நாம் ரிஷியின் தன்மை பெற வேண்டும்

நாம் ரிஷியின் தன்மை பெற வேண்டும்

 

ஒருவன் என்னைப் பழித்துப் பேசி விட்டான் என்றால்… பதிலுக்கு “அவனை நான் அழித்து விடுவேன்…” என்ற அசுர உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.

ஆனால் அவனை அழித்து விடுவேன் என்று எண்ணும் போது
1.உயிரான நிலைகளில் இங்கே பழித்து… அழிக்கும் சக்தியை நமக்குள் வளர்த்து
2.அவனை நாம் “நீ தொலைந்து போவாய்…” என்று சொல்லும் பொழுது
3.முதலில் அந்தத் தொலையக்கூடிய உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது.
4.இந்த உணர்வை அவன் கேட்டறிந்த பின் அவனையும் தொலைக்கிறது.

அதற்குப் பின்… இப்படிச் சொன்னானே இப்படிச் சொன்னானே என்று எண்ணும் பொழுது அது நம் உடலுக்குள் நோயாக மாறுகிறது. அதே போல் இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? என்று அங்கேயும் விளைகிறது. அந்த வித்தாக ஊன்றப்படுகின்றது.

இதைத் தடைப்படுத்துவது தான் நரசிம்மா…! நரசிம்ம அவதாரம். நரசிம்மன் என்ன செய்கின்றான்…? வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான். நாராயணன் நரசிம்ம ரூபம் எடுத்து வாசல்படியில் வைத்துப் பிளக்கின்றான்.

1.நமக்கு வாசல்படி எது…? மூஷிகவாகனா… நாம் சுவாசிக்கும் வழி.
2.ஒரு கெட்டதைப் பார்த்தால் அது தனக்குள் வராதபடி அதைத் தடைப்படுத்துவதற்குப் பழக வேண்டும்.
3.அந்தத் திறன் நமக்குள் பிறக்க வேண்டும்.

அந்த திறன் பிறக்க வேண்டுமென்றால் அதற்கு எது வேண்டும்…?

அந்த மகரிஷிகள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளிலும்… அதை உருவாக்கிய அணுக்களிலும்… அந்தச் சக்தியை இணைக்க வேண்டும்.

இந்த உணர்வின் “மணம்…” வரப்படும் பொழுது கெட்டது வந்தால் பிளக்கும்.

பன்றி எப்படிச் சாக்கடையைப் பிளந்து அதற்குள் நல்லதை எடுக்கின்றதோ அதைப் போன்று நரசிம்ம அவதாரம்…!
1.நம் சுவாசத்திற்குள் வரக்கூடிய எதுவாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.மெய் ஒளியின் தன்மை நமக்குள் சேர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியாகச் செல்வதுதான் கடைசி கல்கி…”

இயற்கையில்… ஒரு பொருளின் தன்மை தனக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் பிரம்மா… சிருஷ்டி. உலகிலேயே மனிதனின் ஆறாவது அறிவுக்குள் சிருஷ்டிக்கும் எண்ணங்கள் உண்டு. ஒவ்வொன்றையும் படைக்கும் சக்தி பெற்றவன் தான் மனிதன்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை ஜோதிடம் இல்லை…! நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தின் நமக்குள் சிருஷ்டித்து அந்த உணர்வின் பாதையிலேயே தான் நாம் நடக்கின்றோம்.

அந்த ஞானிகள் சொன்ன மெய் உணர்வை நமக்குள் எடுத்து அதைச் சிருஷ்டிக்க வேண்டும் ரிஷி. ஆறாவது அறிவின் தன்மை… “ஏழாவது சப்தரிஷி…”

நாதங்கள் கொண்டு உணர்வின் தன்மை பாய்ச்சப்படும் பொழுது அந்த உணர்வுகள் அங்கே இயக்குகின்றது. அது தான் சப்தரிஷி என்பது. ஏழாவது அறிவு கொண்டு உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் விண்ணில் இருக்கக்கூடிய நிலைகளைத் தான் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.

1,மனிதனுக்குள் விளைந்த உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றி
2.என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் நிலை தான் அது.
3.அந்த ரிஷியின் தன்மையை நாம் பெற வேண்டும்
4.அதைப் பெறுவதற்கு நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்.

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…!” என்று கீதை சொல்வதன் உட்கருத்து

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…!” என்று கீதை சொல்வதன் உட்கருத்து

 

உதாரணமாக ஒருவன் நம்மைக் கெடுத்து விடுவேன் என்று சொன்னால் அவன் சொல்லை நாம் அதைப் பதிவு செய்து கொள்கிறோம்.

பதிவு செய்து கொண்ட பின்… “என்னை இப்படிப் பேசினானே… பேசினானே…” என்று அவனின் நிலையைக் கூர்மையாக எண்ணி அவனின் நிலையை நம் உடலுக்குள் சேர்த்து விடுகின்றோம்.

“நாம் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்…” என்று அவன் எண்ணினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து அதே வினையாகச் சேர்த்த பின்… நமக்குள் துன்புறும் உணர்வுகள் விளைகின்றன.

அவன் எண்ணியபடி நம் மனம் மாறுகின்றது. அதன் வழி நமக்குள் வரும் பொழுது
1.“இவன் என்னை இவ்வாறு சொன்னான்… சொன்னான்…” என்று அவன் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு
2.அவன் உடலில் விளைந்த உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்தபின்
3.“கெட்டுப் போக வேண்டும்…” என்று அவன் சொன்ன உணர்வுகள் நமக்குள் உள்ள நல்ல உணர்வுகளைக் கெடச் செய்து
4.”அவன் நிலைக்கு நாம் ஆளாகின்றோம்…”

நாம் இந்த உடல் நலிந்த பின் இறக்கப்படும் போது அவனுடைய நினைவுகள் வந்து… கண்ணன் காட்டிய வழி கொண்டு அவன் செய்த தீயதை நாம் மீண்டும் எண்ணும்போது “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…”

அவன் தீயதை விளைவித்ததின் தன்மையை நீங்காது அவனின் நினைவு கொண்டு நாம் வருவோமென்றால் அந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் வந்து
1.அவன் சொன்ன சிரமங்கள் நமக்குள் விளைந்து
2.இந்த உடல் நலிந்து அவன் நினைவு கூடுகிறது.

