மனித பிம்பத்திற்குண்டான உண்மையான ஆற்றல் – ஈஸ்வரபட்டர்

மனித பிம்பத்திற்குண்டான உண்மையான ஆற்றல் – ஈஸ்வரபட்டர்

 

தன் உணவைத் தான் எடுக்கப் போகன் செய்த செயல் முறைதான் “முருகா” என்ற சிலை.
1.ஒவ்வொரு சக்திக்கும் (அது) எந்தச் சக்தியாக இருந்தாலும்
2.தன் சக்தி வளர உணவு தேவை.

உணவை எடுக்க அவரவர்கள் உணர்த்திய முறை கொண்டு தான் போகனால் சீனாவில் பல மருத்துவங்களையும் வெடி குண்டுகளையும் முகம்மது நபியின் உடலை எடுத்து முஸ்லீம் நாடுகளில் தன் உணர்வைப் பதித்து உணர்வின் எண்ணமுடன் தன் உணவை எடுத்தார்.

இப்படி… தான் வளர தனக்குகந்த வளர்ச்சியில் ஆகாரமாகப் பல நிலைகளை உணர்வின் எண்ணமுடன் பதியச் செய்த முறை கொண்டு தான் அன்றிலிருந்து இன்று வரை பக்தி முறை தொடர் கொண்டுள்ளது.

பக்தியின் உண்மையான உணர்வின் எண்ணத்திற்கு அவர்களின் சக்தியைக் கொண்டு பக்திக்குகந்த பலனை அளித்துத் தனக்கு உணவை எடுக்கின்றார்.

கவிதைகளையும் பல காவியங்களையும் எழுத்தில் பதியச் செய்து பல சித்தர்கள் அதைப் படிப்பவர்களின் எண்ண உணர்வைத் தனக்குகந்த உணவாக எடுக்கின்றனர் இன்றும்…!

அன்றெழுதிய இராமாயணம் கீதை பைபிள் குரான் இவை எல்லாம் காலப் போக்கில் உருக்கள் மாறினாலும் அன்றெழுதிய உணர்வின் சக்தித் தொடரில் படிப்பவருக்கும்… எண்ணுபவர்க்கும்… அவ்வுணர்வின் சுழற்சியைக் கொண்டு…
1.இன்றளவும் அதனை எழுதியவருக்கு உணர்வின் எண்ணத்திற்கு
2.அவர்களுக்கு உணவு கிடைத்துக் கொண்டேயுள்ளது.

இந்தப் பூமியில் பல கோடிச் சித்தர்கள் பல உணர்வுகளில் இருந்தாலும் அவரவர்களின் வளர்ச்சிக் குணத்திற்கு உகந்தபடி எல்லாம்… தன் எண்ண உணர்வை என்றும் அழியாத் தொடரிலும்… சில சொல் ரூப மந்திரங்களிலும் பதியச் செய்துள்ளான் அந்தச் சித்தன்.

ஐயப்பனை எண்ணும் பொழுது ஒரு கோஷம். முருகனை எண்ணும் பொழுது வேறு ஒரு கோஷம். இப்படி இயேசு கிறிஸ்துவுக்கும் முகம்மது நபிக்கும் புத்தருக்கும் கொங்கணவருக்கும் அவர்கள் பதிய வைத்த இக்கோஷத்தால் இன்றளவும் தன் உணர்வுக்குகந்த உணவை எடுத்து தான் வாழ்ந்து… வளர்ந்து… பலவற்றையும் வாழ வைத்திருக்கின்றார்கள் “சக்தி கொண்ட சக்திகளை…!”

உணவில்லாமல் எதுவுமே வளர்வதில்லை…!

பிம்ப உடல் கொண்ட ஜீவத் துடிப்பு உருவங்களுக்குத் திடமான உணவு தேவை. ஆனால்
1.பிம்ப உடல் கொண்ட திட உணவை உட்கொள்ளும் இந்த மனித சக்தியில் இருந்து தான்
2.உணர்வின் எண்ண உணவையும் உட்கொள்ளும் சக்தி நிலை வளர்கின்றது.

தாவரங்கள் நீரையும் சில எருக்களையும் உணவாக உட்கொண்டாலும் உணர்வுடன் கூடிய எண்ண உணவெடுக்கும் முறை மனித ஞானத்திற்குத்தான் உண்டு. மனித ஞான உணர்வின் உயர் சக்தியில் ஊன்றியுள்ள உண்மைதனை உணரல் வேண்டும்.

மனித நிலையிலிருந்து மாறி மிருக நிலையிலும் மற்ற பட்சிகளின் புழு பூச்சிகளின் நிலையிலும் உணர்வின் எண்ண ஞான உணவெடுக்கச் சக்தியில்லை.

1.ஞானத்தின் உணவை எடுத்துச் சித்தன் என்ற செயலாகிச் சப்தரிஷியின் செயலாக்கி
2.ஆதி சக்தியின் சக்திக்கே துணை சக்தி கொள்ளும்
3.வடிவெடுக்கும் உருவங்கள் தானப்பா… இந்த மனித பிம்ப உடல்…!

பல கோடி ஆண்டுகளாகவே நற்சக்தியின் விதைகள் விதைக்கப்பட்டுப் பலனை எடுத்து மீண்டும் மீண்டும் பலன் கொண்டு… தான் எடுத்த உயர் ஞானத்தைக் கொண்டு பல ஞானங்களின் உணவு எடுத்துக் கருவாகி உருவாகி… தனியோரு மண்டலமாக உருவாகிச் சுழன்று கொண்டேயுள்ள சக்தியில் முதல் எது… கடைசி எது…?

மெய் ஞான அறிவால் காணக்கூடியதற்கும் விஞ்ஞான அறிவால் காணக்கூடியதற்கும் உண்டான வித்தியாசம்

மெய் ஞான அறிவால் காணக்கூடியதற்கும் விஞ்ஞான அறிவால் காணக்கூடியதற்கும் உண்டான வித்தியாசம்

 

உங்களுக்குள் யாம் (ஞானகுரு) இப்போது ஆழமாகப் பதிவு செய்யும் மெய் ஞானிகளின் உணர்வினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதனை நீங்கள் பெருக்கிக் கொண்டால்
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கொண்டு
2.விண்ணின் அதிர்வலைகளை நுகர்ந்தறிந்து
3.விஞ்ஞானிகள் கருவியின் துணை கொண்டு வான இயல் புவியியலில் அளந்தறியும் செயல்களை
4.அந்தக் கருவிகள் இல்லாமலே அதன் உணர்வலைகளை நீங்கள் அறிந்து
5.இத்தனை மணிக்கு இன்னது நடக்கும்…! என்று சொல்ல முடியும்.

