
ஊழ்வினையின் இயக்கங்கள்
இன்று விஞ்ஞான அறிவால் ஒன்றுமறியாத நாடாக்களில் முலாம்களைப் பூசி வைத்திருக்கின்றார்கள். மைக்கை நேர்முகமாக வைத்து அதிலே நாம் பேசும் பொழுது அதில் உள்ள காந்தப் புலன்கள் கவர்ந்து அதனை அப்படியே பதியச் செய்கின்றது.
இதைப் போன்று தான்
1.இயற்கையில் ஓர் உயிரணுவாக இருந்தாலும் சரி அணுவாக இருந்தாலும் சரி
2.இவைகள் அனைத்திலும் அதில் இருக்கும் காந்தப் புலனே கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது அது பதியச் செய்கின்றது.
மனிதனாக நாம் பிறந்திருப்பினும் நம் உடலில் இருக்கக்கூடிய எலும்புக்குள் மேக்னட் சக்தி உண்டு. புழுவிலிருந்து நாம் மனிதனாக வளர்ந்து இருப்பினும் அதனதன் சேர்த்துக் கொண்ட நிலையில் ஊழ்வினையாக அந்த உணர்வுகள் வளர்ச்சி பெற்று அதிலே வளர்ந்த உணர்வின் அணுக்கள் விளைந்துள்ளது.
நாடாக்களில் பதிவு செய்வது போல நமது எலும்புகளுக்குள் இருக்கும் மேக்னட் காந்தப் புலன் ஊழ்வினையாகின்றது.
1.இப்பொழுது யாம் பேசுவதைக் கூர்ந்து கவனித்தால் அது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
2.பதிவான பின் தான் பேசியதை அது கவர்ந்து கொள்ளும்.
3.பின் ஆன்மாவாகக் கவர்ந்து அதிலிருந்து சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதனின் உணர்வலைகளை அறியச் செய்கின்றது.
அந்த நாடாக்களில் எவ்வாறு பேசிப் பதிவாக்கப்படுகின்றதோ இதைப் போல இப்பொழுது யாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தால் அது பதிவாகும். அதே சமயம்
1.வேறு அலுவல் காரணமாக “வேலைக்கு நேரமாகிவிட்டது” என்ற எண்ணத்தைச் செலுத்தி உங்கள் நினைவினை அங்கே பாய்ச்சினால்
2.அதனின் உணர்வலைகள் தான் உங்களை இயக்கும்… நான் பேசுவது பதிவாகாது.
உதாரணமாக ஒரு நண்பன் கடுமையாக நம்மை ஏசுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதை உற்று நோக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
உடலிலிருந்து வரக்கூடிய அவனின் உணர்வலைகளைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கும் பொழுது உயிருடன் ஒன்றி அந்த உணர்வுகள் இயக்கி உடல் முழுவதும் படர்ந்து அறியச் செய்கின்றது.
அதே போல்… இங்கே யாம் பேசும் அந்த உணர்வின் சக்தியை நேர்முகமாக இருந்து கேட்டறிந்தால் போதும். குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் உபதேசிக்கும் பொழுது
1.இன்றைய நிலைகளில் பாட நிலைகள் அல்லாதபடி
2.இது என்னமோ சொல்கின்றார் என்ற நிலையில்லாதபடி
3.தெய்வத்தை நாம் வணங்கி வரும் அதற்கு மாறான நிலைகளில் சொற்பொழிவாற்றுகிறார் என்று எண்ணாதபடி நீங்கள் கூர்ந்து கவனித்தால்
4.விநாயகர் தத்துவப்படி… இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறி வைத்திருக்கும் அதனுடைய மூலக்கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும்.
ஆற்றல் மிக்க நிலைகளை யாம் உபதேசிக்கும் பொழுது நீங்கள் பதிவு செய்து கொண்டால் அடுத்து நீங்கள் திரும்ப எண்ணும் பொழுது… நமக்கு முன் பரவி இருக்கும் ஆற்றல்மிக்க அருள் ஞானிகளின் சக்திகளை நீங்கள் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
விஞ்ஞான அறிவால் பல நிலையில் கொண்டு ஒலி/ஒளிபரப்பு செய்யக்கூடிய பல நிலைகளையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.
விஞ்ஞானக் கருவியின் துணை கொண்டு மற்றொரு பக்கம் அதனின் சுவிட்சை இயக்கினோம் என்றால் அங்கிருக்கக்கூடிய ஆண்டெனா காற்றிலிருக்கக் கூடியதைக் கவர்ந்து டிவி மூலமாக ஒளிபரப்பு செய்கின்றது… திரைப்படமாகக் காட்டுகின்றது.
