தாமரை மலர்

தாமரை மலர்

 

பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.

1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.முன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.

(வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பலவிதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்)

அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது. அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.

அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானு கோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.

அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது. (இந்தத் தொடர் காலம் காலமாக நடக்கின்றது)

நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.

அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூல சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.

நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.

சரீரம் என்ற குகைக்குள்… உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம் சக்தியாகச் செயல் கொள்வது என்பது சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.

அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.

பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…? சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.

ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும் பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும் பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”

தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.

அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.

இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால்
1.வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் (நிறம் குணம் அமிலம்) நறுமணமாக
2.அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

விண்ணுக்குச் செல்லும் “உந்து விசை”

விண்ணுக்குச் செல்லும் “உந்து விசை”

 

உந்து விசை கொண்டு புவியின் ஈர்ப்பைக் கடந்து இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றனர். புவியில் விளைந்த எரிபொருளின் துணை கொண்டு அதை இயந்திரத்தில் அடக்கி அழுத்தத்தால் உந்தி விண்வெளியில் வீசுகின்றனர்.

இராக்கெட்டை விண்ணிலே பறக்கும்படி செய்து. விண்ணிலிருக்கும் பல நிலைகளை எளிதில் கவர்ந்து அதை அறிகின்றனர். உடல் வாழ்க்கைக்காக (சுகத்திற்காக) விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.

மெய் ஞானிகளோ விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதனின் வலு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆனார்கள்
1.ஆதியில் அகஸ்தியன் இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்தாலும் தன் அருகில் உள்ள சீடர்களுக்கு இதனை உபதேசித்தருளி
2.அதனின் நினைவு கொண்டு நீங்கள் உடலை விட்டு அகலும் போது “உந்து விசையால்… என்னை உந்தித் தள்ளுங்கள்…!” என்றான்
3.முதல் முதலிலே அகஸ்தியன் அவ்வாறு விண்ணுலகம் சென்றான்.
4.அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் விண்ணுலகில் ஏழாவது அறிவாக அவரின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக விளைந்தார்கள்.

அக்காலங்களில் எழுத்தறிவு இல்லாததால் “உடலில் விளைய வைத்த உணர்வின் தன்மை கொண்டு பிறருக்குள் பதிவு செய்து…” அந்தப் பதிவின் நினைவின் ஆற்றலால் அவர்கள் வாழ்க்கையை இயக்கி… அவ்வாறு ஆரம்ப நிலையில் வளர்ந்தவர்கள் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

பிற்காலங்களில் மனிதனின் அறிவின் ஞானம் வளர… மனிதனின் உடலுக்கு இச்சைகள் சேர… இதுவே சொர்க்கம் என்ற நிலையில் அரசர்கள் சென்று விட்டார்கள்.

அரசனும் சரி… அவன் காட்டிய வழியில் சிக்கியவர்களும் சரி… அனைவரும் விண் செல்லாது அவர்கள் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் பேயாகச் சுழன்று… பேயின் உணர்வு கொண்டு தாக்கும் நிலைகளும்… பின் மிருக நிலைகளுக்கே சென்றனர். அரசன் வழியில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் காட்டிய அருள் வழியினை உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம் (ஞானகுரு).
1.அருள் வழியில் உங்கள் உணர்வுகளை உந்தச் செய்து… உணர்ச்சிகளைச் தூண்டும்படி செய்து
2.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நினைவு கொண்டு உங்களைத் தியானிக்கும்படி சொல்கிறோம்.

ஆகவே வேகா நிலை பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வினை நமக்குள் வினையாகச் சேர்த்து அதை நாயகனாக ஆக்க வேண்டும்.

வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகள் நம்மைச் சாடுகின்றதோ அத்தருணத்தில் “ஈஸ்வரா…” என்று அந்த மகரிஷிகளை எண்ணி அந்தச் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று உள் செலுத்தி நாம் கேட்டறிந்த தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் தீமை செய்தவர்களுக்கும்… அதிலிருந்து அவரை மீட்டிட மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் பாய்ச்ச வேண்டும்.

இது தான் அன்றைய மகரிஷிகள் செய்த நிலைகள். அதனை நீங்கள் அனைவரும் பற்றிட முடியும் சாதாரண மக்களும் விண்ணின் ஆற்றலைப் பெரும் வண்ணம் தான் எளிதாகக் கொடுத்துள்ளார்கள் நமது தத்துவ ஞானிகள்.

“உயிரை ஒட்டி” நம் ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்

“உயிரை ஒட்டி” நம் ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்

 

பூரண நிலவாக இருக்கப்படும் போது சந்திரன் முழுமையான வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. காரணம் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை எந்தக் கோளும் இடைமறிப்பதில்லை…. நேரடியாகச் சந்திரனுக்கு வருகின்றது.

பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசிக்கின்றது. இருந்தாலும் அடுத்த நாளை எடுத்துக் கொண்டால் மற்ற கோள்கள் இடைமறிக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக பதினைந்து நாட்களில் தேய்பிறையாக மாறிவிடுகின்றது அதனுடைய ஒளி மங்கிக் கொண்டே வருகின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடிய அந்த ஒளிக்கதிர்களை மற்ற கோள்கள் தடைப்படுத்துவதனால் இருளடைந்து அதனுடைய முடிவுக்கு வருகின்றது… முழுமையாக மறைந்து விட்டால் அமாவாசை.

அதே போல் அது சமயம்
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை மறு பிரதி பிம்பமாக (கண்ணாடி போல்) வெளிப்படுத்தும் சக்தி
2.சந்திரனிலிருந்து வருவது நம் பூமிக்கும் கிடைப்பது தடைப்படுகின்றது.
(பௌர்ணமி முழுமையாக இருந்தால் பூமியில் இரவிலும் அந்த வெளிச்சம் தெரியும்)

ஆனால்
1.அமாவாசைக்குப் பின் வெள்ளிக் கோள் அதன் அருகில் வந்து ஒளிக்ற்றைகளை எடுத்துக் கொடுக்கின்றது
2.சிறுகச் சிறுக சூரியனின் ஒளியைப் பெறப் பெற… சந்திரன் மறுபடியும் பூரண நிலவாக “பௌர்ணமியாக” வருகின்றது.

உயிரணு தோன்றி எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்று நம்மை மனிதனாக உருவாக்கியது நமது உயிர். முழு நிலா எப்படி இருக்கின்றதோ இதைப் போல்
1.மனிதன் இயன்றவரை அனைத்து நிலைகளையும் அறிந்து…
2.தீமைகளை அகற்றி வாழக்கூடிய உணர்வின் உணர்ச்சிகளை எழுப்பும் மனித உடலாக அமைக்கின்றது நமது உயிர்.

இப்படித் தெரிந்து கொள்ளும் சக்தியைக் கார்த்திகேயா என்று காட்டுகின்றார்கள். அதாவது நமது ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

மனித வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிந்து கொண்டு பிறிதொரு மனிதர்களைப் பார்க்கின்றோம். ஒருவன் அவனுக்கு ஆகாதவனை வெறுத்துக் கோபமாகப் பேசுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவனின் சிந்திக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.

கோபமாக நிந்தித்துக் கொண்டிருக்கும் அந்தச் செயலினை நாம் பார்த்தால்…
1.நமக்குள்ளும் கோபத்தின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
2.சிந்திக்கும் தன்மை இழந்து நிந்திக்கும் உணர்வு நமக்குள்ளும் வந்து விடுகின்றது.

மனிதனாக வருவதற்கு முன் புழுவிலிருந்து எத்தனையோ கோடி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சி பெற்ற நிலையில்
1.தன்னைக் காட்டிலும் வலிமையான உயிரினங்களிடம் சிக்கி
2.அது துன்புறுத்தி உணவாக உட்கொள்ளும் போது அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில்
3.உணவுக்காக அந்த மிருகம் இதைக் கொன்று தசைகளைத் தின்றாலும்
4.அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுகள் வலுவாகி
5.இந்த உயிரான்மா அந்த உடலுக்குள் சென்று அதனுடைய உணர்வை எடுத்து அதே உடலாக மாறுகின்றது.
6.அதனுடைய குட்டியாகும் போது அது இதைப் பாதுகாக்கிறது.

இதே மாதிரி ஒவ்வொரு உடலிலும் “தான் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வைச் சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… நம்மை மனிதனாக உருவாக்கிய “உயிரான ஈசனை நாம் மதித்து நடக்க வேண்டும்…”

வீட்டை அழகாகக் கட்டி வைத்திருந்தாலும் எப்படியும் அதில் தூசிகள் படுகின்றது… நூலாம்படைகளும் வருகிறது. அதை எல்லாம் துடைக்கத் தவறினால் தூசிகள் அதிகமாகி நெடி வந்துவிடும்.

அந்த வீட்டில் அடுத்து நாம் அமர முடியாது… குடியிருக்க முடியாது

அது போல் பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ தீமைகளைச் சந்தித்திருந்தாலும் அதை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய உடல் அமைப்பைக் கொடுத்தது நமது உயிர்.

சிந்தித்துச் செயல்படும் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்றி இந்த உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள் தான் மனிதர்களான நாம்.

உடல் என்பது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடல் ஒரு ஆலயம்… இது ஒரு கோட்டை.

ஆறாவது அறிவைக் கொண்டு தூய்மையான உணர்வுகளை இந்த உடலுக்குள் பெருக்கி… உயிருடன் ஒன்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடையும் பருவம் பெற்றது…
1.இதே உயிர் தான்…! அவனை ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி
2.வாழ்க்கையில் வரும் தீமைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தவறினால் அழுக்குகள் அடைந்து ஒவ்வொரு குணமும் பாழ்பட்டுவிடும்..

எப்படிப் பூரண நிலா கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து முழுவதுமாக இருள் அடைவது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருளடைந்து… உயிர் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு வெளியே சென்றுவிடும்.

வெளியில் சென்றாலும் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்ட மிருக இனங்களாகத்தான் அடுத்துப் பிறக்க வேண்டி வரும். மனிதனல்லாத உருவாகத் தான் பிறக்க நேரும்.

அதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான் தீமைகள் உங்களுக்குள் வரும் பொழுதெல்லாம்
1.வெள்ளிக் கோள் தன் ஒளிக்கற்றைகளால் சந்திரனுக்கு (அமாவசைக்குப் பின்) ஜீவன் ஊட்டியது போல்
2.அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
3.அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகப் பெருக இருளகன்று என்றுமே ஒளியின் அறிவாக நிலைத்திருக்க முடியும்.

“வாயு ஸ்தம்பம்…”

“வாயு ஸ்தம்பம்…”

 

உயிரான்மத் தத்துவத்தில் சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான்
1.“உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் “மேலிருந்து கீழுமாக… கீழிருந்து மேலுமாக…”
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!

இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”

அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.

தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.

உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.

1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.

உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.

விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?

அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?

நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!

அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.

நீல வண்ண குணத் தன்மை

நீல வண்ண குணத் தன்மை

 

போகம் என்பது உடலியலில் அனுபவித்தல் என்று பொருள்படும்.

உயிரணுக்கள் உயிரின் செயலுக்கு உணர்வுகளின் வழி அனுபவிக்கும் செயல் போகம் சிற்றின்ப போகம் என்றும்… பேரின்ப போகம் என்றும் வழி அமைத்து
1.சிற்றின்ப போகம் சந்ததியின் வளர்ச்சிக்காக மட்டும் என்றும்
2.அந்த வளர்ப்புப் பெற்று விட்டால் மனிதன் பேரின்பப் போகமாக்கும் தன்மைகளை வகைப்படுத்தி
3.உணர்வுகளின் சஞ்சலம் மாற்றியமைத்துப் பெறும் பேறே பேரின்ப போகம் என்று அறிந்ததே “போகநாதர் சொன்ன போகமாகும்…!”

நாம் எடுக்கும் தியானத்தின் பலத்தால் காயகல்ப நிலைக்கு உட்படுத்தித் தெய்வீக சக்திக்கு வழியமைத்து உயிரான்மா உயர்ந்த சக்தி பெறும் மார்க்கத்தைப் போகர் உணர்ந்தார்.

வானிலே சுழன்று கொண்டிருக்கும் விண்மீன்களின் அமில சக்திகளையும் நவக்கோள்கள் என்ற நவபாஷாண சக்திகளையும் நம் உயிராத்மா பெறுவதற்காக முருகன் சிலையை நிர்மாணித்தார்.

வானுலக ஆற்றலை… அந்த அமுதத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் யார் யார் எல்லாம் “முருகா…” என்ற ஏக்கத்தில் வருகின்றார்களோ அந்த ஆன்மாக்களையும் தன்னுடைய ஈர்ப்பிலே வளர்ச்சிப்படுத்தி
1.புவியியல் தன்மையை வானியல் படுத்தி போகர் “போகமாமகரிஷி” ஆனார்.
2.பேரின்பப் போகமாகிய ஆனந்தப் பரவச பேரானந்தச் சூட்சம நிலை பெற வழி அமைத்தார்.
3.போகமாமகரிஷியின் அருளாசி வேண்டி வணங்குகின்றேன் ஈஸ்வரா…!

உயிரான்மாவின் தத்துவத்தில் உயிர் சக்தியின் தொடர்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து கீழுமாகவும் கீழிருந்து மேலுமாகவும் ஓடிடும் அமைப்பு உள்ளது.

உயிரணுக்கள் சரீரம் பெற்ற பின்பு உயிரோட்ட ஒளி சக்தி மனிதச் சரீரத்தில் மேலிருந்து கீழுமாக ஓடிடும் நிலையில் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சுழலச் செய்யும் செயலினால்
1.ஞான விழிப்பார்வை கொண்டு உற்று நோக்கினால்
2.”ஆத்ம லிங்கம்…!” என்ற ஆத்மா புலப்படும். அதுவே “சிவஸ்வரூபம்…!”

விழி படம் எடுத்து நாசியின் சுவாசம் கொண்டு எண்ணத்தின் பிடர்தலில் (மெய் ஞானிகளின் வழியில்) அறிந்திடும் தொடரில் அறியும் செயலுக்கு நாம் வளர வேண்டும்.

ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?

1.எண்ணம்… சொல்… செயல்…! மூன்றிலும் நேர்கோடாகக் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு வர வேண்டும்.
2.தீவினையான எண்ணங்களை விடுத்துப் பரிசுத்தம் என்ற நிலையில் நல் வினைகளை வளர்க்கும்
3.திடமான – வைராக்கியச் சிந்தனை கொண்டிட்டால் அகத்தின் பொருளை நிச்சயம் அறியலாம்.

அகத்தினை அறிந்திடும் அருள் வழியில் தன்னுடைய சிந்தனையை வீரியமாக்கி…
1.நற்செயலுக்கு வழி அமைத்து…
2.அதைச் சொல்லால் வெளிப்படுத்தும் அன்பிலும்
3.அந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறைப் பண்பிலும்
4.நிகழ்த்தும் செயலை எவன் ஒருவன் கைக் கொள்கின்றானோ
5.அவன் பரம்பொருள் என்ற சூட்சமத்தில் கலந்திடும் தகுதி பெறுகின்றான்.

நிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.

அதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.

ஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது
1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று
2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.
3.மூல சக்தி செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் உணர்ந்து அறிதலே சிறப்பு.
4.அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…!”

முன்னோர்களின் ஆன்மாக்களை “மிருக உடலின் ஈர்ப்புக்குள்” நாம் செல்ல விடக்கூடாது

முன்னோர்களின் ஆன்மாக்களை “மிருக உடலின் ஈர்ப்புக்குள்” நாம் செல்ல விடக்கூடாது

 

சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் நாம் தியானித்து இந்த உடலில் வலுப்பெற்ற பின்
1.எந்த மூதாதைகளின் குல உணர்வுகள் நமக்குள் இருக்கின்றதோ
2.உடலை விட்டு பிரிந்து சென்ற அந்தச் சூட்சம சரீரம் ஆனவர்களை உந்தித் தள்ளி
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றி உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து எப்படி ஒளியின் சரீரம் ஆனார்களோ… அதே போன்று மூதாதையர்களை அங்கு அனுப்பப்படும் பொழுது அந்த உயிராத்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்வதும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாறி வாழத் தொடங்கும்.

விண்ணிலே அந்த உயிரான்மாக்களைச் செலுத்தப்படும் பொழுது அவர்கள் உணர்வின் அறிவே நமக்குள் உண்டு. நாம் எண்ணும் போதெல்லாம் அந்த விண்ணின் ஆற்றலை எளிதில் பெற்று… வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்றிக் கொள்ள முடியும்.

முதலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாக்கி அதன் துணை கொண்டு மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

நம் முன்னோர்கள் எத்தனையோ துயரப்பட்டுத் தான் நம்மை வளர்த்தார்கள். அவர்களின் உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்கப்படும் பொழுது உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றார்கள்… வேகாநிலை…!

உணற்வின் தன்மைகள் சாகாக்கலையாக இயக்கினால் அந்த விஷத்திற்குத்தக்க மீண்டும் உடலை அமைத்துவிடும். ஆகவே இதை மாற்றி விண் செலுத்த வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் மூதாதையர்களைச் செலுத்தவும்… ஞானிகள் உணர்வுகளை வலுவாக்கி… தியானத்தின் வலுவின் துணையால்
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை
2.நம் பூமியின் துருவத்தின் எல்லை ஓரத்தில் இருந்து சுழன்று கொண்டிருக்கும்
3.துருவ நட்சத்திரத்துடன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய ஏதுவாக இருக்கும்.

அதன் வழியில் இணைத்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. அவர்களும் சப்தரிஷிகளாக ஆகிவிடுகின்றார்கள்.

அவர் உயிர் பெற்று உணர்வின் தன்மை உடல் பெற்ற பின் அவர்களும் உயிருடன் ஒன்றிய உணர்வு ஒளியாக்கப்படும் பொழுது இந்த உணர்வினை நாம் எளிதில் பெற்று வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்ற முடியும்.

அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டத்தான் இதிலே பல அனுபவங்களையும்…
1.உயிரான்மாக்களை எப்படி விண் செலுத்துவது…? என்று அனுபவ ரீதியிலே கொண்டு வந்ததனால்
2.உங்களில் இந்த உணர்வைக் கூட்டி… “ஆயிரக்கணக்கோர் இந்த உணர்வுடன் துணை கொள்ளும் பொழுது” எளிதில் விண் செலுத்த முடியும்.

ஆனால் இதற்கு முன் அதைச் செய்யத் தவறிவிட்டோம் இப்பொழுது இங்கே சொல்லும் முறைப்படி முன்னோர்களை விண் செலுத்தலாம்.

1.இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அங்கே ஆவியாகத்தான் இருக்கும்
2.அந்த உடல் மடிந்த பின் அந்த உடலைக் கடந்து வெளியே வந்தால் மிருக உடலைப் பெற்று விடும்
3.மிருக உடல் பெற்றால் அவர்களை நாம் யாரும் மாற்ற முடியாது.

ஒரு உடலுக்குள் ஆவியின் நிலையாக இருக்கும் போது நாம் விண் செலுத்துவதற்காகப் பாய்ச்சும் உணர்வுகள் அவர்கள் சுவாசிக்கும் உணர்வுடன் கலக்கின்றது. (ஏனென்றால் சுவாசத்தில் கலந்து தான் அந்த ஆவியின் இயக்கமும் வருகிறது).

சுவாசித்த உணர்வு அவர்களுக்குள் செல்லப்படும் பொழுது இன்னொரு உடலுக்குள் ஆவியாக இருக்கும் முன்னோரின் ஆத்மாவிற்குள் இது சேர்க்கப்பட்டு உடல் பெறும் உணர்வை மாற்றி அமைக்கும் அமைப்புகள் வருகின்றது.

1.இப்படி அமைத்த பின் உடலை விட்டு அந்த ஆன்மா வெளியே வந்தால்
2.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தினுடைய வலுவை நாம் சேர்த்துக் கொண்டு
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்தினால்
4.அந்த ஆன்மாக்களை நாம் எளிதில் பிறவி இல்லா நிலை அடையச் செய்ய முடியும் (மிருக உடல் பெறுவதை மாற்றி அமைக்க முடியும்).