அதே சமயத்தில் மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பாய்ச்சி
1.விண்ணிலிருந்து வரும் ஒரு கல்லோ பாறையோ (ASTEROIDS) பூமியிலே மோதாதபடி
2.அது திசை திரும்ப வேண்டும் என்று பலர் சேர்ந்து எண்ணினால்
3.இந்த ஒலி அலைகள் கொண்டு குறுக்காட்டி அவைகளைத் திசை மாற்றவும் உங்களால் முடியும்.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டோர் அணு ஆயுதங்களைத் எடுத்து அணு விசை கொண்டு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அந்தப் பாறைகளையோ கல்களிலோ செலுத்தி அவைகளை நொறுக்கலாம்.

1.நொறுக்கிய பின் அதிலே கலந்த நஞ்சு பிரபஞ்சத்தில் பரவி மீண்டும் நம் பூமிக்குள் தான் வரும்.
2.பூமியிலே மோதாது அதைத் தாக்க முடியும்… ஆனால் நம்மைக் (மனிதர்களை) காக்க முடியாது.

ஏனென்றால் இவர்கள் வெடிக்கும் தன்மை கொண்டு அது நொறுங்கிய பின் அந்த நஞ்சான உணர்வின் தன்மை நம் பூமியில் படரப்பட்டு நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன்” என்ற திரையைக் கிழித்து அந்த நஞ்சின் தன்மைகளை இங்கே பெருக்கிவிடும்.

சாதாரணமாக… விண்ணிலிருந்து வரும் நஞ்சுகளை எல்லாம் ஒடுக்கும் தன்மையாக அது பெருகி வரும் போது தான் அது ஓசான் திரை. பூமிக்குள் ஒளியின் தன்மை பெருக்கி இங்கிருக்கும் மற்றதனைத்தையும் காக்கும் நிலைகளாக அந்த ஓசான் திரை இங்கே வருகிறது.

ஆனால் விஞ்ஞான அறிவின் செயலால் ஓட்டை விழுந்து விட்டால் நஞ்சு உள்ளே புகுந்துவிடும். விண் கற்களைத் (ASTEROIDS) தெறிக்கச் செய்தாலும் நம் பூமிக்குள் அது வருமே என்றால் நஞ்சினைத் தான் அது பரப்பச் செய்யும்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கிறோம். ரோட்டிற்கு அந்தப் பக்கம் ஒரு பொருளின் தன்மை இருக்கின்றது. நாம் எடுக்கச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த ஆசையே துணிவாக அங்கே நம்மைச் செல்லச் செய்கிறது.

ஆனால் இடைமறித்து பஸ் வருகிறதா…? அல்லது வேறு என்ன வருகிறது…? என்று நாம் பார்த்துச் சென்றோம் என்றால் அந்த எல்லையை அடைய முடியும்.

அப்படித் திரும்பிப் பார்க்காது நாம் சென்றால் அந்தப் பொருளையும் பெற முடியாது… நமக்கும் ஆபத்தாகிவிடும். அதைப் போன்று தான்
1.மனிதன் இந்த விஞ்ஞான அறிவால் நாட்டைக் காக்க எண்ணினாலும்
2.அதனால் விளைந்த நஞ்சு நாட்டு மக்களை அழித்துவிடும்.

இன்று நாம் பார்க்கும் விஞ்ஞானத்தின் விளைவுகள் இது தான்.

ஞானிகளுக்கும் நமக்கும் இடையில் உள்ள திரையை அகற்றுவது எப்படி…? – ஈஸ்வரபட்டர்

ஞானிகளுக்கும் நமக்கும் இடையில் உள்ள திரையை அகற்றுவது எப்படி…? – ஈஸ்வரபட்டர்

 

படைப்பின் படைப்பனைத்திற்குமே ஒவ்வொன்றிற்கும் அதன் படைப்புக் குணம்… மணம் உண்டு. கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மணமுண்டு.

மணமில்லா உரு நிலை எதுவுமே பெறுவதில்லை.

நம் பூமிக்கு மட்டுமல்ல… பால்வெளி மண்டலத்திலும்… நட்சத்திர மண்டலங்களிலும்… வளர்ந்த பெரிய மண்டலங்கள் எதுவானாலும்… அதன் ஆரம்ப நிலை அமில ஈர்ப்பு ஜீவத் துடிப்பு மணமுடன் ஒலியாகி ஒளியாகி நீராகும் செயல் தான் கொள்கின்றது.

மணம் கொண்ட வழியிலேயே உணர்வும் பெறுகின்றது. மணத்துடன் கூடிய உணர்வால் தான் உணவையே உட்கொள்ள முடிகின்றது.

இந்நிலையை எதற்காக இங்கே உணர்த்துகின்றேன்…?

1.உன் ஜெப நிலையால் உன் உணர்வின் எண்ணத்தை
2.என் பால் (ஈஸ்வரபட்டர்) செலுத்தி எம் அலையின் தொடரை நீ பெற்றால்
3.உன் உணர்வின் உணவாக எம் அலை பாயும்.

ஒரு பருப்பில் பல பருப்புகள் விளைகின்றன. அதைப் போல்
1.எம் உணர்வை நீ எடுத்து
2.உன் உணர்விற்கு உணவாக ஊட்டம் கொடுத்து உன் வளர்ச்சியை நீ பெற்றால்
3.உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை விலகி
4.அனைத்தையும் காணும் “அபூர்வ சக்தியாக” ஞான சக்தியின் சித்து நிலை பெற முடியும்.

பருப்பு பருப்பாகவே இருந்தால் பல பருப்பைக் காண முடியுமா…? பயிர் செய்து பலன் பெற்று பலனின் பயிர் வளர் தொடர்பில்தான்… பருப்பென்ற பருப்பு குணப் பயிர் வளர்ப்பே வளர்ந்து கொண்டேயிருக்குமேயன்றி பயிர் செய்யாமல் பயிர் வளர் தொடர் எதுவும் காண முடியாது.

1.ஒன்றின் தொடர் ஒன்று வளர்கின்றது
2.ஒன்று என்றென்றும் வளர தன் வளர்ப்பிற்கு உணவு தேவை.
3.அதைப் போன்று நாங்கள் (மகரிஷிகள்) வளர உன்னை வளர்க்கின்றோம்.
4.நீ வளர நீயும் வளர்க்க வேண்டும் பிறரை…!

வளர்ப்பின் தொடர் வளர்ப்பு வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் எந்த ஒரு வளர்ச்சியும் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.பயிர் வளர்ப்பு மட்டுமல்ல….
2.ஜீவித வளர்ப்பு மட்டுமல்ல…
3.மண்டலங்களின் வளர்ப்பு மட்டுமல்ல…
4.ஞானிகளின் வளர்ப்பு மட்டுமல்ல…
5.அவ்வாதி சக்தியின் படைப்பின் சக்திக்கே… படைப்பின் படைப்பாகி…
6.பலவற்றின் படைப்பின் தொடர் படைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

வழித் தொடர் வெள்ளாமை ஒவ்வொன்றிலும் வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் அவ்வளர்ச்சியின் செயல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.முற்றுப் பெற்று… முக்தி பெற்று… முடிவடையும் சக்தி எதுவுமே இல்லை.
2.முழு முதலாக வளர்வது தான் ஆதியின் அந்தச் சக்தி.

உடல் வளர உணவு தேவை. உணர்வின் எண்ணம் வளர ஞானத்தின் உணவு தேவை. உணர்வின் எண்ணத்தை ஞானம் என்ற உணவை உட்கொண்டு இவ்வுடல் என்ற பிம்ப ஜீவ சக்தி கொண்ட வடிவின் அணுவின் உயிரணுக்களுக்கு ஞானத்தை உணவாகக் கொடுத்து
1.ஞானத்தால் வளர்த்த உடல் அணுக்களைச் சித்து நிலை பெற்றிடவே
2.ஞானம் என்ற உணர்வெடுத்துச் “சித்தன்” என்று உருவாகுங்கள்.

இப்பொழுது புரிகிறதா போகன் அமைத்த முருகனின் சிலை எதற்கு என்று…?

தன் நிலை உயர தன் உணர்வு வளர முருகனைப் படைத்தான் போகன். முருகன் சிலையைப் படைத்து முருகா… என்ற நாத உணர்வு ஜீவ சக்தியை உணவாக உட்கொள்கின்றான் இன்றும் போகன்.

1.ஒவ்வொரு சித்தனும் இந்த ஞான பூமியில் தன் ஞானத்தை வளர்த்துக் கொள்ள
2.தன் வளர்ப்பின் வளர்ப்பு வளர வழிப்படுத்திய உண்மைகள் பல உண்டு.

போகரின் வழித் தொடர் முருகன் முருகனின் உருவத்தை காட்டி உணர்வின் எண்ண ஜீவ உணவை உட்கொள்கின்றான் போகன்.

முருகன் ஆலயம் செல்லும் பக்தர்களில் உணர்வால் உண்மை பக்தி பூண்ட ஆயிரம் பக்தர்கள் சென்றால்…
1.ஆயிரத்தில் ஒன்றிரண்டு பக்திமான்களாவது
2.ஞானத்தின் சக்தி பெறச் செல்வதுண்டல்லவா…!

தன் உணவாக நல் மணிகளைத் தான் உண்டு பல மணிகளைத் தருகின்றான் போகன்.

பதினெட்டாம் பெருக்கு

பதினெட்டாம் பெருக்கு

 

ஆற்றில் வெள்ளம் செல்கிறது என்றால் அந்த வெள்ள நீரை நாம் வயல்களிலே அப்படியே பாய்ச்சினால் பயிர் பச்சைகளை எல்லாம் அது அடித்துச் சென்றுவிடும்.

அதைப் போன்று இந்த வாழ்க்கையின் நிமித்தம்…
1.நாம் அதிக ஆசையின் உணர்வுகளைக் கொண்டு சென்றால்
2.வெள்ள நீர் செல்வது போல் மற்றது சிந்தனை இல்லாது ஒருநிலைப்படுத்திக் கொண்டு போகும்.
3.வேறு செயல்களைச் சீராகச் செயல்படுத்தவிடாது

ஆனால் அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் கொண்டு வரப்படும் போது நமக்குள் இருக்கும் தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.

ஓர் வெளிச்சத்தைப் போட்டோம் என்றால் அங்கிருக்கும் இருளைப் போக்கிப் பொருள்களை எல்லாம் காணச் செய்யும்.

இதைப் போன்று தான் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் இணைப்போம் என்றால் அது நமக்குள் அது பெருகி நம்மை அறியாது சேர்ந்த இருளைப் போக்கிவிடும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி நம்மை அறியாது வந்த தீமையான வினைகளைப் போக்கி மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெருகச் செய்வதே “பதினெட்டாம் பெருக்கு…”

பதினெட்டு என்றால்…
1.உலகை அறியும் தன்மை பெற்றவன் மனிதன்… அந்த உயிரின் தன்மை பத்தாவது நிலை அடையும் தருணம் பெற்றது.
2.எட்டு என்பது அஷ்டதிக்கும் “எட்டி” அதை எல்லாம் உணரும் நிலையைத் தெரிந்தவன் மனிதன்.

அனைத்தையும் அறியச் செய்யும் மனிதனின் ஆறாவது அறிவால் மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் பெருக்கி
1.அஷ்டதிக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி
2.எந்தத் திக்கில் எது வந்தாலும் அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது.

அஷ்டதிக்கிலும் தீமை என்ற நிலையில் இருள் சூழ்ந்தாலும் சப்தரிஷி மண்டலம் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகிறது. துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் இருளை எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது.

இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் மெய் ஞானம் எளிதில் கைகூடும் – ஈஸ்வரபட்டர்

புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் மெய் ஞானம் எளிதில் கைகூடும் – ஈஸ்வரபட்டர்

 

நல் உபதேசத்தைக் கேட்பதும்… நல்ல நூலைப் படிப்பதும்… நம் உணர்வின் எண்ணமுடன் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

1.இஜ்ஜீவ உணர்வின் சக்தியைக் கொண்டு
2.இவ்வெண்ண நிலையை எதன்பால் திருப்புகின்றோமோ
3.அவ்வலைத் தொடரின் பதிவு ஒலிகள் அதனுடன் கூடிய நல் அலைகளை மீண்டும் பதியச் செய்ய
4.இவ்வெண்ணத்தால் எடுக்கும் தியானத்தால் இவ்வுணர்வு முழுவதுமே
5.நற்சக்தியின் அலையை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.

கோவில் குளங்களுக்குச் செல்லும் பக்திமானுக்கு அவன் கனவிலும் நினைவிலும் இதே நிலைகள் தான் சுழன்று கொண்டிருக்கும்.

பல கோவில்களுக்குப் போவது போலவும் அங்குள்ள ஆண்டவனைத் தரிசிப்பது போல “கனவுகளிலும்…” அதே சமயத்தில் “நினைவான எண்ணத்தில்…” எக்கோயிலுக்குச் செல்லலாம்…? எந்த நூலைப் படிக்கலாம்…? எந்த ஞானியைத் தரிசிக்கலாம்…? என்ற உணர்வு அலைப்பிடிப்பில் தான் பக்திமானுடைய எண்ண உணர்வலை எடுக்கும் சுவாசம் கொண்ட அலை பதிந்திருக்கும்.