இதைப்போல இந்த மனித வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களைப் பலருடன் உறவாடப்படும் பொழுது
1.“எதை ஆழ் கருத்தாக நாம் பதிவு செய்கின்றோமோ… அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவாகி விடுகின்றது…”
2.பின் அதனின் நினைவலைகளைக் கொண்டு வரும் பொழுது கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.
டிவிக்கு ஆண்டென்னா எப்படி முக்கியமோ இதைப் போல நமது கண் நமக்கு ஆண்டென்னாவாக இருக்கின்றது.
நாம் நினைவுபடுத்திப் பார்க்கப்படும் பொழுது நமக்கு முன் பரவிப் படர்ந்திருக்கும் இதற்கு முன் உறவாடிய உணர்வுகள் நமக்குள் அது பதிவு உண்டு.
1.நண்பர்கள் ஆனாலும் எதிரிகள் ஆனாலும் அதிலே பதிவுகள் உண்டு.
2.அது பதிந்த நிலைகள் கொண்டு நாம் பேசிய உணர்வலைகள் இங்கே படர்ந்து கொண்டே இருக்கும்.
ஆனால்… டிவி மற்ற இன்றைய எலெக்ட்ரானிக் கருவிகள் மூலமாகப் பதிவு செய்யும் நிலைகள் வேறு. மனித உணர்வுகள் இயற்கையின் இயக்கத்தின் சக்தி அதன் மூலமாக பதிவு செய்யும் நிலைகள் வேறு.
இவ்வாறு படர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையை நண்பன் எதிரியாக கடும் சொற்களைச் சொன்னால் அதைப் பதிவு செய்து கொண்டால் திரும்ப எண்ணினால் அவன் எங்கோ இருப்பான் என்றாலும்
1.அதே உணர்வுகள் நமக்குள் கவர்ந்து நம்மை அறியாமலேயே கோபமும்
2.அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகளும் நமக்குள் வருகின்றது.
நாம் ஒரு விதையைப் பூமியில் பதித்து விட்டால் தன்னுடைய உணர்வின் சத்தால் காற்றிலிருந்து தன் உணர்வினைச் சுவாசித்து அதனின் சத்தாக விளைகின்றது. அந்த வித்து அதன் இனமான செடியாக வளர்கின்றது.
இதைப் போன்றுதான் நாம் ஒரு மனிதனுடன் உறவாடினால் அந்த உணர்வின் வித்து நமக்குள் பதிவாகி… அதுவும் வளர்கிறது.
1.தாவர இனங்கள் பூமிக்குள் இருந்து எப்படித் தன் உணர்வின் மணங்களை அது கவர்கின்றதோ இதைப் போல
2.நமக்குள் பதிவான அந்த மனிதனுக்குள் விளைந்த அந்த உணர்வின் வித்து நமக்குள் பதிவாகின்றது.
3.இப்படிப் எண்ணிலடங்காத குணங்களும் எண்ணிலடங்காத உணர்வுகளும் நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
அப்படிப் பதிவாகி இருக்கப்படும் போது தன் தன் இனத்தின் நிலையில் அதனின் உணர்வின் தன்மை இயக்கும். அப்படி இயக்கப்படும் பொழுது
1.நாம் ஒருவருக்கொருவர் பேசி உறவாடிய உணர்வுகளைக் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றும்.
2.ஆன்மாவாக மாற்றப்படும் பொழுது அதிலே எது அதிகமாக இருக்கின்றதோ அது முன்னணியில் வந்துவிடும்.
உதாரணமாக… குழம்பு வைக்கப்படும் பொழுது காரம் புளிப்பு துவர்ப்பு இனிப்பு இவைகளைப் போட்டுச் சுவைமிக்கதாக ஆக்கினாலும் அதில் காரத்தைக் கூட்டிவிட்டால் காரமாகத் தான் அது இருக்கும்… உப்பு அதிகமானால் கையிப்பு அதிகமாகிவிடும்.
இதைப் போன்று தான் நமக்குள் எண்ணிலடங்காத குணங்கள் பதிவாகி இருந்தாலும் ஊழ்வினையாகின்றது. அதிலே நாம் எதை அதிகரித்துக் கொள்கின்றோமோ அந்த உணர்வின் சத்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே அது எந்த குணத்தின் அடிப்படையிலோ “கோபம் என்றால் கோபம் வருவதும்… சலிப்பு என்றால் சலிப்பு வருவதும்…” இப்படி மாறி மாறி எத்தனையோ வந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு நாம் ஊழ்வினையாகப் பதிவு செய்தது எல்லாம்
1.நமது மனம் எப்பொழுது சோர்வடைகின்றதோ அதிலே நஞ்சான உணர்வு முன்னெழுந்து
2.அதனின் உணர்வின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்திவிடும்.
இதை நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் அன்று அகஸ்தியன் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று பெயரிட்டு நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றான்.
ஆகவே நாம் நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக எதை ஆக்க வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
Like this:
Like Loading...