வாஸ்து… பிரமிட்…! என்று சொல்லிக் கொண்டு வீட்டு வாசலை மாற்ற வேண்டுமா…?

maharishi and sage

வாஸ்து… பிரமிட்…! என்று சொல்லிக் கொண்டு வீட்டு வாசலை மாற்ற வேண்டுமா…?

 

அங்கிருந்து உங்களுக்கு வேண்டியவர் ஒருவர் வருகிறார். “ஒரே கஷ்டமாக இருக்கிறது…!” என்று சொன்னவுடனே காது கொடுத்து நீங்கள் உற்றுக் கேட்கிறீர்கள்.

அந்தக் கஷ்டமான உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிறது. வீட்டிற்குள் வந்தால் அந்த உணர்வு உங்களை அறியாமலே இயக்கும்.

வீட்டிற்குள் வந்து பேசும் பொழுது “அந்த வீட்டில் இப்படிச் செய்கிறார்கள்… இங்கே இப்படி இருக்கிறார்கள்… அவர்கள் தவறாகப் பேசுகிறார்கள்…!” என்று இந்த உணர்வுகள் எல்லாம் நீங்கள் உட்கார்ந்த இடங்களில் ஒலி அலைகளாகப் பதிவாகின்றது.

1.வீட்டிலுள்ள சுவர்.. தரை… எல்லாம் காந்தப் புலன் கொண்டது.
2.அது பதிவு செய்து (RECORD) வைத்துக் கொள்ளும்.
3.அந்த உணர்வு உண்டு… அறிவு உண்டு… நாம் பேசியதை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளும்.

வெளியிலே ஒரு வீட்டில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அடுத்து ஒன்றுமே செய்ய வேண்டாம்…
1.அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்த பின்
2.அந்த வீட்டிற்குள் நுழைந்தால் நம்மை அறியாமலே இருள் சூழந்த மாதிரி இருக்கும்.
3.ஏனென்றால் அந்த உணர்வின் எதிரொலி எக்கோ (ECHO) வருகிறது. (கஷ்டம்…கஷ்டம்… என்று வெளிப்படுத்திய அந்த உணர்வின் இயக்கங்கள்)

அதனால் தான் அந்தக் காலத்தில் பழைய வீட்டை வாங்கினால் முதலில் என்ன செய்வார்கள்…?

தரையை உடைத்து ஒரு அடிக்கு மணலை எடுத்து விடுவார்கள். வேறு மணலை அதிலே போட்டு பருப்பையோ மற்ற நவதானியங்களையோ போட்டு அங்கே முளைக்க வைப்பார்கள். அது முளைத்த பின் இங்கே பதிவான உணர்வை எல்லாம் இழுத்துவிடும்.

அதற்கப்புறம்தான் தரையைச் சுத்தம் செய்வார்கள். அந்தக் காலத்தில் பழைய வீடு வாங்கினால் இப்படித்தான் செய்வார்கள்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறார்கள்…? வீட்டைக் காலி செய்தால் வெள்ளையோ அல்லது மற்ற வர்ணங்களையோ வீட்டிலே பூசி விட்டுக் குடி புகுந்து விடுகின்றார்கள்.

இன்றைக்கு வாஸ்து சாஸ்திரப்படி வாசலை இப்படி மாற்று… இந்தச் சுவரை இடித்து இப்படி மாற்று…! என்கிறார்கள்.

ஆனால் நாம் சுவாசிப்பது வாசு… தேவன்…! மூக்கு வழி கூடி புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் (தேவன்) படுகிறது
1.அதாவது “நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணினால்… வாசு தேவன் – அந்த நல்ல உணர்வைச் சுவாசிக்கின்றோம்.
2.அப்பொழுது தீமையை நீக்கக் கூடியதாக அந்தச் சக்தி கிடைக்கிறது.

ஆக வாசு தேவன்…! என்று இந்த வாசல்படியைச் சுத்தம் செய்யாதபடி கட்டிய வீட்டில் உள்ள வாசலை இடித்து இங்கேயும் அங்கேயும் மாற்றினால் அது எப்படிச் சரியாக வரும்…?

