“போகும் பாதை எது…?” என்று அறியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபடுங்கள்

“போகும் பாதை எது…?” என்று அறியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபடுங்கள்

 

நமது வாழ்க்கையில் எத்தகைய வேதனை வந்தாலும் அதைத் துடைக்க… துடைத்திட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத் தான் அன்றைய ஞானிகள் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

1.என்னை அறியாது வந்த பிழைகளை நீக்கிட அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று
2.எந்த உயிர் மனிதனாகச் சிருஷ்டித்ததோ அந்த உயிரிடமே “ஈஸ்வரா…” என்று வேண்டி
3.எந்த மனிதன் இவ்வாறு ஏங்குகின்றானோம் தன்னை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.

நாம் எண்ணியது அனைத்தையும் உயிர் தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துவதற்குத் தான் இராமயாணம் மகாபாரதம் கந்தபுராணம் போன்ற காவியங்களை ஞானிகள் தீட்டிச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி செய்தனர்.

அதாவது
1.சூட்சுமத்தில் நமக்கு முன் இருக்கும் காற்றலைகளில் படர்ந்துள்ள நிலையையும்
2.நாம் எண்ணிய உணர்வுக்குள் சூட்சுமமாக மறைந்த நிலையினையும்
3.நம் உயிருக்குள் பட்டு ஓ… என்று ஜீவனாகி அந்த உணர்வின் சத்து ம்… என்று நாம் சரீரமாகும் நிலையையும் காவியத்தின் மூலம் காட்டினார்கள்.

எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்கி அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு… நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலையும் ஆனால் வேதனை என்று விஷமான உணர்வை ஒரு துளி எடுத்தாலும் உடல் சோர்வடைந்து நல்ல குணங்கள் எவ்வாறு மறைந்து விடுகின்றது…? என்பதையும் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

அத்தகையை தீமைகளை அடக்க வேண்டும் என்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். நம்முடைய ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்றும் காட்டியுள்ளார்கள்.

முருகு என்பது மாற்றி அமைக்கும் சக்தி… முருகன் என்பது அழகுபடுத்தும் நிலை…! என்று
2.இப்படி நமது ஆறாவது அறிவு கொண்டு நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிட முடியும் என்றும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

பித்தரைப் போன்று நமது குருநாதர் சாக்கடையிலும் அருவருப்பான இடங்களிலும் அமர்ந்து தான் எனக்கு (ஞானகுரு) இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்தினார்.

அந்தச் சாக்கடையை அவர் சாக்கடை என்று எண்ணவில்லை உலகையே சாக்கடையாகக் கருதினார்…
1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற நிலையில்
2.அருள் ஞானிகளின் உணர்வைச் சத்தாக நுகர்ந்து கொண்டிருந்தார்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை உலகிற்கு எவ்வாறு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக என்னையும் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார்.

“எனக்குக் கல்வி அறிவே இல்லை என்றாலும்” அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழிப்படி… காட்டிய நெறிப்படி… ஆற்றல் மிக்க சக்திகளை நான் கவர்ந்தேன். எனக்குள் அதை வளர்த்துத் தீமைகள் வராதபடி காத்துக் கொண்டேன்.

உங்கள் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உபதேசிக்கின்றேன். ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழியைப் பின்பற்றுங்கள்.

இந்த மனித உடலிலேயே முழுமை பெறுவோம் என்று இந்த வாழ்க்கைப் பயணத்தை இவ்வாறு தொடருங்கள்.

கடலிலே செல்லும் பொழுது ஒரு எல்லையைக் குறிக்கோளாக வைத்துத் தான் செல்கின்றோம். ஒரு தீவுக்குச் செல்ல வேண்டுமென்றால் படகைச் செலுத்துகின்றோம்.
1.இடைவெளியில் வரும் அலைகளைப் பிளந்து விட்டு
2.”அந்தத் தீவை அடைய வேண்டும்” என்ற எண்ண வலு கொண்டு தான் அங்கே செல்கின்றோம்.

