இன்றைய வாழ்க்கையில் பல (தீமைகள்) அலைகள் வந்தாலும் “நமது எல்லை மகரிஷிகளின் அருள்வட்டம் தான்” என்று உறுதிப்படுத்துவோம்

 

self-confidence

இன்றைய வாழ்க்கையில் பல (தீமைகள்) அலைகள் வந்தாலும் “நமது எல்லை மகரிஷிகளின் அருள்வட்டம் தான்” என்று உறுதிப்படுத்துவோம்

 

இப்பொழுது நாம் மலைக்குப் போகப் போகிறோம் என்றால் என்ன செய்கிறோம்? இந்தப் பக்கம் போனால் முட்கள் இருக்கின்றது இந்தப் பக்கம் போனால் மிருகங்கள் இருக்கின்றது என்று அறிந்து கொள்கிறோம்.

 

மிருகங்கள் இருக்கும் பக்கம் எவ்வாறு செல்ல வேண்டும்? இந்தப் பக்கம் நீர் அதிகமாகப் போகும்போது அதைக் கடந்து எப்படிச் செல்ல வேண்டும்? என்றும் வழிகாட்டுவது போல நமக்குள் எத்தனையோ உணர்வுகள் உண்டு.

 

அதனைப் போல இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான தீமைகளை நாம் சந்திக்கின்றோம். சந்திக்கப்படும்போது அந்தத் தீமையின் உணர்வுகளில் நாம் சிக்காது அதிலிருந்து நாம் கடந்து செல்லுதல் வேண்டும்.

 

அதே போல நாம் கடலிலே செல்கின்றோம். பல அலைகள் வருகின்றது.

1.படகோட்டி தான் எந்த எல்லையைக் குறிக்கோளாக வைத்து

2.அந்தப் படகினைத் திசைத் திருப்பித் தன் எல்லையை அடைகின்றான்.

 

இதைப்போல இந்த வாழ்க்கையில் பல அலைகள் நம்மை மோதுகின்றது.

 

கோப அலைகள் மோதுகின்றது. பாச அலைகள் மோதுகின்றது. வேதனை அலைகள் மோதுகின்றது. இதைப் போல எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது.

 

நம்மை வேதனைப்படும்படி ஒரு மனிதன் செய்தால் அந்த எண்ணத்தில் நாம் சிக்கிவிட்டால் அந்த அலைகளில் சிக்கி வேதனைப்படும் உணர்வுக்கே நம்மை அழைத்து சென்றுவிடும்.

 

ஒருவர் கோபப்படும் அலைகள் மோதிவிட்டால் அதிலே இந்தப் படகு மூழ்கி அதன் வழிகளிலே அழைத்துச் செல்லும். நாம் எல்லையை அடைய முடியாது.

 

ஆகவே தான் இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான அலைகள் நம்மை மோதினாலும் அந்த ஒவ்வொரு நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தியான வலுகொண்ட நிலைகள் கொண்டு திசை திருப்ப வேண்டும்.

 

நாம் அந்த அலைகளுக்குள் மூழ்கிடாது நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான் என்ற நிலைகளில் நாம் செல்ல வேண்டும்.

 

மகரிஷிகளின் அருள் வட்டத்தின் பாதுகாப்புடன் நாம் இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து நாம் என்றும் பிறவியில்லாப் பெரு நிலையை அடைய முடியும்.

 

ஒவ்வொரு நிலையிலும் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து “விழித்திரு…” என்று சொல்வது போல நாம் இந்த வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.

 

1.ஏனென்றால் எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது.

2.நாம் விழித்திருந்து அந்த அலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும்.

3.தீமையிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

4.நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான்.

 

நாம் அடிக்கடி இவ்வாறு எண்ணினோம் என்றால் வரும் அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து அருள் ஞானிகளின் வட்டத்தில் இங்கே வளர்த்து என்றும் பிறவியில்லா நிலை என்ற பெருநிலை அடையலாம்.

 

நமது எல்லை அது தான். இல்லையென்றால் இங்கே கீழே (கீழான உடல்களுக்குள்) அழைத்துச் சென்றுவிடுகின்றது.

 

இதிலிருந்து நாம் தப்புவோம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம் என்று தியானிப்போம். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தவமிருப்போம்.

Leave a Reply