முருகன் காட்சி கொடுப்பானா…? எந்த வழியில் கொடுப்பான்…?

LORD MURUGAN VISION

முருகன் காட்சி கொடுப்பானா…? எந்த வழியில் கொடுப்பான்…?

 

முருகன் சிலையை அழகாக வடித்து அலங்காரமாகச் சித்தரித்துக் காட்டுகின்றார்கள். முருகனை வழிபட்டு வந்தால் “அவன் நமக்கு வேண்டிய வரங்களைத் தருவான்… நம்மைக் காப்பான்…!” என்ற ஆசையையும் ஊட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் முருகன் அருளைப் பெற வேண்டும்…! என்றால் என் மனைவி மக்களுடன் நான் சாராது அவர்களை ஒதுக்கிவிட்டுக் கடும் ஜெபங்கள் இருந்து அந்த ஜெபத்தின் வழி கொண்டு செயல்பட வேண்டும் என்று முயற்சிக்கின்றார்கள்.

அங்கே சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த முருகனின் படத்தை உற்று நோக்கி அதற்கு மலர்களும் ஆடைகளும் உணவுகளும் பதார்த்தங்களும் இடப்பட்டு மந்திரங்களைச் சொல்லி அவன் அருள் பெறவேண்டும் என்று செயல்படுத்துகின்றனர்.

முருகனைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது இந்த உணர்வுகள்…
1.அந்தப் படத்திலிருந்து வரக்கூடிய அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வருகிறது.
2.அந்தப் படத்தை எனக்குள் ரூபமாகக் காட்டுவதும் என் கண்களே.
3.படத்தில் என்னென்ன கலர்கள் இருக்கின்றதோ அதை நுகர்ந்து “படம் இருக்கின்றது…” என்ற ரூபத்தைக் காட்டுவது என் கண்கள்.
4.சூரியன் கவர்ந்து வைத்துள்ள அந்த ரூபத்தின அலைகளை என் உடலுக்குள் பரவச் செய்து ரூபமாக எனக்குள் காட்டுகின்றது.

அந்த உணர்வுகளை எனக்குள் அலைகளாக மாற்றப்படும் பொழுது அதையே பல காலம் ஜெபித்தால் உடலிலே வலுவாகின்றது.

“இன்னென்னெ மந்திரங்களைச் சொன்னால் அந்த முருகனையே கைவல்யப்படுத்தலாம்…!” என்று சிறு சிறு புத்தகங்களைக் காட்டி அதிலே விளக்க உரைகளைக் கொடுத்திருப்பார்கள்.

கைவல்யம் செய்வதற்குண்டான பொருள்களை இட்டு நூற்றியெட்டு ஆயிரெத்தெட்டு இலட்சத்தியெட்டு என்ற நிலைகளில் இந்த மந்திரங்களை “நீ ஜெபித்தாய் என்றால்… முருகன் வசப்பட்டு உன்னிடம் அருகில் வருவான்…!” என்று புத்தகத்தில் காட்டப்பட்டிருக்கும்.

அதில் சொன்னபடி அந்த எண்ணம் கொண்டு நான் செய்யும் பொழுது
1.முருகன் படத்தை உற்றுப் பார்த்து அதில் என்னென்ன பொருள்களைப் போட்டேனோ… மந்திரம் சொன்னேனோ…
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு கவர்ந்தது அனைத்தும் எனக்குள் அலைகளாகப் பெருகிவிடுகிறது
3.என் கடைசிக் காலத்தில் நான் இறந்துவிட்டால் இந்த உடல் அழிந்த பின்
4.இந்த உடலுக்குள் எடுத்துக் கொண்ட ரூபங்கள் அந்த முருகனைப் போல் உணர்வுகள் எனக்குள் நிற்கும்.

இதே மந்திரத்தை மற்றவர் ஜெபிப்பார்கள் என்றால் படர்ந்திருக்கும் அலைகள் கொண்டு அவன் ஈர்ப்புக்குள் குவிந்து முருகனாகவே தெரியும்.

டி.வி. நிலையத்திலிருந்து எந்தெந்த அலைகளைப் பரப்பி வைத்திருக்கின்றனரோ அதே அலை வரிசையில் வரப்படும் பொழுது ஒலி பரப்பாகும் படங்கள் அலைகளாக மாறி வருவதை டி.வி மூலம் ரூபங்களாகப் பார்க்கின்றோம். இதைப் போல்
1.நான் ஜெபித்த உணர்வுகளை நீங்களும் ஜெபிக்கத் தொடங்கினால்
2.அதே உணர்வலைகளாகப் படரப்பட்டுக் குவிக்கப்படும் பொழுது
3.நான் முருகனாகவே (காட்சியாக) வருவேன்.

ஒரு கேமரா மூலம் எடுக்கப்பட்ட பட அலைகளின் தொகுப்பை மீண்டும் அதற்குண்டான சாதனைத்தை (PLAYER) வைத்து இயக்கப்படும் பொழுது அதிலே பதிவான உருவங்களின் அசைவுகளும் செயல்களும் நிஜமாக நடப்பது போல் தெரிகின்றது. ஆனால் நிறுத்தி விட்டால் பொம்மையாகத் தெரிகின்றது.