அவன் நினைவு கூடிய பின்பு இந்த உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அவன் யாரைச் சொன்னானோ அங்கே பழி தீர்க்கும் உணர்வுடன் சென்று… இதே உணர்வு அங்கே விளைந்து… அவனையும் வீழ்த்தி விடும்.

ஆகவே கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்று சொல்வது. இதுவும் கூர்மை அவதாரம்தான்.

அவன் செய்த தீய உணர்வின் நிலையை நாம் கூர்மையாக எண்ணி அந்த உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவனின் உணர்வு நமக்குள் வலுப்பெற்று… அதனின் உணர்வு நமக்குள் ஓங்கி வளர்ந்து…
1.இந்த உடலைவிட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா அவனின் மணம் கொண்ட ஈர்ப்பு வட்டத்துக்குள் சிக்கி
2.அவனின் பழி தீர்க்கும் உணர்வை அவனுடைய உடலில் விளைவித்து அவனையும் வீழ்த்தும்.

இதைத்தான் “ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்” என்று சொல்கின்றோம்.

திரும்பத் திரும்ப எண்ணிய உணர்வின் தன்மை சிவமானாலும் சிவத்திற்குள் சக்தியாக இயங்கி எதனின் மணமோ அதனின் நிலைகள் கொண்டு மீண்டும் இயங்கி “மீண்டும் மீண்டும் தனக்குள் எதனைச் சேர்க்கின்றோமோ…” அதனின் நிலைகள் கொண்டு மாறிக் கொண்டேயிருக்கும்.

அதைத்தான் கீதையில் “எதை நீ நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!” என்று எடுத்துரைக்கப்பட்டது.

மற்ற உயிரினங்கள் தன்னைக் காத்திடத் தன்னைக் காட்டிலும் உயர்ந்த நிலைகள் கொண்டு அதனின் உணர்வை நுகர்ந்து பரிணாம வளர்ச்சியை அடைந்து எதனையும் காத்திடும் உடலாகப் பெற்றது.

அவ்வாறு பரிணாம வளர்ச்சி அடையச் செய்து மனிதனான நிலையில் தன் உயிரின் துணை கொண்டு தீமையை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக நின்று என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மெய் ஞானிகள்.

இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளைத் தகர்த்திட… அது நமக்குள் நிலைத்திடாது தடுத்திட… கீதையிலே கண்ணன் காட்டிய அருள் நெறி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நம்முள் உட்செலுத்தி இந்தத் தீமைகளைத் துடைக்க எண்ணினால் தீமைகள் நமக்குள் வராது.

1.நாம் எண்ணிய அந்தக் கூர்மையின் நிலைகள்
2.இந்த வாழ்க்கையிலே தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் ஓங்கி வளர்ந்து
3.அந்த அருள் ஞானியின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் வலுப்பெறுகின்றது.

அவ்வாறு அந்த ஞானிகளின் உணர்வுகள் வலுப் பெற்றுப் பிறருடைய உணர்வுகள் தம்மை இயக்காமல் தடைப்படுத்தும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள காவியத்தின் “மூலக் கருத்து”

ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள காவியத்தின் “மூலக் கருத்து”

 

கேள்வி:-

வான்மீகி மாமகரிஷி உணர்த்திய ராமாயணத்தில், தசரத சக்கரவர்த்தி, கைகேயியின் குறுகிய எண்ணங்களால், இராமன் காட்டிற்கு சென்ற நிலையும், இந்த பிரிவின் நிலையைத் தாங்காது, தசரத சக்கரவர்த்தி இறந்த நிலையை காண்பிக்கின்றார்.

நமது ஞானகுரு உணர்த்திய அருள் வழியில், பத்தாவது நிலையை அடையக்கூடிய இந்த உடலை ஆளும் இந்த உயிரின் நிலை “தசரத சக்கரவர்த்தி” பத்தாவது நிலையை அடையக்கூடியது.

இந்த உடலுக்குள், எண்ணத்தின் நிலைகளை பிரதானமாக வைத்து வான்மீகி மகரிஷி உணர்த்தி, இந்த மனித உடலின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என அருளியுள்ளார்.

இதில் தசரத சக்கரவர்த்தியின் செயலாக்கங்கள் இறந்த நிலையாகக் காண்பிக்கின்றார்கள். இதற்கு விளக்கம் வேண்டும்.

பதில்:-

எந்த ஒரு ஞானியாக இருந்தாலும் அவரவர்கள் கண்ட பேருண்மைகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைக்கொப்பத் தான் வெளிப்படுத்துவார்கள். வான்மீகியும் அப்படித்தான் “உயிரை அரசனாக வைத்துக் காட்டியுள்ளார்…”

நமது ஞானகுரு அதை நமக்கு வெளிப்படுத்திய விதம்
1.இன்றைய காலகட்டத்திற்கொப்ப… அதே சமயத்தில் எல்லாவற்றையும் சேர்த்து
2.எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும்படியான விளக்கத்தைத் தான் கொடுத்துள்ளார்கள்.

தசரதன் இறக்கின்றான் என்றால் இங்கே உயிர் இறக்கவில்லை. அதாவது
1.உயிரில் இருள் சூழ்கிறது… நஞ்சு சூழ்கிறது…
2.”உயிரான்மா நஞ்சாகிறது…” என்று தான் பொருள்.

சிறுகச் சிறுகப் பரிணாம வளர்ச்சி அடைந்து நஞ்சைக் குறைத்து மனிதனாக உருவாக்கிய நிலையில்… மனித சிந்தனை இழப்பதைத் தான் அவ்வாறு காட்டப்பட்டது.

