இன்றைய மனித வாழ்க்கையில் நம்முடைய சபதம் எதுவாக இருக்க வேண்டும்…?

இன்றைய மனித வாழ்க்கையில் நம்முடைய சபதம் எதுவாக இருக்க வேண்டும்…?

 

உயிரை ஈசனாக வணங்குங்கள். உடலைச் சிவனாக மதியுங்கள். கண்ணைக் கண்ணனாக மதியுங்கள்.

காரணம்… நல்லது கெட்டதைக் கண்ணன் உணர்த்துகின்றான். அவன் காட்டிய நெறியின் படி கெட்டது என்று வரும் பொழுது புறப்பொருளை நீக்கும் வழிகள் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே
1.நம்மை அறியாது புகும் தீமைகளைப் புறப் பொருளை அகற்றுவது போன்று
2.அந்த மகரிஷியின் அருள் ஒளியால் துடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… துடைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உடலான சிவத்திற்குள் தீய குணங்கள் பட்டபின் நோயாக மாறுகின்றது. அதைத் துடைப்பதற்கு… சிவனுக்கு அந்தத் தீமைகள் வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.யாரோ உடல்…! என்று எண்ண வேண்டாம்
2.உங்களுடைய உடல் என்றும் எண்ண வேண்டாம்
3.நம் உயிரான நிலைகள் தான் இத்தனையும் படைத்திருக்கின்றான்
4.நமக்குள் செயலாற்றும் நிலைகள் கொண்டு அதை இயக்கும் சக்தியாக அதுவே இருக்கின்றது.

அதை உணர்ந்து இந்தப் பொறுப்பினை நீங்கள் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் புனிதத் தன்மையை அடையலாம்.

1.தான் யார்… நான் யார்…? இந்தப் பிள்ளை யார்…? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டிய நிலைகளை
2.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு எல்லாம் நாயகனாக மனித உடலைக் கொடுத்து
3.உடலில் இருக்கக்கூடிய கணங்களுக்கெல்லாம் ஈசனாக உயிரே இயக்குகின்றது என்ற நிலைகளை உணர்ந்து கொள்ளுங்கள்.

மூஷிகவாகனா…! எந்தெந்த குணங்களை நாம் சுவாசித்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு அதே வாகனமாக அன்றைய செயலும் இன்றைய சரீரமாக வைத்திருக்கின்றது உயிரான ஈசன்.

கணங்களுக்கு அதிபதி கணபதி ஆகவும் அவனே இருக்கின்றான். நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கச் செய்து அதன் வழியே மற்றதை ஒடுக்கும் நிலைகளைக் கொண்டு வருகின்றது.

1.உயிரான ஈசனிடம் ஒன்றி ஒளியாகப் பெறுவோம்…
2.என்றும் நிலையாக இருக்கக்கூடிய அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று
3.அதைப் பெறும் நிலையாகச் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் எந்தத் துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் அதை எல்லாம் நீக்க மகரிஷிகளின் அருள் ஒளி சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நான் வெறும் வாக்காக சொல்லவில்லை… வெறும் சொல்லாகச் சொல்லவில்லை… அருமருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் எண்ணி எடுத்து உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். குருநாதர் எனக்கு இப்படித்தான் அருளினார். உங்களுக்கும் அதே உணர்வின் தன்மையைத் தான் பதிவு செய்கின்றேன்.

பதிவை மீண்டும் எண்ணி
1.வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன்
3.மெய் ஒளியைக் காண்பேன்… மெய் வழி செல்வேன்
4.அந்த மகரிஷியின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான அழியாத பெரு வீடு பெறுவேன்
5.பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவேன் என்று
6.உங்கள் எண்ணத்தில் அதை எல்லாம் எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்.

அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply