“இலட்சுமி நாராயணா…” என்று ஏன் சொல்கிறோம்…?

Adi Sakthi Goddess - Matha

“இலட்சுமி நாராயணா…” என்று ஏன் சொல்கிறோம்…? 

குடும்பத்தில் நீங்கள் அனைவருமே ஒற்றுமையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அதிகமான சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் மறந்திட வேண்டாம்.

பெண்கள் சாபமிட்டால்
1.அந்தச் சாப அலைகள் பிறரைத் தாக்கும்.
2.சாப அலைகள் வரும் போது தீமைகளை உருவாக்கும் உடலாகத்தான் மாறும்.
3.தீமை செய்யும் பூச்சியும் புழுவாகத் தான் நம்மை மாற்றி விடும்.

பெண்பாலுக்கு அதிகமான சக்தி இருக்கிறது என்றால் குடும்பத்தில்   ஒன்றுபட்டு வாழவேண்டும். உணர்வின் தன்மை ஒன்றான செயலில் வளர வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் அதன் வழி வாழும்.

உதாரணமாகக் குடும்பத்தில் கஷ்டம் என்று வந்து விட்டால்
1.கணவனுக்கு இப்படிக் “கஷ்டம் வந்து விட்டதே…” என்று மனைவி வேதனையுடன் எண்ணினால்
2.மீண்டும் கணவனுக்கு அந்தத் தொல்லைகள் தாக்கும்.
3.கணவன் தொல்லைகளிலிருந்து மீள வேண்டும்
4.அருள் ஒளி பெற வேண்டும்,
5.அவர் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மனைவியின் உணர்வுகள் வலுப் பெற்றால்
6.அதை மாற்றியமைத்துத் தொல்லைகள் மாறி கணவனுக்கு உறு துணையாக இருக்கும்.

இதைப் போன்ற நிலைகள் பெண்கள் நாள வரும் உலகத்தை உயர்வாக்கச் செய்யும் நிலையாக வளர வேண்டும்.

ஏனென்றால் முதலில் ஆதி சக்தியாக இருந்தது விஷம் தான். அது தாக்குதலால் ஏற்படும் நிலைகளில் தான் அதிகமாகி… விஷத்தின் தன்மை அழுத்தம் அதிகமாகும் போது… வெப்பமாகின்றது.

வெப்பமான பின் தான் அணுக்களாகப் பிரிந்து ஓடும் தன்மை வரும். ஓடும் நிலைகளில் தான் காந்தமாகிறது. இநத மூன்று விளைவிற்கும் தான் காரணப் பெயர் வைக்கிறார்கள் ஞானிகள்.

முதலில் பெண்பால் தான் உருவாகிறது.
1.ஆதி சக்தி என்பது விஷம்
2.ஆதிபராசக்தி என்பது இரண்டாவது வெப்பம்
3.வெப்பமான பின் ஈர்க்கும் தன்மை வரும்போது ஆதிலட்சுமி என்பது காந்தம்

(பெண் பால் என்ற நிலையில்) காந்தம் இழுத்து ஒரு பொருளை உருவாக்கும் தன்மை வரும்போது தான் பிரம்மம். ஒரு உருவின் தன்மை ஆண்பால் என்ற நிலை வருகிறது. ஆக பெண்பால் என்ற உணர்வுகள் அதனுடன் சேர்க்கப்படும் பொழுதுதான் ஒரு உருவத்தின் அமைப்பே வருகிறது.

முதலில்
1.அணுவின் தன்மையும் துடிப்பின் தன்மையும் தான் இருக்கும்
2.ஒரு உணர்வின் தன்மை மோதலாகி அந்த உணர்வின் சத்தைத் தன்னுள்  எடுத்தால் அணுத்தன்மை என்ற நிலையை அடையும்.
3.அப்பொழுது ஆண்பால் என்ற நிலை வருகிறது.

எதன் உணர்வைப் பெற்றதோ காந்தம் வெப்பம் விஷம் என்ற மூன்று உணர்வும் நுகர்ந்து கொண்ட உணர்வினை இயக்கி ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகிறது.

இதைப் போன்ற நிலைகளில் பெண்பால் தான் சக்தி தான் சிவமாகின்றது. சிவத்துக்குள் சக்தியாக இருக்கின்றது.

நாம் எவ்வளவு பெரிய உடலாக இருந்தாலும் வேதனையின் உணர்வுகள் அதிகமாகிவிட்டால் அந்தச் சக்தி வேதனையின் உணர்ச்சி கொண்டு நம்மை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

உருவாக்க வேண்டும் என்ற உணர்வினை அந்தப் பெண்பாலின் சக்தியைக் கூட்டினால் அந்த உயர்ந்த உணர்வினை வளர்க்கும் சக்தியைப் பெறுகின்றோம்.

