நம் பக்கம் தவறு இருக்கிறதா…? என்று பார்க்கின்றோமா…!

நம் பக்கம் தவறு இருக்கிறதா…? என்று பார்க்கின்றோமா…!

 

ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்கு குருநாதர் எம்மை அழைத்துச் சென்றுவிட்டுப் பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால், ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்று எம்மையும் இழுத்தார்.

நாங்கள் குறுக்கே புகுந்தவுடன் பஸ் திடீரென்று நின்றுவிட்டது.

உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து “மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்…” என்கிறார்.

பஸ்ஸின் டிரைவரோ… “ஏனய்யா புத்தி இருக்கிறதா…? பைத்தியமா பிடித்திருக்கிறது…?” என்று திட்டினார்.

குருநாதரும்… “இது போலவா வண்டி ஓட்டுவது…? அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்…” என்று டிரைவரைத் திட்டினார்.

பின் குருநாதர் தெளிவுபடுத்தினார்.

அதாவது… சமுதாயத்தில் இது போன்று சந்தர்ப்பங்கள்
1.சில நேரங்களில் உணர்வின் வேகம் கொண்டு நம் உணர்வுகள் செயல்பட்டு
2.தான் செய்த தவறை மறந்து பஸ் டிரைவரைத்தான் குறை சொல்கிறோம்.

தவறு எப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கத் தவறும் பொழுது டிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.

டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால் அங்கே என்ன நேரும்…? என்று நாம் சிந்திப்பதில்லை.
1.நாம் நசுங்கி இருப்போம் என்று அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.
2.டிரைவர் திட்டியது சரி தான்…! என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால் “நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது…”
3.நல்ல அறிவினை ஊட்டினார்…! என்று எண்ணினால் டிரைவர் மீது பகைமை வராது.

இப்படி… குருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் எமக்குக் கொடுத்தார்.

மக்கள் தங்கள் வாழ்க்கையில் தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிர அங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள இடையூறுகள் தெரிவதில்லை.
1.தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர்.
2.ஆனால் பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகளின் அருள் ஒளியினை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மிடையே வராது விலக்கி
2.அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே “நான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன்…” என்ற அகந்தை கொண்டால் நல்வழியின் உணர்வுகள் உனக்குள் வராது என்று அந்த இடத்தில் குருநாதர் எம்மைத் தெளிவுபடுத்தினார்.

ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி அதே உணர்வினை நுகர்ந்தால் நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும். ஆகவே நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியுமா…? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நுகரும் பொழுது அந்த வேதனை நமக்குள் வருகின்றது. இதைப் போன்று ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால் தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது.

எனவே… தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று
1.நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும் என்று
2.ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.

அதைத் தான் உங்களுக்கும் குருநாதர் காண்பித்த அருள் வழியினைத் தெளிவுபடுத்துகின்றோம்.

ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது அவர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள்.

உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் பெறுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலை உணர்வைத் தூய்மையாக்கிவிடும்.
1.அதே சமயத்தில் அவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
2.அப்பொழுது நமக்கும் பாதுகாப்பாகின்றது.

நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று அபிஷேகமும் ஆராதனையும் செய்வதைப் போன்று உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை அபிஷேகம் செய்யுங்கள்.

இதனால் உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு “நல் அமுது…” கிடைக்கின்றது.

நமது குருநாதர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது அறிவு பெற்ற சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்.

தீமைகளிலிருந்து விடுபடும் நிலையையும் அருள் ஒளியைப் பெறும் நிலையையும் உணர்த்திய உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எமக்குக் காண்பித்தார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீ பெற்றுக் கொள்… இருளை அகற்ற உதவும். மெய்ப்பொருளைக் காண உதவும். உன்னை அறியாது வரும் தீங்கினை அகற்றிட உதவும்…! என்று குருநாதர் எமக்கு உபதேசித்தார்.

1.நமது குருநாதர் தாம் ஒளியின் சரீரமானபின் எம்மை “நீ அதில் ஆயுள் மெம்பராகு…!” என்று உரைத்தார்.
2.அதே போல் யாம் உங்கள் அனைவரையும் அங்கு ஆயுள் மெம்பராக இணைத்து விடுகின்றோம்.

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

 

யாம் ஒரு முறை குருதேவர் ஆணைப்படி இமயமலைக்குச் சென்றோம். அப்பொழுது உடலில் கோவணம் மட்டுமே அணிந்திருந்தோம். வேறு எந்தத் துணியும் எம்மிடம் இல்லை.

அங்கே நிலவும் குளிரில் குருதேவர் அருளிக் கொடுத்த உணர்வுகளை யாம் நுகர்ந்து கொண்டிருந்ததால் எம் உடலில் வெப்பம் உருவாகி… குளிர் எதுவும் தாக்காத வண்ணம் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தோம்.

அந்த பனிமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது யாம் ஒரு இடத்தைக் கடந்திருப்போம். சற்று நேரத்தில் கால் வைத்து நடந்த பகுதி இடிந்து தகர்ந்து விழுந்தது. தகர்ந்து விழுந்த இடத்தைப் பார்த்தால் பெரிய பாதாளமே அங்கே இருந்தது.

அதைப் பார்த்தவுடன் எமது சிந்தனைகள் எங்கே சென்றது…?
1.எமது குழந்தைகள் எமது குடும்பம் எவ்வாறு இருக்கின்றதோ…?
2.யாம் மீண்டும் அவர்களைச் சந்திக்க முடியுமா…? அல்லது இங்கேயே விழுந்து இறந்துவிடுவோமா…?
3.இந்த பாதாளத்தில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்…? என்றுதான் எமது சிந்தனைகள் சென்றன.

உடல் மீது தான் ஆசை தோன்றியது. குரு கொடுத்த உணர்வுகளை அந்த நேரத்தில் மறந்துவிட்டோம்.

இதனால் எமது உடலில் குளிரெடுத்தது. இதயம் “பட…பட…” எனத் துடித்து இரைச்சலாகி… சற்று நேரத்தில் “இறந்தே விடுவோம்”என்ற நிலை எம்மிடத்தில் உருவானது.

அப்பொழுது குருதேவர் எமக்கு முன்னால் உதயமானர்.

மனமே இனியாகிலும் மயங்காதே,
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…?
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா…?
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!
என்ற இந்த பாடலைப் பாடினார்.

சோதனையான சமயத்தில் “இப்படி ஆகின்றதே”என்று வருந்தி “உன் குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணிப் படபடப்பாகி மயங்குகின்றாய்.

ஆனால் சற்று நேரத்திற்கு முன் உனது உயிர் போயிருந்தால் இந்தப் பொன்னடி பொருளை எங்கே காணப் போகின்றாய்…? என்று கேட்கிறார் குருதேவர்.

ஆகவே
1.ஆசையின் உணர்வை விடுத்து அருள் ஒளியின் உணர்வை எடுத்து
2.என் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… இருளை அகற்றி மெய்ப் பொருள் காண வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால் அவர்களை வாழ வைக்கலாம்.

நமக்குள் அருள் உணர்வைக் காக்கலாம் என்றார் குருதேவர்.

1.மனிதருக்கு “வாழ வைக்க வேண்டும்” என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர
2.“இப்படி ஆகி விட்டதே”என்று எண்ணக் கூடாது.

ஏனென்றால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேதனையை எடுக்கப்படும் பொழுதுதான் விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது. அதனால் மனிதரின் செயலாக்கத்தின் தன்மை குறைகின்றது.

இது போன்று யாம் செல்லும் பாதையில் விபத்துக்கள் நேரிடும் பொழுதெல்லாம் எமக்குக் குடும்பத்தின் ஞாபகம் வரும். அப்பொழுது இதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது…? என்று நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார் குருநாதர்.

ஆகவே குரு காண்பித்த அருள் வழியில்
1.நாம் அனைவரும் “நம் உடல் நமக்கு சொந்தமில்லை…!” என்று உணர வேண்டும்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வை அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்
3.மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும்.
4.நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் மனிதர் தாம் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமைகளில் சிக்கிக் கொள்வதை உணர்த்தி “மனிதர் தாம் எவ்வாறு தீமைகளிலிருந்து மீள்வது…?” எனும் நிலையை அனுபவரீதியாக எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

 

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…! இந்த நிலையில்லா உலகத்தில் “எதை நீ சதம் என்று எண்ணுகின்றாய்…?” என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் வைத்து குருநாதர் எம்மைக் கேட்கின்றார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் போகும் இடங்களில்… துயரமான நிலைகளைச் சந்திக்கும் போதெல்லாம் இத்தகைய உணர்வை எனக்குள் ஊட்டிக் கொண்டே வந்தார்.

ஆகவே நினைவு கொள்ளுங்கள்…! இந்த வாழ்க்கையில் நாம் தேடும் செல்வம் நமக்கு நிலையானதா…? இந்த உடல் நமக்கு நிலையானதா…? உடலில் இருக்கும் பொழுது எதைப் பற்ற வேண்டும்…?

1.என்றும் ஏகாந்த நிலை பெற்ற அருள் மகரிஷியின் ஒளியை நான் பெற வேண்டும்
2.என் மனைவி அதைப் பெற வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும்
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
4.எங்கள் பார்வை இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

துன்பங்களைச் சந்திக்கும் நேரத்தில் உன் மனைவி மக்களை நீ எண்ணுகின்றாய். ஆகவே மனைவிக்கு எது வேண்டும்…?

1.மனைவிக்கு அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.என்னுடன் இணைந்த நிலையில் அருள் வழியில் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… அருள் ஒளி பெறும் தகுதி பெற வேண்டும்
4.மனைவியின் பார்வை குழந்தைகளைக் காக்கும் அருள் சக்தியாக வளர வேண்டும்.
5.அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வைப் பாய்ச்சும் நிலை தான் வர வேண்டும்.

அதற்குப் பதிலாகத் துன்ப்ப்படும் நேரத்தில் வேதனையான உணர்வை நுகர்ந்து மனைவி மக்களை நினைத்தால் வேதனைப்படும் உணர்வே வளருகின்றது
1.உன் சிந்தனை சிதறும் தன்மை வருகின்றது
2.உயிர் வெளி சென்று விட்டால் உடல் இல்லை. அப்போது நீ எதை நினைக்கப் போகின்றாய்…?

உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வு கொண்டு பாசத்தால் உன் பையனை நீ எண்ணினால் அவன் உடலிலேதான் புக முடியும். வேதனை என்ற உணர்வை நீ எடுக்கும் பொழுது அங்கே நோயைத்தான் உருவாக்க முடியும்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் வேதனை உருவாக்கப்படும் பொழுது “விஷம் என்ற உணர்வுகள்…” உனக்குள்ளும் அந்த உடலிலிருந்து அவனால் நீ மீண்டும் பெறுகின்றாய்.

உன்னால் அவன் உடல் பெற்றான். உன்னுடைய நினைவுகள் அவனுக்குள் வளரப்படும் பொழுது அவன் நினைவு உனக்குள் வளர்கின்றது. ஆனால் நீ அவனுள் செல்கின்றாய்… இந்த உணர்வின் தன்மை அவனை அழிக்கிறது.

அதாவது… உன் குழந்தைக்குள்ளும் அந்த வேதனை உருவாக்கப்பட்டு அவனையும் காக்க முடியாத நிலையில் நீ எமலோகத்துக்குத்தான் அழைத்துச் செல்ல முடியும். இந்த உடலின் தன்மையை (அவனையும்) அழிக்கின்றது.

அவனை விட்டு வந்தபின் நீ எந்த வேதனைப்பட்டாயோ வேதனைப்படும் உணர்வின் தன்மை கொண்டு உடலை விட்டபின் உன் எண்ணமே எமனாகின்றது… எமலோகம் செல்கின்றாய்.

மனிதன் என்ற சிந்தனை இல்லாதபடி கொன்று குவிக்கும் அசுர உணர்வு கொண்ட பாம்பாகவோ தேளாகவோ புலியாகவோ நீ பிறக்கப் போகின்றாயா…? உனக்கு எது தேவை…? என்ற நிலையில்
1.அங்கே இமயமலையில் வைத்து எனக்கு உணர்த்துகின்றார் நமது குருநாதர்.
2.எதை…?
3.“துன்பத்திலும் இன்பம்” எவ்வாறு காண வேண்டும்…? என்று.

ஆகவே… அருள் ஒளி என்ற உணர்வினை உனக்குள் பெறு, துன்பம் என்ற நிலைகள் மறைந்து பேரின்பம் என்ற நிலை பெற்ற அருள் மகரிஷியின் உணர்வை உனக்குள் கவர்ந்து கொள்.

நீ எண்ணியது எல்லாம் இந்தப் பரலோகத்தில்தான் உண்டு. அதை நீ சிவலோகமாக மாற்று. சிவலோகத்திற்குள் அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இந்திரலோகமாக மாறுகின்றது.

1.அப்போது ஏகாந்த நிலை என்ற பேரானந்த நிலை பெறும் “பரமபதம்” அதாவது அழியா ஒளிச் சரீரம் நீ பெறுவாய்.
2.அருள் ஒளி பெறுவாய்… அருள் ஆனந்தம் பெறுவாய்… அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கு.

அந்த உணர்வுகள் உனக்குள் கலந்திருக்கும் மற்றவர்களின் உணர்வுகளுடன் இணைகின்றது. ஒளியின் தன்மையாக மாறுகின்றது. பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டுகின்றது.

உனக்குள் இருக்கும் அணுக்களில் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கும் போது அதுவும் ஒளி பெறுகிறது. பகைமையற்ற நிலை வருகிறது.

இந்திரலோகத்தில் வரும் போது ஏகாந்த நிலை என்ற எதுவுமே வெறுப்பில்லாத நிலையில் சொர்க்கலோகத்தை நீ உருவாக்குகின்றாய். பரலோகத்திலிருந்து இந்த உடலின் சிவலோகத்திற்கு மாற்றி இந்திரலோகமாக இருந்து சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

ஆனால் வேதனை வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது நரகலோகத்தைத்தான் உருவாக்குகின்றாய்.
1.மீண்டும் வேதனைப்படும் உடலை உருவாக்குகின்றாயா…?
2.அல்லது அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் உருவாக்குகின்றாயா…?

பேரொளி பெற்றுப் பேரானந்தம் பெற்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து அருள் ஒளி பெற்று, இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்து வருகின்றானே… “அந்த ஏகாந்த நிலையை நீ பெறுகிறாயா…?” என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

உனது வாழ்க்கையில், நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆகவே நீ அந்த துருவ மகரிஷியின் அருள் பெற வேண்டும். உன் குடும்பம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வை நீ எடுத்தால் நீ நுகர்ந்த உணர்வு உனக்குள் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது.

1.அந்த அருள் ஒளி பெறுவாய் பேரின்பம் பெறுவாய் பெருவாழ்வு வாழ்வாய்
2.பார்ப்போர் அனைவரும் பேரின்பம் பெறவும் பெரு வாழ்வு வாழச் செய்யும் “அந்த அருளை நீ பெறுவாய்” என்று
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஆசி கொடுத்தார்.

நமது குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் அருள் சக்தி நீங்கள் பெற்றுப் பேரின்ப வாழ்வென்ற நிலைகள் நுகர்ந்து சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக மாற்றிச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.

பேரின்பம் என்ற அழியா ஒளி சரீரம் நீங்கள் அனைவரும் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

“போதும்” என்ற மனம் இல்லாது ஆசைகளைக் கூட்டுவதால் வரும் தீமைகள்

“போதும்” என்ற மனம் இல்லாது ஆசைகளைக் கூட்டுவதால் வரும் தீமைகள்

 

நமது உயிரணு பல கோடி உடல்களைப் பெற்று அவ்வுடல்களில் உள்ள தீமைகளை நீக்கி நீக்கி இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளது.

சூதாடுவது தீமை என்று தெரிகின்றது… ஆனாலும் சூதாடப் போகின்றோம். சூதாட்டத்தில், தோற்கத் தோற்க
1.விளையாட்டில் இழந்த பணத்தைப் பிடித்துவிடலாம் என்று
2.திரும்பத் திரும்ப விளையாடி எல்லாவற்றையும் இழந்து விடுகின்றோம்.

இதற்கு உதாரணமும் ஒன்றைக் குருநாதர் எமக்கு அனுபவப்பூர்வமாகக் காண்பித்தார்.

ஒரு பால் வியாபாரி அடிக்கடி எம்மை வந்து சந்திப்பார். யாம் குருநாதருடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் அந்தப் பால் வியாபாரி எம்மிடம் வந்து “குருதேவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது…” என்று ஊரில் பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.

ஆகையினால் சற்குருதேவர் எனக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தால் போதும் என்று யாம் தனித்து இருந்த நேரத்தில் வந்து கூறினார்.

“என்ன ஆசீர்வாதம் வேண்டும்…?” என்று பால் வியாபாரியிடம் கேட்டோம்.

அதற்குப் பால் வியாபாரி “நான் சீட்டு விளையாடியதில் என்னிடம் இருந்த எல்லா பணமும் போய்விட்டது, வேறு வழி இல்லை… இந்தச் சைக்கிளை வைத்து விளையாடலாம்…! என்று பார்க்கின்றேன்.

இதுவும் போய்விட்டதென்றால் பால் எடுத்து விற்பதற்கு வழி இல்லை. ஆகவே குருதேவரிடம் சொல்லி “நான் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பதற்கு ஆசீர்வாதம் வாங்கிக் கொடுங்கள்…!” என்று கூறினார்.

மறு நாள் குருநாதரின் அருகில் யாம் இருக்கும் பொழுது பால் வியாபாரி எம்மிடம் வந்து “அண்ணே… குருநாதரிடம் அந்த விபரம் கூறினார்களா…?” என்று கேட்டார்.

“பால் வியாபாரி கேட்டதை ஏன் என்னிடம் சொல்லவில்லை…?” என்று குருநாதர் எம்மைக் கேட்டுவிட்டு “நீ (பால் வியாபாரி) ஜெயித்து வா என்று ஆசீர்வாதம் கொடு…” எம்மை பார்த்து “அவனுக்கு ஆசீர்வாதம் கொடு…!” என்று கூறினார் குருநாதர்.

யாம் அவ்வாறே பால் வியாபாரியை ஆசீர்வாதித்த பின் அவர் சீட்டு விளையாடச் சென்றார்.

சீட்டு விளையாட்டில் பால் வியாபாரி ஒரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்தார். சீட்டு விளையாட்டில் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தவுடனே, பால் வியாபாரி எமக்குப் புது வேஷ்டி புதுச் சட்டை பெட்ஷீட் வாங்கி வந்தார்.

குருநாதர் வெறும் கோவணத்துணிதான் கட்டியிருந்தார். எனவே அவருக்கு படுத்துக் கொள்ள பெட்ஷீட் இல்லையாம். அதனால் அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கி வந்திருந்தார் பால் வியாபாரி.

குருநாதர் அதை வாங்கித் தார்தாராகக் கிழித்தெறிந்தார்.

சீட்டு விளையாட்டில் ஓரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்ததும் பால் வியாபாரிக்கு “மேலும் ஆசை வந்துவிட்டது…” இன்னும் பத்து நாளைக்கு விளையாடினால் தான் பெரிய பங்களா… கார் வாங்கி விடலாம்” என்று திட்டமிட்டார்.

பால் வியாபாரி அன்று ரூபாய் 25,000 தான் சம்பாதிக்க முடிந்தது. அதையும் இங்கே கொண்டு வந்து செலவழிக்கின்றார். எங்களுக்குத் துணிமணியும் பெட்ஷீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவருடைய நண்பர்களுக்கெல்லாம் “நீ காபி சாப்பிடு… நீ காபி சாப்பிடு…” என்று கூறி, அதில் ரூபாய் 5,000 வரை செலவழித்தார்… 20,000 ரூபாய் மிச்சம்.

பால் வியாபாரி கொடுத்த பெட்ஷீட்டை, குருநாதர் கிழித்து எறிந்துவிட்டு
1.பால் வியாபாரியினுடைய ஆசை எதிலே போகின்றது…? ஜெயிக்க வேண்டும் என்று கேட்டான்.
2.அதைக் கொடுத்தபின் இவன் ஆசை எங்கே போகின்றது பார்
3.ஏதோ ஜெயித்துக் கொடுத்தால், இனிமேல் சீட்டு விளையாடப் போக மாட்டேன் என்று தானே கூறினான்.
4.இழந்த பணத்தைச் சம்பாதித்தான்… ஜெயித்த பணத்தை அனாவசியமாகச் செலவழிக்கின்றான்,
5.உனக்கும் எனக்கும் வேறு வாங்கிக் கொடுத்திருக்கின்றான்… நாளை எப்படி வருவான் பார்…? என்று கூறினார்.

மறு நாள் பால் வியாபாரி சீட்டு விளையாடி தன்னிடம் இருந்த சைக்கிளும் போய்விட்டது. பால் வியாபாரி எங்களிடம் வந்து “என்ன சாமி…? இப்படி ஆகிவிட்டது…!” என்று கேட்டார்.

முதலில் ஆசி கொடுத்து ஜெயித்த பின் அவரின் ஆசை சீட்டு விளையாட்டின் மீதுதான் போகின்றது.

இப்படி சமுதாயத்தில் மனிதர் சூதுகளில் ஆசையை வளர்த்துக் கொள்ளும் பொழுது “போதும்” எனும் மனம் வருவதில்லை. நம்முடைய தொழிலை முன்னேற்றி பொருளைச் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் இல்லை.

இப்படி சந்தர்ப்பங்கள் எப்படி வருகின்றது என்று அந்த இடத்தில் குருநாதர் காண்பித்தார்.

குருநாதர் சாதாரணமாக விடவில்லை.
1.ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…?
2.அதிலிருந்து நீ எப்படித் தப்புவது…? என்று அனுபவபூர்வமாக எமக்குக் காட்டினார்.

காலரா நோயை ஊரை விட்டே விரட்டியது

காலரா நோயை ஊரை விட்டே விரட்டியது

 

ஒரு சமயம் யாம் வசித்த ஊரில் காலரா எனும் வியாதி பரவியது. ஊரில் உள்ள பலர் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்தனர். அது சமயம் எமக்குத் தைரியம் அதிகம் இருந்தது.

அதனால் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்த பலரை… அதாவது சுமார் 20 அல்லது 30 பிணங்களைத் தூக்கிச் சுடுகாட்டில் போட்டு வந்தோம். ஆனால் அது சமயம் இது போன்ற பணிக்குப் பயந்து யாரும் வரவில்லை.

அது சமயம் எமது தந்தையைப் பெற்ற அம்மாவிற்கு… அதாவது எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. உறவினர்கள் சிலர் அவரை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்கள்.

பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. அவரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று யாம் கேள்விப்பட்டதும் எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது.
1.காலராவில் இறந்த 30 பிணங்களை தூக்கிப் போட்டோம்… அப்பொழுது எமக்கு ஒன்றும் ஆகவில்லை.
2.எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டதே…! என்று எமது உணர்வில் சிறிது இடம் கொடுத்தவுடனே
3.எமக்கும் காலரா வந்துவிட்டது.

குருநாதர் இந்தச் சம்பவத்தைப் பின்னாட்களில் எமக்கு நினைவுபடுத்தி… “நீ தைரியத்துடனும் வலிமையுடனும் காலராவில் இறந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். உனக்கு ஒன்றும் ஆகவில்லை.

ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டதே என்று எண்ணியவுடனே, உனக்கும் காலரா நோய் வந்துவிட்டது.
1.மனிதரிடத்தில் உணர்வு என்ன வேகமாக வேலை செய்கின்றது என்று பார்த்தாயா…? என்று கேட்டார்.
2.காலராவால் தாக்கப்பட்ட “பாட்டியின் மீதான எண்ணம் வந்தபின் தான்…” எமக்கும் காலரா நோய் வந்தது என்று
3.குருநாதர் சொன்ன பின் தான் யாம் தெரிந்து கொண்டோம்.

மதுரை சுப்பிரமணியபுரத்தில் ஒரு வாய்க்கால் இருக்கும். இப்பொழுது அந்த இடத்தில் மேம்பாலம் கட்டியிருக்கின்றார்கள். அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுமே யாம் அந்த வாய்க்காலுக்குச் சென்று விட்டோம்.

வாய்க்காலில் கால் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்தால் அது நடக்காத காரியமாக இருந்தது. ஏனென்றால் வயிற்றுப் போக்கு நிற்காமல் போய்க் கொண்டிருந்தது.

பிறகு, ஒருவாறாகச் சமாளித்து ஹோட்டலுக்குச் சென்று “தயிர் சாதம் கொடுங்கள்…” என்று சொல்லி தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். மனதில் “யாம் ஒரு பயில்வான்…” என்று எண்ணி தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் தயிர் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிட்டது. ஹோட்டலுக்குள்ளேயே நடந்து விட்டது, பிறகு மறுபடியும் வாய்க்காலுக்கு வந்து அமர்ந்து அலசிக் கொண்டிருந்தோம்.

ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குத் தைரியம் சிறிது குறைந்தது. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன பண்ணிவிடும்…? பார்க்கலாம்…!” என்று இருந்தோம். பசித்தால் இன்னும் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடலாம் என்று எண்ணினோம்.

ஏனென்றால் தயிர் குளிர்ச்சி. தயிர் சாதம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று இருந்தோம். அதனால் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். ஆனால் சாப்பிட்ட சாதம், வயிற்றுப் போக்கால் முழுது முழுதாக வெளியே சென்றது.

எமது கண் முழியெல்லாம் உள்ளே சென்றுவிட்டது. சரி…! நாம் இந்தத் தண்ணீரிலேயே உள்ளே சென்று விடுவோம் போலிருக்கின்றது. பாட்டியையும் பார்க்க முடியாது போலிருக்கின்றது என்று எண்ணினோம். நடந்த நிகழ்ச்சி இது.

காலரா வியாதி பரவியதால் ஊரை விட்டே நிறைய பேர் ஓடிவிட்டனர். பண்டம் பாத்திரங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு “தாம் தப்பித்தால் போதும்…” என்று ஓடிவிட்டனர்.

வாய்க்காலை ஒட்டி ஒரு பாலம் இருந்தது. அதில் போய் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது அந்தப் பாலத்தின் வழியாக வண்டி ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார்.

அவர் எம்மைப் பார்த்து, “என்னய்யா… இப்படி உட்கார்ந்திருக்கிறாய்…?” என்று கேட்டார்.

“காலராவில் இறந்தவர்களைத் தூக்கிப் போட்டு வந்தேன், இப்பொழுது எனக்கே காலரா வியாதி வந்துவிட்டது” என்று அவரிடம் கூறினோம்.

“அட… நீ என் வண்டியில் ஏறி உட்கார்…” என்று கூறி எம்மை அவருடைய வண்டியின் பின் சீட்டில் அமரச் செய்து அவருடைய கரும்புக் காட்டிற்கு அழைத்து சென்றார். கரும்பைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து… “நன்றாக மூக்கு பிடிக்கச் சாப்பிடு…” என்று கூறினார்.

1.அவர் கொடுத்த கரும்புச் சாறைக் குடித்தபின் எமக்கிருந்த காலரா நோய் எங்கே போனதென்றே தெரியவில்லை.
2.யாம், பூரண குணம் அடைந்தோம்.
3.காலராவிற்கு மருந்து கரும்புச் சாறு…! இன்னும் கரும்புச் சாறு கொடுக்கச் சொல்லிக் குடித்து விட்டு அங்கிருந்து வந்தோம்.

எமது உடல் நிலை குணமானவுடனே, சும்மா இருக்கவில்லை. ஊர் முழுவதும் சுற்றி மக்களிடம் யாசகம் கேட்டுப் பெற்று காசு சேர்த்து கரும்புச் சற்றை வாங்கிக் காலராவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுத்தோம்.

