்றினார்களோ அதே போல் நமக்குள்ளேயும் ஒளியாக மாற்றும்.

நமக்குள் வலுவான பின்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெறவேண்டும்
2.அவர் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்.
3.விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
4.அப்பொழுது அவன் அந்த உணர்வை எடுத்துக் கொண்டால் அவனும் நல்லவனாகின்றான்.

இதற்கு மாறாக ஒரு தடவை நாம் வெறுத்து விட்டால் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த வெறுப்பு வருகிறது, அவன் நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பாகி இரண்டு பேருக்குள்ளும் பகைமையாகிவிடும்.

ஆகவே அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அவன் நல்லவனாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது
1.உங்களைப் பார்க்கும் பொழுது முதலில் முறைத்துக் கொண்டிருந்தவன்
2.அவன் மனம் மாற வேண்டும்… மாறவேண்டும்…! என்று எண்ணும் பொழுது
3.இந்த உணர்வு அவனுக்குள் இது சென்று அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.

ஆகவே இந்த மாதிரியான கஷ்டமோ பகைமையையோ துன்பமோ வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அவர்களால் நீங்கள் நலம் பெறுகின்றீர்கள்… உயர்ந்த ஞானிகளின் சக்தியும் பெறுகின்றீர்கள்.

அதற்காகத்தான் “ஆத்ம சுத்தி…” என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியையும் இந்த உபதேச வாயிலாகவே கொடுக்கின்றோம்.

நீங்கள் இதை எண்ணினால் உங்கள் உயிர் அதை எல்லாம் உங்களுக்குள் உருவாக்கும்.

“மரணமில்லாப் பெரு வாழ்வு…!” வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

Blue rays of north star.jpg

“மரணமில்லாப் பெரு வாழ்வு…!” வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

இந்த மனித உடல் நமக்கு நீடித்த நாள் இருப்பதில்லை. ஆனால் இந்த உடலை வைத்துத்தான் பிறவியில்லா நிலையை அடையும் சக்திகளைப் பெற முடியும்.

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்த துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் அவைகள் அழியாது.

அகண்ட உலகில் வருவதைத் தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்று அவர்கள் வளர்ந்து கொண்டே உள்ளார்கள். அதைத்தான் “மரணமில்லாப் பெரு வாழ்வு” என்பது.

1.இதைப் போல் மனிதனாகி அதிலே உயர்வு பெற்று
2.ஒளி நிலை பெற்ற தன்மைகள் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உண்டு.
3.இவை அனைத்தும் ஐக்கிய உணர்வாக அங்கே வளரும் தன்மை பெற்று வளர்ந்து கொண்டே உள்ளது.

வான மண்டலத்தில் பார்த்தால் சில பகுதிகளில் ஒளிக் கதிர்களாக மின்னுகின்றது. பல பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது.

அகண்ட (அண்டத்தின்) பாதையில் சுழற்சியின் வேகத்தால் வரும் ஒளி அலைகள் தான் இவையே தவிர இதைப் போன்ற வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது ஒளியின் கதிராக அது வாழும்… வளரும்… அந்த நிலைகளில் சக்தி பெறுகின்றது.

ஆகவே அத்தகைய நிலையை இந்த மனித உடலில் நாம் நினைவிருக்கும் பொழுதே பெறுதல் வேண்டும். நினைவு இழந்து விட்டால் எதனைக் கொண்டு நினைவிழக்கச் செய்கின்றதோ அதன் வழியில் சென்றுவிடும்.

மனிதனின் வாழ்க்கையில் எது அவனை நினைவிழக்கச் செய்கின்றதோ அதை மாற்றிட அருள் சக்திகளைப் பெற்று அருள் வழியில் சிந்தித்தால் அவனும் ஒளியின் தன்மை பெறுவான்.
1.நம் உடல் சதமானது அல்ல…! உயிர் தான் என்றும் சதமானது…!
2.இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நாம் நெருப்பில் விழுந்து விட்டால் இந்த உடல் கருகி விடுகின்றது. கருகிய நிலையில் வேதனையுடன் இந்த உடலை விட்டு உயிர் பிரியும் போது இந்தத் தசைகளும் உடலில் உள்ள அணுக்களும் கருகி விடுகின்றது. ஆனால் உயிர் மட்டும் கருகுவதில்லை.

கருகிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. இந்த உடலில் வாழும் காலத்தில்
1.யார் மேல் பற்று கொண்டு வாழ்ந்ததோ
2.அந்த நட்பான நிலைகளில் அவர்களும் இதைப் பதிவு செய்திருந்தால்
3.அந்த உடலுக்குள் எரிந்தவனின் ஆன்மா சென்று அங்கேயும் எரிகிறதே… எரியுதே..! என்று கத்தும்.. கதறும்…!
4.அவன் மடிந்த நிலைகள் அதே நினைவாற்றல் கொண்டு அங்கேயும் மடியச் செய்யும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற எத்தனையோ நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதைப் பெறவேண்டும்..? எவ்வாறு நாம் வாழ்க்கை வழி நடத்த வேண்டும்..? என்று எண்ணுதல் வேண்டும்.

வீடு அழகாகக் கட்டுகின்றோம். தூசி படர்கின்றது. பெருக்கிச் சுத்தப்படுத்துகின்றோம். வீட்டைக் கூட்டிப் பெருக்கவில்லை என்றால் நாம் எவ்வளவு ஆடைகள் அலங்காரமாகப் போட்டிருந்தாலும் தூசி நம் மீது ஒட்டத்தான் செய்யும்.

