ஆண்டவனின் சக்தியைத் தான் பெறுகிறோமா…? – ஈஸ்வரபட்டர்

ஆண்டவனின் சக்தியைத் தான் பெறுகிறோமா…? – ஈஸ்வரபட்டர்

 

இன்று இவ்வுலகில் ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கின்ற மக்களின் எண்ணம்… வாழ்க்கை முறை… இதைப் பொறுத்து அங்கங்கு வாழும் மக்கள் அவர்கள் எந்த நிலை கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்தார்களோ உடலை விட்டுப் பிரிந்த பின் அந்தந்த நிலையிலேயே அவ்வாவிகள் சுற்றிக் கொண்டேயுள்ளன.

தெய்வப் பற்றும் ஒற்றுமைப் பற்று கொண்ட கூட்டு நிலை கொண்ட குடும்ப நிலைகளும் இங்கே (நம் நாட்டில்) உள்ளது.

ஏனென்றால் அன்று வாழ்ந்த சித்தர்களின் நிலையினால் இங்கு ஆண்டவன் என்ற பக்தியை மக்களின் மனதில் பல ரூபம் கொண்ட கல்களிலே வடித்து உணர்த்திச் சென்றதால் இங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் எல்லாம் ஏறக்குறைய ஒன்று போல் சுற்றிக் கொண்டுள்ளது.

தெய்வத்தைக் கல்லின் ரூபத்தில் பக்தி கொண்டு வணங்கிய நிலை கொண்டு இங்கு வாழ்ந்த மக்கள் அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்த சுவாசத்தையும் எண்ணத்தையும் கொண்டே கடைசியில் உடலை விட்டுப் பிரிகின்றார்கள்.

உடலை விட்டு ஆவி பிரிந்து சென்ற பிறகும் அந்நிலையிலேயே தான் அந்த ஆவிகள் சுற்றிக் கொண்டுள்ளன.

அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கும் அந்த ஆவிகள் கோவில்களுக்குச் சென்று வணங்கிடும் நிலையில் உள்ளவர்களின் நிலையில் அந்த ஆவி அவர்களின் உடலுக்குள் சென்று சில நிலைகளைச் சொல்கிறது.
1.அதாவது சாமி வந்து அருள் வாக்குச் சொல்கிறது என்பதுவும்
2.அருள் வந்து ஆடுவதுவும் எல்லாம் இந்நிலை கொண்ட இந்த நாட்டில் தான்
3.நம்மை நம் முன்னோர்கள் நடத்திச் சென்ற பாதையில் வந்ததுவே இந்த நிலை.

இதே நிலை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட நிலையில் உள்ளது.

அங்குள்ள மக்களின் எண்ண நிலைகளும் வாழ்ந்த நிலைகளும் பக்தி தெய்வப் பற்று எத்தன்மையில் இருக்கின்றதோ அதற்குத்தக்க அந்த ஆன்மாக்கள் அவர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்றன.

அந்த நிலை கொண்டு அது சுற்றிக் கொண்டுள்ள நிலையில் தன் எண்ணத்திற்கும் செயலுக்கும் உடைய உடல்களை ஏற்று வருகின்றது அங்கங்கு (மற்ற நாடுகளில்) உள்ள நிலை.

ஆனால் பக்தி என்னும் நிலையில் இங்கு ஏன் இந்த நிலை…?

1.இங்கு மட்டும் தான் அந்த ஆண்டவன் உள்ளானா…?
2.ஆண்டவன் எந்த நிலையில் இங்கு அருள் தருகின்றான்..? என்றெல்லாம் எண்ணினாலும்
3.அந்த ஆண்டவனின் நிலையைப் பற்றி நம் சித்தர்கள் நமக்குத் தெளிவாக உணர்த்திய நிலையை
4.நாம் ஏற்றுக் கொண்ட நிலையால் வந்தது தான் இந்த நிலை.

உலகில் உள்ள பல பாகங்களில் பல நிலைகள் கொண்டு அந்த ஆண்டவனை எண்ணிப் பல வழிகளிலும் வணங்குகின்றார்கள்.

அவர்கள் எல்லாம் எந்த நிலையில் அந்த ஆண்டவனின் அருள் வருகிறது…? என்றே புரியாத நிலை கொண்டு வணங்குகின்றார்கள்.

அதே சமயத்தில் இன்று இந்த உலகில் உள்ள எல்லாப் பாகங்களிலுமே தன்னத் தான் நம்பாமல் ஜோதிடம் என்ற நிலையில் நம்பி வாழ்கின்றார்கள்.

அந்த நிலையை எல்லாம் யார் சொல்கிறார்கள் என்று உணராமல்
1.பல ஆவிகளின் தொடர்புடன்
2.தன்னைத் தான் நம்பாமல்
3.பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா… இன்றைய இந்த உலகமே…!

ஆவியின் நிலை எந்த நிலையில் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என்று சுற்றிக் கொண்டுள்ளது. அந்த நிலைக்கே அடிபணிகின்றான்.

1.ஆண்டவனின் ரூபமாக அந்த ஆவியையே வணங்கி இன்றைய மனிதன் வாழ்கின்றான்.
2.எந்த நிலையில் வாழ்ந்தால் என்ன..? அந்த ஆவியே வந்து நமக்கு நல்ல உபதேசம் அளிக்கும் பொழுது…! என்று…

பல நன்மைகளை நமக்குச் செய்யும் பொழுது நாம் ஏன் அதை ஏற்கக் கூடாது என்று எண்ணுகின்றார்கள். (முருகன் சொன்னான்… அம்மா வந்து சொல்கிறது… ஆத்தா சொல்கிறாள்… அது சொல்கிறது… இது சொல்கிறது… பரிசுத்த ஆவி… எல்லாமே இந்த நிலை தான்)

எல்லா ஆவிகளின் நிலையுமே எந்த மனிதனின் மேல் சென்று அதன் காரியத்தைச் செலுத்துகின்றதோ “அதே நிலையில் அந்த மனிதன் உள்ள நாள் வரைதான்…!” அது அவனுக்கு உதவி செய்யும்.

அதன் எண்ணமும் அது ஏற்றிருக்கும் மனிதனின் எண்ணமும் மாறுபடும் பொழுது…
1.எந்த நிலை கொண்டெல்லாம் அது மனிதனுக்கு உதவியாக வந்ததோ
2.அதற்கு மேல் தீமை செய்ய வல்லது அந்த ஆவிகளின் நிலைகள் எல்லாம்.

இந்தப் பூமியில் மனிதப் பிறவி எடுத்த உயிராத்மாக்களின் நிலை எல்லாம் ஒரே ஆத்மாவைக் கொண்டு இந்த உடலில் வாழ்ந்திடவில்லை. பல ஆத்மாக்களின் நிலை எல்லாம் தாக்கித் தான் மனிதன் வாழ்கின்றான்.

இதிலிருந்து மனிதன் மீள்வதற்குத் தன்னைத் தான் நம்பும் நிலைக்கு வர வேண்டும்…!

தன்னுள் எந்தத் தீய சக்திகளுக்கும் இடம் கொடுக்காமல் கோபத்தையும் அச்சத்தையும் அகற்றித் தன் நிலையைச் சமமாக்கிடல் வேண்டும். தான் எடுக்கும் எண்ணத்தையும் சுவாசத்தையும் நல் நிலையாகப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

ஆகவே நல் உணர்வை எடுங்கள். ஈஸ்வரபட்டனாகிய நான் நல் வாழ்த்து அருள்கின்றேன்… “ஜெகஜோதி வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே…!”

Leave a Reply