ஆனால் செய்யத் தவறினால் என்ன ஆகும்…?

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பட்ட துயரமும் அவருடைய உணர்வின் எண்ணங்களும் நமக்குள் பதிவாகி இருக்கும். அவருடைய நினைவாற்றலும் நமக்கு அடிக்கடி வரும்… அவர் வாழ்ந்த காலத்தையும் நாம் எண்ணுவோம்.

1.அப்போது அவர் பட்ட வேதனை நமக்குள் உருவாகும்… பரம்பரை நோயாக உருவாகி விடும்.
2.நமக்குப் பின் வரும் சந்ததிகளுக்கும் இதே உணர்வு வந்துவிடும்.
3.ஆக… குல வழியில் ஒரு பக்கம் கெட்டது என்றால் அந்த கெட்ட உணர்வின் தன்மையே நமக்குள் வளர்த்து விடும்

இது போன்ற நிலையில் இருந்து எல்லாம் விடுபடுவதற்கு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மூதாதையர்களை விண் செலுத்த முயற்சி எடுங்கள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தோறும் அதற்காகத்தான் இதை உபதேசிக்கப்பட்டு எல்லோருடைய உணர்வுகளையும் அங்கே குவிக்கச் செய்து உங்களுக்குள் வலு சேர்க்கின்றோம்.

அந்த உணர்வினைக் கொண்டு தியானித்து சப்தரிஷி மண்டல உணர்வுகளை ஏங்கிப் பெற்று “முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்…”

துருவ நட்சத்திரத்தின் பற்றை அதிகரித்துப் புவியின் பற்றைத் தகர்க்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பற்றை அதிகரித்துப் புவியின் பற்றைத் தகர்க்க வேண்டும்

 

நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காதபடி தடுக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை துரிதமாக எடுத்து உடலுக்குள் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்க உதவும்.

இதை எல்லாம் அதிகாலையில் நாம் அதிகமாகப் பெருக்கி வர வேண்டும்
1.அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் அதிகரிக்கிறது.
2.இந்தப் புவியின் பற்றை நாம் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது.

இந்த உயிர் உடலில் சேர்த்த தீமையின் உணர்வுகளை… துருவ நட்சத்திரத்தின் அருகில் இந்தத் தீமைகள் செல்லப்படும் பொழுது
1.உடலில் பெற்ற தீமையின் உணர்வுகளைக் கருக்கிவிட்டு இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது
2.எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அது மாற்றி விடுகின்றது.

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக உட்கொண்டாலும்… அந்த விஷம் அதற்குள் மீண்டும் சேமிக்கப்பட்டு நாகரத்தினமாக மாறுகின்றது.

அது போல் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க… நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

மிருகங்கள் தான் வாழ தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது அந்த உணர்வை வளர்த்து… அந்த உடலுக்குப் பின் மாற்று உடலாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.

மனிதரான நாம் அன்பும் பரிவும் கொண்டிருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் வலிமை மிக சக்தி வாய்ந்தது… விஷம் கலந்தது.

அதை நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது… பின் அந்த நல்ல குணங்களையும் வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அந்த அணுக்கள் மடியத் தொடங்கும்… உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.

குறைந்த உணர்வின் தன்மை இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது உயிர் உடலை விட்டுச் செல்லும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும்.

ஆனால்
1.அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலை விட்டுச் செல்லும் ஆன்மா
2.எதன் வலுக் கொண்டதோ அதன் அருகில் அழைத்துச் செல்லும்.
3.அங்கே வெளிப்படும் தீமைகளைக் கருக்கிடும் உணர்வுகள் பட்ட பின்
4.இந்த மனித வாழ்க்கையில் நம் ஆன்மாவில் பட்ட தீமைகளைக் கருக்கி விட்டு
5.உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… பேரருள் பேரொளியாக அழியாத ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.

இந்த உயிர் தோன்றி மனிதனாக ஆன பின் தான் உயிர் முழுமை அடைகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றது. ஆகவே
1,நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
2.அந்த மகரிஷிகள் பெற்ற அழியா ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.

வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்று நீங்கள் வாழப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய “கைம்மாறு”

 

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய “கைம்மாறு”

 

குடும்பத்தில் யாராவது உடலை விட்டுப் பிரிந்தால்… எனக்கு எல்லா உதவியும் செய்தார்… திடீரென்று போய்விட்டாரே…! என்று ரொம்பப் பாசத்துடன் எண்ணுகிறோம்.

என்னைக் காப்பாற்றினார்… எவ்வளவோ பணம் கொடுத்தார்… என்றெல்லாம் சொல்கின்றோம். சாகப் போகும் போது எனக்கு எவ்வளவு உதவி செய்தார்…? அவர் எத்தனையோ நேரத்தில் என்னை பக்குவப்படுத்தினார் இப்படி விட்டு விட்டுப் போய்விட்டாரே…! என்று வேதனையாக எண்ணுகிறோம்.

அந்த வேதனை கலந்த உணர்வுடன் எண்ணும் போது அவர் உடலில் விளைந்தது நமக்குள் உண்டு… உதவி செய்ததும் உண்டு…! வேதனைப்பட்டதும் உண்டு.

