கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள்

கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள்

 

யாம் குருநாதர் உரைத்த வண்ணம் ஒரு கிராமத்துப் பக்கம் வந்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒரு நான்கு முனை சந்திப்புள்ள இடத்தில் உள்ள கடையில் என்னை அமரும்படிச் செய்தார் குருநாதர்.

அப்பொழுது அந்த இடத்திற்கு ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரில் ஆறேழு பேர் சாமியார் வேடம் பூண்டு மிகவும் அற்புதமாக இருந்தனர்.

அவர்கள் காரை நிறுத்திவிட்டு யாம் இருந்த கடைக்கு வந்து கடையில் இருப்பவரிடம் “டீ கொடுங்கள்…” என்றனர்.

ஆனால் டீ போடும் ஆளுக்குக் காது கேட்கவில்லை. அவர்கள், “அட.. தம்பி…. இங்கு… வா…” என்றனர். இப்படி இரண்டு முறை கூப்பிட்டும் கேட்காததால் ஜாடையில் காண்பித்து வரச் சொல்லி “உனக்குக் காது கேட்கவில்லையா…?” என்று கேட்டனர்.

டீ கடைக்காரர் “எனக்குச் சுத்தமாகக் கேட்காது…” என்றார்.

அதற்குப்பின் சாமியார் வேடம் பூண்டவர்கள் “முருகா…! ஏன் உன் பிள்ளையை இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்…? உன் பிள்ளைக்குக் காது கேட்கவை முருகா…” என்றனர்.

உடனே அவருக்குக் காது கேட்க ஆரம்பித்துவிட்டது. அதன்பின் “எனக்கு முதுகுவலி தலைவலி இடுப்புவலி…” என்று ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்லிக் கேட்டுக் குணமாகத் தொடங்கியதும் எங்கிருந்து அவ்வளவு கூட்டம் வந்ததென்று தெரியவில்லை…! அப்படி ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது.

அந்தக் கூட்டத்தில் முடக்குவாதம் வந்த ஒருவரைக் கொண்டு வந்து “ஐயா…! நீங்கள் எத்தனையோ பேருக்கு நல்லது செய்கிறீர்கள். ஐந்தாறு வருடங்களாகக் கட்டிலிலேயே படுத்திருக்கிறார். மல ஜலம் எல்லாம் கட்டிலில் துவாரம் போட்டு எடுக்கின்றோம். இப்படியேதான் படுத்திருக்கின்றார்… அவரைக் குணப்படுத்துங்கள்…!” என்று கேட்டனர்.

சாமியார்களாக வந்தவர்கள் விபரங்களைக் கேட்டுவிட்டு “முருகா…! உனக்கு இந்தப் பிள்ளை மேல் கருணை இல்லையா…? இவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கின்றாயே… முருகா…! அவர் உன்னை நினைக்கவில்லையா…? அய்யா…! நீங்கள் முருகனை நினையுங்கள்…” என்கின்றனர்.

முடமானவரும் முருகனை வேண்டுகின்றார். மீண்டும் அவர்கள் “முருகா… உன் பிள்ளையை எழுப்பிவிடப்பா… கொஞ்சம் இவர் மேல் கருணை வை…!” என்று சொல்கின்றனர்.

இப்படிச் சொன்னவுடனே முடமானவரும் சடாரென எழுந்திருக்கின்றார்.

“முருகா…! இவரை இந்த கல்லைத் தூக்கச் செய்யேன்…” என்றனர்.

அவரும் உடனே எழுந்து போய் நான்கு பேர் தூக்க முடியாத கல்லைத் தூக்கினார். அங்கே இருந்த அனைவருக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது. முருகனே… அங்கு வந்ததாக அந்தக் கூட்டம் நம்பியது.

கடைசியில் சாமியார் வேடம் தரித்தவர்கள் “நாங்கள் முருகன் கோயில் கட்ட வேண்டும் என்று எங்களுக்கு முருகன் உத்தரவிட்டு இருக்கின்றார்…” நீங்களெல்லாம் முருகன் கோயில் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும். எல்லா மக்களையும் முருகன் பெருமையை உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உங்களால் இயன்ற பணம் கொடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே, அங்கிருக்கும் கூட்டத்தினர் தாங்கள் போட்டிருக்கும் நகை மற்றும் பணம் ஏராளமாகக் கொடுத்தனர்.

சாமியார் வேடம் பூண்டவர்களும் அனைத்தையும் சுருட்டி கட்டிக் கொண்டனர். “முருகன் கோயில் கட்டி முடிந்ததும் உங்கள் அனைவருக்கும் அழைப்பு வைக்கின்றோம்… அனைவரும் வாருங்கள்…!”

அங்கு வரும் பொழுது உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் முருகனிடம் சொல்லித் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிப் போய்விட்டனர்.

1.இதையெல்லாம் குருநாதர் பார்க்குமாறு சொல்லியதால் பார்த்துக் கொண்டிருந்தோம்.
2.உலகில் எத்தனை விதமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்…? என்பதைக் கண்டுணரும்படி செய்தார் குருநாதர்.

நகைகளையும் பணத்தையும், அள்ளிக் கொண்டு சாமியார் வேடம் பூண்டவர்கள் காரில் ஏறிப்போன பின் 2 அல்லது 3 மணி நேரம் இருக்கும். முடமாகியிருந்தவர் குணமானதாக நம்பிய நிலையில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“எனக்கு முருகனே நேரில் வந்தார் காட்சி கொடுத்தார் குணமாக்கினார்…” என்று பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று “ஐயோ… அம்மா…!” என்று கத்திக் கட்டிலிலே சுருண்டு படுத்துக் கொண்டார்.

காது கேட்காமலிருந்த டீ கடைக்காரருக்கு மறுபடியும் காது கேட்கவில்லை.

இது எப்படியென்றால் இவையனைத்தும் ஆவி வேலைகள். இத்தகைய ஆவிகளை ஏவினால் குறிப்பிட்ட நேரம் வரை செயல்படுத்தும்.

