கலி எது..! கல்கி எது…?

கலி எது..! கல்கி எது…?

 

வீட்டிற்குள் பாம்பு வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐயோ பாம்பு வந்து விட்டதே…! கடித்து விடுமே… கடித்து விடுமே… சொல்லிக் கொண்டு இந்த உணர்வு அதிகமானால் பாம்பின் நினைவே வருகிறது.

“கலி” என்ற இந்த உணர்வுகள் அதிகமானபின் அதன் உணர்வை எடுத்து மனிதனாக இருக்கும் நாம் அந்த உடலுக்குள் சென்று விடுகிறோம். பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று அடுத்துப் பாம்பாகத் தான் பிறக்க நேரும்.

ஒரு மாட்டினை வளர்க்கின்றோம். மனிதனுடைய உணர்வைக் கூர்மையாகப் பார்க்கின்றது. அது தனக்குள் இதை எடுத்துக் கொண்டால் கலி தான்.

மனிதனுடைய உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டபின் நம்மை ஏங்கியே அந்த மாடு இறக்கப்படும் பொழுது யார் மேல் பிரியமாக இருந்ததோ இறந்த பின்… வளர்த்த அந்த உடலுக்குள் செல்ல நேர்கிறது.

எனேன்றால் வளர்த்த ஆர்வத்தில் “நான் செல்லமாக வளர்த்தேனே… நான் சொன்னபடி எல்லாம் கேட்டதே…!” என்ற மனிதனின் உணர்வு வரும் போது அதனின் அறிவாக மாறுகின்றது. மாடு இறந்த பின் நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. அது மாட்டிற்குப் பரிணாம வளர்ச்சி.

நாயோ கோழியோ ஆட்டையோ வீட்டில் நாம் செல்லப் பிராணிகளாக வளர்த்தாலும் மனிதனின் உணர்வு அதற்குள் வளரப்படும் பொழுது இறந்தால் மனிதனுக்குள் வருகின்றது. இதுவும் கலி தான். ஆனாலும் அவைகள் எல்லாம் பரிணாம வளர்ச்சி அடைகிறது.

உதாரணமாக… மனிதனாக இருக்கும் நாம் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம் என்றால் அந்த உணர்வை இரக்கத்துடன் நுகர்ந்தால் நமக்குள் அதே நோய் வரத் தொடங்குகிறது. நாம் தேய் பிறையாகின்றோம். இதுவும் கலியாகத் தான் ஆகிறது.

ஆனால் அந்த நேரத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று துவாரகா யுகத்தில் சேர்க்கப்படும் பொழுது
2.நாம் எந்த நல்ல குணத்தால் நோயாளியை உற்றுப் பார்தோமோ அவரின் வேதனை நமக்குள் சேராதபடி
3.அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
5.எந்தக் குணத்தின் மணத்தை உருவாக்கி அந்த எண்ணங்கள் வந்ததோ
6.அதில் அந்த அருள் ஞானத்தின் உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது இது “கல்கி” ஆக மாறுகிறது.
7.இருளை நீக்கும் அணுவின் தன்மையாக ஒளியாகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஏனென்றால் திரேதாயுகம் (உடல்) என்று இருந்தாலும் துவாரகா யுகத்தில் “வேதனை” நமக்குள் வலுவானால் கலியாக மாற்றி நல்ல உடலின் ரூபத்தையே மாற்றி விடுகின்றது.

1.ஆனால் அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமென்றால் கல்கி ஆகின்றது
2.உயிர் கல்கி… நாம் நுகரும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் உயிரைப் போன்றே ஒளியாக மாற்றிக் கொண்டு வருதல் வேண்டும்.

மனிதன் கனியாக ஆன… துருவ நட்சத்திரமான அந்தக் கல்கியை நாம் பெற வேண்டும் என்று தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு வருவது (ஞானகுரு).

சிறு சிறு திரைகள் நமக்குள் ஒவ்வொன்றிலும் உண்டு. நல்லதை மறைக்கும் அந்தத் திரைகளை நீக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் கனியாக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு நாளும் இந்த உணர்வின் தன்மையை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.
2.நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வையும் ஒளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொன்றிலும் நாம் இணைத்தால் தான் கல்கி. அதைச் சேர்க்கவில்லை என்றால் கலி தான்.

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

 

நாம் யாரும் தவறு செய்யவில்லை. பிறருக்கு நாம் பல நன்மைகளைச் செய்து இருக்கின்றோம். ஆனால் நாம் நன்மை செய்த நிலைகள்…
1.அந்த உதவி செய்த நன்றிக்காக நண்பன் உடலை விட்டுப் பிரியும் போது
2.நம் மேல் பற்று கொண்டு அந்த ஆன்மா பிரிந்து விட்டால்
3.அந்த ஆன்மா நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் வந்துவிடும்.

நண்பனை நாம் உடலுடன் எப்படிப் பார்த்து உதவி செய்தோமோ அதே போல் நமக்குள் வந்தாலும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் என் உடலில் உள்ள அந்த ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.இந்த நண்பன் நம்முடன் ஒன்றி வந்தாலும்
2.அந்த நண்பனிடத்தில் விளைந்த தீய வினைகள் நம்மிடத்தில் விளையாது நம்மையும் காக்கலாம்
3.அந்த நண்பனின் உயிர் ஆன்மாவையும் பிறவியில்லா நிலை அடையச் செய்யலாம்.

