“பதினெட்டாம் பெருக்கு” என்றால் நாம் எதைப் பெருக்க வேண்டும்…?

“பதினெட்டாம் பெருக்கு” என்றால் நாம் எதைப் பெருக்க வேண்டும்…?

 

இந்தப் பூமியில் மனிதனாகத் தோன்றிய நிலைகளில் தீமைகளை வென்ற அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் விண்ணிலே ஒளி வீசிக் கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று விண் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் ஒளியான உணர்வலைள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு நம் பூமியில் பெருகிக் கொண்டே உள்ளது.
1.அதனை யாரெல்லாம் நுகர்ந்து தனக்குள் பெருக்கிக் கொள்கின்றனரோ
2.அந்த அருள் ஞானத்தின் உணர்வுகள் அவர்களுக்குள் பெருகுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அன்பால் பண்பால் பரிவால் பிறர்படும் துன்பங்களையோ துன்பப்படுத்தும் உணர்வுகளையோ உற்றுப் பார்த்து
1.அந்த உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
2.அந்த நினைவினைத் தனக்குள் கூட்டி விட்டால் அதுவே பெருகி
3.நமக்குள் தீமையின் விளைவுகளாகப் பெருகி… தீமையின் உணர்வாகவே பெருக்கிவிடும்.

ஆகவே அதனின்று தனித்து… அந்த அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் விளைய வைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

பின்… யார் துன்பப்பட்டார்களோ அவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதித்து அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி நாம் எண்ணினால் அந்த உணர்வுகள் அங்கே அருள் ஞானமாகப் பெருகத் தொடங்கும். அதன் மூலம் அவர் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு வாழ்க்கை நடத்தப்படும் போது அதை நமக்குள் அந்த மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இது தான் ஆடி பதினெட்டு… பதினெட்டாம் பெருக்கு…!

ஆகவே… நாம் யாரைச் சந்தித்தாலும் யாருடன் பழகினாலும் சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் அந்த தீமைகளைப் பெருக்காது அதை தடுக்க வேண்டும்.

எந்த ஒரு உணர்வின் தன்மையாக இருந்தாலும் ஒவ்வொன்றும் நகர்ந்து சென்றே இயக்குகின்றது ஒன்றொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த இயற்கையின் சுழற்சி வட்டத்தில் சிக்கி ஒன்றுடன் ஒன்று இணைந்து அது பெருகுகின்றது

புயல் காற்று சுற்றும் பொழுது பல உணர்வின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மற்ற தாவரங்களின் சத்தை தன்னுடன் இணைத்து அந்த உணர்வின் இயக்கமாக அது இயங்குகின்றது என்று பல முறை சொல்லி உள்ளேன் (ஞானகுரு).

ஆற்றிலே நீரோட்டம் இருக்கும்போது அது ஓடும் பாதை அனைத்திலும் அது தன் உணர்வின் சத்தை வளர்த்து செழிப்பை அதிகரிக்கச் செய்கின்றது.

நீர் இல்லை என்றால் தாவர இனங்களைப் பெருக்கும் நிலையும் இல்லை. அதே போல் நமக்குள் ஜீவ நீர் இல்லை என்றால் நமக்குள் உணர்வுகளைப் பெருக்கும் சக்தி இல்லை.

1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் ஜீவ நீராக ஊற்றி
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் அருள் ஞான சக்தியைப் பெருக்கி
3.அருள் ஒளியின் சிகரமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

அதனை நினைவு படுத்தும் நாள்தான் ஆடிப்பெருக்கு. அதைப் பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்வார்கள்.

பல நிலைகளிலும்… பல எத்தனையோ கோணங்களில் நாம் திசை மாறி… திசை மாற்றி… இப்படிப் பல பல கோணங்களில் நாம் மாறிப் பரிணாம வளர்ச்சி அடைந்து… மனிதர்களாக வந்தவர்கள்தான் நாம்.

இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்று நாம் விண் வழி செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நன்னாளாகப் ஆடி பதினெட்டு என்று கூறுகின்றார்கள்.

பத்தாவது நிலையிலிருக்கும் உயிர் முழுமை அடைய வேண்டுமென்றால்
1.அஷ்டதிக்கு…! எட்டுத் திக்கில் இருந்து… பல முனைகளிலிருந்து வரும் தீமைகளை அகற்றி
2.அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே “பதினெட்டாம் பெருக்கு” என்பது

நாம் இப்படிப் பெருக்கி விட்டால் எந்தத் திக்கிலிருந்து எந்த உணர்வு வந்தாலும் அதை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு பேரருள் பேரொளியாக மாறும் நிலைகள் வருகின்றது.

பாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…?

பாலம் கட்ட அணில் இராமனுக்கு உதவி செய்தது என்பதன் உட்பொருள் என்ன…?

 

நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு எடுக்கின்றோமோ இவை அனைத்துமே இராமன் தான்.

இலங்கையைத் தாண்டுவதற்கு “ஒரு அணில் இராமனுக்கு உதவி செய்தது…” என்றும் அதனுடைய கடமையாக சிறு கல்களைப் போட்டுப் அந்தப் பாலத்தைக் கட்ட உதவியதாகக் காவியத்திலே காட்டியிருப்பார்கள்.

அதாவது புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் வந்த நிலையினை அவ்வாறு சூட்சமமாகக் காட்டுகின்றார்கள்.

நாம் ஒரு அணிலாக உருப்பெற்றிருந்த போது… “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியாக” அந்த உடலிலிருக்கும் போது சேர்த்துக் கொண்ட அந்த வினைகள் தான் மனிதனாக வளர்வதற்குக் காரணமாக அமைந்தது.

அதே சமயத்தில்…
1.மெய் உணர்வின் தன்மையை அந்த மெய் ஒளியைப் பெறக்கூடிய தகுதிக்கும்
2.நல்ல சிந்தனையின் நிலைகள் வளர்வதற்கும்
3.அணிலின் உடலாக நாம் இருக்கும் போது பெற்ற நல்ல உணர்வின் சக்தியின் பங்கும்
4.அதிலே உண்டு என்று காட்டுவதற்குத் தான் காவியத்தில் அதைக் காட்டப்பட்டது.

சீதாவை இராவணனிடமிருந்து மீட்க இலங்கைக்குள் இராமன் போவதற்கு அணிலும் சிறு கல்களைப் போட்டுப் பாதை அமைத்துக் கொடுத்து உதவி செய்தது என்று அந்தக் குட்டிக் கதையின் மூலம் நமக்குத் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

இதைக் கவனத்தில் கொண்டால்
1.இராவணனிடமிருந்து சீதாவை மீட்டிக் கொள்ள அணில் உதவி செய்ததென்றால்
2.இந்த உடலான ஆக்கிரமிப்பு சக்திகளிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள
3.அந்த அணிலின் உடலில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து
4.உயிரின் தன்மை கொண்டு அந்த இராமன் என்று சொல்லுக்கு “ஒரு இயக்கப் பொருளுக்குள்…?
5.அந்த உணர்வின் சத்துக்கள் அது எப்படி உதவியது…? என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களை எடுத்து நாம் மனிதனாக வந்தாலும் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் ஆற்றலை வளர்த்துத் தான் அது ஒரு குணமாக ஆனது.

குழம்பை வைக்கும் போது பல பொருள்களைப் போட்டு ஒரு சுவையாக அதை மாற்றிக் கொண்டு வருகின்றோம். அதைப் போன்று இந்த மனித உடல் பெறுவதற்கு 1008 குணங்களின் சக்தி தேவை.

சிந்திக்கும் தன்மை கொண்ட படைக்கும் சக்தியான மனிதனை உருவாக்கச் செய்வதும்… எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு நாம் பேசும் போது அந்த உணர்வின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய நிலைகளையும்… மற்றவர்களுக்குள் அது இயக்கக்கூடிய சக்தியாகப் பெற்றது என்றும் ஞானிகள் காட்டினார்கள்.

1.அதைத் தான் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு – ஊன் உடம்பு ஆலயம் என்ற நிலையில்
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ஊனாக மாறி… உடம்பாக மாறி… இந்த உடம்பு தான் ஆலயம் என்றும்
3.நாம் எடுத்துக் கொண்ட குணங்கள் நமக்குள் சக்தியாக இயங்குவதை
4.ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்து 1008 தெய்வ சக்திகள் என்று வைத்தார்கள்.

இவை அனைத்தையும் உருவாக்கியது யார்…? நம் உயிர் தான். அவன் தான் கடவுள்.

ஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…?

ஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தத்துவம் என்ன…?

 

பால் சத்தானது தான்… அதிலே விஷத்தைக் கலந்தால் என்ன செய்யும்…? குடிப்போரை மாய்த்துவிடும்.

இதைப் போல எவ்வளவு அழகான நிலைகளில் எவ்வளவு பரிமாணம் எடுத்துக் கொண்டாலும் வேதனை வேதனை என்ற நிலைகள் வந்தாலே அந்த அழகே போய்விடுகிறது.

பெரிய குடும்பமாக இருக்கின்றது… தொழில் செய்கின்றோம்… எல்லாச் செல்வங்களும் வந்துவிட்டது. பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்.

ஆனால் அவன் ஏதாவது தவறு செய்தாலோ… “இப்படிச் செய்கின்றானே… இப்படி இருக்கின்றானே…” என்று எண்ணும் பொழுது வேதனை.

வேதனை என்றாலே விஷம்…!

1.தொழில் செய்கின்றோம்… அதில் நஷ்டம் வந்தால் வேதனை.
2.ஒருவருக்கு உதவி செய்கின்றோம்… கேட்கவில்லை என்றால் வேதனை.

இப்படி இந்த விஷமான சத்துக்கள் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்குள் பட்டு விட்டது என்றால் நம் உடலிலே அது நோயாக மாறிவிடுகிறது.

எவ்வளவு உயர்ந்ததற்குக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணினோமோ அங்கே போகாதபடி
1.வேதனை என்ற நிலையைக் கொண்டு வந்து சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
2.மனித உடலை இழக்கச் செய்து இழிநிலையான சரீரத்திற்குக் கொண்டு விட்டு விடுகின்றது.

அப்படி வந்தாலும் மீண்டும் அந்தக் கெட்டதை நீக்கி விட்டு நல்லதைப் பெறும் நிலைகள் வந்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற நிலைகளை வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்கும்படி ஞானிகள் அதைச் சாஸ்திரத்தில் காட்டுகிறார்கள்.

“விடிய விடிய முழித்திருப்பது…” என்றால் அதனுடைய தன்மை என்ன…?

ஒரு சூரியனின் தன்மையே என்றுமே விழித்த (பிரகாசமான) நிலை கொண்டது. அதைப் போன்று சப்தரிஷி மண்டலம் தனக்குள் என்றுமே அது ஒளி கொண்டது.

1.என்றைக்குமே விழித்த உணர்வு கொண்டு தான் பெற வேண்டுமென்று
2.விழித்திருந்தே பொருளறிந்து தனக்குள் செயல்படும் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
3.பரமபதத்தின் தத்துவத்தை “வைகுண்ட ஏகாதசி – சொர்க்கம்…” என்று காட்டி
4.உடலை விட்டுச் சென்றபின் நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று என்ற தெளிவைக் காட்டுகின்றார்கள்.

நம்மை அறியாது வரக்கூடிய விஷத்தை நீக்கக்கூடிய வழியையும் ஒவ்வொரு செயலைச் செய்யும் போது நாம் எப்படி விழித்திருக்க வேண்டும் என்றும்…?
1.இதை உணர்த்துவதற்கு ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருந்து
2.அந்த நல்ல நிலைகளைப் பெறச் சொன்னார்கள்.

ஆனால் இன்றோ விடிய விடிய விழித்திருந்து காலையில் வந்தபின் அதைச் செய்வோமா…? இதைச் செய்வோமா…? என்று அந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

நம் எண்ணத்திலும் பார்வையிலும் வரக்கூடிய தீமைகளைப் போக்க வேண்டும் என்பது தான் “அஷ்டமி நவமியின் தத்துவமே…”

நம் எண்ணத்திலும் பார்வையிலும் வரக்கூடிய தீமைகளைப் போக்க வேண்டும் என்பது தான் “அஷ்டமி நவமியின் தத்துவமே…”

 

1.கண் வழி தான் நாம் கவர்கின்றோம்… அது தான் பதிவாக்குகின்றது.
2.கண்ணின் காந்தப் புலன் கவர்வது நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவான பின் உயிர் அந்த உணர்வின் தன்மையை இழுக்கின்றது.

அதாவது… நமக்குள் எத்தனையோ உணர்வுகள் அணுக்களாக இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் காற்றிலிருந்து பிரித்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

மாற்றியபின் சுவாசித்து உயிரால் தான் அது இயக்கப்படுகின்றது… நவமி.
1.எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ அந்த எண்ணம் நவமி,
2.ஆனால் அதே சமயம் அஷ்டமி…! கண்களின் வழி நாம் நுகர்ந்தாலும் ஆன்மாவாகிறது… (தானாக) இயக்கும் சக்தி இல்லை.

நுகர்ந்து உயிரிலே பட்ட பின் அஷ்டமி என்றாலும் உயிருடன் ஒன்றிய பின் அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.

அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகள். அந்த இருளிலே எதையும் செய்யாதீர்கள் என்பார்கள். ஆக… அஷ்டமியிலும் நவமியிலும் நல்லது எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.

எதன் உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வை அறிகின்றோமோ அறிந்து கொண்ட உணர்வு அதை அறியச் செய்வது இந்தக் கண்கள் தான்.

1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு நாம் எந்த நல்லதை எண்ணுகின்றோமோ
2.அதன் அறிவாக நம் உயிர் இயக்கும் என்பதைத்தான் அஷ்டமி நவமி… எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ ஈர்க்கும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்க்கின்றோம். இந்த உணர்வின் தன்மை இது அஷ்டமி என்றாலும் அந்த உணர்வுகள் இருள் சூழ்கிறது.

1.வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி இருள் சூழ்ந்தால்
2.அந்தத் தீமையை எண்ணாதே என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறதே தவிர
3.இவர்கள் சொல்வது மாதிரி சாங்கிய சாஸ்திரம் அல்ல.

வேதனை என்ற உணர்வுகள் உயிரில் பட்ட பின் அது இருள் சூழ்ந்து விடுகின்றது. ஒன்பதாவது நிலையில் நவமி என்றாலும் வேதனை என்ற உணர்வுகள் தான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.

ஆகவே அந்த வேதனையை நவமிக் காலங்களில் எண்ணக்கூடாது என்று காட்டுகிறார்கள். அதே மாதிரித் தான் அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகளை எடுக்கக்கூடாது என்று காட்டுகிறார்கள்.

1.அதாவது தீமை என்று தெரிந்து கொண்ட பின் அந்தத் தீமையை நீக்கும் உணர்வுகளை
2.நாம் நுகர்ந்தறிவதற்குத் தான் இந்தக் கண்களைக் காட்டுகின்றார்கள்.

அன்றைக்கு நாம் நல்லது செய்ய வேண்டும்… நல்லவர்களாக வேண்டும்… நல்ல பயன்களை அடைய வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் அதன் உணர்வின் தன்மையே நமக்குள் அறிவாக அது இயக்குகின்றது.

சாஸ்திரங்களிலும் வேத நூல்களிலும் மூலங்களை இப்படிக் கொடுத்துள்ளனர்.
1.ஆனால் அந்த மூலத்தை மற்றவர் யாரும் அறிந்து கொள்ளாத நிலைகளில்
2.அஷ்டமி நவமி என்ற அந்த இரண்டு நாளும் நல்லதையே எண்ணி விடாதே என்று மாற்றிவிட்டார்கள்.

ஒரு நல்ல காரியத்தை முழுமையாகச் செய்து சந்தோஷப்பட்டு அதை எண்ணினோம் என்றால் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக இயக்குகின்றது.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு பார்த்தால் அந்த வேதனையை நுகராதபடி எப்படி அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை எடுக்க வேண்டும்.

தீமை வரும் நேரத்தில் எப்படி எண்ண வேண்டும் என்று தான் ஞானிகள் காட்டியுள்ளனர்.

இப்படி அந்த அஷ்டமி காலங்களிலும் நவமிக் காலங்களிலும் நாம் நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்பதையே வேத பாட நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உள்முகமாக நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அதன் பின் எந்த நல்ல காரியமோ அது நடை பெற வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் அது நிச்சயம் நல்லதாகும்.

அன்றாடம் வரக்கூடிய தீய வினைகளைக் கரைத்தால் தான் குடும்ப ஒற்றுமையும் வரும்… சமுதாயமும் சீராகும்…!

அன்றாடம் வரக்கூடிய தீய வினைகளைக் கரைத்தால் தான் குடும்ப ஒற்றுமையும் வரும்… சமுதாயமும் சீராகும்…!

 

பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ குழந்தைகளை அனுப்புகிறோம் என்றால் ஆயிரக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்… டாக்டருக்கோ இஞ்சினியருக்கோ என்றால் இலட்சக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்.

தாய் தந்தையர்கள் எப்படியோ அந்தப் பணத்தைக் கட்டிப் படிக்க வைத்து “பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற நிலையில் வீடு வாசல் எல்லாம் வைத்துச் சம்பாரித்து வைத்திருந்தாலும் அதை ஒத்திக்குக் கொடுத்தோ அல்லது விற்றோ தன் பிள்ளைகளை வளர்க்க விரும்புகின்றார்கள்.

ஆனால் டாக்டருக்குப் படிக்கப் போகும் போது பெயிலாகி விட்டான் என்றால் ஐயோ… இவ்வளவு பணம் கொடுத்துப் படிக்க வைத்தேனே… இந்த மாதிரி ஆகி விட்டானே…! தாய் தந்தை வேதனைப்படுகிறார்கள்.

இருபது இலட்சம் ஐம்பது இலட்சம் கொடுத்து டாக்டர் படிப்புக்குச் சேர்த்த பின் தன் பையன் உயர்ந்தவனாக இருப்பான் எதிர்காலத்தில் நன்றாக இருப்பான் நன்றாகச் சம்பாரிப்பான் என்று தாய் தந்தையர் நினைக்கின்றார்கள்.

1.ஆனால் அவன் அங்கே கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்தனமாகச் சுற்றுவதும்
2.அங்கே எதாவது பிரச்சினை என்றால் ஸ்ட்ரைக் செய்வதும்
3.அங்கே நல்ல ஒழுக்கங்கள் இல்லாதபடி என்னென்ன கெட்ட பழக்கங்கள் வளர வேண்டுமோ
4.அதை எல்லாம் கற்றுக் கொண்டு வந்து விடுவான்.

பல இலட்சம் கொடுத்துப் படிக்கப் போவோர் நல்ல பழக்கங்கள் அங்கே பெரும்பகுதி இருப்பதில்லை. தன் விருபத்தின்படி அங்கே நடப்பதும் ஏம்ப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று தட்டிக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அறிவு கெட்டதனமாகக் கேட்கிறாய்..? என்று தாய் தந்தையரைக் கேட்பதற்கு வந்துவிடுகின்றனர்.

இப்படித் தான் தாய் தந்தையரை ஏசவும் பேசவும் போன்ற நிலைகளுக்குப் பிள்ளைகள் ஆளாக்குகின்றனர். ஆனால் இதைக் கண்டு வேதனைப்பட்டு இறந்து போன பிற்பாடு அவர்கள் ஆன்மா எங்கே போகும்…?

விஷத்தின் தன்மை எல்லை கடந்து சென்று பாம்பாகவோ தேளாகவோ தான் பிறக்க நேரும்.

1.என் பையன் இப்படிச் செய்துவிட்டானே… பேசுகின்றானே…! என்ற
2.சாப அலைகளுடன் அந்த எண்ண அலைகளப் பரப்பினால்
3.பையன் டாக்டராக ஆனாலும் கைராசி டாக்டராக இருக்க முடியாது…
4.அவன் பார்க்கும் வைத்தியங்களும் சீராக வராது.. பின் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால் தாய் தந்தையரின் “அருள் வாக்கு” இல்லை என்றால் அதைத் தெளிவாகச் செயல்படுத்த முடியாது.

ஒரு இஞ்சினியருக்குப் படிக்க வைக்க எத்தனையோ இலஞ்சம் கொடுத்து அல்லும் பகலும் பாடுபட்டு பட்டினியாக இருந்து இஞ்சினியராகப் படிக்க வைத்த பின் பையன் எல்லாவற்றையும் கற்று உணர்ந்து கொள்வார்.

ஆனால் அதே சமயத்தில் தன் உணர்வின் தன்மையைச் சீராக்காதபடித் தன்னுடைய இஷ்டத்திற்குப் பல நிலைகளைச் செய்வார்.

அதைக் கண்டு தாய் தந்தையர் வேதனைப்படும் போது இந்தத் தீய வினைகள் இவருக்குள் சேர்ந்து அதே தீய வினையால அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை கூட வருகிறது.

1.தன் பையனை எண்ணி வேதனையைச் சேர்த்து உடல் உணர்வுகள் அனைத்திலும் நஞ்சு கலந்து
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த நஞ்சையே அங்கேயும் உருவாக்கி
3.புகுந்த உடலையும் நோயாக்கி அவரையும் விழுத்தாட்டி விடும்.

எந்தப் பையன் தாய் தந்தையருக்குத் துரோகம் செய்தானோ… சொன்னபடி கேட்கவில்லையோ… அதே எண்ணத்தில் போனால் பையன் உடலுக்குள் ஆன்மா போய்விடும்.

அல்லது… குடும்பத்தில் பையன் திருமணமாகிப் போனாலும்
1.“இப்படிச் செய்கின்றானே…” என்ற எண்ணத்தில் தாய் தந்தையர் ஆன்மா பிரிந்தால்
2.அந்த உணர்வுகள் பாய்ந்து… எவ்வளவு பொருள் ஈட்டினாலும் பையனை வாழ விடாத நிலைகள் ஆக்கிவிடும்.

அல்லது… பையன் திருமணமான பின் சம்பாரித்துச் செல்வச் செழிப்போடு இருந்தாலும் அவன் மனைவி கர்ப்பமுற்றிருக்கும் போது அவன் தாய் தந்தையர் எங்களை எப்படி எல்லாம் செய்தாய்…! இடைஞ்சல் செய்துவிட்டு இன்று இப்படி இருக்கின்றாயே…! என்று எண்ணினால் போதும்

1.கர்ப்பமுற்ற தாய்க்கு இந்த உணர்வுகள் சாடப்படும் போது
2.அந்தக் குழந்தைகளின் நிலை சூனியமாகிவிடும்… அறிவற்றதாகவும் வளர்வதைக் காணலாம்.

இதைப் போல் மனிதர்களுக்குள் ஒன்றுக்கொன்று சந்தர்ப்பபேதத்தால் ஏற்படும் நிலைகளால் பல தீய விளைவுகளாகி அவர்கள் எதிர்காலமே இருள் சூழ்ந்த நிலைகளாகி மனித நினைவே இழந்திடும் நிலை வருகிறது.

இதை எல்லாம் அகற்றுவதற்குத்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று வைத்தார்கள் ஞானிகள். பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று “அருள் ஞானம் பெற வேண்டும்…” என்று தாய் தந்தையர் அன்றைக்கு எண்ண வேண்டும்.

தன் பிள்ளைகள் “இப்படி இருக்கிறார்களே… உன்னை நான் வணங்கினேனே…!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் அந்த வேதனை தான் வளரும்.

ஆகையினாலே
1.பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும்.
2.மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.

பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்…?

எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.

குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் மேலே சொன்ன பகைமைகள் உண்டானாலும்
1.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
2.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.

பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.

அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.

1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.

1.களிமண்ணால் செய்த விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்…!

ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தீய வினைகளைக் கரைக்கலாம்.

தீமை நமக்குள் எப்போதும் உருவாகாதபடி “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு நாம் வளர வேண்டும்

தீமை நமக்குள் எப்போதும் உருவாகாதபடி “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு நாம் வளர வேண்டும்

 

உதாரணமாக காரமான ஒரு பொருளைத் தனித்து உணவாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சியே முன்னணியில் நிற்கும்.

ஆனால் அந்தக் காரத்தை அடக்க “சப்…” என்று இருக்கும் காரம் இல்லாத பொருள்களை அதனுடன் இணைத்து உட்கொண்டால் அந்தக் காரத்தின் தன்மை குறைந்து சுவைமிக்க நிலைகளாக உருவாகின்றது

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது
1.உயிர் இருக்கும் ஈஸ்வரலோகத்தில் அது உருவாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் தான் முன்னணியில் இயக்கும்.
3.மற்ற நல்ல குணங்களின் வலு குறைகிறது.

காரணம் மற்றவர்களுடைய குறைகளையும் துன்பங்களையும் கேட்டறிந்து நுகர்ந்து தான் உதவி செய்கிறோம். நுகரும் போது தான் உயிரும் அதை இயக்குகிறது.

இருந்தாலும் அதைக் கேட்டறிந்த நிமிடத்திலேயே…
1.அவர்கள் கஷ்டங்களைச் சொல்வதற்கு முன் “ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடமே கேட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்வை அப்பொழுதே உயிரிலே இணைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

குழம்பு வைக்கும் போது பல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போல் நாம் கேட்டு… நுகர்ந்த மற்றவரின் உணர்வுக்குள் அந்த அருள் ஞானிகளின் உணர்வைக் கூட்டிவிட்டால் அதைத் தணித்து அருள் உணர்வின் அணுக்களாக மாற்ற முடியும்.

நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும்… சந்தர்ப்பத்தில் ஒருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை நமக்குள் அதிகரிக்கப்படும் போது நல்ல குணத்தின் தன்மைகள் குறைந்து விடுகிறது.

1.அப்பொழுது அந்த நல்ல குணத்தின் தன்மையை அதிகமாக்க…
2.அதை வலிமை பெறச் செய்ய வேண்டும் என்றால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அதனின் உணர்வின் கருக்களாக மாறுகிறது. வேதனையை வலுவிழக்கச் செய்கிறது.

“பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலையில் நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து அந்த உணர்வை நுகர்தல் வேண்டும்…
2.இரத்தத்தில் கலக்கச் செய்தல் வேண்டும்…
3.உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் அதை இணைத்தல் வேண்டும்.

இப்படி… தீமையான உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிட்ட வலிமையான மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தக் கருத்தன்மை உருவாக்கப்பட்டு… நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கப்பட்டு… அது இந்திரலோகத்தில் தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக அதை மாற்றுகின்றது.

அத்தகைய நிலைகளை நாம் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை வலுப் பெறப்படும் போது வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி விடுகிறது.

உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது…!
1.உடல் பெறும் விஷத் தன்மைகளை அங்கே கரைத்து விடுகின்றது.
2.ஒளியின் சரீரமாக… நம்மை ஒளியாக மாற்றுகின்றது.

