எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்

எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்

 

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இது எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு அடுத்து… அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் “சரி பாதி” இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இதே சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடுத்தவர்களுக்குப் பாய்ச்சும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடுத்தவர்களுக்குப் பாய்ச்சும் முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அனுதினமும் துருவ தியானம் எடுக்கின்றோம்.

நாம் எடுத்து வளர்த்த பின் உடல் நலம் இல்லாதவர்களுக்கு அல்லது வேதனைப்படுவோருக்கு எப்படிச் செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று வளர்த்து விளைய வைத்த ஞான வித்தை அவர்களுக்குள் சொல்லாகச் சொல்லப்படும் போது
1.கேட்டவுடனே அவர்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் விளைகின்றது.
2.அவர்கள் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் ஓடுவதைப் பார்க்கலாம்.
3.இதன் வலிமையான பின் நோயின் தன்மையான அந்த உடல்களில் நடுக்கமாவதையும் பார்க்கலாம்.
4.இது இரத்தத்தில் கலந்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர்களுக்குள் ஊட்டும்.
5.உடலுக்குள் சென்று அந்த நோயின் வீரியத்தைத் தணிக்கும்… வேதனைகளை அடக்கும்.

உதாரணமாக நீங்கள் ஒரு நோயாளியையோ ஒரு தரக்குறைவாகப் பேசக்கூடியவர்கள் உணர்வையோ நுகர்ந்தால் உங்களுக்குள் பதட்டமாகிறது அல்லவா…! நுகர்ந்த பின் உடலுக்குள் எத்தனை வேகத்தை உண்டாக்குகிறது…?

அதே போல் தான் தீமையைக் கண்ட பின் ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் நாம் செலுத்த வேண்டும்.

இது வலுவான பிற்பாடு…
1.அந்தத் தீமைகளைத் தள்ளி விட்டுவிடுகிறது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு முன்னணியில் வந்துவிடுகிறது.

ஆகவே… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல் நலமாக வேண்டும் என்று சொல்லி இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி வளர்த்துக் கொண்ட ஞான வித்தை இதே உணர்ச்சி கொண்டு அடுத்தவர்களுக்குச் சொல்லும் போது செவிகளில் பட்டபின் இந்த உணர்வுகள் அங்கே உந்தப்பட்டு அவர்கள் தீமைகளை நீக்க உதவும்.

1.நாமும் உடல் நலம் பெறுகின்றோம்… மற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்து
2.அவர்களையும் உடல் நலம் பெறச் செய்கிறோம்.

மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் – ஞானகுரு

மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் – ஞானகுரு

 

காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ உணர்வுகளை எண்ணத்தால் நாம் எண்ணி எடுத்தாலும் அதிலே அறியாது வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் அல்லவா.

அதற்காகத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம்
1.மிக… மிக… மிக… மிக… பெரிய சக்தியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).
2.அதைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து
4.”கொஞ்சம்…” நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும்.

கோபித்தான்… துன்பப்பட்டான்… கஷ்டப்பட்டான்.. என்ற உணர்வு வரப்படும் போது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.

ஆனால் முதலில் கண்ணின் நினைவைக் கோபித்தவர் மேல் அல்லது துன்பப்படுவோர் மீது வைத்தோம். அதை ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கினோம். அவர் உடலிலிருந்து வந்த கோபமான உணர்வுகள் அல்லது வேதனையான உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறுகின்றது.

நுகர்ந்து (சுவாசித்து) உயிரில் பட்டவுடனே உணர்ச்சிகள் எழும்புகிறது. விஷ்ணு என்ன செய்கிறான்…? வரம் கொடுக்கின்றான். ஒலி எழுப்புகிறது. உடல் முழுவதும் அந்த உணர்ச்சிகள் பரவுகிறது.

அவன் கோபமாகப் பேசியதை…
1.ஒன்று – நாம் கொஞ்சம் வலு கொண்டவராக இருந்தால் சண்டைக்குப் போவோம்.
2.இரண்டு – நாம் வலு குறைவாக இருந்தால் கிடு… கிடு… என்று பயமாகி இப்படிப் பேசுகிறானே.. என்று வேதனைப்படுகின்றோம்.

அதற்கடுத்து ஏதாவது அவனிடம் வாய் திறக்கின்றோமா..? நமக்கு வேதனை என்ற உணர்வு வருகின்றது. அந்தக் கார உணர்வுடன் வேதனை உணர்வைச் சேர்த்தவுடனே என்ன செய்யும்…?

மிளகாயை எடுத்து அரைத்தால் கையில் எரிச்சல் ஆவது போல் நம் உடலில் எரிச்சல் ஆகின்றது. ஆகவே அத்தகைய தீமைகள் புகாது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்ல வேண்டும்.
1.உயிரான ஈசனிடம் நாம் வேண்ட வேண்டும்…
2.அவனிடம் கேளுங்கள்… அவனிடம் தான் கேட்க வேண்டும்
3.ஏனென்றால் எல்லாவற்றையும் அவன் தான் நமக்குள் உருவாக்குகின்றான்.
4.இத்தனையும் தெரிய வைப்பது அவன் தானே…!

ஆனால் நாம் ஈசனை எங்கேயோ தேடிக் கொண்டிருக்கின்றோம்.

உருவாக்குவது அவனே தான். நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது எல்லாவற்றையும் இயக்கிக் காட்டுவது அவனே தான். நம்மை ஆண்டு கொண்டிருப்பது உயிர் தான் என்கிற வகையில் நாம் மறந்துவிடுகின்றோம்.

அழகான துணிகளைப் போடுகின்றோம்… நம்மை அழகுபடுத்துகின்றோம். இருந்தாலும் யாராவது ஒரு கடும் சொல் சொல்லிவிட்டால் நம்மால் தாங்க முடியவில்லை.

உயிர் வெளியே போய்விட்டால் என்ன செய்கிறது…? கோடீஸ்வரனின் மகனாக இருந்தாலும் உடல் சவமாகி விட்டால் சீக்கிரம் தள்ளி விடப்பா…! என்று தானே நாம் சொல்கிறோம்.

சொத்து எல்லாம் இருந்து என்ன செய்வது…? அவனால் அதை அனுபவிக்க முடிகிறதா…? இல்லையே…!

இது எல்லாருக்கும் தெரிகிறது. தெரிந்தாலும்
1.இந்த உடலில் எடுத்து நாம் வளர்த்துக் கொண்ட வேதனையான உணர்வு… அதற்குச் சாப்பாடு தேவை.
2.அந்த உணர்ச்சிகள் உந்தி நம்மைச் சிந்திக்க விடாதபடி செய்கிறது.

ஆகவே… பிறர் செய்யும் தீமையான எண்ணங்களும் குற்றச் செயல்களும் நம் உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? அந்தத் தீமையின் உணர்வாக அதனுடைய வலிமை கொண்டு இயக்க ஆரம்பித்துவிடும்.

நம் நல்ல குணம் வேலை செய்யுமோ…? அது செயலற்றுப் போகும். இப்படி நாம் நல்லதைச் செய்து வந்தாலும் தீமைகள் உடலுக்குள் வருகிறது. வெளியிலிருந்து தான் அது வருகிறது.

அதனால் தான் இராமாயணத்தில் வாலியை இராமன் குகைக்குள் போட்டு மூடி விடுவதாகக் காட்டுகிறார்கள். அதாவது “தீமைகள் நமக்குள் உட்புகாதபடி தடுக்க வேண்டும்…” என்று உணர்த்துகிறார்கள்.
1.குகைக்குள் வாலி இருக்கின்றான்.
2.இராமன் அம்பை எய்து ஒரு கல்லைப் போட்டு அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான்.
3.ஆனால் அவனைக் கொல்லவில்லை.
4.அவன் வீரியத்தைத் தடைபடுத்துகிறான்…! என்று காட்டுகின்றார்கள்..

தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைத் தடுக்க வேண்டும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

உயிர் வாழ அதி சக்தி வாய்ந்த உணர்வைக் கொடுத்தார் குருநாதர்

உயிர் வாழ அதி சக்தி வாய்ந்த உணர்வைக் கொடுத்தார் குருநாதர்

 

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) இமயமலைக்குச் செல்லப்படும் பொழுது மலை உச்சியில் பனிகள் உறைந்து இருக்கின்றது. ஆனால் உறைந்த பனிகள் (சுடு தண்ணீர் கிணறு – அடியில் கந்தகப் பாறை இருப்பதால்) சூட்டினால் கரைந்து ஒரு குளம் மாதிரி இருக்கின்றது.