மகாபாரத்திற்கும் இராமாயணத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

அங்கே “சகுனி” சூழ்ச்சி செய்கிறான்… பஞ்ச பாண்டவர்களும் (கடைசியில் திரௌபதையும் – உயிரின் உணர்ச்சிகள் நஞ்சாகிறது) அதிலே சிக்கி விடுகிறார்கள்.

இங்கே “கூனி” சூழ்ச்சி செய்து கைகேயி மூலமாக உயிரின் உணர்வுகள் நஞ்சாகிறது.

அங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள்… பின் போர் நடக்கிறது.

இங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள். பின் போர் நடக்கிறது.

1.இந்த உடல் தான் காடு.
2.உயிரான்மாவை நஞ்சிலிருந்து மீட்கும் நிலை தான் போர்.

போர் முடிந்து வந்தாலும் ராமனும் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. சீதாவைப் பிரிகின்றான்.

அங்கே மகாபாரதத்தில் பாணடவர் பிள்ளைகள் அனைத்தும் மடிகின்றனர். கடைசியில்… தர்மன் மட்டும் எஞ்சியதாகக் காட்டி…
1.சுவாசத்திற்கு மோட்சம் கேட்டு (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி)
2.அதன் பின் விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.

இங்கே சீதா (உடல்) மண்ணுக்குள் செல்கிறது, ஆனால் அதிலே உருவானதை
1.லவா குசா என்று (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி) அதைக் காட்டி…
2.அவர்கள் மூலமாக உயிருடன் ஒன்றி விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.

இரண்டிலுமே… மனித வாழ்க்கையில் வந்த “நஞ்சை வென்று உணர்வை ஒளியாக்கும் சூட்சமம் தான்…” காட்டப்பட்டுள்ளது.

இன்னும் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு குளவியால் தாக்கப்படும் புழு… “(புழுவின் உயிர்)”
1.அடைபட்ட இடத்திலிருந்தே (உடல் – காடு) குளவியின் உணர்வைச் சுவாசித்து (நஞ்சாகி)
2.புழுவின் உயிரான்மா குளவியின் உயிரான்மாவாக “வளர்ச்சி” அடைகிறது.

அதே போல் மனித வாழ்க்கையில் பிறரை வீழ்த்த வேண்டும் (கைகேயி) என்று வீழ்த்திய அந்த உணர்வு தன்னை வீழ்த்திடும் நஞ்சாக மாறுகிறது.

அதிலிருந்து உயிரான்மாவை மீட்ட “ஒளியான உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்…” என்பது தான் காவியத் தொகுப்பின் உள் கருத்து.

1.தசரதன் இறக்கிறான் என்றால் உயிரான்மா நஞ்சாகிறது – அமாவாசை (மீண்டும் பூமிக்குள் உடல் பெறும் நிலை)
2.அதுவே… ஒளியான உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் போது – அது பௌர்ணமி (பிறவா நிலை)

அதாவது… சீதா (ஒளியான உணர்வுகள் – நாம் தியானத்தின் மூலம் இப்பொழுது எடுப்பது) விஷ்ணுவுடன் (உயிர்) இணைந்து ஒளிச் சரீரம் பெறுவது.

விண்ணிலே உதித்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்று… மனித உடலில் முழுமை பெற்று முதிர்ச்சி பெறுவது தான் “படைப்பின் வளர்ச்சி…”

1.அதனுடைய பருவங்களைத் தான் கதாபாத்திரங்களாகக் காட்டப்பட்டு… நிகழ்ச்சிகளாக விவரித்து
2.பின் வளர்ச்சி அடைய வேண்டிய “சரியான பாதையைக் காட்டி…” தான் அந்த வழியில் பயணம் செய்து
3.பிறவா நிலை என்ற எல்லையை அடைவதாக… முழுமை பெறுவதைக் காட்டினார்கள் ஞானிகள்.

கேள்விக்குண்டான பதிலின் மொத்தச் சுருக்கம்:-

1.புழுவாகிய நான் வீழ்கிறது – குளவியான நான் வளர்கிறது… அது போல்
2.மனிதனான நான் (தசரதன்) வீழ்கிறது – ஒளியான நான் வளர்கிறது.

தெய்வீக அன்பைத் தான் நாம் வளர்க்க வேண்டும்

தெய்வீக அன்பைத் தான் நாம் வளர்க்க வேண்டும்

 

பாசத்தால் நாம் அதிகமாக வேதனையைத் தான் நுகர்கின்றோம்… எதை…? விஷத்தை…!
1.எவர் மேல் பாசம் அதிகம் ஆகின்றதோ
2.அப்போது வேதனை என்ற நஞ்சையும் அதனுடன் இணைத்துக் கூடவே சாப்பிடும்.

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் அவன் சேர்ந்து சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் நமக்குள் கலந்துவிடும்.

அவனை எண்ணி எண்ணி இந்த உடலே கரைந்து விடும். விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ இந்த உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அந்த நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

1.இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்
2.உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் ஒரு உடலுக்குள் பேயாகப் போய் நோயாகவே உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.உங்கள் உயிருடன் எப்பொழுதெல்லாம் ஒன்றுகின்றீர்களோ
3.அந்தச் சக்தியை அப்பொழுது நீங்கள் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
4.அதற்குத்தான் இந்த உபதேச வாயிலாக ஆழமாக ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

விரயமில்லாதபடி எந்த நிமிடமும் நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கலாம்.

யாம் கொடுக்கக்கூடிய சக்தியை நீங்கள் அனைவரும் பெற்று நீங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில்
1.உங்கள் பார்வை உங்கள் சொல் உங்கள் மூச்சு காற்றலையில் பரவினாலும்
2.யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…?

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…?

