உள் நின்று இயக்கும் “உயிர்” எப்படி… எதனால் கடவுளாகின்றது…?

உள் நின்று இயக்கும் “உயிர்” எப்படி… எதனால் கடவுளாகின்றது…?

 

உலகில் வாழும் மனிதர்கள் எத்தனையோ கோடித் தெய்வங்களை வணங்கினாலும் அந்தத் தெய்வம் காக்க வருவதில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்… இதையெல்லாம் எங்கே உருவாகின்றது என்று…!

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தும் நம் சிரசின் பக்கம் இருக்கும் உயிர் தான் இயக்குகிறது… உருவாக்குகிறது. அதை “ஈஸ்வரலோகம்…” என்று ஞானிகள் காரணப் பெயர் இடுகின்றனர்.
1.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ
2.அதை அணுவாக உருவாக்கும் கருவாக
3.உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

அப்படி உருவாக்கிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது “பிரம்மலோகமாக…” மாறுகின்றது. அதே சமயம் நம் உடலுக்குள் அந்தக் குறித்த காலத்தில் வளரத் தொடங்குகிறது.

கோழி அடை காப்பது போன்று என்னை இப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்…! என்று இந்த உணர்வின் தன்மை எண்ணினால் அந்தக் கரு முழுமையடைந்து அணுவின் தன்மை அடைகின்றது.

அப்படி அணுவின் தன்மை அடைந்த பின் அது தன் உணவுக்காக ஏங்குகின்றது.

உதாரணமாக முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வெளி வந்தபின் புற நிலையில் இருக்கக்கூடிய உணவை அகநிலையில் உட்கொள்ளும் நிலை வருகின்றது.

இதைப் போன்றுதான்…
1.உடலில் உருவான இந்த அணு முழுமை அடைந்த பின்
2.நம் உடல் உறுப்புடன் ஒன்றி இரத்தத்தில் வரும் உணர்வினை
3.உணவாக உட்கொள்ளும் பழக்கம் வந்து விடுகின்றது.

ஆகவே அந்த அணுவின் தன்மை அடைந்தால் பிரம்மலோகம் என்ற நிலை அடைகின்றது.

இரத்தத்தின் வழியாக உணவாக உட்கொள்ளும் நிலை வரும் பொழுது அந்த அணுக்கள் நம் உடலுக்குள் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

ஒரு வித்தினை நிலத்திலே ஊன்றினால் அந்த வித்து செடியாக… மரமாக வளர்ந்து… தன் இனத்தை உருவாக்குகின்றது. ஒரு கோழி முட்டை இட்டுக் குஞ்சு பொரித்தால் அந்தக் குஞ்சுகள் வளர்ச்சியாகி அது மீண்டும் முட்டைகள் இட்டுப் பல குஞ்சுகளை வளர்க்கும் தன்மை வருகின்றது.

இதைப் போலத்தான் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுகின்றோமோ அத்தகைய அணுக்களின் இன விருத்தி நம் உடலுக்குள் அதிகமாகின்றது.

இப்படி வளர்ச்சியாகி வளர்ச்சியாகித்தான் நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.

காட்டிலே வாழும் மான் சந்தர்ப்பத்தால் புலியைப் பார்த்து விட்டால் அதனிடமிருந்து தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை எண்ணி எண்ணி அதன் உணர்வினை மான் அதிகமாக நுகர்கின்றது.

ஆக… புலியின் உணர்வை மான் பயத்தால் நுகர்ந்த பின் மானின் உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தப் புலியின் உணர்வைக் கருவாக உருவாக்கும் அணுக்கள் அங்கே பெருகி விடுகின்றது.

1.அப்பொழுது மானின் சாந்தமான உணர்வுக்குள் அது ஊடுருவி அதை மடியச் செய்து விடுகின்றது
2.அது தன் நினைவை இழக்கச் செய்கின்றது.

புலியோ மானின் தசைகளை உணவாக உட்கொண்டு விடுகின்றது. மான் புலிக்கு இரை ஆகின்றது.

ஆனால் புலியின் உணர்வை மானின் உயிர் கருவாக மாற்றி அந்த (மானின்) உடலை விட்டுச் சென்றபின் புலியின் உடலுக்குள் சென்று புலியின் ரூபம் அடைகின்றது.
1.அப்பொழுது கடவுள் யார்…? இந்த உயிரே கடவுள்.
2.உயிர் தான் இத்தகைய நிலையைச் செயல்படுத்துகிறது…!
3.பல கோடிச் சரீரங்களில் ஒன்றிலிருந்து மீண்டு ஒன்றுக்குள் இரையாகும் பொழுது நரக வேதனைப்பட்டு
4.அதன் நிலை கொண்டு கொன்ற உடலுக்குள் உயிர் அழைத்துச் சென்று
5.இப்படி உருமாறி… உருமாறி உருமாற்றி… நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர் தான் என்ற நிலையை
6.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மை இது…!

Leave a Reply