அருள் ஒளி கொண்டு அனைத்தையும் அரவணைத்துச் சென்றால் தான் பேரானந்தப் பெரு நிலை பெற முடியும்

அருள் ஒளி கொண்டு அனைத்தையும் அரவணைத்துச் சென்றால் தான் பேரானந்தப் பெரு நிலை பெற முடியும்

 

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அதற்கு மத்தியிலே இடைப்பட்ட நிலைகள் வரப்படும் பொழுது ஒருவர் வந்து அவன் மோசமான ஆள்… உதவி செய்யாதீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அப்போது நமக்கு வெறுப்பின் தன்மை வருகிறது.

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணும் போது மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று சொன்னால் நாம் எண்ணிய எண்ணங்களுக்கு அது எதிரியாகிறது. நமக்குள்ளே போர் வருகிறது.

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று தான் நமக்குள் அந்த எதிரியின் தன்மைகள் உருவாகி விடுகிறது. இப்படி உருவாகும் அந்தச் சக்திகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.

கைகேயி இராமன் மீது வெறுப்பு காட்டுகிறது… ஏனென்றால்
1.தன் பையன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி
2.இது தன்னிலே வளர்ந்த உணர்வு…. அந்த அணுக்கள் அதை எண்ணுகின்றது
3.அந்த உணர்வின் தன்மை இங்கே உருவாக்குகின்றது

தசரதனுடைய ஆசையோ இராமன் மீது இருக்கின்றது. அதே சமயத்தில் தனக்குள் இருக்கும் சக்தி (தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவி) அதனுடைய பாசத்தால் ஓங்கி வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அதாவது தசரதன் அவன் மனைவியின் நிலையை மீற முடியவில்லை.

அன்பு கொண்ட மனைவி கோசலை தியாகம் செய்கிறது…! மூத்த மகன் இராமன்… சீதாராமா ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைகள் இருக்கின்றான்.

சுவைக்கொப்பத் தான் எண்ணங்கள் (சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணம்) என்று அவனுடைய எண்ண அலைகள் இருப்பினும் தூண்டிய உணர்ச்சிகள் தன் சகோதரனாக இலட்சுமணனாக இருக்கின்றான்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு எந்த உணர்வின் தன்மை எண்ணி எடுக்கின்றோமோ அதன் சக்தியாக இயக்குகிறது. ஆனால் அதிலே இந்த விஷத்தின் தன்மை கலந்தால் எதிலே இது கலக்கின்றதோ அந்த வேகத்தின் தன்மை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இது எல்லாம்
1.ஒரு அணுவுக்குள் இருக்கும் நிலையும்… அது கவர்ந்து கொண்ட உணர்வின் சக்தியும்
2.அது எவ்வாறு இயக்குகிறது…? என்று தான் இராமாயணம் காட்டுகிறது.

இராமன் காட்டிற்குள் செல்கின்றான். அங்கே புலியும் இருக்கிறது கரடியும் இருக்கிறது. இருந்தாலும் அதைச் சீராக்கிக் கொண்டு வரும் நிலையாக இராமன் என்ன செய்கிறான்…?

1.இந்த உடலுக்குள் வரும் மற்ற ஆசைகளை விடுத்து அமைதியாகச் செல்கிறான்…
2.எல்லாவற்றையும் இவன் சகோதரனாக ஆக்குகின்றான் என்று காட்டுகிறார்கள்.

அதாவது இந்த மனித வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் நம் உடலுக்குள் சகோதரனாக ஆக்க வேண்டும்…!
1.எதையுமே பகைமை ஆக்காது…
2.எதிரியாக உருவாக்காது…
3.இணைந்து வாழச் செய்யும் அரும் பெரும் சக்திகளை நாம் எடுக்க வேண்டும்
4.உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும் என்று இராமாயணம் காட்டுகிறது.

வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

 

வேண்டாதவரைப் பார்க்கும் பொழுது எதிரி என்ற நிலையில் அவர் செய்வது தப்பு என்று நினைக்கின்றோம்… அடுத்தவரிடத்திலும் அதைத் தான் சொல்வோம்.

அவன் நல்லதையே செய்தாலும் கூட…
1.அவனை எந்தக் குறிக்கோளுடன் நாம் முதலில் பதிவு செய்திருக்கின்றோமோ
2.பார்த்தவுடனே ஊரை “ஏமாற்றுவதற்கு என்னவோ… அதைச் செய்கின்றான்…” என்று சொல்கிறோம்.

அவன் நல்லதைச் செய்வான். அவன் செய்வதை நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. அவனைப் பற்றிய தவறான உணர்வுகளையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அதே சமயம் நமக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தப்பு செய்து விட்டால்… அது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது… “அவர் தப்பே செய்ய மாட்டார்…!” என்று தான் நாம் சொல்கிறோம்.

1.இங்கே பாசத்தால் தவறை மறைக்கின்றோம்… தப்பை வளர்க்கின்றோம்
2.அங்கே வெறுப்பால் நியாயத்தையே மறைக்கின்றோம்… ஆனால் தவறை வளர்க்கின்றோம்

இதைப் போன்று நம்மை அறியாது வரக்கூடிய உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வந்து நமக்குள் இயக்குவதைத் தான் கூனி என்றும் சகுனி என்றும் காவியங்களில் காட்டுகிறார்கள்.

ஒருவர் மீது பற்று இல்லை என்றால் அந்த வெறுப்பின் தன்மை வரும் பொழுது கூனி… பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அது இணைத்து விடுகின்றது.

இவ்வாறு நமக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட…
1.என்ன பெரிதாகச் செய்து விட்டார்…!
2.ஏமாற்றுவதற்குத் தான் இதைச் செய்கிறார்..! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோம்

இராமாயணத்தில் கூனி என்ன செய்கிறது…?