எல்லோருக்கும் உதவி செய்தார் என்று சொன்னாலும்…
1.கடைசியில் அவர் பட்ட கஷ்டத்தை எல்லாம் வாங்கி
2.மூட்டையைக் கட்டி நமக்குள்ளும் நோயாக மாற்றுகின்றோம்.

உடலுடன் இருக்கும் போது நன்மை செய்தார். எல்லோருடைய உணர்வையும் கேட்டு அந்த உடலில் நோயாக மாறியது… உடலை விட்டுப் பிரிகின்றார்.

பிரிந்த பின்… எனக்குப் பக்குவம் செய்தாயே இப்படி எல்லாம் விட்டு விட்டுச் செல்கின்றாயே…! பார்த்தால் மண்ணிலே விழுந்து புரள்வார்கள். அத்தகைய வேதனை உணர்வுகள் நுகர்ந்து கொண்ட பின் நமக்கும் அந்த நோய் வருகிறது.

அவர் உதவி செய்தார்…. ஆனால் விட்டு விட்டுப் போய்விட்டார்… என்று பாசமாக எண்ணப்படும் போது
1.அந்த ஆன்மாவைச் சும்மா விடுவதும் இல்லை.
2.அந்த ஆன்மாவை இழுத்து என்னுடனே வந்துவிடு… என் கஷ்டத்தை எல்லாம் நீயும் அனுபவி…! என்ற நிலையாகிவிடும்.

ஏப்படி…? அந்த ஆன்மா இங்கே வந்த பிற்பாடு என்ன செய்யும்…?

சில உடல்களில் ஆவிகள் வந்த பின் படுகின்ற அவஸ்தையைப் பார்க்கலாம். அதனுடைய உணர்வின் தன்மை உணர்த்தி உடலையும் பாழாக்கி… விஷத்தின் தன்மை இந்த உயிருக்குள் இருக்கும் அணுவிற்குள் சேர்ந்த பின்… அந்த ஆவி இந்த உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன ஆகும்…?

அதாவது
1.நீ உதவி செய்தாய் அப்பா
2.நான் (உடலை விட்டுப் பிரிந்த உன்னை) எடுத்துக் கொண்டேன் அப்பா
3.என்னிடம் நீ வந்துவிடப்பா…
4.நான் செத்த பிற்பாடு (இந்த உடலிலிருந்து) நீ போய் விடப்பா…!

மொத்தமாக நம்முடைய வேதனை எல்லாம் சேர்த்து வெளியிலே போன உடனே அந்த ஆன்மா எந்த நிலை ஆகும்…?

புலி மற்ற மிருகங்களை வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது நரி நாய் அவைகளும் வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது பாம்பு விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை அழுங்காமல் எடுத்துக் கொள்கின்றது இவை எல்லாமே நரக வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றன.

அது போல் இந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நரக வேதனையை எடுத்தோமோ… என்னை இப்படி எல்லாம் விட்டுவிட்டுச் செல்கின்றாயே…! என்று அந்தக் கடுகடுத்த நிலையில் துன்பத்தை எல்லாம் நினைத்து எண்ணினால்… அந்தத் துன்ப உணர்வுகள் எல்லாம் இங்கு வந்து சேரும்.

மொத்தமாகச் சேர்த்து இந்த உடலிலே எடுத்ததை வளர்த்துக் கொண்டு இந்த உடலை வீழ்த்தி விட்டுப் போய்விட்டு வா…! என்று செய்யும்.

எனக்கு நீ எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தாய்… நீ நாயாகப் பிற நரியாகப் பிற… புலியாகப் பிற…! என்று தான் “அவர் உதவி செய்ததற்குக் கைம்மாறாக நாம் செய்ய முடியும்…”.

1.நமக்கு எத்தனை உதவி செய்தார்…?
2.நமக்காக எத்தனை நன்மைகள் செய்தார்…?
3.நம்முடைய கஷ்டங்களை எப்படிக் கேட்டார்…? அந்த உணர்வு அறியாது வந்து எத்தனை வேதனைப்பட்டார்…?
4.நமக்கு உதவி செய்தவர் இனி எந்தக் காலத்திலும் அவர் பிறவி இல்லாத நிலை அடைந்து…
5.”துன்பமே இல்லாத பெரு வாழ்வாக வாழ வேண்டும்” என்று எத்தனை பேர் நீங்கள் எண்ணுகின்றீர்கள்… சொல்லுங்கள் பார்க்கலாம்…!

சாஸ்திரங்கள் அதைத் தான் கூறுகிறது.

ஆகவே உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களுக்கு நாம் எதை எண்ணி எடுக்க வேண்டும்…?

நோயின் தன்மை கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும்
1.அந்த உயிரான்மாவை இங்கிருந்து நாம் உந்தித் தள்ளி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செலுத்தி…
2.உடலில் பெற்ற நஞ்சினைக் கரைத்து பிறவி இல்லா பெரு வாழ்வு வாழ்ந்து
3.என்றும் அங்கே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் பேரருள் பேரொளியாக வாழ வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

இங்கே உடலில் வாழும் போது எங்களை எப்படி மகிழச் செய்தாயோ அதே போல்
1.என்றென்றும் எங்களை மகிழச் செய்யும் உணர்வாக “ஒளியாக மாறி”
2.எல்லோருக்கும் பேரன்பைக் கொடுக்க வேண்டுமென்று எண்ண வேண்டும்.