ஏனென்றால் யாம் அப்பொழுது தேசிய இயக்கத்தில் இருந்ததால் பொது சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு… “நீ குடி… நீ குடி…” என்று எல்லோருக்கும் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்தோம்.

அதன் பின் காலரா நோயும் ஊரை விட்டே ஓடிப்போயிற்று. இது ஒரு சந்தர்ப்பம்.

அப்பொழுதுதான் சொன்னார் குருநாதர்
1.“டேய்… உன்னைக் காப்பாற்றுவதற்கு அப்பொழுது நான் தான்டா வண்டியில் வந்தேன்…”
2. நீ செத்துப் போவாய்… என்று எண்ணினாய்…! ஆனால் “நீ சாகக் கூடாது என்று நான் வந்தேன்…” என்று கூறினார்.

எமக்கிருந்த காலரா நோய் நீங்கியபின் ஆசனம் செய்வது பயில்வான் தனம் செய்வது என்பதெல்லாம் எம்மால் முடியாமல் போய்விட்டது.

யாம் சாதரணமாக மதுரையில் ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை உடல் பயிற்சிக்காக ஓடுவோம். ஓடியபடியே திருப்பரங்குன்றத்திலிருந்து ஆண்டாள்புரம் வரை திரும்பி வருவோம். ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் 6 மைல் இருக்கும். அதன் பிறகு காலை 6 மணிக்கு மில்லிற்கு வேலைக்குப் போவோம்.

இது போன்று இருந்த யாம் பாட்டிக்கு நோய் தாக்கியவுடனே எமக்கும் காலரா நோய் வந்துவிட்டது. “பாட்டியை எண்ணினாய் என்ன ஆனது உனக்கு…?” என்று கேட்டார் குருநாதர்.

1.குருநாதர் சொன்ன பின்தான் உணர்வின் இயக்கத்தை யாம் அறிந்தோம்.
2.குருநாதர் சொல்லவில்லை என்றால் எமக்கு ஒன்றும் தெரியாது.

இறந்தவர்களைத் தைரியமாகத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் தாக்கிவிட்டதே என்று ஏங்கினாய்,

உடனே இதன் உணர்வு உன்னிடத்தில் என்ன வேலை செய்தது…? என்று தெரிந்து கொண்டாயல்லவா…! என்று கேட்டார் குருநாதர். இது போன்ற உணர்வுகள் ஒவ்வொன்றையும் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

குருநாதர் காண்பித்த அருள் வழியில் தங்களுள் மெய் ஞானம் பெற்று, மெய் வழியில் வாழ்ந்து மெய்பொருள் காணும் திறனை தங்களுக்குள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று
1.உங்களுடைய வாழ்க்கையில் உணர்வின் இயக்கங்களை அறியும் ஆற்றல் பெற்று அருள் ஞானம் பெற்று
2.சர்வ தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றல் மிக்க அருள் சக்தி பெற்று
3.இந்தப் பிறவியில், பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக
4.என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச்சரீரம் பெறும் நிலையாக
5.பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

தாய் தந்தையரை விண் செலுத்திய பின் தான் விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது

தாய் தந்தையரை விண் செலுத்திய பின் தான் விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது

 

யாம் குருநாதர் காண்பித்த அருள் வழி கொண்டு பல ஊர்களுக்கும் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம் எமது தாய் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்து கொண்டிருந்தார். குருநாதர் அதை எமக்கு உணர்த்தினார்.

1.உனது அம்மாவைப் பழைய நிலைகளுக்குச் செல்லும்படி விட்டுவிடாதே…!
2.அவர்களை முதலில் விண் செலுத்த வேண்டும்.
3.அதன் பிறகு தான் நீ விண்ணுக்குப் போக முடியும் என்று நினைவுபடுத்தினார்.

ஆகையால் எமது தாயைச் சந்திக்கச் சென்றோம். அங்கு அவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களால் சாப்பிட முடியவில்லை. கண் பார்வை முழுவதும் மங்கி விட்டது, உடல் வீங்கியிருந்தது, எழுந்திருப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார்கள்.

யாம் அது சமயம் சாமியம்மா அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஆகையால் எமது தாய் சாமியம்மாவை வீரம்மா… என்று பெயர் சொல்லி அழைத்து “ஒரு முட்டையை எடுத்து வேக வைத்து இரண்டு மிளகு சிறிது உப்பு வைத்து என் நாக்கில் வை… வீரம்மா” என்றார்கள்.

ஏனென்றால் எமது தாய் முட்டை கோழிக்கறி போன்றவைகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். யாமும் முன்பு முட்டை கோழி என்றெல்லாம் சாப்பிட்டோம்.

எமது தாயால் அந்த இறுதிக் கட்டத்தில் சாப்பிடவே முடியாது. ஆனால் வேக வைத்த கோழி முட்டையில் இரண்டு மிளகும் சிறிது உப்பும் வைத்துக் கொண்டுவா என்றால்
1.எமது தாயின் நினைவு எங்கிருக்கிறது…?
2.கோழியின் மேல்தான் இருக்கின்றது.

உனது அம்மா முட்டையும் கோழிக் கறியும் நிறையச் சாப்பிட்டிருப்பார்கள், அதனின் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்திருக்கின்றது என்று குருநாதர் கூறினார்.

எமது தாய்க்கு உதவியாக சாமியம்மாவை இருக்கச் செய்துவிட்டு யாம் தாரமங்கலம் வந்து விட்டோம். ஏனென்றால், யாம் தாரமங்கலம் வருவதாக உரைத்து ஊர் முழுவதும் விளம்பரமும் செய்து விட்டார்கள்.

இதனால் தாரமங்கலத்திற்குத் தவிர்க்க முடியாமல் வர வேண்டியதாகி விட்டது. சேலத்தில் உள்ள அன்பர்களிடம் இந்தச் சூழ்நிலையைச் சொல்லிவிட்டுத் தாரமங்கலம் வந்து விட்டோம்.

சேலத்து அன்பர்கள் தாரமங்கலம் அன்பர்களிடம் ஞானகுரு அவர்களின் தாயின் உடல்நிலை மிகவும் குன்றியிருக்கிறது. ஆகவே ஏதேனும் தகவல் வந்தால் ஞானகுரு அவர்களை உடனே வழியனுப்பி வையுங்கள்” என்று கூறியிருந்தார்கள்.

தாரமங்கலத்தில் யாம் கூட்டத்தில் உபதேசம் கொடுத்து முடித்து தியானத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது எமது தாயின் ஆன்மா வெளி வருகின்றது.

அது சமயம் எமது குருநாதர் சொன்னது போன்று எமது தாயை மனதில் நினைத்துத் தியானம் செய்தோம். அப்பொழுது அதனின் உணர்வின் நிலைகள் அங்கே தெரிந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் யாரோ ஒரு பெரியம்மா போகின்றார்கள் என்றார்கள்.

இது தாரமங்கலத்தில் நடந்த சம்பவம்.

அம்மாவின் உருவம் அதனின் உடைகள் அதனின் உணர்வுகள் அங்கே தெரிந்தது. அப்பொழுது எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தோம்.

1.எமது தாயின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்தபின் தான்
2.அந்த உணர்வின் சக்தியின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியினை யாம் பெற முடிந்தது.
3.அதற்கு முன்பு வரையிலும் எம்மால் பெற முடியவில்லை.
4.அது வரையிலும் எந்த ஒரு உயிரான்மாவையும் விண்ணிற்கு ஏற்ற முடியவில்லை.

அன்னை தந்தையின் உணர்வுகள் உனது உடலில் இருப்பதனால் அவர்களின் உயிரான்மாக்களை முதலில் விண்ணிற்கு ஏற்ற வேண்டும் என்பதை எமது குருநாதர் எமக்கு உரைத்தார்.

நான் உனக்குக் குருவாக இருக்கலாம்… அருள் ஞான உணர்வின் தன்மையை வளர்க்கலாம். இருந்தாலும்
1.உன் அன்னை தந்தையை நீ விண்ணிற்குச் செலுத்த வேண்டும்.
2.அதன் உணர்வின் தன்மை கொண்டு தான் என்னையும் அங்கே அழைத்துச் செல்ல முடியும் என்று குருநாதர் உபதேசித்தார்.

“குரு வாக்கு” தப்புவதில்லை. நாம் சாதாரண மனிதராக இருக்கின்றோம் என்று நினைக்கின்றோம். அது சமயம் தான் எமது தாயின் உயிரான்மாவை விண்ணிற்கு ஏற்றினோம்.

எமது தந்தையின் இறப்பின் பொழுது கூட யாம் அவர் அருகில் இல்லை. அப்போது கரூரில் கால் நடையாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். இராஜபாளையத்திலிருந்து கரூருக்குக் கால் நடையாக வந்திருந்தோம்.

அது சமயம் தான் எமது தந்தையின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிகின்றது. அப்போது அதனின் உணர்வுகள் காட்சிகளாகத் தெரிந்தது. அருகே ஒரு இடத்தில் போய் அமர்ந்தோம்.

அங்கே ஏற்கனவே அறிமுகமான ஒருவர் இருந்தார். அந்த நேரத்தில், அவருக்கும் காட்சி தெரிந்தது. “ஐயோ.. உங்கள் அப்பா போகிறாரே…!” என்றார்,

அருகிலிருந்த இன்னொருவர் “யாரோ ஒரு பெரியவர் போகிறார்…” என்று சொன்னார். யாம் அங்கேயே அமர்ந்து எமது தந்தையின் உயிரான்மாவை விண்ணிற்கு அனுப்பினோம்.

எம்மை ஈன்றெடுத்த தாய் தந்தைதான் எமக்குக் கடவுள். எம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள் தான். குருநாதர் காண்பித்த அருள் வழியில் அவர்களை விண் செலுத்தினோம்.

1.முதலில் எமது தந்தை விண் சென்றார்… அடுத்து எமது தாயையும் விண் செலுத்தினோம்
2.இருவரையும் சேர்த்துச் சிவசக்தியின் உணர்வுகளாக அங்கே வளர்க்கச் செய்ய வேண்டும்.
3.அப்பொழுது தான் ஒளியின் சரீரமாக வளர்க்க முடியும் என்று குருநாதர் உணர்த்தினார்.

அதன் பிறகு
1.இதன் உணர்வின் ஒளி கொண்டு உன் உணர்வுடனே வருகின்றேன்… உணர்வின் ஒளியை உணர்த்துகின்றேன்.
2.என்னை விண்ணில் செலுத்திவிடு… உணர்வின் ஒளியாக இயக்கிவிடு…! என்று குரு சொன்னார்.

எம் அன்னை தந்தையர் விண் சென்றபின்தான் குருவின் உணர்வின் ஒலிகளை அவர் காண்பித்த அறநெறிகள் கொண்டு அவர்களையும் விண்ணிற்குச் செலுத்தினோம்.

உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்துவதற்காக விண்ணின் ஆற்றளைப் பெறுவதற்கு… கேதார்நாத் பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு எம்மைப் போகுமாறு செய்தார் குருநாதர்.

அங்கே கடும் தவம் இருந்த ஆன்மாக்கள் உணர்வின் தன்மை எடுத்துத் தம் உணர்வுக்குள் ஒளியாக மாற்றியது எப்படி…? என்பதை எம் அன்னை தந்தையை விண்ணிற்கு உயர்த்தியபின்தான் யாம் அந்தப் பேருண்மைகளை அறிய முடிந்தது.

ஆகவே இன்றைய நிலைகளில் “யாம் உங்களுக்கு உபதேசிப்பது அனைத்தும் பேருண்மையின் உணர்வுகள்…”

அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் முன்னோரின் உயிரான்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் பரவாயில்லை. நீங்களும் உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக அதிகாலை துருவ தியானத்திலும் பௌர்ணமி நாட்களிலும் தியானத்தில் அமர்ந்து
1.எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலத் தெய்வங்களான முன்னோரின் உயிரான்மாக்கள்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
3.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… பேரின்பப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று எண்ணி உந்தித் தள்ளுங்கள்.

முன்னோர்கள் பாசத்துடன் உங்களைக் காத்தார்கள். ஆகவே அவர்களை விண் செலுத்தினால் அவர்களுடைய உணர்வின் தொடர், உங்களுக்குள்ளும் வரும்.

அவர்கள் விண்ணில் இருக்கப்படும் பொழுது உங்களுடைய எண்ணத்தை அங்கே செலுத்தினால் சப்தரிஷிகளின் அருள் சக்தியை… ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையை அடைந்தவர்களின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெற முடியும்.

1.உங்களை வளர்த்து வழிகாட்டிய உணர்வுகள் ஒளியாக நிலைக்கின்றது.
2.இதன் உணர்வின் தன்மை கொண்டு உங்கள் உணர்வுகளும் ஒளியாக மாறுகின்றது.

நீங்கள் இதனை எளிதில் பெற முடியும். உங்களை நம்புங்கள்…! இதன் வழி செயல்படும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

குரு உணர்த்திய அருள் வழி – குரு பலம்

குரு உணர்த்திய அருள் வழி – குரு பலம்

 

குருதேவர் ஒருமுறை எம்மை ஆனைமலைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று இத்தனாவது மைலில் இன்ன மரத்தில் இது போன்று இருக்கும் மச்சத்தை, (ஒரு அடையாளம்) எடுத்து வா என்று சொல்கிறார்.

அவர் சொன்ன நேரம், மாலை ஆறு மணி இருக்கும். அந்த நேரங்களில் காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆகவே, குருதேவர் சொன்னை இடத்திற்கு எவ்வாறு செல்வது…? என்று பயந்தோம்.

நான் எது சொன்னாலும் செய்வேன்…! என்று சொன்னாயே இபொழுது “முடியாது” என்று சொல்கிறாயே “மறுக்காதே… சென்று வா” என்று கூறினார்.

யாமும் பயந்தபடி சிறிது தூரம் நடந்தோம். பிறகு “இங்கே வா…” என்று எம்மை அழைத்தார்.

அழைத்தவர் எம்மை அருகில் நிறுத்தி “சில ஆற்றல்களை…” யாம் பெறும் வண்ணம் உபதேசங்களைக் கொடுத்து இப்பொழுது நான் சொல்லிக் கொடுத்தவைகளை உபயோகப்படுத்து. எதிரே தெரியும் மரம் கீழே சாயும்…! என்றார்.

அவ்வாறே, அவர் சொல்லிக் கொடுத்தவைகளை எதிரே தெரியும் மரத்தின் முன் செய்ய அந்த மரம் கீழே சாய்ந்தது. பிறகு குருதேவர் “இப்பொழுது காட்டினுள் செல்… நான் சொன்னதை எடுத்து வா…!” என்றார்.

எமக்கு, இப்பொழுது தைரியம் பிறந்தது. துணிவுடன் காட்டினுள் நடந்தோம்.

ஏற்கனவே வேட்டைக்காக காடுகளுக்குள் சென்ற அனுபவம் எமக்கு உண்டு. யானைகள் அருகே நடமாடும் பொழுது கீழே காற்று வராது, மரக்கிளைகள் அசையும் ஒலி கேட்கும்.

அந்த அறிகுறிகளை வைத்து, யானைகளின் நடமாட்டத்தின் தூரத்தைக் கணிப்போம். இதனை அடிப்படையாகக் கொண்டு யாம் நாலாபுறமும் கவனித்தவாறே சென்று கொண்டிருந்தோம்.

உற்றுக் கவனிக்கும் பொழுது தூரத்தில்… யானைகள் காதை ஆட்டாமல் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.

இருந்தாலும் எமக்கு நிறைய தைரியம் இருந்தது. ஏனென்றால் யாம் விரலை அசைத்தால் போதும் எதனையும் கீழே சாய்க்கும் வலிமை உள்ளதே என்ற நம்பிக்கை.

இந்த நம்பிக்கையுடன் யாம் முன்னேறிச் சென்று கொண்டிருந்தபோது, குருதேவர்… “ஏய் தெலுங்கு ராஜ்ஜியம்…!” என்று ennaik கூவி அழைத்தார்.

குருதேவர் எம்மைத் திட்ட வேண்டும் என்று கருதினால் “தெலுங்கு ராஜ்ஜியம்…” என்றுதான் திட்டுவார். இப்பொழுதும் “தெலுங்கு ராஜ்ஜியம்” எங்கே போகிறாய்…? என்று கேட்டார்.

“நீங்கள் சொன்ன மச்சத்தை எடுக்கச் செல்கிறோம் என்றோம்…” யாம்.

இப்பொழுது நீ என்ன நினைத்தாய்…? என்று கேட்டார்.

அதற்கு யாம் “நீங்கள் கொடுத்த ஆற்றலைக் கொண்டு… யானைகளைச் சாய்க்கப் போகிறேன்…” என்று பதில் கூறினோம்.

அதற்கு குருதேவர்… “நீ இப்பொழுது யார் வீட்டிற்குள் செல்கின்றாய் என்று தெரிகின்றதா…? நீ வாழும் வீட்டில் அந்நியன் ஒருவன் நுழைந்து விட்டால் உனக்குக் கோபம் வருமல்லவா…! அதைப் போன்றுதான் யானைகளுக்கும்…! அது வாழும் காடுதான் அதற்கு வீடு.. அவ்வாறு இருக்கையில் அதனுடைய வீட்டிற்குள் சென்றால், அதற்குக் கோபம் வருமல்லவா…?

நீ உன்னுடைய காரியமாகச் செல்கின்றாய்.
1.உனக்குள் வலிமை இருக்கின்றது என்ற காரணத்தினால் பிறிதொன்றை வீழ்த்திவிடும்… அழித்துவிடும் எண்ணம் கொள்வாயானால்…
2.அந்த எண்ணம் உனது உயிரான ஈசனால் இயக்கப்பட்டு
3.அந்த உணர்வின் சக்தி, உன் உடல் முழுவதும் படருகின்றது.
4.இதனால் உனக்குள் உள்ள நல்ல சக்தியை இழக்கின்றாய்.

நீ யானையிடம் இருந்து தப்பித்தாலும்… அதைக் கொன்று விடவேண்டும் என்று அதன் மீது ஆற்றலை உபயோகப்படுத்திய உணர்வின் சத்து உனக்குள் சென்று “உன்னுள் உள்ள நல்ல உணர்வுகளை மாய்க்கும் விதத்தை அறிந்து கொள்…! என்று அங்கே உணர்த்துகிறார்.

எமக்கு ஒன்றும் புரியவில்லை…! வலிமை இருக்கிறது என்று மற்றொன்றைக் கொல்ல முற்படக்கூடாது. ஆனால் வருகின்ற ஆபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது…? என்று குழம்பினோம்.

அதற்கு குருதேவர்… “இவ்வளவு பெரிய ஆற்றல் உனக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதனை நீ மற்றொன்றை மாய்த்திடும் நிலைக்கு பயன்படுத்துவேயானால் உன் உணர்வுகள் எங்கே போகும்…?

எவ்வாறு நீ உனக்கு உணர்த்திய உணர்வின் ஆற்றல்களை பெறப் போகின்றாய்…? என்று அவர் கேட்கிறபொழுதுதான்… என்ன செய்வது…? என்று தெரியாமல் “குருவை மறந்துவிட்டது…” நினைவுக்கு வருகின்றது.

1.குரு அருளின் துணை கொண்டு செயல்பட வேண்டிய நாம்
2.குரு நமக்குப் பெரும் ஆற்றல் கொடுத்திருக்கிறார் என்று அதைப் பெரிதாக எண்ணி குருவை மறந்து
3.பிறிதொன்றை வீழ்த்திடும் அசுர உணர்வைத்தான் எண்ண முடிந்ததே தவிர…
4.என்னால் நல்ல உணர்வை அங்கே எண்ண முடியவில்லை…! என்பதை நிதர்சனமாகவே காட்டுகின்றார்.

யானையிடமிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும்…? என்று எண்ணி கண்ணை மூடித் தியானிக்கும் பொழுது அதனின் உணர்வலைகளை அறிய நேரிடுகின்றது.

அதாவது…
1.யானையின் மணத்தை நுகர்…! அதனின் உணர்வின் சக்தி உனக்குள் சேரும்.
2.யானைக்கும் உணர்வின் ஆற்றலை உணரும் சக்தி உண்டு.
3.அப்பொழுது அதனின் மணத்தை நீ நுகரும் பொழுது அதனின் சம எடையாக வருகின்றாய்.
4.அதனால், யானை உன்னை ஒன்றும் செய்யாது…! என்று கூறுகிறார்.

பிறகு யானையின் மணத்தை என்மீது பரவச் செய்கின்றார்.

யானைகள் காதை விடைத்துத் தூக்கி விட்டால் அது கோபத்தில் இருக்கிறது… ஆளைப் பிடித்துக் கொன்றுவிடும் என்பது பொருள். யாம் அதே சிந்தனையில் இருந்து கொண்டிருக்கின்ற பொழுது எம்மை உரசியவாறே சுமார் 13 யானைகள் கடந்து செல்கின்றன.

அப்பொழுது குருதேவர் சொல்கின்றார்,
1.நீ எதை எதனுடைய நிலைகளில் வலுப் பெறச் செய்ய வேண்டும்…? குரு காட்டிய வழி எது…?
2.குருவினுடைய சக்தியை உணர்ந்து கொண்டாய் என்றால் அந்தக் குருவின் துணை கொண்டு எப்படி இயங்க வேண்டும்…? என்பதை உணர்த்தி
3.குருவின் துணையுடன் நீ செயல்படும் பொழுது… “அனைத்தையும் பெறும் தகுதி பெறுகின்றாய்…!” என்றார்.

ஆகவே நீ இவைகளைப் பெற விரும்புகின்றாயா…? அல்லது மற்றொன்றை வீழ்த்திவிட்டு அதனால் உனக்குப் புகழ் தேடும் நிலையும் ஆணவம் பெறும் நிலையும் பெற விரும்புகின்றாயா…? என்று கேட்டு எதைப் பெற வேண்டும்…? என்று உணர்த்தி அருளினார்.

பிறகு குருதேவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு மச்சத்தை எடுத்து வர நடந்தோம். அவர் சொன்ன விதமே, இருந்த மச்சத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வருகின்ற பொழுது… எமக்கு எதிரே “மலைப்பாம்பு…” ஒன்று ஊர்ந்து வரக் கண்டோம்.

அது சீறி வரும் நிலையைக் கண்டு எமக்குள் இருந்த தைரியம் குறைவதை அறிகின்றோம். யானைக்கு ஒரு விதமாகத் தப்பித்தோம் இந்தப் பாம்பிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பது…? என்று சிந்தித்தோம்.

இதையும் குருவின் பலம் கொண்டுதான் சமாளிக்க வேண்டும் என்று எண்ணுகையில்
1.குரு எமக்குள் அந்தப் பாம்பைக் கண் கொண்டு பார்த்து
2.நீ எந்த உணர்வை அதன் மேல் செலுத்துகின்றாயோ அந்த உணர்வின் அலைகள் அதன் பாதையைத் திசை மாறச் செய்யும்..
3.அப்பொழுது அதன் மீது “பரிவின் எண்ணம் கொண்டு… அது நகர்ந்து செல்ல வேண்டும்…” என்ற எண்ணத்தைப் பாய்ச்சு…! என்று உணர்த்துகிறார்.

அவ்வாறே அதைக் கண் கொண்டு பார்த்து, உணர்வின் தன்மையை குரு வழி கொண்டு அதன் மீது செலுத்துகின்ற பொழுது அப்பாம்பானது விலகிச் செல்கின்றது. மச்சத்தை இறுகப் பிடித்தவாறே வருகின்றோம்.

இவைகளெல்லாம் நம் குருதேவர் நம் அனுபவத்திற்குக் கொடுத்து
1.மனிதருடைய எண்ணத்திற்கு உள்ள வலிமையையும்
2.மனிதர் தாம் எடுத்துக் கொண்ட உணர்வை உயிர் இயக்கும் விதங்களையும்
3.உணர்வின் தன்மை நமக்குள் உணர்வின் வித்தாக விளைந்து அதை எண்ணத்தால் எண்ணப்படும் பொழுது
4.அது நம்முடைய செயலாக ஆக்கம் பெறுகின்றது என்பதைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று உணர்த்தினார்.

சொந்தமில்லாத உடலுக்காக “உன் மனதை ஏன் வாட்டுகின்றாய்…?” என்றார் குருநாதர்

சொந்தமில்லாத உடலுக்காக “உன் மனதை ஏன் வாட்டுகின்றாய்…?” என்றார் குருநாதர்

 

ஒரு சமயம் நான் காட்டுக்குள் செல்லும் பொழுது எத்தனையோ விபரீத நிலைகள் ஏற்படுகின்றது. அப்பொழுது எனக்குள் பயம் உருவாகின்றது.

என் பெண்டு பிள்ளைகளெல்லாம் ஊரில் இருக்கின்றதே… அவர்களை நான் எப்படி பாதுகாப்பது…? அவர்கள் என்ன ஆனார்களோ…? என்ற இந்த எண்ணம் வருகிறது.

அப்பொழுது இமயமலையிலே நான் இருக்கிறேன். பனி உறையும் இடத்திலே குருநாதர் என்னை இருக்கச் செய்திருக்கின்றார். வீட்டு ஞாபகம் வந்ததும்… குருநாதர் சொன்ன நிலையை மறந்தபின் எனக்குள் குளிர் தாங்க முடியவில்லை.

காரணம் அவர் சொன்ன உணர்வை நான் எடுத்தேன் என்றால் குளிர் தாக்காது என்னைப் பாதுகாக்கும் சக்தி வருகின்றது. ஆனால்…
1.குடும்பப் பற்றை நான் எண்ணி எடுக்கும் பொழுது குளிரின் தன்மை அதிகமாகி உடலே இறையத் தொடங்கியது
2.இன்னும் ஒரு நொடியானால் என் இரத்தமே உறைந்துவிடும்… பின் மடிந்துவிடும் நிலையே வரும்.

ஆகவே என் ஆசை எதிலே நிற்கின்றது…? என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்… அப்படி இருக்க வேண்டும்… இப்படி இருக்க வேண்டும்…! என்று எண்ணுகின்றேன்.

ஆனால் அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் குருநாதர் என்னிடம்… “நீ இதையெல்லாம் எண்ணுகின்றாய்…! இந்த உடலை விட்டுப் போய்விட்டால் நீ எதைச் செய்யப் போகின்றாய்…?

1.இதற்கு முன்னாடி இருந்தவர்கள் (வாழ்ந்தவர்கள்) ஆசைப்பட்டவர்கள் எல்லாம் இருக்கின்றனரா…?
2.இந்த வாழ்க்கையில் உனக்கு பொன்னடி பொருளும் எது சொந்தமாகின்றது…?
3/எதுவுமே சொந்தமில்லை… ஆக… “சொந்தமில்லாததற்கு, ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்…?”

மேலும் குருநாதர் என்னிடம்… அவர்கள் நலம் பெற வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்து…! இந்த உணர்வின் நினைவாற்றல் அவர்களை இயக்க உதவும், அது வலுவான நிலைகளை அங்கே உருவாக்கும்.

நீ இப்பொழுது இங்கிருக்கும் நிலைகள் வேதனையும், வெறுப்புமேயானால் உன் உடலைச் சார்ந்தவர் உணர்வுகளிலும் இது பாயும்.

நண்பனுக்குள் “நன்மை செய்தான்…!” என்று எண்ணும்போது விக்கலாகின்றது… நன்மை நடக்கின்றது.

நண்பனுக்குள் பகைமை என்ற உணர்வுகள் தோன்றும் பொழுது “எனக்குத் துரோகம் செய்தான் பாவி… உருப்படுவானா…?” என்று எண்ணினால் உணவு உட்கொண்டாலும் புரை ஓடுகின்றது. ஒரு தொழில் செய்தாலும் அங்கே சீராகச் செய்யாதபடி தவறுகள் நடக்கின்றது.

ஆகவே உன் குழந்தைகள் உயர்ந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்றும் அருள் ஒளி பெற வேண்டும் என்று அருளை நினை. உனக்குள் அதைப் பெருக்கு இந்த உணர்வைப் பாய்ச்சு.
1.இந்த உடல் உனக்குச் சொந்தமில்லை…
2.அவர்களுக்கும் சொந்தமில்லை.

இன்று எந்தச் செல்வம் தேடி வைத்தாலும் இப்பொழுது உன் உயிர் இறைந்தது. நீ இந்த உடலை விட்டுப் போய்விட்டால் இந்தப் பொன்னடி பொருளைப் பற்றி நீ நினைக்கப் போகின்றாயா…? அல்லது அவர்களைக் காக்கப் போகின்றாயா…?

இந்த உணர்வை நீ எண்ணப்படும் பொழுது எதை நிலை கொள்ள வேண்டும்…? எவ்வாறு நீ இயக்க வேண்டும்…? என்பதைக் குருநாதர் அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்த உடல் வாழ்க்கையில்…
1.சொந்தமில்லாத உடலுக்காக நாம் சொந்தம் கொண்டாட வேண்டியதில்லை.
2.சொந்தம் கொண்டாட வேண்டியதெல்லாம் அருள் ஒளி என்ற உணர்வை இணைத்து
3.இந்த உடலே “உணர்வுடன் ஒளியின் உணர்வாகப் பெறும்” அதைச் சொந்தமாக்க வேண்டும்.

அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்றிடும் அருள் உணர்வைக் கூட்டிப் பேரொளி என்ற உணர்வினை நமக்குள் சொந்தமாக்கிடல் வேண்டும்.

ஆறாவது அறிவான கார்த்திகேயா என்ற தெரிந்திட்ட உணர்வு கொண்டு நஞ்சினை நீக்கி அருள் ஒளியை உருவாக்கிநால் என்றும் பேரின்ப நிலைகளாக நாம் நுகரும் உணர்வை உயிரான ஈசன் உருவாக்குகின்றான்.
1.ஈசனுடன் சேர்ந்து என்றும் ஒளி என்ற உணர்வை
2.நாம் ஏகாந்த நிலைகள் கொண்டு பிறவியில்லாத நிலை அடைவதே நமது கடைசி எல்லை.

ஆகவே அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைச் செலுத்து…! அவர்களை இயக்க இது உதவும்.

ஆனால் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நீ வேதனைப்பட்டால் உன்னையும் அழிக்கும். அதே உணர்வுகள் அவர்களையும் அழிக்கும். ஆக நீ எண்ணியது எதுவோ அது தான் நடக்கின்றது.

அவர்கள் வேதனைப்படுகிறார் துன்பப்படுகிறார் என்று எண்ணும் பொழுது அவர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதே துன்பம் உனக்குள்ளும் விளைகின்றது. நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய்.

1.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என்ற இருளை நீக்கிடும் உணர்வை எடுத்தால்
2.உன் உயிரான ஈசன் அதையே உனக்குள் உருவாக்குகின்றான்.
3.அதன் வழி நீ அதுவாகின்றாய்… அவர்களும் அதன் நிலை பெற்று அவர்களும் நலமாவார்கள்.

ஆகவே இதை மறந்திடாது இந்த உடலின் சொந்தத்தை நீ கொண்டாடாதே…! அருள் ஒளி என்ற சொந்தத்தை வளர்த்திடும் உணர்வை நீ உனக்குள் ஒளியின் சரீரமாக உருவாக்கு. பிறவியில்லா நிலை என்ற நிலை அடை.

உடல் என்ற நிலைகளில் வளர்த்த செல்வம் எதுவும் நம்முடன் வருவதில்லை. அதே சமயம் நல் உணர்வு கொண்டு என் குழந்தை சீராக வளர வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதன் உணர்வுகள் அவன் அந்த அருளைப் பெறும் சக்தியும் நீ கொடுத்த செல்வத்தையும் அவன் காப்பான்.

ஆனால் நீ அந்த வேதனை என்ற உணர்வெடுக்கும் போது… தந்தை என்ற நிலையில் நீ எண்ணினால், உன் குழந்தையும் இந்த வேதனையைத்தான் சுவாசிக்கும். அதில் வந்த செல்வத்தைக் காக்கும் திறன் இழந்துவிடும்… அவனும் அனுபவிப்பதில்லை.
1.ஆகவே நீ எதனைச் சொந்தமாக்கப் போகின்றாய்…? என்று
2.இவ்வாறு அந்த இமயமலையில் பல உணர்வுகளை அறியும்படிச் செய்தார்.

ஆகவே நாம் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையைச் சொந்தமாக்குவோம். நம் உயிரான ஈசனுடன் ஒன்றி வாழ்வோம்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதன் உணர்வின்படியே நம்மை உயிர் இயக்குகின்றான் என்று இப்பொழுது உணர்ந்தோம்.

இனி அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்ப்போம் என்றும் ஏகாந்த நிலையாகப் பிறவியில்லா நிலையை அடைவோம்.

நம் பார்வையில் பகைமை உணர்வு ஓடவேண்டும் நஞ்சு கொண்டோர் உணர்வுகள் நீங்க வேண்டும் என்று
1.அருள் ஒளியை நமக்குள் பெற்றோம் என்றால் நம் பார்வை, பிறருடைய நஞ்சைப் போக்கும்.
2.அவருடைய நஞ்சான உணர்வு நமக்குள் வராது.

அருள் ஒளி பெறுவோம் இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வாக என்றும் எகாந்த நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.
1.உயிருடன் ஒன்றியே நாம் நிலைத்து வாழ்வோம்.
2.என்றும் எதனையும் அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம்.
3.எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.
4.பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம்.
5.பகைமையான உணர்வுகள் சேராது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

“நீ செத்தால் தான் விடிவு காலம் வரும்…” என்று எண்ணிக் கொண்டிருந்தால் வரும் கடும் தீய விளைவுகள்

“நீ செத்தால் தான் விடிவு காலம் வரும்…” என்று எண்ணிக் கொண்டிருந்தால் வரும் கடும் தீய விளைவுகள்

 

குருநாதர் இட்ட கட்டளைப்படி யாம் திருத்தணியில் மலைக்குச் செல்லும் பொழுது… ஒருவர் எம்மைச் சந்தித்து… நான் ஒரு விவசாயி… இங்கிருந்து பத்தாவது மைலில் எங்கள் கிராமம் இருக்கிறது. என் மனைவிக்கு ஒன்றரை வருட காலமாக எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியவில்லை. என்ன நோய் என்று தெரியவில்லை…? எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படவில்லை…! என்ன செய்வது…? என்றும் தெரியவில்லை என்று கூறினார்.

சாமி… நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து “என் மனைவியின் நோயைப் போக்கி நடக்க வைக்க வேண்டும்…” என்று கண்களில் நீர் ததும்ப எம்மை ஊருக்குக் கூப்பிட்டார்.

யாம் இங்கு தியானத்திலிருந்து விட்டு அதன் பிறகுதான் எங்கும் வரமுடியும் என்றோம்.

தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அதுவரைக்கும் இங்கேயே இருந்து தங்களை அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார் அவர்.

விவசாயியைக் கூட்டிக் கொண்டு திருத்தணி மலைமீது ஏறிச் சென்றேன். குருதேவர் கூறிய இடத்தை அடைந்தவுடன் அவரை நான்கு நாள் கழித்து வரும்படிச் சொல்லிவிட்டுk குருதேவர் குறிப்பிட்ட இடத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டேன். யாம் இங்கிருக்கிறோம் என்று ஊரில் யாரிடமும் தெரியப்படுத்தக் கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டோம்.

யாம் தியானத்தில் இருந்த நான்கு நாள்களிலும், பல நிலைகள் காட்சிகளாகத் தெரிந்து கொண்டிருந்தன. யாம் காட்சிகளாகப் பார்த்த பல நிலைகளுக்கும் குருதேவர் விளக்கி உபதேசித்து அருளிவிட்டு, நாளை வரும் விவசாயியின் ஊருக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.

நான்காம் நாள் யாம் இருக்கும் இடத்திற்கு விவசாயி வந்து, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். விவசாயின் மனைவி வாத நோயால் கை, கால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார்.

அன்று இரவு தியானத்தில் அமர்ந்தேன். அந்த சமயம் காட்சியாக… விவசாயியின் தாயார் வாத நோயுடன் கை கால் வராமல் படுக்கையிலிருந்து கொண்டு வேதனையுடன் பல முறை மருமகளைக் (விவசாயின் மனைவியை) கூப்பிட்டார்கள்.

அப்பொழுது மருமகள்… “சனியன் தொலைய மாட்டேனென்கிறதே…” என்று முனங்கிக் கொண்டே மாமியாரைப் பார்க்க அருகில் வந்தார்.

“ஒரு பக்கமாக எனக்குக் கை கால்கள் வலிக்கின்றது… என்னை அந்தப் பக்கம் கொஞ்சம் புரட்டிவிடு…!” என்றார்கள்.

மருமகளோ… “நீ செத்தால்தான்… எனக்கு விடிவு காலம் வரும்” என்று சொல்லிக் கொண்டே வேண்டா வெறுப்புடன் மாமியாரை ஒரு பக்கமாகப் புரட்டிவிட்டார்.

இதைக் கண்டு மாமியார் வேதனையுடன்… “இப்படியெல்லாம் ஏசுகிறாயே முருகா…!” என்று சொல்லி வேதனையுடன் பெருமூச்சு விட்டார்கள்.