மீன் பிடிக்கச் சென்றாலும் மீன் இருக்கும் இடமாகத் தேடிச் செல்கின்றோம். கடலில் வரும் அலைகளைப் பிளந்து அந்த இடத்தை அடைந்து மீன்களைப் பிடிக்கின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் பல அலைகள் மோதிக் கொண்டே இருக்கின்றன
1.பழி தீர்க்கும் அலைகள் மோதுகின்றன
2.இடையூறு செய்யும் எண்ண அலைகள் மோதுகின்றன
3.தீமை செய்யும் உணர்வுகள் மோதுகின்றது
4.தொழில்களில் எத்தனையோ சங்கட அலைகள் மோதுகின்றன
5.குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பகைமையாகி வெறுப்பான அலைகள் மோதுகின்றன.

இதைப் போன்ற பல அலைகள் மோதி “நாம் போகும் பாதை எது…?” என்று அறியாது இன்று தவித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு குடும்பத்திலும் இதே நிலை தான்.

ஆகவே மகரிஷிகள் காட்டிய வழியினை நாம் பின்பற்றி… அவர்கள் வாழும் எல்லையை அடைய வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் துடுப்பாக வைத்து வாழ்க்கையில் வரும் அலைகளைப் பிளந்து
2.மன உறுதி கொண்டு இதைச் செயல்படுத்துங்கள்.

“சத்ரு மித்ரு… பாசிடிவ் நெகடிவ்” – உயிருக்குள் நடக்கும் (உணர்வின்) இயக்கங்கள்

“சத்ரு மித்ரு… பாசிடிவ் நெகடிவ்” – உயிருக்குள் நடக்கும் (உணர்வின்) இயக்கங்கள்

 

ஒருவர் மீது நாம் பாசமாக இருக்கின்றோம். ஆனால் அவருடன் வேறு ஒருவர் சண்டையிடுகின்றார்… அதனால் இவர் சோர்வடைகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

பாசத்தால் சோர்வான எண்ணமும்… சண்டையிட்டவர் மீது வெறுப்பும் நாம் அடைகின்றோம். நல்ல குணங்களுடன் நாம் இருந்தாலும்
1.அந்த நேரத்தில் இந்த இரண்டையும் கலந்து சேர்த்துச் சுவாசிக்க நேர்கின்றது.
2.அவ்வாறு சுவாசித்தவுடனே போர்…! சுவாசித்தது உயிரிலே பட்டவுடனே இங்கே எரிச்சல்
3.இந்தத் துடிப்பின் உணர்வலைகள்… உந்தி நம்மை இயக்குகிறது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் நாம் ஆணைகள் இட்டவுடனே அது எலெக்ட்ரானிக்காக மாறி… நம கொடுத்த அழுத்தத்தின் (COMMAND) தன்மை கொண்டு அது எந்த உணர்வின் செயலோ அதற்குத் தக்கவாறு அந்தக் கம்ப்யூட்டர் இயங்குகிறது.

அதே போல் நாம் சுவாசித்த உணர்வுகள் (வெறுப்பும் சோர்வும்) உயிரிலே பட்டவுடனே அந்த உணர்வுக்கொப்ப உயிருக்குள் கடினமான எண்ணங்கள் தோன்றுகிறது.
1.அந்த உணர்வு நம் உடல் முழுவதற்கும் பரவிக் கிடக்கும் செல்களில் இயக்கியவுடனே
2.அதற்குத் தக்கவாறு நம் உடலின் இயக்கங்கள் ஆகின்றது.

உதாரணமாக தறியிலே துணியை நெய்யப்படும் பொழுது ஒரு நெறிக்கட்டையை வைத்து எம்பிராய்டரி பூ வேலைகளைச் செய்வார்கள். அந்த இயந்திரத்தில் ஒன்றை (PEDAL) மிதித்தால் போதும்.

அதனின் காலகட்டப் பிரகாரம்… ஒவ்வொரு நிமிடத்திற்குத் தக்கவாறு அந்தப் பின்களை (PIN) மாற்றி மாற்றி அழுத்திப் போடும் பொழுது அந்தத் துணியில் அழகான பூ வேலையாகச் செயல்படுத்தும்.

அதைப் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு உணர்வின் செயலாக
2.ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு நம்முடைய அங்கங்களை இயக்குவதும்
3.பேசிய உணர்வலைகள் கொண்டு திருப்பிப் பேசுவதும்
4.கண்ணிலே எதிர்நிலையான அலைகள் பாய்வதும் அதைக் கொண்டு ஒரு பொருளைப் பார்ப்பதும் போன்ற இயக்கத்தின் நிலைகள் அமைகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. இருந்தாலும்… கண் கொண்டு தவறு செய்வோரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தாலோ… அவர் செய்யும் தவறின் உணர்வுகள் நம் உயிரிலே பட்டு… உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றது.

இந்த உணர்வலைகள் சீறிப்பாய்ந்து உடல் முழுவதும் படரப் படும்பொழுது போர்… நெகடிவ் பாசிடிவ்…! அதாவது நம்முடைய உயிருக்குள் வெப்பமாகும் பொழுது… அதே சமயத்தில் கதிரியக்கச் சக்தி அந்த இரண்டின் நிலைகள் மோதும் போது போர்.

அந்தப் போரின் நிலைகள் கொண்டு… எதிர் சக்தியான வியாழன் கோளின் சத்தும் அதனுடைய கதிரியக்கங்கள் இரண்டும் சேர்க்கப்படும் பொழுது
1.சுழற்சியாகிக் (திருகிக்) கொண்டிருக்கும் இந்த உணர்வின் தன்மையை
2.எதிர்நிலையான நிலையில் தாக்குதலாகும் பொழுது அது சீர்பட்டு நேர் துடிப்பாகின்றது,
3.இப்படி… போர் முறைகளில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டுள்ளது.
4.சத்ரு மித்ரு என்ற இயக்கச் சக்தி இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

உதாரணமாக… ரோட்டிலே நாம் செல்கிறோம் என்றால் அந்த நேரம் ஒரு பஸ் வேகமாக வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த உணர்வின் வேகத் துடிப்பு நமக்குள் ஈர்க்கப்பட்டு… அது நல்ல உணர்வுகளுடன் மோதும் போது தான்… “நமக்கு ஆபத்து…” என்று அறிந்து கொள்கின்றோம்.

ஆக… வேகமாக இயக்கப்படும் பொழுது
1.பஸ்ஸின் வேகத்திற்குத் தக்கவாறு இந்த உணர்வின் இயக்கம்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் உணர்வாக நம்மை உந்தித் தள்ளுகின்றது.

ஓவ்வொரு உணர்வும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது. ஆகவே அருள் ஞானிகள் உணர்வை அடிக்கடி நாம் எண்ணி எடுத்தால் அந்த உணர்வுகள் நம்மை இயக்கும்… நம்மை அருள் வழியில் அது அழைத்துச் செல்லும்.

உயிர் + ஆன்மா – கற்பு நிலை

உயிர் + ஆன்மா – கற்பு நிலை

 

உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.

தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி…!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.

அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.அது சக்திச் சுடரால் காக்கப் பெறும் என்ற சூட்சமத்தையும் காட்டினார்.

அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு…” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி…” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.

நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால் அது நல் வினைப் பயனாகப் பெற்று
1.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
2.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.

அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.

சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்…
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்…?

நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ அதுவே ஆன்ம சக்தியாக சரீரத்தையும்
1.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
3.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.

ஆசை என்ற சிறு தொடரில் இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது மோகம் என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவானப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது…! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.

அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.

நம் ஆத்மாவைக் காக்கும்… காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்…! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.

ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.

அந்த ஜடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.

மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனை கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.

பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்றுத் தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையில் உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
1.அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
2.நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.

ஓம் ஈஸ்வரா…! – “ஒளியான உயிரணுக்களின் சங்கமம்…”

ஓம் ஈஸ்வரா…! – “ஒளியான உயிரணுக்களின் சங்கமம்…”

“சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…” என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம்… முயற்சியும் செய்கிறோம். ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை… யார்… எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட…பொட…!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்…!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே – நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்…! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும். அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா…?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்…” அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்… நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்…!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன…? எப்படி…?

வாழ்க்கை நடை முறையில் மாற்றமான எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் மோதி அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி
2.அவ்வாறு சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன…?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ…ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து அதன் வழியில் செயல் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால் அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்…” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமமான நிலை நிலைக்க வேண்டும் என்ற செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்…!

இரு நிலை கொண்ட இயக்கத்தை ஒரு நிலையாக்க வேண்டும்

இரு நிலை கொண்ட இயக்கத்தை ஒரு நிலையாக்க வேண்டும்

 

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில் மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையை வங்கிட்டு… அதை மறைத்து விட்டு… ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி… அழியா ஒளி நிலை பெற நமக்கு வழிகாட்டுவது தான் “விநாயகர் தத்துவம்…”

அதற்காகத் தான் இந்தப் பிள்ளையார்…? என்று கேள்விக்குறி இட்டு நம்மைச் சிந்திக்கும்படி வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

உயர்ந்த ஒளியின் உணர்வாகத் தனக்குள் அரசாட்சி புரிந்து வருவது அனைத்தையும் மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தோம் என்றால் “அவனுடன் ஒன்றிய அவனாக” நாம் மாறுகின்றோம்.

1.நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் “நான்” என்றாலும் தனித்த நிலைகள் கொண்டு உயிரே இயக்குகின்றது
2.அதிலே நாம் எண்ணிய உணர்வுகள் எது எதுவோ… அதனுடன் இணைந்து செயல்படும் பொழுது தானாகின்றது.
3.ஆனாலும் உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது
4.அது தான் “நான் தானாகி – தான் நானாகின்றது.

உயிர் ஒளியின் தன்மையாக இருந்தாலும்… நுகரும் உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி மறைத்தாலும்
1.”தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதே”
2.பின் உணர்வின் ஒளியாக மாறிய பின் – மீண்டும் “ஒளி சிகரமாக மாறிய பின் நானாகின்றது…”

நான் தானாகி… தான் நானாகின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆகவே இந்தப் பிள்ளை யார்…? என்று நினைவுபடுத்தி நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகப் பயன்படுத்தி விண் செல்ல வேண்டும் என்பதை ஞானிகள் காட்டினார்கள்.

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தியவர்கள் ஏழாவதாக ஒளி என்ற நிலை அடைந்து என்றும் பதினாறாக விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சை அடக்கும் சக்தி பெற்ற சூரியனோ அது கொதிகலனாகும் போது நஞ்சினைப் பிரித்தாலும்
1.அதிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனறிவுகள் அதே நஞ்சினைக் கவர்ந்து ஓர் இயக்கச் சக்தியின் நிலையாகப் படர்கின்றது.
2.இருப்பினும் இந்தச் சூரியன் அது அழிந்திடும் நிலை தான்.

ஆனால் அதனின்று விளைய வைத்த உயிரின் ஒளி நிலைகள் தான் கவர்ந்த உணர்வை ஒளியாக மாற்றிவிட்டால் பின் எதிலுமே அது வேகுவதில்லை.
1.அத்தகைய வேகா நிலை பெற்றது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்
2.அந்த நிலையை நாமும் அடைதல் வேண்டும்.

“உலகோதய நான்… பரப்பிரம்மமாகிய நான்” ஆக வேண்டும்

“உலகோதய நான்… பரப்பிரம்மமாகிய நான்” ஆக வேண்டும்

 

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட சரீரம் கிடைக்கப் பெற்ற இந்தக் கால கட்டத்தில் உண்மையை நாம் உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலை பெறும் வழி அறிந்திட வேண்டும்.

தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலை வழி அமைத்து சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே சக்தி பெறச் செய்யும் மார்க்கம் அறிந்து அந்த எண்ண வழித் தொடரில் “பசுக்களுக்காக வசுவா…? வசுவிற்காகப் பசுக்களா..?” என்ற கேள்வி எழுந்து பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான் “கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.

கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக உணர்த்தினார் வியாசகர்.

1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.சரீர உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.அதற்கும் “காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6.இந்த ஜெப வழித் தொடர் வலுப் பெற்றுவிட்டால்
7.சரீரம் தனக்குகந்த பக்குவத்திற்கு உயரிய ஒளிக் காந்த சக்தியின் சக்தி வலுக்கூட்டும் செயல் தன்மையும்
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டிடவே
9.அதைக் காவியமாக்கிச் சொல்லாமல் சொல்வித்து
10.”உயிர் ஒளி சக்தி பெற்றுக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”

ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் ஜெபமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதனுள் வளரும் சக்தி நிலைப்படுத்திட “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”

அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெற வேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் பசுக்களாகிய உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!

தன் உயிர் சக்தியை ஒளி காந்த சக்தியாக உயர்த்துவதோடல்லாமல் முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் நிலை நின்ற “அத்தனை உயிரணுக்களையுமே” என்பது மறை பொருள்.

திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தச் சுவை குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு உணர்வுகளின் வழிதான் எண்ணம் என்ற நிலைப்படுத்திவிடும்.

உயர்ந்த எண்ணங்களின் வழியில் தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரியும் உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்தப்பட வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.

உணர்வுகளின் வழிக்கெல்லாம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே. கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்பட்டதாகவும் உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தி
1.“தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக என்பதன்
2.கருப் பொருள் உணர்ந்து கொள்வதே நல்லது.

ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரம் உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் ஒளி பெறும் தன்மைக்கு வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

“மூகம்…” (ஃ) என்ற உயிரின் சக்தி

“மூகம்…” (ஃ) என்ற உயிரின் சக்தி

 

ஒலி ஒளியால் விண்ணிலே உதித்த ஒரு உயிரணு பூமிக்குள் வந்து ஜீவன் என்ற உயிராத்மாவாக மனிதன் என்ற ஜீவ பிம்பச் சரீரம் பெற்றிட்டதின் உண்மை நிலை என்ன…?

1.ஞானம் கொண்ட தியானத்தின் வழி முறைகளைக் கடைப்பிடித்து
2.ஞானியாக உருவாக உயர் ஞான வளர்ப்பில் ஓ…ம் என்ற நாதத்தைக் கூட்டி
3.ஒலி நாதமே ஒளி சக்தியாக்கும் சூட்சமத் தொடர்பின் நிலை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் எண்ணத்தின் வழியாக வரும் விஷ வித்துக்களை நீக்கிடவே “மூகம்” என்ற செயலாக அனுபவ ஞானம் கொண்டு
1.கோலமாமகரிஷி காட்டிய மூகாம்பிகையின் பொருளறிந்து செயல் கொள்ள வேண்டும்.
2.“தெய்வம் நின்று கொல்லு(ள்ளு)ம்…!” என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்தல் வேண்டும்.

நம் உயிராத்மா தெய்வ சக்தியாக வளர்ச்சி கொள்ள அறிவின் ஆற்றல் விவேகம் கொண்டு செயல்பட்டு ஜீவகாருண்யம்… ஒழுக்கம்.. என்ற நற்பண்புகளால் உண்மைப் பொருளை ஈர்த்துக் கொள்வதே “தியானத்தின் மூலமாகும்…!”
1.அறிவின் தெளிவே ஆக்கம்.
2.மற்ற செயல்கள் அனைத்தும் தேக்கம் தான்…!

மனிதனின் எண்ணத்தில் “தனக்குள் இயக்கும் குணங்களை அறிந்து கொண்டிடும் பகுப்பாற்றல் (பிரித்து அறியும்) செயல் கொண்டான்…” என்றால் மனிதன் ஞானத்தை உணர்கின்றான்…! என்று அர்த்தமாகும்.

அவ்வாறு தன்னை உணர்ந்து கொள்ளும் நிலையில் குணங்களின் எதிர் மோதல்களைத் தெளிந்து ஞானி ஒருவன் கருத்தில் நற்குணங்களைத் தனக்குள் மேலும் உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான்
1.தீமையான குணங்களின் கேடுகளை உலகினுக்கு உணர்த்தி
2.உண்மைப் பொருளாக… மெய்ப் பொருளாகத் தானே (மெய் ஞானி) நிலை நின்றான்.

தீமை செய்யும் குணங்கள் மனிதச் சரீரத்தில் அறியாத நிலைகள் ஈர்க்கப்பட்டு அது பதிவு நிலை பெற்று விட்டால் அந்தப் பதிவின் தொடரில் அதே எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் சுவாச ஓட்டச் செயல் நிலையால் உடலில் என்ன நடக்கின்றது…?
1.தீதெண்ணப் (தீமையான எண்ணம்) பதிவு வலுவாகி..
2.அது வீரியமாக நம் உடலுக்குள் உரமே(ற்)றிக் கொண்டு
3.அதனின் எதிர் மோதலாக நம் சரீரத்தையே பிணிக்குள் சிக்கச் செய்து விடுகின்றது.

இதையே தத்துவப் பொருளாக… அந்த அசுர சக்தியின் எண்ண வலு வீரியத்தை அடக்கிட
1.மூகம்… என்ற மூகாம்பிகைச் சக்தி என்பதே சூட்சமப் பொருளப்பா…!
2.மனிதச் சரீரத்தில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி
3.மூலாதார நாடியுடன் (புருவ மத்தியில்) இணையும் ஓர் நாடி செயல்படும் விதம் உண்டு (ஃ).
4.அந்த நாடியின் செயலால் நமக்குள் வரும் அத்தனை அசுர சக்திகளையும் அடக்கிட முடியும்…! என்பதே
5.கோலமாமகரிஷி ஆதிசங்கரர் உடலில் செயல்பட்டு மூகாம்பிகையாக (மூலச்சக்கரம்) உருவாக்கியதன் உண்மைத் தத்துவம் ஆகும்

பஞ்சேந்திரியங்களால் உருவானது தான் “மனிதச் சரீரம்” என்று செப்பி அந்த ஜீவ பிம்ப உடல் செயல்படும் விதம்… அறிவின் உயர் ஞான வளர்ப்பாக உணர்ந்து தெளிந்திட்டவர்கள் நம்முடைய சித்தர்கள்.

உலக ஜீவன்களில் பகுத்தறியும் திறன் கொண்ட… “மனித குலம்…”
1.தன்னைத் தான் உணர்ந்து
2.தன் தெய்வீகத் தன்மை நிலை அறிந்து கொண்டிட
3.வளர்ச்சியின் வளர்ப்பாக உயர்ந்திட
4.உலகினுக்கு எடுத்துக் காட்டாகத் தாங்களே நிலை நின்று போதனைப்படுத்திக் காட்டிட்ட வழி முறைகளில்
5.தங்களை உணர்ந்து கொண்ட அக்கணமே தான் யார்..? தன் செயற்பாடு என்ன..?
6.இறைச் சக்தியின் கூத்தாட்டும் செயல் என்ன…? என்று சிந்தித்துத் தெளிந்து
7.தான் உணர்ந்ததை எல்லாம் வெளிக் கொணர்ந்து அறிவின் கருவூலமாக ஞானப் பொக்கிஷமாக அதையே உலகினுக்கு ஈந்து
8.மறை பொருளாக மனித குலச் சிந்தனையைச் சுய வளர்ப்பாக வளர்ச்சி கொள்ளச் சூசகப்படுத்தியவர்கள் தான் “சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்…!”

அவர்களின் அருளாசி பெற்று அறிவின் ஞானம் கொண்டு நாம் தெளிந்து வாழ்தலே மிகவும் சிறப்பு…!

ஏழுமலையான்

ஏழுமலையான்

 

1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை.
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கிவிடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.

இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.

ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.

அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.

ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகாதேவன்.

இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழுமலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களாப்பா.

நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழுமலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்குத் தெரிந்துவிடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.

இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்செங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித்தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்…? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்… கண்ணில்லையா…? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.

கடவுள் எங்குள்ளான்… என்று இப்பொழுது புரிந்ததா…? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள்.

கடவுள் என்பது யார் என்று புரிந்ததா…?

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும்… உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா…!

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும்… உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா…!

 

இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம்.
1.விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…! என்கிறோம்.
2.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
3.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல…!

பிறப்பும் இறப்பும் “இறைவன் இட்ட பிச்சை” என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.

எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.

கலி முடிந்து கல்கி வருகிறது…! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.

உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.

மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக… பூச்சியாக… மீனாக… நண்டாக…!

ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.

மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான். மனிதனில் இருந்து தான் மிருகம்.
3.மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசிக்கும் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.

இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள்.

இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.

ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்…! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…!” என்று பல முறை உணர்த்தினேன்.

இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.

உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் சுற்றலிலே…! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே.

பாட நிலை புரிந்ததா…?

அபிஷேகம்

அபிஷேகம்

 

உயிருக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… அதனால் ஏற்படும் காந்தம் லட்சுமி… நாம் சுவாசிப்பதை இழுத்துத் தனக்குள் உருவாக்கும் நிலை வரும் பொழுது “பிரம்மமாகின்றது…”

சுவாசித்த உணர்வு எதுவோ அதனின் ஞானப்படி மணமாக நுகர்ந்து “அணுவாக உருவாக்கப்படும் பொழுது” அதன் செயலாக நம்மை இயக்குகின்றது.
1.வேதங்கள் இதைத்தான் கூறுகின்றது
2.சைவ சித்தாந்தமும் இதைத்தான் கூறுகின்றது.