ஆகவே வீட்டில் அவ்வப்பொழுது வரும் தூசிகளைக் கூட்டிப் பெருக்கித் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டை அழகுபடுத்திக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான்…
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு
2.அந்த அசுத்தங்களைத் துடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
3.அருள் ஒளியை நமக்குள் பெருக்கி உடலில் உள்ள தீமைகளைத் தூய்மையாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இந்த உணர்வின் வளர்ச்சி பெறும் பொழுது தான் நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியும். இது முக்கியமானது…!

உடல் நோயை நீக்கினாலும் “ஊழ்வினையை” மாற்றியே ஆக வேண்டும்

body-cells-formation.jpg

உடல் நோயை நீக்கினாலும் “ஊழ்வினையை” மாற்றியே ஆக வேண்டும்

பத்தாவது நிலையை அடையக் கூடிய தகுதி பெற்றது தான் இந்த மனித உடல். நம் உடலில் எத்தனையோ நல்லவைகள் இருப்பினும் கோபம் வெறுப்பு சலிப்பு வேதனை சஞ்சலம் சங்கடம் இவை எல்லாம் நம் உடலில் அரக்க குணங்களாக இருக்கிறது,

அதைக் காட்டுவதற்காகத்தான் இராமாயணத்தில் பத்துத் தலை இராவணன் என்று காட்டுகின்றார்கள். இராவணன் என்ன செய்கிறான்…? சீதாவைச் சிறை பிடிக்கின்றான்.

ஆக ஒருவர் செய்யும் தவறைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வருகிறது. கோபம் வரும் பொழுது…
1.நம் உடலில் நல்ல குணங்கள் இருந்தாலும் அந்தக் குணத்தைச் செயலற்றதாக மாற்றி
2.தவறு செய்பவனை உதைக்க வேண்டும்…! என்ற எண்ணங்கள் தான் வரும்.

அதே மாதிரி ஒருவனை வேதனைப்படுத்துகிறான் என்றால் அவனை நினைக்கும் போது…
1.அந்த வேதனைப்படுத்தும் உணர்வு காற்றிலே இருக்கிறது.
2.நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதே உணர்வு நம்மையும் வேதனைப்படுத்தும் செயலைச் செயல்படுத்துகின்றது.

ரேடியோ TV அலைகளை எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றனரோ அந்தந்தச் சுவிட்சைப் போட்டவுடன் அதே நிலை வருகின்றது.

அதே போல் தான்…
1.மனித வாழ்கையிலும் ஒவ்வொரு ஸ்டேசனாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.
2.திட்டியவர்கள்… வெறுப்புடன் போனவர்கள்… சண்டை போட்டவர்கள்… என்று
3.அவர்களை நாம் நினைக்கும் போதெல்லாம் காற்றிலிருந்து இழுத்து நமக்கு அந்தந்த உணர்வுகள் தான் வருகின்றது.

நாம் இதே வழியில் போனால் அதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா.. அதற்குச் சக்தி வேண்டுமல்லவா…! ஏனென்றால் இத்தகைய தீமையின் நிலைகளை எல்லாம் நீக்கிப் பழகியவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி உணர்வுகளைத் தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

பின் பதிவான அந்தச் சக்தியை தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய திறனையும் உங்களுக்கு உண்டாக்குகிறோம்.

காலை துருவ தியானம்… மதியம் இரவு நேரம் தியானம்…! செய்வதன் மூலம் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கி வைத்துக் கொண்டால் தீமைகள் வரும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு கோபப்படுபவனை நாம் பார்த்தால் நம் உயிரிலே அந்தக் கோப உணர்ச்சிகள் பட்ட பின் நமக்கும் கோபம் வரும். அப்பொழுது
1.அந்த நேரத்தில் நாம் கோபிக்கின்றோமா…
2.நாம் நுகர்ந்த அந்த உணர்வு நம்மைக் கோபிக்கச் செய்கிறதா…? என்று சிந்தித்துப் பாருங்கள்…!

நாம் கோபப்படவில்லை.. நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகிறது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆனால் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்தக் கோபப்படும் உணர்வுகள் உமிழ் நீராக மாறி அது நம் சாப்பாடுடன் சேர்த்து இரத்தமாக மாறும் போது அதிலே கார உணர்ச்சியைத் தூண்டும் கருத்தன்மை அடைகிறது.

ஒரு தடவைக் கோபப்பட்ட பின் அடிக்கடி அதே மாதிரிக் கோபமாக எண்ணினால் அந்த அணுக்கள் நம் உடலிலே பெருகத் தொடங்கினால் இரத்தக் கொதிப்பு வந்துவிடும்.

அந்த இரத்தக் கொதிப்பை மாற்றுவது யார்…?

1.டாக்டரிடம் சென்று மருந்தைச் சாப்பிட்டு சௌகரியம் செய்யலாம்.
2.ஆனால் அந்த கோபக்காரனைக் கண்ணால் பார்த்த உணர்வு நம் உடலின் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக இருக்கிறது.
3.அதிலிருந்து அது மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கும்.

அதை எப்படி மாற்றுவது…?

அந்த மாதிரி வராதபடி அப்போதைக்கு அப்பொழுது நாம துடைக்க வேண்டும் என்றால் உடனே ஈஸ்வரா…! என்று சொல்லிப் புருவ மத்தியில் உயிரை எண்ணித் தடுக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அனுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அந்த உணர்வைச் செலுத்தி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இப்படிச் செய்தால் அந்தக் கோபமான வித்திற்குப் பக்கத்திலேயே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகும். இது வலுவான பின் கோப உணர்வின் வித்துக்கு உணவில்லாதபடி அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.
1.இப்படிச் செய்தால் தான்
2.எந்த ஒரு தீமையான வினையிலிருந்தும் நாம் விடுபட முடியும்…!

ஆத்மாவைச் சுத்தம் செய்ய ஆயுதம் கொடுக்கின்றோம்…!

Soul cleansing

ஆத்மாவைச் சுத்தம் செய்ய ஆயுதம் கொடுக்கின்றோம்…!

 

யாம் (ஞானகுரு) பிரச்சாரம் செய்யவில்லை. உங்கள் ஒவ்வொருவருடய நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பதியச் செய்து இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டச் செய்கின்றோம். அதற்குத்தான் இந்தத் தியானம்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமானாலும் சரி “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலைத் தியானித்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெயர் “ஆத்ம சுத்தி”

1.உங்களை அறியாமலேயே உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான்
2.தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.
3.ஏனென்றால் இது எல்லாம் வாக்குடன் கூடிக் கொடுக்கும் நிலைகள்.
4.நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

சரியான முறைகளில் இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு இந்த உணர்வின் தன்மையைக் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து வளர்த்து அந்த வாக்கின் ஒலியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை
1.யாம் சொல்லும் இந்த முறைப்படி யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ
2.அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும் நிச்சயம் நீங்கிவிடும்.

பெண்களாக இருக்கக்கூடியவர்கள் அனைவருமே சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்து விட்டு அரிசியைப் போடும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நாம் சமைக்கும் சாப்பாட்டை யார் புசித்தாலும் அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டுமென்று எண்ணுங்கள். நீங்கள் அப்பொழுது சுவாசிக்கக் கூடிய உணர்வு உங்களை அறியாமலேயே உங்களைச் சுத்தப்படுத்தும்.

பெண்களுக்கு அடிக்கடி கவலையும் தொல்லைகளும் வருவதனால் அந்த உணர்வுகளால் அவர்களுக்குக் கை கால் குடைச்சலும் தலைவலியும் ஒற்றைத் தலைவலியும் அதிகமான நிலையில் வரும். காரணம் பெண்களுக்கு ஈர்ப்பு சக்தி ஜாஸ்தி.

1.அடிக்கடி கவலையும் மற்ற நிலைகளையும் எண்ணி எண்ணி
2.அவர்களை அறியாமலேயே இந்த உணர்வுகள் உடலில் சேர்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடுகின்றது.
3.அதுவே பின் நாட்களில் நோய்களாக வளர்ந்து நல்லதையே சிந்திக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினால் சமையல் செய்யும் பொழுதும் சமையல் செய்தபின் பரிமாறும் பொழுதும் இந்த நிலைகளைச் செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவியும் அவசியம் இந்த ஆத்ம சுத்தியைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியே சென்றாலும் தொழிலில் போய் அமர்ந்தாலும் ஒரு சங்கடமான வார்த்தைகளைக் காதில் கேட்டாலும் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் சுத்தப்படுத்துவதற்கே இந்த ஆயுதத்தை யாம் கொடுக்கின்றோம்.

இவ்வாறு நமது வாழ்க்கையில் தொடர்ந்து செய்து வந்தால் மகரிஷிகள் எவ்வாறு தங்கள் உணர்வுக்குள் ஒளியைச் சேர்த்து தீமைகளை நீக்கி உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாகிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றார்களோ அதைப் போல நாமும் அவர்களுடைய நிலையை அடைய முடியும்.

இதற்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

வாலியை இராமன் கொல்லாமல் குகையின் வாசலில் கல்லைப் போட்டு ஏன் மூடுகிறான்…?

Vali vadam - sukreevan.jpg

வாலியை இராமன் கொல்லாமல் குகையின் வாசலில் கல்லைப் போட்டு ஏன் மூடுகிறான்…?

வாழ்க்கையில் நாம் நல்லது செய்து வந்தாலும் தூசி (தீமைகள்) வெளியில் இருந்து தான் உடலுக்குள் வருகிறது. அதனால் தான் இராமாயணத்தில் வாலியை இராமன் குகைக்குள் போட்டு மூடி விடுவதாகக் காட்டுகிறார்கள்.

அதாவது “தீமைகள் நமக்குள் உட்புகாதபடி தடுக்க வேண்டும்…” என்று உணர்த்துகிறார்கள்.
1.குகைக்குள் வாலி இருக்கின்றான்.
2.இராமன் அம்பை எய்து ஒரு கல்லைப் போட்டு அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான்.
3.ஆனால் அவனைக் கொல்லவில்லை.
4.அவன் வீரியத்தைத் தடைபடுத்துகிறான் என்று காட்டுகின்றார்கள்..

உதாரணமாக பிறர் செய்யும் தீமையான எண்ணங்களும் குற்றச் செயல்களும் நம் உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? அந்தத் தீமையின் உணர்வாக அதனுடைய வலிமை கொண்டு இயக்க ஆரம்பித்துவிடும்.

நம் நல்ல குணம் வேலை செய்யுமோ…? அது செயலற்றுப் போகும். அதற்காகத் தான் தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்…! என்று காட்டுகிறார்கள்,

கோபமாகப் பேசுகிறார்கள்… தவறான செயல்களைச் செய்கிறார்கள் என்றால் அதை நாம் நுகர்ந்த உடனே அவர்கள் மேலே வெறுப்பு வரும்.