இதைப் போல்…
1.நம் உணர்வின் ஓட்டங்களில் நுகரப்படும் பொழுது அந்த உணர்வுகள்
2.அந்த முருகனே நடந்து வருவதாகவும் செயலாக்கங்களைச் செயல்படுத்துபவனாகவும்
3.அந்த உணர்வின் ஒலிகள் எனக்குள் பட்ட பின் எனக்குள் நேரடியாக வந்து உணர்த்துகின்றான் என்ற நிலைகளும்
4.கவிகள் பாடுகின்றான்..! என்ற நிலையும் எனக்குள் தெரியும்.

ஆனால் என் அருகிலே மற்றவர்கள் இருந்தாலும் இதைப் போல் நான் கவர்ந்து கொண்டது அருகில் இருப்போருக்கு இது தெரியாது.

1.என்னிடம் முருகன் பேசுகின்றான் என்றாலும்
2.எங்கே பேசுகின்றான்…? என்று உற்றுப் பார்த்தாலும் தெரியாது.
3.ஜெபித்த மந்திரத்தின் உணர்வு கொண்டு ஆழமாகப் பதிவாக்கி விட்டால்
4.அதே உணர்வைக் கவர்ந்து அதே எண்ணம் தான் வளரத் தொடங்கும்.

எந்த ஆசைகளை வைத்து மனைவி மக்களைத் துறந்து விட்டு முருகனை அடையப் போகின்றேன் என்ற உணர்வை வளர்த்துக் கொள்கின்றனரோ இதே மந்திரத்தை ஜெபித்த பின் அவன் பெண்டு பிள்ளைகளைத் துறந்து விடுகின்றான்… சொத்து சுகத்தையும் துறந்து விடுகின்றான்…!
1.சாட்சாத் முருகனே என்னிடம் வந்துவிட்டான்… அவனே கொடுப்பான் என்று
2.துறவறம் பூண்டு அவன் ஊர் ஊராகச் சுற்றி அலையத் தொடங்குகின்றான்.

இருந்தாலும் “பிச்சாந்தேஹி…!” (உணவு) என்ற நிலைகள் கொண்டு இந்த உடலை வளர்க்க இன்னொருவரிடம் யாசகம் கேட்டுத் தான் ஆகவேண்டும்.

முருகனைப் பற்றி எண்ணி வளர்ந்த உணர்வின் தன்மை… வலிமை மிக்கதாக இருக்கும் பொழுது அடுத்தவருக்கு அருள் வாக்காகச் சொல்லப்படும் போது அவருடைய துயரங்களோ அல்லது சில ஆவியின் நிலைகள் இருந்தால் அது எல்லாம் அகன்று விடும்… நல்லதாக மாறும்.

இப்படி மற்றவர்களுக்கு நல்லதாகும் பொழுது “இவனைக் கடவுளின் தூதுவன்…!” என்று நாம் புகழ் பாட ஆரம்பித்துவிடுகின்றோம்.

எந்த மந்திரத்தால் அவன் மந்திரத்தை ஜெபித்து அந்த உணர்வின் தன்மையைக் கொண்டானோ அதே உடலில் வளர்ந்த அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது மற்றவர்களும் இவனை அணுகி வருவார்கள்.

1.எங்கள் குறைகளை எல்லாம் நீக்க வேண்டும்
2.நீங்கள் தான் கடவுள்…
3.முருகன் அருளைப் பெற்றவர் நீங்கள் தான்…! என்ற உணர்வின் ஒலிகளை
4.அவன் செவிகளில் ஓதப்படும் பொழுது அவன் உயிரிலே பட்ட பின் அது உடலுக்குள் அணுவாக மாற்றிவிடுகின்றது.

இவ்வாறு சில காலம் அவரின் சக்திகள் செயல்படும்.

அந்தச் சில காலத்திற்குள் அவன் கேட்டுணர்ந்த பிறர் கஷ்டங்களை எல்லாம் இவன் உடலுக்குள் உருவாக்கும். உடலிலே தீய அணுக்கள் வளரும்.

முருகன் அவனுக்குச் சக்தி கொடுத்தான்…! என்று எண்ணுவார்கள். ஆனாலும் அதை வைத்துப் பிறருடைய தீமைகளை நுகரப்படும் பொழுது கடைசியில் இவனுக்குள் நோய்கள் வரும்.

நோய் வந்ததும் இவர் சொல்வார்..
1.எனக்குள் முருகன் வந்தான்…
2.அருளைக் கொடுத்தான்…
3.எத்தனையோ காட்சிகளையும் கொடுத்தான்…
4.ஏனோ என்னைச் சோதிக்க… என் உடலுக்குள் நோய்கள் வருகின்றது…!
5.முருகன் என் மீது இப்பொழுது இரக்கப்படவில்லை…! என்று இவன் துடிப்பான்.

ஏனென்றால் முருகன் இவ்வாறு வரவில்லை…! சாதாரண மனித உணர்வுக்குள் சுழன்றிடும் உணர்வின் அலைகள் தான் இது. கடைசி முடிவு இப்படித் தான் இருக்கும்.

Leave a Reply