சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

Rama breaking dhanush

சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

 

கணவன் மனைவிக்குள் சண்டை வந்துவிட்டது. கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்தால் எப்படிச் செய்வீர்கள்…?

நான் கணவன் மீது எப்படியெல்லாம் பிரியமாக இருக்கின்றேன்… ஆனால் கணவன் என்னை இப்படி எல்லாம் பேசுகிறாரே… துயரத்தைக் கொடுக்கின்றாரே… உனக்கு அர்ச்சனை செய்தேனே… விரதம் இருந்தேனே… என் கணவர் இப்படிச் செய்கிறாரே…! ஆக சாமியிடம் எதைச் சொல்கிறீர்கள்..?

கோவிலில் கணவன் என்ன நினைக்கிறார்..?

மனைவி எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறது… எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறது… ஏதோதோ பேசுகிறது..! நான் என்ன தான் செய்வது..?

1.இரண்டு பேரும் சேர்ந்து கோவிலில் எதை முறையிடுகின்றீர்கள்…?
2.அங்கே போய் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறீர்கள்.

அங்கே முறையிட்டு வீட்டுக்கு வரும் பொழுது அதே வெறுப்புடன் வருவோம். வீட்டுக்குள் வரும் பொழுது என்ன நடக்கும்…? கணவருடைய செயலைப் பார்த்தாலே ஒருவிதமான நடுக்கம் வரும். கோபமாக இருக்கிறார் என்ற நிலையில் கையில் இருக்கும் டம்ளரை மனைவி கீழே விட்டால் போதும்.

சனியன்…! எப்பொழுது பார்த்தாலும் எதையாவது போட வேண்டியது தான்… எல்லாவற்றையும் போட்டு உடைக்க வேண்டியது தான் வேலை..! என்பார்.

ஏனென்றால் நுகர்ந்த உணர்வுகள் இந்த வேலையைச் செய்யும் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்…! தவறு செய்யவில்லை. ஆனால் இந்த வேலையைச் செய்யும்.

அதே சமயத்தில் மனைவி கணவனைப் பார்த்து எப்பொழுது பார்த்தாலும் நம்மைத் திட்டுவது தான் இவருக்கு வேலை…! எப்படியோ தொலைந்து போ…!

ஆக கோவிலுக்குச் சாமி கும்பிட எதற்காகப் போகின்றோம்…? இதற்காகவா…? சிந்தித்துப் பாருங்கள்.

நம்மைச் சுத்தப்படுத்துவதற்குத்தான்…! கோவிலைக் கட்டினார்கள் ஞானிகள். எல்லோருக்கும்
1.இந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்… தெய்வீக குணம் பெறவேண்டும்
2.மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
3.தெளிந்த மனம் பெறவேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.இந்த அருள் உணர்வுகள் எனக்குள் என்றென்றும் பாய்ச்சும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
5.வைரத்தைப் போல் சொல்லும் செயலும் ஜொலிக்க வேண்டும்
6.தங்கத்தைப் போல் எங்கள் மனது மங்காமல் இருக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்

இதற்குத்தான் கோவில்…! இந்த மாதிரி எத்தனை பேர் கோவிலில் எண்ணுகிறார்கள்..?

என் கணவர் தினமும் குடித்துவிட்டு வருகிறார் நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாய்…! இப்படிச் சொல்பவர்கள் தான் உள்ளார்கள்.

ஆனால்…
1.என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு அந்த அருள் உணர்வு பெறவேண்டும்
2.அவர் தெளிவான நிலைகள் பெறவேண்டும் அந்த மலரைப் போல் மணம் பெறவேண்டும்
3.தெய்வீகப் பண்பும் தெய்வீகச் செயலும் என் கணவர் பெறவேண்டும்
4.வைரத்தைப் போல் அவர் சொல் செயல் வாழ்க்கை எல்லாம் ஜொலிக்க வேண்டும்
5.இருளை நீக்கும் அருள் சக்தி என் கணவர் பெறவேண்டும்
6.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் என் கணவர் பெறவேண்டும் என்று கோவிலில் வேண்டினால் எப்படி இருக்கும்..?

அந்த உணர்வுகள் உடலுக்குள் இறையாகி உணர்வின் தன்மை தெய்வமாகின்றது. அப்பொழுது இந்த உணர்வுடன் நாம் எண்ணினால் தான் நல்லதாகும்.

அதே சமயத்தில் கணவரும் என்ன செய்ய வேண்டும்…?

மனைவி வணங்குவது மாதிரியே வணங்கி
1.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
3.தங்கத்தைப் போல் என் மனது மங்காது இருக்க வேண்டும்
4.என் செயல் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யாமல் ஒருவருக்கொருவர் குறைகளைக் கொட்டி அழுகிறோமே தவிர நம் உடலை அசுத்தப்படுத்துகின்றோமா…? கோவிலுக்கு வருபவர்களுக்கும் நாம் எந்த உணர்வுகளை ஊட்டுகிறோம்…? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இராமாயணத்தில் இதைக் காட்டுகிறார்கள். சீதாவைத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரம் ஏற்படுத்துகின்றார்கள், “சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய இடம் கோவில்…!” என்பதைக் காட்டுவதற்குத்தான் அந்த இடத்தில் வைக்கின்றார்கள்.

நாம் வெறுப்படைந்தவர்களுக்கெல்லாம் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இப்படி முறைப்படி செய்துவிட்டோம் என்றால்
1.அந்தத் தீமை செய்யும் வில்லை இராமன் ஒடித்து விடுகிறான் என்று காட்டுகின்றார்கள்.
2.ஆக சீதாவை அரவணைத்துக் கொண்டான் கல்யாணராமா…!
3.நம் உடலுக்குள் இருக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்கிறது… பகைமை இருக்காது.

பகைமையை நீக்கி எல்லோரும் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது கல்யாணராமனாகின்றது. நமக்குள் மற்றவர்களுடைய பகைமை உணர்வை மறக்கின்றோம்.

எல்லொரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கின்றோம். ஆக பகைமையை நாமும் மறக்கின்றோம். பகைமையை அவரும் மறக்கின்றார் கோவிலை இதற்குத்தான் வைத்தார்கள் ஞானிகள்,

ஏனென்றால் நாம் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது. அந்த உணர்வின் செயலாக நாம் செயல்படுகின்றோம்.

வேதனை என்று எண்ணினால் உயிர் அதை உருவாக்குகிறது. நம் உடலில் உள்ள உறுப்புகள் கெடுகிறது. ஆனால் வேதனைகளை நீக்கிடும் அருள் சக்தியைப் பெறும் பொழுது நம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகின்றது. நம் சொல்லும் செயலும் நன்றாக இருக்கின்றது.

Leave a Reply