அதாவது உங்களின் நிலையிலிருந்தே அந்த ஆன்மாவை உயர்ந்த நிலை பெறச் செய்ய முடியும்

ஒவ்வொரு நாளும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

அந்த இன்னொரு உடலில் தான் வாழும் போது குடும்பத்தில் சங்கடத்தினாலோ வெறுப்பாலோ வேதனையாலோ உருவான உணர்வுகள் அங்கே எப்படி நோயாக விளைந்ததோ… அந்த உடலை வீழ்த்தியதோ… அதே சமயத்தில் “உதவி செய்தான் நண்பன்…!” என்ற எண்ணத்துடன் பற்று கொண்ட நிலையில் அந்த ஆன்மா நம்முள் வந்தாலும் அதைப் போன்ற தீமைகளை அகற்ற சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ண வேண்டும்.

அவ்வாறு பல முறை செய்யச் செய்ய நம் உடலில் இருக்கக்கூடிய நண்பருடைய உயிரான்மா நமக்குத் தீமை விளைவிக்காது அதற்கும் அந்த நன்மைகளைப் பெறச் செய்கின்றது,

ஆகவே பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தாலும் அந்தக் கஷ்டத்தை உருவாக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளையாது தடுக்க…
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பத்திரிக்கை வாயிலாகப் படித்துணர்ந்த நிலையில்
4.அது நமக்குள் தீமை விளைவிக்கும் வித்தாக விளைந்திடாது தடுக்கவும் நம்மைக் காத்திடவும் முடியும்.

ஆகவே மேல் அழுக்கைப் போக்க நீரை ஊற்றி எப்படிக் குளிக்கின்றோமோ… தங்கத்தில் செம்பும் வெள்ளியும் சேர்ந்து விட்டால் திரவகத்தை ஊற்றி எப்படிச் சுத்தப்படுத்துகின்றோமோ… கைகளில் அழுக்குப்பட்டால் சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்துவது போன்று
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நம் உடலுக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீவினைகளை அகற்றி
2.நன்றியின் உணர்வாக எண்ணி… நம்முள் வந்த ஆன்மாக்களுக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைச் செலுத்தி
3.நமக்குள் தீமையாக விளைவிக்காத அதைத் தடுத்து
4.சப்தரிஷி மண்டலத்துடன் அவர்களை இணையும் நிலையைச் செய்வதே நல்லது.

கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

கணவன் மனைவி ஒன்றிணைந்து எடுக்கும் தியானத்தால் கிடைக்கும் பலன்

 

பற்று கொண்ட நிலையில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் மனைவியுடைய ஆன்மா பிரியப்படும்பொழுது கணவருடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது… கணவனுடைய ஆன்மா பிரியப்படும் போது மனைவியுடன் இணைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.
1.உடல் பெறும் உணர்வுகள் இரண்டும் கரைக்கப்பட்டு
2.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
3.விண்வெளியில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
4.பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

அதாவது கணவன் உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா மனைவியின் பால் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனுடைய உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரம் பெற்று விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது துருவ தியானத்தில் இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

உதாரணமாக நெசவு தொழிலில் இருந்த ஒரு குடும்பம் அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவரோ ஆஸ்த்மா நோயினால் மிகவும் அவதிப்பட்டார். எளிய குடும்பமாக இருப்பினும் மனைவி மேல் மிகுந்த பற்றின் தன்மையும் குழந்தை மீதும் பற்றும் வருகின்றது.

இருந்தாலும் அந்த நோயினால் உடலில் வேதனை தாங்காது விஷத்தை உணவாக உட்கொண்டு உடலை விட்டு அந்த ஆன்மா பிரிகின்றது. பிரியும் பொழுது தன் மனைவி நினைவாகவே அந்த ஆன்மா சென்றது… மனைவி உடலுக்குள் சென்று விட்டது.

விஷத்தைச் சாப்பிட்ட பின் அவர் எப்படித் துடிதுடித்தாரோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடிதுடிக்கும் நிலை வந்துவிட்டது.

இரத்த நாளங்களில் அந்த ஆன்மா சுழன்று வரப்படும்போது சிறு மூளை பாகம் சென்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி
அதே உணர்வு
அதே சொல்
அதே செயல் என்று
அந்த உடலை இயக்கி அவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருந்தது

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.. சிறிது நேரம் சுயநினைவு இருக்கும் சில நேரம் இருக்காது. ஆனால் இரண்டு நாட்களாக சுத்தமாகவே நினைவு இழந்து விட்டது என்று என்னிடம் (ஞானகுரு) கொண்டு வந்தார்கள்… தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.

ஆவிகளை ஓட்டுபவர்களிடம் நாங்கள் சென்றோம் பணத்தைச் செலவு செய்தோம்… ஒன்றும் ஆகவில்லை. வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வந்து சொல்கின்றார்கள்.

ஆனால் அந்த அம்மாவிற்குச் சுயநினைவுன் இல்லை. அந்தக் குழந்தைகளும் வாடிக் கொண்டிருக்கிறது.

குடும்பத்தைச் சார்ந்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து தியானம் இருங்கள்… என்று சொன்னேன்
1.அந்த அம்மா உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா உயர்ந்த சக்தி பெற வேண்டும்
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மைகள் நீங்க வேண்டும் என்று தியானிக்கும் படி சொன்னேன்.

அதன் வழி அந்தக் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஒரு அரை மணி நேரம் தியானித்தார்கள். அந்த அம்மா சிறிது தெளிவானது.

எழுந்தபின் அந்த அம்மாவையும் இதே போல் சொல்லச் செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்தும்படி சொன்னேன். உடலில் இருந்த அந்த ஆன்மா பரிசுத்தம் அடைந்தது.

பின் நல்ல நிலைகள் ஏற்பட்டுத் தன் குடும்பத்தைப் பேணிக் காக்கும் அளவிலே வந்தது. வாழ்க்கையின் நிறைவில் அந்த அம்மாவும் இறந்தபின்
1.அந்த இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது ஒளிச்சரீரம் பெற்றது

ஆரம்ப நிலையில் யாம் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது 25 வருடங்களுக்கு முன்பு இத்தகைய நிலைகளைச் செயல்படுத்தி வந்தது.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எளிதில் விண்ணுக்கு (சப்தரிஷி மண்டலம்) அனுப்ப முடியும்.

குடும்பமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

உடலை விட்டுப் பிரியும் போது பறக்கும் நிலை பெற வேண்டும்

 

காலை துருவ தியானத்தின் உடலில் இருக்கக்கூடிய அணுக்கருக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஜீவன் ஊட்டிப் பழக வேண்டும்.

அது அணுவின் தன்மையாக அடைந்தபின் நாம் எதை நுகர வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதை எண்ணி ஏங்கப் படும்போது
1.அது ஞானத்தின் உணர்ச்சிகளாக நம்மை இயக்குவதும் அருள் வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது
2.நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்க தொடங்கி விடுகிறது.

தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விட்டால் இந்த உடலில் ஏற்கனவே உடலின் இச்சை கொண்டு மற்ற அணுக்கள் வளர்ந்திருந்தாலும் அருள் ஒளியின் சுடராக வரப்படும் பொழுது இருள் சூழ்ந்த அந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்து விடுகின்றது.

அது மடியும் தன்மை வரும் போது
1.ஒளியின் அணுவாக மாறுகின்றது… ஒளியாக மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்ற பின்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக ஆகின்றோம்.

உதாரணமாக ஒரு பட்டுப் புழு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் மணத்தால் உருவாகும் அந்த மலத்தை நூலாம்படை போன்று தனக்குள் சுற்றுகின்றது.

தனக்குள் சுழற்றிக் கொண்ட பின் தன்னை அறியாமலேயே ஒரு பாதுகாப்புக் கூடாக அமைத்து விடுகின்றது. அதிலே பாதை இல்லாத நிலைகள் அடைபட்டுக் கொண்டபின் “வெளியே செல்ல வேண்டும்… வெளியே செல்ல வேண்டும்…” என்று உணர்வுகள் உந்துகிறது.

1.தன் உடலில் மலத்தால் கட்டப்பட்ட இந்தக் கூட்டிற்குள் இருந்தே உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து
2.நினைவின் ஆற்றல் வெளியே பறக்க வேண்டும் என்ற உணர்வுகள் முதிர்ந்து “இறக்கைகள்” வளர்கின்றது.

அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த கூட்டைக் கத்திரித்து விட்டு வெளியே வரப்படும் பொழுது அது பூச்சியாக (புழு – பூச்சியாக) வெளி வருகின்றது.

அதனின் நிலைகள் முட்டை இடும் பொழுது இதை உணவாக உட்கொண்ட அதனின் கருவாக தன் இனமாகப் பெருக்குகின்றது. கூடு கட்டி மீண்டும் பறக்கும் பூச்சியாக மாறுகிறது.

இதைப் போலத்தான்
1.அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு நமக்குள் கூட்டைக் கட்டி
2.இந்த உணர்வின் தன்மை அருள் வட்டமாக நம் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.எந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அணுக்கள் விளைந்த பின்
4.கூட்டைவிட்டு (உடலை) வெளியே செல்லும் பொழுது அருள் மகரிஷிகளின் வட்டத்தில் சென்று
5.நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இப்படித்தான் ஒவ்வொரு உடலிலும் முழுமை அடைந்து நாம் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

தியானத்தில் வளர்ச்சி மிக மிக முக்கியமானது

தியானத்தில் வளர்ச்சி மிக மிக முக்கியமானது

 

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானம் செய்வதற்கு முன் இருந்த அனுபவமும் தியான வழிக்கு வந்த பின் பெற்ற சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.

அதனை நீங்கள் கூர்ந்து கவனித்து
1.அந்த உணர்வின் இயக்கம் நாம் இயங்குகின்றோமா…?
2.நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா…?
3.அவ்வாறு இயக்கிய உணர்வுகளுக்குத் தக்க நாம் செல்கின்றோமா…? என்று
4.நன்றாக நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றுகிறது. ஆகவே தீமை என்ற உணர்வின் தன்மையை மாற்றியமைக்கக் கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.

அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்பதை உணர்ந்து… மாற்றி அமைப்பதற்குண்டான சக்தியை நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமையிலிருந்து தப்புவதற்கு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை குருநாதர் எனக்குள் பெறச் செய்தாரோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீய வினைகள் இருந்தாலும் குறையும்.
2.புதிதாக தீயவினைகள் நமக்குள் வளராதபடி தடுக்க முடியும்.

இந்த இரண்டும் இல்லை என்று சொன்னால் நான் தியானம் செய்தேன்.. அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்…! என்று சொன்னால் அர்த்தமற்றது.

செடிக்கு அது சரியான பருவத்தில் நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால்தான் அது முளைத்து வளரும்.
1.செடியை வைத்து விட்டேன்… நீரையும் ஊற்றி விட்டேன்…
2.அது வளர்ந்து விளைந்துவிடும்… என்று சொன்னால் அது எப்படி விளையும்…?

எத்தனையோ கோடி உடல்களில் சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு தான் மனித ரூபத்தைக் கொடுத்தது நம் உயிர்.

பல விஷத் தன்மைகளை அடக்கினான்… உணர்வின் தன்மை மாற்றி அமைத்தான்… அகஸ்தியன் ஒளியின் உடல் பெற்றான்… துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும். அந்தத் தகுதியை நாம் பெற வேண்டும்.

அகஸ்தியன் ஒளியாக ஆனது போல
1.நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
2.முந்திய வினைகள் இருந்தால் அதைத் தணித்து… புதிதாக வினைகள் சேராதபடி தடுத்து
3.நம் உணர்வினை வலுவாக்கி ஒளியாக்க முடியும்.

அத்தகைய வலு பெறச் செய்வதற்குத் தான் இங்கே உபதேசம் கொடுப்பது.

சாமியிடம் உபதேசங்களைக் கேட்டதும்… அதன்படி உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டதும்…
1.உங்களை எது இயக்கியது…?
2.வெறுப்பு வந்து குடும்பத்தில் பகைமை எப்படி வந்தது…?
3.தொழில் எதனால் நஷ்டம் அடைந்தது…? என்பதை நீங்கள் உணர்ந்து
4.தியானத்தின் மூலம் அனுபவபூர்வமாகப் பெற்ற தீமையை நீக்கக்கூடிய அந்த உணர்வுகளை
5.நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

அதற்குத் தான் உங்கள் அனுபவங்களைச் சொல்லச் சொல்வது.

ஒளிச் சரீரம் பெற்றால் அகண்ட அண்டத்தில் “எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்…”

ஒளிச் சரீரம் பெற்றால் அகண்ட அண்டத்தில் “எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்…”

 

மனிதனாக ஆன நிலையில் பரிணாம வளர்ச்சியில் நாம் எப்படி வளர்ந்து வந்தோம்…? இந்தச் சரீரத்தில் தீமைகள் நமக்குள் வராதபடி எப்படிப் பாதுகாக்க வேண்டும்…? என்று சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிகிறது என்றால்…
1.பெரும்பகுதி பற்று கொண்ட உடலின் ஈர்ப்புக்குள் தான் செல்கிறது.
2.காரணம்… அந்த உடலில் நோயான பின் அவரைச் சார்ந்தோர் பாசமாக எண்ணும் போது
3.இறந்த பின் அந்த உடலுக்குள் அந்த ஆன்மா போகின்றது.
4.அங்கே போய் அதே நோயை அங்கே உருவாக்கி அந்த உடலையும் பலவீனப்படுத்தித் தேய்பிறை ஆகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்பதற்குத் தான் சிவன் இராத்திரி என்று நீ தனித்திரு… நீ விழித்திரு…! என்று சொன்னது.

இதை எல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியன் தன் இன மக்கள் அனைவரும் தான் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும் என்று தான் இதை அவன் வெளிப்படுத்தினான்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றான பின் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றனர் பத்தாவது நிலையாக.
1.எந்தத் துருவத்தை உற்று நோக்கினரோ அதே எல்லையில்…
2.துருவ நட்சத்திரமாக உருப்பெற்று இன்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் சூரியன் ஒன்பதாவது நிலைதான். மனிதனாக உருவான பிற்பாடு தான் பத்தாவது நிலை அடைகின்றது. ஒளியின் சரீரமாக என்றும் நிலையான பிறவியில்லா நிலை அடைகின்றது.

அப்படிப்பட்ட நிலை பெற்றால்
1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகி
2.இந்த அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் அவர்களுக்கு அழிவில்லை. ஏனென்றால்
1.இந்தப் பிரபஞ்சம் மற்ற பிரபஞ்சத்திலிருந்து எடுத்துக் கொண்ட சக்தி இங்கே உண்டு
2.அதன் துணை கொண்டு இது அழிந்தால் அடுத்த நிலைக்குச் செல்லும்.
3.அதன் உணர்வை எடுத்துக் கொண்டு ஒளியாக மாற்றும்
4.இப்படித்தான் பிறவி இல்லாப் பெரு வாழ்வு என்று மனிதனான பின் ஒளியின் தன்மை பெற்றது.

ஒரு வெப்பத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வினை ஒளியாக மாற்றும் சூரியனாக ஆன பின் இதற்குள் உயிரணு தோன்றுகிறது.

தோன்றியபின் நஞ்சினை வடிகட்டும் உணர்வின் தன்மை பெற்றுப் பெற்று… பரிணாம வளர்ச்சியில் மனிதனாகிறது. மனிதனான பின்…
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை வென்றிடும் உணர்வை
2.கணவன் மனைவி இரண்டு பேரும் எடுக்கப்படும் போது அவனைப் போன்றே ஒளியின் தன்மை பெற முடியும்.

