நாம் கோவிலுக்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்குகின்றோமோ…! அல்லது சங்கடத்தைப் பெருக்குகின்றோமா…?

Treasure in Temple

நாம் கோவிலுக்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்குகின்றோமோ…! அல்லது சங்கடத்தைப் பெருக்குகின்றோமா…?

உதாரணமாக T.V. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் ஒருவன் நுழைந்து திருடிச் சென்றால் கூட ஒன்றும் தெரியாது.

அதே மாதிரி மற்றவர்களைப் பற்றி “அவர்கள் அப்படி மோசம்… இப்படி மோசம்…” என்று பேசிப் பாருங்கள். நான்கு மணி நேரமானாலும் நேரம் போவது தெரியாது.

இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் கடைசியில்…
1.ஹு,,,ம் என்ன பேசி என்ன செய்ய…? என்ற இந்தச் சோர்வு வரும்.
2.அடுத்து யாராவது கொஞ்சம் அதிகமாகப் பேசினால் வீட்டில் சண்டை வரும்.
3.கடைக்குப் போனால் வியாபாரம் சரியாகச் செய்ய மாட்டோம்.

அதே மாதிரி கவலையாகச் சங்கடமான நிலைகளில் பேசிக் கொண்டிருந்த பின் அந்த வேதனை உணர்வுகள் கைக்குழந்தை உள்ளத்தில் பட்டவுடன் நம் குழந்தை வீல்…வீல்…! என்று கத்த ஆரம்பித்துவிடும்.

அதிகம் வேதனைப்பட்டவர்களின் வேதனைகளைக் கேட்டுணர்ந்து அதன்பின் நீங்கள் குழந்தையைப் பாருங்கள். கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை எவ்வளவு தூரம் கத்துகிறது…? என்று பாருங்கள்.

உங்கள் மூச்சு பட்டவுடன் அதற்கு வயிற்று வலி வரும். கண் வலி வரும். ஏதாவது ஒன்று வரும்.

ஏனென்றால் அந்தக் குழந்தை நம்மைப் பாசமாகப் பார்க்கின்றது. அதற்கு வேதனை தெரியாது, பிஞ்சு உள்ளம். நாம் எடுத்துக் கொண்ட இந்த விஷமான உணர்வுகள் பட்டவுடன் இந்தக் குழந்தையின் உடல் பாதிக்கும்.

கல்யாண வீட்டிற்குள் சென்று பாருங்கள். நம் கைக் குழந்தையைப் பலர் கொஞ்சினால் குழந்தைக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை வரும்.

கூட்டத்திற்குள் எடுத்துச் சென்று விட்டு வந்தால் ஒருவர் சங்கடமாக இருந்திருப்பார். அவர் குழந்தையைத் தூக்கினால் போதும். அந்தச் சங்கடமான மூச்சலைகள் பட்டுக் குழந்தைக்குள் அந்த சங்கட அலைகள் சேர்ந்து விடும்.

இவையெல்லாம் இந்த உணர்வுகள் பாய்வதுதான். எல்லாமே உணர்வின் செயல்தான். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகள் நம்மை அறியாது இப்படி வருவதிலிருந்து விடுபடுவதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை உருவாக்கினார்கள். ஆலயத்திற்குள் சென்றால் நாம் எப்படி இன்று வணங்குகிறோம்..? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் சிறிது நேரம் “தியானம்…” செய்து பழகுங்கள். மகிழ்ச்சி வருவதைப் பார்க்கலாம். அர்ச்சனை செய்வதற்குப் பதில் அந்தக் கோவிலிலே நின்று
1.ஆலயத்தில் காட்டப்பட்ட அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும்
2.இதை அருளிய மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
3.மகரிஷிகள் உணர்வுகள் கலந்த உங்கள் மூச்சலைகளை வெளிப்படுத்தி அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…! என்று அங்கே பரப்புங்கள்

இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் இந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நூறு பேர் ஒவ்வொரு நாளும் அங்கே விட்டார்கள் என்றால் எல்லாமே பரிசுத்தமாகும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்…? நூற்றுக்கணக்கில் செல்கிறோம். கோவிலுக்குச் சென்று அங்கே கஷ்டத்தை எல்லாம் கொட்டி விட்டுத்தான் வருகிறோம்.

அதே உணர்வுடன் கோவிலுக்குச் என்றால் அவை எல்லாம் நம்மைப் பிடித்துக் கொள்ளும். கோவிலுக்குச் சென்று வரும் பொழுது சோர்ந்துதான் வருகின்றோமே தவிர நன்றாக வருகின்றோமா…?
1.கோவிலுக்குப் போகும் பொழுது எந்த வேகத்தில் செல்கிறோமோ…
2.அதே வேகத்தில் வீட்டிலிருக்கக் கூடிய கஷ்டத்தைத்தான் எண்ணுகின்றோம்.

சோர்வாக வரப்படும்பொழுது “இன்னொருவர் தனக்கும் கஷ்டம்…!” என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அந்தக் கஷ்டம் உடனே நமக்கும் வந்துவிடும்.

இப்படி நம்மை அறியாமல் சோர்விலேயும் சஞ்சலத்திலேயும் தான் கோவிலுக்குச் சென்று வருகிறோமே தவிர நல்லதை நாம் பெற முடிவதில்லை. “இந்தச் சோர்வுடன் போய் தெய்வத்திடம் வரம் கேட்பதுதான் நல்லது…!” என்று நினைக்கிறார்கள்.

அர்ச்சனையோ மற்றதோ செய்யும் காசை உண்டியலில் போடுங்கள். நல்ல காரியத்திற்கு அது பயன்படட்டும். ஆலய நிர்வாகம் அங்கே வருபவர்களுக்குத் தங்குவதற்கு வசதி செய்யட்டும்.

நீங்கள் வசதியாகப் போய் அங்கே உட்கார்ந்து அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும், இங்கே வருபவர்கள் எல்லாம் அந்தத் தெய்வ குணம் பெறவேண்டும் என்று மூச்சை விட்டுப் பாருங்கள். அங்கே நல்லது நடக்கும்.

மத்திரத்தைச் சொல்லிச் சொல்லி ஜெபித்துப் பார்த்தால் இந்த மந்திரத்தினால் இன்னொரு மனிதரிடம் விளைந்த உணர்வுகள் தான் உடலுக்குள் வரும். அது நமக்குள் வந்த பின் நம்மை அருளாடச் செய்யும்.

அருளாடும் பொழுது என்ன நடக்கும்…?

1.நாம் நான்கு பேருக்கு நல்லது செய்தோம்,
2.அவர்கள் கஷ்டத்தையெல்லாம் கேட்டு நாம் நுகர்ந்தோம்.
3.அவர்களுக்கு நல்லதாகிவிட்டது…. ஆனால் தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கின்றதே…! என்று
4.மறுபடியும் விஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

அதற்குப் பதிலாக அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்திற்குள் சென்றால் உங்களுக்குள் வரக்கூடிய இருளை நீக்கலாம். உங்கள் உயிர் தான் ஈசன். உங்களை நீங்கள் நம்பவேண்டும்.

Leave a Reply