அந்தக் குளத்திற்குள் பார்த்தோமென்றால் அடியில் இருக்கக்கூடிய சிறு துரும்பு கூட… கண்ணாடி போன்று பளிச்சிட்டுத் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் அதில் இருந்து சூட்டினால் புகை வருகின்றது.

ஒரு துணியில் அரிசியைப் போட்டுக் கட்டி அதில் முக்கி 10 நிமிடம் வைத்திருந்தால் போதும். ஒரு பிரஷர் குக்கரில் அரிசியை வேக வைப்பது போன்று அவ்வளவு சீக்கிரம் வேக வைத்து விடுகின்றது.

அங்கே உட்கார்ந்து நான் தியானம் இருக்கச் சென்றேன். குருநாதர் அப்போதுதான் சொல்கின்றார் நீ குளிர் காய்வதற்கு இங்கே வரவில்லை… எழுந்திரு…! என்று சொல்லி குளிர் அடிக்கும் இடத்தில் போய் அமரச் செய்தார்

காரணம்…
1.குளிர் வரும் பொழுது உனக்குள் எப்படி நடுங்குகிறதோ
2.அந்த நடுக்கத்தை நிறுத்துவதற்கு இங்கே (சுடு தண்ணீர் இருக்கும் இடம்) எப்படி அமர்ந்தாயோ…
3.பின் அதி சக்தி வாய்ந்த உணர்வை நுகரப்படும் பொழுது உனக்குள் இந்த குளிர் வராது.
4.”அந்தச் சக்தியை நுகர்வதற்குத் தான்… இந்த குளிரிலிருந்து நீ தப்பிப்பதற்குத் தான்
5.நீ உயிர் வாழ வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்தேன் என்று
6.நீ போ…! என்று சொல்லி குளிர் அதிகமாக உள்ள இடத்தில் அமரச் செய்தார்.

வெறும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு தான் அங்கே சென்றேன். ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் உட்கார்ந்து மகிழ்ச்சியாக “இவ்வளவு இரகசியத்தையும்…” கேட்கின்றீர்கள்.

ஆனால் அங்கே கிடு…கிடு கிடு…கிடு என்று நடுங்கும். குருநாதர் சொன்ன முறைப்படி நான் தியானிக்கவில்லை என்றால் கிர்ர்ர்ர்ர்… என்று இரைச்சல் வரும்.

மார்கழி மாதப் பனிக்காலத்தில் ஒரு சிலருக்கு உள்ளுக்குள் இருந்து கிர்ர்ர்… என்று உடல் இரையும். அது போன்று அங்கே இமயமலைக் குளிரில் இருந்தால் எப்படி இருக்கும்…?

இருதயம் இரையப்படும் போது கொஞ்சம் வேகமாக உள்ளே வந்து டக்… என்று குறைந்து விட்டால் மூச்சு போய்விடும். காரணம் அந்த இரத்தங்கள் ஓடும் பொழுது அந்த இயக்கச் சக்தியாகும் போது உறைந்து விட்டால் எல்லாம் இன்ஜின் நின்றுவிடும்.

அந்த மாதிரி இடங்களில்…
1.மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் பொழுது
2.உடலுக்குள் இந்த உணர்வை நான் செலுத்தும் பொழுது ரொம்ப சுகமாக இருக்கின்றது.
3.தியானத்தில் என் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கெல்லாம் அந்தச் சக்தியைக் கொடுக்க முடிந்தது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்குவதற்காகத் தான் தனித்து அங்கு அனுப்பினார் குருநாதர். அதில் வளர்த்த உணர்வின் ஒளி அலைகளைத் தான் இப்போது உங்களிடம் சொல்கின்றேன்.

குருநாதர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் அந்த ஆற்றல்களை பெறுவதற்கு…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளை அதைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் பதிவு செய்தார்.

அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அந்த அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்ள முடிந்தது… எடுத்துக் கொண்டேன்.
1.அதைத்தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் ஏங்கிப் பெறுவீர்கள் என்றால்
3.தீமைகள் செய்யும் உணர்வுகள் அனைத்தையும் கருக்கிவிடும்.

நஞ்சை வடிகட்டும் வலுவான உறுப்புகளாக… நம் உடல் உறுப்புகளை உருவாக்க வேண்டும்

நஞ்சை வடிகட்டும் வலுவான உறுப்புகளாக… நம் உடல் உறுப்புகளை உருவாக்க வேண்டும்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடம் யாம் பெற்ற அனுபவங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அனைத்தையும் யாம் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.குருநாதர் கொடுத்த அந்த அருளை ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.கண்ணின் நினைவை அதிலே செலுத்தப்படும் பொழுது கெட்டது போகாமல் உங்களுக்குள் தடுக்கப்படுகின்றது.

அதே நினைவு கொண்டு உள்முகமாக உங்கள் உடலுக்குள் இரத்த நாளங்களில் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று செலுத்தினால் வீரியமடைகின்றது. உடலுக்குள்ளே வலுவான பின் தீமைகளைத் தள்ளிவிட்டு விடுகின்றது

உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம். மீண்டும் அவரை நினைக்கும் பொழுது அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்ச்சி வரப்படும்போது
1.ஒரு பலகாரத்தைச் சுட்டுக் கொண்டிருந்தால் சரியாகச் செயல்பட முடியாது.
2.ஒரு இயந்திரத்தில் வேலை செய்தாலும் அதைச் சீராக இயக்க முடியாது
3.ஒருவர் சந்தோஷமான வார்த்தையைச் சொன்னால் காது கொடுத்துக் கேட்க முடியாது.

இப்படி ஒரு சமயம் பதிவானது மறுபடியும் இந்த உணர்வு கலக்கப்படும் பொழுது நம்மால் சரியான பதிலும் சொல்ல முடியாது போய்விடுகிறது. அதனால் இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி பழகுதல் வேண்டும்.

சூரியன் தனக்குள் உருவாகும் பாதரசத்தால் 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து விஷமான நிலையைக் கொண்டு வரப்படும் பொழுது இது மோதி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது.

அதிலே…
1.கேது விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.இராகு கருகிய புகைகளை எடுத்துக் கொள்கின்றது
3.ஓடும்போது மின் கதிர்களை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது.
4.மோதலில் வரக்கூடிய சப்தத்தைச் செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது
5.மோதி ஆவியாகப் பிரிந்து செல்வதை சனிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

இப்படி அதனதன் வலு கொண்டு அதனதன் நிலைகளில் எடுக்கின்றது.

சூரியனுக்கு எப்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் இருக்கின்றதோ அதே போன்றுதான் நமக்குள் சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்த உணர்வுகள் உடலில் உள்ள உறுப்புகளில் இயங்குகின்றது.

கல்லீரல் ஓரளவுக்கு விஷத்தைப் பிரித்து வடிகட்டி அனுப்புகின்றது.
1.அங்கு அதிகமான விஷத்தன்மையானால் முடியாது போகிறது… விட்டு விடுகிறது.
2.மண்ணீரலுக்குப் போனாலும் இதே நிலைதான்.
3.அதை இழுத்து நுரையீரலுக்கு வரும் பொழுது அங்கே தேங்கினால் நுரையீரலும் கெட்டு விடுகின்றது.
4.நுரையீரல் கெட்டு அந்த விஷத்தின் தன்மை அனுப்பப்படும் போது சிறுநீரகம் இரத்தத்தில் இருக்கக்கூடிய மாசுகளை பிரிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

உப்புச் சத்தையோ சர்க்கரைச் சத்தையோ பிரிக்க முடியவில்லை என்றால் அந்தச் சத்துக்கள் எல்லாம் அளவு கூடி விடுகின்றது… வாத நீர்களை உண்டாக்கிவிடுகிறது…. பலவீனமாகி விடுகிறது.

அத்தகைய பலவீனத்தை மாற்ற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சிறுகச் சிறுக… சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் வளர்ச்சி அதிகமானால் சர்க்கரை சத்தையும் உப்புச் சத்தையும் குறைக்க முடியும். ஆகவே…
1.உடல் உறுப்புக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்து விட்டால்
2.இந்த உடலுக்குப்பின் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

மனிதன் ஒருவனால் தான் இது முடியும்.

நல்ல அணுக்கள் வலு குறையும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை வைத்துச் சார்ஜ் செய்து வலுவாக்க வேண்டும்

நல்ல அணுக்கள் வலு குறையும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை வைத்துச் சார்ஜ் செய்து வலுவாக்க வேண்டும்

 

சாதாரணமாக… ஒரு பேட்டரி இயங்கிக் கொண்டே உள்ளது. அதிலே சார்ஜ் குறைந்து விட்டால் செல்கள் எதுவும் இயங்காது. மீண்டும் ஏற்றினால் தான் இயக்கம் இருக்கும்.

இதைப் போன்று
1.நம் உயிரின் உணர்வு கொண்டு உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமை கிடைக்கும்.

மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பெற்று
2.நமக்குள் வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பேட்டரி சரியாக இருந்தால் அதனுடன் இணைக்கப்பட்ட எல்லா இயந்திரங்களும் சீராக இயக்கும்… அதிலே இருக்கும் சார்ஜ் உறுதுணையாக இருக்கும்.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துச் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு வீரிய சக்தி ஊட்டித் தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள்… இதனால் உங்கள் வாழ்க்கையே தியானமாகும்…!

வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி… அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

நம் உறவினர்களையும் நண்பர்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைப் பற்றும்படி செய்து
1.அவர்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை ஊட்டினால்
2.அவர்களும் நலமாகின்றார்கள்… நாமும் நலமாகின்றோம்.
3.நம் உடலும் நலமாகும்… நம் வாழ்க்கையும் நலமாகின்றது… தொழிலும் நலமாகிறது.

இந்த முறையை ஒவ்வொரு குடும்பத்திலும் பழகிக் கொள்ளுங்கள்.

சங்கடம் சலிப்பு வேதனை வெறுப்பு பகைமை வந்தால் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்… அவர் உடல் உறுப்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் தெய்வீக அன்பைப் பெற வேண்டும்… தெய்வீக அருளைப் பெற வேண்டும்… தெய்வீக சக்தி பெற வேண்டும்… தெய்வீக வழியில் நடக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

பண்பும் பரிவும் அன்பும் பாசமும் எங்கள் குடும்பத்தில் வளர வேண்டும்… அரவணைத்து வாழும் அருள் ஞானம் பெற வேண்டும். நாங்கள் அனைவரும் மகரிஷி வட்டத்தில் இணைந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு சமயமும் அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்

1.இது போன்று நாம் செயல்படுத்தினால் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நாம் செயல்படுத்த முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை இந்த முறைப்படி செய்து பெற்றால் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெறுவீர்கள்.

இல்லை… வெறுப்பு வேதனை என்ற உணர்வு வந்தால் வேதனையான உணர்வுக்கொப்ப உங்கள் சொல்லும் உங்கள் செயலும் அமைந்து
1.பிறிதொருவர் நல்லது சொன்னால் ஈர்க்காதபடி அந்த நியாயத்தைத் தான் பேசுவீர்கள்.
2.பண்பை ஏற்றுக்கொள்ளும் தன்மையோ… பண்பை நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலையோ
3.வரும் தீமைகளை அகற்றிடும் நிலையோ வருவது மிகவும் சிரமம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி குருநாதர் காட்டிய வழிப்படி நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

நம்முடைய பசி எதிலே இருக்க வேண்டும்…?

நம்முடைய பசி எதிலே இருக்க வேண்டும்…?

 

சிவன் ராத்திரி அன்று நீ விழித்திரு… பசித்திரு… தனித்திரு… என்று சொல்வார்கள்.

வேதனை என்ற உணர்வுகள் தனக்குள் புகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தனித்திரு… விழித்திரு. ஆனால் அதைப் பெற வேண்டும் என்று பசித்திரு

அதாவது…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் பசித்திரு
2.தீமைகள் உன்னைப் பற்றிடாது தனித்திரு…!
3.தீமைகள் புகாது விழித்திரு…!

கஷ்டம் என்று வந்தால்… விழித்திருந்து நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும். ஆக… அதைப் பெற வேண்டுமென்று பசித்திருக்கும் போது தீமைகளைப் பற்றிடாது தனித்திருக்க முடியும்.

அதை எல்லாம் உங்களால் பெற முடியும்.

தனித்திரு என்றால் வீட்டில் இருக்கும் மனைவி பிள்ளைகளை விட்டு விட்டுச் சாமியாராகப் போவதல்ல… அது எல்லாம் அறியாமை…!

ஆகவே… மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும் பெற்று… தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழும் நிலையும் உடலில் அமைதியும் சாந்தமும் விவேகத்துடன் வாழ்ந்து இந்த உடலுக்குப்பின் பிறவியில்லை என்ற நிலையை அடையுங்கள்.
1.இந்த மனித உடலில் இப்போது இதை பெறத் தவறினால்
2.இனி அடுத்து மனித உடல் துரிதமாகக் கிடைக்குமா… என்பது சந்தேகமே…!

காரணம் உலகம் விஞ்ஞான அறிவால் மாசுபடும் நிலை வந்துவிட்டது.