அந்த இரண்டு உணர்வும் சேர்ந்து நம் உயிர் என்ற ஈஸ்வர லோகத்தில் உருவாக்கும்.
1.அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஜாடையாக நம்மைப் பேச வைக்கும்.
2.இப்படி எல்லாம் செய்கிறான்… இவன் என்ன யோக்கியமா…? என்போம்.
3.அவர்கள் நல்லது செய்தாலும்… அதை ஏற்க மாட்டோம்…!
4.முதலில் அவர்கள் எப்படியெல்லாம் நம்மைப் பேசினார்கள்…? இப்பொழுது மட்டும் யோக்கியம் மாதிரி நடக்கின்றார்கள்…! என்று நம்மைப் பேச வைக்கும்.
5.இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி வரும் போது வெறுப்பின் தன்மை அதிகமாகி விடுகிறது.

நம்மை அறியாமலேயே இப்படி வெறுப்பின் உணர்வுகள் அதிகமாகி நம் ஈஸ்வரலோகத்தில் அந்தக் கருவின் தன்மை உருவாகி நம் உடலுக்குள் பிரம்மலோகமாக மாறுகிறது.

பிரம்மலோகத்தில் அணுக்களாக உருவாகி விட்டால் அது தன் சாப்பாட்டுக்காக ஏங்கும். அந்தத் தீமையின் உணர்வை எடுத்து வளர்க்கத் தொடங்கும். அப்பொழுது நாம் இதை மாற்றி அமைக்க வேண்டுமா இல்லையா…?

ஆகவே நம்மை எது கோபப்படச் செய்கிறது..? என்று நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.அவர்கள் செய்த தவறு நம் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
2.அதுவே சொல்லாக வருகின்றது என்று உணர்தல் வேண்டும்.

அடுப்பிலே பாத்திரத்தை வைத்து எந்தக் காய்கறியைப் போட்டு வேக வைக்கிறோமோ அதற்குத் தகுந்த மணம் தான் வரும். ஆகையினால் இந்த மணத்தை நல்ல மணமாக மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியானத்தின் மூலம் சக்தியைக் கொடுக்கின்றோம்.

நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில் நம்மை எப்படி அந்தத் தீமைகள் இயக்குகிறது என்று தன்னை அறிதல் வேண்டும். நாம் ஏன் கோப்படுகிறோம்…? எதற்காக அந்தக் கோபம் வருது…? என்ற சிந்தனை வேண்டும்.

ஆகவே கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் ஒரு தவறு நடக்கிறது என்றால் பண்பு அன்பு பரிவு என்ற உயர்ந்த உணர்வுகள் கொண்டு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

கோபத்துடன் பதில் சொல்லப்படும் பொழுது நாம் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அந்த வழியில் அதைப் பயன்படுத்தும் நேரம் சரியில்லை என்றால் பகைமை உணர்வுகளைத் தான் ஊட்டும். அந்தப் பகைமை உணர்வு ஊட்டுவதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு குடும்பத்தில் பகைமை உணர்வு அதிகமாகும் போது சாப அலைகளாகி அதன் தொடர்ச்சியில் அந்தக் குடும்பமே சின்னா பின்னாமாகிறது. அதனுடைய நிலைகளில் பின் வரும் சந்ததிகள் தவறு செய்யவில்லை என்றாலும் அவர்களையும் அது இயக்கி குறைபாடுகளாகி விடுகின்றது.

ஆகவே இதைப் போன்று நாம்
1.மற்றவர்களுடைய குறைகளைக் கண்டாலும் அவருடைய முந்தைய நிலைகள் இயக்கப்பட்டு
2.அதே உணர்வுகள் நம்மை இயக்கி நம்முடைய நல்ல உணர்வுகளையும் மாற்றுகிறது என்பதை
3.அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

சிந்திக்கின்றோம் என்றால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அவன் வீற்றிருக்கும் ஆலயம் தான் அந்த உடல்…! என்று எண்ணி விட்டால் அவர்கள் செய்யும் தவறும் குறைகளும் நமக்குள் வராது.

உயிரால் உருவாக்கப்பட்ட அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவர்களும் பொறுப்பை உணர்ந்து சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மனத் தூய்மை ஏற்பட வேண்டும் என்று இப்படி நீங்கள் எண்ணிப் பாருங்கள். கோபமோ பழிச் சொல்லோ நமக்குள் எதுவுமே வராது.

இது எல்லாம் நாம் இந்த மனித வாழ்க்கையில் ஞானிகள் காட்டிய வழியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல் நெறிகள்.

தீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பரிபக்குவ நிலை

mirror mind.jpg

தீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பரிபக்குவ நிலை

உதாரணமாக பாலில் விஷம் பட்ட பின் அதை நாம் குடித்தால் மயக்கம் தான் வரும். சிந்திக்க முடியுமா…? அதே மாதிரி பாலில் காரம் பட்டு விட்டது என்றால் அதிலே இனிப்புப் போட்டிருந்தாலும் குடித்தால் ருசி வருமா…? வராது.

இதைப் போல் தான் நாம் நல்ல மனதுடன் இருந்தாலும் பிறருடைய தீமையான செயல்களைப் பார்க்கப்படும் பொழுது அது நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் நாம் அமைதி இழக்கின்றோம்.

அந்தத் தீமையின் இயக்கத்திலிருந்து காத்துக் கொள்வற்குத்தான் இந்த அதிகாலைத் துருவ தியானத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் இந்தத் தீமைகள் நடக்கிறது என்றால் அது நடக்காமல் தடுத்து நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

அதைச் சேர்க்கப்படும் பொழுது பிறிதொரு தீமை நம்மை இயக்காதபடி அதை அடக்கிச் சிந்திக்கும் தன்மை வரும்.

