மகரிஷிகளின் அருள் சக்தியை வளர்த்து “உலகெங்கிலும் நாம் அதைப் பரவச் செய்வோம்”

மகரிஷிகளின் அருள் சக்தியை வளர்த்து “உலகெங்கிலும் நாம் அதைப் பரவச் செய்வோம்”

 

இன்று உலகெங்கிலும் நடக்கும் எத்தனையோ அசம்பாவிதங்களை நாம் பார்த்தும் கேட்டும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உலகெங்கிலும் பரவ வேண்டும் என்று
2.நாம் நம் சிந்தனைகளைச் செலுத்த வேண்டும்.

ஞானிகள் உணர்வுகளை நமக்குள் பெருக்குதல் வேண்டும். ஞானிகள் உணர்வை வளர்த்து அதைப் பரப்பி இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும் தீமைகளை… அந்த நஞ்சான உணர்வுகளைப் பிளக்க வேண்டும்.

1.நம் ஆன்மாவை மட்டும் தூய்மைப்படுத்துவது என்பது அல்ல…!
2.பரமான இந்தப் பூமியில் இருக்கும்… பரமாத்மாவில் படர்ந்துள்ள தீமைகளைப் பிளக்க வேண்டும்.

அதைப் பிளக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் வளர்க்க வேண்டும்.
1.அந்த உணர்வின் சொல்லாக… செயலாக…
2.எல்லாவற்றையும் (வாழ்க்கையை) அதனின் செயலாக்கமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

நான் (ஞானகுரு) சாதாரணமாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். குருநாதர் எனக்குள் உயர்ந்த உணர்வுகளைப் பதிவு செய்தார். எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

அதை நீங்களும் பெற வேண்டும்… நீங்கள் பெறுவீர்கள்…! என்ற நம்பிக்கையுடன் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் “அந்த ஞானமே” உங்களைக் காத்திடும் சக்தியாக தக்க உபாயங்களைக் காட்டும்.

தீமை செய்தவனைப் பதிவு செய்து மீண்டும் அவனை நினைவுக்குக் கொண்டு வந்தால்… தீமை செய்யும் உணர்வுக்கே நம்மை அது அழைத்துச் செல்கின்றது.

தவறு செய்கிறான்… தன்னை எதிர்த்துப் பேசி விட்டான்…! என்றால் உடனே பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அவனைப் பழி தீர்க்கச் செல்கின்றோம்.

ஆனால் பழி தீர்க்கும் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் அது நம் நல்ல குணங்களையும்… நம் உடல் உறுப்புகளையும்… நம்மையும்… அழித்து விடுகின்றது.

இதைப் போன்று தான்… இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் நிலையாக “தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்” அதை வளர்த்து நம்மைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆலயங்களிலே அதைத்தான் நமக்கு ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். பிறருடைய தீமைகளை அகற்றிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

1.உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின்ன் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அந்த மகரிஷிகள் அடைந்த… அவர்கள் பெற்ற ஆற்றலை நாம் பெறுகின்றோம்

இந்த முறைப்படி எல்லோரும் நீங்கள் சொல்லிப் பாருங்கள்
1.காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை அகன்று விடும்
2.காற்று மண்டலம் பரிசுத்தமாகிவிடும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply