நச்சுத் தன்மை உலகில் பரவினாலும் அதை அடக்கிடும் சக்தியை நம்மால் பெருக்க முடியும்

நச்சுத் தன்மை உலகில் பரவினாலும் அதை அடக்கிடும் சக்தியை நம்மால் பெருக்க முடியும்

 

இந்தக் காற்று மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவிக் கொண்டே உள்ளது. அந்த அகஸ்தியன் பெற்ற இயற்கையின் உண்மைகளையும் அவன் நஞ்சினை நீக்கிய உணர்வுகளையும் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஒரு இயந்திரத்தையோ உபகரணத்தையோ விஞ்ஞான அறிவால் காட்டப்படும் பொழுது… “இன்னது… இன்னது…” (FEATURES) என்று சொல்லி அதிலே முழுமையின் நிலைகள் காட்டி அதனைப் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருவார்கள்.

அதைப் போன்று தான்
1.மெய் ஞானத்தின் நிலைகள் கொண்டு முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும்
2.அகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகளையும் அவன் ஒளியின் உணர்வாகப் பெற்றதையும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

1.வாழ்க்கையில் தீமைகளும் கஷ்டங்களும் துயரங்களும் நுகரப்படும் பொழுது
2.அது உள் புகுந்து தீமையை உருவாக்கும் அணுக்களாக உருவாகிடாது
3.அருளொளி என்ற உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து அதை அடக்கி
4.தனக்குள் இணைந்த நிலைகள் கொண்டு செயல்படும் நல்ல சக்திகளாக அதை மாற்றி அமைத்தல் வேண்டும்.

உங்களை நீங்கள் திரும்பிப் பாருங்கள்…! கோபிப்பது நீங்களா…? வேதனைப்படுவது நீங்களா…?

இல்லை…!

நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது. ஆக ஆறாவது அறிவு கொண்ட நாம் அந்தத் தீமைகளை நீக்கும் வலிமையை எப்படிப் பெற வேண்டும் என்று சீராக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக எண்ணைய் சம்பந்தப்பட்ட வகையில் (பிசுபிசுப்பு) கையிலோ மற்ற இடத்திலே அழுக்காகப் படிந்திருந்தால் வெறுமனே தண்ணீரை வைத்துக் கொண்டு அதைக் கழுவ முடியாது.

ஆனால் மண்ணெண்ணை வைத்து அழுத்தமான நிலைகள் கொண்டு தேய்த்தால் எளிதில் அதை நீக்கி விடலாம். அது தன்னுடன் இணைத்து இணைத்து அந்த அழுக்குகளைப் பிரித்துவிடும்.

இதைப் போலத் தான் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் கலந்து மெய் உணர்வின் தன்மையை நீங்கள் பெற்றால் அது இரண்டறக் கலந்த தீமைகளைப் பிரித்து அகற்றிவிடும். ஆன்மா சுத்தமாகிவிடும்.

1.ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளவும்
2.பிறவியில்லா நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்ற இந்த ஆசையில்தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் உங்களை நீங்கள் காத்து உங்கள் அருகில் உள்ளவருக்கும் இந்த அருள் வழியினைச் சொல்லி அந்த ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குங்கள்.

நீங்கள் எடுக்கும் தியானத்தால் அந்தப் பொது விதிப்படி வெளி பரப்பப்பட்ட அருள் உணர்வுகளை அனைவரும் நுகர… எதிர்காலத்தில் தீமையை வென்றிடும் சக்தியாக எல்லோரையும் வளரச் செய்வது… “நமது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்…” என்று வேண்டிக் கொள்கின்றேன்.

உயிரே கடவுள்… நுகர்ந்ததை உருவாக்கும் போது உடலாக அதுவே சிவமாகின்றது. ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் அது என்ற நிலையில் நாம் ஒவ்வொரு மனிதனையும் எண்ணி மதித்திடல் வேண்டும்.

பகைமை உணர்வு புகாதபடி தடுக்கச் செய்யும் இத்தகைய உயர்ந்த ஞானத்தை நாம் வெளிப்படுத்தும் போது இந்த உணர்வின் தன்மை பதிவாகி அந்த உடலான ஆலயம் பரிசுத்தமாக நம் உணர்வுகள் செயல்படும்.

அதே சமயத்தில் நமக்குள் தீமை புகாது தடுக்கவும் இது உதவும். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். இருந்த இடத்திலிருந்தே நீங்கள் அருள் உணர்வைப் பெருக்க முடியும்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணங்கள் வளர்ச்சியாகி…
1.டி.வி.யில் ஒளிபரப்பு செய்வது போன்று எல்லா இடத்திலும் இது பரவி
2.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்தியாக இது வளரும்.

ஆங்காங்கு உள்ளோர் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை அமைத்து கூட்டமைப்பாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிப் பெறுங்கள்.

1.இந்த உலகில் பரவி வரும் நச்சுத் தன்மைகள் நீங்க வேண்டும்
2.மக்கள் மத்தியில் அருள் ஒளி பரவ வேண்டும் …இருளை அகற்றும் அருள் ஒளி பரவ வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று நாம் பரப்ப வேண்டும்.

ஏகோபித்த நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை இப்படிப் பரப்பப்படும் பொழுது நாம் வாழும் பகுதிகளில் நஞ்சை வென்றிடும் அருள் சக்திகள் படரும். சிறுகச் சிறுக மற்றவரையும் காத்திடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம். காலம் நெருங்க நெருங்க…
1.உங்களைக் காத்திடும் சக்தியாக நீங்கள் வளர்த்து அதன் மூல்ம் உங்கள் சார்புடையோரைக் காத்திடவும்
2.அவர்கள்… அவர்களுடைய சார்புடையோரைக் காத்திடவும்
3.இந்த பூமியில் அசுர குணங்களை மாற்றி அருள் ஒளி என்ற உணர்வை பரப்பச் செய்திடவும்
4.அருள் ஒளி என்ற உணர்வினைப் பரவச் செய்து விஷத்தன்மை கொண்டு இயக்கும் உணர்வுகளை மாற்றிடவும்
5.உலகில் வாழும் மனிதருக்குள் பேரருள் என்ற உணர்வினை உருவாக்கிடவும்
6.இது உதவ வேண்டும் என்று உங்கள் அனைவரது உயிரான ஈசனை வேண்டுகின்றேன்
7.உங்கள் உடலுக்குள் அரும் பெரும் சக்தி பரவ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply