உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கினால் தான் தியானத்தின் மூலம் சக்தியை நீங்கள் கூட்ட முடியும்

உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கினால் தான் தியானத்தின் மூலம் சக்தியை நீங்கள் கூட்ட முடியும்

 

குருநாதர் எவ்வழியில் எமக்கு (ஞானகுரு) வழி காட்டினாரோ அந்த வழியை நீங்களும் பின் தொடரும் பொழுது அந்த மெய் ஞானிகள் சென்ற வழிகளில் எல்லோரும் அங்கே செல்வதற்கு ஏதுவாகும்.

அன்றைய ஞானிகள் காட்டிய ஒவ்வொரு உணர்வின் சக்தியும், அவர்கள் உடலிலே விளைய வைத்த ஆற்றல் மிக்க சக்திகள் நமக்கு முன் ஒலி/ஒளி அலைகளாகப் படர்ந்து கொண்டுதான் உள்ளது.

யாம் இப்பொழுது பேசும் போது இந்த உணர்வின் ஒலி அலைகளை சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து ஆற்றல் மிக்க எண்ண அலைகளாக, அது படர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

1.இன்று ரேடியோக்களிலோ மற்ற டி.வி.க்களிலோ ஒலிபரப்புச் செய்யும் இந்த உணர்வின் சக்தியை
2.இயந்திரத்தில் அதே அலைவரிசையில் வைத்து
3.பட நிலைகளையும்… ஒலி அலைகளையும்… நாம் பார்க்கின்றோம், கேட்கின்றோம்.

இதைப் போன்றுதான் நாம் பேசும் சாதாரணp பேச்சாக இருந்தாலும் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. ஞானிகள் மகரிஷிகள் அவர்கள் உடல்களில் எடுத்துக் கொண்ட இச்சக்திகள் அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்படுத்திய நிலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் அது சுழன்று கொண்டிருகின்றது.

அந்த ஞானிகளின் ஆற்றல் மிக்க அச்சக்தியைப் பெறுவதற்குத்தான், இந்தத் தியானம் என்ற நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு இங்கே உணர்த்துகின்றோம்.

நமது உயிரின் ஆற்றலை நமக்குள் இயக்கக்கூடிய சக்தியை நாம் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
1.ஒரு மேக்னட்டில் “காந்தத்தை” அதிகமாகக் கூட்டச் செய்யும்போது,
2.அந்த “சுழற்சியின்” வேகத்தைக் கொண்டு கரண்ட் உற்பத்தியாகின்றது.

அதைப் போல…
1.நம் உயிரின் இயக்க ஓட்டத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் காந்தப் புலனை அதிகமாகக் கூட்டி
2.அதன் வழி கொண்டு நமக்குள் ஆற்றலின் சக்தியைப் பெருக்கச் செய்வதுதான் அந்த நிலை.
3.நாம் அதை நினைவில் கொண்டுதான் இயக்கப்பட வேண்டும்.

குற்றம் செய்தோரை எண்ணும்போது இந்த உணர்வுகள் நமக்குள் இயக்கியவுடன் அந்தக் கோப உணர்ச்சிகள் எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது…?

இதைப் போன்றுதான்…
1.நம் உயிரின் நினைவலைகளை…
2.அந்த மெய் ஒளி பெற வேண்டுமென்று ஆற்றலின் நினைவை நாம் கூட்டும் போதுதான்,
3.அந்த இயக்கச் சக்தியின் ஓட்டத்தை அதிகமாகக் கூட்டி
4.நாம் எண்ணிய சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

அந்த தகுதியைப் பெறச் செய்வதற்குத்தான் மகரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த இயற்கையின் உண்மையின் இயக்கச் சக்தியை எவ்வளவு தெளிவாக உணர்த்தி உள்ளார்களோ அதையும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

நீங்கள் உணர்கிறீர்களோ… இல்லையோ… ஒன்றுமறியாத வாயில்லாத நாடாக்களில் (MEMORY DRIVES) கம்ப்யூட்டர் மூலம் இப்பொழுது எப்படிப் பதிவாக்குகின்றனரோ இதைப் போல
1.உங்களுக்குள் இருக்கக்கூடிய “மேக்னட்…”
2.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்களுக்குள் ஈர்த்துத் தனக்குள் பதிவு செய்கின்றது

அதாவது…
1.புகைப் படங்கள் எடுக்கப்படும்போது “கேமரா” எப்படி அதனுடைய நிலைகளைப் பதிவாகின்றதோ,
2.மைக்கின் முன் பேசுவதை, “மைக்” ஈர்த்து எப்படிப் பதிவாக்குகின்றதோ அது போல
3.உங்கள் எண்ணங்கள் செம்மையாக… “சாமி (ஞானகுரு) சொல்வதைப் பெற வேண்டும்” என்ற ஏக்க உணர்வுடன்
4.உங்கள் கண்ணின் நினைவலைகளில் ஏங்கி இருந்தாலே போதுமானது.

அதுவே பதிவாகி… மீண்டும் நினைவவலைகள் வரப்படும்போது, மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறும் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

“சாமி என்னமோ சொல்கின்றார்…” ஏதோ சொல்கின்றார்… என்று இல்லாதபடி நினைவுகளை வேறு பக்கம் திசை திருப்பாது
1.உபதேசிக்கின்றவரை வரையிலும் உற்றுக் கேட்போம் என்று
2.உங்கள் நினைவின் எண்ணங்களை எவ்வளவு தூரம் பதிவு செய்கின்றீர்களோ
3.அந்தப் பதிவின் ஆற்றல் மிக்க சக்தியை… மகரிஷிளின் அருளாற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் உங்கள் உயிரின் இயக்கத்தின் ஓட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதைத் தனக்குத்தானே தனக்குள் இயங்கும் ஆற்றலை அறியவில்லை என்றால் பிறரின் நிலைகளை அறிந்து கொள்வது மிகக் கடினம்.

நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்குள் இயக்குவதை நாம் கட்டுப்படுத்தாமலோ… அல்லது நமக்குள் எண்ணிய எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறனற்றவர்களாகவோ… நாம் இருந்தோம் என்றால்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த உயிர் மனித உடலைப் பெற்றபின்
2.பரிணாம வளர்ச்சி பெற்ற மற்ற மிருக உணர்வுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமலே சென்று கொண்டிருக்கும்.

ஆகவே மனித உடல் பெற்றபின்… மெய்யுணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்து அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் மிக்க சக்தியை வளர்ப்பதே நல்லது.

இங்கே கொடுக்கப்படும் உபதேசங்கள் ஒவ்வொன்றையும் எந்த அளவுக்குக் கூர்மையாகக் கவனிக்கின்றோமோ அந்த அளவுக்கு மெய் உணர்வின் தன்மையை…
1.நாம் எடுத்துக் கொண்ட ஞானிகளின் சுவாசமும்…
2.எடுத்துக் கொண்ட ஞானிகளின் எண்ணத்தின் உணர்வும்…
3.நமக்குள் அவதார புருஷனாக மாறுகின்றது.

Leave a Reply