 

போகன் கண்டறிந்த தத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பழனியில்… மலை மீது நாம் ஏறுகின்றோம். ஏறும் போது மேல் நோக்கி எப்படி எண்ண வேண்டும் என்ற நிலையை சற்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

1.படியின் கீழ் இருந்து நாம் மேல் நோக்கிச் செல்லும் நிலையில்
2.அந்த போக மாமகரிஷியை எண்ணி “அவன் அருளைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள்… மேல் நோக்கி வருகின்றது…”

கீழிருந்து மேலே முருகனைப் பார்க்கின்றோம். ஏனென்றால் குன்று தோறும் அமர்ந்திருக்கும் முருகா…! என்று நாம் பாடலைப் பாடுகின்றோம். உயரமான குன்றில் சிலையை வைத்த நிலையில்… அவன் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குகிறோம்.
1.சூரியனின் காந்த சக்தி ஞானிகள் உணர்வைப் புவியில் (தரையில்) படரச் செய்யாது மேலே மிதக்கச் செய்கின்றது.
2.நாம் மேல் நோக்கி எண்ணும் பொழுது அந்த மலை முகட்டில் இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு
3.நம் உயிருடன் ஒன்றி இயக்கத் தொடங்கி விடுகின்றது.
4.இந்த உணர்வுகள் மூன்றும் சேர்த்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
5.தன்னிச்சையாகவே அந்த உணர்வை (நாம் எதை எண்ணுகின்றோமோ) உயிரின் வழி உள்ளுக்கே நுகரும் தன்மை வருகின்றது.

சாதாரண மனிதனும் எளிதில் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறும்படி வைத்துள்ளார்கள்.

நினைவை நாம் மேல் நோக்கி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டப்படும் பொழுது அந்த வலிமை பெற்ற உணர்வுகள் நமக்குள் இணைந்து “நம் உடலில் நோய் இருந்தாலும்… அதை மறக்கச் செய்கின்றது…”

மலை மீது ஏறும் போது இந்த உணர்வின் வலிமை எல்லாம் அதற்குள் சென்று விடுகின்றது. நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி அதனின் உணர்வைத் தனக்குள் சிறுகச் சிறுகச் சேர்க்கும் போது
1.உடலில் இருக்கும் எதிர்ப்புணர்வுகள்… அதாவது பகைமை கொண்ட உணர்வின் அணுக்களுக்கு
2.ஞானிகளின் உணர்வை ஈர்க்கப்படும் பொழுது பகைமை உணர்வுகள் தணிகின்றது.

அந்த அணுக்களின் வீரிய சக்தி ஒடுக்கப்படும் பொழுது இங்கே வலுக்கூட்டி மலை மீது ஏறும் தன்மை வருகின்றது.

சில பேர் தரையில் கூட நடக்க முடியாமல் இருப்பார்கள். ஆனால் மலை மீது போகும் பொழுது முருகா…! என்று அவன் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வுகள் உள்ளே புகுந்த பின் நான்கு அடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு மாதிரியாக இருக்கும்.

இந்த உணர்வுகள் உள்ளே சென்ற பின் மனித உடலில் பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைத் தணியச் செய்கின்றது. பின் தாராளமாக ஏற முடியும். இதைப் பார்க்கலாம்.

1.ஏறும் போது மேலே நோக்கி மட்டும் எண்ணிப் பாருங்கள்.
2.மூட்டு வலி… என்னால் ஏற முடியவில்லை என்பதெல்லாம் மாறும்.

இதே மாதிரி அங்கு மட்டுமல்ல…! உங்கள் வீட்டின் மாடிப்படிகளிலோ மற்ற உயரமான இடங்களில் ஏற முடியவில்லை என்றாலும் ஈஸ்வரா…! என்று மேல் நோக்கி ஞானிகளை எண்ணி அந்த உணர்வை எடுத்தால் இரண்டு படி ஏறுவது சிரமமாக இருக்கும் மூணாவது படி நாலாவது படி தாராளமாக ஏற வரும்.

விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்று மனிதன் உயர்ந்த நிலை அடைவதற்குத் தான் இத்தனை நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த விண்ணினுடைய ஆற்றல்
2.நம் உடல் உறுப்புகளில் சேர்ந்து அதைச் சீராக இயங்கும்படி செய்கின்றது.

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தில்லை அம்பலத்தாண்டவா

தில்லை அம்பலத்தாண்டவா

 

அன்று திருமூலர் பதஞ்சலியாக இருந்து கூடு விட்டுக் கூடு பாய்ந்து மாடு மேய்ப்பவன் உடல் மூலமாக அவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது
1.அவன் மனைவி கணவனை எப்படி வரவேற்கிறது…?
2.மரியாதை கொடுத்து எப்படிஉபசரிக்கிறது…! என்பதைப் பார்த்த பின் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

ஆனால் பதஞ்சலியாக… அரசனாக இருக்கப்படும் பொழுது
1.தன்னுடைய சேனாதிபதிக்குப் பயப்பட வேண்டும்
2.தன்னுடைய மனைவி இன்னொரு நாட்டு அரசனுடைய மகள் அவளுக்குப் பயப்பட வேண்டும்
3.தான் சட்டங்களை இயற்றினாலும் மக்களுக்குப் பயப்பட வேண்டும்
4.பின் எதிரிகளுக்குப் பயப்பட வேண்டும் என்று
5.இப்படிப் பயந்த உணர்வுகளே கொண்டு வாழும் நிலைகளே தனக்குள் வந்தது.

இதிலிருந்து தப்பிக்க உயர்ந்த சக்திகள் கொண்டு கூடுவிட்டுக் கூடு பாயும் சக்திகள் பெற்றிருந்தாலும்… அப்படிச் சென்ற பின் தன் உடலை வீழ்த்தி விட்டால் தான் எவ்வாறு மீள்வது…? வழியில்லையே…!

பாம்பினத்திற்குள் சென்ற பின் அங்கங்கள் கொண்டு செயல்படும் வழியில்லை… அப்பொழுது தான் எப்படிச் செயல்படுத்துவது…? என்று இந்த உணர்வின் நினைவு வருகின்றது.

பாம்புக் கூட்டுக்குள் இருந்து விஷத்தைப் பாய்ச்சி இன்னொரு உடலுக்குள் போகும் திறன் தான் உண்டு. எந்த உடலைத் தேர்ந்தெடுக்கின்றோமோ மனித உடலாக இருந்தால் அறிவின் தன்மை இயக்க முடியும்.

இதை உணர்ந்த அந்தப் பதஞ்சலி
1.தான் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு அந்த மாடு மேய்ப்பவன் உடலைத் தீண்டி அதற்குள் புகுந்து
2.அறிவு வளர்ச்சி இல்லாததாக இருந்தாலும்… “இவன் உணர்வால்” அங்கே வலிமை பெற்று அந்த உடலை இயக்குகின்றான்.

தில்லை நடராஜா…! இந்தப் பூமி அதனுடைய இயக்கத்தில் நிற்காமல் ஓடுகின்றது. அது எவ்வாறு இயக்குகிறது…? என்றும் அதிலே விளைந்தது தில்லை அம்பலதாண்டவா.
1.இந்த உடலான எல்லையில் உயிராக நின்று
2.என்னை ஆண்டு கொண்டு இருக்கும் நிலைகள் தில்லை அம்பலத்தண்டவா…!
3.நான் சுவாசிக்கும் உணர்வு எதுவோ அதை நீ ஆளுகின்றாய்.
4.நான் எதன் உணர்வை எடுக்கின்றேனோ அந்த உணர்வுக்குத் தக்க என்னைக் குறுக்குகின்றாய்
5.என்னை ஆட வைக்கின்றாய்… ஆட்டங்களை ஆட வைக்கிறாய்…!
6.அந்த உணர்வின் இசைக்கொப்ப என்னை இயக்குகின்றாய் என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

அது தான் தில்லை நடராஜா…! என்று நடனக் கலையிலே சிறந்தவன் என்று கூறுவார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை சக்தியாகி உணர்வின் தன்மை உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? இன்று ஆடுகின்றோம்…! (நம் செயல்கள்)

இந்த உணர்வை வளர்த்த பின் அதற்குத் தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது என்ற நிலையை… உணர்வின் இயக்கங்கள் தன் உடலில் வரப்படும் பொழுது எவ்வாறு என்று நடனக் கலையாகக் காட்டினார் அன்று திருமூலர்.

தில்லை நடராஜா என்று நிற்காமல் ஓடும் பூமியின் செயலும்… அதற்குள் உராயும் உணர்வுகள் தனக்குள் விளையும் அணுக்களின் மாற்றங்களும்… எதனின் உணர்வு மாறுகின்றதோ அதன் உணர்வின் செயலாகத் தாவர இனங்களும்…
1.நுகர்ந்த உணர்வுகள் தனக்குள் எண்ணங்களாக எப்படி ஆகின்றது…?
2.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உருவங்கள் எப்படிப் பெறுகின்றது…?
3.அதனுடைய கலைகள் எப்படி இருக்கின்றது…? என்று தெளிவாக “அவர் பாடல்கள் மூலமாக…” உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளர்.

தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…!
1.நான் எண்ணும் உணர்வின் தன்மையை
2.அதாவது… என்னை நீ (உயிரான ஈசன்) எப்படி இயக்குகின்றாய்…? என்ற நிலையை அவன் உணர்த்தினாலும்
3.பின் வந்தவர்கள் “திருமூல மந்திரம்…” என்று திரித்து விட்டார்கள்.

விண் சென்ற ஞானிகள் மூச்சலைகளை நாம் நுகர்ந்து இனி வரும் சந்ததியினருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்

விண் சென்ற ஞானிகள் மூச்சலைகளை நாம் நுகர்ந்து இனி வரும் சந்ததியினருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்

 

இந்த மனித உடல் நமக்கு நிலையானது அல்ல. நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் செல்வதே மனிதனின் கடைசி எல்லை. நீங்கள் இந்த உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். இந்த நச்சுத்தன்மையான உலகத்தில் இருந்து விடுபட வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில்… மனிதன் சீர்குலைந்த நிலையில் செயல்படக்கூடிய நிலைகளும் மனித உருவையே குறைக்கக் கூடிய நிலைகளாகவும் விஷத்தன்மைகள் பரவிக் கொண்டு வருகின்றது.

இனி எந்த நேரம் எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது. அதற்குள் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நிலையான ஒளிச் சரீரமாகப் பெற வேண்டும்.

1.மெய் ஒளியினைப் பெருக்கி அந்த மெய் ஆற்றல்களை உங்களுக்குள் விளைய வைத்து
2.நீங்கள் இடும் மூச்சலைகள் ஒவ்வொன்றும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு விஞ்ஞானத்தால் வரக்கூடிய விஷத்தினை அது மாய்த்து
3.நல்லதை எண்ணி ஏங்கி வருவோர் உள்ளங்களுக்குள்ளும் ஞானத்தின் உணர்வுகளை விதைத்து
4.அடுத்து வரும் சந்ததியினர் மெய் ஒளியின் தன்மை கொண்டு நிலையான சக்திகளைப் பெறச் செய்வதற்கு உங்கள் மூச்சலைகளே உதவும்.

அதாவது… மெய் ஞானிகள் இட்ட மூச்சலைகள் இன்று நமக்கு எப்படி உதவுகின்றதோ அதே போல வரும் சந்ததியினருக்கு அதைக் கிடைக்கச் செய்ய முடியும்.

ஏனென்றால் இந்த உலகம் மாறப் போவது நிச்சயம். அதாவது மனித உலகம் நினைவிழக்கப் போகின்றது.

