மனப் போராட்டமாக இருக்கும் நேரத்தில் நல்லதை ஏற்க முடியாமல் மேலும் சிக்கலாகிறது… அதை எப்படி மாற்றுவது…?
நீங்கள் நல்ல குணத்துடன் தான் இருக்கின்றீர்கள். ஆனால் சந்தர்ப்பத்தில் பகைமையாகி அதனால் வேதனையான உணர்வை நுகர்ந்த பின் உங்கள் மனதிற்குள் என்ன நடக்கிறது…?
உள்ளுக்குள் மனப் போராட்டமாகி (மனதிற்குள்) சண்டை போட்டுக் கொண்டு மேல் வலிக்கிறது… தலை வலிக்கிறது… என்று சொல்வீர்கள்.
அப்பொழுது உங்களுக்குச் சரியான சிந்தனை இல்லை. ஒரு வேலையின் நிமித்தமாக உங்கள் பையனைக் கூப்பிடுகின்றீர்கள். கூப்பிட்டதும் அவன் வரவில்லை என்றால் “கூப்பிடுகிறேன் பார்… உடனே வர மாட்டேன் என்கிறானே…!” என்ற இந்த உணர்வு தான் வரும்.
கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும் இடத்தில் முதலில் சொன்ன மாதிரி மனதில் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் என்ன நடக்கிறது…?
கடைப் பையனைக் கூப்பிட்டு இந்தச் சரக்கை எடுத்து வா என்று சொன்னாலும் அவன் வரவில்லை என்றால் “நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்… உனக்கு என்ன காது கேட்கவில்லையா…?” என்று இப்படிக் கேட்டு இந்த வம்புக்குப் போவோம்.
அந்த உணர்வுகள்… அங்கே தாங்கவில்லை என்றால் “நாம் சொன்ன சரக்கை அவன் எடுத்துக் கொண்டு வரட்டும்…!” என்று பொறுமையாக இருக்க முடியாது. “தான் சொன்னதை ஏன் அவன் செய்யவில்லை…?” என்ற வேகம் தான் வரும்.
நாம் சொன்ன நேரத்தில் அவன் வேறு ஒரு சரக்கைக் கட்டிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்ததும் ஏம்பா…! நான் சொல்வதைக் கேட்கவில்லையா…? என்று அழுத்தமான சொல் வரும்.
ஏனென்றால் இந்த உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை அறிந்து ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதை எப்படிச் செய்ய வேண்டும்..? என்று தெளிவாக உணர்தல் வேண்டும்.
1.மாறுபட்ட எண்ணங்கள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
3.உடலுக்குள் அதைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்தால் “அவன் ரிஷியின் மகன் நாரதனாகின்றான்…!”
மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அவன் உருவாக்கிக் கொண்டவன். அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் அது நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன். (சூரியன் என்றால் நாராயணன்)
அவன் (சூரியன்) எப்படி உலகை இரட்சிக்கின்றானோ அதே போல் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் மகரிஷிகளின் உணர்வின் தன்மையைக் கவர்ந்தால்
1.இரட்சிக்கும் அலைகளாக அந்த உணர்வின் இசைகள் நம்மை நல் வழிக்கு மாற்றும்.
2.அதனால் தான் நாரதன் கையில் இசைக் கருவி இருக்கும்.
3.அது சுழன்று சீராகினால் இங்கே மகிழ்ச்சியின் தன்மை வந்து அறியாது வந்த இருளைப் போக்குகின்றது.
சரஸ்வதி கையில் என்ன இருக்கிறது…? வீணை. ஒவ்வொரு உணர்வின் மணமும் அந்த இசையை ஊட்டுகின்றது. எதனின் குணமோ அதனின் ஞானமாக அது இயக்கும். அந்த உணர்வினை ஒளியாக அது இயக்கும். உணர்வை அது ஊட்டும்… உணர்வை அது வளர்க்கும்…!
1.அதைத் தான் இங்கேயும் சுருதி ஏழு…. அங்கேயும் சுருதி ஏழு…! என்று போட்டுக் காட்டியிருப்பார்கள்.
2.ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுவது.
3.ஆக ஞானத்தின் தன்மை ஏழாவது நிலை அடைந்தவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்…!
இதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்து விட்டு சாமி (ஞானகுரு) நன்றாகச் சொன்னார் என்று விட்டுவிடாதீர்கள்…! சொன்ன முறைப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
அருளைப் பெருக்கி இருளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் வளர்க்க வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்விலும் அவர்கள் இருள் நீங்க வேண்டும்.
அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் தன்மையை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.