“கல்லா அறிவு…” பெற்றவர்கள் தான் மெய் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்

“கல்லா அறிவு…” பெற்றவர்கள் தான் மெய் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்

 

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.

அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழி உண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர். ஆனால் சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலக ஆசையின் எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும்… உரை நடையும்… மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.

அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
1.செருக்கின் தொடரில் எழும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.
2.உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும் நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?

அதற்கு எது முக்கியம்..?

நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை. ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொள்ளும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடாத…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடும் வழியாக்கிக் கொண்டதே “வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்…”

1.செவிக்கு உணவு… வயிற்றுக்கு உணவு… என்பது போன்றே
2.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
3.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது.

ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும்.

வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது. வாய்மை மொழியே தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
1.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி
2.அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

Leave a Reply