மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்

 

இந்தக் கலி முடிந்து அடுத்து வர இருக்கும் “கல்கி” மாற்றத்தின் சுழற்சியில் மீண்டும் மனிதர்கள் ஜீவனுக்கு வந்தாலும்
1.இந்த உலக மாற்றத்தின் பொழுது நம் உடலிலுள்ள ஆத்மா பிரியும் நிலை கொண்டு
2.அடுத்த பிறப்பிற்கு வரும் தொடரும் அதன் சுழற்சியிலே தான் செயல் கொள்ள முடிந்திடும்.

பிறப்பிற்கு வரும் நிலையில் முதல் கால கட்டத்தில் (கல்கி) வரும் தருவாயிலேயே “அறிவாற்றல் கொண்ட” எண்ணத்தின் நிலைக்கொப்பத் தாயின் கருவிற்கு வர முடியாது.

எல்லாமே மாறிய பிறகு புதிய உயிரணுக்கள் தோன்றும் தருவாயில் அந்த உயிரணுக்கள் ஜீவனின் வளர்ச்சி நிலை பல காலங்கள் தாவர இன வர்க்க வளர்ச்சியிலும் மற்ற கனி வளங்களின் வளர்ச்சி நிலையிலும் செயல் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அவை வளர்ந்து.. மடிந்து… அதிலிருந்து தோன்றும் உயிர்ப் பிராணி நிலை பெற்று மீண்டும் அதன் இன வர்க்க நிலை மாறி பல வளர்ச்சி நிலைகள் தானாக உயிர் பெறும் உயிரணுவிலிருந்து மாறிப் பல அமில குணத்தை ஈர்த்த உயிரணுக்களாக வேண்டும்.

அப்படி ஆன பிறகு உயிராத்மாவாகி அந்த உயிராத்மாக்களின் சேர்க்கைக் குணமுடன் மற்ற உயிரணுவின் பிறப்பு நிலை தோன்றிய பிறகுதான் ஜீவன் பெறும் நிலை கொள்கின்றது.

உயிரணுவிற்கும் உயிராத்மாவிற்கும் வேறுபாடு புரிகின்றதா…?

இந்தப் பூமியிலிருந்து வெளிப்படும் வெப்ப அலையின் அமில குணத்தின் ஈர்ப்பில் படர்ந்து இயற்கை வளங்களாக வளர்பவை எல்லாம் உயிரணுக்கள் கொண்ட நிலை.

உயிராத்மா என்பது… பிறப்பிற்கு வரும் இரண்டு ஜீவ உடல்களின் எண்ணக் கலவையின் சேர்க்கையில்… தன் நிலையை ஜீவிதம் கொள்ளும் ஆசையுடன் கர்ப்ப நிலைக்கு ஜீவன் கொள்வதெல்லாம் ஜீவ ஆத்மா பெறும் நிலை.

இப்படி இம் மாறும் கலியினால் நம் உயிரணு உருவிற்கு வரப் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் (இது முக்கியம்). இந்த உலகச் சுழற்சியில்
1.நம் எண்ணத்தை இவ்வுலகப் பிடியில் அடகு வைத்து விட்டால்
2.அதை மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் செல்லும்.

இவ்வெண்ண நிலையிலேயே பிரியும் ஆத்மாக்கள் தான் சேமித்த குண நிலையுடனே சுழன்று சுழன்று… மீண்டும் அறிவு நிலை கொண்ட ஞானம் பெறக்கூடிய உடல் பெறுவதற்குப் பல காலங்கள் சுழல வேண்டியதிலிருந்து மீட்டிட வேண்டும் என்பதற்குத் தான் இந்த உண்மைகளைப் புகட்டுகின்றேன்.

பரம்பொருளின் ஞானமான அச்சக்தி நிலை கொண்ட ஜோதி ஆத்மாக்களான அந்த மாமகரிஷிகளிடம் நம் எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

அந்தச் சப்தரிஷிகளின் எண்ண வட்டத்திற்குள் நாம் எடுக்கும் சுவாச அலைகள் பாயும் பொழுது அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும்.

மேன்மேலும் அந்தச் சக்தியை நாம் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தின் பொழுது அவர்களின் நிலையுடன் நாம் ஐக்கியப்பட்டு அவர்களைப் போன்று நாமும் சப்தரிஷியாகலாம்.
1.இந்தப் பூமி மட்டுமல்ல… எந்தப் பூமியையும் நமதாக ஏற்று
2.அந்த ஒளி வட்டத்திற்குள் நம் ஒளி பிரகாசிக்கத்தான்
3.யாமறிந்த (ஈஸ்வரபட்டர்) உண்மைகளைப் பலரும் அறிந்து கொள்ளவும்
4.அப்பரம்பொருளின் ஞான சக்தியை வழிப்பெறும் வழி ஆற்றலைப் புகட்டுகின்றோம்.

இவ்வுயிரணு தோன்றி மாறி மாறி எடுக்கும் அமில குணத்தின் வளர்ச்சியினால் ஏற்படுவது தான் சிறு எறும்பு முதல் கொண்டு சூரியன் சந்திரன் அதற்கும் அப்பாற்பட்ட எல்லாமே…!

எந்த உயிரணுவும் மடிவதில்லை. எப்பரம்பொருளிடமும் ஒன்றி நிற்பதுவும் இல்லை.

உயிரணுவாக உலகாய் உருவம் கொண்டே வளர்ந்து கொண்டே கலந்துள்ளது தான் அப்பரம்பொருளான ஆதிசக்தியின் ஒளி சக்தி.
1.ஒன்றுடன் ஒன்று மாறி மாறி உருப்பெற்றே சுழன்றே ஓடும் சிக்கலில்
2.உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகளின் ஞானம் பெறுவது தான் உயர் ஞானம்.

அந்த ஞான நிலை பெறும் வழித் தொடர் தான் இந்த மனித உடல் கொண்ட ஆத்ம ஞானம். மனித உடல் கொண்ட ஞானத்திலிருந்து தான் உயர் ஞானம் பெற முடியும்.

இந்த மனித உடல் கொண்ட அறிவு நிலை பெற பல உருமாற்றம் கொண்ட உருவ நிலையெல்லாம் பெற்றுப் பெற்றுத் தான் இந்த மனித உடலையே பெற்றிருக்கின்றோம்.

செயற்கையின் பிடியில்… கலியான இக்காலத்தில்… சோம்பேறி நிலை கொண்ட வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு மீளத் தெரியாமல் சிக்குண்டு வாழும் நாம்… இந்த மனித ஞானத்தைப் போற்றி நல் வழி பெறும் ஞானத்தைப் பெற்றிடுவோம்.

கண்ணாடியில் உள்ள தூசியைப் போக்கிட அழுக்குத் துணியால் தட்டினால் மீண்டும் இதன் அழுக்குத்தான் அதிகமாகப் படரும். சுத்தமான துணியை கொண்டு துடைத்தால் தான் அந்தக் கண்ணாடியில் உள்ள அழுக்கு நீங்கும்… ஏனென்றால்
1.அழுக்கை அழுக்கு கொண்டு அகற்ற முடியாது.
2.நம் அக அழுக்கை…. பக்தி என்ற பகவான் ஞானத்தைக் கொண்டு போக்கித்தான்… நம் அழகை நாம் காண வேண்டும்.

Leave a Reply