அப்பொழுது…
1.அந்தத் தீமை செய்பவர்களுக்கு எப்படிச் சொல்ல வேண்டும்…? என்ற ஞானமும் கிடைக்கும்.
2.அதை அவர்கள் எற்றுக் கொள்ளும்படியான சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பருவமும் நமக்குள் வரும்.

உதாரணமாக நாம் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது சரியாக வேகாமல் தாளித்தால் எப்படி இருக்கும்…? சரியான முறையில் வெந்து இறக்கப்படும் பொழுது அதைச் செய்தால் அது ருசியாக வரும்.

காய்கள் வேகப்படும் பொழுது வேகுவதற்கு முன்னாடி அதிகமான உப்பைச் சேர்த்து விட்டால் சில காய்களும் அதனுடன் இணையும் தன்மையைப் பிரித்துவிடும். உப்பு அதிகமாகிவிடும். குழம்பின் ருசி மாறிவிடும். இந்த மாதிரிச் சிலர் குழம்பு வைத்தார்கள் என்றால் ருசியே மாறிவிடும்.

1.பருவம் தெரியாதபடி உப்பைக் கலப்பதனால் குழம்பின் ருசி மாறிவிடும்.
2.அந்தப் பருவம் இதனுடன் இணைந்திடும் சந்தர்ப்பம் வரும் பொழுது உப்பை நாம் கலக்கலாம்.

சில மசால்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைக்கப்படும் பொழுது அந்தச் சூட்டிலே சமமாகப் போய்ச் சேரும். ஆனால் இந்த உப்பென்ற நிலைகள் வரும் பொழுது முன்னணியில் இருந்து தடுத்துவிடும்.

அது தடுத்து விட்டால் அந்தக் காய்கறிகள் ருசி இருக்காது. உப்பு தான் முன்னாடி இருக்கும். குழம்பின் நிலைகள் மாறிவிடும். இவைகள் எல்லாம்
1.அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் செய்யக்கூடிய உணர்வுகள் எதுவோ
2.அது கலப்பதற்குத் தகுந்த மாதிரித்தான் அந்த ருசி வரும்.

ஆகவே ஒருவர் தவறு செய்கிறார்… என்று எண்ணும் பொழுது “அவர்களை அறியாமல் அது இயக்குகிறது…!” என்பதை நாம் உணர்தல் வேண்டும். அதற்காகத் தான்
1.நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
2.உடலைக் கோவில் என மதிப்போம்
3.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம் என்று சொல்வது.

ஈசனால் உருவாக்கப்பட்ட ஆலயம் தான் அந்த உடல். அவர்களை அறியாமலே அந்தச் செயல்களும் அந்தச் சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.

தீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது… எப்படி வலுப் பெறுகின்றது…?

soul cleaning method

தீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது… எப்படி வலுப் பெறுகின்றது…?

 

குருநாதர் என்ன செய்தார்…? எம்மைக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய்ப் பல பச்சிலைகளைக் காண்பித்து, இது பேசுமாடா…? பாருடா பச்சிலையை…! என்றார்.

அது எப்படி சாமி பேசும்…? என்றேன். பிறகு நான் பச்சிலை பேசும் என்று சொல்வேன்.

அது எப்படிடா பேசும்…? என்று எம்மைக் கேட்டார். பிறகு எல்லா உண்மையயும் சொல்வார்.

இதே மாதிரி ஒரு புலி செத்துப் போய்விட்டது, இது என்னடா செய்யும்…? என்று கேட்டார்.

சாமி…! அது செத்துப் போய்விட்டது என்றால் எப்படி எதை எதைக் கொன்றதோ அங்கே போய் இந்த உயிர் பிறக்கும்…! என்றேன்.

அது எப்படி என்று நீ சொல்லுடா…! என்பார். அது செத்துப் போய்விட்டது. அதில் இருந்த அது சேர்த்த சத்தெல்லாம் எங்கடா போனது…? என்பார்.

அது செத்துப் போனால் ஆவி எல்லாம் காற்றிலே போகும் என்று யாம் சொன்னால் இரண்டு பேருக்கும் தர்க்கம் ஆகும்.

யாம் இந்த மாதிரிச் சொன்னாலும் உடனே அவர்
1.அது எப்படிக் காற்றில் போகும்…?
2.காற்றில் போனால் என்ன செய்யும்…? என்று கேட்பார் குருநாதர்.
3.இப்படியெல்லாம் விளக்கம் கேட்பார்.

அன்றைக்கு யாம் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லும் பொழுது, சாப்பாடு இல்லை. நடந்து போகக் கூட முடியாது. நாம் ஏதோ நினைக்கின்றோம். ஆனால் காட்டுக்குள் போய் நடந்து போகக் கூடிய சக்தியை இழந்து விட்டால் என்ன செய்ய முடியும்…!

அப்பொழுது அந்த இடத்தில் வேதனை வரும். அந்த வேதனையை எடுக்கப் போகும் போது என்ன ஆகும்…?

1.வேதனை ஏற்பட்ட உடனே குருநாதரை எண்ணி
2.இப்படி இந்த மாதிரி பண்ணிவிட்டாரே…!
3.எப்படியும், அவர் சொன்ன இடத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வரும்.

எமக்கு வேதனை வரும் பொழுது… சொல்கின்றார் குருநாதர். வேதனைப்படுத்தி விட்டார்…! என்று எண்ணினால், நடக்க முடியாது. ஆனால் நடக்க முடியவில்லை என்றால் நீ என்ன செய்கிறாய்…?

அங்கே அந்த இடத்திற்கு நாம் போய்விட்டால் உடனே கொஞ்சம் சௌகரியமாக இருக்கலாம்…! என்ற எண்ணம் வருகின்றதல்லவா?

எப்பொழுது வருகிறது…?

அங்கே. அந்த எண்ணம் வருகின்றது. அப்பொழுது அந்த எண்ணம் வரும் பொழுது
1.இதிலிருந்து எப்படியும் தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஓங்கி வருகின்றது.
2.இப்படித்தான், தீமைகளை நீக்கும் வலுவான எண்ணத்தை எமக்குக் கொடுத்தார் குருநாதர்.

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

meditation-results.jpg

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

வயல்களில் நாம் விளைய வைத்த நல்ல பயிர்களை அறுவடை செய்து முடிந்த பின் அந்த வித்துக்கள் அடியோடு மாய்ந்து விடுகின்றது. திருப்பி அதுவாக முளைத்து வருவதில்லை.

ஆனால் மற்ற புல் பூண்டு தாவர இனங்களின் செடிகள் பூமிக்குள் வெகு ஆழத்தில் பதிந்து இருக்கின்றது. பூமியின் வெப்பத்தால் அந்த விதைகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றது.

1.மழை பெய்தால் போதும்…
2.நீர் சக்தியை நுகர்ந்து அந்தச் செடி (களைகள்) பூமியை விட்டு வெளியே வருகின்றது.
3.மழை பெய்த இரண்டு நாளுக்குள் புல் பூண்டுகள் கருவுற்று முளைத்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலில் எலும்புக்குள் தீமை என்ற நிலைகள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிந்துள்ளது. நாம் நன்மை என்ற நிலைகளில் வளர்த்திருந்தாலும் அது எளிதில் கரைந்து விடுகின்றது. அது ஆழமாக இருப்பதில்லை.

வேதனை கோபம் போன்ற உணர்வுகள் வலுவான நிலைகள் கொண்டு நமக்குள் அந்த ஆழமாக ஊடுருவியிருப்பதனால் நமது வாழ்கையில் சந்தர்ப்பத்தால் வேறொருவரின் உணர்வுகளைக் கேட்கவோ அல்லது பார்த்து நுகர நேர்ந்தால் போதும். அது மறுபடியும் ஜீவன் பெற்றுவிடும்.

உதாரணமாக குடும்பத்தில் திடீரென்று “தந்தை இறந்து விட்டார்…!” என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை எண்ணி
1.அப்பா இருந்தார்… ஆனால் இப்படிப் போய்விட்டார்…! என்றோ
2.அவர் இப்பொழுது இருந்தால் கஷ்டமெல்லாம் இருக்காது… ஆனால் அவர் இல்லையே..! என்று
3.ஏக்கமாக மீண்டும் மீண்டும் அவரை எண்ணினால் போதும்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எப்படித் துயரங்கள் பட்டாரோ அதே உணர்வின் துயரங்களை நமக்குள்ளும் இயக்கத் தொடங்கி விடுகின்றது. அவர் கடைசிக் காலத்தில் நோயால் மிகவும் அவதிப்பட்டிருந்தால் அந்த நோயும் நம்மை இயக்கத் தொடங்குகின்றது.

ஏனென்றால் நாம் அவரைப் பற்றி நினைக்கும் போது காற்றுக்குள் படர்ந்துள்ள அவரின் உணர்வுகள் கவரப்பட்டு அந்த உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.

(1.ஏனென்றால் நமக்குள் அவரைப் பற்றிய பதிவு இருக்கிறது.
2.அவதிப்பட்ட உணர்வும் இருக்கிறது.
3.எண்ணியவுடனே அந்த வித்துக்கள் ஜீவன் பெற்று இயக்கி அது வளரத் தொடங்குகிறது)

இதை போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்த தந்தையின் உயிரான்மாவை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணைக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதிகாலையில் துருவ தியானத்தில் எடுக்கப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் அதிகமாகப் பரவத் தொடங்குகின்றது.

அந்த வலிமை பெற்ற பின் அந்த தீமை என்ற உணர்வுகளை இப்ப நாம் என்ன செய்கிறோம்.

நெல்லை நாம் வயலில் பயிரிட்டாலும் அதனுடன் சேர்ந்து புல் பூண்டு எல்லாம் வருகின்றது. வயலிலே தண்ணீர் அதிகமாகக் கட்டியிருந்தால் அந்தப் புல் பூண்டுகள் வளர்வதில்லை. ஏனென்றால்
1.நீரில்லாது காய்ந்து வறட்சியாக இருந்தால் புல் பூண்டுகள் வளர்ச்சி பெறுகின்றது.
2.தண்ணீரை அதிகரிக்கப்படும் போது வளர்ந்து வரும் தழைகள் அழுகிவிடுகின்றது… களைகள் வளர்வதில்லை.

தண்ணீரை நிறுத்திய பின் நெல் வயலைப் பார்த்தால் ஏராளமாகப் பல களைகள் முளைத்து விடுகின்றது. பார்க்கலாம் நீங்கள்…!

இதைப் போன்று தான் நம் உடலிலும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நம் ஆன்மாவில் அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
1.எத்தகைய தீமையான வித்துக்களையும் வளர விடாது
2.ஒவ்வொரு நிமிடமும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.