இராமன் உயர்ந்தவனாக இருந்தாலும் அது பிடிக்காதபடி அவனைப் பகைமையாக ஊட்டுவதற்கு சிற்றன்னையான கைகேயியிடம் அதை உருவாக்குகின்றது.

தசரதன் உன்னுடைய கணவன் தானே… அவனுக்குப் பிறந்த மகன் தானே பரதனும்…! அவனுக்கு ஏன் அந்த அரசில் உரிமை கிடையாது…? என்ற உணர்வை ஊட்டுகிறது.

இராமன் இருந்தால்தான் சாம்ராஜ்யத்தை ஆள முடியும். இங்கிருந்து அவனை அனுப்பி விட்டால் “பரதன் எளிதாக ஆட்சிக்கு வரலாம்…” என்று இந்த ஆசையின் உணர்வுகளைத் தூண்டுகிறது கூனி.

இராமனைப் பிடிக்கவில்லை… அதனால் பகைமையை ஊட்டி அவ்வாறு செயல்படுகிறது. ஏனென்றால்
1.நமக்குள் எதிரியான உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உடலுக்குள் அணுக்களாக விளைந்து விட்டால் அது எதைச் செய்கிறது..?
2.ஆசையினால் குற்றவாளிகளை எப்படி உருவாக்குகின்றது…? என்ற உணர்வைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

காவியங்களில் மகரிஷிகளால் காட்டப்பட்ட மூலக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.

பகைமைகளை அகற்றி ஒன்றி வாழும் உணர்வை நமக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்தமாக வாழும் வழியைத் தான் காவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு

மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு

 

1.நாம் கவர்வது (சுவாசிப்பது) எல்லாம் மணமாக மாறுகின்றது.
2.அந்த மணத்தை நுகரும் பொழுது அது உணர்வாக ஆகின்றது
3.அந்த உணர்வின் தன்மை தான் இயக்கம் ஆகின்றது
4.அந்த உணர்வின் தன்மை தான் செயலாகின்றது
5.அந்த உணர்வின் தன்மை தான் உடலாகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான்
6.ஆலயத்திலிலுள்ள தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களையும் வைரக் கிரீடத்தையும் வைத்து
7.மலர் மாலைகளையும் பல ஔஷதங்களையும் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களை மார்பில் அணிந்து காட்டி உள்ளார்கள் என்றால் அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
1.அந்தத் தங்கத்தை போல என் மனம் மங்காது இருக்க வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் அவர்கள் மனம் மங்காத நிலை பெற வேண்டும்
3.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் மனம் மங்காத நிலையில் வரவேண்டும்…
4.தங்கத்தைப் போல அவர்கள் மனங்கள் வளர வேண்டும் என்று எல்லோரையும் எண்ணும்படி செய்கிறார்கள்.

ரோட்டில் செல்லும் பொழுது ஒருவன் அடிபட்டுக் கீழே விழுகின்றான். அடப் பாவமே யார் பெற்ற பிள்ளயோ…? என்று உற்றுப் பார்க்கின்றோம். வேதனையான உணர்வை நுகர்கின்றோம்.

ஆனால் அவன் அடிபட்டிருந்தாலும் அவனை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே “அவன் உடல் நலம் பெற வேண்டும்” என்று எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்க வேண்டும்…
1.உடனடியாக நல்ல உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர்…
2.உயர்ந்த பண்புகளையும் எண்ணி எடுக்கும்படி செய்தனர் ஞானிகள்.

ஆலயத்தில் கனிகளை வைத்துக் காட்டியிருக்கின்றார்கள். கனிகளைப் பார்த்த பின் அதனின் சுவையை எண்ணி… அதை உட்கொள்ள வேண்டும் என்று எப்படி விரும்புகிறோமோ அதே போன்று அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆண்டவனுக்குச் சுவை கொண்ட பொங்கலையும் படைத்து வைத்திருக்கின்றார்கள். பலவற்றையும் சேர்த்துச் சமைத்துச் சுவைமிக்க நிலையாக அந்தப் பொங்கலை உருவாக்கியது போன்று
1.வாழ்க்கையில் வரும் அனைத்து உணர்வுகளும் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக நமக்குள் விளைய வேண்டும்
2.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் சுவை கொண்ட வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றும்.
3,இப்படி உயர்ந்த பண்புகளை எண்ணி எடுப்பதற்குத் தான் அங்கே பொங்கலை வைக்கும்படி காட்டுகின்றார்கள்.
4.பல பல சுவை கொண்ட பதார்த்தங்களையும் அங்கே வைக்கின்றார்கள்.

இது எல்லாம் துவைதம்… கண்ணுக்குப் புலப்படக் கூடியது. இதை வைத்துக் கண்ணுக்குப் புலப்படாத உயர்ந்த சக்திகளை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

ஆகவே…
1.இபபடி ஆலயத்தில் ஞானிகளால் உருவாக்கப்பட்ட தெய்வீக நிலையை எண்ணி
2.நமக்குள் அந்தத் தெய்வ குணத்தை உருவாக்கக் கூடிய நிலையும்
3.நமக்குள் அதை உருபெறச் செய்யக்கூடிய நிலையையும்
4.நம் உடலுடன் இணைக்கக் கூடிய நிலையையும்
5.நம் சொல்லால் பிறருடைய நிலைகளை அருள் வழியில் இயக்கக்கூடிய சக்தியையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்…!

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…! (ஞானகுரு).

