நான்…! என்று இல்லாது “நாம்…” என்ற கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று குருநாதர் எச்சரிக்கை செய்தார்

நான்…! என்று இல்லாது “நாம்…” என்ற கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று குருநாதர் எச்சரிக்கை செய்தார்

 

மெய் ஞானிகள் அனைவரும் இயற்கையின் பேருண்மைகளைக் கண்டுணர்ந்தவர்கள். தங்கள் உடலில் வந்த தீமைகளை அகற்றி மெய் உணர்வுகளை அவர்களுக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள்.

அவர்களின் நினைவுகளைத் தான் எனக்குள் (ஞானகுரு) பதியச் செய்து எமக்கு உபதேசித்து அருளினார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

1.மனித வாழ்க்கையில் தன்னை அறியாது வந்த சோர்வடைந்த உணர்வுக்குள்
2.அந்த மெய்ஞானிகளின் உணர்வை இணைத்து அவர்களின் நினைவு கொண்டு நீ கவர்ந்தாயானால்
3.அந்த மெய் உணர்வைப் பெறும் தகுதியை நீ பெறுகிறாய்.

அதனின் உணர்வு உனக்குள் விளைய… விளைய… உன்னிடமிருந்து வெளிப்படும் எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் உணர்வுகளில் ஓ… என்று ஜீவன் பெற்று ம்… இன்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.

இவ்வாறு நீ எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை… நீ பிறர் நலமாக இருக்க வேண்டும் என்றும்… அவர்கள் மெய் ஞானிகளின் அருள் ஆற்றல் பெற வேண்டும் என்றும்… ஏக்க உணர்வுடன் வரும் பொழுது அனைத்து உணர்வின் சத்தைப் பெற்று நீ வலுப்பெற்றவன் ஆகிறாய்.
1.அந்த உயர்ந்த சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ
2.அத்தனை பேருடைய எண்ணம் உனக்குள் வலுவாகக் கிடைக்கின்றது.

மெய் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது… இந்த உணர்வுகள் அவர்கள் உடலுடன் இரண்டறக் கலந்து… சக்தி வாய்ந்த நிலைகளாக அங்கேயும் விளைகின்றது.

விளைந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது “அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சி பெறுகின்றார்கள்…?” என்று நீ எண்ணிப் பார்க்கும் பொழுது இந்த உணர்வின் சக்தியை உனக்குள் ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றாய் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

“நாம்…” என்ற நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலு கொண்ட நிலையாக அடைகின்றோம்.

1.நான்…! என்ற நிலையில் சென்றோம் என்றால்
2.அது தனித்து நின்று மற்றவரின் உணர்வின் வலு இழக்கப்படுகின்றது… வலு கிடைக்காது.
3.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது.

குரு என்னிடம் இதை எச்சரித்தார்.

மகரிஷிகளும் ஞானிகளும் உயர்ந்த ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டார்களோ… எப்படிக் கலந்து உறவாடினார்களோ அந்த உணர்வின் சக்தியை நீ பெற வேண்டும் என்று தான் உனக்குள் அதை இணைக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகின்றேன்… ஆக “நாம்… ஆகின்றேன்…”

இதைப்போல அனைவருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அவர்களுடன் இணைந்த நீயும்… அவர்கள் ஆகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்து… அவர்கள் ஆகின்றார்கள்

இதைப் போன்றுதான் “நாம்…” என்ற நிலைகளில் அந்த அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலிருந்து பல பல தீமைகள் (நஞ்சுகள்) வந்தாலும் அந்தப் பலவும் ஒன்றாக இணைந்து சூரியன் ஒளியின் சுடராக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக இயக்குகிறது.

அதைப் போல நீயும் மெய் ஞானிகளின் உணர்வைப் பருக வேண்டும். அதைப் பருகிடும் சக்தியைப் பெற வேண்டும் என்றால் அனைவருக்கும் நீ அதைப் பெறச் செய்ய வேண்டும்.

அதனின்றுதான் நீ அதைப் பெறுகின்றாய்…! என்ற நிலையைக் குரு தெளிவாக எனக்கு வழிகாட்டினார். அவர் எனக்குக் காட்டிய அதே அருள் வழியைத் தான் உங்களுக்கும் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.குருநாதர் காட்டிய வழியில் நாம் சென்று
2.ஒளியின் சரீரமாக அனைவரும் ஆக முடியும்…! என்ற நிலைக்குத் தான் இந்த உபதேசம்…!

மனிதன் இன்பமாக இருக்க…வேண்டும் என்றால்… அதை மெய் ஞானத்தால் தான் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்

மனிதன் இன்பமாக இருக்க…வேண்டும் என்றால்… அதை மெய் ஞானத்தால் தான் பெற முடியும் – ஈஸ்வரபட்டர்

 

இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை… மனிதன் பெற வேண்டிய உண்மைச் சக்தியின் வளர்ச்சி நிலையை… ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்…!

இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய… சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.

1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி ஒளி நீரைக் கொண்டு
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி… உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி… தாழ்த்தி… வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது…? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.

அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்… மருத்துவம்… யாவையுமே உண்ண… உடுக்க… இருக்க… உடலின் தேவைக்கு சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.

1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய…
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா…?

இந்த உடலுக்கு என்று சுகம் காண… மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு… அதனால் விபரீத சுகமாக அல்லவா… இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை…!

உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்… இன்ப வாழ்க்கை இனிது நடக்க… மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது…” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.

எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ… அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.

உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை… மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்… தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான… “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!

மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க… இன்பமாய் இருக்க…வேண்டும் என்றால் அது… மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.

1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்…!

நோய் உருவாகாதபடி நாம் விழித்திருக்க வேண்டியதன் அவசியம்

நோய் உருவாகாதபடி நாம் விழித்திருக்க வேண்டியதன் அவசியம்

 

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி நாம் வேதனைப்படும் உணர்வுகளை எடுப்போம் என்றால்
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகளில் அது சுரக்கும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
2.வேதனை உணர்வுகள் உறையப்பட்டு அது மோதப்பட்டு அதனின் உணர்வுகள் கற்களாக உருபெறுகிறது.

அவ்வாறு உருப்பெற்று விட்டால் இந்தப் பித்தத்தையே விஷம் கொண்ட கற்களாக அது மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்று சிறுநீர்ப் பைகளிலும்… இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னியில் மணலைப் போன்று அது தேங்கி விட்டால் அந்த விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து விஷத்தையே தனக்குள் எடுத்து இரத்தத்தில் வரும் மாசுகளைச் சுத்திகரிக்கும் தன்மை இழந்துவிடுகிறது

கிட்னி பழுதடைந்து விடுகின்றது. அதனின் உணர்வின் தன்மை உடல் முழுவதும் தீமையை உருவாக்கும் நிலையாக உருவாகி விடுகின்றது.

பின் உடல் முழுவதும் விஷத் தன்மைகள் பரவி அடுத்து மாற்று உறுப்புகளை மாற்றித்தான் விஞ்ஞான அறிவு கொண்டு வாழ வேண்டி உள்ளது. அப்படிச் செயல்பட்டாலும் அதிலிருந்து முழுமையாக மீள்வது என்பது மிகவும் கடினமாகி விடுகிறது.

இதைப் போன்றுதான் நாம் சுத்திகரிக்கும் உறுப்பான கல்லீரல் போன்ற உறுப்புகளில் விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகரித்து விட்டால் அங்கே உணர்வின் தன்மை வளர்ச்சி பெறப்படும் போது அதுவும் பாழடைகிறது.

ஏனென்றால்…
1.சில கடுமையான நிலைகளை உருமாற்றும் அல்லது கரைத்திடும் திறன் கொண்ட
2.அமிலத்தை உருவாக்கும் திறனை நம் கல்லீரல் இழந்து விட்டால்
3.மற்ற கடின பொருள்களைக் கரைக்கச் செய்யும் தன்மையும் அது செயல் இழந்துவிடுகிறது.

இதைப் போன்று வாழ்க்கையில் நாம் எடுக்கும் விஷத் தன்மையான உணர்வுகளால் நஞ்சான அணுக்கள் விளையத் தொடங்கி விட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாழடையும் தன்மையே அடைகிறது.

இயற்கையிலே ஒவ்வொரு இனப் பறவைகளும் தன் தன் குஞ்சுகளுக்கு என்று அது உணவைத் தேடிச் சென்று அதை வாயிலே ஊட்டுகின்றது.

எப்போது…?

அந்தக் குஞ்சுகள் இரைக்காக ஏங்கி இருக்கும் பொழுது அதனதன் இனம் அதனதன் வழியில் உணவாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது. இதைப் போன்றுதான்
1.நம் உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் நம் உயிரே தாயாகின்றது.
2.அதனால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு அது எதனின் வழியில் வேதனையின் நிலைகள் உருவானதோ
3.அந்த வேதனையான உணர்வு தான் அதற்கு உணவாகத் தேவை.
4.அதே வேதனை உணர்வைத்தான் உயிர் உணவாகக் கொடுக்கும்.
5.வேதனையால் உருவான அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டி ஏங்கப்படும் போது
6.உயிர் (தாய்) காற்றிலிருந்து கவர்ந்து அந்த வேதனையான அணுக்களுக்கு உணவைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றது.

நல்ல குணங்கள் கொண்டும் நாம் வாழ்ந்திருப்பினும் வேதனை என்ற குணங்கள் வரும் பொழுது அதனின் ஆற்றல் பெருகி விடுகின்றது. அதனின் மலங்கள் உடலில் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல குணங்களுக்குக் கிடைக்கும் உணவு தடையாகி… அதனின் வலு இழக்கப்படுகின்றது.
1.சரியான வளர்ச்சி பெறுவதில்லை
2.நாம் நல்லதை எண்ணினாலும் நம்மால் முடியாது போகிறது.

அது காலத்தால் தடைப்படும் போது அந்த விஷத்தை உருவாக்கும் விஷ அணுக்களின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகப் பெருகி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.ஒரு புளியங்கொட்டை அது மண்ணில் செடியாக முளைக்கும் போதே
2.அதைக் கிள்ளி எறிந்து விட்டால் ஒன்றும் சிரமமில்லை
3.அதைப் பிடுங்க கோடாரியோ மற்ற ஆயுதமோ தேவையில்லை.

ஆனால் பெரிய மரமாக வளர்ந்த பின் அதை வெட்டக் கோடாரி அவசியம் தேவை. ஏனென்றால் மரங்களைக் கோடாரி போன்ற போன்ற ஆயுதத்தை வைத்துத் தான் வெட்ட முடியும்.

ஆனால் செடி சிறியதாக இருக்கும் பொழுது தெரிந்து கொண்டால் எளிதாக நீக்க முடியும். அதனால் தான் விழித்திரு…! என்று சொல்வது

மரம் பெரிதாக வளர்ந்த பின் அதனுடைய விழுதுகளைப் பாய்ச்சி விட்டால் கட்டிடத்தையே பலவீனமாக்கிவிடும்… நடந்து போகும் பாதையும் தடுத்துவிடும்.

ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டால் பாதையும் மறைக்காது… கட்டிடத்தையும் இடிக்காது. ஆகவேதான் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.நமது வாழ்க்கையில் எந்த வழியில் தீமை என்ற உணர்வை நாம் நுகர்ந்தாலும்
2.அடுத்த கணம் அது நம் உடலுக்குள் வளராது விழித்திருத்தல் வேண்டும்.

தீமைகளைக் கேட்டுணர்ந்த பின்… அல்லது பார்த்துணர்ந்த பின்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தச் சக்திகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த வேதனையை உருவாக்கிய உணர்வுக்குள் மகரிஷிகளின் உணர்வை இவ்வாறு பாய்ச்சப்படும் போது அதை அடக்கி அதன் தன்மையை மாற்றிவிடும்.

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…” ஈஸ்வரபட்டர்

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…” ஈஸ்வரபட்டர்

 

ஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.

1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்
2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.

உணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல…” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.

ஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.
1.அதனையே சமைக்கும் பொழுது
2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.

சமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.

செயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை…” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது…?

இக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிச் செயலாகின்றது. அதைப் போன்று…
1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி
2.அதைத்தான் உண்மை…! என்று நாம் உணர்ந்து
3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.

உணர்வலையாக எண்ணுவதை… காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை… தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்…”

திடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.

சித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி… தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக… என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.

1.ஏகாந்த நிலைக்கும்…
2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்… தொடர்புண்டு.

ஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்… சலிப்புடன்… மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.

தெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து… மெய் உணரும் வழியை அறிய… தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.

சித்து நிலையின் அஷ்டமாசித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.

இரு மனத்தின் திருமணமே
இல்லறத்தின் நறு மணமே
இறையுணர்வின் வழியறிந்தே
இவ்வுலகின் காவியத்தில்
இருளகற்றும் ஒளிச்சுடராய்
இனியதொரு வாழ்வமைப்போம்

இடும்பனான குணமகற்றி
இறையருளின் நற்குணத்தில்
ஈன்றெடுக்கும் கனியமுதே
ஈசனருள் பொக்கிஷமே…!

இல்லத்தில் இனிய வித்திட்டு
இனிய குண வளர்ப்பாக
இல்லறத்தில் நீர் ஊற்றி
இன்பத்தின் இனிமை பெற்றிடவே

ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாய்
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்.

மற்றவருடன் பேச்சுத் தொடரானாலும்… நம் நினைவுகள் உயிருடன் ஒன்றும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

மற்றவருடன் பேச்சுத் தொடரானாலும்… நம் நினைவுகள் உயிருடன் ஒன்றும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

 

இராமன் எப்பொழுது கல்யாணராமன் ஆகின்றான்…?

தீமைகளை விளைவிக்கும் வில்லை… அந்த அம்பினை ஒடித்து விடுகின்றான். தீமைகள் செய்யாத உணர்வினை எப்பொழுது தனக்குள் விளைவிக்கின்றானோ அப்போதுதான் மற்றவரை அரவணைக்கும் தன்மை வருகிறது… சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்… கல்யாணராமா.

அரவணைக்கும் உணர்வைத் தனக்குள் சேர்த்து… பேரன்பு கொண்ட உணர்வினை வளர்த்து ஒன்றிய நிலைகள் கொண்டு இயக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் “கல்யாணராமா…!” என்று காவிய காப்பியங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

எத்தகைய தீமையின் உணர்வுகள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அதை எண்ணி தீமை நமக்குள் விளைந்து விடாது அதை ஒழித்தல் வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தீமை செய்யும் உணர்வே நமக்குள்ளும் வரும். நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்திடும் எண்ணங்களையே அது உருவாக்கும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று என்ற உணர்வினை நமக்குள் இணைத்தால்
1.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாதபடி
2.அருள் உணர்வின் தன்மையை அரவணைப்பதாகக் கல்யாணராமனாக மாற முடியும்.

நம் உடலில் இதனின் வலிமை ஆகிவிட்டால்
1.யார் நமக்குத் தீமை செய்தனரோ அதை அடக்கும் நிலைகள் வரப்படும் பொழுது
2.இதே உணர்வின் எண்ணங்கள் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்கள் உணர்வுகளை அடக்கும் தன்மை வருகின்றது.
3.அவருடைய செயலாக்கங்கள் அவர்களையே ஒடுக்கிவிடும்
4.யார் ஒருவர் தீமை எண்ணுகின்றனரோ அவருள்ளே நின்று அவர் அதற்குள்ளேயே மடிவர்.

ஆகவே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் விளையும் தீமையை அடக்கி வலிமை மிக்கதாக மாற்றிக் கொள்ளலாம்.

இதைத்தான் விழித்திரு…! என்ற நிலைகளில் மகா சிவன்ராத்திரி என்று காட்டுகின்றார்கள்.

இந்த உலகில் ஒவ்வொரு நாளும் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் பார்த்தாலும் அந்தத் தீமை நமக்குள் விளையாதபடி ஒவ்வொரு நொடியிலும் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

பத்திரிகையைப் பார்த்துப் படித்தபின் அல்லது டி.வியைப் பார்த்தபின் அவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் இதைச் செய்தார்கள்… கெடுதல் செய்தார்கள்…! என்று
1.மற்றவர்கள் பார்த்தவர்கள் பதிவு செய்ததை எண்ணத்தால் எண்ணி நாம் பேசும் பொழுது
2.அதே உணர்வு நமக்குள் பதிவாகி எந்த நிலையை அவர்கள் செய்தார்களோ அதையே நுகர்ந்து
3.மோசமான ஆள்…! என்று நாமும் அந்தக் கெடுதலையே பேசத் தொடங்குவோம்.

அப்போது அவர்கள் எத்தகைய மோசம் செய்தார்களோ அதே மோசத்தின் தன்மை நமக்குள்ளும் விளைகின்றது இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் உடனடியாக மாற்றுதல் வேண்டும்.

இதற்குத் தான் நீ விழித்திரு என்று சொல்வது…! ஏனென்றால் இதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

நாம் மறந்து இருந்தாலும்… அடுத்த கணமே…
1.மற்றவருடன் பேச்சுத் தொடரான பின் நம் நினைவின் ஆற்றலை உயிருடன் புருவ மத்தியில் ஒன்ற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
4.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்
5.எங்களைப் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும்
6.நாங்கள் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று இந்த உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

பகைமையான உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் அதே உணர்வுக்கு அது இரை தேடும்… அதற்கு உணவு கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் இணைத்து
2.அந்தத் தீமைகளை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

சிந்தனைச் சிலையைச் சீர்படுத்தத் தான் தெய்வச்சிலையை வைத்தார்கள் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்

சிந்தனைச் சிலையைச் சீர்படுத்தத் தான் தெய்வச்சிலையை வைத்தார்கள் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்

 

நம் முன்னோர்கள் ஒலியின் நாதம் கொண்டு ஒளித் தன்மை வளரும் உண்மையைத் தன் சித்தத்தில் அறிந்து கொண்டனர்.

சூரியனும் சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கும்… பூமியின் தொடர்பு பெற்ற இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும்… சனிக் கோளில் உருவாகிக் கரையும் பன்னிரண்டு கோள்களுக்கும் தொடர்பு கொண்டு… பன்னிரண்டு மாதங்களின் நாமகரணத்தை ஒலியின் ஒளியால் சூட்டினார்கள்.

இயற்கையின் தொடர்களை…
1.கோள்களின் ஈர்ப்பில் விகித கணிதத்தை வான சாஸ்திரத்தில் அறிந்த தொடரில்
2.ஒவ்வொரு ஜீவ உயிரின் வீரியமுமே… மூன்று நட்சத்திர ஒலி ஒளி பெற்ற பின் தான்
3.ஜீவ உயிரணு உயிர் பெறுகின்றது.

மனித நிலை பெற்ற பின் அடுத்த நிலை பெற மனித உணர்வின் எண்ண அலையின் ஜீவகாந்த ஈர்ப்பு வலுப் பெறுவதினால்… வலுவின் தொடர் இப்பூமி இழுக்கும் ஒலி அலைகளைக் காட்டிலும் மனித ஜீவ உணர்வின் வீரியம் பெற்று விடுகின்றது.

பூமியின் தொடரிலேயே… நடைமுறை வழக்கத்திற்கொப்ப மனிதன் வாழ்ந்தான் என்றால்
1.இப்பூமி எதன் தொடரில் சக்தி பெற்று… சமைத்து பூமியின் வளர்ப்பின் வளர்ச்சி சுழற்சி வளர்கின்றதோ
2.அதன் அதன் ஈர்ப்புப் பிடிப்பில் தான் இப்பூமியில் பிறந்த நாம்
3.இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சியுடன் சுழன்று கொண்டிருக்க முடியும்.

ஜீவகாந்த பகுத்தறியும் எண்ண உணர்வைக் கோள்களின் தொடர்புடன் மனிதன் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மனிதனின் உண்மை நிலையை சிவரூபத்தில் உணர்த்தினார்கள் நம் முன்னோர்களாகிய அன்றைய ரிஷிகள்.

சிக்கலைத் தீர்க்க சிலை வைத்தான்
சிந்தனைச் சிலையை (மனித உடல்) உணர்ந்தானா…?

சிறுமையின் உருவாய் சிலையென்று
சந்தியில் நிற்கும் நிலையென்ன…?

சஞ்சலத்தில் சச்சரவை
சங்கடத்தில் சிக்கலின்றி
சிந்தனையில் சீர்தூக்கி
சிந்தைதனில் சீர்படுத்து…!
(சிவன் படமும் விளக்கமும்)

இதன் தொடரை மனிதன் பெற்றால் மனித நிலை தெய்வ நிலை பெறக்கூடிய தொடர்பிற்கு வளர முடியும். ஒளி கொண்டு ஒளி பெறும் ஆத்ம பலத்தின் தொடர்பைப் பெறலாம். ஆகவே இயற்கையின் தொடர்புடன் உயரும் நிலை தான் தெய்வ நிலை.

இப்புவியின் ஈர்ப்பில் வளரும் கனிவளங்களும் மற்றத் தாவரங்களும் சத்தெடுத்து அதனதன் மாற்றுத் தன்மை சிலவற்றில் வீரியமாக இருப்பது போன்று
1.இயற்கையின் ஒலித்தன்மையில் மனித ஜீவாத்மாவில் சிலருக்கு
2.சரீர உணர்வின் ஜீவ நிலையே ஒளித் தன்மை கூடியிருக்கும்.