கடவுளின் அவதாரத்தில் வராகன்… சாக்கடையிலிருந்து எப்படி நல்லதை நுகர்ந்ததோ… இந்தச் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து அதற்குள் மறைந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுக்கப் பழக வேண்டும்.

கண்ணின் நினைவைத் துரித நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வருவதை உயிர் வழி கவர்ந்து உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்யுங்கள்.

காலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடலில் ஒவ்வொரு அணுக்களுக்கும் அந்த வீரியத் தன்மையைச் செருகேற்றிக் கொள்ள வேண்டும்.

இருளை நீக்கி… சிந்தித்து செயல்படும் ஆற்றல் பெற்று அமைதியான வாழ்க்கையும் அருள் ஞானத்துடன் வாழ்ந்தும் சாந்தமும் விவேகத்துடன் இந்த வாழ்க்கை வாழும் அருள் சக்தி பெறுங்கள்.

இதைப் படிப்போர் அனைவரும் இந்த உடலுக்குப்பின் ஏகாந்த நிலை பெற்று… எதிர்ப்பே இல்லாது ஒளியின் உணர்வாக மாறி… என்றும் ஏகாந்த நிலை பெற எனது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
1.அருள் வழியில் இருளை அகற்றி… மெய் ஞான உலகுடன் நீங்கள் ஒன்றி நீங்களும் வளர்ந்து உலக இருளை நீக்கி…
2.அனைவரையும் மெய் ஞான வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞான அன்பர்களாக நீங்கள் அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

உபதேசத்தைப் பதிவாக்கி நினைவாக்கினால் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகள் தன்னிச்சையாகச் செல்லும்…

உபதேசத்தைப் பதிவாக்கி நினைவாக்கினால் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகள் தன்னிச்சையாகச் செல்லும்…

 

நாம் எந்தக் காரியத்தை எண்ணினாலும் தாய் தந்தையை நினைத்து “அவர்களை முன்னிலையில் வைத்துச் செயல்பட்டால்…” நம் உயர்வுக்கு அது என்றுமே வழி காட்டும்.

நம் அன்னை தந்தையர் எப்போதுமே நாம் உயர வேண்டும்… நாம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நாம் அன்பாக இருக்க வேண்டும்… பண்பாக இருக்க வேண்டும்… ஆரோக்கியமாக இருக்க வேண்டும்… செல்வச் செழிப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டே இருப்பார்கள்.
1.வேறு யாரும் அவ்வாறு எண்ண மாட்டார்கள்…
2.தந்தைக்குக் கூட சில நேரம் வெறுப்பும் கோபம் வந்துவிடும்.
3.தாயின் மனதை எப்பொழுதும் நாம் எண்ணி இருக்க வேண்டும்.

தாய் கருவில் இருக்கும் பொழுது பத்து மாதம் நம்மைச் சுமந்தது. பிறந்த பின் நம்மை வளர்ப்பதற்கு எத்தனையோ கஷ்டப்பட்டது.
1.என் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று
2.தாய் ஒன்று தான் நம்மை எவ்வாறு எண்ணும்.
3.அவருடைய ஆசை “நாம் உயர வேண்டும்…” என்பது தான்.

அந்தத் தாயின் ஆசையின் துணை கொண்டு தான் தியானத்தில் நாம் சக்தி எடுக்கப் பழக வேண்டும்.

அம்மா அப்பா அருளால்… அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்துங்கள்… கண்களை திறந்தே…!

யாம் (ஞானகுரு) உபதேசிப்பதைக் கேட்டு நீங்கள் பதிவாக்கி விட்டீர்கள். இந்தப் பதிவின் நினைவினை உங்கள் கண்ணிற்குக் கொண்டு வாருங்கள்.

கண்னின் நினைவுகள்…
1.எதைத் துருவ நட்சத்திரம் என்று சொன்னேனோ
2.அங்கே அழைத்துச் செல்கின்றது உங்களுடைய உணர்வுகளை.
3.இந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை கவரும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள், கண்ணின் கருமணியில் இப்பொழுது ஈர்க்கும் சக்தி வரும். கண் கனமாக இருக்கும்.

மெதுவாகக் கண்களை மூடுங்கள். புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள் கண்ணின் நினைவினை…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவனைப் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் சக்தியைப் பெறுங்கள். அவ்வாறு ஈர்க்கும் ஆற்றல் பெற்றால்
1.புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு அதிகரிக்க… அதிகரிக்க
2.உடலுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் தீய உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி தடைபடுத்தும்.