மனைவி கணவனை எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் என் கணவர் பெற வேண்டும். அவர் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தி கலக்க வேண்டும். அவருடைய பார்வை எங்களை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அதையே கணவன் மனைவிக்கு எண்ண வேண்டும்.

அந்த அருள் ஒளியின் சுடரை எடுத்து யாரெல்லாம் வளர்த்துக் கொள்கின்றனரோ
1.அவர்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் பிளக்கின்றது…
2.இரு உயிரும் ஒன்றாகி சிவசக்தியாக ஒளி நிலை பெறுகின்றனர்.

ஆகவே… இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்று இவ்வாறு வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும். சிவன் ராத்திரி என்று அதனால்தான் விழித்திரு என்று சொல்வது…!

விண் செல்ல வேண்டும் என்றால் உயிரான்மாவின் முகப்பில் வைக்க வேண்டிய சக்தி எது…?

விண் செல்ல வேண்டும் என்றால் உயிரான்மாவின் முகப்பில் வைக்க வேண்டிய சக்தி எது…?

 

ஞானிகள் காட்டிய வழியில் நாம் விழித்திருக்க வேண்டும். அப்போது தான் மனிதனான நிலயில் பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளி நிலையை அடைய முடியும். உயிரணு தோன்றி மனிதனாக ஆனபின் தான் பத்தாவது நிலை அடைய முடியும்.

ஆதியில் ஒரு வெப்பத்தின் தன்மை அடைந்து கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகும் போது இது ஒன்பதாவது நிலைதான் வருகிறது.
1.இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் இயக்கலாம்
2.ஆனாலும் அது அழியக் கூடிய தன்மை பெற்றது.

ஆனால் இதிலே உருவான மனிதன் தான் இன்று மின்னலையும் அடக்குகின்றான்… மின்னலைக் காட்டிலும் மின்னணு தாக்கும் நிலைகளையும் விஞ்ஞான அறிவால் ஊடுருவுகின்றான்.

மண்ணிற்குள் படிந்துள்ள பொருளைக் கண்களால் காண முடியவில்லை என்றாலும்
1.இயந்திரத்தின் துணை கொண்டு உணர்வின் அதிர்வுகளைக் கூட்டி
2.இங்கே தங்கம் உள்ளது… இங்கே வெள்ளி உள்ளது… இங்கே நீர் உள்ளது… இங்கே எண்ணை உள்ளது… என்று
3.மேலே பறக்கும் நிலையிலிருந்தே பல ஆயிரம் அடிகளுக்கு அப்பால் ராக்கெட்டுகளைச் செலுத்தி
4.பூமியின் சுழற்சியில் பூமிக்குள் இருக்கும் நிலைகளை இங்கிருந்து காணுகின்றான் விஞ்ஞானி.

காந்தப் புலனறிவு கொண்ட (POWERFUL TELESCOPE) கண்ணாடிகளைக் கொண்டு… ஒவ்வொரு கோளும் எதை எதை உருவாக்குகின்றது…? அதனின் உணர்வுகள் எவ்வாறு வெளியில் பரவுகிறது…? என்றும் காணுகின்றனர்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மாற்றும் உணர்வின் அறிவு கொண்டு கண்ணாடிகளில் எடுத்த அந்தப் பதிவின் துணை கொண்டு இவன் ஏவும் இராக்கெட் அந்தக் கோளின் திசையை நோக்கிச் சரியான நிலையில் சென்றடைகிறது.

இராக்கெட் அங்கே செல்வதற்குண்டான அளவுகோலை அறிந்து கொள்ள தரையிலிருந்தே காந்தப் புலனறிவு கொண்ட கண்ணாடியை வைத்து வெகு தூரத்தில் இருப்பதையும் தனக்குள் இழுத்து உணர்த்தும் நிலைகளை உருவாக்குகின்றான் மனிதன்.

கம்ப்யூட்டர் மூலமாக அதைப் பதிவாக்கி அதிலிருந்து அழுத்தத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி நுண்ணிய நிலைகளில் ஒளியின் அதிர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் ஆற்றலை அதிகமாகச் சேர்த்து உந்து விசையாகச் செல்லும் இராக்கெட்டின் முகப்பில் அதை வைக்கின்றார்கள்.

பிரபஞ்சத்தில் கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றாலும்
1.அதில் வரும் நுண்ணிய அதிர்வின் வலு கொண்டு தன் இனத்துடன் அது மோதி
2.அந்தக் கோள் எங்கே இருக்கிறதோ அங்கே இந்த இராக்கெட்டை அழைத்துச் செல்கின்றது.

இதைப் போன்றுதான் இந்த மனிதனின் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் நாம் எண்ணி எடுக்கும் பொழுது அது நமக்குள் முதலிலே பதிவாகிறது.

பதிந்தது வளர்ச்சி அடைந்து அதை வலுவாக்கிக் கொண்ட பின் மனித உடலை விட்டுச் செல்லும் போது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் எண்ணி எடுத்தானோ
2.அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் நிலைகள் புவியின் ஈர்ப்பைக் கடந்து அங்கே அழைத்துச் செல்கிறது.
3.அங்கே உடல் பெரும் உணர்வினைக் கரைத்து விடுகின்றது.
4.உயிரான்மா ஒளியாக மாறுகிறது.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் குடும்பத் தியானங்கள் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை துருவ நட்சத்திரத்தின் சக்தி வெளிப்படும் காலங்களில் உந்திச் செலுத்தினால் (இராக்கெட் போன்று) அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்.

உடல் பெறும் உணர்வைக் கரைத்துப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும். இது மனிதன் செயல்படுத்த வேண்டிய நிலைகள்.

உத்தராயணம் என்பதன் முக்கியத்துவம்

உத்தராயணம் என்பதன் முக்கியத்துவம்

 

மகா சிவன் ராத்திரி என்ற நிலைகளில் விநாயகர் தத்துவத்தைப் பார்க்கப்படும் போது… விண்ணுலகில் விளைந்த அனைத்தும் மண்ணுலகில் விளைந்துள்ளது. அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு தாவர இனங்களில் மணமும் குணமும் அறிவும் ஞானமுமாக இணைந்துள்ளது.

அதிலிருந்து வந்த அந்த உணர்வுகளைத் தான்
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப உடல்களுக்குள் அதை வினையாகச் சேர்த்து
2.மகா என்ற நிலைகள் அடைந்து.. மகா சிவன்… மகா சிவமாக… இந்த மனித உடலை உருவாக்கியுள்ளது… மகா சிவன் இராத்திரி.

அன்றைய தினம் இதை எல்லாம் முழுமையாக அறிந்துணர்ந்த மகரிஷிகளின் உணர்வை உற்று நோக்கி… விண்ணை நோக்கி ஏக வேண்டும். காரணம்… “இருளான இந்தச் சரீரத்தைக் கடந்து… வெளியே சென்று…” உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள் அந்த மகரிஷிகள்.

“முருகு…” மாற்றியமைக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று விழித்திருக்க வேண்டும்…!

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.உணர்வுக்குள் இருக்கும் உயிரை உடல் மறைத்தது…
2.அதே சமயத்தில் உணர்வின் நல்ல எண்ணங்களை வேதனை என்ற நஞ்சின் தன்மை மறைக்கின்றது.
3.கோபம் என்ற கார உணர்ச்சிகள் நல்ல உணர்வுகளை அது மறைக்கின்றது

இதைப் போன்று
1.இருளுக்குள் இருளாக மறையச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை
2.இருளுக்குள் ஒளியாக மாற்றிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் இணைத்து
3.நல்ல உணர்வின் ஞானத்தை மறைத்திடும் அந்த இருளைப் போக்கி அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி
4.வாழ்க்கையில் தெளிந்திடும் நிலைகள் கொண்டு அந்த ஞானியின் உணர்வுகளை நமக்குள் பொங்கச் செய்து
5.நம்மையும் மகிழச் செய்து.. நம்மைப் பார்ப்போர் நிலைகளையும் மகிழச் செய்ய வேண்டும்… மகிழ்வாகனா…!

ஆகவே வாழ்க்கையில் இது வரையிலும் வந்த தீமைகளை நீக்கிவிட்டு மெய் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து
1.ஆறாவது அறிவால் “உத்தராயணம்” என்று ஞானிகள் பால் திசை மாற்றி
2.மெய் ஞானியுடன் நம் வாழ்க்கையை இணைத்து
3.எத்தகைய இருள் ஆனாலும் அதைப் பிளந்திடும் நிலை பெற வேண்டும் கார்த்திகேயா…!
4.ஒளி பட்டபின் அங்கிருக்கும் பொருள்களை எல்லாம் காணுவது போல நாம் ஒளியாக மாற வேண்டும்.

வாழ்க்கையில் கண்டுணர்ந்த தீமைகள் உங்களை இயக்கினாலும் அந்தத் தீமையை இயக்கும் தன்மையைப் பிளந்து… மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து… மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து… ஒளியின் சரீரமாக ஆன அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியாக நீங்கள் மலர வேண்டும் என்பதற்குத் தான் மகா சிவன் இராத்திரி என்று இதை உபதேசிப்பது (ஞானகுரு).

காரணம் நாம் பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் நமக்குள் மகா சிவனாக நம் உடலின் தன்மை அமைந்துள்ளது.

அந்த இருளுக்குள்… (நம் உடலுக்குள்)
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் செயலாக நமக்குள் உணர்த்திக் கொண்டு
2.உணர்வின் இயக்கமாக அறிந்து கொண்டு அதனின் அறிவாக நமக்குள் தெளிந்திடும் நிலையாக
3.புற நிலையைக் கண்டுணரச் செய்யும் ஆறாவது அறிவாக நமக்கு முன் இருப்பதை
4.தீமைகளை விலக்கி மெய்ப்பொருளைக் காணும் உணர்வின் ஆற்றலாகப் பெற்றால் “அது தான் கார்த்திகேயா…!”

ஆறாவது அறிவால் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது போல மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து நமக்குள் இருள் சூழ்ந்திருக்கும் உணர்வின் குணங்களைப் பிளந்து மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து மெய்ப்பொருள் கண்டுணர்ந்த உயிருடன் ஒன்றுவோம்.
1.மெய்ப்பொருள் என்பது உயிரே மெய்ப்பொருள்
2.உயிரின் இயக்கமாக உணர்வின் தன்மைதான் அதனுடன் இணைந்த பொருள். (உயிர் என்பது மெய்… நுகரும் போது உணர்வு… பொருள்)

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் உணர்ந்திடும் உணர்வை ஒளியின் சரீரமாக மெய்ப்பொருளாக… மெய்யுடன் மெய்யாக… என்றும் ஒளியின் சிகரமாக அடைந்திட முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் இதை உபதேசிக்கின்றேன்.

உத்தராயணம்…! நாம் திசை மாற்றி மெய் ஞானியின் உணர்வை நாம் பெற்றிடுவோம்.
1.உடல் பெறும் உணர்வை மாற்றிவிட்டு
2.மீண்டும் மீண்டும் உடல் பெறும் அந்தத் திசையை மாற்றிவிட்டு
3.உயிருடன் ஒன்றிய அழியா ஒளியின் சரீரமாக மாற்றுவோம்.

விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்

விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்

 

உயிரின் (கதிரியக்கம்) துடிப்பு ஒலிகள் விண்ணிலே தோன்றியது தான். இதை முதலில் உணர்தல் வேண்டும்.

அதே சமயத்தில் மற்ற அணுக்களும் விண்ணிலே தோன்றியதுதான். ஆனாலும் பூமிக்குள் வந்தபின் பூமிக்குள் மண்ணாக மறைந்து மற்றதுடன் கலந்து விடுகிறது.

இதிலே உருவாகும் உணர்வின் ஆவியின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் நிலைகளுக்கொப்ப அணுக்களாக மாறுகிறது.

அத்தகைய அணுக்களின் துணை கொண்டு தாவர இனங்களாக உருவாக்கினாலும்
1.அதிலே தோன்றிய உயிரினமும் அதை உணவாக உட்கொண்டால் இந்த புவியின் ஈர்ப்பிலேயே நிலைத்திருக்கும்.
2.இதனின்று கடந்து செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆதியிலே
1.பேராற்றல் மிக்க பேரண்டங்களிலிருந்து அவை உமிழ்த்தும் துகள்களை
2.பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் வீழ்த்தி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றவாறு சக்திகளாக மாற்றி.. கோள்களாக உருவாக்கி
3.கோள்களில் இருந்து வருவதை வடித்து அந்த நஞ்சினைப் பிரித்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சிகரமாகத் திகழ்ந்ததோ
4.அதைப் போன்று விண்ணின் நிலைகளைக் கொண்டு
5.ஒரு நட்சத்திரத்தின் மின் கதிரியக்கப் பொறி மற்றொரு கதிரியக்கப் பொறியுடன் மோதும் பொழுது
6.அதனால் துடிப்பின் நிலைகள் ஏற்பட்டு தன் அருகில் இருக்கக்கூடிய கோளின் சக்தியைக் கவர்ந்து
7.அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் ஒரு உயிரணுவின் தோற்றம் (மின்னிக் கொண்டிருக்கும் நிலை) உருவாகிறது.

உயிரின் முன்னணி எதுவோ அதனின் நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களின் பொறிகளால் உருவாக்கப்பட்ட அணுவின் தன்மை எதிர் நிலையாகும் போதுதான் ஒரு இயக்கச் சக்தியாக மாறுகிறது.

அதன் வழியில் உடலின் உறுப்புகள் உருமாறி… உணர்வின் சத்து தசைகளாக மாறி… உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மாறி வந்தது தான் இயக்கச் சக்தி. பல சரீரங்களைக் கடந்து இதன் வழியில் தான் மனிதனாக இன்று நாம் வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் தெளிந்து தெரிந்து முழுமையாக உணர்ந்தவர்கள் மாமகரிஷிகள்.
1.தனது உயிரணு எந்த நட்சத்திரத்தின நிலைகள் கொண்டதோ
2.அந்த நட்சத்திரத்தின் உணர்வின் மின் அணுவின் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்துப் பேரொளியாக மாற்றிக் கொண்டார்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் இத்தனையும் பேசுகின்றேன். காரணம்… குருநாதர் இதையெல்லாம் எனக்குள் பதிவு செய்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கின்றார்.

சாமி சொல்வது அர்த்தம் புரியவில்லையே… ஏதோ ஒரு உலகத்தில் பெரிதாகச் சொல்கிறார்…! என்று விட்டுவிட்டால் அதைத் தள்ளி விட்டுவிடும்.

உதாரணமாக… திட்டுபவர்களையோ கேலி செய்பவர்களையோ உற்றுப் பார்த்து என்னை மோசம் பண்ணினார்… கேவலமாகப் பேசினார்…! என்று பதிவு செய்தால் அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாக விளையத் தொடங்குகிறது அல்லவா…! அதைப் போல்
1.சாமி சொல்லும் சக்தியை நான் பெற வேண்டும் என்று
2.இறுக்கிப் பிடித்துக் கொண்டால் இதை வளர்க்க முடியும்.

ஆதியிலே உருவான அகஸ்தியனுக்கு அவன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற விண்ணின் ஆற்றல் கொண்ட நஞ்சின் இயக்கமான உணர்வுகள் “பூர்வ புண்ணியமாக” அமைந்தது.

இந்த உணர்வின் சத்து கொண்டு அவன் விண்ணை நோக்கி ஏகும் போது…
1.அவனின் உயிரின் ஆற்றல் எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அதனின் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் ஆற்றலை ஒளியாக மாற்றி
3.தன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகளைப் பிரித்துப் பிரித்து
4.உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.

துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தை…
1.அங்கே துருவத்திலே நிலைகொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து
2.நஞ்சினைப் பிரித்து விட்டு தன் உயிரான ஒளியின் சிகரத்தை அடைந்து
3.எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு
4.இன்றும் மின்னிக் கொண்டு உள்ளான்… துருவ நட்சத்திரமாக…!

அதைப் போன்றே நம் உயிரணுவின் தோற்றம் அது எந்த நட்சத்திரத்தின் கதிரியக்கத்தால் உருவானதோ அந்த உணர்வின் சத்து கொண்டு
1.சிவன் இராத்திரி… உடலான இருளுக்குள் இருப்பதை அந்த மறைந்த நிலையை
2.தன் உணர்வின் நிலையால் (உயிரின் நட்சத்திர ஆற்றல்)… ஒலி அலைகளாக எண்ணங்களாக எப்படி மாற்றியதோ
3.அகஸ்தியனின் உணர்வினை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இணைத்து
4.இந்த வாழ்க்கையில் வரும் எத்தனையோ எதிர் நிலையான இயக்கங்கள் இருப்பினும்
5. ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் அகஸ்தியனைப் போன்று ஒளியாக மாற்ற முடியும்.

ஆக… உடலான இருளுக்குள் இருந்து தான் அந்த இருளைப் பிளந்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற வேண்டும்.

ஒளியைத் தான் நாம் உருவாக்க வேண்டுமே தவிர இருளை அல்ல…!

ஒளியைத் தான் நாம் உருவாக்க வேண்டுமே தவிர இருளை அல்ல…!

 

விஷம் எதிலுமே ஊடுருவி இயக்கும் சக்தி பெற்றது. எதனையுமே இயக்கக் கூடியது. விஷத்திற்குள் அடங்கி விட்டால் இருள் சூழ்ந்த நிலையே கடைசியில் வருகின்றது.

விஷத்தை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்த்தால் ஒளியின் தன்மை அடைகின்றோம்.

ஆனால் மனித உடலில் விஷம் அதிகரித்தால் கலி… மீண்டும் பாம்பினங்களுக்குச் செல்லும் நிலையாகின்றது.

சூரியன் பாதரசத்தால் இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை எப்படிப் பெற்றதோ அது போல் ஆறாவது அறிவின் தன்மை கொண்ட மனிதன் ஏழாவது நிலையாக உருவாக்கப்படும் போது
1.உயிருடன் ஒன்றி உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
2.அதன் வழி நாம் கல்கி ஆகின்றோம்… பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

சூரியன் ஒரு காலம் மடியலாம். ஆனால் அதே சமயத்தில் உயிரணுவாகத் தோன்றி மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் என்றும் ஒளியின் சுடராகப் பொங்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
1.எல்லோரையும் மகிழச் செய்யும் அந்த உயர்ந்த நிலையை மனித உடலில் இருந்து தான் பெற முடியும்
2.ஆறாவது அறிவால் தான் அதை உருவாக்க முடியும்.
3.அதைச் சீராகப் பயன்படுத்தினால் நாம் இந்த உடலுக்குப்பின் ஏகாதசி…!
4.எதிர்ப்பே இல்லாத நிலையாக பத்தாவது நிலையான ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

அதை அடையத் தான் ஒவ்வொரு ஞானிகளும் முயற்சித்தனர்.

இப்பொழுது இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் இந்த உணர்வினை நீங்கள் நுகரும்போது
1.ஞானத்தை உங்களுக்குள் உருவாக்கி… அருள் உணர்வைக் கருவாக்கி
2.கலி என்ற நிலையை மாற்றி… கல்கியைப் பொங்கச் செய்ய வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில் உங்கள் வாழ்க்கையை அமைத்து இருளை மாற்றி இந்த உடலுக்குப்பின் கல்கி என்ற நிலைக்கு வர வேண்டும். ஒளி உடலாக உருவாக்க வேண்டும் ஒளி உடலாக மாற்ற வேண்டும்.

இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை என்ற உணர்வானால் மனிதனல்லாத உருவாகின்றது… கலி. கலியுகத்தில் தான் வாழ்கின்றோம். நாம் கல்கியுகத்திற்குச் செல்ல வேண்டும்.

கலியில் தான்…
1.ஒன்றை நல்லதாகவும் உருவாக்க முடியும்
2.தீமையையும் உருவாக்க முடிகின்றது.
3.கலி கெட்டதும் அல்ல…!

நாம் பல வகைகளில் உருவாக்கினாலும் இந்தக் கலியில் நல்லதை உருவாக்கப்படும் போது கல்கி ஆகின்றோம். ஆகவே உருவாக்குவது என்ற நிலையானால் கல்கியைத் தான் உருவாக்க வேண்டுமே தவிர கலியை அல்ல…!

ஒன்பதாவது நிலையில் இருக்கும் நாம் தீமை புக விடாது தடுப்பது தான் கடவுளின் அவதாரம் “நரசிம்ம அவதாரம்…” அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம்.