இன்று பெண்கள் திருமணமாகும் போது
1.வரதட்சணை வரவில்லை என்றால்
2.பெண்பால் என்று உணராதபடி அவர்கள் ஒவ்வொருவரும் வரும் மருமகளை  செல்வத்திற்காக அவமதிப்பதும்
3.செல்வம் கிடைக்கவில்லை என்றால் தூஷிப்பதும்
4.இதைப்போன்ற நிலைகளில் செல்வத்திற்கு அடிமையாகி
5.அருள் உணர்வை இழந்து
இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பகைமை உணர்வுதான் வளர்ந்து கொண்டு உள்ளது.

1.நல்ல குணங்கள் இருந்தால்
2.நல்ல பண்புகள் இருந்தால்
3.செல்வம் இல்லை என்றாலும்
4.அந்த அருள் செல்வத்தை வைத்து நாம் வேண்டும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலை  வருகிறது.
5.செல்வத்தின் அழியாத் தன்மையும் செல்வத்தில் மகிழ்ந்து வாழும் நிலையையும் கூட்டும்.

கல்யாணம் ஆகும்போது வரதட்சணையாக ஒரு லட்சம் கொடுத்தாயா..? இரண்டு லட்சம் கொடுத்தாயா..? உன் அப்பன் வீட்டிலிருந்து “கார் வாங்கி வா…” என்பது எல்லாமே விலை பேசி வாங்கும் தன்மை தான்.

பெண்கள் இதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெண்களை எந்த அளவிற்கு அடிமைகளாக அறிவிலிகளாக வைத்துள்ளது இந்தச் சமுதாயம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

நல்ல குணங்கள் இருந்தால் ஒன்றுபட்டு வாழும் போது செல்வம் எவ்வளவு வேண்டுமானாலும் கூடி வருகிறது.

செல்வத்தை வாங்கி வைத்து அடுத்து அந்தச் செல்வத்தின் மீது ஆசைப் படும் போது உங்கள் அப்பன் வீட்டிலிருந்து என்ன வாங்கி வந்துவிட்டாய்…? என்று இதே பெண்கள் தான் பேசுகின்றனர். பெண்களைப் பெண்களே அவமதிக்கின்றனர்.

இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது
1.அதனால் வரக்கூடிய பகைமை
2.இந்தச் செல்வத்தையும் பாதுகாக்க முடியவில்லை.
3.நாம் தேடிக் கொண்டிருக்கும் செல்வத்தையும் இடைமறித்து வேதனை என்ற உணர்வுகள் வருகின்றது.

வேதனைகள் வந்த பின் தன்னை அறியாமலேயே உடலிலே கடும் விஷத் தன்மையான நோய்கள் வருகின்றன என்பதையும் மறந்து விடுகின்றார்கள்.

ஆக உடல் நலம் பெற்று உணர்வுகள் வளம் பெற்றால் அந்த வலுப் பெற்றால்
1.செல்வத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை
2.செல்வம் தானாக வந்து சேரும்

தீமைகளை அகற்றும் நிலைகளை அடைய எனக்கு க் குருநாதர் இந்த உண்மையை உணர்த்தினார். அனுபவபூர்வமாக அறியச் செய்தார்.

தாய்மார்கள் இந்த உலகிலே
1.சக்தி என்ற நிலைகளாகி உணர்வின் தன்மை அதிகமாகி
2.இந்தச் சூரியனை உருவாக்கியதும் இதே சக்தி தான்.

அது தான் “இலட்சுமி நாராயணா” என்பது பெண்பால்தான் – சூரியனை வளர்க்கிறது. பெண்பால் என்று வளர்ந்தாலும் ஸ்ரீதேவி பூதேவி என்று உணர்வின் தன்மை இந்த உடலாக உருவாக்கியதும்  இந்தப் பெண்பால் தான் என்ற நிலைகளை நீங்கள் மறந்திடலாகாது.

நீங்கள் வேதனை என்றோ வெறுப்பு என்றோ பகைமை என்றோ உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வுகள் அதிகமாகத்தான் வளரும்.

நன்மை என்ற உணர்வு நம்மிலும் வளராது, நம் குடும்பத்திலும் வளராது, நமக்குள்ளும் அது வளராது. பகைமை உணர்வு தான் பூமியிலும் ஊரிலும் பரவும்.

குரு காட்டிய அருள் வழியில் நீங்கள் தாய்மார்கள் உயர்ந்த சக்தி பெற்றவர்கள் வேதனைப் படுதல் கூடாது வெறுப்படையும் செயல்கள் கூடாது.