வயல்களைப் பண்படுத்தி அந்த நெல் மணிகளை எப்படி நாம் எடுக்கின்றோமோ இதை போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பேரருள் பேரொளியாக நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் ஏற்கனவே பதிவானது அழிவதில்லை. பேரருள் உணர்வினை நமக்குள் பெருக்கிய பின் மற்ற தீமைகளைச் சிறுத்து இந்த உணர்வினை ஒளியாக மாற்றினால்
1.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
2.தங்கத்திலே திரவகத்தைச் சேர்த்துச் செம்பையும் வெள்ளியையும் கரைப்பது போன்று தொக்கிய நஞ்சுகளைக் கரைத்து விடலாம்
3.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே பேரானந்த நிலையில் ஒளியாக வாழ முடியும்.

மகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத்தின் மூலம் பெறவேண்டும்

அருள் ஞானி ஆகுங்கள்

மகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத்தின் மூலம் பெறவேண்டும்

 

நாம் ஒரு வேலை செய்யும் பொழுது கையிலே அழுக்குப்படுகின்றது. ஆனால் அதைத் துடைத்துவிட்டுத் தான் உணவு உட்கொள்ளுகின்றோம். அடுத்த காரியத்தைத் தொடர்கின்றோம்.

ஏனெனில் நாம் கையிலே அழுக்கானபின் தொழில் செய்தபின் அதைத் துடைக்காதபடி மற்றொரு இடத்தில் செயல்பட்டால் அதுவும் மாசு பட்டுவிடும்.

இதைப்போல ஒருவருடைய நிலைகள் நாம் பார்த்துக் கொண்ட பின் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டு காப்பாற்றினாலும் அதைத் துடைக்கும் நிலை நமக்கு வரவேண்டும். அதைத் துடைத்திடும் உணர்வு நமக்குள் உண்டு.

ஒரு குழந்தைக்குத் தலைவலி வந்து விட்டால் பச்சிலை இங்கிருக்கின்றது என்றால் நாம் எப்படி தேடிச் சென்று, கொண்டு வந்து அதைக் குழந்தைக்குக் கொடுக்கின்றோம். நம் ஆறாவது அறிவு இப்படி வேலை செய்கிறது.

இதைப் போலத் தான் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன் உணர்வின் எண்ணத்தால் “மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்…!” என்ற ஏக்க உணர்வு கொண்டு எண்ணி நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மெய் ஞானிகள் அனைவரும்
1.தன் வாழ்க்கையில் வந்த எதிர் நிலைகள் அனைத்தையும்
2.தனக்குள் தீமைகள் விளைவித்த அந்தச் சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி,
3.நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி,
4.ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டு உணரும் ஆற்றல் பெற்று
5.மற்ற எந்த சக்தியானாலும் தெரிந்திடும் ஆற்றல் பெற்று
6.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை வளர்த்து
7.தங்கள் உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

இதைத்தான் ஏழாவது அறிவு சப்தரிஷி என்று சொல்வது. இதைச் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வார்கள்.

மனிதனாக வளர்ந்து அந்த மெய் ஞானி அவன் தெளிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி,
1.அவன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்களும்
2.அவன் உடலில் வெளிப்பரப்பிய மணமும் மூச்சலைகளும்
3.அவன் எண்ணத்தால் வெளியிட்ட உணர்வும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்துள்ளது.

இப்பொழுது, உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது அவர்கள் உடலில் விளைய வைத்த மணங்களை நீங்கள் நுகர நேருகின்றது.

அந்த மணங்களை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனைகளையும் மனக்கவலையையும், நீக்கிடும் சக்தியாக அமையும்.

மேலும் அந்த மகரிஷிகளின் அருள் மணங்கள் ஆற்றல்மிக்க சக்தியாக உங்களுக்குள் இணைந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை பூர்வ ஜென்ம வினைகளை நீக்கிடும் உங்களுக்கு மன ஆறுதலும் மன பலமும் மனத் தெளிவும் ஏற்பட்டு மகிழ்ந்த உணர்வுகளை உங்களுக்குத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளை அடக்கி நல்லதைச் செயல்படுத்தும் வழி முறை என்ன…?

1.jpg

நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளை அடக்கி நல்லதைச் செயல்படுத்தும் வழி முறை என்ன…?

மனிதன் தவறு செய்வதில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு அவனை இயக்கி விடுகின்றது. அதுதான் அவனை ஆட்சி புரிகின்றது. ஆனால் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த கூடிய நிலை பெற்றவன் தான் மனிதன்.

மற்ற உயிரினங்கள் வலு கொண்ட மிருகத்தைக் கண்டு “அது தன்னத் தாக்கிவிடும்…!” என்று அதையே நினைத்து அதில் இருந்து தப்ப வேண்டும் என்று எண்ணுகின்றது.

அதே போல நமக்கு யாராவது தொல்லை செய்கிறார்கள் என்றால் அவர்களையே நினைத்து “எனக்கு தொல்லை கொடுத்து கொண்டிருக்கின்றான்…!” என்று எண்ணி வாழுகிறோம்.
1.அவன் தொல்லை கொடுத்த உணர்வு நமக்குள் வரும் போது
2.அந்தத் தொல்லையே மீண்டும் மீண்டும் வருகின்றது.

தொழிலின் நிமித்தம் நாம் கடன் கொடுத்து வாங்குகின்றோம். ஒருவருக்குக் கொடுத்த பின் சந்தர்ப்பம் அவர்களால் திரும்பக் முடியவில்லை என்றால் “நான் கொடுத்தேன்… எனக்குத் திரும்பக் கொடுக்கவில்லை…!” என்ற வேதனையைத் தான் எடுக்கின்றோம்.

அந்த வேதனை உணர்வை எடுத்து இங்கே நம் உடலுக்குள் சமைத்து வேதனையை வளர்க்கப்படும் போது அடுத்து யாரிடம் பேசினாலும் அந்த வேதனை உணர்வுடனே பேசுகிறோம்.

அப்பொழுது அவர்கள் நல்ல மனதையும் கெடுக்கச் செய்கின்றது. நம்மையும் கெடுக்கின்றது. ஆக மொத்தம் அந்த வேதனை என்ற உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்கின்றது.

நம்முடைய திறமைகள் எவ்வளவு இருப்பினும்… முதலில் நல்ல குணங்கள் இருக்கும் போது செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த வேதனை அதிகமான பின் அந்த செல்வத்தையே காக்கும் திறன் அற்றுப் போகிறது.

செல்வத்தில் சுகமாக வாழ்ந்த நிலையில் அடுத்தவர்களுக்குப் பணத்தைக் கொடுத்திருந்தாலும் அது திரும்ப வரவில்லை என்றால் அவர்களிடம் கேட்டுச் சண்டைக்குப் போகிறோம்.

கடன் வாங்கிவரோ… என்னிடம் பணம் இல்லையே… நான் எப்படிக் கொடுப்பேன்…? நான் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று தானே நினைக்கின்றேன்… நான் என்ன தரமாட்டேனா…? என்ற வாதம் தான் வரும்.

ஆனாலும் பணம் வரவில்லையே…! என்ற நிலையில் வேதனை உணர்வுகளை எடுத்து எடுத்து அது நம்மை அறியாமலேயே பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.

அப்பொழுது வேதனையான அணுக்கள் நமக்குள் வளரத் தொடங்கி விடுகின்றது. அது நல்ல உணர்வை நமக்குள் அணுக விடாது செயல்படுத்தும். அதிலிருந்து நாம் எப்படித் தப்புவது…?

இதைத் தான் மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று காட்டியிருப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் நல்லது செய்து கொண்டு இருப்பீர்கள்.
1.வேதனை என்ற வந்த பின் அந்த வேதனையோ மிகவும் வலு பெற்றது.
2.அதையே அடிக்கடி எண்ண வேண்டியது வரும்.
3.நல்லதை யார் சொன்னாலும் உங்களால் கேட்க முடியாது.
4.அவர் சொல்வார்…! அவருக்கென்ன தெரியும்…? நான் படுகிற கஷ்டம் எனக்குத் தானே தெரியும்…! என்று நல்லதை எண்ண விடாது.

அந்தக் கௌரவர்கள் வலு கொண்ட நிலையில் நாம் நல்லதைச் செய்ய விடாதபடி சிந்தனை இல்லாத சில செயல்களைச் செயல்படுத்தச் செய்கின்றது.

ஆகவே இதிலே நாம் எத்தகைய நல்லதை எண்ணினாலும் நம் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் இவைகள் எல்லாம் நம் உடலில் வளர்ந்து விளைந்து விட்டால் அவைகளுடைய வலுவால் நம்மை நல்லதை நுகர விடாது.

அதாவது நமக்குள் இருக்கக்கூடிய கௌரவர்கள்… “என்னை இப்படித் திட்டினான்… திட்டினான்…!” என்ற உணர்வு வரும் போது
1.நல்லதை உள்ளுக்குள் விடுவது இல்லை.
2.நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.
3.கோபம் வந்தால்.. நீங்கள் நல்லது யார் சொன்னாலும் கேட்கின்றீர்களா…?
4.கோபமான உணர்வுகள் உங்களுக்குள் தூண்டப்பட்டிருந்தால் நல்லது ஏதாவது கேட்பீர்களா…?

கோபமான உணர்வுடன் நீங்க இருக்கப்படும் போது ஒரு சந்தோசமான உணர்வையோ ஒரு ஆடல் பாடலையோ ஒரு நல்ல சம்பவங்களையோ சொன்னால் என்ன ஆகும்…? அந்த உணர்வின் தன்மை கொண்டு இதை அழிக்கத்தான் செய்யும். அழிக்கத்தான் உதவும்.

அதைத்தான் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்…! எனறு சொல்வது.

ஏனென்றால் நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குதான் அது செயல்படுத்தும். ஆகவே அதிலிருந்து நாம் மீள்வதற்கு என்ன செய்வது…?

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமும் காந்தமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வைக் கவர்கின்றது.
1.நாம் அந்த அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் பெருக்க வேண்டும்.

நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவால் நுகர்ந்தோமோ ஒளியின் சுடராக நமக்குள் இங்கே விளைகின்றது. இருளை அகற்றி மெய் பொருள் காணும் அந்த சக்தியை நமக்குள் பெறச் செய்கின்றது.

1.அதிலே அர்ஜுனன் என்பது துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிரின் வலிமை.
2.நாம் நுகர்ந்த பின் அந்த ஒளியின் உணர்வை ஊட்டுவது பீமன். அதாவது வலுக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு எதையுமே அலட்சியமாகத் தூக்கும்…! என்பது.
3.நகுலன் என்பது நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் (உடலிலே) ஒவ்வொன்றுடன் இணைந்து அதனுடன் “தன் உணர்வை உயர்த்தும்…!” என்று பொருள்.
4.சகாதேவன் என்பது இருளை அகற்றி அதைத் “தன்னுடைய பண்புடன் அரவணைத்துக் கொள்வது…!”
5.தர்மன் என்பது அந்த அருள் உணர்வின் தன்மையைத் “தனக்குள் ஏற்றுக் கொள்வது…!” என்பது பொருள்.

அப்படி ஏற்றுக் கொண்ட நிலையில் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றும்… நம்மைப் பேரொளியாக மாற்றும் என்பது பொருள்.