1.உலகில் உள்ள மக்களை எத்தனையோ வகைகளில்
2.கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஞானம் எதிலே தோன்றியது…? அதை எல்லோருக்கும் எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் குருநாதர் காட்டினார்

ஞானம் எதிலே தோன்றியது…? அதை எல்லோருக்கும் எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் குருநாதர் காட்டினார்

 

ஞானிகள் உணர்வைப் பெறுகின்றோம்… அதை நமக்குள் வளர்க்கின்றோம். நம்மைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் உயிர் கடவுளாக இருக்கின்றது
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்திலே சந்தர்ப்பத்திலே தீமைகள் புகுந்து வாட்டுகின்றது.
2.தீமையிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று…
3.மகரிஷிகளின் அருளைத் தியானித்து அந்த வலுவை ஏற்றி எல்லோரும் பெற வேண்டும் என்று நாம் தவம் இருக்க வேண்டும்.

அப்பொழுது உயிரான ஈசனிடத்திலிருந்து மகிழ்ந்திடும் உணர்வுகள் விளைந்து வருகின்றது. அந்தத் தவத்தின் பலனை நாம் பெற முடியும்.

இந்த மூலக்கூறை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவன் எங்கோ இருக்கின்றான் என்ற நிலை இல்லாதபடி நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் தான் அந்த ஈசன். அதைத் தியானித்து எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த தவத்தின் பயனாக நல்ல விளைவினை நுகர்ந்து அந்த உணர்வை நாம் பெறுகின்றோம்.

மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இது தியானம். மகரிஷிகள் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணம் அனைவரும் பெற வேண்டும் என்று எடுத்தால் தவம்.

1.மற்ற எத்தனையோ பேர் ஞான மார்க்கங்களைக் காட்டுகின்றார்கள்… ஆனால் அதிலேயே நின்று விடுகின்றார்கள்.
2.ஞானம் எதிலே தோன்றியது…? ஞானத்தை எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் நமது குருநாதர் காட்டினார்.

ஆகையினால் எல்லோருடனும் ஒன்றி இந்த உணர்வை வளர்க்கச் செய்வதற்கும் நாம் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதைத்தான் செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

புகழ் தேட வேண்டும் என்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்… புகழ் வரும்.
1.ஆனால் மெய் ஞானக் கருத்துக்களை யாரும் அறிய முடியாது.
2.நமக்குள் அதை விளைய வைக்கவும் முடியாது.

இந்த உடலில் இச்சைக்காக எதை வேண்டும் என்றாலும் பெறலாம்… நொடியில் பெற முடியும். ஆனால்
1.என்றைக்கும் நிலைத்திருக்கும் அழியாத நிலையான
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டுமென்றால் அதற்குக் கொஞ்சம் பொறுப்பும் பொறுமையும் தேவை.

இந்த உடலுடன் யாரும் இருந்ததில்லை மகரிஷிகளும் சரி ஞானிகளும் சரி. ஆகவே… இந்த உடலிலிருந்து அடுத்து இன்னொரு பிறவிக்கு நாம் வரக்கூடாது.

“உயிரை…” நாம் இறுகப் பிடித்துக் கொள்வோம்

“உயிரை…” நாம் இறுகப் பிடித்துக் கொள்வோம்

 

எமன் என்பது என்ன…? எமன் என்பது நமது எண்ணம்தான், அதாவது வேதனையான உணர்வை நாம் தொடர்ந்து சுவாசித்தோமானால் அது நமக்குள் பாசக்கயிறாக மாறுகின்றது.

எருமை எவ்வாறு அறிவில்லாமல் இருக்கின்றதோ அதனின் அறிவில்லாத செயலைப் போன்று
1.நாம் எடுக்கும் வேதனையான உணர்வால் நமது எண்ணங்கள் சிந்தித்துச் செயல்படும் திறனை இழந்து விடுகின்றன.
2.நாம் சிந்திக்கும் திறனை இழந்து அறியாமையால் உழலப்படும் பொழுது நமது எண்ணங்கள் வலுவிழந்து
3.நம் வாழ்வில் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொள்கின்றன.

அதாவது… எருமை எனும் அறியாமையை வாகனமாகக் கொண்டு எமன் எனும் எண்ணம் நமக்குத் தண்டனை கொடுக்கின்றது என்பதை நமக்கு உணர்த்தவே… அன்று மகரிஷிகள் எமனுக்கு எருமையை வாகனமாக வைத்து எமன் சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் மனிதருக்குத் தண்டனை வழங்குகின்றான் என்று காண்பித்தருளினார்கள்.

அருள் ஞானிகளுடைய உணர்வுகளை நாம் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்த எண்ணம் நமக்குள் சித்திரபுத்திரனாக இயக்கம் பெறுகின்றது.

இந்தச் சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் நம்முடைய எண்ணம் இருளைப் போக்கும் எமனாக நின்று தீமையை அகற்றிடும் செயலாக அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் மலர்கின்றது. நாம் உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்ற பொழுது அவைகள் நமக்குள் சித்திரபுத்திரனாகின்றன.

1.கண்களால் நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ அவை நமக்குள் புகுந்து புத்திரனாக (அணுக்களாக) விளைகின்றன.
2.நாம் ஈர்க்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்மிடத்தில் உள்ள
3.இருள் சூழ்ந்த அசுரத்தனமான நிலைகளைக் கொல்கின்றன… தீமையை அகற்றுகின்றன.
4.தீமையில்லாத உலகத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது
5.என்றும் ஒளிச்சுடராக நிலைத்திருக்கும் “பெருவீடு பெருநிலை” என்ற நிலையை அடையச் செய்கின்றது.

ஆக… நாம் “பிறவா நிலை” அடைகின்றோம்.

“மார்க்கண்டேயனை…” நோக்கி எமன் பாசக்கயிறை வீசுகின்றபோது மார்க்கண்டேயன் “சிவலிங்கத்தை” அணைத்துக் கொள்கின்றான். இதில் “லிங்கம்” என்பது உயிர்… ஆவுடை என்பது உடல்.

அங்கே மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடித்துக் கொள்ளாது லிங்கத்தை இறுகப் பிடித்துக் கொள்கின்றான். அதாவது “உயிரை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்…”

ஆகவே நமக்கு இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும்
1.நாம் எண்ணியது அனைத்தையும் இந்த உயிர்தான் இயக்குகின்றது என்றும்
2.நாம் எண்ண வேண்டியது எது…? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒளியாக நின்று நாம் எண்ணியது அனைத்தையும் அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு இயக்கிக் காட்டி, அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணரச் செய்வதும்… இயக்குவதும்… அதை நமக்குள் அடையச் செய்வதுமாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது உயிரில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணி நம் கண்ணின் நினைவு கொண்டு பார்த்து அதை ஏங்கி எடுத்தோமென்றால் அது சித்திரபுத்திரனாகச் செயல்படுகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்கின்ற பொழுது, அருள் ஞானிகள் அவர்களுக்குள் இருந்த தீமையை அகற்றிய அதே உணர்வுகள் நமக்குள்ளும் வளர்கின்றது.

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும்…” என்ற நினைவை உங்கள் உடலுடன் இணைக்கப்படும் பொழுது “என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளிச் சரீரத்தை நீங்கள் அடைய முடியும்.

வாழ்வில் சஞ்சலம், சலிப்பு, வெறுப்பு, கோபம், போன்ற உணர்வுகள் உங்களிடத்தில் தோன்றும் பொழுது உங்கள் உயிரை எண்ணி ஆத்ம சுத்தி செய்து தீமைகள் அருகில் வராது உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

1.மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடிக்கவில்லை
2.லிங்கத்தை… அதாவது “உயிரை இறுகப் பிடித்துக் கொண்டான்…”

அது போன்றே நீங்கள் அனைவரும் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா’ என்று உயிரை எண்ணி ஒளியின் சரீரமான அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக ஒளியின் சுடராக விளைகின்றது.

இத்தகைய நிலைகள் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக எமது அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
1.நீங்கள் எந்த அளவிற்கு இந்த உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
2.அந்த அளவுக்கு ஆழமாக யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகின்றன.

யாம் கொடுக்கும் உபதேசங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி ஏங்கும்போது அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து உங்களிடத்தில் தீமைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.

இந்த உபதேசத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளும் அனபர்கள் அனைவரும்…
1.இருள் சூழ்ந்த இவ்வுலகில் நஞ்சினை நீக்கி நன்மைகளைப் பெறும் விதமாக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து
3.மார்க்கண்டேயனைப் போன்று “என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டும் என்று நெஞ்சில் அவா கொண்டு
4.நம் குருநாதர் காட்டிய மெய்வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும்
5.“எமது அருளாற்றலைப் பூரணமாக வழங்குகின்றோம்…!” (ஞானகுரு)

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று வெறும் சொல்லாகச் சொல்லக் கூடாது

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று வெறும் சொல்லாகச் சொல்லக் கூடாது

 

நமது உயிரை “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று ஞானிகள் அழைத்தார்கள். “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் சொல்லும் பொழுதெல்லாம் அது வெறும் சொல்லாக இல்லாமல் “புருவ மத்தியில்” நினைவைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அவ்வாறு பழகிக் கொண்டால்
1.நமது உயிரை குருவாகவும் நாம் எண்ணியதை ஈசனாக உருவாக்கக் கூடிய நிலையை நாம் உணர முடியும்.
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அது உடலுக்குள் ஊடுருவது நமக்குத் தெரிய வரும்.

நம் உடலில் ஜீவ அணுக்களை இயக்கும் “உயிர்…” நம் நெற்றியின் புருவ மத்தியில் உட்புறமாக இருந்து கொண்டு உடலை இயக்கும் மூலக்கருவாக… குருவாக இருக்கின்றது.

உடலில் விளைந்த அனைத்து குணங்களின் உணர்வலைகளையும் உயிர் தன் ஈர்ப்பில் அணைத்துக் கொண்டு “மறு உடல் உருப்பெறச் செய்யும்…” கருவினையாகச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றது.

நமது கண்கள் ஒன்றைப் பார்க்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதிலிருக்கும் உணர்வுகளைக் கண்கள் கவர்ந்து, நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. மூக்கு வழியாகச் சுவாசித்த பின் உயிரில் பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லுகின்ற போதெல்லாம் புருவ மத்தியில் உயிரை எண்ணி அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டோமென்றால் நாம் அதன் வழி (உயிர் வழியாக) உணர்வுகளை உடலுக்குள் செலுத்தலாம்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது மூக்கு வழி சுவாசித்து, உணர்வுகளை உடலுக்குள் செலுத்துவது. இதை அறிந்து கொண்டாலும்…
1.தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் செல்லாதபடி
2.அடுத்த நிமிடம் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.

ஏனென்றால்… நம்முடன் எவ்வளவு நல்லவர்கள் பேசினாலும் அந்த உணர்வில் அவர்கள் குடும்பக் கஷ்டம் உடல் நோய்கள் போன்ற உணர்வுகள் கலந்து சொல்லாக வரும்.

அவர்களைக் கண்ணால் பார்க்கும் பொழுது, நமது ஆன்மாவில் கலந்துவிடும். அவர்கள் பேசும் பொழுது, இந்த உணர்வுகள் கலந்தே வரும். இருந்தாலும்
1.அந்த நிலையிலும் “ஈஸ்வரா…” என்று சொல்லி உணர்வை இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.அவ்வாறு “ஈஸ்வரா…” என்று சொல்லும் நிலைகள் வலுப் பெறும் பொழுது தீமையை அது மாற்றும்.

அதே சமயத்தில் அவர் பலவீனமான நிலைகளைச் சொல்லும் பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும், என்று நாம் எண்ண வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சமைத்து அதை எடுத்துப் போட்டால் தான் அது ருசியாக இருக்கும்.

கஷ்டம் என்று ஒருவர் சொல்லும் பொழுது “அடடா… உங்களுக்குக் கஷ்டமாகப் போய்விட்டதா…?” என்று நாமும் சொன்னோம் என்றால் அதையே தான் சமைத்து மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம் என்று பொருள்.

அதனால் இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இன்று பெரும்பாலோனோர் “ஏதோ ஒரு தெய்வம்தான் நமக்கு அனைத்தையும் செய்கின்றது…” என்று கருதுகின்றனர். ஆனால் நம் செயல்கள் நிகழ்வது அனைத்தும் நம் உயிரான கடவுளால் தான் என்பதை அறிய வேண்டும்.

“மகரிஷிகளின் அருள சக்தி நான் பெற அருள்வாய் ஈஸ்வரா…” என்று தியானித்திடும் பொழுதும் சரி… அல்லது “ஐயோ…! என் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளா…? எனது கஷ்டங்கள் தீராதா…?” என்று வேதனைப்பட்டாலும் சரி
1.அங்கே சாதனைகளையும் அல்லது சோதனைகளையும் உண்டாக்கிக் கொடுக்கின்ற குருவாக இருப்பது
2.நமது உயிர் தான்…! என்று அறிய வேண்டும்.

ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது

ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம். ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு கோவிலிலும் ஓ..ம் போட்டு வைத்திருக்கின்றார்கள்… அங்கே பிரசாதம் வைத்திருக்கின்றார்கள். மற்ற எத்தனையோ நிலைகளைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

கூடுமான வரையிலும் அங்கே சென்று தெய்வத்தை வணங்குகின்றோம். ஏன் வணங்குகின்றோம்…? எதற்காக வணங்குகின்றோம்…? எப்படி வணங்குகின்றோம்…? அப்படி வணங்குவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கிறது…? என்பதை யாரும் சொல்லித் தரவில்லை.
1.உனக்குக் கஷ்டம் வந்தால் தெய்வத்திடம் உன் குறையை எல்லாம்… முழுவதையும் சொல்லிவிடு.
2.அதைச் சொல்லி மனம் உருகி அழுகும் பொழுது அந்தத் தெய்வம் உதவி செய்யும் என்று தான் சொல்லி வைத்திருக்கின்றனர்.
3.எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம். ஈஸ்வரன் என்றால் எங்கேயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். எங்கேயோ இருந்து நம்மைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் தான் நமக்கு இருக்கின்றதே தவிர அந்த ஈஸ்வரன் யார்…? என்று அறியவில்லை.

ஓம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… அது தான் ஜீவன்… “ஜீவன் உள்ளது…” என்று எல்லோரும் வாதிடுகிறார்கள்.

உதாரணமாக… ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். நான் பாசமாக இருக்கின்றேன் என்னிடம் இருக்கும் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது அவன் படக்கூடிய துன்பத்தைக் கண் பார்க்கின்றது
1.அதே சமயத்தில் அவன் வேதனைப்பட்டு வெளிப்படுத்துவதை என் கண் இழுக்கின்றது.
2.அதைச் சுவாசித்த உடனே உயிரிலே பட்டு எனக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… உடலில் வேதனையாகின்றது. அவன் வேதனை தாங்காது வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய காந்த சக்திகள் அதைத் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

அந்தப் பையனை எண்ணி… “அவன் வேதனைப்படுகின்றானே…” என்று கண்ணிலே பார்த்தவுடனே அந்தக் கண் அதே உணர்வலைகளை எனக்குள் இழுக்கின்றது.

நான் இப்பொழுது பேசுகிறேன் என்றால்… “இந்த மைக்..” நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுக்கின்றது. அதே போல் அந்தப் பையன் இடக்கூடிய சப்தத்தை என் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கின்றது… அந்த உணர்வின் ஒலியைத் தட்டுகிறது.

கண் பார்க்கின்றது… கரு விழி பார்த்தாலும் அந்த அலைகளை இழுக்கின்றது. கரு விழியில் படம் தெரிகின்றது கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த அலைகளை இழுக்கின்றது. அதை இழுத்த உடனே நான் சுவாசிக்கிறேன்.

நல்ல குணம் கொண்டு நான் போகும் பொழுது இந்தப் பையன் கீழே விழுகின்றான். பார்த்தவுடனே அவன் வேதனைப்படுவது எனக்குத் தெரிகின்றது. வேதனையால் வெளிப்படுத்தும் ஒலியைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து எனக்குள் கொண்டு வந்து வைக்கின்றது.

ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்புச் செய்கின்றார்கள் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்கின்றது. இங்கே நாம் வீட்டிலே அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அங்கே வெளிப்படுத்தக்கூடிய ஒலி அலைகளை… பாடல்களை இங்கே ரேடியோவில் பாடுகின்றது… நாம் கேட்கின்றோம்.

இது விஞ்ஞானம்… செயற்கையில் செய்தது. அதற்கு ஜீவன் இல்லை… ஒலி அலைகளை மட்டும் எடுத்துக் கொள்கின்றது.

1.ஆனால் நான் பார்த்த… அந்த வேதனையான உணர்வலைகள் உயிரிலே படுகின்றது.
2.சுவாசித்து இழுத்து உயிரிலே பட்ட பின் அவனிடமிருந்து வெளிப்பட்ட
3.வேதனையான உணர்வின் சக்தி என் உயிரிலே பட்ட பின் “ஜீவன்…” பெறுகின்றது.
4.அதற்குப் பெயர் தான் ஓ… என்று சொல்வது.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பை மூட்டி வைத்தால் தண்ணீர் சூடாகிக் கொதித்து “தத… புதா…” என்று சத்தம் போட ஆரம்பிக்கின்றது.

காரணம் அது கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியிலே படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் அதிலே பட்ட பின் இழுத்து அந்தச் சப்தத்தைக் கொண்டு வருகின்றது. இது இயற்கை…!

தண்ணீர் தான்… ஆனால் “தத… புதா…” என்று சத்தம் போடுகின்றது. அப்படிக் கொதிக்கும் நேரத்தில் நாம் எந்தப் பொருளை (பலசரக்கை) அதனுடன் இணைக்கின்றோமோ அந்த வாசனை வெளி வருகின்றது.

ஏனென்றால்
1.கொதிக்கும் பொழுது கலந்து ஆவியாக வெளியே அனுப்பும்போது அதைச் சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவர்ந்து கொண்டு வருகின்றது.
2.என் கண்ணிலே பார்த்தவுடனே… சத்தியபாமா உண்மையை எடுத்து இழுத்து எனக்குள் உணர்த்துகின்றது.
3.என் உயிருக்குள் பட்ட உடனே அது பிரணவம்… ஜீவன் பெறுகின்றது.
4.ஆக… உயிர் அங்கே எப்படி இயங்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உயிர் நெருப்பு.

விஞ்ஞானம் எப்படி இருக்கிறது…? மெய் ஞானம் எப்படி இருக்கின்றது…? இயற்கை எப்படி விளைகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்

கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்

 

திடீர் சாமிகள் (தெய்வங்கள்) இன்று உருவாவதைப் பார்க்கலாம்.

தனக்குப் பணம் வேண்டும் என்று சொன்னால் எதையாவது ஒரு சிலையை அவர் ஆற்றுக்குள் புதைத்து வைத்து விடுவார். பின்பு… இரவு கனவிலே வந்து ஆண்டவன் கோவில் கட்டச் சொன்னார் என்று ஒரு நாலைந்து பேரிடம் சொல்வார்கள். இதைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி உருவாக்கிய பின் “என்னால் இம்சை தாள முடியவில்லைங்க…!” என்று இவர் சொல்வார்.

நாலைந்து பேருக்குச் சொன்ன நிலைகள் பின் ஊரில் உள்ளவருக்கெல்லாம் சொல்லி
1.எப்படியோ பார்க்க வேண்டும் என்று சொல்லி… “தெரியாத மாதிரி… அலைகிற மாதிரியே…” செய்து கொண்டே இருப்பார்.
2.அப்புறம் கண்டுபிடித்துப் போகிற மாதிரி இந்த இடத்தில் இருக்கின்றது அந்த இடத்தில் இருக்கின்றது சொல்வார்கள்.
3.அப்படிச் செய்யும் போது ஆஹா… வந்தாயிற்று…! கனவில் சொன்ன மாதிரியே சிலை கிடைத்து விட்டது…!

இந்தச் சிலையை எடுத்துக் கோவிலைக் கட்டி அங்கே பிரதிஷ்டை செய்தால் செய்தால் உனக்கு இன்னென்னது கிடைக்கும் என்று இவர் எதைச் சொல்கின்றாரோ அது நடக்கும்.

இவர் சொன்ன ஆசைகளை வைத்து அந்த முருகனுக்குக் கோலாகலமாக விசேஷங்கள் நடக்கும். அப்போது யார் இதைச் சொன்னார்களோ அவர்களுக்குப் பணம் கிடைக்கும்.
1.எண்ணிய ஆசைகள் இங்கே வளரும்.
2.பின் சிறிது நாள் சென்று விட்டால் அந்தச் சாமியும் போய்விடும்.

இது நடந்த நிகழ்ச்சி. சில இடங்களில் இப்படியும் நடக்கிறது.

இதே மாதிரி எந்த ஆசையை உருவாக்கிப் பிறரிடத்தில் பதிவு செய்கின்றோமோ அந்த உணர்வு தான் வருகின்றது.

ஒரு இடத்திலே… “கற்பூரத்தைக் கொளுத்தி ஆயிரம் ஆடுகளை வெட்டுகிறார்கள்…!” என்று சொன்னவுடன் அங்கே கூட்டம் போய்க்கொண்டே இருக்கின்றது.

மனிதனுடைய ஆசை எப்படி இருக்கின்றது…?

எனக்கு என் காரியம் ஜெயித்தது…! அவன் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கின்றான். அவனை மடக்க ஆயிரம் ஆடுகளை நான் வெட்டுகின்றேன் என்று இப்படிச் செய்கின்றார்கள்.

இதைக் கேள்விப்பட்ட பின் வேடிக்கை பார்க்க அங்கே கூட்டம் அதிகமாகின்றது.
1.காரியமில்லாமலா அங்கு செல்கின்றார்கள்…! என்று இந்த உணர்வு பதிவான பின்
2.நான்கு ஆண்டு மூன்று ஆடு அவரவர்கள் வசதிக்குத் தக்கவாறு அங்கே வெட்டுகின்றார்கள்.

மனிதன் தனக்குள் உருவாக்கக்கூடிய உணர்வுகள் இப்படி வந்த பின் இது எல்லாமே நடக்கின்றது.

அதே சமயத்தில் அந்த இடத்திலே அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் யார் கடை வைத்தது வியாபாரம் செய்தாலும் அவர்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டும்.

கற்பூரம் இந்த இடத்தில் தான் வாங்க வேண்டும் என்பார்கள். இவர்கள் வாங்கி அதைக் கொடுப்பார்கள். அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி அதற்கு மேல் வைத்து விற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த இடத்தில் இல்லாதபடி சிறு தூரத்தில் கடை இருந்தாலும் கூட அவர்களுக்கு நன்றாக வியாபாரம் நடந்தால் எங்களுக்கு நீங்கள் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள்.

1.ஏனென்றால் நான் வைத்திருக்கும் சாமியைப் பார்க்கத்தான் இந்தக் கூட்டம் வருகின்றது
2.அந்தக் கூட்டத்தால் தானே உனக்கு வியாபாரம் ஆகிறது.
3.ஆகையினால் எனக்குப் பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றார்.
4.இப்படித் தெய்வங்களை உருவாக்குபவர்கள் ஏராளம்.
5.மனிதனுடைய ஆசைகள் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி கடவுளை உருவாக்கி
6.கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்.

ஆகையால் இது போன்ற இடங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும்.

இரவு கனவிலே வந்தார்… விநாயகர் சிலையை இங்கே வைக்கச் சொன்னார். இன்ன இடத்தில் இருக்கிறது என்று காட்டினார்.

நான் திருடிக் கொண்டு வந்து வைத்தேன். அதற்கு மாலை எல்லாம் போட்டுப் பூஜை செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொன்னார். இதே போன்று அதை வணங்குபவர்களுக்கு இன்னதெல்லாம் கிடைக்கும் என்று சொன்னார் என்று இப்படிப் பதிவு செய்து விடுகின்றார்கள்

இந்த அடிப்படையில் தான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று நாம் பக்தியில் வணங்கிக் கொண்டுள்ளோம்.

“இந்தச் சாமியினால்…” தனக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா…? என்ற இந்த நிலைகளுக்கு வந்து விட்டார்கள்.
1.நம்மால் பிறருக்கு நன்மை கிடைக்குமா…? என்ற
2நல்ல சிந்தனைகள் அனைத்தும் காலத்தால் அறவே மறைந்து விட்டது.

“உயிரே கடவுள்…” என்று தான் முதலிலிருந்தே யாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்

“உயிரே கடவுள்…” என்று தான் முதலிலிருந்தே யாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்

 

1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் “தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது…”
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும்…! என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.

அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் “அந்த வலிமையான உடலுக்குள் சென்று… பரிணாம வளர்ச்சி அடைகின்றது…”

ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்…
1.தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்… தீமை செய்வோரையே எண்ணி…
2.அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது…
2.அணுவாக உருவாக்குகின்றது… உணர்வின் சத்தைத் தனக்குள் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை… மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது.

அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா…!

1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும்…? இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்…!
2.அது போல் தான் தியானம் இருந்தோம்… ஆத்ம சுத்தியும் செய்தோம்…
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்…? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நாம் எண்ணியதை உயிர் அணுக்களாக மாற்றும் பொழுது
1.அதைக் காக்கும் காவல்காரனாக இருப்பதும் உயிரே…
2.அந்த உணர்வுக்கு உணவு கொடுப்பதும் உயிரே…
3.அந்த உணர்வை இயக்கிக் கொண்டிருப்பதும் உயிர்தான்…!

ஆறாவது அறிவு கொண்டவர்கள் நாம் இதைத் தெரிந்து கொள்கின்றோம். அந்த மெய்ஞானிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது அதையும் காப்பது ஆண்டவனாக இருப்பதும் உயிர் தான்.

ஆகவே…
1.எண்ணியதை இறையாக்கி இறைவனாக இருப்பதும் உயிரே.
2.இறையின் உணர்வே செயலாக்கும் பொழுது தெய்வமாக ஆக்கிக் கொண்டிருப்பதும் உயிரே.
3.ஆண்டவனாக இருப்பதும்… ஈசனாக இருப்பதும் உயிரே.

இதனால் தான்
1.முதலிலேயே… உயிரே கடவுள் என்பதைச் சுருக்கமாகக் காட்டி உணர்வின் செயலாக்கங்களை
2.உயிரே கடவுள்…! என்ற நிலைகளைக் குருநாதர் எம்மிடம் சொல்லி வந்தது.

உயிர் கடவுளாக இருக்கின்றான்… ஆண்டவனாக இருக்கின்றான்… எண்ணியதை இறையாக்குகின்றான்… இறையின் உணர்வைச் செயலாக்கும் பொழுது தெய்வமாக இருக்கின்றான்.

உறையும் உணர்வின் தன்மையைச் சிவமாக உடலாக்குகின்றான். எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை வினையாக்கி
1.வினைக்கு நாயகனாக இயக்கிக் கொண்டிருக்கின்றான்… அது தான் விநாயகா…!
2.இவ்வளவு பெரிய பேருண்மையை நமது குருநாதர் அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வை நேரடி அனுபவத்தில் எனக்குக் கொடுத்துக் காட்டினார்.

ஆனால் இதை எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன்… அதைப் பெற்றேன்.

நம் குருநாதர் அவர் உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரம் பெற்றார். இருந்தாலும் அவர் உடலில் விளைந்த உணர்வலைகள் எப்படி இருக்கின்றது…? அவர் எதை எதை எல்லாம் தன் உடலில் விளைவித்தாரோ இந்த உணர்வலைகள் அனைத்துமே இங்கே உண்டு.

ஏனென்றால்… சில பேருக்குக் காட்சிகள் கிடைத்த உடனே “குருநாதர் எனக்கு வந்து சொல்கின்றார்…” என்று சொல்வார்கள். உனக்கு இதையெல்லாம் செய்கின்றேன்… எனக்கு இதைக் கொடு…! என்று சிலர் கேட்கின்றார்கள்.

அந்த ஆசையால் நுகர முடிகிறது. அவர் உருவத்தைக் காண முடிகிறது. அவர் பைத்தியக்காரராக எப்படிச் செயல்பட்டாரோ இந்த உணர்வுகளை எல்லாம் அது இயக்கும். அதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்

அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்று சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்.
1.அதாவது… உடலிலே உணர்வை ஒளியாக மாற்றி உணர்வின் அறிவாக மாற்றிய அலைகளும் உண்டு.
2.நாம் இதைத் தான் பிரித்து எடுக்க வேண்டும்…?

சுழி முனை – எண்ணம் தோன்றும் இடம்

சுழி முனை – எண்ணம் தோன்றும் இடம்

 

ஒரு மணத்தின் தன்மை அணுவிற்குள் சேர்க்கப்படும் பொழுது சீதா என்ற சுவையானாலும் அந்த உணர்வின் தன்மை அது எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் கண்டுணர்வதற்கு அந்த ஞானிகள் சுழிமுனை என்று காட்டினார்கள்.

1.இந்த உயிர் தனக்குள் அதை (சீதா) எடுத்து
2.இந்த உணர்வின் தன்மையைத் தான் பிரித்து
3.அந்தச் சத்தின் உமிழ் நீராக உடலுக்குள் இணைத்து விட்டு உணர்வின் அலைகளை அதற்குள் இயக்கச் செய்கிறது.

இது தான் சுழிமுனை என்று சொல்வது. எதை நாம் எண்ணுகின்றோமோ சுழி முனை அதை இயக்கும். தியானம் செய்கின்றோம் என்கிற போது சுழி முனை வழியாக உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது எண்ணங்கள் என்ன செய்கின்றது…?

எவ்வளவு தான் நல்லதை எண்ணினாலும் முடிவதில்லை. ஏன்…?

மற்றவர்களின் வெறுப்பான உணர்வுகளை உடலுக்குள் இருந்தால் இந்த உணர்வுகள் ஆங்கே பாயும்.

உங்களை யாராவது திட்டி இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு பையனை வேலைக்குச் சொல்லி இருந்தோம் நேரத்திலே அந்த வேலையை அவன் செய்து முடிக்கவில்லை என்றால் அந்த உணர்வு அழுத்தமாக ஓங்கி வந்து விடும்.

1.அந்த அலைகள் எல்லாம் முன்னாடி இருக்கும் அப்பொழுது
2.சுழி முனையை நீங்கள் நினைத்துக் கட்டாயப்படுத்தி எண்ணினால் என்ன ஆகும்…?
3.ஒருநிலைப்படுத்த முடிவதில்லை…!

சுழி முனையில் நிலை நிறுத்துவதற்காக என்ன செய்கின்றார்கள்…? “பிராணயாமம்… வாசியோகம்…” என்று மூச்சை இப்படி இழுத்து இப்படி விட்டீர்கள் என்றால் சுழி முனையில் நிறுத்தலாம் என்கிறார்கள்.