இப்படி எத்தனை பேர் எண்ணுகின்றோம்…? கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

நமக்கு உதவி செய்தார் என்று நல்லதை எண்ணுகிறோம். ஆனால் உதவி செய்தாயே… என்னை விட்டு விட்டுப் போகிறாயே…! என்று தான் சொல்கிறோம்.

எங்கே விட்டு விட்டுப் போவது…!

உன்னிடமே வந்து விடுகின்றேன்…! என்ற அந்த நிலையைத்தான் இங்கே உருவாக்குகின்றார்கள். இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஞானிகள் காட்டிய வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைத் “தனக்குள் இழுக்காதபடி” விண் செலுத்தப் பழக வேண்டும்.

“துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம்” நமக்குள் பெருக வேண்டும்

“துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம்” நமக்குள் பெருக வேண்டும்

 

கொடூரமான புலி மற்ற சாந்தமான உயிரினங்களை அடித்துக் கொல்வது போல்… சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடலின் உறுப்புகளையும்… அதை உருவாக்கிய அணுக்களையும் கொன்று புசித்துவிடும்..

இதிலிருந்து மீள்வதற்கு நம்முடன் வாழ்ந்து வளர்ந்த முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தி… அந்தப் பேரருள் உணர்வுகளை நம் உடலுக்குள் உள் செலுத்தித் தீமையான நிலைகளை மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.

கோடிச் செல்வம் தேடினாலும்… அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை. ஏன்…! இந்த உடலும் நம் கூட வருவதில்லை. ஆனால்
1.பேரருள் என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
2.ஒளியின் உணர்வாக நாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
3.”இதை விரும்புவோர் தான் செயல்படுத்த முடியும்…”

உடல் இச்சை கொண்டால் பலன் இல்லை…!

அருள் உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் எடுத்து வளர்த்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்து செயல்படும் தன்மையும்… தேடிய செல்வத்தைக் காத்திடும் நிலையும்… இந்த உடலைச் சீராக வைத்துக் கொள்ளும் நிலையும் வரும்.

“செல்வத்தை நாம் தேட வேண்டியதில்லை… அந்தச் செல்வமே நம்மிடம் வந்து சேரும்…” ஆனால் செல்வம் குவிகின்றது என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால் நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் உடலின் பற்றுக்கே வந்து விடுகின்றது.

ஞானத்தினை நாம் வளர்க்கும் பொழுது அருள் ஞானத்தின் வழிகளில் நாம் சென்று இருளை அகற்றி மெய்ப்பொருளைக் காண முடியும்

ஆகையினால் காலையில் ஐந்தரைலிருந்து ஆறரை மணிக்குள்
1.தினசரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுத் தீமைகளை நீக்கிப் பழகுதல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நாள் முழுவதும்… மற்றும் அவ்வப்போது சேரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி அருள் வழியில் நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக… இந்த இல்லற வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு வாழ முடியும்.

வேதனை என்ற விஷமோ கோபம் என்று கார உணர்வோ பகைமையான உணர்வுகளோ சாபம் என்ற உணர்வுகளோ நம்மைத் தாக்கப்படும் பொழுதெல்லாம்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து நம் உடலுக்குள் அதை உட்செலுத்தித் தீமைகளை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டால் பகைமைகள் வளராது.

தீமை என்ற நிலையே நம் உடல் அணுக்கள் பெறாதபடி தடுத்துக் கொள்ள முடியும். துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடலில் அணுக்களாக உருவாக்கிக் கொண்டால்… நம் சொல்லும் செயலும் புனிதம் பெறவும்… நம் உடலில் தெளிந்த நிலையும் உருவாகும்.

1.அந்தத் துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம் நமக்குள் பெருகும் போது
2.உடலில் விளைந்த சூட்சும சரீரம் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
3.நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வது உறுதி.

மண்டலக் கணக்கு – 48 நாள்கள்

மண்டலக் கணக்கு – 48 நாள்கள்

 

மனிதர்கள் இந்த உடல் இச்சைக்குத் தான் செல்கின்றனரே தவிர “உயிரின் இச்சைக்கு” யாரும் செல்வதில்லை. ஆனால் அவனுடன் தான் நாம் ஒன்றி வாழுகின்றோம்.

எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப உடலாகிறது. உடலாகும் போது “வேதனை.. வேதனை…” என்று எடுத்தால் வேதனைப்படும் நிலை தான் வருகிறது..

வேதனை அதிகமாகி விட்டாலோ அந்த வேதனைக்கொத்த உடலாக… அடுத்து உயிர் நம்மை மாற்றிவிடும். ஆகவே இது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்.

இந்த உண்மைகளை எல்லாம் இப்போது அறியக்கூடிய தகுதி பெற்றிருக்கிறோம் என்றால் அது யாரால்…?