அண்ணாமலையான் தீபம்

அண்ணாமலையான் தீபம்

 

கார்த்திகை தீபம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனிதனின் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காட்டினார்கள் ஞானிகள். அனைத்தையும் தெரிந்து கொள்ளக்கூடிய நிலைகள் மனிதனின் ஆறாவது அறிவு.

ஒரு விளக்கை ஏற்றினால் அந்த விளக்கின் ஒளி கொண்டு மற்ற பொருள்களைப் பார்க்க நேர்கின்றது… தெரிய முடிகின்றது. அதைப்போல ஆறாவது அறிவால் நாம் தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.

இதை அண்ணாமலை தீபம் என்று சொல்வார்கள்…! அண்ணாமலை தீபம் என்றால்…
1.நமது உடல் மலையாக இருக்கின்றது
2.நம் உயிர் இருக்கும் இடம் ஒளியாக இருக்கின்றது
3.இந்தச் சுடரின் ஒளியைப் போல நம் உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாக்கி ஒளியாக சுடராக மாற்றிடும்
4.அதை நினைவுபடுத்தும் நாள் தான் இந்த கார்த்திகை ஜோதியின் தன்மைகள்.

அன்றைய தினம் நம் வீட்டு முச்சந்தியில் விளக்குகளைக் கொளுத்தி வைப்போம். எல்லா நாளும் அல்லாது வீட்டு முகப்பில் ஏன் விளக்குகளை வைக்கின்றோம்…?

முகப்பில் ஒளி என்ற உணர்வை வைத்து இருளை அகற்றிடும் தன்மையாக மெய் என்ற உணர்வை நமக்குள் அறிந்துணர்ந்து… எது மெய்…? எது பொய்…? என்று வெளிச்சத்தின் மூலமாக நாம் காண முடிகின்றது.

நமக்குள் எந்தத் தீமைகளும் புகாது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும் என்று காட்டுவதற்குத்தான் வீட்டு வாசலின் முகப்பில் விளக்கை வைப்பது.

அந்த சாஸ்திர வழக்கப்படி மனிதர்களுக்கு நினைவுபடுத்தும் நாள் தான் இது. நாம் சுவாசிக்கும் உணர்வு (மூக்கிற்கு நேராக உயிர்) முகப்பில் இருக்கின்றது. தெளிவான உணர்வின் தன்மையை அருள் ஒளி என்ற உணர்வை நாம் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சேர்த்து இருளை அகற்றும் தனக்குள் தெளிந்த உணர்வு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்.

இந்த மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்…
1.நாம் சுவாசிக்கும் முகப்பிலே உயிரிலே பட்டுத்தான் உண்மையின் உணர்வை நாம் அறிகின்றோம்.
2.அங்கே ஒளி என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது பொருளைக் காணும் தன்மைகள் வருகின்றது.

ஆகவே தான் இதை நினைவுபடுத்தும் நாளாக “அண்ணாமலை தீபம்” என்று காட்டுகின்றனர். அண்ணாமலையான் என்றால் நம் உயிர் உடலின் உச்சியிலிருந்து கொண்டு அந்த ஒளியின் தன்மையாக நம்மை இயக்குகிறான்.

உடல் சிவம் என்றாலும் சிவனின் ரூபத்தைக் காட்டி அண்ணாமலையான் என்று உயிரான ஈசனைக் காட்டி… உடலை (சிவத்தை) இயக்குகிறது என்று காட்டுகின்றனர்.

ஆனாலும் நாம் சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு எதன் உணர்வைத் தெரிகின்றோமோ அதன் ஒளியின் தன்மை கொண்டு தான் நாம் இயங்குகின்றோம்.

1.கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றும் போது ஒளியின் உணர்வாக நம் உடலே ஒளியாகின்றது
3.நம் சொல்லும் ஒளியாகின்றது… செயலும் ஒளியாகின்றது.

இதை நினைவுபடுத்தும் நாள் தான் அண்ணாமலையான் தீபம்.

ஆறாவது அறிவு கொண்டு தெரிந்து… தெளிந்து… நாம் வாழும் இந்த மனித உடலில் வேதனை என்ற விஷத்தின் தன்மை எடுத்து நம் ஆன்மாவை அது மறைத்திடாது அருள் ஒளியைப் பெருக்க வேண்டும்.

உதாரணமாக… தான் சேமிக்கும் நஞ்சினை ஒளியாக மாற்றி வைரங்களாக மாற்றுகின்றது நாகம். விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது அது நாகரத்தினமாக மாறுகின்றது.

அதைப் போன்று தான்…
1.மனிதனின் உணர்வின் தன்மைகளை அணுக்களாக்கப்படும் பொழுது உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
2.மற்றொன்றில் இருக்கும் இருளை மாய்த்து அந்த உணர்ச்சிகளை மாற்றி ஒளி என்ற நிலைகளாகப் பிரகாசிக்கச் செய்யும்.

ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதப்படும் பொழுது “ஒளி” என்ற நிலைகள் வருகின்றது. ஒரு உணர்வுடன் ஒரு உணர்வு மோதும் பொழுது “வெப்பமாகி” உணர்வுகள் மாற்றம் அடைகின்றது.

எதன் வழி கொண்டு வருகின்றதோ அதற்குத்தக்க இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றது. இப்படித்தான் உயிர் நம்மை இயக்குகின்றது. நாம் நுகரும் உணர்வை வைத்துத்தான் நம் உயிர் ஆட்சி புரிகின்றது.

ஆகவே இருளை அகற்றி நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை ஏங்கிப் பெறுவோம்.
1.நாம் தெளிந்த மனம் பெறுவோம்… தெளிவான வாழ்க்கை வாழ்வோம்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே இருப்போம்.