அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் பரவுவது போல் மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பரவச் செய்யுங்கள்

அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் பரவுவது போல் மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பரவச் செய்யுங்கள்

 

இன்று பெரும்பகுதியானவர்கள் என்ன நினைக்கின்றார்கள்…? சாமி (ஞானகுரு) வந்தார்… ஆசீர்வாதம் கேட்டேன்…! என்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னார்…! அவர் தான் காப்பாற்ற வேண்டும்… என்று சாமியைத் தான் எண்ணுகின்றார்கள்.

உங்கள் கஷ்டம் எல்லாம் நீங்கிவிடும் என்று யாம் வாக்கைக் கொடுத்தால் அதை யாரும் பிடித்துக் கொள்வதில்லை…!
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெறுவீர்கள்
2.உங்கள் உடலில் உள்ள நோய்களை அது பிளந்துவிடும்
3.நல்லது நடக்கும்… அதை நீங்கள் பெறுங்கள்…! என்று தான் இங்கே உபதேசிக்கின்றோம்.

ஆனால் அதை யாரும் எண்ணுவதில்லை.

விபூதி வேண்டும்… பிரசாதம் வேண்டும்… சாமி காப்பாற்றி விடுவார் என்ற இந்த எண்ணம்தான் வருகின்றது.
1.சாமி சொன்ன வழியினைப் பின்பற்றினால் அந்த எண்ணம் நம்மைக் காப்பாற்றும் என்பது நினைவுக்கு வருவதில்லை
2.சாமி சொன்னதைப் பதிவு செய்து இந்த காற்றிலிருக்கும் நல்லதை எடுத்தால் நான் நல்லவனாவேன்… என்ற எண்ணமும் வருவதில்லை.

காரணம்… எதைக் குறிக்கோளாக வைத்து எடுக்கிறோமோ அது தான் நடக்கும்.

சாமி ஆசிர்வாதம் கொடுத்தார் என்று சிறிது நாளைக்குப் பார்ப்பார்கள்… பின் அடுத்து ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் “என்ன இந்தச் சாமி…?” என்று எண்ணிச் சென்று விடுகின்றார்கள்.

பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டாலே அது நம் நல்ல உணர்வை மறைத்து விடுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் இப்படித் தன்னை மறைக்கும் நிலை வந்தால் அது சித்திரை.

அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி இதைப் பிளத்தல் வேண்டும். ஞானகுரு காட்டிய வழியில் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைப் பெறுவேன் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து ஒருக்கிணைந்து அதை வெடிக்கச் செய்கின்றனர். கல்லுக்குள்ளும் உலோகத்திற்குள்ளும் அணுக் கதிரியக்கம் இருக்கின்றது.

அணு ஆயுதங்களை வெடித்து அதைப் பிளக்கப்படும் பொழுது தன் இனத்தை அது சேர்த்துச் சேர்த்து ஒரு நொடிக்குள் இரும்பாக இருந்தாலும் இரும்பே உருகிக் காணாமல் போய்விடுகின்றது… கல்லாக இருந்தாலும் உருகிக் காணாமல் போய் விடுகின்றது… அதே கதிரியக்கம் தான்.

இதைப் போன்றுதான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை சிறுகச்சிறுக நமக்குள் சேர்த்து அதை நமக்குள் சேமிக்க வேண்டும் (அதுவும் கதிரியக்கச் சக்தி தான்)
2.அதை வளர்த்த பின்… நம் எண்ணத்தால் உணர்வால் எடுத்து வளர்த்த இந்த மனித உடலை… “உடல் பெறும் உணர்வை…” இது காணாது செய்துவிடும்
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நம் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும்.

ஆகவே… அந்த மகரிஷிகள் எதைப் பெற்றார்களோ அந்த வழியினைப் பெறும் நிலைகளுக்கே காரணப் பெயர் வைத்து கருத்தினைக் காட்டி “அதுவே தன்னை வாழ வைக்கும்…” என்று காவியங்கள் மூலம் நமக்குக் காட்டினார்கள்.

அதன் முறைப்படி நம் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்கி உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நம் நினைவாற்றல் சென்று… “அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல…” என்ற நிலையை அடைய வேண்டும்.

அணுகுண்டுகளை வெடித்த பின் மற்றதைப் பொசுக்கி விட்டு அந்த அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் எப்படிப் பரவுகின்றதோ அதைப் போன்று
1.மெய் ஞானிகளின் அருள் உங்களுக்குள் பரவி இருள் சூழும் அந்த நஞ்சினைப் பிளந்துவிட்டு
2.உலகைக் காத்திடும் சக்தியாக உங்கள் நினைவாற்றல்கள் பெருகி
3.உலக இருளைப் போக்கி… மெய்ப் பொருளுடன் ஒன்றி… மெய் ஞானிகளுடன் ஒன்றி… என்றும் பேரானந்தப் பெரு வாழ்வு நீங்கள் பெற்றிட
4.சர்வ மகரிஷிகளின் அருள் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

Leave a Reply