நம்முடைய மூதாதையர்கள் முதலில் மனிதனாக உருவானார்கள். அவர்கள் வழியில் நம் தாய் தந்தை உடல் பெற்றார்கள். அவர்கள் வழியில் நாம் மனித சரீரத்தை இப்போது பெற்றுள்ளோம்.

ஏனென்றால் “மனிதன் ஒருவன் தான் இறந்த பிற்பாடு அவர்களை (முன்னோர்களை) விண் செலுத்த முடியும்…”

ஒருவருக்கொருவர் நாம் மனதில் நினைக்கின்றோம்… “எனக்குத் துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் அவன் உருப்படுவானா…? என்று…!”

நாம் இப்படி எண்ணினால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் கூட இந்த உணர்வு அங்கே சென்று அவனை இயக்குகின்றது… அவன் செய்யும் காரியத்தைக் கெடுக்கிறது.

அதே போன்றுதான் நம்முடைய மூதாதையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது. அதை வைத்து அவர்களை நாம் விண் செலுத்த முடியும்.

அருள் சக்திகளை இப்போது குரு வழியிலே நமக்குள் பெருக்குகின்றோம். அதற்குண்டான சக்தி கிடைக்கின்றது… காற்றிலே அந்த உணர்வுகள் உண்டு.

நம் முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இருந்தாலும் கூட நாம் விண் செலுத்த முடியும். முன்னாடி செய்ய மறந்து விட்டோம். இப்பொழுதாவது நாம் செய்யப் பழக வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று சொல்லி 48 நாட்களுக்குள் அனுப்பி விட்டால் அங்கே சென்று முழுமை அடைகின்றார்கள்… ரிஷியாகின்றார்கள்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் பிரியமாக இருக்கின்றார்கள் அதிலே ஓருவர் திடீரென்று இறந்து விட்டால் பற்றுடன் எண்ணும் போது அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலில் ஆவியாக இருக்கும்.

ஆனாலும் இறந்த ஆன்மா திடீரென்று உடலுக்குள் புகுந்த உடனே முதலில் தெரியாது. அதனால்தான் ஒரு மண்டலம் என்ற கணக்கை வைத்து ஞானிகள் நமக்குக் காட்டினார்கள்.

எது எது எந்தப் பொருளாக இருந்தாலும் “ஒரு மண்டலத்திற்குள் கருத்தன்மை அடைவது” மாறும் தன்மை வருகிறது. இதைத் தெரியப்படுத்துவதற்குத் தான் மண்டலக் கணக்கை ஞானிகள் கொடுத்தார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்றார்கள் என்றால் அந்த ஒரு மண்டலத்திற்குள் (48 நாட்களுக்குள்) சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்து வளர்த்து இலேசாக அங்கே விண் செலுத்தி விடலாம்.

அங்கே சென்ற பின் உடல் பெறும் விஷத்தன்மைகள் எல்லாம் கரைந்து விடுகிறது. துருவ நட்சத்திரம் சமைத்துக் கொடுக்கும் உணர்வுகளை எடுத்து ஒளி உடலாகப் பெறுகிறது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்…!

இதற்கு முன்னாடி நமக்குப் பழக்கம் இல்லை. இப்போது தெரிந்து கொண்டோம். அடிக்கடி இதைப் போன்று செய்து பழகினால் இன்றைய விஷ உலகில் அடிக்கடி வரும் தீமைகளை நீக்க முடியும்.

மூதாதையர்களை விண் செலுத்திய வலுக் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் அதிகமாகப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்த உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் நம்மையும் அது அங்கே இழுத்துச் சென்றுவிடும்.

மாறாக… “ஐய்யய்யோ இந்தக் காசை எல்லாம் என் பிள்ளை கண்டபடி செலவழிக்கின்றானே… நாளை அவன் என்ன செய்வான்…? என்று பிள்ளை மீது நினைவு அதிகமானா அந்த உடலுக்குள் தான் வர வேண்டும்

காசு சம்பாரித்துக் கொடுத்தேனே… நாளை என் பிள்ளை என்னை எங்கே ஏமாற்றப் போகின்றானோ…? என்று எண்ணினால் அவன் உடலில் புகுந்து விடுவோம். அங்கே பேயாகப் போய் அவனையும் வேதனைப்படுத்தத்தான் செய்யும்

ஆகவே எந்த நிமிடம்… எந்த நிலை… ஆனாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால் நம் உயிரின் இயக்கம் எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்… அங்கே கவர்ந்து சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

அந்த உணர்வுக்குத் தக்க இருளை நீக்குகின்றது உணர்வின் அறிவு எப்பொழுதுமே சந்தோஷமாகப் பேரானந்த நிலையாகப் பெற முடியும். அது தான் விஜய தசமி. உயிர் தோன்றி பத்தாவது நிலையாக முழுமை அடையும் சந்தர்ப்பம்… பிறவி இல்லா நிலை…!

ஒவ்வொரு மாதத்திலும் ஞானிகள் தெளிவான காரணங்களைக் காட்டி நம்மை நல்வழியில் வாழச் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார்கள். மக்களுடைய எண்ணங்கள் தடுமாறும் இந்தக் காலகட்டத்தில் குரு வழியில் இதை நாம் செயல்படுத்துவோம்.