1.அருள் ஒளி பெற வேண்டும்
2.நம் வீட்டில் இருள் அகல வேண்டும்
3.மெய்ப் பொருள் காணவேண்டும்
4.அருள் வழியில் நம் குடும்பம் வளர வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் பெற வேண்டும்.
5.உங்கள் சக்தி அங்கே செயல்படும்.

சிறு குறைகளைக் கண்டாலும் மனம் தாங்காது பெண்பால் அந்த உணர்வின் தன்மை வேதனைப் படும்போது அந்தக் குடும்பமே எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகி விடும்.

அதிகமான பாசமும் பற்றும் இருக்கும். ஆனால் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் குடும்பத்திலே வளரப்படும்போது நஞ்சான நிலைகளுக்கு மாற்றிடும்.

நம் குரு காட்டிய அருள் வழியில் ஒவ்வொரு தாய்மார்களும்
1.உங்களுக்குண்டான சக்தியைச் சீராக்குங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும்
4.என் கணவர் உடல் முழுவதும் பரவ வேண்டும் அவர் அருள் ஞானம் பெற வேண்டும்
5.எங்கள் குடும்பத்தில் அருள் ஒளி படர்ந்து இருளை அகற்றிடும் அருள் ஞானக் குடும்பமாக வளர வேண்டும்
6.கருவுற்றிருந்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கும் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஊட்டுங்கள்.

இந்த உலகையே இருளிலிருந்து மீட்டிடும் சக்தி உங்களுக்குத் தான் உண்டு. ஆகவே கணவனின் நிலைகள் கொண்டும் அது வளரும் பருவமல்ல, அது வளரமற்றது.

நீங்கள் அருள் ஞானத்தைப் பெற வேண்டும். என் கணவர் உயர வேண்டுமென்றால் உயர்த்திக் கொள்ளும் நிலைகள் அங்கே உண்டு.

பெண்பால் என்ற நிலைதான் ஒரு செடியானாலும் பெண்பால் என்ற உணர்வு தான் கவர்ந்து கொண்ட நிலைகள் தான் அதன் வித்தினை உருவாக்குகிறது.

பெண்கள் எந்த உயர்ந்த குணத்தை எடுக்கிறார்களோ அது அவர்களுக்குள் வளர்கிறது. கணவன்பாலும் அது வளர்க்கச் செய்கிறது.

அன்பு கலந்த உணர்வைத்தான் வளர்க்க வேண்டுமே தவிர பண்பிழந்த நிலைகளை அல்ல. அதேபோல ஆண்களும் பெண்களை மதித்து நடத்தல் வேண்டும்.

அது உயர்ந்த நிலை. பெண் தாய்க்குச் சமம். நாம் சொல்லும் உணர்வினை அது தன் கருவாக உருவாக்குகிறது. நம்மைப் பார்க்கும் போது நல்லவரென்றால் நல்லது என்று உருவாகிறது. நல்லது என்று சொல்லே இங்கே வருகின்றது.

வேதனை என்ற உணர்வுகளை அங்கே வளர்க்கப்படும் போது மனதிற்கும் அந்த நிலை வரும். வெறுப்பின் உணர்வு வரும் போது  அதை மாற்றி அமைத்திடும் சக்திகளை நாம் மாற்றிட வேண்டும்.

ஆண்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தன் மனைவி பெற்று அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று தன் மனைவிக்கு இந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

பெண்கள் எப்பொழுதுமே ஈர்க்கும் தன்மை – கவரும் சக்தி பெற்றவர்கள்.

ஒரு வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விட்டால் அவர்கள் அறியாமலே அந்த உணர்வுகள் அவர்களுக்குள் சென்று அவர்கள் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகிறது.

ஆண்கள் மன உறுதி கொண்டு் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தான் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
1.தன் மனைவிக்கும் அந்தப் பேரருள் பெற வேண்டும்
2.மன உறுதியும் மன வலிமையும் இருளை அகற்றும் அந்த வல்லமை பெற வேண்டும் என்ற உணர்வை  எடுத்துக் கொண்டால்
3.கணவன் மனைவி உணர்வு இரண்டும்  கலந்து அந்த உணர்வின் தன்மை செயலாக்கம் பெறும்.
4.இது பெண்களின் செவிகளில் பட்ட பின்  உணர்வில் நெகிழ்ந்தும் உயர்ந்த நிலையை அது உருவாக்கிவிடும்.
5.அதன் சொல்லும் நம்மை இனியதாக்கும் நிலையும்
6.நம் வீட்டிற்குள் அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும் வரும்.