குரு இட்ட கட்டளைப்படி தான் சேவை செய்து கொண்டிருக்கின்றேன் – ஞானகுரு

குரு இட்ட கட்டளைப்படி தான் சேவை செய்து கொண்டிருக்கின்றேன் – ஞானகுரு

 

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான் நான் (ஞானகுரு) தியானம் இருக்கின்றேன்.
1.உங்கள் ஒவ்வொருவரது உயிரிலும் அந்த அருள் சக்தி படர வேண்டும் என்றும்
2.உயிர் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் அருள் ஞானம் பெருக வேண்டும் என்றும்
3.அரும் பெரும் சக்தியை ஊட்டிக் கொண்டுள்ளேன்.

காரணம் உங்கள் உடலில் இதற்கு முன் அறியாது சேர்ந்த தூசிகளைத் (தீமைகளை) துடைக்க வேண்டும் என்று “இதை ஒரு சேவையாக நான் செய்கின்றேன்… குருநாதர் இட்ட கட்டளைப்படி…!”

உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உடலைக் கோவிலாக மதிக்கின்றேன். நீங்களும் இதே போல உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… அந்த அருள் சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.

அதே சமயத்தில் நீங்களும் எல்லோரது உயிரையும் கடவுளாக மதித்து அவர்கள் உடலை ஆலயமாக மதித்து… அவர்களுக்கெல்லாம் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நமது குரு காட்டிய வழியில் செயல்படுத்தினால்… நம் உயிரை நாம் கடவுளாக மதித்தவர்களாகின்றோம்… நம் உடலை ஆலயமாக மதித்தவர்களாகின்றோம்.

இதைப் போன்று அனுதினமும் நீங்கள் எண்ணி வந்தால்
1,உங்கள் குடும்பங்களில் நல்ல நறுமணங்கள் படரும்… புதுப்புது மணங்கள் வரும்… உங்கள் சுவாசத்தில் அதை உணர முடியும்.
2.உங்கள் சுவாசத்தில் உயர்ந்த மணங்கள் வந்தால் சர்வ தீமைகளிலிருந்து விடுபட முடியும்…
3.நோய்களிலிருந்து விடுபட முடியும்… தோஷங்களில் இருந்து விடுபட முடியும்…!
4.துன்பமாக துயரமோ மற்ற நிலைகள் வராதபடி சிந்தித்துச் செயல்படக்கூடிய அருள் சக்திகளும் பெருகும்.

உங்களால் ஞானத்துடன் செயல்பட முடியும். உங்கள் உடலில் நல்ல அணுக்கள் உருவாகும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவீர்கள். மன பலம் பெறுவீர்கள் உடல் நலம் பெறுவீர்கள்.

ஆகவே குடும்பத்தில் கஷ்டம் என்று சொல்லாதீர்கள்… குறைகளை எண்ணாதீர்கள். ஏனென்றால் உடல் நலிந்தால் சிந்தனை குறையும். சிந்தனை குறைந்தால் செயல்கள் குறையும்… செயல் குறைந்தால் தொழில் மந்தமாகும்… பொருள்கள் வீணாகும். குடும்பத்திற்குள் பகைமையாகும்.

இதை போன்ற நிலையிலிருந்து எல்லாம் நீங்கள் விடுபட்டு அருள் வழி வாழுங்கள். தீமைகள் புகாது தடுத்துப் பழகுங்கள்.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உயிர் செயல்படுத்துகின்றது அந்த உணர்வை வைத்துத் தான் நீங்கள் செயல்பட முடியும்.

1.ஆகவே உங்கள் உயிரை மதித்துப் பழகுங்கள்
2.உங்கள் உடலுக்குள் அருள் உணர்வுகளைப் பெருக்குங்கள்.
3.உடலுக்குப் பின் இனி பிறவியில்லை என்ற நிலையை அடையுங்கள்.

இதுதான் மனிதனின் கடைசி நிலை…!

Leave a Reply