அத்தொடரில் இயற்கையை ஒன்றி… கோள்களின் தொடர்புடன் எண்ணத்தில் ஒளிரும் ஆத்மா… நட்சத்திர நிலை போன்று என்றுமே மாறாத நிலையில்… இப்பால்வெளி மண்டலத்திலுள்ள எண்ணிலடங்கா அமிலத்தின் சமைப்பை எடுக்கவல்ல “ஜோதி நிலை பெற்று… வளர்ச்சியின் வளரும் நிலை பெறலாம்…”

ஆனால்… மனித நிலையிலேயே பிற ஆத்மாவின் ஈர்ப்பின் ஒலி அலைகள் சாடும் நிலைக்குத் தன் ஆத்மாவை அடகு வைக்கும் நிலை தான் “மந்திர தந்திர மாய நிலை…!”

எந்த மகரிஷியின் உணர்வை வலுப்படுத்துகிறோமோ அவருடன் நாம் இணைய முடியும்

எந்த மகரிஷியின் உணர்வை வலுப்படுத்துகிறோமோ அவருடன் நாம் இணைய முடியும்

 

ஒரு வேதனைப்படுவர் உணர்வை நாம் நுகரப்படும் பொழுது அது வாலி ஆகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. நம் வலிமை இழககப்படுகின்றது

இதனை மாற்றுவதற்குத் தான் வாலியை இராமன் “மறைந்திருந்து தாக்கினான்..” இந்த நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

மறைந்திருந்து என்றால் இத்தகைய தீமைகளை வென்றவன் மகரிஷி. அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் வலிமை நமக்குள் கவரப்படும் பொழுது வாலி என்ற அந்த நஞ்சினை ஒடுக்க முடியும்…!

அதுதான் பரசுராம். அதனுடைய வலிமை எதுவாக இருப்பினும் தனக்குள் அடக்கித் தன் செயலாக மாற்றிக் கொள்ளும். அந்த நஞ்சினை இயக்குவதற்குப் பதில் தனக்குள் வலிமை கொண்டதாக மாற்றிவிடும்.

உதாரணமாக… விஞ்ஞான அறிவுப்படி செய்தாலும் சரி மெய்ஞான அறிவுப்படி செய்தாலும்
1.ஒரு நல்ல மருந்திற்குள் விஷத்தைச் சிறிதளவு கலந்து விட்டால்
2.அந்த மருந்திற்கு வீரிய சக்தி உண்டாகின்றது.

இந்த விஷத்தின் துடிப்பின் வேகத்தால் நல்ல மருந்து உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது. நல்ல மருந்திற்குள் இந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் உடலுக்குள் ஊடுருவி
1.வேதனைப்படும் இடங்களில் நல்லவைகளைக் கொண்டு குவிக்கின்றது.
2.நல்லவைகளை அங்கு அதிகமாக குவிக்கப்படும் போது
3.வேதனையை (நோய்) உருவாக்கும் அணுக்களுக்கு இரை இல்லாது தடைப்படுத்தி அந்த அணுக்களை மடியச் செய்கின்றது.
4.பின் அந்த நல்ல உணர்வின் சத்தை நல்லவைகளாக மாற்றி நோய்களை அகற்றுகின்றது.

வேதனையான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது வேதனையின் அணுக்கள் உருவாகி நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களால் உருவான உடலின் தன்மை நலியத் தொடங்கிவிடுகிறது.

ஆகவே… நாம் எப்போதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம்
1.இந்தத் தீமைகளை வென்றிடும்… வென்றிட்ட… அருள் ஞானிகளின் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை
3.அதனுடன் இணைத்துப் பழகினால்… தீமை நமக்குள் வளராது அதை அடக்கித் தனக்குச் சாதகமாக்கிவிடும்.

ஒரு விஷத்தின் தன்மை… தீமை என்று இருப்பினும் நல்ல மருந்துடன் அது இணைக்கப்படும் பொழுது அதை நல்லவையாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் உணர்வுகளை இந்த வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் அந்த துருவ மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

நாம் நுகர்வது எதுவாக இருந்தாலும் முதலில் நம் உயிரிலே பட்டுத் தான் உணர்வுகள் கலக்கின்றது. அத்தகைய கலக்கும் இடத்தில்…
1.எப்போது தீமையைப் பார்த்தோமோ தீமையைக் கேட்டோமோ அந்த நேரங்களில் எல்லாம்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்தல் வேண்டும்.

அப்போது இரண்டும் இணைக்கப்படும் பொழுது தீமையை விளைவிக்கும் அணுக்கள் விளையாது தடுக்கப்படுகின்றது.

ஆனால் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் விளையும். இது சமப்படுத்தும் உணர்வாக நம் உடலில் உருவாகி
1.எந்த ஞானியின் உணர்வை நாம் வலுப்பெறுகின்றோமோ
2.அங்கே அவனிடம் நம்மை அழைத்துச் செல்லும்.

நீங்கள் மகானாக முடியும் – ஈஸ்வரபட்டர்

நீங்கள் மகானாக முடியும் – ஈஸ்வரபட்டர்

 

மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்… மனித குணங்களை உருவாக்க முடியும்…! மதி கொண்ட உயர் ஞானத்தால் மனித உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்திக் கொண்ட மனித உணர்வில்… மனிதன் முதலில் வாழ்க்கையில் “எளிமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்…”

வாழ்க்கையில் எளிமையும்… ஆத்மாவில் சுகத்தையும்… அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன் மனிதனாக்கும் முதல் நிலை.