முதலில் வசதியாக நன்றாக இருந்து தானே வீட்டைக் கட்டுகின்றார்கள். அன்பாலே பண்பாலே பரிவாலே பாசத்தாலே மற்றவர்களைப் பார்க்கின்றார்கள். மற்றவர்கள் துன்பங்களும் துயரங்களும் வேதனையும் எதிர்பாராது இங்கே வந்துவிடுகின்றது.
1.அது எல்லாம் இந்த வாசல் (மூக்கு வழி உயிரிலே பட்டு) வழியாகத் தானே போகும்
2.அப்பொழுது இந்த வாசல்படிக்கு முன்னால் வருவதைச் (நம் ஆன்மாவை) சுத்தம் செய்ய வேண்டுமல்லவா…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி இந்தப் பாதையைச் சுத்தம் செய்தால் தான் இந்த வாசல் நன்றாக இருக்கும்.

“வாஸ்து சாஸ்திரம்…” என்று எங்கிருந்தோ இங்கே வந்து நம்மை எல்லாம் பைத்தியக்காரர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள். சீனாவிலிருந்து வந்தது…! என்பார்கள். ஊரை ஏமாற்றிக் காசைச் சம்பாரிக்க இந்த வழியைக் கையாளுகிறார்கள்.

வாஸ்துபடிச் செய்தால் தான் நல்லது…! என்று உங்களிடம் இதை விதைத்து விடுவார். அதனால் உங்கள் வீட்டு வாசலை இப்படிக் கொஞ்சம் மாற்றி வையுங்கள்..! என்பார்.

அதை இப்படித் திசை திருப்பி விட்டு அடுத்து முக்கோண வடிவில் “ஒரு பிரமிட்” மாதிரி வைக்க வேண்டும் என்பார்கள். அந்தப் பிரமிட்டுக்கு என்ன செய்கிறார்கள்…?

அன்றைய காலங்களில் சவங்கள் (இறந்த உடல்) கெட்டுப் போகாமல் இருப்பதற்குப் பிரமிட்டை உருவாக்கினார்கள். ஏனென்றால் அப்படிக் கட்டினால் அந்த வெயிலின் கதிர்கள் உள்ளே வராது தடைப்படுத்தி ஒதுக்கி விடும்.

அப்பொழுது அங்கே குளிர்ச்சியாகும். மருந்தைப் போட்டு அந்த உடல்களைப் பதனப்படுத்துவார்கள். அந்த உடல்கள் அழுகிப் போகாமல் கருவாடு மாதிரிக் காய்ந்து போகும். அதற்காக வேண்டித்தான் பிரமிட்டைக் கட்டினார்கள்.

1.செத்தவர்களுக்கு வைத்த பிரமிட்டை இங்கே கொண்டு வந்து வைத்தால்
2.உங்களுக்கு நோய் வராது…! என்று சொல்லி நம்மை முட்டாளாக்குகின்றார்கள்

அவர்கள் படித்து விட்டுச் சம்பாரிக்க இந்த மாதிரி எத்தனையோ வழியைக் கையாளுகிறார்கள். மக்களுக்கு நல்ல வழி காட்டுவதில்லை.

வாஸ்து சாஸ்திரப்படி நீ இந்தக் கோவிலில் அபிஷேகத்தைச் செய்து உன் தோஷத்தை நீக்கலாம்… என்பார்கள். அவர்கள் சொன்னபடி பாலாபிஷேகம் தேனாபிஷேகம் சந்தனாபிஷேகம் செய்தால் தோஷம் போய்விடுமா..?

ஆனால் ஞானிகளால் கட்டப்பட்ட நம்முடைய கோயில் எல்லாம் எப்பேர்ப்பட்ட கோவில்கள்..?
1.உன் உடலில் உள்ள நல்ல குணங்களை நீ எப்படிக் காக்க வேண்டும்…? என்று தான் கொடுத்தார்கள்
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் உயர்ந்த குணங்களை எடுத்து
3.நம் உயிரில் அதைப் படச் செய்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்த அபிஷேகம் செய்ய வேண்டும்.
.
அந்த அருள் உணர்வுகள் நம் உடலுக்குள் விளையத் தொடங்கினால் அந்த ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த துன்பங்களை எப்படி நீக்கினார்களோ… வருவதை எல்லாம் ஒளியான உணர்வாக எப்படி மாற்றினார்களோ.. அந்தச் சக்திகளை எல்லாம் நாமும் பெற முடியும்.

இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து உடலுக்குப் பின் நாம் அந்த அழியாத நிலை பெற முடியும்.

Leave a Reply