உயிரின் ஈர்ப்பில் கண்களில் எப்படி முதலில் கனமாக இருந்ததோ புருவ மத்தி வழியாக ஈர்க்கும் சக்தி வரும் போது அங்கேயும் கனமாக இருக்கும். உயிரிலே மோதும் பொழுது வெளிச்சங்கள் வரும்.

உடல் முழுவதும் அந்த ஒளி சக்தி பரவும். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாகும் சக்தி இப்பொழுது பெறுகின்றது.

எந்த நிமிடத்தில் இனி எது வந்தாலும் நம் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்

எந்த நிமிடத்தில் இனி எது வந்தாலும் நம் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்

 

பூமிக்குள் விஷக்கதிரியக்கங்கள் அதிகமாகி விட்டது… அதனால் பூமி கரையக்கூடிய நிலைகளும் அதிகமாகி விட்டது.

துருவத்தின் வழியாக விஷத்தின் தன்மைகள் பரவப் பரவ… பூமிக்குள் குழம்பின் நிலைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அந்த இயக்கத்தினால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் கரைந்து கடல்கள் பெருகுகின்றது.

கதிரியக்கங்கள் பூமிக்குள் சென்று கூழாக மாற்றும் தன்மை அதிகரிக்கிறது.
1.கடல் இருக்கும் பக்கங்களில் விஷக் கதிரியக்கங்கள் பாய்ந்தால்
2.கடல் அலைகள் பொங்கி (சுனாமி) நகரங்களை அழிக்கும் தன்மை வருகின்றது.

இயற்கையின் சீற்றங்கள் இப்படி எத்தனையோ வருகின்றது.

ஆனால் மனிதராக வாழும் நாம் எந்த உணர்வின் தன்மையைப் பெற்றோமோ… உடலை விட்டுப் போகும் போது எந்த ஆசையை முன்னணியிலே வைத்திருந்தோமோ
2.உயிரிலே கடைசி நிமிடத்தில் அது தூண்டப்படும்போது
2.இதைக் கவர்ந்து அடுத்த உடலாகப் பெறுகின்றது.

ஆகவே நாம் இப்போதிருந்தே தயாராகிக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கிப் பெருக்கி
1.எந்த நிமிடத்தில் எது வந்தாலும்
2.நம்முடைய நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்ற உணர்வானால்
3.அதன் உணர்வு வலுவானால் நம் உயிர் அங்கே செல்கிறது…
4.எத்தகைய நிலையானாலும் உயிருடன் ஒன்றி நாம் அங்கே செல்கிறோம்.

இன்று நடக்கும் எத்தனையோ நிகழ்வுகளைக் கண்டு “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…!” என்று பொருளின் பற்று வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு கருகிடும் நிலை வருகின்றது. மீண்டும் உடலின் பற்று கொண்டு பிறவிக்கே வருகின்றது.

ஆனால் கருகிய உணர்வானாலும்…
1.துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கும் போது கருகும் தன்மை இழக்கப்படுகிறது
2.உணர்வின் தன்மை ஒளியாகி அங்கே செல்கின்றது.

உங்களுக்குள் இதையெல்லாம் பதிவாக்கி விட்டேன் (ஞானகுரு).

1.உங்கள் நினைவு தான் உங்களைக் காக்க வேண்டும்…
2.வேறு எவரும் காக்க மாட்டார்கள்…!

நீங்கள் எண்ணிய உணர்வை வைத்துத் தான் உங்கள் உயிர் இந்த வாழ்க்கையை நடத்துகின்றது… உணர்வின் தன்மை உடலாக மாற்றுகின்றது… அதன் வழியே உங்களை ஆளுகின்றது.

இதை எல்லாம் மனித உடலில் இருக்கும் போது தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மனிதன் இந்த நிலையைச் செயல்படுத்தவில்லை என்றால் “பின் யாரும் நம்மைக் காக்க மாட்டார்கள்…”
1.உடல்கள் மாறும்… உயிர் அழிவதில்லை.
2.அழியாத உயிருடன் உணர்வை அழியாத நிலைகள் கொண்டு செல்வதுதான் நம் குருநாதர் காட்டிய மெய் வழி.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் வளர்த்தால் கல்கி என்ற பிறவியில்லா நிலை அடைகின்றோம். அதை அடைதல் வேண்டும்…!

துருவ நட்சத்திரத்துடன் ஒட்டிக் கொள்ள நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதி

துருவ நட்சத்திரத்துடன் ஒட்டிக் கொள்ள நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதி

 

உதாரணமாக நாகன் (பாம்பு) தன் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சுகின்றது. விஷத்தைப் பாய்ச்சி மயங்கச் செய்த பின் அதை உணவாக எடுத்து உட்கொள்கின்றது.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் உண்டு. எதனின் விஷமோ இதனில் கலந்து அதற்குள் இணைந்த பின்
1.பாம்பின் விஷம் அதை மடியச் செய்கின்றது… அந்த விஷத்தின் வலுவைக் குறைக்கின்றது
2.குறைத்த பின் அதன் உடலின் தன்மை உணவாக உட்கொள்கின்றது.
3.உட்கொண்ட பின் அந்த விஷத்தை ஒடுக்கித் தனக்குள் எடுத்துக் கொள்ளும் போது
4.இப்படிப் பல உணர்வுகள் சேர்ந்து இந்த விஷத்தின் தன்மை அடைந்த பின்
5.அதுவே ஒளியின் தன்மையாக நாகரத்தினமாக விளைகின்றது.

இதைப் போன்று தான் ஆதியிலே அகஸ்தியன் துருவனாகும் போது உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்.

வேதனைப்படுவோரை அடிக்கடி நாம் எண்ணினால் நம் இரத்த நாளங்களில் அந்த வேதனை கலந்து மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் தாக்கிய பின் அது சோர்வடைகிறது.

வேதனை என்பது விஷம். அந்த வீரிய உணர்வு கொண்டு அனைத்தையுமே மாற்றுகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். அந்த அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரப்படும் போது நம் இரத்தத்தில் கலக்கின்றது. இதை அதிகமாக உடலுக்குள் செலுத்திய பின் இரத்தங்கள் மூலம் எல்லா உறுப்புகளுக்குள்ளும் சுழன்று வருகிறது.

நாம் நுகர்ந்த வேதனை என்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் உருவாகிறது. நஞ்சினை வென்றிடும் அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகும் பொழுது அந்த நஞ்சினை மாற்றிவிடுகிறது… விஷம் பிரிந்து செல்கின்றது.

இது போன்று இப்படிப் பெருகிய உணர்வுகள் தான்
1.அணுவின் துடிப்பால் ஏற்பட்ட உணர்வுகள் அகஸ்தியனுக்குள் “மின் அணுவின் தன்மையாக” உருவானது.
2.அந்த அகஸ்தியனுக்குள் விஷம் ஒடுங்கி எப்படி மின் (பேரொளி) அணுவாக உருவானதோ
3.அதே போல நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.

இதை எல்லாம் சற்றுக் கவனமாகக் கேட்க வேண்டும். இதை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் நினைவுகள் அந்தப் பேரருளைப் பெற்ற அருள் ஞானிகளின் அருகிலேயே அழைத்துச் செல்லும்.

தீமை செய்கிறான் என்று எண்ணினால் நம்முடைய நினைவுகள் தீமை செய்பவனிடமே அழைத்துச் செல்கின்றது… அங்கேயும் இயக்குகின்றது.

அதைப் போல் நண்பன் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணினால் நினைவலைகள் அங்கே சென்று விக்கலாக நல்ல உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஒளியின் உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த ஞானியின் வட்டத்திற்குள் நாம் செல்கிறோம்.

1.மகரிஷிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்கள் வெளிப்பட்டதை குரு எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.
2.அந்த உணர்வின் வித்தினை வளர்த்தேன்
3.அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள்ளும் விளைய வைக்கின்றேன்.
4.இதன் தொடர் கொண்டு நீங்கள் எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் ஓட்டலாம்.

அதன் உணர்வின் தன்மையை நீங்களும் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யலாம். உங்களில் தீமை செய்யும் உணர்வுகளுக்கு இந்த அருள் உணர்வினை இணைத்து அதைக் குறைக்கலாம்.

இது சிறுகச் சிறுக வளர்ச்சியாக நஞ்சின் தன்மையும் குறையும். உணர்வின் மணமும் குறையும்.
1.உங்கள் உணர்வின நினைவும் விண்ணிலே செல்லும்
2.பிறவி இல்லை என்ற அழியா ஒளி நிலை பெறலாம்.