பிள்ளையார் “சுழி…” இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியாகப் போட்டு ஏன் காண்பித்தார்கள்…? ஞானிகள்

Image

Ganesamoorthy

பிள்ளையார் “சுழி…” இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியாகப் போட்டு ஏன் காண்பித்தார்கள்…? ஞானிகள்

 

நமக்குள் வீற்றிருந்து மனிதனாக உருவாக்கிக் கெட்டதை நீக்கி நல்லதை உருபெறச் செய்யும் சக்தி நம் உயிர் தான். உயிரே கடவுள்…!

ஆகவே நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உயிரான ஈசனுக்கு எந்த விதமான எரிச்சலைக் கொடுக்காத வண்ணம் நல்ல உணர்வுகளைப் பெறச் செய்வதற்காக வேண்டித் தான் ஆலயங்களை அன்று உருவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

1.நம் உடலில் பட்ட அழுக்கைத் தினசரி குளித்து நீக்குவதுபோல்
2.உயிரான ஈசனிடம் படும் அசுத்தங்களைத் துடைத்திட
3.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கச் செய்து
4.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நம் உடலுக்குள் செயல்படுத்துவதற்கே
5.அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் தெய்வச் சிலைக்குக் காட்டினார்கள் காஞானிகள்.

தெய்வத்திற்குப் படைக்கப்பட்டிருக்கும் கனியைப் பார்க்கும் போது அந்தக் கனியின் சுவையைப் போல எங்கள் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. எங்கள் சொல்லைக் கேட்போர் உள்ளங்களில் அந்த மகிழ்ச்சி பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும். அவர்கள் வாழ்வில் இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காண வேண்டும்.

மலரைப் போல மணம் நாங்கள் பெற வேண்டும். எங்களுக்குள் ஒற்றுமை ஏற்படும் அருள் சக்திகள் வளர வேண்டும்.
1.இந்த உலகெங்கிலும் உள்ள எல்லா மனிதரையும் இயக்கிக் கொண்டிருக்கும்
2.ஈசனின் அருள் நாங்கள் பெற வேண்டும் என்று
3.இவ்வாறு நமக்குள் கலந்து நாம் அனைவரும் ஒன்று என்ற நிலையில்
4.அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு எல்லோரும் இணைய வேண்டும் என்ற
5.இந்த உயர்ந்த பண்புகளை ஆலயத்தின் பண்பாகக் காட்டினார்கள் ஞானிகள்.

அனைவரும் ஒன்றாகச் சேர்த்து தேரை வடம் பிடித்து இழுப்பதைப் போல நம் அனைவருடைய எண்ணங்களையும் ஒன்றாகச் சேர்க்கச் செய்து இந்தக் காற்றில் கலந்துள்ள ஞானிகளின் அருள் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தார்கள் ஞானிகள்.

சூரியக் குடும்பம் எப்படிப் பல உணர்வின் தன்மைகள் கொண்டாலும் அந்த உணர்வின் தன்மைகள் ஒன்றாக இயக்கி இணைந்த நிலைகள் கொண்டு ஒரு பிரபஞ்சமாக ஒற்றுமையாக வாழ்கின்றது.

1.சூரியனின் இயக்கத்தில் பல கோள்களாகி கோளுக்குள் பூமியாகி
2.பூமிக்குள் தாவர இனமாகி தாவர இனத்தின் சத்தை உயிரணுக்கள் கவர்ந்து உடல்கள் பெற்று
3.பல பல உடல்கள் மாறி மனிதனான பின் உணர்வுகளை ஒளியாக மாற்றி
4.என்றுமே அழியாத ஒளிச் சரீரமாகப் பெற வேண்டும் என்ற
5,மெய் உணர்வின் தன்மையை உணர்த்துவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தார்கள்.

அதைத் தெரியப்படுத்தி அந்த உணர்ச்சியை உந்தச் செய்து… நாம் யார்…? என்று அறிந்து கொள்வதற்காக இந்தப் பிள்ளை யார்…! யானையின் தலையைப் போட்டு மனித உடலைப் போட்டுக் கேள்விக் குறி போட்டுக் காட்டினார்கள்.

நம் மனித உடலை உருவாக்கிய ஈசனின் அணைப்பிலே அந்த மெய் ஒளி காட்டிய அந்த மெய் ஒளியின் தன்மையான (மெய் ஞானியாக) அந்தப் பிள்ளையாக ஆகப் போகின்றீர்களா…?

(அல்லது)

இந்த வாழ்க்கையிலே “வாழ்ந்ததே போதும்…!” என்ற நிலைகள் கொண்டு ஆசையினால் வெறுப்பின் நிலைகள் ஆகி…
1.ஒரு உடலுக்குள் சென்று பேயாக ஆட்டிப் படைக்கும் சக்தியாகப் போகின்றீர்களா…?
2.ஒரு உடலுக்குள் சென்று அந்த நோயாக வேதனைப்படச் செய்யப் போகின்றீர்களா…?
3.இது எல்லாம் வளர்த்த பின் விஷம் கொண்ட உயிரினங்களாகப் பிறக்கப் போகின்றீர்களா…? என்று
4.இதை (தனக்குள் கேள்வியாகக் கேட்டு) உணர்த்துவதற்காகத்தான் விநாயகருக்குக் கேள்விக் குறியைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
5.(ஞானிகள் பிள்ளையார் “சுழி…!?” என்று கேள்விக் குறியாகப் போட்டுக் காட்டினால் நாம் “உ…” போட்டால் நாம் தொடங்கும் காரியத்திற்கெல்லாம் நல்லது என்று இப்படித்தான் எண்ணுகிறோம்)

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாகத் தோன்றினாலே முழு முதல் கடவுள். ஆகவே நாம் உருவாக்கும் நிலையில் இருக்கின்றோம். பேரருள் உணர்வுகளை எடுத்துப் பேரொளியை நமக்குள் உருவாக்க வேண்டும்.

இந்த உடலை விட்டுச் சென்றால் விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்றடைய வேண்டும்.

நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வையும் ஒளியாக மாற்றும் நிலைகள் பெற வேண்டும் என்று நமது குருநாதரும் மற்ற மகா ஞானிகளும் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

அவர்கள் காட்டும் வழியில் நாம் செல்வோம். அந்த அருள் வழி நாம் பெறுவோம்.

குருநாதர் வழியில் தான் யாம் உங்கள் பொட்டில் (உயிரில்) தொட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம்…!

Image

Third eye agastyar

குருநாதர் வழியில் தான் யாம் உங்கள் பொட்டில் (உயிரில்) தொட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கின்றோம்…! 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயக்கிக் கொண்டிருக்கும் குணங்களைத் (உணர்வின் இயக்கங்களை) தெய்வங்களாகக் காட்டி
1.சந்தர்ப்பம் எதை நம்முடன் இணைக்கின்றது…
2.சந்தர்ப்பம் எதை நமக்குள் விளைவிக்கின்றது…? என்ற நிலையைத்
3.ஞானிகள் தெளிவாக உணர்த்தியிருந்தாலும்
4.காலத்தால் நாம் அதை அறிய முடியாத நிலைகள் ஆகிவிட்டது.

இந்த விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் அழித்திடும் காலமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. மனிதனின் சிந்திக்கும் நிலைகள் அழிந்து கொண்டிருக்கின்றது. மனித இனமே வீழ்ந்திடும் நிலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்தக் காலகட்டத்தில் இப்பொழுதாவது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் செல்லும் உணர்வை வளர்த்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
1.எல்லோரும் பொட்டில் தொட்டுக் காண்பிக்கிறார்கள்,
2.குண்டலினியைத் தொட்டுக் காண்பிக்கிறார்கள்.
3.முதுகு தண்டைத் தொட்டுக் காண்பித்தார்…! அப்படியே ஜிர்…ர்ர்…! என்று இழுத்தது
4.ஆனால் சாமி (ஞானகுரு) இப்படியெல்லாம் ஒன்றுமே கொடுக்கவில்லையே…! என்று
5.நீங்கள் ஏமாந்து போய் “இதை விட்டு விடாதீர்கள்…!”

ஏனென்றால்
1.உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும்
2.உணர்வின் இயக்கத்தை உள்ளூர அதைத் தொட்டுக் காண்பித்து
3.அந்த இயக்கத்தின் உணர்வை உங்களுக்குள் அறியச் செய்து
4.அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அது உங்களுக்குள் கட்டுப்பட்டு இயக்கும் சக்தியாக மாற்றுவதற்கு
5.அந்தந்தக் காலத்தில் ஒவ்வொரு மகரிஷியின் அருள் ஒளியை உங்கள் உடலுக்குள் சேர்த்து
6.பல விதமான குணத்திற்குள்ளும் உணர்வுக்குள்ளும் புகுத்தச் செய்து
7.உபதேச வாயிலாகக் கேட்டுணரச் செய்து பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.
8.இது தான் தொட்டு காண்பித்தல் என்பது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி இது தான். குருநாதர் இப்படித் தான் எனக்குத் (ஞானகுரு) தொட்டுக் காண்பித்தார். அதைத் தான் உங்களுக்குள்ளும் நான் தொட்டுக் காண்பிக்கிறேன்.

மெய் ஞானியின் அருள் சக்தியை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இணைத்து அந்த உணர்வின் தன்மையை இயக்கச் சக்தியாக மாற்றி விடு…!
1.“மக்கள் அனைவரையும் மெய் ஞானிகளாக மாற்ற வேண்டும்…!”
2.எல்லா மக்களும் விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர வேண்டும்…! என்ற இந்த முழுமையான எண்ணங்கள் கொண்டு அதைச் செய்…!
3.ஆனால் போற்றும் நிலைகள் கொண்டு உபதேசித்து விடாதே…
4.போற்றும் நிலைக்காக ஏங்கி விடாதே…
5.உன்னைப் போற்றும் இயக்க நிலைகளுக்கு ஏங்கி விடாதே…
6.போற்றும் உணர்வைக் கலந்து பதியச் செய்து விடாதே…!
7.அது உன்னையும் ஏமாற்றிவிடும் கேட்போர்கள் உணர்வையும் மாற்றிவிடும் என்று தெளிவாக குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

ஆகவே இந்த உடலை விட்டு எப்பொழுது உயிரான்மா சென்றாலும் என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் என்ற இந்த உணர்வினை நீங்கள் வளர்த்து அங்கே மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குள் செல்வோம்…! என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.