இம்முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு… உயர் ஞானத்தின் மெய் ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை… மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும்.

1.ஆகவே மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகக்கூடிய நிலை என்பது.
2.“உயர்ந்து விட்டோம்…” என்பதை விட்டு
3.“உயர்ந்திடுவோம்…” என்ற எண்ணம் வர வேண்டும்.

பிற ஆத்மாக்கள் மனிதனின் (தன்) உயர்வைக் கண்டு… நாடி வந்து வணங்க வேண்டும்… என்ற எண்ணத்தில் இருளைக் கூட்டிக் கொள்ளும் பொழுது “எம்மனிதனும் மகானாக முடியாது…”

தன் உயர்வை உயர்த்திக் காண வேண்டும் என்றால்…
1.பிறரை உயர்த்தும் பொழுதுதான் தான் உயர முடியும்
2.தன் உயர்வை நாடி எல்லாம் வர வேண்டும் என்று எண்ணுவதல்ல உயரும் நிலை…!

சூரியன் எப்படி மற்றக் கோள்களின் அலையைத் தான் பெற்று… தன்னில் அதைச் சமைத்து மீண்டும் ஒளியைத் தந்து உருளுகின்ற உண்மையில்… சூரியத் தொடர்பில் சுழலக் கூடிய கோள்கள் தானும் ஓர் நாள் வளர்ந்து… தன்னுடைய ஈர்ப்பின் சுழற்சியில் குடும்பம் அமைத்து… அதுவும் சூரியனாக வளர்ச்சி அடையக்கூடிய நிலையை அது அது பெறுகிறது.

அண்ட கோள்களில் உருள்பவை யாவும்… மண்டலக் கோள்களின் ஈர்ப்பில் மோதப் பெறும் சமைப்பு நிலையால்தான் “மறு நிலை… உரு நிலை…” பெறுகின்றது.

இத்தொடரின் சூட்சுமமே ஜீவகாந்த ஒளித் தன்மை உயிர்ப்பு நிலை வந்த பிறகு தான். ஜீவ ஆதி நிலை கொண்டு
1.ஆரம்ப நிலை – புழு நிலை
2.முதிர்வு நிலை ஜீவனின் தொடர் – மனித நிலை
3.மனித நிலையில் மகானாகி – ஒளி பெறும் நிலை
4.என்றென்றும் வளரும் நிலை – வளர்ச்சியின் ஒளி நிலை.
5.மனிதனின் நிலை தான் – தெய்வமாகும் நிலை.

இதை அறிந்து… மனிதனிடம் இருக்கும் “எண்ணத்தின் பகுத்தறிவு தான் உண்மையான சொத்து…” என்பதை உணர்ந்து
1.ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லுணர்வைத் தந்து
2.நல்லொழுக்கத்தை ஆத்ம பலத்தில் வளர்க்கும் உரமிடுபவன் நிச்சயம் மகானாக முடியும்.

“மனிதருக்குள் தெய்வம்” என்று மகான்களைக் சொல்வதைப் போல்… தன் உணர்வின் எண்ணத்தில் சுகத்தைக் காணும் “ஆத்ம பலத்தின் ஒளித் தன்மை பெற” சரீர வாழ்க்கையில் எளிமையைக் காணுங்கள்.

எவ்வளவு தைரியசாலியாக உடல் வலுவுள்ளவராக இருந்தாலும்… சோர்வு வந்து விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய விடாது

எவ்வளவு தைரியசாலியாக உடல் வலுவுள்ளவராக இருந்தாலும்… சோர்வு வந்து விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய விடாது

 

இன்று ஒன்றுமே செய்ய வேண்டாம்…! பத்திரிக்கையைப் படித்தாலே போதும்… அல்லது டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.

இந்த வீட்டில் கொள்ளை அடித்தார்கள்… அந்த வீட்டில் திருடினார்கள்… இப்படி ஏமாற்றினார்கள்… பல கொடுமைகள் நடக்கிறது… என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. நமக்குள் அது எல்லாம் பதிவாகிக் கொண்டே வரும்.

இன்றைய உலகில் வலு உள்ளவன் என்ன செய்கிறான்…?

காட்டில் உள்ள மிருகங்கள் தன் வலுவைக் கொண்டு தான் மற்றதை அடித்துப் புசிக்கின்றது. அதைப் போன்றுதான் இன்று பத்து நூறு பேர் சேர்ந்து வலுவாகி விட்டால் அவர்கள் தான் ராஜா.

அடுத்தவர்களிடம் ஒரு இடத்தை நான் கேட்கிறேன் கொடு…! என்பார்கள். கொடுக்கவில்லை என்றால்… “பார்க்கலாம்…!” என்பார்கள்.

பின் தன்னுடைய அதிகாரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு “எனக்குத் தான் அது சொந்தம்…” என்பான். எந்த வகையில் நீ வருவாய்…? பார்ப்போம்…! என்பார்கள்.

இன்று இந்த அளவிற்கு மனிதனுடைய ஆக்கிரமிப்பு உணர்வுகள் அதிகமாகி விட்டது. நாம் தவறு செய்யவில்லை விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் இன்று பத்திரிகையிலே பார்க்கின்றோம்… படிக்கின்றோம்.

