
உலகைக் காக்கும் சக்தியாக… “அகஸ்தியனுடைய வாக்கு நமக்குள் பிரதிபலிக்க வேண்டும்”
இப்பொழுது இருக்கக்கூடிய உலக நிலைமை மிகவும் மோசமாக இருப்பதினால்
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற நிலையில்
2.நம் நாட்டில் அதிகமாகப் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுத்து
3.நம் நாட்டு மக்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர்ந்து சகோதர உணர்வு வளர வேண்டும். மத பேதமில்லாமல் இன பேதமில்லாமல் மொழி பேதமில்லாமல் அரசியல் பேதமில்லாமல் மக்கள் வாழ வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து இந்தக் காற்று மண்டலம் சுத்தமாக வேண்டும். நாம் அனைவருமே உலகத்திற்கு எடுத்துக் காட்டும் நிலைகளாக வளர்ந்து வர வேண்டும் என்று “நாம் எல்லோரும் எண்ண வேண்டும்…!”
இதை எல்லாம் சர்கார் தான் (அரசில் உள்ளவர்கள்) செய்யும் என்று எண்ணாமல்
1.நாம் தான் சர்காரில் (சர்காராக) இருக்கின்றோம்…
2.நாம் தான் ஆபிசராக இருக்கின்றோம்…
3.நாம் தான் தொழிலாளியாக இருக்கின்றோம்.. என்று எல்லோரையும் ஒன்றாக்கி
4.நாங்கள்…! “நாம்…” என்ற இந்த எண்ணங்கள் வரப்படும்போது பேதங்களே இந்த உலகில் வராது…
5.அந்தந்த அரசும் தடையில்லாமல் நடக்கும்
6.நம்முடைய இந்த நல்ல எண்ணங்களும் உலக முழுவதும் பரவும்.
7.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்.
இன்றிருக்கும் நிலையில் உதாரணமாக… நான் உத்தியோகத்தில் இருந்தேன் என்றால் நான் ஏதாவது தவறு செய்கின்றேன். ஆனால் உத்தியோகத்தில் இல்லாமல் வெளியே இருக்கின்றேன் என்றால் அவர்கள் செய்யும் குறைகளைச் சொல்கின்றேன்.
அதே சமயத்தில் உத்தியோகத்தில் இருக்கின்றார்கள் என்றால் நான்கு பேர் ஒன்று போல் ஒரு தேவையின் நிமித்தமாகக் கேட்கின்றார்கள் என்றால் அரசில் இருப்பவர்களாக் செய்ய முடியவில்லை.
அந்த நான்கு பேரில் ஒருத்தருக்கு உத்தியோகத்தில் இருப்பவர் (அரசு) வேண்டியதைச் செய்தால் “இவர் நல்லவர்” என்று சொல்கின்றார். ஆனால் மீதி மூன்று பேர் “இவர் நல்லவர் இல்லை…” என்கிறார்கள்.
இப்படித்தான் உலக நிலைகளிலே இத்தகைய நிலைகள் வருகின்றது. குறை காணும் நிலையும் பகைமையாக்கும் நிலையும் வருகின்றது.
இது போன்ற நிலைகள் எல்லாம் மாற வேண்டுமென்றால் முதலிலே சொன்ன மாதிரி தியானித்தால் எல்லாருடைய உணர்வுகளும் சீராக வரும். விநாயகரை வணங்கும்போதெல்லாம் இந்த முறைப்படுத்தி நாம் தியானிக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
1.நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் பெற வேண்டும்
2.எங்கள் ஊர் முழுவதும் படர வேண்டும்
3.இந்த நாடு முழுவதும் படர வேண்டும் என்று ஒவ்வொரு ஞாளும் எண்ணினோம் என்றால்
4.இந்த அருள் உணர்வுகள் பெருகுகிறது… குறைகள் நீங்குகின்றது.
5.நாம் என்ற நிலைகளில் அனைவரும் ஐக்கியமாவோம்
6.நமக்குள் பேதமில்லா நிலைகள் உருவாகும்.
இந்த நிலைகளை நாம் அவசியம் உருவாக்க வேண்டும்.
ஏனென்றால் தீவிரவாதிகள் கடுமையான நிலைகளைச் செயல்படுத்தி விட்டார்கள். பல விஷத் தன்மைகளையும் விஷத்தை உருவாக்கும் மருந்துகளையும் அவர்கள் உருவாக்கத் தெரிந்து கொண்டார்கள்.. அது உலகம் முழுவதும் பரவி விட்டது.
ஒவ்வொரு நாட்டிலும் சிறுகச் சிறுகப் பரவி இன்று உலகம் முழுவதிற்கும் பரவிவிட்டது. இதிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்
1.நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்
2.அதன் மூலம் விண்ணின் ஆற்றலை நாம் பெருக்க வேண்டும்
3.காற்று மண்டலத்தில் அந்த அரும் பெரும் சக்திகளைப் பரப்ப வேண்டும்.
அனைவரும் இவ்வாறு செய்தோம் என்றால் நம்மிடம் தீமையான உணர்வுகள் பதிவாகாது. பதிவானாலும் அதற்குச் சாப்பாடு வராது.
ஒவ்வொரு நாளும் இரவு படுக்கும் போதும் அதிகாலையில் எழுந்திருந்ததும் இது போன்று எண்ணுங்கள். மத பேதம் வராதபடி இன பேதமில்லாதபடி மொழி பேதமில்லாதபடி
1.உலகில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் சொல்லிப் பாருங்கள்.
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி…! என்று அந்த அகஸ்தியன் வாக்கு மீண்டும் இங்கே பிரதிபலிக்கும்
3.உலகம் அழியும் தருவாயில் இருந்தாலும் அதை நம்மால் காக்க முடியும்.
இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.