நாம் நுகரும் சத்து சைவம். அந்த உணர்வின் சக்தியை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும் உணர்வின் தன்மை மறைமுகமாக நமக்குள் இயக்குகின்றது.

நுகர்ந்த உணர்வின் தன்மை விசிஷ்டாத்வைதம்… அது அணுவாகி நம் உடலாகின்றது… அது (திடமாகும் போது) துவைதம்.

இதை எல்லாம் ஆலயத்தின் பண்புகளாகக் காட்டினார்கள் ஞானிகள். ஆலயங்களில் பக்தி கொண்டு நல்ல உணர்வுகளை நாம் பெற வேண்டும்.

தீப ஆராதனை காட்டும் போது அங்கே பொருள் தெரிகின்றது. அதைப்போல பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நுகர்ந்து அதை நமக்குள் அணுவாக மாற்ற வேண்டும்.

1.தீபத்தின் ஒளி எப்படி மற்ற இருளை விலக்குகின்றதோ…
2.மறைந்த பொருளை அதனால் எப்படிக் காண முடிகின்றதோ
3.நமது நினைவாற்றல் தீமையின் உணர்வுகளை உள் புகுந்து அதை நீக்கிடும் அறிவின் ஒளியாகப் பெற வேண்டும்
4.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்படி வைத்தார்கள் ஆலயங்களில்.

அதே சமயத்தில் தீபத்தால் அங்கிருக்கும் (தெய்வ) உருவங்களைக் காட்டப்படும் பொழுது துவைதம். சிலையாக வடித்து வைத்தாலும் அந்தத் தெய்வ குணத்தின் தன்மை காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது.

அந்தக் காவியப்படி…
1.தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும்
4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்.
5.ஆலயம் வரும் குடும்பம் முழுவதும் தெய்வ நிலை பெற வேண்டும்
6.அவர் உடல் முழுவதும் இந்த தெய்வ நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இது பக்தி…!

அதே சமயத்தில் அபிஷேகம் செய்கிறோம் என்றால் அந்தக் கல் சிலைக்கு அல்ல…! அங்கே அபிஷேகம் செய்யும்போது அதை உற்றுப் பார்த்து அந்த உணர்வை நாம் சுவாசித்தோம் என்றால் உயிரிலே பட்டு இந்த உணர்வுகள் உடல் முழுவதும் அபிஷேகம் ஆகிறது. நல்ல குணங்களுக்கு அது அமுதாகக் கிடைக்கிறது.

உதாரணமாக… பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம்… அவர் படும் வேதனைகளைச் சுவாசிக்கப்படும் பொழுது நஞ்சு கலந்ததாக நம் உடலுக்குள் பரவி விடுகின்றது.

குளவி ஒரு புழுவைக் கொட்டி விட்டால் புழுவின் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் விஷத்தன்மைகள் பாய்ந்த பின் அதைத் தாங்காதபடி புழு குளவியையே நினைத்துத் துடிக்கின்றது. குளவியின் விஷத்தின் தன்மை ஊடுருவி… புழு – குளவியாக மாறுகின்றது.

அதே போன்றுதான்
1.வேதனைப்பட்ட ஒரு மனிதன் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் இந்த உணர்வின் தன்மை அபிஷேகமாகி
2.விஷத்தன்மை உடலுக்குள் பரவி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷமாக மாறுகின்றது
3.விஷம் என்ற அந்த வேதனையை நுகரச் செய்கின்றது… அதன் வளர்ச்சி பெறுகின்றது
4.வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வேதனையை உருவாக்கும் அணுக்களாக மாறுகின்றது
5.பின் நோயாகி மீண்டும் வேதனையைத் தான் நாம் அனுபவிக்க வேண்டி வருகின்றது.

ஆகவே வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் அது நம் உயிரிலே பட்டு… அந்த உணர்வு உடல் முழுவதும் விஷ அணுக்களாகப் பரவுகிறது… அது துடிக்கின்றது பதறுகின்றது மயக்கம் அடைகின்றது.

ஆகவே அபிஷேகிக்க வேண்டியது எது…?
1.வேதனையை அல்ல.
2.அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
3.இந்த உணர்வை உடலுக்குள் பரப்புதல் வேண்டும்… அபிஷேகித்தல் வேண்டும்.