ஆதிகாலத்தில் காட்டுமிராண்டிகளாக மனிதன் எப்படி வாழ்ந்தானோ அதைப் போன்று உருப்பெறும் நிலைகளாகி… மனிதனுக்கு மனிதன் தர்மம் என்று ஒன்றை வைத்துக் கொண்டு… ஆனால் மற்றவரை வீழ்த்தும் நிலையே வளர்ந்து கொண்டிருக்கின்றது.

அதனால் நச்சுத்தன்மைகள் அதிகமாகி விஷத்தன்மைகளாகப் பரவிக் கொண்டுள்ளது. அணுகுண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் எல்லாம் சாதாரணமாகப் போய்விட்டது… அவை மற்றவர்களைச் சுட்டுப் பொசுக்கும்.

ஆனால் அதைக் காட்டிலும்
1.தாவர இனங்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் போட்டு
2.அந்தப் பூச்சிகளைக் கொன்று விட்டு நாம் வாழ வேண்டும் என்று எப்படி விரும்பினோமோ இதைப் போல
3.இந்த உலகத்தில் உள்ள கோடான கோடி நிலைகளையும் மாய்த்துக் கொல்லக்கூடிய
4.விஷமான சக்திகளை ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.

ஆக… பூச்சிகளைக் கொன்று தாவர இனங்களை வளர்த்து நாம் வாழ்வதற்காக என்று அதைச் செய்திருந்தாலும்
1.இன்று அதை எல்லாவற்றையுமே போர் ஆயுதங்களாக உருவாக்கி விட்டார்கள்.
2.எந்த நிமிடத்திலும் அத்தகைய ஆயுதங்கள் வெடிக்கலாம்.

அப்படி வெடித்தால் மனிதனுடைய உணர்வுகள் நஞ்சின் தன்மை ஆகி மனிதனுடைய நினைவலைகள் பூரணமாக அழிகின்றது. மனித உரு இருக்கும். ஆனால் மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு புத்தி இல்லாத நிலைகளாகத் தான் செயல்பட வேண்டி வரும்.

குரங்குகளுக்கு மனிதனைப் போன்ற அங்கங்கள் கை கால் உண்டு. மனிதனைக் காட்டிலும் எங்கும் எதிலும் தாவிச் சென்று ஏறக்கூடிய வலிமை இருந்தாலும் மனிதனை ஒத்த… சொல்களைச் சொல்லி மற்றவர்களுக்குப் புரியக்கூடிய நிலையில்… அதை வைத்துத் தன் நிலைகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலைகள் கிடையாது.

மனிதனோ சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற்றவன். ஆக மனிதனை ஒத்த குரங்குக்கே அந்த நிலை இல்லை. ஆக மற்ற உயிரினங்கள் எப்படி…? என்று பார்த்துக் கொள்ளலாம்.

மிருகங்கள் எப்படிக் காட்டுமிராண்டித்தனமாகச் செயல்படுகின்றதோ அது போன்று மனிதனுடைய சிந்தனைகள் பூண்டோடு அழித்திடும் நிலையாகச் சென்று கொண்டு இருக்கின்றது.

குரங்கிற்கு ஒரு ஆகாரத்தைப் போட்டாலும்… தன் வாய் நிறைய அதை வைத்திருந்தாலும்… மற்ற குரங்குகளை அது அடித்து விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.

அதைப் போன்று மனிதர்களுக்குள்ளும் மற்றவர்கள் எதையும் பெற விடாதபடி தானே அனுபவிக்க வேண்டும் என்று ஈவு இரக்கமற்றுச் செயல்படும் நிலைகளாக வந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே இது போன்ற நிலைகளை உணர்ந்து மெய் வழியைப் பெறும் தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
1.இப்பொழுது நாம் சொல்வது உங்களுக்கு லேசாகத் தெரியலாம்.
2.போகப் போகத்தான் யாம் சொல்லக்கூடிய உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

எப்படிச் செடி கொடிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு உரத்தைப் போட்டவுடன் மரத்திற்குள் அது ஐக்கியமாகி… காற்றிலிருந்து தன் இனமான சக்திகளை எடுத்து அது நல்ல மணிமுத்துகளைக் கொடுக்கின்றது.

அது போல்… அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை உரத்தைப் போன்று நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். உங்கள் நல்ல குணங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அதற்கு யாம் சொன்ன முறைப்படி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் தியானித்துப் பழகிக் கொள்ளுங்கள்.

பழகிய பின்…
1.அடுத்து எப்பொழுது கஷ்டம் வருகின்றதோ அந்தக் கஷ்டம் நிலைத்திருக்காதபடி
2.துன்பமான விஷமான குணங்களை எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உண்டு பொசுக்கி விடலாம்.

ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அந்த சக்தி எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று இப்படி ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரேடியோ டிவியில் ஸ்விட்சைப் போட்டவுடன் அந்த அலைவரிசையை எடுத்து அதைச் செயல்படுகின்றதோ அதே போல ஞானிகள் அருளாற்றல் மிக்க அருள் சக்தியை நீங்கள் பெறக்கூடிய தகுதிக்கே இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.அதற்கு ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் பத்து நிமிடமாவவது தியானிக்க வேண்டும்.
2.தியானமிருந்தால் தான் அந்தச் சக்தியைக் கூட்ட முடியும்… உங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

குரு காட்டிய வழியில் “மெய் உலகைப் படைப்போம்…”

குரு காட்டிய வழியில் “மெய் உலகைப் படைப்போம்…”

 

இன்றைய நிலையில் பூமியில் வாழும் உயிரினங்கள்… மிருகங்களிலிருந்து மனிதன் வரை மிகவும் சிரமமான நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.

அதே சமயம்
1.மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்றதாகி
2.மனித உடலில் விளைய வைத்த அந்தச் சிந்தனையற்ற உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது.
3.அத்தகைய உணர்விலிருந்து நாம் மீள வேண்டும்.

“நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து” நம்மையறியாது சேர்ந்த தீமைகள் நீங்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாகவும்… நன்மை பயக்கும் சொல்லாகவும்… செயலாகவும்… நமக்குள் வளர வேண்டும்.

நம்முடைய உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும் சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும் அது வளர்ந்திட வேண்டும்.

1.அன்றைய மெய்ஞானிகள் எல்லோரும் எவ்வாறு ஒன்று கலந்து உறவாடினார்களோ
2.அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் ஒன்றுபட்ட உணர்வாகச் செயல்பட வேண்டும்.

ஆகாத உணர்வுகள் வந்தாலும் சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டுச் சேர்த்துத் தீமையற்ற நிலையாக வளரும் நிலைக்கு வர வேண்டும்.

நாம் தனித்த சரீரங்களாக இருந்தாலும்
1.சகோதர உணர்வுடன் வாழ்ந்திடும் உணர்வாக நாம் இடும் மூச்சலைகள் இங்கே படர்ந்து
2.அதன் வழிகளில் நம் பூமியான பரமாத்மாவும் பரிசுத்தப்படும் நிலை ஏற்படும்.
3.இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து எடுக்கும் அனைத்து உயிரான்மாக்களுக்கும் மெய்வழி பெறும் நிலை ஏற்படும்.

நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து உணவாக உட்கொண்டு உடலாக ஆனோமோ… இந்த மனித உடலுக்குள் எண்ணிய உயர்ந்த எண்ணங்கள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து… அதாவது
1.நாம் எந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டோமோ அதை உணவாக்கிய நம் உணர்வின் எண்ண அலைகள் படர்ந்து
2.நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி
3.நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.

அதன் மூலம் தாவர இனங்களும் சத்தான நிலைகளில் வளர்ந்து அதை உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும் மெய் உணர்வினைப் பெறும் தகுதியாக உங்களுடைய மூச்சுகள் அமைய வேண்டும்.

ஆகவே… “மெய் உலகைப் படைக்கும் உணர்வாக” உங்களுக்குள் விளைந்து நீங்கள் இடும் மூச்சலைகள் உலகில் உள்ள தீமைகளை நீக்கிடும் சக்தியாக மலர வேண்டும்.

எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்திற்குள் நம் எண்ணங்கள் சென்று அதன் வழிகளிலே நல் வினைகளைச் சேர்த்து அது வினைக்கு நாயகனாக ஆகி
1.அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து
2.என்றும் நிலையான “பெருவீடு பெருநிலை” என்ற நிலையடைந்து மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்தியருளிய அருள் வழியை நீங்களும் பெற வேண்டுமென்ற இந்த ஆசையில்தான் இதை உணர்த்துகின்றோம்.

நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைத்து… உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
1.நமது குருநாதர் வழியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
2.மெய் உலகைப் படைப்போம்…!

உலகம் சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!

உலகம் சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!

 

விஞ்ஞான உலகத்தால் வரக்கூடிய பேரழிவும்… மனிதன் ஆசையின் நிலைகள் கொண்டு வரும் பொழுது ஒன்றைக் காக்க என்று தீவிரவாதமும் மதத்திற்குள் மதம் தீவிரவாதமும்… இனத்திற்குள் இனம் தீவிரவாதம்… வீட்டிற்குள்ளேயே தீவிரவாதம்… தெருவிற்குள்ளும் தீவிரவாதம்… வளர்ந்து விட்டது.

என்னமோ பெரிய இவன் மாதிரிப் பேசுகின்றான் என்று இது போன்ற தீவிரவாத உணர்வுகள் எல்லோருக்குள்ளும் பெருகி வரப்படும் பொழுது
1.நல்லதைக் காப்பது யார்…? நல்லதை காக்கும் ஆள் இல்லை…!
2.ஆக… இந்த உலகமே சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான் இது போன்ற சந்தர்ப்பங்களில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!
3.நம் குருநாதர் கொடுத்த அருள் உணர்வு கொண்டு ஒவ்வொரு திசையிலும் மகான்களை நாம் தோற்றுவிக்க வேண்டும்.

ஒரு சமயம் நபிகள் நாயகம் தோன்றினார் அரக்க உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து தோன்றினார்.

இங்கே தீமையின் நிலைகள் அதிகரிக்கப்படும் பொழுது அதை மாற்ற வியாசகர் வந்தார்… அதே போல் வான்மீகி மகரிஷி வந்தார். மகாத்மா காந்தி வந்தார். தீமையிலிருந்து விடுபட இராமலிங்க அடிகளும் தோன்றினார்.

இராமகிருஷ்ண பரமகம்சரும்… பக்தி மார்க்கங்களில் எத்தனை அதர்மங்கள் நடக்கின்றது…? அதிலிருந்து மக்கள் மீள வேண்டும்…! என்று அவர் உணர்த்திச் சென்றார்.

1.இப்படிப்பட்ட மகான்கள் தோன்றி வளர்ச்சி பெற்றாலும் அது நிலைத்திருக்கிறதா…?
2.அது தோன்றி உருப்பெற்ற இடங்களில் இன்று பார்த்தால் “நான் பெரியவன்… நீ பெரியவனா…?” என்று தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
3.இராமகிருஷ்ணருக்குச் சீடராக வந்த விவேகானந்தருடைய தத்துவங்களையும் மாற்றி விட்டார்கள்.

கடவுளைக் காட்டுகின்றாயா…? என்று விவேகானந்தர் கேட்கின்றார். கடவுளைக் காட்ட முடியாது… ஆனால் உணர முடியும் என்று இராமகிருஷ்ணர் உணர்த்துகின்றனர்.

உனக்குள் உள் நின்று இயக்கும் உணர்வு எதுவோ… எதை நீ நுகர்கின்றாயோ அந்த உணர்வின் இயக்கமாக உடல் இயங்குகின்றது.
1.உள் நின்று இயக்குவதே கடவுளாகின்றது.
2.எதன் உணர்வு வலுவோ அதுவே உன் உடலில் இருந்து இயக்குகின்றது என்று தெளிவாக்குகின்றார் இராமகிருஷ்ணர்.

