“எல்லாம் என் தலை விதி” என்று சென்றால் பிறப்பின் பலனை யாரும் எடுக்க முடியாது…! – ஈஸ்வரபட்டர்

“எல்லாம் என் தலை விதி” என்று சென்றால் பிறப்பின் பலனை யாரும் எடுக்க முடியாது…! – ஈஸ்வரபட்டர்

 

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தைக் காட்டுகின்றார்.

அதாவது…
1.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
2.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்ற நிலையைத் தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள்பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல…!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.

ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

Leave a Reply