தற்கொலை செய்து கொண்டவருக்குத் தியானிக்க வேண்டிய முறை

suicide.jpg

தற்கொலை செய்து கொண்டவருக்குத் தியானிக்க வேண்டிய முறை 

நான்கு நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நண்பர் என்று பழகிப் பாசத்துடன் ஒன்றிவிடுகின்றோம். அதே சமயத்தில் ஒரு நண்பருக்கு அவர் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடுகின்றது. அவர் மீது குடும்பத்தில் மிகுந்த வெறுப்பின் தன்மை அடைகின்றார்கள்.

அதைத் தாங்காது குடும்பத்தின் மேல் வெறுப்பு வந்தபின் “என்ன வாழ்க்கை…!” என்று அந்த நண்பர் மருந்தைக் குடித்துவிடுகிறார். தற்கொலை செய்து கொள்கிறார்.

அப்பொழுது அந்தக் குடும்பத்தின் மேல் வெறுப்பும் அதே சமயத்தில் சாப உணர்வுகளும் அங்கே வரும்.

என் குடும்பத்தில் இப்படிச் செய்தார்களே.., “அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…!” என்ற சாப அலைகளை அங்கே பதிவு செய்கின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்திலுள்ளோர் மீது பதிவாகி விடுகின்றது. இறந்த பின் அந்த உடலில் எந்த நிலைகள் பதிந்ததோ அந்த வீட்டிலும் பதிவாகின்றது.

அவரைச் சார்ந்தவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது. அதன் உடலில் எவ்வளவு கெடுதல் செய்ததோ அதுவெல்லாம் இங்கே வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில் நண்பர் என்ற நிலைகளில் பாசமாகப் பழகி இருந்தார் அல்லவா. மருந்தைக் குடிக்கும் பொழுது

1.“நண்பனே…, நாம் இருவரும் எவ்வளவு பழகியிருந்தோம்…! இந்த மாதிரி ஆகிவிட்டதே…
2.நான் உன்னை எப்படி வந்து பார்ப்பது?” என்றே தெரியவில்லை
3.உனக்குத் தெரியாமல் நான் இப்படிச் செய்துவிட்டேன் என்ற எண்ணத்தை அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த ஆன்மா எங்கே போகும்?
4.எந்த நண்பன் மேல் பாசமாக இவ்வாறு எண்ணினாரோ அந்த நண்பனின் உடலுக்குள் வரும்.

எப்படி? ஏன்?

தற்கொலை செய்த நண்பரைப் பற்றி இவர் கேள்விப்படுவார்.  கேள்விப்பட்டவுடன் நண்பனைப் பற்றிப் பாசத்தால் எண்ணுவார்.

“அடடா.., நேற்று வரையிலும் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தானே… அதற்குள் இப்படிப் போய்விட்டானா…!” என்று இந்த எண்ணத்தை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இறந்த ஆன்மா இங்கே வந்துவிடும்.

பாசத்தால் எண்ணும்பொழுது இரண்டு பேரின் எண்ணங்களும் ஒன்றும்போது ஆன்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

தற்கொலை செய்து கொண்ட ஆன்மா அந்தக் குடும்பத்தில் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்ததோ இவை அனைத்தும் நண்பர் உடலுக்குள் ஆகி…, “இல்லாத கஷ்டங்களை எல்லாம்” அவருக்கு உண்டாக்கும்.

இவரும் தவறு செய்யவில்லை. அவர்களும் தவறு செய்யவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்தில் இந்தச் சாப அலைகள் அதன் தொடர்பு கொண்டு இது வளர்ந்து கொண்டே இருக்கும்.

இது ஒவ்வொரு குடும்பத்திலும் இது இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வகையிலும் இதனுடைய தொடர்பு இல்லாது இருக்காது.

இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

யாராக இருந்தாலும் சரி…, “உடலை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்…,” என்று கேள்விப்பட்டாலே உடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து எங்களுடன் நண்பராகப் பழகிய உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

1.உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.உயிருடன் ஒன்றிய “ஒளியின் சரீரம் பெறவேண்டும்” என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இதைப் போன்று குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானித்து அந்த உயிரான்மாவை எளிதில் விண் செலுத்தலாம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து அழியா ஒளியின் சரீரம் பெறுவதே “மனிதனின் கடைசி எல்லை”.

இதைச் செய்யாது
1.உடலை விட்டுப் பிரிந்தவர்கள் மீது பற்று கொண்டு எண்ணினால்
2.அந்த உணர்வுகள் அந்தந்த உடல்களில் இணைந்து
3.தீய வினைகளாகவும் சாப வினைகளாகவும் இயக்கத்தான் செய்யும்.

ஆகவே, இதைப் போன்ற தீமையின் விளைவுகளிலிருந்து விடுபடுங்கள்.

Leave a Reply