இதைத்தான் ஒவ்வொரு மனிதனும் எப்படி இயக்க வேண்டும் என்று… ஒரு மனிதனை நல்லவனாக்க வேண்டும் என்றால் “அந்த நல்ல உணர்வை நுகரப்படும் போது என்னை நல்லதாக்குகின்றது…” ஒவ்வொரு மனிதனுடைய எண்ணங்களையும் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது அது எந்த வகையில் ஒன்று சேர்த்து இணைகின்றது என்று விவேகானந்தர் தெளிவாகக் கூறியுள்ளார்.

மற்றவர்களைக் காக்கும் நிலை வந்தால் தான் நம்மைக் காக்கும் நிலை வரும்

மற்றவர்களைக் காக்கும் நிலை வந்தால் தான் நம்மைக் காக்கும் நிலை வரும்

 

1.மகரிஷியின் அருள் சக்திகளைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் சில குறிப்புகளை எழுத வேண்டும்.
2.இருள் நீங்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சிறிது நேரமாவது நோட்டில் எழுதுங்கள்.
3.தொழில் வளமாக இருக்க வேண்டும்… நண்பர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள்.
4.நாம் எழுதினோம்… இப்பொழுது அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்ற நிலை உங்கள் அனுபவத்தில் வரும்.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

குடும்பத்தில் ஏதாவது கேள்விப்பட்டால் நான்கு பேர் ஒன்று சேர வேண்டும். அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்கு 100 பேரைக் கூப்பிட வேண்டியதில்லை.

இந்த நான்கு பேரும் சேர்ந்து…
1.முடிந்த மட்டும் மகரிஷிகளின் எண்ண அலைகளை அங்கே பரப்புங்கள்.
2.அந்தக் குடும்பம் ஓரளவுக்கு சீரானால் அவர்களும் திரும்பிப் பார்ப்பார்கள்.

அந்த வீட்டில் நல்ல அலைகளைப் பரப்புகின்றோம். அதன் மூலம் எல்லோரும் நலமாக வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொழுது அது நல்ல வளர்ச்சிக்கு வரும்.

ஒருவரால் கனமான பொருளைத் தூக்க முடியவில்லை என்கிற பொழுது நான்கு பேர் சேர்ந்து தூக்கினால் எளிதாகத் தூக்க முடிகின்றது.

நண்பர்களுக்குள் மிகவும் அவஸ்தைப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக எடுத்து அங்கிருக்கும் எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

அந்தக் குடும்பத்தில் அந்த அருள் சக்தி படர வேண்டும் மகிழ்ச்சி பெறும் நிலைகள் அங்கே உருப் பெற வேண்டும் தொழில் வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்த மாதிரிச் செய்தால் தான் நாம் அதைப் பெற முடியும்… வளர்க்க முடியும்.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கச் சக்திகளை எடுத்தாலும் சூரியன் அதை எடுக்கும் பாதையில் மற்றவைகளுக்கும் அதை உணவாகக் கொடுத்து அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்து அதிலே வந்த நஞ்சைப் பிரித்து ஒளியின் சுடராக மாற்றுகின்றது.

இதைப் போலத் தான்
1.பிறிதொருவருவர் எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது ஞானிகள் எண்ண உணர்வை நமக்குள் வலுப்பெறச் செய்து
2.தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வை வளர்த்து ஒளியாக மாறும் உணர்வை நாம் வளர்க்க வேண்டும்.

உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம். இது நம் குருநாதர் காட்டிய வழி இது. இதை நிச்சயம் நாம் அனைவரும் பெற முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் செல்வதற்குத் தியானமும் தவமும் தேவை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற அந்தத் தவம் இல்லை என்றால் நாம் தியானத்தில் எடுக்கும் சக்திக்கு வேலை இல்லை. தவமிருந்தால் தான் உங்களுக்கும் அது கிடைக்கும். இந்தப் பண்புகளை நாம் வளர்க்க வேண்டும்.

உலகம் முழுவதும் நலம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எத்தனையோ அரசியல்வாதிகள் வந்தாலும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எல்லோரும் அந்த நன்மை பெறும் சக்தி பெற வேண்டும் என்று இதை ஓங்கி வளர்க்க வேண்டும்.
1.உலகம் நன்றாக இருக்க வேண்டும்… காற்று மண்டலம் நன்றாக இருக்க வேண்டும்.
2.நாம் பார்ப்போர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைக் காட்டிலும் முக்கியமானது ஒன்று உண்டு…!

வீட்டிலே திருமணம் ஆகிப் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டால்… முதல் அந்த மூன்று மாதத்திற்குள் அவர்களை அணுகி எமது உபதேச நூல்களைக் கொடுத்து அதைப் படித்துக் கேட்கும்படிச் செய்து அதை எல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் உள்ளோர் தியானமிருந்து கருவிலிருக்கும் சிசு அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியைப் பெற்று “ஞானக் குழந்தையாக வளர வேண்டும்…” என்று தவம் இருங்கள்.
1.அந்தத் தவம் உங்களைக் காக்கும்.
2.அருள் ஞானி பிறக்கும் அது உலகத்தைக் காக்கும்
3.அப்படிக் காக்கக்கூடிய நிலைகள் உருவாக வேண்டும் என்று தவத்தை நாம் இருக்க வேண்டும்.
4.இந்த உணர்வை வளர்த்தோம் என்றால் தான் இந்த உலகை நாம் மீட்க முடியும்… உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக நாம் பெற முடியும்.
5.இந்த உடலான உலகத்திலிருந்தும் நாம் மீள முடியும்.
6.மீண்டும் உடல் பெறும் நிலைகளிலிருந்து நாம் மீள முடியும்.

இதைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு நாம் செயல்படுவோம். குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.