அடுத்தாற்போல்… தொட்டுக் காண்பித்தல் என்றும் சொல்வார்கள் ஒருவருடைய எண்ணத்தை… மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறோம் என்று முதுகுத் தண்டிலே தட்டி எழுப்பி அவருடைய எண்ணத்தைச் செலுத்தப்படும் பொழுது அந்த உடலிலிருந்து வரும் உணர்வுகளை நாம் சுவாசித்து ஏதோ குறு…குறு… என்று ஏறுகின்றது. ஏதோ சக்தி கொடுக்கின்றார் என்ற நினைவு வரும்.

யாராக இருந்தாலும் தொட்டுக் கொடுத்துவிட்டு மூலாதாரத்தை நான் தட்டி எழுப்புகின்றேன் நுகர்ந்து பாருங்கள் என்று சொன்னால் அந்த எண்ணத்திற்கு வரும் பொழுது அவருடைய எண்ணங்களை நுகரப்படும் பொழுது அவர் சொன்ன வழியிலேயே அது இயக்கும்.

1.மூலம் என்பது நமது உயிர்…
2.ஆதாரம் என்பது நமது ஆன்மா.
3.அதனால்தான் ஆதிமூலம் என்று விநாயகருக்குப் பெயர் வைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் புழுவாக உடல் பெறும் பொழுது ஒரு செடியின் சத்தைத் தான் முதலில் அது எடுத்தது.

அதாவது… சூரியனிலிருந்து வெளிவந்த வெப்ப காந்தம் அந்தச் செடியின் சத்தைக் கவர்ந்தது. சூரியனிலிருந்து வந்த வெப்ப காந்தம் இந்தச் செடியின் சத்தினைக் கவர்ந்து சீதா லட்சுமி ஆக மாறி அது அந்தப் புழுவிற்குள் வரும் போது சீதாராமனாக மாறுகின்றது.

1.புழுவாக உடல் பெற்ற நிலையில் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் சீதா ராமனாக மாறுகின்றது… எண்ணங்கள் தோன்றுகின்றது
2.அந்தச் சுவையின் சத்தாக அதிலிருந்து வெளிப்படும் மணம் எண்ணமாக
3.அந்த எண்ணம் உணர்ச்சிகளைத் தூண்டி அம்புகளாகப் பாய்ந்து இயக்கச் சக்தியாக மாறுகிறது… சீதாராமா…!

ஆகவே ராமஜென்ம பூமி எங்கே உருவாகின்றது…? ஒருவர் என்னைத் திட்டுகின்றார் என்கிற பொழுது அந்த உணர்வைச் சுவாசிக்கின்றேன். அதைச் சுவாசித்தால் சுவை சீதா.

அந்த உணர்வின் தன்மை எனக்குள் வந்து அந்த உணர்வான சத்தை உடலுடன் சக்தியாகச் சேர்ந்து கொள்கின்றது. அதிலிருந்து சொல்லாக வரும் பொழுது சீதாராமன் ஆகின்றது.

அந்தச் சொல்லின் நிலைகள் ராமன் அம்பை எய்கின்றான்.
1.ராமன் எங்கே பிறக்கின்றான்…? ராமஜென்ம பூமி எது…?
2.நம் உடல் தான்.

சீதா லட்சுமி ஆக வந்து உடலுக்குள் வரும் பொழுது சீதாராமனாகப் பிறக்கின்றான் ராமா சீதா என்று சொல்கின்றார்களா…? சீதாராமா என்று சொல்கின்றார்களா…?

சீதாராமா என்று வரிசைப்படுத்தித் தானே சொல்கின்றார்கள்.

நாம் அணுவின் தன்மையாக உருப்பெற்றதிலிருந்து ஒவ்வொரு சரீரத்தையும் பெற்று வளர்ச்சியில் மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதை உணர்த்துவதற்குத் தான் இந்த இயற்கையின் சக்தியைக் கண்டுணர்ந்த ஞானிகள் விநாயகரை ஆதிமூலம் என்று காண்பிக்கின்றார்கள்.

1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று
2.யானைத் தலையை மனித உடலில் இணைத்து “விநாயகா” என்று மனித உடலைக் காட்டுகின்றார்கள்.

நெருப்பைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்… ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை

நெருப்பைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்… ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை

கோவிலுக்குச் சென்று யாகங்கள் செய்து வேள்விகள் செய்தால் ஆண்டவன் காப்பாற்றுவான்…! நீ ஏன் கஷ்டப்படுகின்றாய்…? யாகத்தை வளர்த்தால் தன்னாலே ஆண்டவன் வருகின்றான்…! என்று ஈப்படிச் செய்வதில் தான் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.

நெருப்பைத் திகு திகு என்று எரியவிட்டு அதிலே பால் நெய் இன்னும் என்னென்னமோ பொருளை எல்லாம் போட்டால் ஆண்டவனுக்கு இந்த வாசனைகள் போய் “எனக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்… அவன் நமக்குக் கொடுப்பா…!” என்ற எண்ணத்திலே தான் நாம் இருக்கின்றோம்.

உதாரணமாக… நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.

ஆனால் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம்மை இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தைச் செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!

யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே… நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் உயிரான நெருப்பில் யாகத்தீயாக அந்த அருள் ஞானிகள் உணர்வுளைப் போட வேண்டும்.

நம் உயிர் ஒரு நெருப்பு…!
1.உயர்ந்த ஞானிகள் உணர்வுகளை யாக்க் குண்டமான உயிரான நெருப்பிலே செலுத்தி
2.நம் உணர்வுகளை எல்லாம் புனிதப்படுத்திச் சொல்லின் நிலையாக அதை வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
3.நமக்குள்ளும் தீமைகள் நீங்குகின்றது நம் சொல்லைக் கேட்பவர்கள் தீமைகளும் நீங்குகின்றது
4.தீமையை நீக்கும் எண்ணங்களாக இந்தக் காற்று மண்டலத்திலே பரவுகின்றது… எல்லோருக்கும் நன்மை செய்யும் சக்திகளாக…!

இதுதான் ஞானிகள் சொன்னது.

இதைப் புத்தகத்தில் எழுதிக் காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றதோ… அப்படித்தான் நமது உயிரும் வேலை செய்கிறது…! என்று அன்று இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள்.

உயிரின் நிலைகள் வேலை செய்யும் என்று சொல்லவில்லை… அதற்குப் பதிலாக “நெருப்பு தான் செய்யும்…” என்று நெருப்பிலே பொருளைப் போட்டு ஆண்டவனுக்கு மணமாக அனுப்பி விட்டால் போதும் என்று இப்படி மாற்றி விட்டார்கள்.

ஆனால் அந்த நெருப்பிலே பொருளைப் போட்டால் எப்படி மணங்கள் வெளி வருகின்றதோ அதைப் போன்று தான்
1.நமது உயிரான நெருப்பிலே நாம் எண்ணத்தால் எடுத்து அந்த உயர்ந்த எண்ணங்களைப் பரப்பிச் சொல்லாகச் செயல்படுத்தி
2.உணர்ச்சிகளின் தன்மையாக நம் உடலுக்குள் விளைவிக்க வேண்டும் என்று அன்று சொன்னார்கள்.

இந்த உயிர் என்ற நிலைகளை விட்டு விட்டார்கள்… நெருப்பு தான் எல்லாம் செய்கிறது…! என்று அதைப் பிடித்துக் கொண்டார்கள்.

கல்யாணம் செய்யும் பொழுது எல்லாம் இந்த நெருப்பைப் போட்டு அக்னி சாட்சியாகச் செய்கிறோம் என்பார்கள்.

புதிதாக வீட்டைக் கட்டி அங்கே புகுந்தாலும் இதைப் போன்ற அக்னியைத்தான் அங்கே வளர்க்கின்றார்கள். கோவிலிலும் மற்ற இடங்களிலும் இந்த யாகங்களைத் தான் செய்கின்றார்கள்.

ஆனால் அதனுடைய உட்பொருளே நமது உயிர் ஒரு நெருப்பு அந்த நெருப்பிலே உயர்ந்த உணர்வுகளைப் போட்டு அந்த மணங்களைப் பெருக்கி அதைத் தானும் மற்ற எல்லோரும் பெறும்படியாகத்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணமாகச் சாஸ்திரமாகக் கொடுத்துச் சென்றார்கள்.

1.நெருப்பை மட்டும் தான் இன்று நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்
2.ஆனால் உயிரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மறைந்த உண்மைகளை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அத்வைதத்தின் உணர்வுகளை எல்லோரும் அறிவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்

அத்வைதத்தின் உணர்வுகளை எல்லோரும் அறிவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொல்லும் பொழுது உங்கள் உயிர் உங்கள் உடலுக்குள் நின்று ஓ என்று இயங்கிக் கொண்டுள்ளது. நாம் கேட்டது பார்த்தது நுகர்ந்தது அனைத்தையும் ஓ என்று இயக்கி ம் என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

அதாவது நம் உயிர் எப்படி இயக்குகின்றதோ இயங்குகின்றதோ இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தக் குணங்கள் அனைத்தும்
2.நம் உடலில் உள்ள ரத்தங்களில் கலந்து மீண்டும் ஜீவணுவாக உருவாக்குகின்றது உருப்பெறுகின்றது.
3.ஆகவே உருவாக்கக் கூடிய சக்தியை நம் உயிரை ஈசனாக மதித்து நட்த்தல் வேண்டும்.

அதிலே ஏற்படும் வெப்பம் விஷ்ணு ஈர்க்கும் காந்தம் லட்சுமி நாம் எத்தகைய குணத்தை நுகர்கின்றோமோ அக்குணம் நம் உயிரிலே மோதும் பொழுது அந்தந்தக் குணத்தின் சத்துகள் வெளிப்படுகின்றது.

அதனால் தான் “சங்கு சக்கரதாரி” என்று உருவம் (விஷ்ணுவுக்கு) அமைத்து
1.அருவ நிலைகளில் நடப்பதை நம் உடலில் நாம் நுகர்ந்த எத்தகைய குணமோ
2.அத்தகைய உணர்ச்சிகள் நம் உடலில் எவ்வாறு இயக்குகின்றது…? செயல் ஆக்குகின்றது…?
3.அந்த உணர்வலைகள் சுழன்று எப்படி உடலாகின்றது…? என்பதனை நாம் அறிவதற்குத் தான்
4.அதாவது கண்ணுக்குப் புலப்படாது சூட்சுமத்தில் நடப்பதை “அத்வைதம்”.
5.அதை உருவமாக்கி… துவைதமாக்கி அதற்குக் காரணப் பெயர் வைத்து
6.உயிரின் இயக்கத்தை நாம் அறிந்து கொள்வதற்காக ஞானிகள் இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார்கள்.

எல்லோரும் அத்வைதத்தின் உணர்வுகளை அறிய முடியாது.

ஆகவே உருவம் அமைத்து நினைவுபடுத்திக் காவியம் படைத்துக் காவியத்தின் வழியிலே கருத்தினை நுகரும்படி செய்து அதன் உணர்வுகள் நம் உயிரிலே பட்டு
1.அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சேர்க்கச் செய்து
2.நல்ல குணங்களை நம் இரத்தத்தில் கலக்கச் செய்வது தான் துவைதத்தின் அமைப்பு.

எந்தக் குணத்தின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ… நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம் என்று காரணப் பெயர் வைக்கிறார்கள்.

சிலையைப் பார்க்கும் பொழுது காவியப் படைப்பின்படி இது துவைதம். அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அந்தக் கருத்தினை எண்ணி ஏங்கும் பொழுது அந்தக் குணம் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளாக வெளிப்படுத்துகின்றது. நாமும் அறிய முடிகின்றது இந்த உடலையும் இயக்குகின்றது.

அதனால் இது விசிஷ்டாத்வைதம்…! நம் உடலுக்குள் இந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது எப்படி இயங்குகின்றது என்பதை நாம் அறியும்படி செய்தார்கள் ஞானிகள்.

சாதாரண மக்கள்
1.கல்வி கற்காதவரும்… கற்கவே இல்லை என்றாலும் கருத்தினைக் கவர்ந்து உணர்வின் செயலை அறிந்து
2.அதன் வழியில் அருள் வழியில் செயல்படும்படி செய்தனர்… அதன் வழி தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.