கெட்ட கனவு வந்தால் பலிக்குமா…? நல்ல கனவு ஏன் பெரும்பகுதி வருவதில்லை…?

Astral divine powers

கெட்ட கனவு வந்தால் பலிக்குமா…? நல்ல கனவு ஏன் பெரும்பகுதி வருவதில்லை…?

கேள்வி:-
எதிர்மறையான செயல்கள் முன்னாடியே கனவாக வருகிறது. பின் நாளில் நிஜமாக நடக்கும் காரியத்தின் முடிவு (result) முன்னாடியே (நான் விரும்பாத செயல்கள்) கனவாக வருகிறது,

ஆனால் நான் விரும்பும் நேர்மறையான செயல்கள் பற்றிக் கனவு வராதது ஏன் எனத் தெரியவில்லை…? தீர்வு கொடுங்கள் ஐயா…

பதில்:-
எந்த ஒரு பொருளும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுதுதான் இயக்கச் சக்தியே கூடுகின்றது. இது இயற்கையின் நியதி. ஆண்டவனின் சக்தி என்று சொல்லப்படுவதே இது தான்.
1.அந்த மோதல் இல்லை என்றால் எதுவும் இயங்காது.
2.எல்லாமே சூனியமாகிவிடும்.

நம் வாழ்க்கையில் “நமக்குப் பிடிக்காதது…!” என்று ஒன்று வருகிறது என்றால் அது நம்முடன் இணையாது நம்மை அதனின் இயக்கத்திற்குச் சாதகமாக்கும் நிலைக்கு “இழுக்கிறது” என்று தான் அர்த்தம்.

அந்த இழு விசை இருக்கும் பொழுது நமக்குள் இருக்கும் எல்லாக் குணத்திலேயும் அந்த “அதிர்வு அலைகள்” இயக்கும்.
1.அந்தக் கெட்டது நம்மை ஒன்றும் செய்யாது.
2.என்னை ஒன்றும் செய்ய முடியாது
3.வருவதை இப்படி நாம் மாற்றி நல்லதாக்கி விடலாம் என்ற எண்ணத்தை நாம் எடுத்து விட்டால் அது உயர் ஞானமாகின்றது
4.அதாவது பிடிக்காததை விட்டு விட்டால் (பற்றாதபடி – SKIP) எதிர் மறை – “நேர்மறையாகிறது..!”

ஆனால் பிடிக்காததை… நான் பார்த்துக் கொண்டு சும்மா எல்லாம் இருக்க முடியாது… நான் எதாவது செய்ய வேண்டும்…! என்று எதிர்த்துப் போய் எதையாவது செய்தாலும் அல்லது பயந்து போய் எதையாவது செய்தாலும் போர் முறை வரும். அதாவது இயக்கம் அதிகமாகும்.

இயக்கம் அதிகமானால் அது ஜீவன் பெற்றுவிடும். மண்ணுக்குள் மறைந்த வித்து கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் அதற்குண்டான சத்து கிடைத்துவிட்டால் மண்ணைப் பிளந்து வெளியே வந்து விடும்.

அது போல் பிடிக்காதது…! தீமை…! கெட்டது…! என்று எண்ணி அதனுடனேயே மோதி…மோதி… நம் இயக்கங்கள் ஆகப்படும் பொழுது நம் உயிரிலே அது அதிகமாகப் படும். நம் ஆன்மாவிலும் அதிகமாக அந்த அலைகள் சுழலும்.

எது நமக்கு முன்னாடி அதிகம் வருகின்றதோ அதைத்தான் சுவாசிக்க முடியும். சுவாசிக்க… சுவாசிக்க… நாம் அதுவாக ஆகிக் கொண்டேயிருப்போம். “தப்ப முடியாது…!”