இப்படி எல்லாம் நடந்தது…! என்று உடனுக்குடன் நாம் அறிகின்றோம் ஆனால் அதை என்ன… ஏது…? என்று எண்ணும் போது இந்த அறிவின் தன்மை நமக்குள் பதிவாகி அங்கே உருவான உணர்வின் ஒலியை நாம் நுகர்ந்து அதையே உடலில் அணுவாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
1.முதலில் படிக்கும் போது ஒன்றும் தெரியாது
2.அணுக்கள் விளைந்து விட்டால் அடிக்கடி இந்த நினைவு வரும்.

பத்திரிக்கையைப் படித்தோம் டி.வியில் பார்த்தோம் என்று அடுத்தவரிடம் பேசுகிறோம் அல்லவா.
1.இங்கே இப்படி நடந்தது அங்கே இப்படி நடந்தது என்று (இரண்டாவது தரம்) சொல்லும் பொழுது
2.இந்த உணர்வுகள் உடலில் உருவான அணுவிற்கு மீண்டும் சாப்பாடாகப் போய்க் கொண்டே இருக்கின்றது.
3.தன் இனத்தை அது பெருக்க ஆரம்பித்து விடுகின்றது.

நம் உடலில் நல்ல உணர்வுகளைப் பெருக்குவதற்கு… நல்லதைக் கொஞ்ச நேரமாவது பேசுகிறோமா என்றால் இல்லை. பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது.
1.என்னதான் நல்லது செய்தாலும்
2.இப்படி ஆகிவிட்டதே…! என்ற நிலையில் தான் இருக்கின்றோம்.

இதைத்தான் “விழித்திரு…” என்ற நிலைகளில் அந்தத் தீமை வரப்படும் போதெல்லாம் அதை இடைமறித்தல் வேண்டும்… விழித்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… என்ற உணர்வினை எடுத்துவிட்டு
1.எந்தக் காரியம் நடைபெற வேண்டுமோ…
2.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
3.என்னை நினைக்கும் போதெல்லாம் அவர் நல்லவராகும் நிலைகள் வர வேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கலந்து வெளிப்படுத்த வேண்டும்.

இத்தகைய நிலைகளை இந்த வாழ்க்கையில் நாம் அதை விழித்திருந்து செயல்படுதல் வேண்டும்.

தொழிலில் முதலில் லாபம் வரும் பொழுது… எல்லாம் சந்தோசமாக இருப்போம். சிறிதளவு நஷ்டம் ஆகி விட்டால் போதும். அங்கே கொடுத்தேன் காசு வரவில்லை… இங்கே கொடுத்தேன் காசு வரவில்லை… இப்படி ஏமாந்து போய்விட்டேன்…! என்று என்ற எண்ணங்கள் தான் வரும்.

அத்தகைய எண்ணங்கள் உருவாகி விட்டால் அதனால் உருவான அணுக்கள் அதே நினைவினைச் சுவாசிக்கும்போது பலவீனமான எண்ணங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.

அதே உணர்வுகள் இதற்கு உணவாகப்படும் பொழுது இந்த நல்ல உடலில் அந்தத் தீமையின் செயலாக நம்மைச் சோர்வடையச் செய்துவிடும். சோர்வான எண்ணங்கள் அது உணவாக ஆனபின் என்ன ஆகும்…?

நாம் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் கூட…
1.உடல் வலுவாக இருக்கும்
2.சோர்வின் தன்மை வரும் பொழுது எந்த வேலையையும் செய்ய முடியாது
3.சிந்திக்கும் தன்மையைyum இழக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நீ விழித்திரு…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் தீமை புகாது தடுக்க வேண்டும்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதன் அடிப்படைக் காரணமாக வருகின்றதோ… உடனடியாக விழித்து… அதைத் தனக்குள் அடக்க வேண்டும்

ஆகவே…
1.தீமையின் உணர்வுகள் உருவாக்கப்படும்போதெல்லாம்
2.அருள் ஞானியின் உணர்வை நாம் எடுத்து உடலுக்குள் இணைத்து
3.அந்தத் தீமைகளை அடக்குதல் வேண்டும்.

ஆறைக் கடந்தால்… நிலை ஏழு… “சப்தரிஷி” – ஈஸ்வரபட்டர்

ஆறைக் கடந்தால்… நிலை ஏழு… “சப்தரிஷி” – ஈஸ்வரபட்டர்

 

1.அறுசுவையின் முதிர்வு உணரும் நிலை ஏழு…
2.வண்ணத்தில் ஏழும்… இப்பூமியின் சுழற்சியில் இப்பூமிக்கு ஏழு நாட்களின் வாரத் தொடர்பும்…
3.“சப்தரிஷிகளின்…” ஏழு நிலையின் உண்மைத் தத்துவ நிலையும் தான் இப்பூமியின் உண்மை நிலை.

ஐம்புலனைப் பகுத்தறியக் கூடிய நிலை கொண்டது தான் “ஆறறிவு பெற்ற மனித நிலை…” மிருகங்கள் ஐந்து நிலையைப் பெற்றிருந்தாலும் இயற்கையின் தொடர்புடன் புல்லையும் பூண்டையும் நீரையும் இயற்கையுடன் ஒட்டித்தான் அதனுடைய ஜீவ வாழ்க்கை வளருகின்றது… வாழுகின்றது.

உண்ணவும் உடுக்கவும் இருக்கவும்… தன் ஆறாம் அறிவை மனித ஞானம் பயன்படுத்திக் கொண்டது.

ஏழாம் நிலையான உயர் ஞானத்தால் இச்சரீர உணர்வின் அறுகுணத்தின் அறியும் நிலை கொண்டு அடையும் நிலையை மாற்றி… ஞானத்தால் உணரும் மெய் ஞானம் கொள்ளும்… “ஏழான நிலையை” மனிதன் பெற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான்… இப்பூமியின் சுழற்சியின் மூல அமில ஒலியின் சப்தரிஷி ஒளி செயலினால்… ஏழு தன்மையின் வளர்ப்பின் செயல் சக்தி ரிஷித் தொடர்பினால்… இப்பூமியில் வளரக் கூடிய மூலத்தின் கருவின் வித்தில் வளர்ந்த பலன்கள் தான் அறு குணம் பெற்ற நிலை.

1.இந்தப் பூமியின் முதிர்வு நிலை மனித நிலை ஆறறிவு நிலை…! அதற்கு அடுத்த நிலை மெய் ஞான நிலை
2.மெய் ஞானம் பெற்ற மனித நிலையும் இந்தப் பூமியின் சுழற்சியில் முதிர்வு நிலை
3.இவ் ஏழைக் கடக்கும் மெய் ஞானி தன் சித்தத்தை உணர்ந்த சித்தனாகி விட்டால்
4.அது எட்டாம் நிலையான அஷ்டமாசித்து நிலையை அடையும் நிலை.

இயற்கையின் மெய் உணர்ந்து மெய் ஞானத்தால் ஒளி பெற்றுத் தன் சித்தத்தின் வலுவாகும் சித்து நிலையே ரிஷியாகும் வழி நிலை.

இப்பூமியின் உணர்வுடன் இப்பூமியின் சுழற்சியில் எடுக்கக்கூடிய ஒலி அலைகள் யாவையும்… தன் ஒளியாய் எடுத்து இவ்வாத்மாவின் ஒளி ஒளிரக் கூடிய தன்மை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்தத் தகுதி உண்டு.

வளர்ச்சியின் தொடர் வளர… மனித உணர்வில் தன் சரீர உணர்வால் மனிதன் பெறக்கூடிய கண்டு… கேட்டு… நுகர்ந்து… சுவைத்து… உணரும்.. இந்த ஐந்து நிலையும் அடையும் நிலை மனிதனுக்கே உண்டு.

இந்த ஐந்து நிலையில் இனிமை நிலை கூட்டுவது… மனித நிலையில் இரு நிலையான ஒவ்வொரு இயற்கை நிலையிலும் தன்னுடன் மோதக்கூடிய
1.ஜீவ நிலையான பெண்மை நிலை… வளர்ச்சி நிலை…
2.அறுநிலை கொண்ட முதிர்வு நிலை… சிவசக்தி நிலை…
3.பெண் சக்தியின் வளர்ச்சியின் தொடர் கொண்டு வளரக்கூடிய நிலைக்குத்தான்
4.சப்தரிஷியின் சக்தித் தொடர்பை உணர்ந்த ரிஷிகள்… சக்தியைப் பெண்ணாகக் காட்டினார்கள்.

மனித உணர்வில் அடையக் கூடிய இவ் அறு நிலைக்கும் முதிர்வு நிலையான… மெய் ஞானத்தை உணரும் ஜீவ நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும்.

ஏழான ஜீவ நிலையுடன் எட்டாகும் சித்தனால் ஒவ்வொரு கோள்களாய் உருவாகும் தன்மை எடுக்கும் இவ்வுணர்வின் எண்ணம் கொண்டு தான் உயர முடியும்.

பிற ஒலி அலைகளை இச்சரீர உணர்வுடன் எடுக்கும் சித்து என்பது..
1.இப்பூமியின் சுழற்சியுடனே…
2.இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்தவுடன் (ஆவிகள்)
3.எந்தெந்த ஒலியெல்லாம் எடுத்து இச்சரீரத்தைச் சித்தாக்கி வளர்த்துக் கொள்கின்றோமோ
4.அதன் ஈர்ப்புப் பிடிப்பினால் ஆத்மாவைச் சிதற அடிக்கும் நிலைதான் சித்து விளையாட்டு நிலை. (இதிலே நாம் சிக்கக் கூடாது)

மனிதன் எத்தாய் தந்தை தந்த இஜ்ஜீவ உடலைப் பெற்றானோ அதைப் போன்றே தாய் தந்தையென்ற ஆத்மாவில் மனித ஜீவனை மனிதன் பெற்ற தொடரைப் போன்று இரண்டு ஆத்மாவின் ஒரு நிலையான எண்ணத்தின் ஒற்றுமையால்
1.உணர்வின் இன்பம் (உடலின் இன்பமல்ல) உணர்வின் இனிமையை… ஆத்மாவின் இனிமையாய்…
2.ஆத்மாவின் ஜீவ இனிமை நிலையை மனித உணர்வுடன் உள்ள பொழுதே
3.குணத்தின் அன்பால் உணரக்கூடிய சம குணமுடன்
4.விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒலியை இருபாலரும் எடுத்து ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆகவே இச்சரீர வாழ்க்கையில்… மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம் தான் இது..! இரு குணத்தை ஒரு குணமாக்கி அன்பென்னும் ஆலயத்தைச் சிவசக்தியாக்கச் செய்யும் ஒவ்வொருவரையும்.