திருடனுக்கும் சரி… அவன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு எவ்வலை ஓடுகின்றதோ…! அவ்வலையின் செயலுக்குகந்த எண்ணத்திற்கொப்பத்தான் அவன் நினைவும் கனவும் இருக்கும்.

விவசாயி ஆனாலும் சரி.. விஞ்ஞானி ஆனாலும் சரி… குடித்துத் தன் உணர்வை இழந்தவன் ஆனாலும் சரி…
1.எந்த ஒரு பழக்கப்பட்ட செயலுடன் கூடிய வாழ்க்கையுடன் வாழ்கின்றோமோ அதன் நிலைக்கொப்ப
2.உணர்வின் எண்ணத்திற்கொப்ப சுவாசத்தால் இவ்வுடலில் பதிவாகியுள்ள நிலைக்கொப்ப சுழற்சியில் தான்
3.ஒவ்வொரு மனித ஆத்மாவின் ஜீவ சக்தியின் அலைத் தொடரும் செயலும் வெளிப்படுகின்றன.

இச்சுழற்சியில் “அந்தந்தக் குண அமிலச் செயல் வட்டத்திற்குள்” மட்டும் உணர்வைச் செலுத்தி வாழ்பவனை அவனுள் பதிவாகியுள்ள குண அமிலத்திலிருந்து மீட்டுவது கடினம்…!

அதே சுழற்சியில் இருந்தாலும் ஆத்ம வளர்ச்சியை வளர்க்க முடியாது.

உணர்வுடன் கூடிய எண்ணத்தை நம்முள் “பல கோடி ஆண்டுகளாகப் பதிவாகி உள்ள குண அமிலத்துடன்…”
1.நற்சக்தியின் அமிலத்தை ஞானத்தால் நாம் எடுக்கும் ஜெபத்தைக் கொண்டு
2.நம்மைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூட்சம நிலையில் உள்ள சப்தரிஷிகளுடன் தொடர்பு கொண்டு
3.உணர்வின் எண்ணமுடன் இழுக்கும் சுவாசத்தைக் கொண்டு உடல் முழுவதும் அதைப் பாய்ச்சி
4.ஏற்கனவே நாம் பல காலமாகச் சேமித்து வைத்துள்ள இக்குண அமிலத்துடன்
5.நற்சக்தியின் ஒலி அலை பாயப்பாய
6.மனிதச் சக்திக்குள் எச்சக்தியும் அறியக்கூடிய நிலை பெறலாம்.

நம்மைக் காட்டிலும் உயர்ந்த சக்தியைப் பெறும் வழித் தொடரை நாம் பெற்றோமானால் தான்
1.ஜீவனுடன் கூடிய இம்மனித உடல் பிம்பத்திலிருந்து எச்சக்தியையும்
2.இருந்த இடத்திலிருந்தே உணரவும் காணவும் மாற்றி அமைக்கவும் முடியும்.

ஆனால் நற்சக்தியின் பயனைப் பக்குவம் கொண்ட பத நிலையில் செயல்படுத்தக்கூடிய நிலையும் நாம் பெற வேண்டும்.

புகழ் கண்டு மயங்காதே…
புகழாரம் பாடாதே…
புகழ் தேடிச் செல்லாதே…!

இன்னல் கண்டு கலங்காதே…
இகழ்ச்சி கண்டு பதறாதே…
இகழ்ந்துரைக்க எண்ணாதே…!

நம் ஞானத்தின் வழித் தொடர் வெளிப்பட்டவுடன் நம்மை எதிர் நோக்கியுள்ள நிலைகள் தான் மேலே குறிப்பிட்டவை எல்லாம்.

1.இந்நிலையுடன் கூடிய உணர்வின் பிடியில் சிக்குண்டவர்கள்…
2.தன் வளர்ச்சியின் ஞானத்திலிருந்தே உயர முடியாத சுற்றலில்
3.இன்றளவும் பலர் சுற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம்…!

படைப்பின் இரகசியம் என்ன…? படைப்பவனின் இயக்கம் என்ன…? ஈஸ்வரபட்டர்

படைப்பின் இரகசியம் என்ன…? படைப்பவனின் இயக்கம் என்ன…? ஈஸ்வரபட்டர்

 

பருப்பைப் பயிராக்கினால் பல பருப்பை அந்த ஒரு பருப்பு பலன் தருகிறது. ஒன்று வளர தன் வளர்ப்பின் பலன் தான் ஒவ்வொன்றும். சூரியன் தான் வளரப் மற்றதை வளர்க்கிறது.

1.ஒவ்வொரு இயற்கையின் ஜீவ வளர்ப்பும் தான் வளர
2.தன் வளர்ப்பில் பிற வளர்கிறதே தவிர
2.தன் வளர்ப்பில்லாமல் பிற வளர்ப்பு எச்சக்தியும் வளர்த்திக் காட்ட முடியாது.

தன் உணவைத் தான் எடுத்து தான் வளர்த்து தன் வளர்ப்பில் பிறவற்றையும் வளர்க்கச் செய்கிறது சூரியன். மற்ற மண்டலங்களின் ஈர்ப்பைத் தனக்கு உணவாக எடுத்துத் தான் வளர்ந்து தன் வளர்ச்சியின் பலனை வெளிப்படுத்தி அவ்வளர்ச்சியின் நிலையால் பிறவும் வளர்ந்து ஒன்றின் வளர்ப்பில் படர்கின்ற வளர்ப்பின் செயல் தான் எல்லாமே…!

தான் உட்கொண்டு தன் உணர்வை ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ சக்தி கொண்டு உணர்வால் எடுக்கும் முறை கொண்ட வழி கொண்ட தொடர் நிலைப்படி தான் சகல நிலைகளும் உள்ளன.

1.மிகவும் சக்தி வாய்ந்த அகில சக்தியான ஆதி சக்தியின் படைப்பிற்கே
2.தன் படைப்பின் உணவை உட்கொண்டு உட்கொண்டு
3.தன் படைப்பின் படைப்பில் பலவற்றையும் படைக்கின்றான்.

ஆக…
1.உயிரணு தோன்றி..
2.அவ்வுயிரணுவின் உயிர் தோன்றி..
3.உயிர் செயலின் வழித் தோன்றி…
4.உயர் ஞான சக்தியாகி…
5.சகலமும் காணும் சப்தரிஷியானாலும்…
6.“அந்தச் சப்தரிஷியின் உணர்வுக்கும்…!” தன் வளர்ப்பை வளர்க்க உணவு தேவை.

தான் உண்டு… தான் வாழ… பிறரையும் வாழ வைக்க முடியுமே அன்றி “பிறர் வாழ்ந்தால் தான் வாழ முடியும்…!” என்ற நிலை எதற்குமே இல்லை.

நட்சத்திர மண்டலங்களும்… வளர்ந்து விட்ட சகல மண்டலங்களும்… காற்றினில் கலந்துள்ள பல கோடி அமிலங்களின் ஜீவ சத்துக்களும்… நீரும்… ஒளியும்… அனைத்துமே… தன் உணவை உட்கொண்டு தான் வளர்ந்து கொண்டுள்ளளன.

1.உணர்வின் சுழற்சிக்கு உணவு தேவை
2.உணவில்லாமல் எந்த ஜீவத் துடிப்பும் உயிர் வாழ்வதில்லை.

ஜீவனுடன் கூடிய பிம்ப உடலுடைய மனிதன் “ஜீவ சக்தி கொண்ட நீரையும் திடப்பொருள் உணவையும்” உட்கொண்டு வாழ்கின்றான்.

மிருகங்களும் மனிதனை ஒத்த நிலையில் வாழ்கின்றன. தாவரங்களின் நிலை “ஈர்ப்பின் சுவாசமுடன் உணவை” உட்கொண்டு அவை வாழ்கின்றன.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப தன் உணர்வு அழியாவண்ணம் நுகர்ந்து
1.தான் வாழ்ந்த காலத்தில் உண்டு வாழ்ந்த ஆகாரங்களின் வாசனையின் உணர்வை ஈர்த்து
2.தன் உணர்வுக்குகந்த உணவைக் காற்றிலிருந்து தன் சுற்றத்தாரின் உணர்வுடன் கலந்து
3.தன் உணவை உட்கொண்டுதான் ஆவி நிலையில் உள்ளவர்களும் வாழ்கின்றனர்.

ஆக..
1.ஜீவனற்ற பொருள்களுக்கு எதுவும் தேவையில்லை.
2.ஆனால் ஜீவனற்ற பொருளும் ஆவியாகக் கரைந்து பிறவற்றுக்கு ஆகாரமாகத்தான் செல்கிறது.
3.உணவில்லாமல் எந்த ஜீவ சக்தியும் வாழ்வதில்லை.

“மனிதனுடைய எண்ண வலு” தன்னையும் வாழ வைத்து… பிறரையும் வாழ வைக்கும் சக்தியாக வர வேண்டும்

“மனிதனுடைய எண்ண வலு” தன்னையும் வாழ வைத்து… பிறரையும் வாழ வைக்கும் சக்தியாக வர வேண்டும்

 

ஒருவனைத் தொலைந்து போக வேண்டும் என்று சொன்னால் போதும். அதை அவர் கூர்ந்து கவனித்தால் ஊழ்வினை என்ற வித்தாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.

என்னை இப்படிச் சொன்னான் என்ற நிலையில்…
1.அவனைப் பார்… நான் என்ன செய்கிறேன்…? என்று என்ற உணர்வுகள் அங்கே விளைந்து
2.அவன் நல்ல செயல்களை எல்லாம் ஒடுக்கிவிட்டு இவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளே வந்துவிடும்.

அவருடைய உடலுக்குள் இருக்கும் நல்ல உணர்வையும் வளர்ப்பது இல்லை. இவன் சொன்ன நிலையை வேதனையாக எண்ணி
1.இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற உணர்வை அங்கே ஊட்டி
2.அவனுக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை எல்லாம் இரண்டில் ஒன்று பார்த்துவிடும்.

ஒருவன் “தீங்கே விளைவிக்கின்றான்…” என்றால் இந்த மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த எண்ணம் அங்கே நுழைந்து விடுகின்றது.

பின்… இவன் உடலிலே விளைந்தது திருப்பி அங்கிருந்து வந்தவுடனே…
1.அவ்வளவு திமிரா…? இரு நான் பார்க்கின்றேன்… என்ற இந்தத் தீய உணர்வலைகளை விளைய வைத்து
2.இந்த உணர்வின் நிலைகள் உடலுக்குள் ஜீவான்மாவாக மாறுகின்றது.
3.சொல்லாக அது வரப்படும் பொழுது பரமாத்மாவாக மாறுகின்றது.

பரம் என்பது பூமி. சூரியனின் காந்த சக்தி சொன்ன உணர்வலைகளைக் கவர்ந்து இப்படிப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

பரமாத்மாவாக மாற்றிய நிலையில் இது சிறுகச் சிறுக விளைந்து மழை பெய்யும் மேகத்திற்குள் கொண்டு சென்ற உடனே நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தையும் அழிக்கின்றது.

தொலைந்து போகும் மழை இந்த நேரத்தில் தானா வர வேண்டும் என்று மழையைச் சொல்கின்றோம். இதைச் சாதாரணமாக வேடிக்கையாகச் சொல்லலாம். ஆனால் மழை பெய்வதைத் தடுக்கும் சக்தியாக அது மாறுகிறது.

ஏனென்றால் மனிதன் என்பவன் முழு முதற்கடவுள் என்று அதற்குத் தான் விநாயகனைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.

1.யானையின் தலையைப் பொருத்தி மனித உடலைப் போட்டு
2.நாம் புழுவிலிருந்து மிருகமாகி மிருகத்திலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ண வலுவாகி
3.அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு மனித உருவை உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
4.எண்ண வலு கொண்டு எதையும் சாதிக்கும் அவ்வளவு வல்லமை பெற்ற இந்த நிலையை
5.அதனின் வலு துணை கொண்டு மனிதனைக் காட்டிலும் மிக சக்தி வாய்ந்த உணர்வை ஈர்த்து
6.நம் உடலுக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் மனித உடல் பெற்ற நிலையில் நம் ஆறாவது அறிவிற்கு உண்டு.

அதனின் துணை கொண்டு மெய் ஞானிகள் இந்த வாழ்க்கையில் வென்று சென்ற அந்த உணர்வை நாம் கவர்ந்து நம் உடலுக்குள் அதை இணைப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை நீக்கும் நிலை வருகின்றது.

நஞ்சின நீக்கும் உணர்வின் ஆற்றலாக நாம் வெளிப்படுத்துவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஜீவாத்மாவாக விளைந்து அதனின் உணர்வு பெருக அந்த ஆற்றலின் வலிமை கொண்டு
1.நாம் எதைப் பரமாத்மாவில் கலக்கச் செய்தோமோ
2.அதிலே பெருகுவதை எடுத்துத் தனது ஆத்மாவாக மாற்றுகின்றது.