அது மீண்டும் மீண்டும் எதிர்மறையாகி உயிரிலே படுவதனால் தான் இரவிலே தூங்கும் பொழுதும் தீமையான கனவாகத் தெரிகிறது.
1.ஆனால் அது உண்மை அல்ல.
2.பின்னாடி நடக்கும் சம்பவமும் அல்ல.
3.பின்னாடி நடப்பதை எல்லாம் யாரும் கனவாகக் காண முடியாது.

ஆனால் நீங்கள் கனவைக் கண்டதும் என்ன நினைப்பீர்கள்…? நாம் நினைப்பது போல் தான் கெட்டதாகிவிடுகிறது. கெட்டது நடக்கப் போவதால் தான் இப்படி வந்திருக்கின்றது. ஆகவே நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று அந்தக் கெட்டதுக்கு இணங்கிவிடுகின்றீர்கள். அந்த முடிவுக்கு வந்துவிடுகின்றீர்கள்.

அதாவது கெட்டதை உங்களுக்குள் சிருஷ்டிக்க உயிருக்கு ஆணையிடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம். இது தான் உள் உணர்வு என்பது. நம்முடைய உள் உணர்வுகள் என்றுமே தூய்மையாக வலுவானதாக இருக்க வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தியே செய்யச் சொல்கிறார் ஞானகுரு அவர்கள். இரவு படுக்கும் பொழுதும் காலையில் எழும் பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முடுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று இப்படி ஒரு பத்து நிமிடமாவது ஆத்ம சுத்தி செய்தால் “உள் உணர்வு…!” என்று சொல்வது பரிசுத்தமாகிவிடும்.

ஆனால் அதைத் தூய்மைப்படுத்தாமல் செம்மையாகக் கையாளாமல் விட்டு விட்டால்
1.வெளியிலிருந்து வரும் எல்லாமே
2.நம் உடலையும் நம் மனதையும் நம் ஆன்மாவையும் நம்மையும் இயக்கி
3.அதுவாகவே நம்மை மாற்ற ஆரம்பிக்கும்.

முதலில் சரியாகத் தெரியாது. ஆனால் நாம் ஒன்றும் இல்லை… ஒன்றும் இல்லை.. அப்படி எல்லாம் நடக்காது…! என்றே நினைப்போம். ஆனால் கடைசியில் (நீங்கள் கேள்வி கேட்ட மாதிரி) அந்தக் கெட்டது நடக்க வேண்டும் என்ற விதி இருப்பதனால் தான் எனக்குக் கனவாக வந்தது.

நாம் தான் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று அந்தக் கெட்டதைச் சாதகப்படுத்திக் கொள்வீர்கள். பற்றாக்குறைக்கு மற்றவர்களிடம் சொன்னாலோ கேட்டாலோ அவர்கள் உன் நேரம் காலம் எப்படி என்று பார்… அங்கே போ… இங்கே போ…! என்று இன்னும் கொஞ்சம் ஆகாததைச் சொல்லும் பொழுது எதையும் நாம் தெளிவாக வலுவாக இயக்கும் நிலை இல்லாது போய்விடும்.

கீதையில் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய்.
1.நீங்கள் நல்லது தான் எனக்கு நடக்கும் என்றும்
2.நல்லது தான் எனக்கு வேண்டும் என்றும்
3.எது நடந்தாலும் அதை நல்லதாக்குவேன் என்றும்
4.கெட்டது என்பதே நல்லதை எனக்குள் வலுப்படுத்துவதற்காகத்தான் வருகிறது
5.கெட்டது என்பது எதுவுமே இல்லை…! என்று இப்படி உங்கள் உயிருக்குள் கட்டளை இட்டீர்கள் என்றால்
6.எதிர்மறை எப்படிக் கனவாக வந்ததோ அதுபோல் நேர்மறை உங்கள் கனவாக வரும்
7.அதன்படி நீங்கள் செய்தால் உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நல்லதாகும்.
8.கெட்டது என்ற வார்த்தையே இல்லாமல் ஆக்கிவிடலாம்.

இது தான் என்னுடைய அனுபவம்…!

Leave a Reply