கருவாய்… உருவாய்… வருவாய்… முருகா… “குருவாய்…”

Lord Kumarakuru

கருவாய்… உருவாய்… வருவாய்… முருகா… “குருவாய்…” 

இந்த உபதேசத்தை அடிக்கடி படிப்பவர்களுக்கு இந்த உபதேசத்தின் வாயிலாக உருவான அந்த அணுக்களுக்கு அருள் ஞானிகளின் உணர்வுகள் உணவாகக் கிடைக்கும்.

பல நிலைகளில் பல கோணங்களிலும் அந்த உணர்வின் சத்தை உங்கள் உடலிலே விளைந்த அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுப்பதற்குத்தான் உபதேசத்தை வழங்குகின்றோம்.

அதே சமயத்தில் புதிதாகப் படிப்பவர்களுக்கு அருள் ஞான வித்தாகப் ஊன்றப்படுகின்றது.

வித்தாக ஊன்றிய பின் இதை மீண்டும் நீங்கள் தொடர்ந்து நினைவுக்குக் கொண்டு வந்தால் அது கருவாகி உருவாகி அந்த அருள் ஞானத்தைப் பெறும் தகுதியைப் பெறுகின்றது.

சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் “ஒன்றும் புரியவில்லை…, அர்த்தமாகவில்லை…” என்று.

உங்களுக்கு அர்த்தமாகாது.
1.ஆனால் படிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் கருவாகும்
2.பின் அது உருவாகும்.
3.பின்பு இதனின் உணர்வுகள் உங்களுக்குள் தெளிவாகும்.

அது தான் “கருவாய்… உருவாய்… வருவாய்… முருகா – குருவாய்”.

நாம் எதனை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை
1.கருவாகி
2.உருவாகி
3.குருவாக வரும்.

இந்த ஆறாவது அறிவின் தன்மை (முருகா) கொண்டு நமக்குள் அது “தெளிவாக உருவாக்கும்… என்பது.

எப்படி ஒரு (ஒலி/ஓளி) நாடாவில் பதிவு செய்துவிட்டால் திருப்பி அதை மீண்டும் போட்டுப் பார்க்கும் பொழுது பதிவானதைக் கேட்கின்றோம்.

இதைப் போன்று தான் உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிவிடும். அணுவாக உருவாகிவிடும்.

அந்த அணுக்களுக்குச் சிறிது காலம் உணவைக் கொடுத்தால் அது மீண்டும் வளர்ச்சியாகித் “தன்னிச்சையாக” அதனின் உணவை எடுத்துக் கொண்டு வளர்ச்சி பெறும்.

முந்தைய நிலைகளில் உபதேசம் கேட்டவர்களுக்கு அதனால் விளைந்த அணுக்களுக்கு உயர்ந்த ஞான உணர்வாகக் கொடுக்கப்பட்டது. அதனின் வளர்ச்சி பெருக இது உதவும்.

அதே சமயத்தில் புதிதாகப் படிப்போர் உணர்வுகளில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ள நிலைகளில் அது கருவானதை உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.
1.உங்கள் நினைவினைக் கூட்டினால் அது உருவாகி
2.வளர்ச்சியின் தன்மை அடையும் பொழுது குருவாக வந்து
3.உங்களுக்கு நல் வழியும் காட்டும்.

அதை உணவாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும். அப்பொழுது அந்த அருள் ஞானம் உங்களுக்குள் தன்னிச்சையாக வரும்.

யாம் சொல்வது புரியவில்லை என்று எண்ண வேண்டம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் எவ்வாறு ஆழப்பதிவு செய்து அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கச் செய்து இந்தக் காற்று மண்டலத்திலுள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நுகரச் செய்தாரோ அதை அப்படியே உங்களுக்குள்ளும் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

உங்களை அறியாது வந்த தீமைகளிலிருந்து விடுபடும் நிலைக்கே இது உருவாக்கப்படுகின்றது. அந்த அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் எடுத்து வலுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

விண்ணும் மண்ணும் போற்றக்கூடிய மெய்ஞானிகளாக வருவீர்கள். எமது அருளாசிகள்.

Leave a Reply