நாம் எண்ணிய உணர்வின் சத்து நம் உடலுக்குள் விளைந்து உயிராத்மாவில் விளைந்து ஒளியாக மாறுகிறது. நாம் ஒளி உடல் பெறுகின்றோம்.

ஞானிகளின் அருகாமை நமக்கு எப்போது கிடைக்கும்…?” – ஈஸ்வரபட்டர்

ஞானிகளின் அருகாமை நமக்கு எப்போது கிடைக்கும்…?” – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:-
தியானத்தில் அமர்ந்து குருநாதரால் உபதேசிக்கப்படும் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் ஈஸ்வரபட்டரின் உருவமும் அவர் ஆசியும் கிடைத்தது.

ஒரு பக்கம் அவரும் மற்றொரு பக்கமும் நானும் அமர்ந்துள்ள நிலையில் அவருடன் தொடர்பு கொண்டதின் சக்தியினால் அவரிடமிருந்து நான் பெற்ற அருள் மொழிகள்… அவர் உணர்த்திய உண்மைகள் எல்லாம் தியானத்தின் மூலம் அவரிடமும் ஞானகுருவிடமும் தொடர்பு கொண்டிருந்தாலும்
1.அவர் உணர்த்தும் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்
2.அவர் உபதேசித்த செயல் வடிவை என்னால் செயலில் காண முற்பட்டும் முன்னேறும் நிலை பெறவில்லை.

விளக்கம்:-
அவரிடம் தொடர்பு கொண்டவுடன்… என் எண்ணத்தில் “சகலத்தையும் அறியக்கூடிய உணர்வு எண்ணத் துடிப்புடன்” ஈஸ்வரபட்டரிடம் ஆசி கேட்டேன்.

உடனே தன் கையால் வாயை மூடிக் கொண்டார்…! எனக்கும் அவருக்கும் மத்தியில் மிகப் பெரிய நீளமான “திரைச் சீலை” ஓடியது.

திரைச் சிலைக்கு அப்பக்கம் மாமகரிஷி ஈஸ்வரபட்டரும் இந்தப் பக்கம் நானும் அமர்ந்துள்ள நிலையில் திரைச் சீலையின் இப்பக்கம் இருந்தே அவர் அமர்ந்திருப்பதுவும் பேசுவதும் கேட்கின்றது.

ஆனால் எனக்கும் அவருக்கும் மத்தியில் திரை…!

இந்தத் திரைக்குப் பொருள் என்ன…? என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

உடனே என் எண்ணத்தில் நான் இன்னும் பயந்த நிலையில் தான் இருக்கின்றேன்….! அவர் உணர்த்துவதை எடுத்துச் சொல்லும் பக்குவம் ஒன்று தான் உள்ளது. அவர் அருளும் ஞானத்தின் வழி செயல் அடைய முடியாததற்கு இந்தப் பயம் தான் திரையாக உள்ளதா…? என்று எண்ணியவுடன் தலையை மட்டும் அவர் ஆட்டுவதை உணர்ந்தேன்.

பிறகு தியானத்தில் ஒரு நொடிப் பொழுதில் என் நினைவு இவ்வுலகக் குடும்ப எண்ணங்களுடன் மோதுண்டது.
1.என் உறவினரில் ஒருவர் அறியாது பெருமை கொள்ளும் செயலின் எண்ணம் வந்தது
2.பிறகு பிறரிடம் நெருங்கிய அந்த உறவினரின் குறையை நான் எண்ணிப் பார்க்கும் பொழுது
3.இதை எப்படியும் குருநாதர் நிறைவுபடுத்தித் தந்து விடுவார்… என்ற எண்ண மோதலில்
4.குருவிடம் அப்பொழுது அதை எண்ணித் தியானிக்கவும் செய்தேன்.

இப்படி வரிசையாக எண்ணங்கள் சென்ற பின் இப்பொழுது உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை எதற்கென்று புரிந்ததா…? என்று குருநாதர் கேட்டார்.

உன் குடும்பச் சுழற்சியில் எந்த ஒரு நிலைக்கும்…
1.எண்ணத்தின் ஈர்ப்பை அவர்களிடம் செலுத்தி
2.அவர்களுடனே ஒன்றி
3.அவர்களுக்காக வேண்டுகிறாய்.

பந்தம் பாசம் அன்பு பரிவு அனைத்தும் வேண்டியது தான். “பற்றற்ற நிலை…” என்ற உபதேசத்தை என்னிடம் பெற்றவரும் நீ தான். ஆனால் உன் ஞானத்தால் பற்றற்ற நிலையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மற்ற உறவினர்களைக் காட்டிலும் இரத்தத் தொடர்புடைய சொந்தங்களின் ஈர்ப்பு அதிவிரைவில் நம்மை வந்து சாடும்.

தியானத்தால் நல்வழிப்பட்டு ஞானத்தின் பால் நீ செல்ல வேண்டிய நிலையில்… பந்த பாசங்களின் உணர்வு எண்ணத்தை உன்னுள் அவர்களின் நிலையையெல்லாம் ஏற்றிக் கொண்டே வருகின்றாய்.
1.அவர்களுக்காக அதே சுழற்சி வாழ்க்கையிலேயே இருந்து
2.அவ்வெண்ணத்துடன் உன் எண்ணத்தைக் கலக்கவிடுவதனால்
3.உன் ஞான வளர்ச்சியும் வளர முடியாது.

பந்தபாசங்களை எல்லாம் நீ ஒதுக்கிவிட்டு ஞான வழிக்கு வா…! என்று உணர்த்தவில்லை.

அவர்களிடம் உள்ள குறையையும் நிறையையும் உண் எண்ணத்துடன் நீ ஏற்றிக் கொள்ள வேண்டியதில்லை.
1.அவர்களின் நிலைக்காக அவர்கள் எண்ணச் செயல் மோதும் பொழுதெல்லாம்
2.அவர்களுக்கு நல் உணர்வு தா ஈஸ்வரா…
3.அவர்கள் நிலை உயரட்டும்…! என்ற எண்ணத்துடன் இறைசக்தியின் அலையைச் செலுத்த வேண்டும்.

ஆகவே
1.அவர்கள் உணர்வலையுடன் நீ கலக்காமல்
2.நீ பெற்ற நற்சக்தியின் அலையைக் கொண்டு அவர்கள் உயர
3.உன் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

பிறரின் எண்ணச் சுழற்சியில் “நீ சிக்காமல்…” உன் எண்ணச் சக்தியை இறை சக்தியின் செயலாக அவர்களிடம் செலுத்திவிடு…! என்று உபதேசம் அளித்தார் ஈஸ்வரபட்டர்.

இப்பொழுது தெரிகிறதா உனக்கும் எனக்கும் உள்ள திரை எதற்கென்று…? என்று மறுபடியும் வினா எழுப்பினார் குருநாதர்.

பூமி அடையப் போகும் நிலை – ஈஸ்வரபட்டர்

பூமி அடையப் போகும் நிலை – ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் ஒளி அலையின் தொடர்பின் பிம்ப நிலை கொண்டு சிவனாகவும் ஈர்ப்பு நிலை கொண்டு சக்தியாகவும் வளர்ப்பின் படைப்பைக் கொண்டு உருவான உலக சக்தியே சூரியனைக் காட்டிலும் சக்தி வாய்ந்த நிலை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய “சக்தி பூமி இது…!”

இக்கலியின் மாற்றத்திற்குப் பிறகு…
1.இப்பூமியில் இன்றுள்ள மனித ஆத்மாக்களின் நிலை மாறி உருவங்கள் மாறு கொண்டு
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் ஈர்ப்பு ஓட்ட சக்தி
3.சூரியனைக் காட்டிலும் துரிதம் கொள்ளக்கூடிய நிலை கொள்ளப் போகின்றது.

உருவத்திலே சூரியனை விடச் சிறியதாக இருக்கும் காலத்திலேயே இதன் ஈர்ப்பு சக்தியினால் இதன் ஓட்ட நிலை துரிதம் கொண்டு… இன்றெப்படி சூரியனைச் சுற்றி சூரிய குடும்பமாக சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலம் உள்ளதுவோ அதைப் போன்று “பூமியின் ஈர்ப்பில்…” சூரியனும் சுழலப் போகின்றது…!

சூரியனை மையம் கொண்டு இன்று சுழலும் நிலையே பூமியை மையம் கொண்டு சுழலக்கூடிய நிலை உருவாகப் போகின்றது.

உயர் படைப்பின் படைப்பில் பலவுண்டு…!

1.அப்படைப்பிலேயே வளர்ச்சி கொள்ளும் நிலை கொண்டு
2.படைப்பின் படைப்பைக் காட்டிலும் உயர் படைப்பாவது தான் சக்தி நிலையே அன்றி
3.படைப்பின் குறுகும் நிலையல்ல உயர் சக்தியின் நிலை.

இப்பூமியில் ஞானத்தின் சக்தி கொண்ட மனிதக்கரு வளர்ந்துய்யும் நிலை கொண்டு… சக்தியின் நிலையினால் மனிதனின் ஞான வலுவால் ஆத்ம பலம் கொள்ளும் நிலை பெற்ற நம்மைப் படைத்த அவ்வாதி சக்தியின் படைப்பின் வலுக் கொண்ட சப்தரிஷிகளின் படைப்புடன் மனித ஆத்மாவின் ஆத்ம ஞான வளர்ச்சியினால் பூமியின் நிலை வளர்ந்தது.

பூமியின் ஈர்ப்புச் சுற்றலின் ஓட்டம் துரிதம் கொண்டு சுழலும் தன்மையில் பூமியின் ஈர்ப்புடன் வாழக்கூடிய சக்தி நிலை மனித உரு நிலைக்கு ஒப்பாமலும்
1.பூமியை மையம் கொண்டு சுழலும் பூமியின் ஈர்ப்புக்கு வரும் பிறிதொரு மண்டலத்தில் (சந்திரன்)
2.மனிதக் கரு உருவம் வளரக்கூடிய நிலைக்கு இன்றெடுக்கும் ஆத்ம சக்தியின் பலத்தால் “மனித இனம் வளரும்…!”

நொடிக்கு நொடி மாறிக் கொண்டே சுழல்கின்ற அனைத்து நிலைகளிலும் இன்றுள்ள மனித ஆத்ம பிம்ப நிலைக்கொப்ப உருவம் தான் இருக்குமா…! என்றால் அதுவுமில்லை.

1.ஒன்றை ஒத்த நிலையில்… ஒன்றிலிருந்து மாறுபடும் உணர்வின் எண்ணமானது
2.ஆவி நிலை கொண்டு மீண்டும் மீண்டும் ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிப் பிம்பமாகும் தருணத்தில்
3.எந்த ஒரு குண அமிலத் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையில் கனி வளங்களின் ஆரம்பக் குண அமில வளர்ப்பில் வளர்ந்த தாவரங்களின் வளர்ச்சி நிலையில் மனிதக் கரு வளர்ச்சியும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் பூமியின் அமிலப் படைப்புக்கந்த இன வளர்ச்சியின் நிலைத் தொடரே பெற்றோம்.

நம் பூமியின் தாதுப் பொருட்களில் அதிகமாக உள்ளது எது…? இரும்பு தான் மற்ற தாதுப் பொருட்களைக் காட்டிலும் இப்பூமியில் அதிகம்.

ஆனால் இப்பூமியின் ஈர்ப்பு சுழன்று வேகம் அதிகம் கொள்ளும் நிலையில்… பூமியின் ஈர்ப்புச் சுழற்சி துரித ஓட்டத்தினால்… பூமி இழுத்து வெளிக்கக்கும் சுவாச அலையினால்… பூமியின் ஈர்ப்பிற்கு மற்ற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய அமில குணத்தின் நிலையைக் கொண்டு…
1.இன்று இரும்பையே அதிகமாகக் கொண்டுள்ள இப்பூமியின் கனி வளத்தன்மையே
2.இரும்பு உள்ள நிலைக்கொப்ப தங்கம் வளரப் போகிறது… இது உண்மை..!
3.சூரியனின் நிலத் தன்மையில் தங்கத்தைக் காட்டிலும் சக்தி கொண்ட தாதுப் பொருள் உண்டு.

இரும்பைக் காட்டிலும் தங்கத்தின் குணம் உயர்ந்ததா…? இரும்பைக் காட்டிலும் தங்கம் எத்தன்மைக்கும் இளகி வரும் குண நிலை கொண்டது. தங்கத்தை நுண்ணிய இழைகளாகவும் உருவாக்க முடியும்.

இரும்பை அதி உஷ்ணப்படுத்தித்தான் அதற்கு உருவங்கள் அமைக்க முடியும். மிகவும் உறுதி கொண்ட திடப்பொருள் இரும்பு. ஆனால் இளகும் தாதுப் பொருள் தங்கம்.

இன்று பூமியின் இரும்பின் குண அமிலம் நிறைந்த தாதுப் பொருள் உள்ள நிலைக்கொப்ப இப்பூமியில் வளரும் ஜீவன்களின் அமில வளர்ச்சியும் அதன் குணத்திற்கொப்ப இருக்கிறது.

இன்று ஓடும் பூமியின் சுழற்சி ஓட்டத்தின் வேகம் கொள்ளும் நிலைக்கொப்ப பூமியின் தாதுப் பொருட்களின் நிலையும் மாறுகொள்ளும்.

இரும்பெல்லாம் தங்கமாகும் நிலை உருவாகப் போகிறது. இப்பூமியில் இனி வரப் போகும் கல்கி காலத்தில் எல்லா நிலைகளும் ஒவ்வொரு நொடிக்கும் மாறிக் கொண்டு தான் உள்ளன.

1.ஆவி பிம்பமாகி..
2.பிம்பம் ஆவியாகிச் சுழலும் நிலைக்கொப்ப “உருண்டு வளரும் நாம்”
3.சுழற்சியுடன் ஒன்றிய எண்ணத்தின் வழித் தொடரில் இருந்தோமானால்
4.சுழற்சியுடன் சுழன்று கொண்டே ஆவியாகிப் பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் அதே சுழற்சியிலிருந்து பிம்பமான
5.பல கோடி கோடி ஆண்டுகளுக்குப் பலவற்றையும் வளர்க்கும் படைப்பாண்டவன் ஆகலாம்… (எதன் வழியில்..?)
6.இவ்வெண்ணத்தை ஞானமாக்கி… “ஞானத்தால் ஜீவ ஆத்ம பலம் உய்யும் வழித் தொடர் கொண்டு…!”

ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரே நாளில் பெய்யக் காரணம் என்ன…?

ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரே நாளில் பெய்யக் காரணம் என்ன…?

 

ஆடி மாதக் காலங்களில் காற்று அதிகமாக அடிக்கிறது. காரணம்…
1.வறட்சியாக இருக்கும் பொழுது மனிதர்கள் நாம் நீரைத் தேடி அலைவது போல
2.முதலில் வெப்பத்தால் ஆன அணுக்கள் மேகம் ஆகும் பொழுது
3.சனிக்கோள் உமிழ்த்திய நிலைகள் வந்தவுடனே பெரும் ஆவி மண்டலமாக மாறும்.

நாம் அடுப்பில் பொருளை வைத்து வேக வைத்தால் எப்படி ஒவ்வொரு அணுக்களிலும் பட்டுப் புயல் போல (கொதிப்பாகி) மாறுகிறதோ அது போல் தான் பூமியில் காற்றலைகள் அதிகமாக வரும்…!

அதைத் தான் ஆடிப்பெருக்கு…! என்று சொல்வது.

ஒவ்வொன்றும் அசைந்து ஒவ்வொன்றுடன் இசைந்து இதனின் நிலைகள் மேகமாக மாறி ஆடி மாதம் மேகங்களாகக் கூடி மழை பெய்யும் நிலையாக வருகிறது.

அதாவது வெயில் காலம் முடிந்து மழைக்காக வேண்டி காய்ந்து கருவாடான நிலையில் அந்த வெப்பத்தின் தன்மை பூமிக்குள் அதிகமாகி அதில் இருக்கும் நீர் எல்லாம் ஆவியாக மாறி விண்ணைச் சென்றடைகின்றது.

மேலே மேகங்களாகச் சென்றடையப் படும்போது இன்றைய விஞ்ஞான உலகில் வெளிப்படுத்தும்
1.லேசர் ஒளிக் கற்றைகளும்
2.ரேடியோ அலைகளும் டிவி அலைகளும்
3.எலக்ட்ரானிக் அலைகளும் அதிக அளவில் பரவி அந்த அலைகளும் அதனுடன் கலக்கின்றது.
4.கலந்தபின் எதிர்நிலையாகி நஞ்சின் தன்மை அடைந்து மேகங்கள் நீராக வடியும் தன்மை குறைகின்றது.

ஆனால் அதே சமயத்தில் விஞ்ஞானத்தின் வீரிய அலைகள் கலந்தவுடனே நீர் மேகங்கள் அனைத்தும் ஒரு பக்கம் அஞ்சி ஒதுங்குகிறது.

இப்படி மற்ற பக்கம் ஒதுங்கினாலும்
1.இந்த நிலைகள் ஒன்றுக்கொன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று உராய்ந்து
2.அங்கே மழை கொட்டு கொட்டென்று கொட்டி கடும் சேதத்தை விளைவித்து
3.யாருக்கும் பயனற்றதாகப் பெய்து நாட்டைக் கெடுக்கின்றது.

பெரும்பகுதி இன்று உலகெங்கிலும் இதைப் பார்க்கலாம். மழை பெய்து ஒரு பக்கம் கெடும். இன்னொரு பக்கம் இந்த உணர்வலைகள் பட்டு மழையே சுத்தமாக இல்லாது கடும் வறட்சியாக இருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் விஞ்ஞான அறிவு பல வகையிலும் வளர்ச்சிக்கு வந்தாலும் அதனால் இத்தகைய கடுமையான விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

இது மட்டுமல்ல…! இன்று வாழும் மனிதர்களும் தன் வேக நிலைகள் கொண்டு வேலைக்கோ மற்ற அலுவல் காரணமாக வெளியிலே செல்கிறனர். வெண்மையான ஆடைகளையும் உடுத்திச் செல்கிறனர்.

அப்போது இரண்டு மழைத்துளி விழுந்து விட்டால் போதும்…
1.சனியன்… தொலைந்துபோன மழை இந்த நேரத்துக்கிறாக வரவேண்டும் என்று திட்டத் தொடங்குகின்றனர்.
2.தொலைந்து போகும் மழை என்ற உணர்வைத் தான் நமக்குள் படைத்து அதையே வெளிப்படுத்துகின்றோம்.

பூமியில் உருப்பெற்ற உருக்களிலே மனிதனின் எண்ணம் மிகவும் ஆற்றல் கொண்டது.

1.மழையைத் திட்டிய உணர்வுகள் விஷ வித்துக்களாக மாறி
2.இந்த உணர்வுகள் சிறுகச் சிறுகக் கூடி மழையைப் பொய்த்துப் போகும்படி செய்கிறது.

அல்லது அனைவருக்கும் பலனில்லாது கொட்டு கொட்டு என்று ஊரையே நாசமாக்கும் தன்மையாகப் பெய்கிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் ஞானிகள் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடிக்க வேண்டும். நம் பேச்சால் மூச்சால் பார்வையால் உலகைக் காக்கும் சக்தியாக நாம் வளர வேண்டும்.