மருமகளுக்குக் கோபம் வந்து… என்ன…? இப்படியெல்லாம் பேசுகிறாய்…!” என்று ஏச மாமியாரும் வேதனையுடன் பேசினார்கள்.

1.மருமகள் கோபத்துடன் ஏசிய உணர்வலைகள் மாமியாரின் இரத்தத்தில் கலப்பது, காட்சியாகத் தெரிந்தது.
2.மாமியார் சாபமிட்டு ஏசிய உணர்வலைகள் மருமகள் உணர்வுகளில் உந்தப்பட்டு அவர் இரத்தத்தில் கலப்பதும் காட்சியாகத் தெரிந்தது.

மேற்கூறியவாறு… ஒருவருக்கொருவர் பல மாதங்களாக “நினைத்தும் ஏசியும் பேசிக் கொண்ட உணர்வலைகள்…” அதாவது,
1.மருமகள் மாமியாரை நினைத்து ஏசிய உணர்வலைகள் மாமியாரின் உடலில் வினைகளாக விளைகின்றன.
2.மாமியார் மருமகளை நினைத்துச் சாபமிட்டுப் பேசிய உணர்வலைகள் மருமகளின் உடலில் வினைகளாக விளைகின்றன.

கடைசியில்… வேதனை உணர்வுடன் “மருமகளை எண்ணியவாறே…” மாமியாரின் உயிராத்மா உடலைவிட்டுப் பிரிந்து சென்றது.

மாமியார் எப்பொழுது இறக்குமோ…? என்ற வேதனையுடன் ஏங்கி இருக்கும் நிலையில் “மாமியார் இறந்ததைப் பார்த்தவுடன்…” மாமியாரின் உயிராத்மா மருமகளின் சுவாசத்தின் ஈர்ப்புக்குச் சென்று இரத்தத்தில் கலந்து விடுகின்றது…!

சில நாட்களில்
1.மருமகளின் உடலில், மாமியாரின் உயிராத்மா இயங்கத் தொடங்கி
2.மாமியார் எந்த நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ,
3.அதே வேதனையை, மருமகளும் அனுபவிக்கத் தொடங்குகிறார்.

இவை எனக்குக் காட்சியாகத் தெரிந்து கொண்டிருக்கும் சமயம். குருதேவர் காட்சி கொடுத்து… இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்டுவிட்டு அதற்குச் சில வழிமுறைகளை உணர்த்தி, உபதேசித்தார்கள். பிறகு தியானத்தைக் கலைத்துவிட்டேன்.

விவசாயின் மனைவியிடம் நீங்களும் உங்கள் மாமியாரும் அடிக்கடிக் கோபித்துக் கொள்வீர்களா…? என்று கேட்டேன்.

ஆம்…! என்று ஒப்புக் கொண்டார்கள்.

யாம் சொல்கிறபடிச் செய்தால் நோய் தீரும் என்றதும் தாங்கள் எப்படிச் செய்யச் சொல்கின்றீர்களோ அதன்படி நாங்கள் செய்கிறோம் என்றார்கள்.

விவசாயின் குடும்பத்தில் உள்ள, அனைவரையும் தியானத்தில் அமரச் செய்தேன்., தியானமிருந்து, கண்களைத் திறந்தவுடன்…
1.விவசாயின் தாயாரின் பெயரைச் சொல்லி…
2.அந்த உயிராத்மா மகரிஷிகளின் அருள் ஒளியால் புனிதம் பெற வேண்டும் என்று
3.குடும்பத்தில் உள்ள அனைவரையும் குருதேவர் உணர்த்திய வழியில் சொல்ல வைத்தோம்.

இவ்வாறு, பத்து நாள்கள் தியானமிருந்து சொல்ல வைத்ததனால், விவசாயின் மனைவி 10 நாள்களில் மெள்ள மெள்ள எழுந்து நடக்கலானார்.

1.விவசாயின் குடும்பத்தில் அனைவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள்.
2.விவசாயின் மனைவி “இனி நான் யாரையும் மனம் நோகும்படிப் பேச மாட்டேன்…!” என்று வேண்டிக் கொண்டார்.

தொடர்ந்து நீங்கள் தியானம் செய்தால் உங்களை அறியாது வரும், கோபம், குரோதம், பயம், நீங்கி… உங்கள் குடும்பத்தில் நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள் என்று யாம் ஆசீர்வதித்தோம்.

நஞ்சை முறிக்கும் சக்தி

நஞ்சை முறிக்கும் சக்தி

 

ஒரு தேள் வெள்ளாட்டைத் தீண்டி விட்டால் விஷம் பாய்ந்து அந்த ஆடு மடிகின்றது. ஆனால் அதே சமயத்தில் கோழி பட்சி மற்ற பறவைகள் இதை உணவாக உட்கொள்கின்றது. அவைகள் பயப்படுவதில்லை… அதற்கு வீரிய உணர்வுகள் வருகின்றது.

உதாரணமாக கருடனை எடுத்துக் கொண்டால் அதுவும் விஷத்தை ஒடுக்கும் நிலைகள் பெற்றது… அதை ஒடுக்கி விடுகின்றது தேள் கொடுக்கு மிகவும் விஷம் கொண்டது. தேள் இறந்தாலும் அந்தக் கொடுக்கை வைத்து லேசாகக் குத்தினாலே அதில் உள்ள விஷங்கள் நமக்குள் கடுகடுப்பை ஊட்டிவிடும்.

ஆனால் கோழி மற்ற பறவைகள் அதை உணவாக உட்கொள்கின்றது அதனின் உடலில் இருக்கக்கூடிய அமிலம் இந்த விஷத்தைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது… வீரிய நிலைகளும் பெறுகின்றது.

கருடனைப் பாம்பு சீறித் தாக்கினால் அதனுடைய விஷம் அதற்குள் ஏறுவதில்லை. கருடன் அதை தாங்கிக் கொள்கின்றது. அது கூட்டைக் கட்டிக் குஞ்சுகளைப் பொரிக்கின்றது.
1.இரும்புக் கம்பிகள் கொண்டு அந்த குஞ்சுகளை நாம் விலங்கிட்டோம் என்றால்
2.கருடன் பறந்து சென்று அதை முறிக்கக் கூடிய தாவர இனங்களைத் தேடிச் செல்கிறது.
3.அதனுடைய குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து அந்த இரும்புக் கம்பி மேல் போடுகின்றது… அந்தக் கம்பிகள் அறுந்து விடுகின்றது.

அந்தத் தாவர இனத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் நம்மால் முடியாது.

ஒரு வாய்க்காலிலே நீர் வேகமாக ஓடுகிறது என்றால்
1.அந்தக் கருடன் குஞ்சுகளை வைத்திருந்த கூட்டைப் பிரித்து அதில் போட்டால்
2.அது (மீன்களைப் போல்) எதிர்நீச்சல் அடிக்கும்.

மெய்ஞானிகள் சில முறைப்படுத்தி இதை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் விஷத்தை ஒடுக்கும் உணர்வாக மற்ற உலோகங்களை முறித்திடும் நிலையாக அத்தகைய தாவர இனங்களுக்கு இந்த ஆற்றல் உண்டு.

இது எல்லாம் இயற்கையில் விளைந்த உணர்வுகள் தான்.

ஒவ்வொரு உயிரினங்களும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எவ்வாறு இயங்குகின்றது…? என்று இதையெல்லாம் அறிவதற்காகப் பல நிலைகளை எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.

ஒரு சமயம் நான் கொல்லூரிலே குருநாதர் காட்டிய வழியில் தியானமிருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே ஆற்றங்கரை ஓரங்களில் கருநாகம் போன்று மிகப் பெரிய பாம்புகள் உண்டு… காளிங்கராயன் என்று சொல்வார்கள்.

அந்த ஆறு குடசாஸ்திரி என்ற மலையிலிருந்து பச்சிலைகளையும் மூலிகைகளையும் பல பல தாவர இனங்களின் சத்துக்களையும் கவர்ந்து கொண்டு இங்கே வருகின்றது.

அங்கிருக்கக்கூடிய ஒரு பாறையிலே தான் அமர்ந்து இயற்கையின் உண்மை நிலைகளை அறிவதற்காக இரவு முழுதும் தியானம் இருப்பேன். காலையில் எழுந்து காலைக்கடன் கழிப்பதற்காக எழுந்து நடக்கின்றேன்

அவ்வாறு நடந்து செல்லப்படும் பொழுது என்னை அறியாமலேயே ஒரு செடியின் புதரிலே காலை வைத்து விட்டேன்.
1.சிர்….ர்ர்ர்…! என்று அந்தப் பாம்பு எழுந்து நின்றது. சுமார் 70 அடி நீளம் இருக்கும்
2.என் தலைக்கு மேலே “சுளவு” போன்று படத்தைப் பிடிக்கின்றது.

அப்பொழுது குருநாதர் சொல்கின்றார். நீ அந்தப் பாம்பை இடறி விட்டாய். ஆனால் அது உன்னைச் சீறித் தாக்கவில்லை. நீ தெரியாமல் மிதித்து விட்டாய் என்பதை அது உணர்கின்றது… ஆகையினால் தாக்கவில்லை.

1.இங்கே வாழ்ந்த சில ரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை அந்தப் பாம்பு நுகர்ந்துள்ளது.
2.அதனால் அதனுடைய பரிமணம் சில விஷத்தன்மைகளை நீக்கும் வல்லமையும் பெற்றது என்று குருநாதர் இதையும் காட்டுகின்றார்.